முத்துக்கள் பத்து ( வண்ணநிலவன்) நூல் விமர்சனம்

This entry is part 1 of 46 in the series 26 ஜூன் 2011

முத்துக்கள் பத்து என்கிற தலைப்பில் வண்ணநிலவன் அவர்களின் சிறந்த பத்து கதைகளை எழுத்தாளர் திலகவதி தொகுத்துள்ளார். இது ஒரு அம்ருதா பதிப்பக வெளியீடு. இதே போல் தமிழின் பிற சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த பத்து கதைகளும் தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.

முன்னுரையில் திலகவதி வண்ணநிலவன் எழுத்துகள் பற்றி அழகாக சொல்லி செல்கிறார். பின் திடீரென தமிழ் இலக்கிய சூழலில் நிலவும் அரசியலுக்குள் நுழைந்து எக்கச்சக்கமாய் சொல்கிறார். (ஏனோ?)

இந்த நூலில் என்னை மிக கவர்ந்தது முதல் மற்றும் கடைசி கதைகள். முதல் கதையான “மயான காண்டம்” செல்லையா என்ற வெட்டியான் பற்றியது. ஊரில் சாவு விழுந்தால் தான் இவன் வீட்டில் அடுப்பு எரியும். ஒரு வாரமாக சாவு விழாமல் இவன் குடும்பம் படும் வேதனை, மனைவியுடனான சண்டை இவற்றை சொல்லி செல்கிறார். இப்படி ஆகி விட்டால் வெட்டியான் ஊருக்கு வெளியே உள்ள கோயிலில் நின்று சங்கை எடுத்து ஊதினால், ஊர் மக்கள் வெட்டியான் குடும்பம் பட்டினியாக உள்ளதை அறிந்து தானம் செய்வார்களாம். அவ்வாறு சங்கூதும் செல்லையா கடைசியில் அந்த கோயில் உண்டியலை எடுத்து கொண்டு தன் வீட்டுக்கு நடப்பதாக கதையை முடிக்கிறார்.

தொகுப்பின் கடைசி கதை “கெட்டாலும் மேன்மக்கள்”. ஒரு சோடா கம்பனியில் வேலை பார்க்கிறான் சுப்பையா. அந்த நிறுவன முதலாளி இறந்து விட அவர் மனைவி சந்திரா இரு குழந்தைகளுடன் (ஒன்று மனநிலை சரியில்லாதது) தனியே நிற்கிறாள். மற்றொரு சோடா கம்பனி காரர் அதிக சம்பளம் தருகிறேன் என்ற போதும் விசுவாசத்திற்காக இவர்களுக்கு உழைக்கிறான் சுப்பையா. அவன் அம்மா “வயசு பெண்; ஊர் தப்பா பேசும்; அங்கே வேலைக்கு போகாதே” எனும் போதும் அவன் ஒப்பு கொள்ள வில்லை. கதையின் முடிவில் தான் சந்திராவும் சுப்பையாவும் மிக கொஞ்சமாக பேசுகிறார்கள். இதனை வாசித்தால் மனம் கலங்காமல் இருக்க முடியாது. மனித நேயம் மிளிரும் எழுத்து.

பாம்பும் பிடாரனும் என்கிற கதை மிக அபூர்வமான எழுத்து நடை கொண்டது. பாம்பு பிடிக்கும் அனுபவத்தை இதை விட அருமையாக சொல்லிவிட முடியாது.

“தீவிரவாதிகள் செய்த திருக்கூத்து” என்றொரு கதை. இதில் வரும் கதை சொல்லி ஒரு நாள் பேப்பரில் “காந்திமதி நாதன் என்பவரை தீவிர வாதிகள் கடத்தி விட்டனர்” என வாசிக்கிறார். இது தன்னுடன் பள்ளியில் படித்த நண்பனாக தான் இருக்க வேண்டும் என தானாகவே நினைத்து கொள்கிறார். இதனால் நான்கைந்து நாள் தினம் பேப்பர் வாங்குகிறார். மனைவி இருக்கிற செலவில் இது வேறா என திட்டினாலும் கேட்கவில்லை. வாசலில் உட்கார்ந்து எதிர் வீட்டுக்காரன் பார்க்கிற மாதிரி பேப்பர் வாசிக்கிறார். “என் நண்பன் பெரிய ஆபிசராக்கும் அதனால் தான் அவனை கடத்தினார்கள்” என தன் குழந்தைகளிடம் பெருமை பேசுகிறார். மிக நுணுக்கமாய் உள் மன உணர்வுகளை சொல்லும் கதை இது.

புத்தக ஆக்கத்தில் சில குறைகள் உள்ளன. மழை மற்றும் பயில்வான் என இரு கதைகளும் பக்கங்கள் மாற்றி அச்சிட்டு விட்டார்கள். ஓரிரு பக்கம் மழை வாசித்ததும் சம்பந்தமே இன்றி அடுத்த சில பக்கங்கள் உள்ளது. பின் அடுத்த கதை படிக்கும் போது தான் இந்த தவறை உணர முடிகிறது. இவ்வளவு அலட்சியமாகவா அச்சிடுவார்கள் !! மேலும் முதல் பக்கத்தில் பத்து கதைகளின் பெயர்களும் பக்க என்னும் தந்திருக்கலாம்.

வண்ண நிலவன் கதைகளில் வருகிற மனிதர்கள் வெட்டியானாக, மளிகை கடையில் வேலை செய்பவராக, பாம்பாட்டியாக ..இப்படி மிக சாதாரண மனிதர்களாய் தான் உள்ளனர். கதை எழுதுவோரில் பலரும் தங்கள் நேரடி அனுபவங்களை எழுதுவர். இதனால் அவர்களும் கதையில் இருப்பர். ஆனால் வண்ண நிலவன் கதைகளில் அவர் இல்லை, அவர் பார்த்த எளிய மனிதர்கள் தான் கதை மாந்தர்கள். திருநெல்வேலி மொழி இவரது எழுத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறது. குறிப்பாக அனைத்து கதைகளிலும் மனைவி திருநெல்வேலி தமிழில் கணவனை திட்டுவது….ஆனந்தமாக உள்ளது.

வண்ண நிலவன் என்கிற அற்புத மனிதரின் எழுத்தாளுமை அறிய அவசியம் வாசிக்கலாம்.

Series Navigationகதையல்ல வரலாறு (தொடர்) 1
author

மோகன் குமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *