மெய்ப்பொருள் காண்ப தறிவு

This entry is part 15 of 46 in the series 5 ஜூன் 2011

ஐம்பதாவது வயதில் தோளில் கை போட்டது சர்க்கரை வியாதி. இன்று மாரியப்பாவுக்கு வயது 63. பதின்மூன்று ஆண்டுகளாக சர்க்கரையோடுதான் வாழ்கிறார் மாரியப்பா. சர்க்கரை வியாதி விரோதியா? நண்பனா? அல்லது இரண்டும் இல்லையா? சர்க்கரை சிநேகிதனானால்  விடுதலையே கிடையாதா? மாரியப்பாவின் மருத்துவர் இப்படிச் சொன்னார்

‘நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது விலகாது. உன்னோடுதான் வாழும். விரட்டுவது கடினம். சேர்ந்து வாழப் பழகிக் கொள்.

தாகம் வரும். தண்ணீர் குடி. நிறைய.

அதிகமாகப் பசிக்கும். புசி.

இரவில் இரண்டு மூன்று முறை கழிவறை அழைக்கும். கழி.

இனிப்புப் பண்டங்கள் இரண்டு முழம் தள்ளியே இருக்கட்டும்.

உணவுச் சுதந்திரம் இழ.

காலையில் நட. முடிந்தால் ஓடு.

வியர்வையில் குளி. பின் நீரில் குளி.

மாத்திரைகள் தந்திருக்கிறேன்.

சாகும்வரை சாப்பிடு

வாழப் பழகிக் கொள்.’

 

மருத்துவர் சொன்னது அத்தனையும் உண்மையா? ஆனால் மாரியப்பாவுக்கு அது உண்மை. அவருக்கு சர்க்கரை இருப்பதை அவர் சொன்னால்தான் தெரியும். இப்போது மாரியப்பாவுக்கு சில புதிய அறிகுறிகள் முகவரி காட்டின.

 

ஒரு வெள்ளிக்கிழமை வழக்கம்போல் காலை பத்து மணிக்குக் கோயிலுக்குச் சென்றவர், சம தரையென்று நினைத்து அடி வைத்தார். ஆனால் அது படி. விழுந்தார். பின் எழுந்தார். ஏதும் நடக்காதது போல் வெளியேறினார். வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போது குதிகாலில் ஏதோ பிசுசிசுப்பு உணர்ந்தார். குனிந்து கவனித்தார். அட ரத்தம். அப்படியே ஓரமாக அமர்ந்து தெளிவாகப் பார்த்தார். கோயிலில் விழுந்த போது குதிகாலுக்கு மேலே ஏதோ குத்தி யிருக்கிறது. அங்கிருந்துதான் ரத்தம். ஏன் வலி தெரியவில்லை. ஓஹோ! இதுதான் சர்க்கரையாரின் இன்னொரு முகவரியோ? ஒரு தடவை மருத்துவர் சொன்னார்.

‘காலில் அடிபடக் கூடாது. கவனம். ஆனாலும் அதை கண்காணிப்பது சிரமம். ஏனென்றால் வலி தெரியாது.’

 

இப்போதுதான் மாரியப்பாவுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. வீடு வந்ததும் திலகவதியிடம் நடந்ததைச் சொன்னார். தன்னை பதின்மூன்று வருடங்களாகப் பராமரிக்கும் ஊட்ராம் ஆரோக்கிய மையத்திற்கு விரைந்தார். தாதி மிகக் கவனமாக அந்த இடத்தை சுத்தம் செய்தார். மருந்திட்டார். வாரம் மூன்று முறை கட்டிக் கொள்ள வேண்டுமாம். தண்ணீர் படக்கூடாதாம். ஒரு வாரத்திலேயே அந்தப் புண் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. மருத்துவர் சொன்னார். ‘ஞாபக மிருக்கட்டும். எப்போது காலில் காயம் பட்டாலும் உடனே வந்துவிடுங்கள். அலட்சியம் ஆளையே கொன்றுவிடும்.’ மாரியப்பா ரொம்பவும் கவனமாகத்தான் இருந்தார். எப்போது ஊட்ராம் மருத்துவமனை வந்தாலும்

2

முழங்கால் வரை இல்லாமல் சிலர். பாதம் மட்டுமே இல்லாமல் சிலர். சக்கர வண்டியில் சிலர் என்று மாரியப்பாவுக்கு மயான காண்டத்தை நினைவூட்ட தவறுவதே இல்லை. ‘கடவுளே காலிழக்கும் கொடுமை எனக்கு வரக்கூடாது. அடுத்தவர்களுக்கு ஆதரவாய் மட்டுமே இருக்க வேண்டும்.

படுக்கும் நிலையை கடவுளே தந்துவிடாதே.’ வெள்ளிக் கிழமை தவறினாலும் மாரியப்பாவின் இந்த வேண்டுதல் சிராங்கூன் வீரமாகாளியம்மனை அடைந்துவிடும்.

 

கனமான செருப்பு தவிர்க்க வேண்டும். அது உருவிக் கொண்டு ஓடிவிடும். இப்போது க்ராக்ஸ் என்று ஒரு செருப்பு வந்திருக்கிறது. அது ஒரு புதுவகை காலணி. மயிலிறகை விட லேசு. கையால் கழற்றினாலொழிய தானாக நழுவாது. காலை நேரங்களில் ஈரச் சந்தை செல்ல, அவசர வேலையாக வெளியே செல்ல அந்த க்ராக்ஸ் காலணிதான் மாரியப்பாவுக்குப் பிடித்திருந்தது. பூட்ஸிலும் சேராமல் செருப்பிலும் சேராமல் வட்ட வட்ட ஓட்டைகளை அலங்காரமாய் வைத்துக் கொண்டு வந்திருக்கிறது அந்த க்ராக்ஸ். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாம்.

 

ஒருநாள் அந்தக் காலணியுடன் வெளியே சென்ற மாரியப்பா வீட்டுக்கு வந்தார். செருப்பை வெளியே விட்டுவிட்டு வீட்டுக்குள் அடி வைத்தார். அடுத்த அடி வைத்தார். ‘காலடி வைத்த இடம் கருஞ்சிவப்பாக இருக்கிறது. ‘ரத்தமா? கடவுளே! அப்படியே நில்லுங்கள். பார்க்கிறேன்.’  மனைவி திலகவதி உடைந்தாள். அவளின் வார்த்தைகள் உடைந்து உடைந்து உதிர்ந்தன. நின்ற இடத்திலேயே மாரியப்பா உட்கார்ந்துவிட்டார். ரத்தம் வந்த அந்த இடது கால் பாதத்தை தன் முகம் நோக்கித் திருப்பினார். துடைத்துப் பார்த்தார். ஒரு புள்ளியில் ஊதுபத்திப் புகையாக ரத்தம் கசிந்து கொண்டே இருந்தது. கருப்பாக ஒரு புள்ளி தெரிந்தது. முள்ளாக இருக்க வாய்ப்பில்லை. வேறு எதுவாக இருக்கும்? அதுமட்டுமல்ல. பக்கத்திலேயே ஊசித்துவாரமாக நாலைந்து புள்ளிகள். அந்த துவார வாய்கள் கருத்திருந்தது. அடேங்கப்பா எவ்வளவு காலமாகிவிட்டது இந்த உள்ளங்காலை இப்படி உற்றுப் பார்த்து. இந்த நிலையிலா இப்போது பார்க்க வேண்டும்? மாரியப்பா பயந்தார். திலகவதியிடம் சொன்னார். ‘இது நிச்சயமாகச் சர்க்கரைப் புண்தான். எதற்காகவோ இப்படி ஆரம்பித்திருக்கிறது. இது லேசாக முடியப் போவதில்லை. எதற்கும் உடனே கிளம்பு.’ ஊட்ராம் நிலையத்துக்கு விரைந்தனர் இருவரும். தன் நேரத்திற்காகக் காத்திருந்தார். மருத்துவர் அழைத்தார். உள்ளே சென்றார். நடந்ததைச் சொன்னார். மருத்துவர் ஆழமாகக் கவனித்தார். திரும்பத் திரும்பக் கவனித்தார். பிறகு ஏதோ சொல்வதற்கு முன் ரத்த அழுத்தம், இருதய மின் வரைபடம், பாதத்திற்கான உணர்வுச் சோதனைகள் எல்லாமும் எடுத்து வாருங்கள் என்று ஒரு பெரிய தாளை நீட்டினார். ஒவ்வொன்றாக முடித்துவிட்டு மீண்டும் அறைக்கு வந்தார் மாரியப்பா. மருத்துவர் சொன்னார்.

 

‘அந்தக் கரும்புள்ளி முள்ளுமில்லை. துருவும் இல்லை. அது ரத்த ஓட்டம் நின்று போனதற்கான அடையாளம். நாலைந்து நரம்புகள் செத்துவிட்டன. இப்போது ரத்தம் வந்தது சாகப் போகும் நரம்பு. இப்படி ஒன்றன் பின் ஒன்றாகச் செத்து மொத்தக் காலும் செத்துவிடும்.’

மருத்துவர் சொன்னது உண்மையாக இருக்கலாம். அதனை இத்தனைக் கொடூரமாகவா சொல்வார்கள். ஒவ்வொரு சொல்லும்  உளிகளாக மாறி மாரியப்பாவையும் திலகவதியையும் பிளந்தன. கேட்டுக் கொண்டார். வேறு என்ன செய்ய முடியும். தொடர்ந்தார் மருத்துவர்.

‘நன்றாகக் கவனியுங்கள். இது ரத்தக் குழாய்கள் பலம் பெற மாத்திரைகள். இதோ இது ரத்தத்தில் உள்ள ஹியூமோகிளோபின் ஊற மாத்திரைகள். இதோ இது பாக்டீரியாக்

3

கொல்லி. ஒவ்வாமை இல்லாததால் தைரியமாகச் சாப்பிடலாம். மொத்தமும் முடிய இரண்டு வாரமாகும். முடிந்தபின் வாருங்கள். தினமும் உள்ளங்காலை நோட்டம் விடுங்கள். மறக்கவே கூடாது.’

 

கூடை மாத்திரைகளை அள்ளிக் கொண்டு இருவரும் வீட்டுக்கு வந்தார்கள். ஒரு முக்கிய வேலையாக மாரியப்பா வெளியே செல்லுமுன் அந்த க்ராக்ஸை அணியப் போனார். அட! இதன் உள்ளேயும் ரத்தம் இருக்குமே. அணியுமுன் கழுவி விடுவோம். தன் இடக்கையை உள்ளே விட்டார்.  முள் போல் ஏதோ வருடுகிறது. கொஞ்சம் சத்தமாகவே கத்தினார் மாரியப்பா. ‘திலகவதி. இந்தச் செருப்பில் ஏதோ முள்போல் குத்துகிறது.’ திலகவதி அந்த வயதிலும் ஓடிவந்தார். செருப்பைத் திருப்பிப் பார்த்தார் மாரியப்பா. ஐம்பது காசு அளவில் வெள்ளைக் குமிழுடன் ஒரு குமிழ் ஆணி தன் கூர் வாயை செருப்புக்குள் வைத்துக் கொண்டு செருப்போடு சிநேகமாய் இருந்தது. அந்த ஆணியைப் பார்த்ததும் அதிர்ந்தார் திலகவதி. மாரியப்பாவைக் கட்டிக் கொண்டு அழுதார். திலகவதி அப்படி அழுது மாரியப்பா பார்ப்பது இதுதான் முதல்முறை.

‘என்ன நடந்தது? ஏன் திலகவதி இப்படி?’

‘நீங்க யாருக்கும் எந்தத் தீங்கும் மனசால கூட நெனச்சதில்லியே. ஏன் உங்களுக்கு இப்படி யெல்லாம் நடக்கிறது?’

மாரியப்பாவின் நெஞ்சை திலகவதியின் கண்ணீர் நனைத்தது.

கிழட்டுத் தென்னை மரங்கள் உத்திரங்களுக்காக வெட்டப் படும்போது அந்த மரம் எத்தனை காய்கள் தந்திருக்கிறது என்பதை கோடரிகள் எண்ணிப் பார்க்காது திலகவதி. பொறுமையாயிரு.

திலகவதியைப் பொறுமையாக இருக்கச் சொல்லிவிட்டு பொறுமை இழந்து அழுதார் மாரியப்பா. தன் காலில் குத்திய ஆணி ஏதோ தன் கண்ணில் குத்திவிட்டதைப் போல் அழும் திலகவதியை நினைத்து அழுதார். மீண்டும் மீண்டும் அழுதார் மாரியப்பா. அந்த ஆணிதான் நச்சு நச்சென்று அழுந்தும்போதெல்லாம் குத்தியிருக்கிறது. ஒரு வாரமாகத்தான் ஒரு சில நாட்களில் இது நடந்திருக்கிறது. அந்த மருத்துவர் சொன்னதை மீண்டும் நினைவு படுத்திக் கொண்டார். எத்தனை எத்தனை கொடூரமான பயமுறுத்தல்கள். வாங்கிய மாத்திரைகளைத் தொடவேஇல்லை. காலில் எல்லாத் தழும்புகளும் சுத்தமாகக் காணாமலே போய்விட்டன. இரண்டு வாரம் முடிந்தது. மருத்துவரைப் பார்க்கப் போனார்கள். மருத்துவர் கால்களைப் பார்த்தார்.

‘எல்லா மாத்திரைகளையும் ஒழுங்காகச் சாப்பிட்டீர்களா?

‘சாப்பிட்டேன்.’

‘பார்த்தீர்களா. எவ்வளவு சுத்தமாக ஆறிவிட்டது. அந்த ரத்தக் குழாய்க ளெல்லாம் உயிர் பெற்றுவிட்டன. ரத்தமும் நன்றாக ஊறியிருக்கிறது. பாக்டீரியா பயமும் இல்லை. கவனமாக இருந்து கொள்ளுங்கள். எல்லாமும் நான் தந்த மாத்திரைகளால்தான் சாத்தியமாகி யிருக்கிறது. சர்க்கரைக்கான மாத்திரையை மட்டும் தொடருங்கள்.’

 

அந்த மருத்துவர் சொன்ன எல்லாமும் பொய். ரத்தக்குழாய் செத்ததாகச் சொன்னது பொய். அது உயிர்ப்பித்ததாகச் சொல்வதும் பொய். அந்த மாத்திரைகள்தான் காப்பாற்றி இருக்கிறது என்றது பொய். மாரியப்பா ‘மாத்திரைகளைச் சாப்பிட்டேன்’ என்றதும் பொய். அதை அவர் நம்பியது பொய். அவர் சொன்னதை இவர் நம்பினார் என்று அவர் நினைத்தது பொய். எல்லாமே பொய். அத்தனையும் பொய்யென்று மாரியப்பாவுக்கு மௌனமாய் உண்மையைச் சொன்ன அந்தக் குமிழ் ஆணி குப்பையோடு குப்பையாய் எங்கோ மௌனித்துக் கிடக்கிறது.

வாழ்க்கை வழுக்கும் நேரமெல்லாம் மாரியப்பாவைக் காப்பாற்றுவது அவரது உறுதியான, ஆழமான வாழ்க்கைக் கொள்கைதான். அது என்ன கொள்கை? அதுதான் மெய்ப்பொருள் காண்பதறிவு

 

 

Series Navigationஏன் மட்டம்பொய்க்கால் காதலி!
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts