Posted in

ஆமைகள் ஏன் தற்கொலை செய்து கொள்வதில்லை?

This entry is part 9 of 51 in the series 3 ஜூலை 2011

சற்றேறக்குறைய
வெறும் அறுபது ஆண்டுகளே
வாழ்வதில் சலித்துப்போகிறது நமக்கு.
ஆமை முன்னூறு ஆண்டுகள்
எப்படி ,ஏன் வாழ்கிறது ?!
வாழ்ந்து என்ன சாதிக்கிறது ?!
சொய்வு,கழிவிரக்கம்,
திரும்பத்திரும்ப அதே
செயல்களை வாழ்வில்
மீண்டும் மீண்டும் செய்தல்,
போட்டி,போராட்டங்கள்,
சலிப்பு,பேருவகை,
தாங்கமுடியா துயரம்
என எதுவும் அதன்
வாழ்வில் உண்டாவதில்லையா..?
இல்லை நம்மைப்போல் எல்லாவற்றையும்
ரசித்துக்கொண்டு தான் வாழ்வைக்கடத்துகிறதா ?
எனக்குத்தெரிந்த வரை
அவை ஆழ்துயிலில் கிடத்தல்,
பேரண்டம் சுற்றி வரும் ,
அதைக்கடக்கும் நேரத்தில்
ஒரு முறை உயிர்மூச்சு விடுதல்,
பின் எழுந்து விடாது முயங்குதல்,
ஆயிரக்கணக்கில்
முட்டைகள் இட்டு மறைத்து வைத்தல்,
என தனக்கிடப்பட்ட பணி தவிர
அவை வேறேதும்
செய்வதில்லை வாழ் நாள் முழுதும்.
சலிப்பே வருவதில்லையா அவற்றிற்கு?
ஆமாம்…ஆமைகள் ஏன் தற்கொலை
செய்து கொள்வதில்லை ?

Series Navigationயுவன்-ன் “ஆரவாரக் கானகம்”பாராட்டுவதற்கு ஏதுமற்றவரா கருணாநிதி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *