மக்பூல் ஃபிதா ஹுசைன் – நீண்ட நெடிய கலை வாழ்வில் சில கரும்புள்ளிகள்

This entry is part 33 of 33 in the series 12 ஜூன் 2011

எம் எஃஃப் ஹுசைன் தன் 95-ஆம் வயதில் மரணமுற்ற போது மீண்டும் அவர் குறித்து எழுந்த விவாதங்களில் அவர் கலைச் சிறப்புப் பற்றி கொஞ்சமாகவும், இந்துக் கடவுளர்களை அவர் நிர்வாணமாக வரைந்திருந்ததால் எழுந்த எதிர்ப்பு அலை பற்றி அதிகமாகவும் இருந்தது. இந்தியாவிற்கு வெளியே இருந்த ஒரு இந்தியக் கலைஞனின் மரணம் இது. ஆனால் ஹுசைனின் மனம் முழுக்க இந்தியாவில் தான் இருந்திருக்க வேண்டும்.

அவர் கிட்டத் தட்ட அறுபதாயிரம் ஓவியங்களுக்கு மேல் வரைந்ததாய்த் தெரிகிறது. ஆனால் அடிப்படையில் அவர் ஒரு கட்டத்திற்கு மேல் வளரவே இல்லை என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள். பிகாஸோ , மாடிஸே போன்றவர்களின் பாதிப்பைப் பெற்றிருந்த அவர் , இந்தியாவின் பாரம்பரியக் கலையிலிருந்து பெற்றது மிகவும் சொற்பமே என்று சொல்லலாம். ஜாமினி ராய், ரவீந்திர நாத் தாகூர், அபனீந்திர நாத் தாகுர் போன்றோரிடம் வெளிப்பட்ட இந்தியத் தன்மை ஹுசைனிடம் இல்லை. அவரை இந்தியாவின் பிகாஸோ என்று அழைப்பதும் தவறு என்று விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். பிகாஸோ போன்று ஓவியக்கலை வரலாற்றினை மாற்றியமைத்த பாதிப்பு எதையும் அவர் ஏற்படுத்தவில்லை. ஆனால் பிகாஸோ போன்று மிகப் பிரபலமானவராய் அவர் இருந்தார். பிகாஸோவிடமிருந்து அவர் பெற்ற குதிரை ஓவியக் கரு பிகாஸோவின் கெர்னிகாவிடமிருந்து பெறப்பட்டது. ஆனால் கெர்னிகாவில் வெளிப்பட்ட அறம் சார்ந்த ஆவேசம் ஹுசைனிடம் வெளிப்பட்டதே இல்லை. அவர் அடிப்படையில் எஸ்டாப்ளிஷ்மெண்ட் என்ற அரசும், ஆட்சியும் தரும் பாதுகாப்புக்கு எதிராக போனதே இல்லை.

அவர் இந்துக் கடவுளர்களை நிர்வாணமாக வரைந்ததும் எஸ்டாப்ளிஷ்மெண்ட் சிந்தனையின் ஒரு தேவை கருதி தான் என்று சொல்ல வேண்டும். பா ஜ க மற்றும் ஆர் எஸ் எஸ் என்ற இயக்கங்களுக்கு எதிராக எழுந்த எதிர்ப்பு அலையை ஹிந்து மதத்திற்கு எதிராக மாற்றி அமைத்ததில் இந்திய ஊடகங்களும், காங்கிரஸ் கலாசாரமும், இடதுசாரி இயக்கங்களும், திராவிட இயக்கங்களும், அகடமிக்குகளின் நிறுவனங்களும் பெரும் பங்கு வகித்தன. இப்படி இரு துருவங்களாக இந்திய பன்மைத் தன்மையை திரித்து கட்டமைப்பதில் அரசியல் லாபம் மட்டுமல்ல, உலக அளவில் ஹிந்து மதம் பற்றிய ஓர் அசூயை உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற செயல் திட்டம் இருந்திருக்க வேண்டும். இந்த நோக்கத்திற்கு ஹுசைனின் பங்களிப்பு தான் இந்த நிர்வாண ஓவியங்கள்.

இந்து மதம் நிர்வாணத்திற்கு எதிரி அல்ல. இஸ்லாமிய, மற்றும் கிருஸ்துவக் கலை வெளிப்பாடுகளில் உள்ள கட்டுப் பெட்டித்தனம் இந்துக் கலை வெளிபாடுகளில் இருந்ததே இல்லை. ஓவியர்கள்,சிற்பிகள் நிர்வாணத்தை வாழ்க்கையின் சகல கூறுகளின் கொண்டாட்டமாகக் கருதி எந்த விகார உணர்வும் இன்றி சித்தரித்திருக்கிறார்கள். இன்றும் கூட துர்கா பூஜையில் துர்கை நிர்வாணமாகத்தான் சித்தரிக்கப்பட்டு வருகிறாள். நிர்வாணம் அடையத்தக்க லட்சியமாகவும், துறவின் சின்னமாகவும், முக்தியின் சமச் சொல்லாகவும் புழங்கி வரும் நாட்டில் நிர்வாணம் மட்டுமே எபப்டி எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்க முடியும்? பெரும் மனித சமூகத்தின் வழிபாட்டுக்குரியதாகத் தான் அந்த நிர்வாணம் உள்ளது. ராமாயணமும் சரி, விவிலியம், குரான் போன்று விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஒரு புனித நூலாகக் கருதப்பட்டதும் இல்லை. இன்றும் வாலி வதம் சரியா, சீதையின் அக்கினிப் பிரவேசம் ராமனின் குண நலன்களுக்கு உகந்த செயலா என்ற பட்டிமன்றமும், விவாதமும் தொடர்ந்து அரங்குகளில் ஒலிக்கக் கேட்கிறோம். ஆனால் எம் எஃஃப் ஹுசைன் ஹிந்து கடவுளர்களை நிர்வாணமாகச் சித்தரித்ததில் இருந்த பின்னணி உணர்வு எப்படிப் பட்டது என்பதைப் பார்க்கும்போது ஹுசைனின் நோக்கம் அருவருக்கத் தக்க ஒன்றாகத் தான் இருந்திருக்கிறது. கோணாரக்கும், அஜந்தா எல்லோரா குகை ஓவியங்களும், மிகத் தொழத்தக்க கோவில்களின் வெளிப் பிரகாரங்களில் புணர்ச்சிச் சிற்பங்களும் எந்த குற்ற உணர்வும் இன்றி ஏற்றுக் கொண்ட இந்து சமூகத்தின் முன் ஹுசைன் வைத்த ஓவியங்கள் அழகுணர்ச்சியும், கலைத்தன்மையும் கொண்டவை அல்ல. ஹிந்து அரசியல் வாதிகளின் எதிர்ப்பை எதிர்பார்த்தே இந்த ஓவியங்கள் வரையப்பட்ட உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

எந்த கலகப் பின்னணியும் கூட அந்த ஓவியங்களில் – அவருடைய பிற ஓவியங்களில் கூட- காணக்கிடைக்கவில்லை. அவர் இந்திரா காந்தியை துர்கையாய்ச் சித்தரித்து துர்கை சிங்கத்தின் மீது அவரோகனம் செய்யும் காட்சியை நவீன பாணியில் வரைந்த போது கூட அவர் ஓவியத்துக்கு எந்த எதிர்ப்பும் வரவில்லை என்பதைக் காணும் போது, ஹுஸைனுக்கு எழுந்த எதிர்ப்பு வெறும் இந்து தீவிரவாதத்தின் குரல் என்பதாக மட்டும் கொள்ள முடியாதபடிக்கு, அவருடைய பிற்கால ஓவியங்களின் நிர்வாணமும் புணர்ச்சிச் சித்தரிப்பும் வக்கரித்து இருந்தன.

அந்த ஓவியமும், அன்னை தெரசா, முஸ்லிம் மத வரலாறூ பற்றிய ஓவியங்களும் அவர் எப்படி ஆள்வோரிடம் இணக்கமாக நடந்து கொண்டார் என்பதன் உதாரணங்கள். எமெர்ஜன்சியின் போது அவசர நிலைக்கு ஆதரவாகவும், இந்திரா காந்தியின் எதேச்சாதிகாரத்துக்கு ஆதரவாகவும் தன் நிலையை வெளிப் படுத்தியவர் அவர். சமூகப் பொறுப்புள்ள பல கலைஞர்கள் சிறையில் இருந்தனர், எதிர்க்கட்சிகள் முடக்கப் பட்டன. என்றாலும் ஹுசைன் அவசர நிலையை வரவேற்று இந்திரா காந்தியின் செயலுக்கு அங்கீகாரம் வழங்கி ஓவியத்தில் வெளிப்படுத்தினார். (இதில் அவர் தனியானவரல்ல. பல இடதுசாரிகளும் எதேச்சாதிகாரத்தின் மீது கொண்ட காதலினால், அவசர நிலைக்கு ஈர்க்கப் பட்டவர்களே.)

கலை சுதந்திரத்தின் விளிம்பில் உள்ள கலைஞனுக்கு இருக்க வேண்டிய மாற்றுப் பொறுப்புணர்ச்சியோ, சிந்திக்கத் தூண்டும் கருத்துக் கோர்வையோ அற்ற குப்பை அவர் ஹிந்து கடவுளர்களை வரைந்த செயல். அது கவனிக்கப் படாமலே குப்பைக் கூடைக்குப் போயிருக்க வேண்டிய, போயிருக்கக் கூடிய ஒன்று. அதற்கு ஏற்பட்ட எதிர்ப்புனர்வு முக்கியமாக அரசியல் வாதிகளிடமிருந்து வெளிப்பட்டது. அதற்கு எந்த தீவிர விளைவுகளும் ஏற்பட வாய்ப்பில்லை. ஹுசைன் அஞ்சியதும் கூட ஹிந்து அரசியல் வாதிகளின் போராட்டத்துக்கு அல்ல என்று தோன்றுகிரது.

நூர் என்ற வார்த்தையையும், குரானில் இடம்பெற்ற வார்த்தைக் கோவையினை தன் படத்தில் பயன்படுத்தியதற்காக முஸ்லீம்களால் தாக்கப்பட்டு அவர் படத்தை வெளியிடுவதை நிறுத்த நேர்ந்தது. ஹிந்து அரசியல் வாதிகளின் எதிர்பபினை விடவும், முஸ்லிம் மதவாதிகளின் எதிர்ப்பு அபாயகரமானது என்று அவர் உணர்ந்திருக்க வேண்டும். ஆனால் ஹுசைன் இறந்ததன் பின்பு வெளியான அனுதாபக் குறிப்புகளில் இந்த அவல நிகழ்ச்சி பற்றி ஒரு வரி கூடக் குறிப்பு இல்லை.

அவர் கதார் நாட்டின் குடியுரிமை பெற்றது இன்னொரு பெரும் முரண். இந்தியாவில் ஜன நாயக ரீதியாக வழங்கப் பட்ட கருத்து சுதந்திரம் கதாரில் இல்லை என்பது மட்டுமல்ல, ஹுசைனின் எந்த ஓவியமும் கதார் நாட்டின் எந்த காலரியிலும் காண்பிக்கப்பட வாய்ப்பே இல்லை. வருமான வரி சலுகைகளுக்காக அவர் கதாரின் குடியுரிமை பெற்றிருக்கலாம்.

ஹுசைனை எதிர்த்த ஹிந்து அரசியல் வாதிகள் கோமேனி, ஜமாத் இஸ்லாமி போன்ற அமைப்புகள் சல்மான் ரஷ்டியின் “சைத்தானின் கவிதைக”ளுக்கு தந்த எதிர்ப்பை நகல் செய்ய வேண்டும் என்று விரும்பி, அதன் மூலமாக ஹிந்து ஒற்றுமை என்ற ஒன்றை ஏற்படுத்த முயன்றிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் இந்த நகல் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. அடிப்படை ஹிந்து கலாசாரத்தின் சகிப்புத் தன்மையை நீக்குவதில் இந்த மாதிரியான போராட்டங்கள் வெற்றி அடையப் போவதில்லை. அரசாங்கமும் சைத்தானின் கவிதைகளை தடை செய்தது போன்ற எந்த முடிவையும் மேற்கொள்ளவில்லை. மேற்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. மிகச் சிறுபான்மையினரின் போராட்டமாகவே அது முடிந்தது.
———————-

Series Navigation2011 ஜப்பான் புகுஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு அணுமின் சக்தி பாதுகாப்புப் பற்றி உலக நாடுகளின் தீர்மானம் -3
author

கோபால் ராஜாராம்

Similar Posts

3 Comments

  1. Avatar
    பா. ரெங்கதுரை says:

    ஹூசைன் ஆதரவுப் பின்னணியில் இருக்கும் இந்து துவேஷ சக்திகளின் முகமூடியை இக்கட்டுரை தோலுரித்துக் காட்டியுள்ளது. கருணாநிதிகூட மாரடித்துக் கொண்டார். திருநெல்வேலியில் அஞ்சலிக் கூட்டத்தை நடத்துவது தி.க.சி. போன்றவர்களே என்பதைக் கவனித்தாலே, ஹுசைனின் யோக்கியதையை நாம் புரிந்து கொண்டுவிட முடியும்.

  2. Avatar
    ஆலந்தூர் மள்ளன் says:

    இறுதியாக நியாய உணர்வுடன் தூஷணமும் இல்லாமல் விதந்தோதலும் இல்லாமல் எழுதப்பட்ட கட்டுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *