விக்கிப்பீடியா – 3

This entry is part 26 of 46 in the series 19 ஜூன் 2011

“ஆமாம் குணா.. நீங்கள் எங்கே பிறந்தவர்?”

“நான் புதுக்கோட்டைப் பக்கத்தில் ஒரு சின்ன கிராமத்தில் பிறந்தவன்.  நீங்கள்..”

“நான் சின்னாளப்பட்டி என்ற ஊரில் பிறந்தவன்”

“அது என்ன சின்ன கிராமமா?”

“அது திண்டுக்கல்லுக்கு அருகே இருக்கும் ஊராட்சி”

“அப்படியா.. நான் சின்னாளப்பட்டி சேலை பற்றி மட்டும் கேள்விப்பட்டதுண்டு.  ஆனால் அதற்கு மேல் தெரியாது..”

“உங்களுக்கு அது பற்றித் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் விக்கிப்பீடியாவில் தேடுங்கள்.  அதில் இருக்கிறது.”

“அப்படியா.. அப்படியென்றால் எங்கள் ஊர் பற்றியத் தகவல்களும் அதில் இருக்குமா?”

“இருக்கலாம்.. இல்லாமலும் போகலாம்..”

“அது எப்படி உங்கள் ஊர் பற்றி விவரம் மட்டும் இருக்கும் போது.. எங்கள் ஊர் விவரம் இருக்காதா?”

“உங்கள் ஊரைப் பற்றியத் தகவலை யாராவதுத் தட்டச்சுச் செய்து இணையத்தில் ஏற்றியிருந்தால் இருக்கும்.  எங்கள் ஊரைப் பற்றி யாரோ தகவல்களைச் சேகரித்து இணையேற்றியிருப்பதால் அது இருக்கிறது.”

“அப்படியா.. நானும் அது இருக்கிறதா என்று பார்க்கிறேன்.  அப்படி இல்லாவிட்டால் தகவல்களை என்னால் இணையேற்ற முடியுமா?”

“அவசியமாக.. இணையத் தொடர்புக் கொண்டக் கணினி இருந்தாலே போதும். உங்களைப் போன்ற ஆர்வமுள்ளவர்கள் சரியானத் தகவலைத் திரட்டி, பயனராகப் பதிவுச் செய்துக் கொண்டு, தகவல்களைத் தட்டச்சுச் செய்து இணையேற்றலாம்.”

“அப்படியென்றால் எனக்குத் தெரிந்ததை நானும் விக்கிப்பீடியாவிற்குத் தருகிறேன்.”

விக்கிப்பீடியா நமக்காக, நம்முடைய மக்கள் வளர்த்து வரும் கலைக்களஞ்சியம்.  அதற்கு நீங்களும் உதவலாம் என்றுச் சென்ற வாரம் குறிப்பிட்டு இருந்தேன்.  அது எப்படி என்பதை மேற்கண்ட உரையாடல் விளக்கியிருக்கும் என்று எண்ணுகிறேன்.  அதை எப்படிச் செய்யலாம் என்று கணினி அறிவுக் கொண்ட ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திப் பார்த்திருப்பீர்கள் என்றும் எண்ணுகிறேன்.  அதைப் பயன்படுத்தி அறியாதவர்கள், இயன்றச் சிறு முயற்சியை விக்கிப்பீடியாவிற்கு எப்படித் தரலாம் என்று அறிந்துக் கொள்வோம்.

ஒவ்வொரு மொழித் தொகுப்பும் தனித்தனியே செயல்படுகின்றன.  அதற்கு ஆணி வேராக இருப்பது ஆயிரக்கணக்கானச் சம்பளம் எதிர்பார்க்காதத் தன்னார்வலர்கள்.  விக்கிப்பீடியா நிறுவனத்தில் மொத்தமே 12 ஊழியர்கள் தாம்.  வன்பொருள், வடிவமைப்புச் செய்ய இரு நிரலர் (புரோகிராமர்) இருக்கின்றனர்.  வன்பொருளை நடைமுறைப்படுத்துதலுக்கும், வலை பட்டையக்கலம் (பான்விட்த்) ஆகியவற்றிற்கானச் செலவுகள் மட்டுமே.  எல்லா எழுது வேலைகளும், பதிப்பகக் காரியங்களும் மனத் திருப்திக்காக ஆர்வத்துடன் காரியமாற்றும் மக்களால் செய்யப்படுகின்றன. இந்த நிறுவனம் லாப நோக்கமற்றுப் பணிபுரிவதன் காரணமாக, இணையத்தின் மூலமாக நீங்கள் பணம் செலுத்தி அவர்களின் செலவுகளைச் சரி கட்ட உதவலாம்.

நீங்கள் விக்கிப்பீடியாவிற்கு உதவ எழுத்தாளராக இருக்க வேண்டியதில்லை. செய்தியாளராக இருக்க வேண்டியதில்லை. நூலகத்தில் பணிப் புரிபவராக இருக்க வேண்டியதில்லை.  நீங்கள் நீங்களாகவே இருந்து, நீங்கள் உண்மையென அறிந்தவற்றைத் தந்து சிறு உதவிச் செய்யலாம்.

விக்கிப் பக்கங்களைப் பார்க்கும் போது முதலில் உங்களுக்கு என்ன தோன்றியது.  தகவல்கள் சரியானதா என்ற ஐயம் எழுந்ததா இல்லையா?  இந்தத் தகவல்கள் ஒருவர் வலையில் ஏற்றும் போது, அதைச் சரிப் பார்க்கப் பலரும் இருக்க வேண்டுமில்லையா?  அவர்களில் ஒருவராக நீங்கள் இருக்கலாம்.  தவறுகளைச் சுட்டிக் காட்டலாம்.  மேல் விவரங்கள் தெரிந்திருந்தால், அதைச் சேர்க்க உதவலாம்.  தேடியத் தகவல்கள் கிடைக்காவிட்டால், அத்தகையத் தகவல்கள் எதிர்காலத்திற்குத் தேவைப்படும் என்று கருதினால், புதியப் பக்கத்தை உருவாக்கிக் கொடுக்கலாம்.

வயது வரம்புப் பாராமல், எல்லோருக்கும் ஒரேயளவு உரிமை இதில் கொடுக்கப்படுகிறது.  பத்து வயதுச் சிரார் முதல் எண்பது தொண்ணூறு வயது முதியவர் வரை அனைவருக்கும் ஒரே உரிமை உண்டு.  எழுதலாம்.  திருத்தலாம்.  அழிக்கலாம்.  ஆனால் அதைச் சரிப் பார்க்க ஒரு பதிப்பாளர் குழு உள்ளது.  அதில் உள்ளவர்கள் பொறுப்பானவர்களாக இருக்க வேண்டியது அவசியம்.

இதைச் செய்ய முதலில் நீங்கள் உங்கள் பெயரைப் பயனர் பதிவுச் செய்துக் கொள்ள வேண்டும்.  விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில், வலதுப் பக்க மூலையில் பயனர் கணக்குத் தொடக்கம் என்றிருக்கும்.

 

அதைச் சொடுக்கினால், பெயரையும், உங்கள் மின்னஞ்சல் முகவரியை மட்டுமே கேட்கும் படிவம் தோன்றும். அதைத் தந்துப் பதிவுச் செய்துக் கொண்டாலே போதும்.  பிறகு புகுபதிகைச் செய்து அதைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம். நீங்கள் எந்த மொழியில் வேண்டுமானாலும், எந்தத் திட்டத்திற்கு வேண்டுமானாலும் உங்கள் பங்களிப்பைத் தரலாம்.

கொடுக்க விரும்பும் தகவல் அதில் ஏற்கனவே இருக்கிறதா என்று முதலில் சரிப் பார்த்துக் கொள்ளுங்கள். அது இல்லை என்றுத் தெரிந்தப் பின்னர், கொடுக்கப்படும் தகவலில் உண்மையும் நேர்மையும் இருக்கும் பட்சத்தில், உங்கள் தகவல்களை நீங்கள் தொகுத்துத் கொடுங்கள்.  அதைப் பதிப்பாளர்கள் சரிப் பார்த்து முழுமைப்படுத்துவார்கள். தமிழில் தட்டச்சுச் செய்ய, ஒருங்குறி (யுனிகோட்) எழுத்துத்துரப் பயன்படுத்தப்படுகிறது.

கொடுக்கப்பட்டத் தகவலில் தவறுகள் இருப்பின் உரையாடல் பகுதிக்குச் சென்று அதைப் பதிவு செய்யுங்கள்.  அந்தப் பக்கத்தை உருவாக்கியவர் தவறுகளைச் சரிச் செய்துக் கொடுப்பார்.

 

ஒத்தாசைப் பகுதி(ஹெல்ப்) நீங்கள் விக்கிப்பீடியா உபயோகிப்பதில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கற்றுத் தரும்.  உங்கள் பதிவுகளை எப்படிச் செய்யலாம் என்ற விளக்கங்களையும் தரும்.

ஆலமரத்தடிப் பகுதி விக்கிப்பீடியா குறித்தச் செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் போன்றவற்றைத் தருகிறது.

புதிதாக எழுவதால், தவறுகள் ஏற்படும் என்று எண்ணினால், உங்கள் பரிசோதனைகளை மணல்தொட்டி(சான்ட் பாக்ஸ்) பகுதி மூலமாக பரிசோதித்துவிட்டு, பின்னர் முழுமையான பங்கேற்பைச் செய்யலாம்.

 

உங்கள் கட்டுரையை விக்கிப்பீடியாவிற்குத் தர வேண்டுமென்று விரும்பினால், தயங்காதீர்கள்.  ஒவ்வொரு கட்டுரையும் தரமானதாகவும், கட்டானதாகவும் இருக்க வேண்டுமென்பதற்காகச் சில வார்ப்புருக்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன.  அதன் படி தங்கள் கட்டுரையைப் பிரித்துக் கொடுத்தால் போதும்.  உங்கள் கட்டுரையும் விக்கிப்பீடியாவிற்கு உகந்தக் கட்டுரையாக மாறிவிடும்.

மேலும் இதைப் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டு விக்கிப்பீடியாவிற்கு உதவ வேண்டும் என்று எண்ணினால், உதவிகளை விக்கிப்பீடியாவிலேயே பெறலாம்.  மேலும் விக்கிப்பீடியாவின் பத்தாவது பிறந்த நாளைக் கொண்டாடிய போது, அதன் பயனர் தேனீ. எம். சுப்பரமணி அவர்கள் வெளியிட்ட “தமிழ் விக்கிப்பீடியா” என்றப் புத்தகத்தில் எல்லா விவரங்களும் தரப்பட்டுள்ளன.

உலகின் மூலை முடுக்கில் இருக்கும் பலரும், இணையத்தின் மூலம், ஒரே இடத்தில் விவாதம் செய்து, முடிவுகள் எடுப்பது விக்கிப்பீடியாவின் சிறப்பம்சம்.

இது எப்படிச் சாத்தியமாயிற்று?

விக்கி மென்பொருள் தான் இதற்கு உதவுகிறது.

முதல் விக்கிப் பயன்பாடு (அப்பிளிகேஷன்), வார்ட் கன்னிங்கம் என்பவரால் 1994இல் உருவாக்கப்பட்டு, 1995இல் அமுலாக்கப்பட்டது. இதை விக்கிவிக்கிவெப் என்ற பெயரிட்டார். விக்கி மிகவும் எளிய, பயன்படுத்தக் கூடிய நேரடியானத் தகவல்தளம் என்று உருவகப்படுத்தினார்.  விக்கி என்பது ஹவாய் மொழியில் “வேகம்” என்றப் பொருள் கொண்ட வார்த்தை. “வேகமான” என்ற பொருள்படக் கூடிய வார்த்தையைத் தேடிய போது அவர் சென்ற இடத்தில் “விக்கி பஸ்” (வேகமான பஸ்) என்று பொருள்படும் சொல் பயன்படுத்தியதைக் கண்டார்.  உடனே அதையே தன்னுடையப் பயன்பாட்டிற்குப் பெயராகச் சூட்டினார்.

இந்த மென்பொருள் உலகின் பல பகுதிகளிலுள்ளப் பயனர்கள் தங்கள் விருப்பமான தகவல்களை இணையேற்றும் வசதியைத் தருகிறது.  அப்படி இணையேற்றப்பட்டத் தகவல் சரியா தவறா என்று மற்றப் பயனர்கள் சென்று பார்த்துச் சொல்லும் வசதியையும் தருகிறது.  இதன் மூலம் இணையேற்றப்பட்டத் தகவல்கள் சரிப் பார்க்க ஏதுவாகிறது.

பயனர்களில் பலர் அதிக ஆர்வம் காரணமாகத் தேவையற்றப் பயனற்றத் தகவல்களை இணையேற்றலாம்.  இந்தத் தகவல்களைப் பதிப்பாளர்கள் சரிப் பார்த்து அழிக்கவும் வசதிகள் இருக்கின்றன.  ஏதாவது ஒரு நபர் தொடர்ந்து தேவையற்றத் தகவல்களையே தந்து கொண்டிருந்தால், அவரைப் பயனர் பட்டியலிலிருந்து நீக்கவும் வசதி உண்டு.

இவ்வாறாக விக்கி மென்பொருள் பல தரப்பட்ட சாராரையும் ஒன்றிணைத்து கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் பணியில் தன்னை மேன்மேலும் மெருகேற்றிக் கொண்டு வருகிறது.  இருக்கும் திட்டங்களுடன் பல புதியத் திட்டங்களையும் உருவாக்க உதவி வருகிறது.  அகரமுதலி அத்தகையத் திட்டத்தின் வடிவமே.

இன்னும் வரும் காலங்களில் இது மேன்மேலும் வளர்ச்சிப் பெற்று, மனித இனத்திற்கு வேண்டிய தகவல்களை உடனுக்குடன் இருந்த இடத்திலேயே பெற்றுத் தரும் களஞ்சியமாக விளங்கும் என்பது உங்களுக்கு இந்த அறிமுகத்தின் மூலம் புரிந்திருக்கும் என்று நம்புகின்றேன்.


 

Series Navigationஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்உறவுகள்
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *