இந்தக் கதையின் பெயர்கள் அனைத்தும் கற்பனையே
வாழைவல்லியூர். இருநூறு கிலோ மீட்டர் சுற்றளவில் இந்த ஊருக்கு வராதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. இந்த ஊரின் பெருமைக்குக் காரணம் ஆண்டாண்டு நடக்கும் தேர்த்திருவிழா. அடுத்து இந்த ஊரின் கோயில் யானை கற்பகம். உடம்பெல்லாம் வெள்ளைப் புள்ளிகள் தெளித்த தோற்றம். இரண்டு முழம் தந்தம். கம்பீரமாக ஆனால் பொறுமையாக அனைவரையும் ஆசீர்வதிக்கும் அழகு. இத்தனையுடன் பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு கற்பகம் ஆசீர்வதித்தால் அந்தப் பேறு கிடைக்கலாம் என்ற அந்த ஊரின் மொத்த நம்பிக்கை.
இந்த ஊருக்குத்தான் வேலை மாற்றலாகி வந்திருக்கிறார் உத்தமன்.
வரும்போதே மனைவி மனோவையும் ஐந்தாம் வகுப்பு மகள் மீராவையும் அழைத்து வந்துவிட்டார். சன்னதித் தெருவில் வாடகை வீடு. இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. அந்த ஊர்வாசிகளாகவே அவர்கள் ஆகிவிட்டனர். மனோவுக்கு பக்கத்து வீட்டுத் தோழி லலிதா. அவர் இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்து குடும்பம் நடத்துபவர். இந்த ஊரைப் பற்றிய மொத்தச் செய்தியும் அறிந்த வலைப்பக்கம் இவர். இவரின் தோழமையில்தான் இந்த ஊர் மனோவுக்கு மிகவும் பிடித்த ஊராகிப் போனது. உண்மையில் வெயிலுக்குக் கிடைத்த வேப்பமர நிழல்தான் இந்த லலிதா.
ஒரு நாளைக்கு மனோ இரண்டு முறை வெளியே வருவார். காலை எட்டு மணிக்கு மீராவின் பள்ளிப்பேருந்து வரும். மீராவை அனுப்பிவிட்டு அப்படியே ‘பாபா கடைக்கு’ வந்து வேண்டிய சாமான்களை வாங்குவார். அந்த சன்னதித் தெருவில் பாபா கடை மிகவும் பிரசித்தம். இன்றுவரை அந்தக் கடைக்குச் சமமாக இன்னொரு கடை இல்லை. மீண்டும் நான்கு மணிக்குப் பள்ளிப்பேருந்தில் வரும் மீராவை அழைத்துப் போக வெளியே வருவார். தனிமையாக இருக்கும்போது ஒரு நல்ல தோழியாக லலிதா. மனோவுக்கு வாழ்க்கை இனித்தது.
ஒரு நாள். வியாழக்கிழமை. காலை 8 மணிக்கு வழக்கம்போல் மனோ மீராவைப் பேருந்தில் அனுப்ப வந்தார். பேருந்து ஏற்கனவே வந்து காத்திருந்தது. அதன் ஓட்டுநர் ஒரு புதிய மனிதருடன் நின்று கொண்டிருக்கிறார். அந்த மனிதரை ஒரு நொடிகூட மனோவால் ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை.
சடைப்பிடித்த முடி. சிரைக்காத முகம். பற்களை மூடாத உதடுகள். கருநீலச் சட்டை. காவி வேட்டி. செருப்பில்லாத கால்கள். இந்த மனிதரிடம்தான் அந்த ஓட்டுநர் ஏதோ சொல்கிறார். ‘சித்தப்பா, சித்தப்பா’ என்கிறார். ‘பேருந்தில் ஏறிக்கொள்ளுங்கள். கொண்டுபோய் விடுகிறேன்.’ என்கிறார். அந்தப் புதிய மனிதர் ‘வேண்டாம்’ என்று தலை அசைக்கிறார். நகர்கிறார். ஒருவழியாகப் பேருந்து புறப்படுகிறது.
2
மனோ பாபா கடைக்குச் செல்கிறார். அங்கேயும் அந்தப் புதிய மனிதர். கடையில் உள்ளவர்கள் மட்டுமல்ல. வருகிற போகிற அனைவருமே ‘சித்தப்பா வணக்கம்’ என்கிறார்கள். அந்தச் சித்தப்பா உரிமையோடு பாபா கடைக்குள் போகிறார். ‘என்ன வேண்டும் சித்தப்பா’ என்று பின்னாலேயே போகிறார் ஒரு சிப்பந்தி. மிகப் பெரிய புதிராக இருக்கிறது மனோவுக்கு. ‘யாரிந்தக் கிறுக்கன். இவனுக்கு ஏன் இத்தனை மரியாதை. விரட்டப்பட வேண்டியவனுக்கு ஏன் இந்த விருந்து மரியாதை? நமக்கேன் வம்பு. கேட்டால் ஏதாவது கதை சொல்வார்கள். இருக்கவே இருக்கிறார் லலிதா. நிச்சயம் இவரை லலிதாவுக்குத் தெரிந்திருக்கும். தெரிந்து கொள்வோம்’ வேகமாகப் புறப்பட்டார் மனோ. அந்த சித்தப்பா உருவம் மனத்திரையிலிருந்து நகர மறுக்கிறது. ‘சே! எத்தனை அசிங்கம். ஒரு கிறுக்கனைக் கொண்டாட இந்த மக்களுக் கென்ன பைத்தியமா? அந்த ஓட்டுநர் பேருந்திலேயே அவரை ஏற்றிச் செல்ல நினைக்கிறார். புதிய குழந்தைகள் பயப்பட மாட்டார்களா? தொடர்ந்து இந்த ஊரிலேயே நம்மால் இருக்கமுடியுமா?’ பதில் தெரியாத பல கேள்விகள். அத்தனையையும் அள்ளிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார் மனோ.
சமையல் முடிந்த கையோடு லலிதாவிடம் வந்துவிட்டார். ‘லலிதா. இன்று ஒரு கிறுக்கனைப் பார்த்தேன். இன்றுதான் முதல்முறையாகப் பார்க்கிறேன். அந்த முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. அத்தனை அருவருப்பு. இதுபோன்று கிறுக்கன்கள் வெளியூர்களிலிருந்து வருவதுண்டு. ஆனால் இங்கு நடப்பதோ வித்தியாசமாக இருக்கிறது. எல்லாரும் ‘சித்தப்பா வணக்கம்’ என்கிறார்கள். தன் சொந்தக் கடைபோல பாபா கடைக்குள் போகிறான். சிப்பந்திகள் ஓடிஓடி கவனிக்கிறார்கள். யார் லலிதா அவன்? உங்களுக்குத் தெரியும்தானே?’
‘கிறுக்கனா? யாரிடமாவது அவரைக் கிறுக்கன் என்று சொன்னீர்களா?’
‘இல்லையில்லை. எல்லாக் கேள்விகளையும் அப்படியே பொத்திக் கொண்டு நேரே உங்களிடம்தான் வருகிறேன். இன்றுதானே அவனைப் பார்க்கிறேன்.’
‘நல்ல வேளை. யாரிடமாவது கிறுக்கன் என்று சொல்லியிருந்தால் மக்கள் உங்களைக் கிறுக்கி ஆக்கியிருப்பார்கள். அவர் யார் தெரியுமா?’
‘அந்தக் கேள்விதான் விண்ணுக்கும் மண்ணுக்குமாக நிற்கிறது லலிதா. யார் அவன்?’
‘அவன் இவன் என்று சொல்லாதீர்கள் மனோ. அவர் யார் என்று தெரிந்தால் ரொம்ப வருந்துவீர்கள்.’
இரண்டு ஆண்டுகளாக ஓடும் தொலைக் காட்சித் தொடரின் முடிவுக் காட்சியைக் காணும் ஆர்வத்துடன் லலிதாவின் பதிலை எதிர் நோக்கி நின்றார் மனோ.
லலிதா சொல்லத் தொடங்கினார்.
3
‘இந்த ஊரில் ‘நல்லா’ என்று ஒருவர் வாழ்ந்து கொண்டிருந்தார் மனோ. மிகப் பெரிய வள்ளல். இந்த ஊரின் ஏழை மக்கள் உழும் நிலமெல்லாம் நல்லா அவர்களுக்கு இனாமாகத் தந்ததுதான். அந்த பாபா கடை கூட பாபாவுக்கு நல்லா வாங்கித் தந்ததுதான். இன்றுவரை அந்த வியாபாரம் வேறு எந்தக் கடையிலும் இல்லை. அவர் வடம் பிடித்தால்தான் கோயில் தேர் உருளும். அந்தக் கற்பகம் யானை கூட அவர் வாங்கித் தந்ததுதான். அவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள். முதல் மூன்று பிள்ளைகள் பக்கத்திலுள்ள மிருதங்கப்பட்டியில் ஏக வசதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நான்காவது பையன்தான் இந்த சித்தப்பா. அப்பா இறந்ததும் பேச்சை நிறுத்திக் கொண்டார். பற்றற்று அலைகிறார். இவரின் சொத்தில் ஏழு தலைமுறை உரட்கார்ந்து சாப்பிடலாம். எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எல்லாச் சொத்துக்களையும் மூன்று பேரும் பிரித்துக் கொண்டு இவரை இப்படியே விட்டுவிட்டார்கள். இவர் எங்கிருப்பார் என்று யாருக்கும் தெரியாது. எந்த ஊருக்குப் போனாலும் இந்த மரியாதை அவருக்கு உண்டு. ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்த ஊருக்கு வந்தார். இப்போதுதான் மீண்டும் வருகிறார். இவர் வந்தால் ஊரிலுள்ள பீடைகள் விலகும் என்பது இந்த ஊர் மக்களின் நம்பிக்கை. நானும் அதை நம்புகிறேன். இவர் இருக்கும்போது தேர்த் திருவிழா வந்தால் இவர் வடம் பிடித்தபின்தான் தேரிழுப்பார்கள்.’
லலிதா சொல்வது ஒரு சினிமா பார்ப்பதுபோல் இருக்கிறது. ‘கேள்விப்பட்டிருக்கிறேன் லலிதா. உண்மையில் இப்படி ஒரு கதையின் கதாபாத்திரத்தை இன்றுதான் நேரில் பார்க்கிறேன். சே! எவ்வளவு உயர்ந்த மனிதர் இவர். அழகான மனிதர்கள் பலர் அசிங்கமாக வாழும் இந்தக் காலத்தில் இந்த உருவத்துக்குள் இத்தனை அழகான வாழ்க்கையா? அட! மணி நான்காகப் போகிறது. மீராவை அழைக்க வேண்டும். இந் நேரம் பேருந்து வந்திருக்கும்.’
சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ‘ஓடுங்கள். ஓடுங்கள். வீட்டுக் கதவுகளைத் திறக்காதீர்கள். யாரும் வெளியே வராதீர்கள்.’ என்று ஒலிபெருக்கியில் ஒருவர் கத்துவது கேட்கிறது. லலிதாவும் மனோவும் கலவரம் அடைந்தார்கள். சாளரம் வழி பார்த்தார்கள். பேருந்து வந்து குலுங்கி நின்றது. பின்னால் கற்பகம் வேகமாக சன்னதித் தெருவுக்குள் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. ஒரு மோட்டார் சைக்கிளைத் தூக்கி வீசியது. மேலும் ஒலி பெருக்கியில் அறிவிப்பு. ‘பேருந்தில் இருப்பவர்கள் உள்ளேயே இருங்கள். பிள்ளைகளை அழைக்க யாரும் வெளியே வராதீர்கள்.’
சாளரங்களின் வழியே அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்கள் மக்கள். பேருந்துக்குள்ளே கால்களுக்கிடையே முகங்களைப் புதைத்துக் கொண்டு ஊமையாக அழுது கொண்டிருந்தார்கள் பிள்ளைகள். யார் கண்டது? மதம் பிடித்த அந்த கற்பகம் அந்தப் பேருந்தை உருட்டிவிடலாம். இப்படி ஒரு விபரீதம் இந்த ஊர் மக்கள் அறிந்ததே யில்லை.
4
‘மீரா, மீரா.. பத்திரமாக இரு. ஒன்றும் ஆகாது.’ கத்தினார் மனோ. லலிதா மனோவை ஆறுதலாகக் கட்டிக் கொண்டார். கற்பகம் பேருந்தை நெருங்கிவிட்டது. ஒரே நிசப்தம். ஒலிபெருக்கியும் நின்றுபோனது. சப்தம் கேட்டால் கற்பகம் மூர்க்கமாகலாம். மனித நடமாட்டம் இல்லை. பேருந்து. உள்ளே பிள்ளைகள். வெளியே கற்பகம். வேறு எதுவுமே தென்படவில்லை. திடுக்கமான நொடிகள் கடந்து கொண்டிருந்தன. எங்கிருந்துதான் வந்தாரோ சித்தப்பா.
இரண்டு கைகளையும் பக்கவாட்டில் நீட்டியபடி பேருந்துக்கும் கற்பகத்துக்கும் இடையே வந்து குதித்து நின்றார். ஒரு குன்று குலுங்குவதுபோல் குலுங்கி நின்றது கற்பகம். தும்பிக்கையைத் தடவிக் கொடுத்தார் சித்தப்பா. அவர் முன்னே செல்ல கற்பகம் அவரைத் தொடர்ந்தது. சித்தப்பா சென்ற திசை நோக்கி சாளரம் வழி மக்கள் அவரைக் கும்பிட்டார்கள். மனோவும்தான். இதோ உத்தமனும் தகவல் கிடைத்து வந்துவிட்டார். மீரா பேருந்திலிருந்து இறக்கப்பட்டாள். கட்டிப்பிடித்து உச்சி மோந்தார் மனோ. பெருமூச்சு விட்டார் உத்தமன். உத்தமன் மட்டுமா? அந்த சன்னதித் தெருவே பெருமூச்சு விட்டது. காட்டிலாகாவும் காவல் துறையும் திரும்பிச் சென்றுவிட்டன. கற்பகம் பழைய நிலைக்கு வந்துவிட்டது.
அன்று இரவு முழுவதும் மனோவும் உத்தமனும் தூங்கவே யில்லை. இரவு முழுவதும் ‘சித்தப்பா’ பேச்சுதான். மனோ சொன்னார். ‘நம் மீராவைக் காப்பாற்றத்தான் கடவுளாக வந்திருக்கிறார் இந்த சித்தப்பா. இனிமேல் இதுதான் நமக்கு சொந்த ஊர். நல்ல மனிதர்கள் வாழ்ந்த, வாழும் இந்த மண்ணில் நாமும் வாழ்வோம்.’
தூங்கா இரவாக அந்த வியாழக்கிழமை கழிந்தது. விடிந்தது வெள்ளி. வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு மாணவரும் ஒரு குறளைச் சொல்லி அதற்கு விளக்கம் சொல்லவேண்டும். அன்று தான் சொல்ல வேண்டிய குறளையும் அதற்கான விளக்கத்தையும் உரக்கப் படித்துக் கொண்டிருந்தாள் மீரா.
உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள் பெருந் தேர்க்
கச்சாணி அன்னார் உடைத்து
உருவத்தைப் பார்த்து யாரையும் கேலி செய்யாதீர். பரிகசிக்காதீர்.
பெரிய தேர் ஓடுவதை ரசிக்கும் நாம் அளவில் சிறுத்த கறுத்த அச்சாணியைப் பரிகசிக்கலாமா?
மனோ மீராவிடம் வந்தார். நெஞ்சுக்குள் முகம் புதைய கட்டிப் பிடித்தார். கண்கள் கலங்கியதால் எல்லாம் மங்கலாகத் தெரிந்தது. மீராவிடம் சொன்னார்
‘அம்மா. அந்தக் குறளை மீண்டும் படியம்மா.’
மீண்டும் படித்தாள் மீரா.
5
இதுவரை தான் மீட்டாத இதயவீணையை யாரோ மீட்டுவதுபோல் உணர்ந்தார் மனோ.
யூசுப் ராவுத்தர் ரஜித்
- இஸ்ராயீலை ஏமாற்றிய கடல்
- சாம்பல்வெளிப் பறவைகள்
- என் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை
- நாதம்
- சாகச விரல்கள்
- 5 குறுங்கவிதைகள்
- அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்
- நினைவுகளின் சுவட்டில் – (70)
- எதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து
- காலாதி காலங்களாய்
- உருவு கண்டு எள்ளாமை வேண்டும்
- சின்னாண்டியின் மரணம்
- விஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன?
- முதுகெலும்பா விவசாயம் ?
- கட்டங்கள் சொற்கள் கோடுகள்
- இரண்டு கவிதைகள்
- தியாகச் சுமை:
- ஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்
- புள்ளி கோலங்கள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)
- எனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)
- கறுப்புப்பூனை
- பழமொழிகளில் பணம்
- இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்
- விக்கிப்பீடியா – 3
- உறவுகள்
- தனித்திருப்பதன் காலம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5
- கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா
- முதுகில் பதிந்த முகம்
- ராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்
- கம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”
- இலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….
- அரச மாளிகை ஊக்க மருத்துவர்
- ஒற்றை எழுத்து
- சென்னை வானவில் விழா – 2011
- மாலைத் தேநீர்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 40
- தமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா
- 2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4
- தற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:
- காங்கிரஸ் ஊடகங்களின் நடுநிலைமை
- அறிவா உள்ளுணர்வா?
- இப்போதைக்கு இது – 2
- யாதுமானவராய் ஒரு யாதுமற்றவர்