திருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்

This entry is part 19 of 51 in the series 3 ஜூலை 2011

உதுல் பிரேமரத்ன

தமிழில்எம்.ரிஷான் ஷெரீப்,

திருமகள், 1996 செப்டம்பர் மாதம் எட்டாம் திகதி  இராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அப்பொழுது அவர் ஆறு மாத கர்ப்பிணி. அவர் மட்டுமல்லாது அவரது கணவரான அந்தோணிப் பிள்ளை ரொபர்ட் மெக்ஸலனும் அன்று கைது செய்யப்பட்டார். திருமகள் வயிற்றிலிருந்த குழந்தையோடு சேர்த்து அன்றைய தினம் சிறிய குடும்பமொன்று கைது செய்யப்பட்டது.

 

கைது செய்யப்பட்ட இச் சிறிய குடும்பமானது விசாலமானதொரு இல்லத்துக்கு அனுப்பப்பட்டனர். அது வெலிக்கடைச் சிறைச்சாலை. இன்னுமொரு துரதிஷ்டமான சிறிய சிறைக் கைதியொருத்தியை உலகுக்குப் பிரசவித்ததன் மூலம் திருமகள் சிறைச்சாலையில் வைத்தே தனது வயிற்றுச் சுமையைக் குறைத்துக் கொண்டார்.

 

இது 15 வருடங்களுக்கு முன்னர் நடந்தவை. அன்று அவர்கள் விடுதலைப் புலி சந்தேக நபர்களாக அவ்வாறு சிறைப்படுத்தப்பட்டனர். நீதியை நிலைநாட்டுவதற்காக எனக் கூறப்படும் நீதிமன்றத்தின் முன்னிலையில் அவர்களை தூக்கிலிடத் தேவையான குற்றச்சாட்டுக்களை வரிசைப்படுத்துவது தொடங்கியது. எதுவுமே அறியாத திருமகளின் மகளும் தாயின் மார்பிலேயே பாலருந்தியவாறு சிறைச்சாலைக்குள்ளேயே உறங்கியது.

 

அன்று அவ்வாறு எழுத ஆரம்பிக்கப்பட்ட அவர்களது வாழ்க்கைச் சரிதம் இன்று எந்த நிலையில் உள்ளது?

 

எனக்கு திருமகளை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் வைத்து சந்திக்க நேர்ந்தது. சற்றுக் குள்ளமாக, நிறைந்த முகத்துடனிருந்த அவர் கைது செய்யப்பட்ட தினத்தைச் சொன்ன போது நான் அதிர்ந்து போன விதம் குறித்து அவர் பிறகொரு சந்தர்ப்பத்திலும் நினைவூட்டினார்.

 

பதினைந்து வருடங்களென்பது ஒருபோதும் சிறியதொரு காலமல்ல. இதிலுள்ள பாரதூரமான அநீதி அதுவல்ல. இப் பதினைந்து வருடங்களாக அவர்கள் சந்தேகநபர்களாக மட்டுமே இருந்தமை. சந்தேக நபர்கள் மாத்திரமே என்றாலும் அவர்கள் தண்டனை அனுபவித்திருக்கிறார்கள். சிலவேளை அது தவறுக்காகக் கொடுக்கப்படும் தண்டனையை விடவும் அதிகமானதாக இருக்கக் கூடும். அது மட்டுமல்லாது இப் பதினைந்து வருடங்களாக அவர்கள் 429 தடவைகள் நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள்.

 

அவ்வாறாயின் 429 தடவைகள் அவர்களைக் கூண்டில் ஏற்றி அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்காக குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியவர்கள் முயற்சித்திருக்கிறார்கள். ஒரு தடவை, இரு தடவைகளல்ல. 429 தடவைகள். ஒரு வருடம், இரு வருடங்களல்ல. 15 வருடங்கள். அவ்வளவு முயற்சித்தும் முடியாதென்றால் அவர்களது சந்தேக நபர்கள் என்ற நிலையில் சந்தேகம் தோன்றாதா என்ன?

 

கொழும்பு உச்ச நீதிமன்றத்தின் இரண்டாவது வழக்காடு மன்றத்தில் விசாரணை செய்யப்படும் இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் ஐவர். சரவணமுத்து லோகநாதன், சின்னப்பு செல்வராஜ், சுப்பையா ஸ்ரீதரன், ரொபர்ட் மெக்ஸலன் மற்றும் திருமகள் ஆகியோரே அவர்கள். இங்கு குற்றச் சாட்டுக்களை சுமத்துபவர்களாகத் திகழ்வது சட்டமா அதிபர் திணைக்களம். நாங்கள் அவர்களிடம் எழுப்பும் கேள்வி இதுதான். இன்னும் எவ்வளவு காலத்துக்கு, இன்னும் எத்தனை தடவை அவர்கள் தங்களுக்கான தீர்ப்பு அளிக்கப்படும் வரை சிறைச்சாலையில் இருக்க வேண்டும்? கைதிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டும்? 15 வருடங்களாக முடியாமல் போனது இன்னும் ஐந்து வருடங்களானாலும் முடியுமா? பத்து வருடங்களில் முடியுமா? 429 தடவைகள் முடியாமல் போனது இன்னும் 429 தடவைகளிலேனும் முடியுமா? இதன் முடிவு என்ன?

 

திருமகள்கள் மட்டுமல்லாது , இதே போன்ற நிலைமைக்கு முகங்கொடுத்திருக்கும் சிறைக் கைதிகள் இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் சிறைச்சாலைகளில் இருக்கிறார்கள். அவர்கள் குற்றவாளிகளா, நிரபராதிகளா என்பதை நாங்கள் அறிய மாட்டோம். அவர்கள் குண்டுகளைக் கொண்டு சென்றவர்களா, ஒத்துப் பார்த்தவர்களா இல்லையா என்பதுவும் எமக்குத் தெரியாது. எனினும் அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதென்றால் குறைந்தபட்சம் அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட வேண்டும். எனினும் சட்டத்தின் முன்னால் குற்றவாளிகளாகாமல் அவர்களுக்கு தண்டனை வழங்குதல் நடைபெற்றிருக்கிறது.

 

அது ஒரு விடயம். இன்னொரு விடயமானது அவர்கள் அன்று உண்மையாகவே குற்றம் செய்திருந்தால் அவர்களை அவ்வாறு செய்யத் தூண்டிய காரணி எது என்பது. போரிடக் கூடிய, ஆயுதந் தாங்கிய குழுவொன்று உருவாவதென்பது ஓரிருவரது பிடிவாதம் குறித்த பிரச்சினையல்ல. அது அரசியல் பிரச்சினை. அப் பிரச்சினைக்கான தீர்வைத் தேட வேண்டியதுவும் அரசியல் ஊடாகத்தானே தவிர வேறு வழியிலல்ல. உலகில் எங்கும் இளைஞர்கள் அநீதிக்கு எதிராக எழுந்திருக்கிறார்கள். இலங்கையிலும் அவ்வாறுதான். ஒரு முறை தெற்கின் மூலையிலும் இன்னொரு முறை வடக்கின் மூலையிலும் அதுதான் நடந்திருக்கிறது.

 

அவ்வாறு இளைஞர்களை போராட்டத்துக்கு அழைப்பது இந்த அநீதமான ஆட்சி முறைதான். கொள்ளையடிப்பதை சட்டபூர்வமானதாக ஆக்கி, அநீதியை மதமாக்கியிருக்கும் சமூக வழிமுறை. எங்கள் தேசத்தில் தொழிலாளிகள், விவசாயிகள், அரச ஊழியர்கள், பல்கலைக்கழக சமூகம் இப்பொழுது இப் பிரச்சினை குறித்து மிகவும் விரிந்த அரசியல் பார்வையோடு பார்த்தல் வேண்டும். அவர்கள் தீவிரவாதிகள். அவர்கள் புலிகள் என பொதுவாக நோக்குவதை மாற்றுதல் வேண்டும்.

 

இது பாரதூரமானதொரு உரையாடல். விரிவாகவும், நீண்டதாகவும் உரையாடப்பட வேண்டியதொரு தலையங்கம்.  தீவிரவாதத்துக்கு எதிராக உறுதியாக இருக்கும்படி அரசாங்கம் எங்களை இன்னும் வற்புருத்துகிறது. தீவிரவாதத்தை ஒழிக்கவேண்டியது கட்டாயம். எனினும் உண்மையாகவே அதனைச் செய்ய முடியுமாவது தீவிரவாதத்துக்குக் காரணமான வேர்களை அழிப்பதன் மூலமாக மட்டுமே. வேர்களினுள் அடங்கியிருப்பவை அநீதிகள், தேசியத் துயரங்கள், வறுமை போன்ற சிக்கல்கள். அவற்றை முழுமையாக அகற்றாமல் இளைஞர்கள் எழுந்து நிற்பதைத் தடுக்க முடியாது. சமூகத்தில் முக்கியமானவர்கள் என எமது தோள்கள் மீது பொறுப்பு சுமத்தப்படுவது இவ்விடத்தில்தான்.

 

இப்பொழுது திருமகள்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என நாங்கள் அச்சமேதுமற்று உரைப்போம். அது பாரதூரமான, விவாதத்துக்குரிய விடயமொன்று என்பதையும் அறிவோம். சமூகத்தில் அனேக பொது மக்கள் இன்னும் இவ் எண்ணத்துக்கு இணங்க மாட்டார்கள் என்பதையும் அறிவோம். எனினும் சமூகத்தின் நகர்வுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அவ்வாறான முன்னடைவுக்கும் போராட்டத்துக்குமான அனுமதியைத் தவிர்த்து முன்னே செல்ல முடியாது. ராஜபக்ஷ அரசாங்கத்திடம் இன்று மக்களை வசீகரிப்பதற்கு, தாக்குவதற்கான பொது எதிரி எவருமில்லை. பொருட்களின் விலை அதிகரிக்கப்படுகையில் முன்வைப்பதற்கான காரணங்கள் இல்லை. அதன் காரணத்தால் மாண்டு போன பின்னரும் அரசாங்கம் இன்னும் பிரபாகரனைத் தேடுகிறது. இதனால், கடந்த போராட்டத்தை மீண்டும் மீண்டும் வாந்தியெடுத்துச் சுவைக்கிறது. நீர் விளையாட்டுக்கள், வருடப் பூர்த்தி விழாக்கள், இலங்கை யுத்தத்தின் ஞாபகங்கள் குறித்த வலைத்தளங்கள் என நாடகங்கள் நீள்வது இதனால்தான்.

 

அரசாங்கம் இவ்வாறு காய் நகர்த்துவது தமிழர்களின் வாழ்வோடுதான். அவர்களை இன்னுமின்னும் துயரத்துக்குள்ளாக்கும் தீவிரவாதத்தைத் தடுக்கும் சட்டங்கள், உடனடிச் சட்டங்கள் போன்ற தடுப்புச் சட்டங்களைப் பிரயோகிப்பதன் மூலமும், இன்னுமின்னும் அவர்களது பிள்ளைகளை சிறைச்சாலைகளுக்குள் அடைத்து வைப்பதன் மூலமும் தேசிய ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களது எண்ணங்களுக்குள் நுழைவிப்பதற்குப் பதிலாக அச்சத்தையும் அவநம்பிக்கையையும் இன்னுமின்னும் பரப்புவதன் மூலம் அரசாங்கம் தனது பலத்தைக் காத்துக் கொள்ள முயற்சிக்கிறது.

 

நாம் அச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளத் தேவையில்லை. தேவைப்படுவது தேசிய ஒற்றுமையே. ஒற்றுமை வசனங்களால் உருவாகாது. அதற்கு அரசியல் ரீதியான வேலைத் திட்டமொன்று தேவைப்படுகிறது. பாரபட்சம் எண்ணங்களால் அழியாது. அதற்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுத்தல் அவசியமாகிறது.

 

சிங்கள, தமிழ், முஸ்லிம் தேசிய ஒற்றுமைக்காக தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்துக்கு முன் நிற்போம்.

 

உதுல் பிரேமரத்ன

தமிழில்எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

 

Series Navigationகிருஷ்ணகிரியில் கணினி மற்றும் இணையக்கருத்தரங்குபருவமெய்திய பின்
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *