அவ்வப்போது எனக்கு வரும் மின்னஞ்சல்களில் கேட்கப்படும்
கேள்வி, எப்போது பார்த்தாலும் மு.கருணாநிதி அவர்களைக்
கடுமையாக விமர்சித்தும் கண்டித்தும் எழுதி வருகிறீர்களே,
அப்படியானால் கருணாநிதியிடம் பாராட்டுவதற்கு எதுவுமே
இல்லையா? பாஷைதான் வேறுபடுமேயன்றி அடிப்படையில்
இந்தக் கேள்வியின் சாரம்தான் எதிலும். இது வெகு காலமாகவே என்னிடம் கேட்கப்பட்டுவரும் கேள்வி. ஆனால் இதற்குத் தொடர்ந்து மெளனம் சாதித்து வந்தேன். காரணமாகத்தான்.
இப்பொழுது கருணாநிதி பதவியில் இல்லை. ஆகையால் இது பற்றி எழுதத் துணிந்தேன்.
தி.மு.க. வில் இருந்த முன்னணியினரில் முதல் முதலில் சென்னை மாநகரில் மேட்டுக் குடியினர் வசிக்கும் கோபாலபுரம்
என்ற பகுதியில் சுயமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தில் சொந்தமாக வீடு வாங்கியவர் மு. கருணாநிதி. உண்மையில்
எளிமையாக வாழ்ந்த குடும்பமே யன்றி வறுமையில் வாடிய
குடும்பம் அல்ல, கருணாநிதியுடையது. திரைப்படங்களுக்குக்
திரைக்கதை வசனம் எழுதும் தொழிலை மேற்கொண்டிருந்த அவர், அன்றைய கால கட்டத்தின் வெகு ஜன ரசனைக்கு ஏற்பக் கதை வசனம் எழுதிப் படிப்படியாக வளர்ந்து ஒரு முன்னணி
வசனகர்த்தாவாக ஐம்பதுகளின் தொடக்க முதலே செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்தாம். ஏவி எம் செட்டியாரே வீடு தேடி வந்து ஒப்பந்தம் செய்து கணிசமான தொகையினை முன்பணமாகக் கொடுத்துச் செல்லும் அளவுக்கு அவர் தமது துறையில் முன்னணியில் இருந்தவர்தாம். அவருடைய அன்னையார் அஞ்சுகம் அம்மையார் இருந்தவரை யார் எந்த நேரம் சென்றாலும் ஏதாவது சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று பிடிவாதமாக விருந்துபசாரம் செய்யப்படும் வீடாக அவரது வீடு இருந்தது. அம்மையாரின் கைப்பக்குவமும் அபாரமாக இருக்கும்.
அந்தக் காலத்தில் கருணாநிதியின் கோஷ்டியினர் என்றே
கருதப்பட்டு வந்த மயிலாடுதுறை எஸ். கருணானந்தம், வட ஆர்க்காடு மாவட்டச் செயலாளராக இருந்த முல்லை சத்தி,
ப. உ. சண்முகம், எனப் பலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு இருந்தமையால் கருணாநிதியின் குணச் சித்திரத்தை
என்னால் ஓரளவேனும் சரியாகவே வரைந்துகொள்ள முடிந்தது.
நட்பின் இலக்கணம் தெரிந்து நடப்பவர் கருணாநிதி. நண்பர்கள் தாம் சமயங்களில் அவர் காலை வாரியதுண்டே தவிர
ந்ண்பர்களை அவ்ர் விட்டுக்கொடுத்ததில்லை. நான் இங்கு குறிப்பிடுவது கருணாநிதி கோஷ்டியினர் என்ற வட்டத்திற்குள்
வந்தவர்களைத்தான்.
அந்தக் காலத்தில் தி.மு.க. முன்னணியினரின் வருமானத்திற்கு ஆதாரம் பொதுக் கூட்டங்களில் பேசுவதுதான். கூட்டத்தில் பேச இவ்வளவு, வந்து போகும் செலவு, சாப்பாட்டுச் செலவு என்றெல்லாம் பேசி வைத்துக்கொண்டு, முன்பணமாகவும் சிறிது பெற்றுக் கொண்டு பேச வருவார்கள். அன்றைய கிளைக் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பெரும்பாலும் அன்றாடங் காய்ச்சிகள். ஒரு கூட்டம் நடத்தி முடிக்கவே திண்டாடித் திணறிப்
போவார்கள். கூட்டம் முடிந்ததும் பேச்சாளர் இரவுச் சாப்பாட்டுக்கும் வழிச் செலவுக்கும் கூட்டத்தில் பேசுவதற்காகப்
பேசிக்கொண்ட தொகையில் மீதிப் பணத்தையும் எதிர்பார்ப் பார்கள். பேச்சாளருக்கு யார் வீட்டிலாவது சாப்பாட்டுக்கு ஏற்பாடாகிவிடும். வழிச் செலவுக்கும் எப்படியாவது காசு தேற்றிவிடுவார்கள். ஆனால் பேசுவதற்காகக் கேட்ட
தொகையில் முன்பணம் போக மிச்சத்தைக் கொடுப்பதில்தான்
திண்டாட்டமாகிவிடும். அண்ணே, தேறலே அண்ணே என்று தயங்கித் தயங்கி முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு
மன்னிப்புக் கேட்கும் பாவனையில் பணிந்து நிற்பார்கள்.
பேச்சாளர் எரிந்து விழுவார். அவருக்கு மாத வருமானம் மேடைப்
பேச்சில்தானே! அது பாதிக்கப்படும்போது எரிச்சல் ஏற்படுவது
இயற்கையே அல்லவா?
கருணாநிதியும் குறிப்பிட்ட தொகை பேசிக் கூட்டத்துக்கு வருபவர்தாம். அந்த நாளிலேயே சுயமாகச் சம்பாதித்த
பணத்தில் காரும் வைத்திருந்தார். காருக்குப் பெட்ரோல் செலவும்
தரச் சொல்லுவார். ஆனால் எனக்குத் தெரிந்து பெரும்பாலான கூட்டங்களில் அவர் பேசிச் செல்லும்பொழுது காருக்குப் பெட்ரோல் செலவாகவோ கூட்டத்தில் பேசியதற்கான தொகையோ அவருக்குக் கழகத் தோழர்களால் கொடுக்க முடிந்ததில்லை. ஆனால் அதற்காகக் கருணாநிதி சிறிதும் முகம் சுளித்ததில்லை. கட்சியை வளர்ப்பதில்தான் அவரது கவனம் முழுவதும் இருந்ததேயன்றி கட்சியில் இருப்பதை வருமானத்திற்கான ஒரு வழியாக அவர் கருதியதில்லை.
சொந்தக் காசிலேயே பெட்ரோலும் போட்டுக்கொண்டு ஊர் ஊராய்ச் சென்று கட்சியை வளர்த்தவர் கருணாநிதி. இதனால்தான் மாநிலம் முழுவதும் கட்சியில் அவரது அபிமானிகளின் எண்ணிக்கை பெருகியது.
கருணாநிதி சூட்டிகையானவ்ர், கட்சியின் வளர்ச்சியில் உண்மையான ஈடுபாடு உள்ளவர், நிலைமைகளை சமாளிக்கக் கூடியவர் என்றெல்லாம் கட்சியில் பெரும்பான்மையினருக்கு நம்பிக்கை இருந்தமையால்தான் அண்ணாவுக்குப் பிறகு அவர் முதல்வராக முடிந்தது.
உழைக்கும் வர்க்கத்தின் தோழர்கள் என்று உரிமை கொண்டாடும் இடதுசாரிக் க்ட்சிகளின் கூட்டணி ஆட்சி மேற்கு வங்கத்தில் நீண்ட நெடுங் காலம் நீடித்த போதிலும் கொல்கத்தா நகரின் சாலைகளில் மனிதனுக்கு மனிதன் வாகனமாய் அமைந்தது போன்ற கை ரிக்ஷா ஓடுவது கண்ணை உறுத்தும் காட்சியாக இருந்து வந்தது. 2005-ல்தான் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாசாரியா கை ரிக்ஷா ஒழிக்க்ப்படும் என்றும் கை ரிக்ஷா ஒட்டுபவர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பு தரப்படும் என்றும் அறிவித்தார். பலன் கை ரிக்ஷா இழுப்பவர்கள் வயிற்றுப் பிழைப்பை இழந்தனர். சிலர் கள்ளத்தனமாகத் தொடர்ந்து நகரின் ஒதுக்குப் புறங்களிலும் இருண்ட பகுதிகளிலும் கை ரிக்ஷா இழுத்துப் பிழைக்க வேண்டியதாயிற்று. ஆனால் தமிழ் நாட்டில்
1969-ல் தொழிலாளி வர்க்கக் கட்சி என்று பெயரெடுக்காத தி.மு.க. வின் ஆட்சியில் முதல்வர் கருணாநிதி கை ரிக்ஷாவை ஒழித்ததோடு அதுவரை கை ரிக்ஷா இழுத்துப் பிழைத்தவர் களுக்கு இலவசமாக சைக்கிள் ரிகஷா வழங்கச் செய்து அவர்களின் வயிறு காயாமல் பார்த்துக்கொண்டார்.. இன்று கொல்கத்தாவில் கை ரிக்ஷா இழுக்கும் தொழிலுக்கு மீண்டும் சட்டரீதியான அனுமதி வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜியிடம் மனு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்!
இடதுசாரியின் நீண்ட கால ஆட்சி கை ரிக்ஷாவை மாநகரின் அவமானச் சின்னமாகவும் போக்குவரத்துக்கு இடைஞ்சலாகவும் கருதியதேயன்றி, கை ரிக்ஷா இழுக்கும் தொழிலாளியின் சுய கெளரவம் குறித்தோ, அவனது வயிற்றுப்பாட்டுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுப்பதுபற்றியோ கவலைப்படவில்லை.
இதற்கு முக்கிய காரணம் கொல்கத்தாவில் ரிக்ஷா இழுப்பவர்கள் அனைவரும் அண்டை மாநிலமான பிஹாரிலிருந்து பிழைக்க வந்த ஏழைகள். ரிக்ஷா ஓட்டும் வங்காளியைப் பார்க்க இயலாது!
சீமான்களின் உபரி வருமானத்திற்கு ஒரு வழியாகவும் சபல புத்தியின் காரணமாக நடுத்தர, ஏழை மக்கள் கடைசிப் பணம் வரை இழப்பதற்குக் காரணமாகவும் இருந்த குதிரைப் பந்தயத்தை ஒழித்ததும் கருணாநிதி எடுத்த ஒரு முக்கிய மக்கள் நலப் பணி என்று கூற வேண்டும். (உயர் நீதி மன்றத்தில் அது அடிபட்டுப் போனது வேறு விஷயம். அதை ஒழிக்க வேண்டும் என்பதில் அவர் கவனம் சென்றதுதான் கருத்தில் கொள்ளப்படவேண்டிய அம்சம்). இதற்கு திருஷ்டி பரிகாரம்போல் அவர் மது விலக்கைக் கைவிட்டிருக்க வேண்டாம். .அதிலும் தள்ளாத வயதில் ராஜாஜி வீடு தேடி வந்து கேட்டும் மது விலக்கைக் கைவிடுவதில் அவ்ர் உறுதியாக இருந்திருக்கலாகாது. இன்று பதின்ம வயதினரும் குடிப் பழக்கத்தை ஒரு நாகரிகம்போல் பயின்றுவிட்டிருப்பதைப் பார்க்கும்பொழுது வேதனையாக இருக்கிறது.
பரிசுச் சீட்டுத் திட்டத்தை அண்ணா கொண்டு வந்த பொழுது ஒரு ரூபாய்தானே ஒருவர் செலவழிக்கப்போகிறார், அதனால் அவரது பொருளாதாரம் அப்படியொன்றும் பாதிக்கப்படாது என்று
எண்ணிவிட்டார். ராஜாஜி அதையும் கண்டிக்கவே செய்தார். மக்களை அரசாங்கமே சூது ஆடப் பழக்குவது தவறு என்று எச்சரித்தார்.
ராஜாஜி எச்சரித்தது போலவே கருணாநிதி காலத்தில் பரிசுச்சீட்டு
ஒரு போதைப் பழக்கம் போலப் பரவிவிட்டது. அப்போதே அந்தத் திட்டத்தை கருணாநிதி கைவிட்டிருந்தால் பாராட்டுக்குரியவ ராகியிருப்பார்.
தமிழ் நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் பஸ் வசதி என்ற நிலை உருவாகக் காரணமும் கருணாநிதியின் முனைப்பே என்று சொல்ல வேண்டும்.
நெருக்கடி நிலைக் காலத்தில் கருணாநிதி எடுத்த நிலைப்பாடு மிகவும் பாராட்டுக்குரியதாக இருந்தது. இதற்காகக் காமராஜரே கருணாநிதியைப் பாராட்டியதை நேரில் கேட்டவன் நான். அதை ஒரு கட்டுரையில் பதிவு செய்தபோது அக்கட்டுரையைப் பல நாளிதழ்களும் வார இதழ்களும் மறு பிரசுரம் செய்தன. பரவாயில்லை, காமராஜர் என்னைப் பாராட்டினார் என்பதற்கு மலர் ஒரு சாட்சியாக இருக்கிறான் என்று அதைப் படித்துவிட்டுக் கருணாநிதி திருப்திப் பட்டுக்கொண்டதாகப் பின்னர் சாவி சொல்லிக் கேள்வியுற்றேன்.
அரசு அலுவலர்களுக்கு இன்று பலவாறான நலன்கள் கிட்டு வதற்கு அடித்தளமிட்டவரே கருணாநிதிதான். அதனாலதான் தி.மு.க அரசு என்றாலே அரசு ஊழியர் நல அரசு என்ற பிம்பம் தோன்றிவிட்டது.
எழுத்தாளர்கள் விஷயத்தில் கருணாநிதி எவ்விதப் பாகுபாடும் பார்க்காததையும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இந்த விஷயத்தில் மட்டும் அவர் பிராமணர்-பிராமணர் அல்லாதவர் என்ற வேறுபாட்டையோ, மாறுபட்ட கருத்தினர் என்ற முரண் பாட்டையோ பொருட்படுத்துவதில்லை.
அவரது ஆட்சிக் காலத்தில் நூல்கள் நாட்டுடைமை என்பது ஒரு தொடர் நடவடிக்கையாகவே முழு வேகத்தில் நடைபெற்று பல எழுத்தாளர் குடும்பங்களுக்கு கணிசமான நிதி உதவி கிட்டுவது சாத்தியமாகி வந்தது..
தி.மு.க. ஆட்சி என்றால் கருணாநிதி சொல்வதுதான் வேதவாக்கு என்பது தெரிந்த விஷயந்தான். இருந்தாலும் கழக அரசு. தி.மு.கழக ஆட்சி என்றெல்லாந்தான் அவர் குறிப்பிடுவது வழக்கமேயன்றி எந்தச் சந்தர்ப்பத்திலும் அவரது வாயில் எனது ஆட்சி என்று வந்ததில்லை!
+++
- இன்னும் புத்தர்சிலையாய்…
- குரூர மனச் சிந்தனையாளர்கள்
- கசங்கும் காலம்
- இந்திய வர்த்தகம் – குறியா, குறி தவறியதா?
- முன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரு கதைகளுக்கு இடையே (கவிதை -40 பாகம் -1)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -3)
- யுவன்-ன் “ஆரவாரக் கானகம்”
- ஆமைகள் ஏன் தற்கொலை செய்து கொள்வதில்லை?
- பாராட்டுவதற்கு ஏதுமற்றவரா கருணாநிதி?
- ஆன்மாவின் உடைகள்..:_
- எனது இலக்கிய அனுபவங்கள் – 5 விமர்சனமும் எதிர் வினையும்
- பழமொழிகளில் ஆசை
- கவிதைகள் : சு கிரிஜா சுப்ரமணியன்
- தளம் மாறிய மூட நம்பிக்கை!
- காமராஜ்: கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை புத்தக விமர்சனம்
- பாதல் சர்க்காரும் தமிழ் அரங்க சூழலும்
- கிருஷ்ணகிரியில் கணினி மற்றும் இணையக்கருத்தரங்கு
- திருமகள் இன்னும் விடுதலைப் புலி சந்தேக நபர்
- பருவமெய்திய பின்
- வினாடி இன்பம்
- தன் இயக்கங்களின் வரவேற்பு
- சாபங்களைச் சுமப்பவன்
- சிறுகவிதைகள்
- கடன் அன்பை வளர்க்கும்
- தமிழ் படுத்துதல்
- கொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்
- செய்யும் தொழிலே தெய்வம்
- தி ஜானகிராமனின் அம்மா வந்தாள்
- ஆட்டுவிக்கும் மனம்
- பறவைகளை வரைந்து பார்த்த ஒரு கார்ட்டூன் சித்திரக்காரன்
- ஒரு வர்க்கத்தின் நிதர்சன சூடுகள்
- மூன்றாமவர்
- கறை
- குழந்தைப் பாட்டு
- மனபிறழ்வு
- நிர்பந்தங்களின் தீப்பந்தங்களால்….
- தடாகம்’ கலை- இலக்கிய வட்டத்தின் அகஸ்தியர் விருது.
- மௌனத்தின் முகம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7
- விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனடா எழுத்தாளர் இணையத்தின் பாராட்டு
- பல நேரங்களில் பல மனிதர்கள்
- குயவனின் மண் பாண்டம்
- எம். ரிஷான் ஷெரீபின் `வீழ்தலின் நிழல்’ பற்றிய குறிப்பு
- மரணித்தல் வரம்
- இணைய வர்த்தகமும் மருந்து பொருட்கள் விற்பனையும்
- பிம்பத்தின் மீதான ரசனை.:-
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 41
- நினைவு நதியில் ஒரு உயிரின் மிச்சம் !
- திண்ணைப் பேச்சு – கனிமொழி, சின்னக் குத்தூசி பற்றி ஜெயமோகன் பற்றி பி கே சிவகுமார் பற்றி ஸிந்துஜா
- அணுமின் நிலையங்களின் எதிர்கால இயக்கம் பற்றி உலக நாடுகளின் தீர்மானங்கள் !