This entry is part 38 of 46 in the series 19 ஜூன் 2011

கொடும் மழையினூடே கரைந்தோடும்

ஆற்றோர மணல் படுகைகளைப் போல்

ஓர் முழு நாளிற்கான மனச் சலனங்களை

கழுவித் தூரெடுக்கும் ஆற்றல் மிக்கதாய்

மாலைத் தேநீர்கள் உருப்பெற்று விடுகின்றன

பின் பிடரி வழியாய் உங்கள் உயிர் குடிக்கும்

சில எம காத உருவங்களையோ

பாத விரல்களினிடையேயான

சேற்றுப் புண் எரிச்சல்களையோ

ஓர் தேநீரின் இதமான கதகதப்பில்

சில மணித்துளிகளாவது அவைகளையற்று

இன்புற்றுக் கிடக்கக்கூடும் நீங்கள்

மென்னிருள் கொண்ட ஓர் பொன் மாலைப் பொழுதோ

எப்பலன்களுமற்ற  உங்களையொத்தாருடையேயான

எவ்விஷயங்களுமற்ற வெற்று சம்பாஷனைகளோ

தேநீர்களன்றி சேயில்லா மலடி போல்

நிறைவுறக்கூடும் அவைகள்.

உங்களையும் மீறிய ஓர் கொடுஞ் சம்பவமொன்றில்

நாவிடறும் துர் வார்த்தைப் பிரயோக நிலையில்

உட்கொள்ளுங்கள் ஓர் தேநீரை.

சில நிமிடங்கள் வரையாவது நிறுத்தப்படக்கூடும்

சில துர் நிகழ்வுகள்.

 

எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ

 

Series Navigationசென்னை வானவில் விழா – 2011சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 40