சமீபத்தில் ஒரு கணினி நிறுவனத்தில் பணிபுரியும் ஏறக்குறைய 100 கணினி ”வல்லுனர்கள்” சென்னை காவல் துறை ஆணையரை சந்தித்து தங்கள் கணினி அலுவலகத்தில் நிறைய முறைகேடுகள் நடப்பதாகவும் தங்களுக்கு 2 மாதமாக சம்பளம் தரப்படவில்லை என்றும் முறையிட்டார்கள். குறைகளை கேட்டறிந்த ஆணையர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து விட்டு குறைகளை ஒரு மனுவாக எழுதி தரும்படி கேட்டிருக்கிறார். யாருக்குமே என்ன எழுதுவது எப்படி எழுதுவது என்று தெரியாமல் முழித்திருக்கிறார்கள். மறுநாள், இது செய்தியாக சில தினசரிகளில் வெளியாகி இருந்தது. எங்கே தவறு இருக்கிறது என்று யோசனையாக இருந்தது. மேலும், இந்நிலை கவலை அளிப்பதாகவும் இருந்தது.
ஏன் கோர்வையாக விசயங்களை இன்றைய இளைஞர்களால் எழுத முடியவில்லை? பள்ளிகளில் “Develop the Hints, Comprehension, Conversation, Letter Writing” என்ற பயிற்சிகள் எல்லாம் ஆங்கிலத்திலும், தமிழுலும் இருந்த போதிலும் அது தொடர்ச்சியான பயன்பாட்டில் இல்லாததால் இன்றைய இளைஞர்களால் கோர்வையாக ஒரு மனு எழுத இயலவில்லையா?!. ஏன் தொடர்ச்சியாக எழுத வேண்டிய நிலை இல்லாமல் போய்விட்டது? எங்கோ தப்பு இருக்கிறதே?
அட! ஒரு காரணம் தெரிந்தது. யாரும் யாருக்குமே தனிப்பட்ட முறையில் கடிதம் எழுத வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டது. எனவே, சம்பவங்களை கோர்வையாக எழுதவும் மனுவை யாருக்கு முகவரிப்பது என்றும் தெரியாமல் போய்விட்டது.
அரசு அலுவலகங்களில் பெரும்பாலும் தரகர்கள் இருப்பார்கள். அவர்கள் வேலையே மனு எழுதுவது தானே. நம் வேலை அவர்கள் காட்டிய இடத்தில் கையொப்பம் இடுவது. யாருக்கு மனுக்களை படித்துப்பார்க்க எல்லாம் நேரம் இருக்கிறது. எப்படியாவது வேலை முடியவேண்டும் அவ்வளவுதானே? பின்னால் ஏதாவது சிக்கல் வரும்போது முழிக்க வேண்டி இருக்கிறது. மேலும், மேம்போக்குத்தனம் அதிகம் உள்ள இளைய சமூகத்தில் இதை பற்றி எல்லாம் எதற்கு கவலைப்படவேண்டும்?
இன்றைய தகவல் தொழில் நுட்ப யுகத்தில் தகவல் தொடர்பு என்பது மிகவும் எளிதாகிவிட்ட நிலையில் கடிதப்போக்குவரத்து என்பது மிகவும் குறைந்து விட்டது. அலுவல் சார்ந்த தகவல்கள் தான் கடிதம் மூலம் பரிமாறிக்கொள்ளப்படுகிறது. பிரதமர் தொலைத்தொடர்பு மந்திரிக்கு கடிதம் எழுதுகிறார். (அதையும் கூட தொலை தொடர்பு மந்திரி நிராகரிப்பது வேறு விசயம்). முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். மற்றபடி, தனிப்பட்ட விசயத்திற்கு குடும்பரீதியாகவோ அல்லது நட்புரீதியாகவோ யாரும் யாருக்குமே கடிதம் எழுதுவதே இல்லை. ஆனால், மெயில் அனுப்புகிறார்கள். அனுப்பப்படும் மெயில்கள் உயிர்ப்பு தன்மையுடனும் சம்பவங்கள் கோர்வையாகவும் இருக்கிறதா? தெரியவில்லை. பெரும்பாலும் “whr r u?, How r u?, Wat’s happening thr?” இது போன்ற உபயோகங்கள் தான் இருக்கிறது. சில பள்ளிகளில் இது போன்ற “குறு வார்த்தை” பிரயோகங்களில் பரிட்சை எழுதுகிறார்களாம் சிறுவர்கள். அது அனுமதிக்கப்பட்டிருக்கிறதாம். சேக்ஸ்பியர் திண்ணை பள்ளிக்கூட அளவிற்கே படித்ததாகவும், அவர் தவறாக ஆங்கிலத்தில் எழுதியவற்றை “சேக்சிபியரிசம்” என்று ஒத்துகொண்டதாகவும் சொல்வார்கள். அது போல் இதையும் ஏதாவது ஒரு இசத்தில் அங்கீகரிக்க வேண்டியது தான்.
பேசுவது என்பது வேறு. எழுதுவது என்பது வேறு. இன்று அனைவருடனும் உடனுக்குடன் தொடர்புகொண்டு பேச முடிகிறது. எழுத வேண்டிய அவசியம் இல்லை. எனவே, இளைஞர்களுக்கு மனு எழுத இயலவில்லை.
இந்திராகாந்தியும் நேருவும் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவையாகவும் பின்பு புத்தக வடிவிலும் வெளிவந்தது. அவை பெரும்பாலும் பொது நோக்குடனும் பொது வாழ்வில் கடை பிடிக்க வேண்டிய நடைமுறைகளுடனும் இருந்தன. நேரு குடும்பதிலோ அல்லது பிற தலைவர்கள் குடும்பத்திலோ இது போன்ற கடிதப்போக்குவரத்து நின்று போனது ஏன்? பொது நோக்கம் எதுவும் இல்லையா? அல்லது கடிதப்போக்குவரத்து என்பதே இல்லையா? உலக அளவிலும் இது போன்று தலைவர்கள் கடிதம் எழுதிக்கொள்கிறார்களா? இது போன்ற கடிதங்கள் எதுவும் பிரசுரம் ஆகிறதா? ஆனால், நீரா ராடியா போன்றோரின் “டேப்” கள் உலக பிரசித்தி பெற்றவையாக இருக்கின்றன.
சமீபத்தில் இயக்குனர் பாலசந்தர் அவர்கள் ஒரு திரைப்படத்தை பாராட்டி எழுதிய கடிதம் விளம்பரமாக வெளியிடப்பட்டிருந்தது.
பேராசிரியர் நமச்சிவாயம் அவர்கள் ஒரு விழாவில் கூறியது இங்கே நினைவு கொள்ளத்தக்கது. தனக்கு முன்னவரான அவ்வை நடராஜன் அவர்களுக்கு கிடைத்திருக்கு வேண்டிய பதவி தனக்கு கிடைக்கப்பெற்றதை பாராட்டி அவ்வை தனக்கு எழுதிய கடிதத்தில் “என் பின்னவன் பெற்ற செல்வம் யான் பெற்றதன்றோ?” என்ற கம்பராமாயண வரிகளை கோடிட்டு காட்டியதை குறிப்பிட்டார்கள். தமிழறிஞர்கள் தான் இப்படி எல்லாம் எழுதிக்கொள்ள வேண்டும் என்றில்லை. நானும் என் நண்பனும் பரிமாறிக்கொண்ட கடிதங்களில் எல்லாம் “தமிழ் தனை இகழ்ந்தவனை தாய் தடுத்தாலும் விடேன்” ,“தமிழுக்கும் அமுதென்று பேர்”, “தமிழ் வாழ்க” என்றெல்லாம் கடிதத்தின் தலையில் எழுதியது நினைவுக்கு வருகிறது. ஒரு முறை பொய்கூறிவிட்ட நண்பனுக்கு அதன் விளைவுகளை சுட்டிக்காட்ட ”தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னை சுடும்” என்று நான் எழுத அதை மறுதளித்து எழுதிய நண்பன் “பொய்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின்” என்று எழுதினான். ஒத்த தமிழுணர்வு உள்ள யாரும் இப்படி எழுதிக்கொள்ள முடியும். சாதாரணர்கள் பரிமாறிக்கொண்ட கடிதங்கள் தாம் இவை.
இன்று யாரையோ, யாரோ, எந்த சூழ்நிலையையோ மனதில் வைத்து எழுதப்பட்ட, வரையப்பட்ட ரெடிமேட் குறுஞ்செய்திகளும், வாழ்த்து அட்டைகளும் (காதல் கடிதம் உட்பட) பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. ஒரு வாக்கியம் கூட சிந்திக்க நேரமும் இல்லை. அவசியமும் இல்லை. அதான் ரெடிமேடாக கிடைக்கிறதே.
சரி. இவை ஒரு புறம் இருக்கட்டும். தபால் நிலையங்கள் எல்லாம் மூடு விழா காண்பது மிகவும் வருத்தத்துக்குரியது. இருக்கின்ற தபால் நிலையங்கலும் விற்பனை கூடங்கள் ஆகிவிட்டன. உப்பு, புளி தவிர எல்லாம் விற்கிறார்கள். பெரும்பாலும் தற்போது அலுவல் சார்ந்த கடிதங்கள் தான் அனுப்படுகின்றன. அதுவும் கொரியர் மூலமாக தான் நடைபெறுகிறது. காலத்தால் தன்னை புதுப்பித்துக்கொள்ளாத எதுவும் கால ஓட்டத்தில் வழக்கொழிந்து போகும் என்பது உண்மை தானே. ஒரு சிறிய ஊரில் தபால்காரர் என்பவர் அனைவர் குடும்பத்திலும் ஒருத்தர் போல இருப்பார். அந்த ஊரில் உள்ள அனைவரது சுக துக்க விழாக்களிலும் பங்கெடுப்பார். எங்கள் ஊர் தபால்காரர் தனது 5 பெண்களை எப்படி கரை சேர்க்கப்போகிறோம் என்று எங்கள் வீட்டில் சொல்லிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. வெயிலுக்கு இதமாக மோர், தண்ணீர் என்று ஏதாவது குடித்து விட்டு இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு தான் போவார். தெருப்பெயர் எல்லாம் முகவரியில் எழுத வேண்டியதே இல்லை. பெயரும் ஊரும் போட்டால் போதும் நமது கடிதத்தை நம்மிடம் சேர்த்து விடுவார். இதில் இன்னும் சிறப்பு என்னவென்றால் எங்களூரில் ஒரெ பெயரில் பலர் இருப்பார்கள். அவரின் ஒரு பெண் முஸ்லீம் பையன் ஒருவனுடன் ஓடிப்போய் விட்டதால் அவர் ஊரையே காலி செய்து விட்டுப்போனது தனிக்கதை. குடும்ப டாக்டர்கள் என்ற வழக்கம் ஒழிந்து போனது போல் ஊர் தபால்காரர் என்பதெல்லாம் இனி இல்லை.
சரி. விசயத்துக்கு வருவோம். இனி, சிறுவர்களை உறவினர்களுக்கு தொலை அல்லது அலை பேசியில் பேசுவதோடு நின்று விடாமல் இமெயில் எழுத ஊக்குவிக்கலாம். அதிலும் கூட, சம்பவங்கள் கோர்வையாக சொல்லப்பட்டிருக்கிறதா என்று கண்காணிக்கலாம்.
ஆமாம். அலைபேசியில் அதிகம் பேசினால் புற்று நோய் வரும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுருக்கிறதே! பேசாமல் இனிமேல் கடிதமே எழுதிவிடலாமோ? தபால் நிலையங்களாவது பிழைக்க வழி கிடைக்குமே.!!!
- இஸ்ராயீலை ஏமாற்றிய கடல்
- சாம்பல்வெளிப் பறவைகள்
- என் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை
- நாதம்
- சாகச விரல்கள்
- 5 குறுங்கவிதைகள்
- அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்
- நினைவுகளின் சுவட்டில் – (70)
- எதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து
- காலாதி காலங்களாய்
- உருவு கண்டு எள்ளாமை வேண்டும்
- சின்னாண்டியின் மரணம்
- விஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன?
- முதுகெலும்பா விவசாயம் ?
- கட்டங்கள் சொற்கள் கோடுகள்
- இரண்டு கவிதைகள்
- தியாகச் சுமை:
- ஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்
- புள்ளி கோலங்கள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)
- எனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)
- கறுப்புப்பூனை
- பழமொழிகளில் பணம்
- இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்
- விக்கிப்பீடியா – 3
- உறவுகள்
- தனித்திருப்பதன் காலம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5
- கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா
- முதுகில் பதிந்த முகம்
- ராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்
- கம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”
- இலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….
- அரச மாளிகை ஊக்க மருத்துவர்
- ஒற்றை எழுத்து
- சென்னை வானவில் விழா – 2011
- மாலைத் தேநீர்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 40
- தமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா
- 2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4
- தற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:
- காங்கிரஸ் ஊடகங்களின் நடுநிலைமை
- அறிவா உள்ளுணர்வா?
- இப்போதைக்கு இது – 2
- யாதுமானவராய் ஒரு யாதுமற்றவர்