This entry is part 5 of 46 in the series 19 ஜூன் 2011

விரல்களின் வேகத்தில்

சுண்டலின் விசையில்
நம்பிக்கைகள்
கைகள் சுழற்றும்
சோளிகளின் சாகசங்களை நம்பி.
முழங்கையை மடக்கி விரித்து
குலுக்கிப் போடும் சோளியில்
நிமிர்ந்தும் கவிழ்ந்தும்
கிடப்பதாகிறது கனவு வாழ்வு.

மீண்டும் மீண்டும்
உருளும் சோளிக்குள்
முழித்த பார்வைகளின்
முணுமுணுக்கும் வாக்குகள்
முத்தமிடும் முள்முடிகளாய்.

பணம் ஒரு சோளி
பாசம் ஒரு சோளி
குழந்தை ஒரு சோளி
பாய்ந்து புரண்டு
பன்னிரண்டு சோளி சொல்லும்
பகடைக்குள் திடுக்கிடுகிறது
எதிர்பார்ப்பு.

வீழ்பவன் மனிதன்
எழுபவன் வீரன்
இல்லாததும் இயலாததும்
ஏதுமில்லையென்றாலும்
சொல்லிக்கொண்டே
சுழல்கிறது சோளி!!!

ஹேமா(சுவிஸ்)

 

Series Navigationநாதம்5 குறுங்கவிதைகள்