காங்கிரஸ் ஊடகங்களின் நடுநிலைமை

This entry is part 43 of 46 in the series 19 ஜூன் 2011

வெகுகாலத்துக்கு முன்பு ஆனந்தவிகடனில் ஒரு நகைச்சுவை துணுக்கு வந்தது.

ஒருவர் இன்னொருவரிடம் கேட்கிறார்.

என்ன டப்பா மேல ராஜீவ்காந்தி படத்தை ஒட்டி ஹால்ல வச்சிருக்கீங்க?

அவர் சொல்கிறார்

டிவியில எப்பவும் இப்படித்தானே வருது? அதனால சீப்பா முடிச்சிட்டேன்.-

 

தூர்தர்ஷன் என்ற இந்திய அரசின் தொலைகாட்சி வந்த புதிதில் ராஜீவின் முகமே தினந்தோறும் எல்லா நேரமும் பார்த்து அலுத்த மக்கள் தொலைக்காட்சியையே வெறுக்கும் அளவுக்கு இந்திய அரசின் தொலைக்காட்சி இருந்தது. எப்போதும் இந்தி நிகழ்ச்சிகள். எப்போதாவது தமிழ் நிகழ்ச்சிகள். கிரிக்கெட் வர்ணனையின் போதுகூட திடீரென்று இந்தியில் வர்ணனை என்று தமிழர்களும் மற்ற மொழி பேசுபவர்களும் வெறுத்துப் போன நிலை. எந்த அளவுக்கு ஊடகம் ஆட்சியில் உள்ளவர்களால் தங்களை பிரச்சார படுத்திகொள்ள அத்துமீறி உபயோகப்படுத்தப்படும் என்பதற்காக இலக்கணம் அது.
இன்று பல நூறு தொலைக்காட்சி நிறுவனங்கள் வந்துவிட்டன. அப்போது தூர்தர்ஷனில் பிரபலமாக ஆகியிருந்த பிரன்னாய் ராய் போன்றோர்கள் தற்போது என் டி டி வி போன்ற தொலைக்காட்சி நிலையங்களை நடத்துகிறார்கள். இவர்கள் இப்போதும் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் காங்கிரஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.
ஒரு தனியார் தொலைக்காட்சி ஒரு கட்சியின் சார்பாக இருப்பதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. சன் டிவியும், கலைஞர் டிவியும் நடுநிலையாக செய்தி தரும் என்று திமுக அனுதாபி கூட சொல்லமாட்டார். அதே போல ஜெயாடிவி ஒரு செய்தியை நடுநிலையாக தரும் என்று அதிமுக அனுதாபியும் சொல்லமாட்டார். அது வெளிப்படை. அது ஓரளவுக்கு நேர்மையும் கூட.
ஆனால் என் டி டி வி, சி என் என் ஐபிஎன் , ஆஜ் தக் ஆகிய ஆங்கில, இந்தி தொலைக்காட்சிகள் நடுநிலை என்றுதான் தங்களை பிரச்சாரமும் செய்துகொள்கின்றன. அதே நேரத்தில் ஓரிரு காங்கிரஸ் நபர்களது ஊழலை வெளிக்கொணர்வதிலும் பங்கு வகித்திருக்கின்றன.
ஆனால் அன்னா ஹசாரே, ராம்தேவ் ஆகியோரின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்துக்கு பின்னால இந்த ஊடகங்களின் மிகவும் அதிகரித்துள்ள பாரபட்சமான நடத்தை அதிர்ச்சி அளிக்கிறது என்றே சொல்லவேண்டும்.
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதிப்போட்டியின் போது என் டி டி வி தன் முகப்பில் வைத்திருந்த பேனர் ராஜீவ் காந்தி போஸ்டர் ஒட்டப்பட்ட டிவி பெட்டியைத்தான் நினைவுபடுத்தியது. கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றதற்காக வைக்கப்பட்ட போஸ்டரில் ராகுல் காந்தியின் கை அசைக்கும் படம்! ஆமாம் அவர்தானே சிறப்பாக ஆடி இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்?
http://twitpic.com/4f1dui


இப்போது  ஆஜ்தக் என்ற (இந்தியா டுடே குழுமத்தின் தொலைக்காட்சி) ராகுல்காந்தியை பற்றி ஒரு மணி நேர புகழ்பாடலை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.
நீரா ராடியா என்ற இடைத்தரகருடன் என் டி டிவி தொலைக்காட்சியின் முக்கிய ஊடகவியலாளரான பர்க்கா தத் பேசியவை ஒலிநாடாவாக வெளிவந்தன. அதில் அவர்கள் எந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்களாகவே செயல்படுகிறார்கள் என்பது தெரிகிறது. ஒருவர் தனிப்பட்ட முறையில் ஒரு கட்சியின் ஆதரவாளராக இருப்பது தவறில்லை. ஆனால் நடுநிலையான பத்திரிக்கையாளராக இருக்க வேண்டியவர், ஒரு கட்சியின் சார்பாக, “நான் தொலைக்காட்சியில் என்ன சொல்லவேண்டும்” என்று ஒரு இடைத்தரகரிடம் கேட்பது எந்த அளவுக்கு கீழ்த்தரமானது என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை.
இவ்வாறு வெளிப்படையாக தங்களை காங்கிரஸ்காரர்கள் என்று சொல்லிக்கொண்டால், அவர்களது மதிப்பு இறங்கிவிடும் என்று கருதி நடுநிலை போல நடந்துகொள்கிறார்கள். காங்கிரஸ் தலைவர்களை கேள்வி கேட்கும் போது அடிக்காமல் கேள்வி கேட்பதைக்கூட பார்க்கமுடிகிறது. இவர்கள் ராமதேவின்  மீதான இந்திய அரசின் தாக்குதலை, ராமதேவின் சர்க்கஸ் என்று வர்ணித்தார்கள்.  பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருக்கும் சுஷ்மா ஸ்வராஜ் 24 மணி நேர போராட்டத்தில் இருந்தபோது தேசபக்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடியதை திரும்ப திரும்ப போட்டு பாஜகவின் போராட்டத்தையே கேலிக்கூத்து போல சித்தரிக்க முயன்றன இந்த ஆங்கில ஊடகங்கள்.  தி இந்துவின் எடிட்டராக பொறுப்பேற்க இருக்கும் வரதராஜன் சுஷ்மா ஸ்வராஜ் காந்தியின் கல்லறைமீது நடனமாடினார் என்று டிவிட் செய்தார். இவர்களிடம் என்ன நடுநிலையை நாம் எதிர்பார்க்கமுடியும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஓரளவுக்கு இந்த காங்கிரஸ் ஊடகங்கள் அவ்வப்போது எதிர்கட்சிகளுக்கும் பேச வாய்ப்பளிக்கின்றன என்பதை நாம் பாராட்டுதலுடன் பார்க்க வேண்டும்.

Series Navigationதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:அறிவா உள்ளுணர்வா?
author

சின்னக்கருப்பன்

Similar Posts

5 Comments

 1. Avatar
  charusthri says:

  IPPadi aalum katchikku jaalara pottaalthaane kaariyam saadhikka mudiyum/Article is excellant.It is better NDTVand AAJTAK CHannels be named congress channels.RAAjendra chozhan, Rajarajachozhan maadhiri congress vaarisu katchi aagi vittadhu.

 2. Avatar
  charusthri says:

  Rajarajachozhanukku piragu Rajendrachozhan arasukattilil erinaan enbadhu mannar aatchiyile.Raajeev Gandhi kku pin Rahul GAandhikku jaalara adippadhu makkal aatchiyile.

 3. Avatar
  charusthri says:

  Rajarajachozhan magan Rajenderchozhan ariyanai erinaan idhu mannar aatchi.Rajeev Gandhikku pin Rahul Gandhi piradhamaraavar Idhu makkal aatchiyile.Adudhaane ayya.aalum katchikku jaalra poduvadhu kaalam kaalamaaga nadappadhu

 4. Avatar
  மலர்மன்னன் says:

  நம் நாட்டில் பெரும்பாலான ஊடக நிருபர்களும் ஆசிரியர்களும் அரசியல் கட்சிகளின், குறிப்பாக ஆளும் கட்சிகளின் ஐந்தாம்படையாகவும் குற்றேவல் படையாகவும் மாறி வெகுகாலம் ஆகிவிட்டது. அதற்குப் பரிசாக எலும்புத் துண்டுகளை சந்தோஷமாகப் பொறுக்கிக் கொள்கிற பழக்கமும் வந்தாகிவிட்டது (கவனிக்க: பெரும்பாலானோர் என்றுதான் குறிப்பிடுகிறேன். விதி விலக்குகள் உண்டு, அரிதாக!). மத்தியில் இந்திரா காந்தியும் தமிழ் நாட்டில் கருணாநிதியும் ஆட்சி செய்ய ஆரம்பித்தபோதே இந்த சம்பிரதாயம் தொடங்கி விட்டது. ஊடகத் தொழில் என்பது முன்பெல்லம் மிகவும் புனிதமான தொழிலாக மதிக்கப்பட்டது. செய்தியாளர்கள் என்றால் அரசியல் தலைவர்களும் உயர் அதிகாரிகளும் மிகுந்த மரியாதைக்குரிய நண்பர்களாக நடத்துவார்கள். காமராஜர் தில்லிக்கு வரும் போதெல்லாம் முதல் வேலையாக ஹிந்து வெங்கட்ராமனைக் கூப்பிடு என்பார். அவரிடம் தில்லி அரசியல் சீதோஷ்ண நிலை எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொண்ட பிறகுதான் வேலைகளைத் தொடங்குவார். அதற்காக வெங்கட்ரமனை காமராஜருக்காக உளவு வேலை பார்க்கிறவர் என்று முடிவு கட்டிவிடக் கூடாது. விவரம் தெரிந்த ஒருவரிடம் நிலவரம் கேட்டறிந்து வேலையை ஆரம்பிக்கிற முன்னெச்சரிக் கைதான் அது. வெங்கட்ராமன் காமராஜரிடம் துரும்பளவு சலுகைகூடப் பெற்றதுமில்லை. காமராஜரும் எவருக்கும் பிரத்தியேக சலுகை எதுவும் கொடுக்கிறவர் அல்ல. பெற்ற தாயிடமே ஒனக்கு எதுக்கு பட்டண வாசம்? அதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது. விருதுப்பட்டியிலயே இரு, போதும் என்பவர். மாதா மாதம் செலவுக்கு அவர் அனுப்பிக் கொடுக்கிற சிறு தொகையை (ரூ 125/-என்று ஞாபகம்)க் கொஞ்சம் அதிகரித்துக் கொடுக்குமாறு தாயார் சார்பில் யாராவது வேண்டினால் எல்லாம் போதும், கூடுதலா அனுப்பிச்சா வெட்டிச் செலவு பண்ணும் என்பார். அவரா சலுகை காட்டுகிறவர்? எனவே எவ்விதப் பிரதி பலனும் எதிர்பாராத நட்புறவின் கலந்துரையாடல்கள்தாம் அவை. அதேபோல் சென்னையில் ஹிந்து கிருஷ்ணஸ்வாமி, எக்ஸ்பிரஸ் ஆர். ராமச் சந்திர ஐயர். சில சமயம் மெயில் ராமநாதன். நான் தலை காட்டினால் போனாப் போகுது, இருந்துட்டுப் போகட்டும் என்று விட்டுவிடுவார் (அவர் கணிப்பில் நான் அண்ணாத்தொரையோட ஆளு! எப்போது போய்ப் பார்த்தாலும் அவரிடமிருந்து வரும் முதல் கேள்வி என்ன சொல்லறாரு உங்கண்ணா எனப்துதான்!). எங்களிடம் மனம் விட்டுப் பேசுவார். காலையில் எங்களைப் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டு பேசிக் கொண்டே அவர் மட்டும் பலகாரம் சாப்பிடுவார். எங்களுக்கு ஒரு காப்பிகூடக் கிடைக்காது. நானே தண்டச் சோறு, இதுல மத்தவங்களை உபசரிக்க எனக்கு ஏது யோக்கியதை என்பார். அண்ணா என்றாலோ செய்தி யாளர்களுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி. அல்வாவில் நெய் ஒழுகுகிற மாதிரி அண்ணாவின் பேச்சில் அன்பு வடியும். அவரது அறிவார்ந்த மெல்லிய நகைச்சுவை ததும்பும் பேச்சை அருகிருந்து கேட்பதே சிறப்புச் சலுகைதான்.

  பெரிய நிறுவனங்கள் செய்தியாளர் கூட்டம் நடத்தும்போது பலரக
  மது வகைகள் ஆறாய்ப் பெருகி ஓடும். ஹிந்து, எக்ஸ்பிரஸ் தலைமை நிருபர்கள் தொட மாட்டார்கள். அதேபோல் விலை உயர்ந்த பரிசுப் பொருள்களும் தருவார்கள். இவர்கள் தொட மாட்டார்கள்.
  இன்று ஊடகத்துறை என்றாலே தரகர் சந்தை என்றாகிவிட்டது. இதில் நுழையும் பெரும்பாலான கற்றுக்குட்டிகளுக்கு நமது பாரம்பரியம் கலாசாரம், மரபு, வரலாறு எதுவும் தெரிவதில்லை. அத்வானி பாகிஸ்தானில் பிறந்தார் என்று சொல்கிறது ஒரு புத்திசாலிக் கொடுக்கு. அத்வானி பிறந்த போது பாகிஸ்தான் என்று ஒரு நாடு பிறக்கப் போகிறது என்பதற்கான சுவடே இருந்ததில்லை என்று அதற்குத் தெரியவில்லை! பிரிவினைக்கு முந்தைய ஹிந்துஸ்தானத்தில் ஸிந்து மாகாணத்தில் பிறந்தவர் என்று சொல்லுமாறு கற்றுக்கொடுப்பாரும் இல்லை. உள்ளே நுழையும்போதே என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்று கணக்குப் போட்டுக்கொண்டு வருகிறதுகள்தான் அதிகம் உள்ளது. தொழிலதிபர்களும் அரசியல்வாதிகளும் எவரை வேண்டுமானா லும் விலைக்கு வாங்கிவிடலாம் என்று தெம்பாக அலைகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு விலை இருக்கிறது அவ்வளவுதான், மற்றபடி யாரும் விலை போகாதவர்கள் அல்ல என்று அலட்சியமாகக் கூறுகிறார்கள். சமீபத்தில் என்னைச் சந்தித்த ஒருவர் இன்றைய சூழலை மட்டுமே அறிந்துள்ள காரணத்தால் உங்களுடைய விலை என்னவென்று கருணாநிதிக்குத் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால்
  உங்களை வாங்கியிருப்பார் என்று வாய் கூசாமல் சொன்னார். இது சகஜம்தான் என்பது போல! இதில் ஒன்றும் தவறு இல்லை எனப்துபோல! எனது விலை தமிழ்நாட்டில் சுயநலமற்ற நிர்வாகம், நிஜமான மக்கள் நல அரசாங்கம், அவர்களைக் கையேந்த வைக்காத அரசாங்கம்; இந்த விலையை அவரால் கொடுக்க முடியாது என்று சொன்னேன் (கருணாநிதி தாம் விரும்பும் செய்தியைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே சில நிருபர்களைப் பொருத்தமாகக் கேள்வி கேட்கப் பழக்கி வைப்பவர்!). நல்ல வேளையாக இன்று நான் ஊடகத் துறை யிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். வெறும் பெருங்காயம் வைத்த பாண்டம்தான் ! எனக்குச் சபலம் தட்ட வாய்ப்பே இல்லை! குல தெய்வம் காக்கிறாள்!
  -மலர்மன்னன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *