வேஷங்கள்

This entry is part 3 of 38 in the series 10 ஜூலை 2011

முன்னிரவின் குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச் சென்றது. ஆனால் மனதில் படிந்திருந்த குமைச்சலை அதனால் அடக்க முடியவில்லை. வைதீஸ்வரன் பார்வை வானத்தில் படர்ந்தது. கொட்டிக் கிடந்த ஏகப் பட்ட நட்சத்திரங்களில் எது ரொம்பவும் அழகு என்று தேடிச் செல்வதைப் போல நிலவு உருண்டு சென்று கொண்டிருந்தது. அகலமாக விரிந்து கிடந்த மொட்டை மாடியில், இந்தக் காற்றிலும் , நிலவிலும் , இருளிலும் இதற்கு முன் எவ்வளவோ தினங்கள் மயங்கி, முயங்கிக் கிடந்திருக்கிறார் அவர். ஆனால் இன்று மனதில் படிந்திருந்த பயமும், கோபமும், நிராசையும், குழப்பமும் ஒன்று சேர்ந்து வைதீஸ்வரனை ஆட்டிப் படைத்தன. இதற்கெல்லாம் காரணகர்த்தாவானவன் அவருக்கு எதிரே உட்கார்ந்து சில சமயம் அவரையும், சிலசமயம் வெட்ட வெளியையும் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். சாயி. அவருடைய ஒரே பிள்ளை ,

ஒரு மணி நேரத்துக்கு முன்னால் வரை என்றும் போல்தான் அன்றைய தினமும் வைதீஸ்வரனுக்கு இருந்தது. ஐந்தரை மணிக்கு ‘சங்கரா’ வில் ஆரத்தி சாயி பாபா சுலோகங்களைக் கேட்டார். ஆறேகாலுக்கு வெங்கடேஸ்வரா பக்தி சானலில், மல்லாடி சகோதரர்களின் கச்சேரி. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்த இசை மழையில், நனைந்து கிடந்தார். தியாகையரையும் அன்னமாச்சார்யாவையும் கேட்கும் போது எதற்கு அழுகை அழுகையாக வருகிறது என்று நினைத்தபடி பரவசத்திலிருந்தார். ரிடையர் ஆனதுக்குப் பிறகு அவர் டி. வி. பக்கத்தில் போவது இம்மாதிரி நிகழ்ச்சிகளுக்காகத்தான். பிறகு அவர் தன் அறைக்குச் சென்று முன்தினம் பாதி படித்து விட்டு வைத்திருந்த புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.

அப்போது சாயி அவரது அறைக்குள் வந்தான்.

“இப்போதான் ஆபிசிலிருந்து வரயா?” என்று பரிவுடன் கேட்டார். “போன வாரத்தோட ஆடிட் எல்லாம் முடிஞ்சுடுத்துன்னு சொன்னாயே. இன்னும் வேலை முடிஞ்சபாடில்லையா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. இன்பாக்ட் நான் மத்தியானமே ஆபிசிலிருந்து வந்துட்டேன்” என்றான் சாயி.

“அப்படியா, நான் உன்னை இவ்வளவு நேரமா பாக்கவே இல்லையே.” என்றார் அவர் ஆச்சரியத்துடன்.

“நாம கொஞ்சம் மாடிக்கு போலாமா?” என்று அவன் கேட்டான் .

அவர் சற்றுக் குழப்பத்துடன் அவனை நோக்கினார்.

அவன் அறையின் வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினான். வைதீஸ்வரன் அவனைப் பின் தொடர்ந்தார். ஹாலில் இருந்த அவர் மனைவி டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தாள். பேச்சு மும்முரத்தில் அவள் அவர்களைக் கண்டு கொள்ளவில்லை.

மாடியில் இரண்டு கட்டில்கள் கிடந்தன. மழைக் காலத்தைத் தவிர மற்ற நாட்களில் அவை அங்கேதான் கிடக்கும். வைதீஸ்வரன் ஒரு கட்டிலில் அமர்ந்தார். எதிரே இருந்த இன்னொன்றில் சாயி உட்கார்ந்து கொண்டான்.

“நான் இதை கொஞ்ச நாளைக்கு முன்னே சொல்லணும்னு இருந்தேன். ஆனா ஒவ்வொரு தடவையும் கால முன் வைக்க எடுக்கும் போது, யாரோ கையைப் பிடிச்சி இழுக்கராப்பில ஒரு தயக்கம் வந்து தடுத்துண்டே இருந்தது. ஆனா இன்னிக்கு எப்படியும் சொல்லிடணும்னு தீர்மானம் பண்ணிட்டேன்…”

அவன் தயக்கம் அவரைத் தாக்கிற்று. என்ன ஆகி விட்டது? வேலையை விட்டு விட்டானா?அல்லது ஒரு வேளை அமெரிக்கா ஆப்பிரிக்கா என்று வெளி தேசம் போக நிச்சயித்து விட்டானா? என்ன விஷயம்?

சாயி தொடர்ந்தான். “இதை அம்மா எப்படி எடுத்துப்பான்னு எனக்கு தெரியலை. அதனால்தான் உங்க கிட்ட முதல்ல பேசலாம்னு வந்தேன். அடுத்த மாதம் நீங்க என் கல்யாணத்துக்கு வரணும்”

அவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. உடல் பதறிற்று.

“என்னடா சாயி, என்ன சொல்றே? ” என்று சற்று உரத்த குரலில் கேட்டார்.

“ஐ’ம் ஸாரி, உங்களுக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கும்னுதான் இவ்வளவு நாளா சொல்றதை தள்ளிப் போட்டுண்டு இருந்தேன். ஆனா கரைக்கு போகணும்னா ஆத்துல இறங்கித்தானே ஆகணும்” என்றான்.

அவன் நிதானம் அவரை ஒரு கட்டுக்குள் கொண்டு வர முயன்றது. இம்மாதிரி ஒரு நிலைமையை அவர் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.கரைக்குப் போக வேண்டும் என்கிற அவனைத் தண்ணீருக்குள் தள்ளி விட்டது யார்? அவனது வயதையும், நிகழ் காலத்தையும் சரியாகக் கணக்கிடாமல் செய்ய வேண்டியதைச் செய்யாமல் தவறி விட்ட குற்றவாளியா அவர்? ஆனால் அவனுக்கு இப்போதுதான் இருபத்தியேழு வயதாகிறது. ஏற்கனவே அவனது அம்மா ஜாதகக் கட்டைத் தூக்கி கொண்டு அலையத் தயாராகி விட்டாள். தவறு தங்கள் மீது இல்லை. வேறு எங்கோ இருக்கிறது என்று மனதின் ஒரு மூலையில் சமாதானப் படுத்தும் குரல் கேட்டது.

” சாயி, நீ சொல்றது ஒண்ணும் புரியலை. உனக்கு கல்யாணமா? அடுத்த மாசமா? இது நீயா எடுத்த முடிவா? இல்லே வேற யாராவது …?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லே அப்பா. நான் பண்ணிக்கப் போற பொண் எங்க ஆபீசில் வேலை பார்க்கறா. இது ஒரு லவ் மேரியேஜ்தான்.”

அவன் தினமும் காப்பியை ஆற்றிக் குடிக்கிற சாவகாசத்துடன் சொன்னான். கொஞ்ச நாட்களாக அவரிடம் சொல்ல முடியாமல் தயங்கிக் கொண்டிருந்தேன் என்றானே, அந்த நாட்களில் இந்த நிமிஷத்தையும் இப்படிப் பேச வேண்டியதையும் ரிகர்சல் பண்ணிக் கொண்டிருந்தானோ? என்ன ஒரு நிதானம் !

“சாயி, எங்கள்ட்டேயும் சொல்லி, எல்லாருமா போய் பொண் பார்த்து , நிச்சயதார்த்தம் பண்ணி …”

“பொண் பாக்கறது, நிச்சயதார்த்தம் பண்ணறது எல்லாம் ஆகிற காரியம் இல்லே”

“ஏன், அவா பிராமணாதானே ? ”

அவன் இல்லை என்று தலையை அசைத்தான்.

வைதீஸ்வரனுக்கு வயிறு கலங்கிற்று. நிச்சயமாக இதை அவர் அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

“என்ன ஜாதி? என்று கேட்டார்.

“அவா பிராமின் இல்லைன்னதுக்கு அப்புறம், அவா எந்த ஜாதியா இருந்தா என்ன? வாட் டிபரன்ஸ் டஸ் இட் மேக் ?”

அவன் சொன்னது அவருக்குப் பிடிக்கவில்லை. அதை விட அவன் சொன்னதில் இருந்த உண்மையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் அவன் மீது தனக்கு வர வேண்டிய அசாத்தியமான கோபம் ஏன் வரவில்லைஎன்று வைதீஸ்வரனுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. எந்தத் தந்தையிடமிருந்தும் குமுறலுடன் ஆக்ரோஷமாக சீறிப் பாய்ந்து வரும் குணம் எப்படி அவரிடம் இல்லாமல் இருக்கிறது? அவருடைய சொந்த வாழ்க்கையில் அவர் எதிர்கொண்ட குமுறலும் ஆக்ரோஷமும் அவரைத் தீய்த்து விட்டனவா? முப்பது வருஷங்களுக்கு முன்புநடந்தவை மறுபடியும் அவர் பிள்ளை வாழ்க்கையிலும் மறு பிரவேசம் செய்ய இருக்கின்றனவா ?-

* * * * *

அப்போது அவருக்கு சாயியின் வயதுதான் இருக்கும்.ஆனால் சாயியைப் போல வைதீஸ்வரன் அவரது தந்தைக்கு ஒரே குழந்தை இல்லை. அவருக்குக் கீழே இரண்டு பெண்கள்- தங்கைகள் – வைதீஸ்வரனின் தகப்பனார்மதுரையில் ஒரு பிரபல வக்கீலிடம் ஆபிஸ் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள்ளும் வேலையில் இருந்தார்.வசதியான வாழ்க்கை. வைதீஸ்வரன் பட்டப் படிப்பு முடிந்ததும் பாங்கில் வேலை கிடைத்தது. வக்கீலின் செல்வாக்கில் உள்ளூரிலேயே போஸ்டிங் ஆயிற்று.

தினமும் வீட்டிலிருந்து காலையில் அலுவலகத்துக்குப் பஸ்ஸில் போன நாட்களில்தான் இளைஞன் வைத்திக்கு இந்திராவின் பழக்கம் கிடைத்தது. அவள் வைத்தி இருந்த சுப்பிரமணிய புரத்தில்தான் அவன் வீட்டுக்குப் பக்கத்துத் தெருவில் குடியிருந்தாள். அவளை ஆஞ்சநேயர் கோயிலில் அடிக்கடி பார்த்திருக்கிறான். ஆனால் பரிச்சயமில்லை. பஸ் பிரயாணம் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந்திரா பார்க்க நன்றாக இருப்பாள். கறுப்பு நிறத்தைக் களையான முகமும், இறுகக் கட்டிய உடலும் பின்னுக்குத் தள்ளி விட்டன. கலைக்டர் ஆபிஸில் அவள் வேலை பார்த்துக் கொண்டிருந்தால்.

இந்திராவின் அப்பா கோயில் குருக்களாக இருந்தார். மாதா மாதம் முதல் தேதியன்று குறிப்பிட்ட பணத்தைத் தன் சம்பளமாகக் குடும்பத்திற்கு அவளால்தான் கொடுக்க முடிந்தது. குருக்களுக்குப் பிறந்த மூவரும் பெண்கள். இந்திராவின் தங்கைகள் இருவரும் படித்துக் கொண்டிருந்தார்கள்..இருவரும் படிப்பில் கெட்டிக்காரிகள் என்று இந்திரா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாள்

ஒரு நாள் இந்திரா வைத்தியிடம் கேட்டாள். “நம்ப கல்யாணத்துக்கு உங்க ஆத்துல ஒத்துப்பாளா?”

வைத்தி அவளை ஆச்சரியத்துடன் பார்த்தான். எதற்காக இந்த அர்த்தமற்ற கேள்வி ?

“இல்லை. நீங்க ஐயர், நாங்க ஐயங்கார். உங்க அப்பா அம்மா ஒத்துப்பாளா? ”

அவன் சிரித்தான். “ஒ, இதுதான் உன் பிரச்சனையா? அப்படிப் பார்த்தால் எங்க குடும்பத்த்துல ரெண்டு கல்யாணம் நடந்திருக்காது.”

” என்ன சொல்றேள் ? ”

“என் அத்தை ஒரு ஐயங்காரைத்தான் கல்யாணம் பண்ணிண்டா. ரெண்டு பேரும் யூ. எஸ். ல மெடிசின் படிச்சிண்டிருந்தப்ப ஒருத்தர் மேல ஒருத்தர் மயங்கி விழுந்து…”

“இப்படியா ? : என்று கேட்டபடி அவன் தோள் மீது சாய்ந்தாள் இந்திரா.

“ஆமாம்” என்று அவளைக் கட்டிக் கொண்டான். வைத்தி. அவள் மெல்ல அவனிடமிருந்து விலகிக் கொண்டாள்.

“ரீசன்ட்டா என் கஸின் அவன் சிநேகிதனோட தங்கையை கல்யாணம் பண்ணிண்டான். ஆனா அவ வடகலையா இல்ல தென்கலையான்னு அவளுக்கே தெரியாது . அப்படிப்பட்ட ஐயங்கார்.” என்று சிரித்தான் வைத்தி.

சற்று முன்பு அவள் முகத்தில் தென்பட்ட கலவரம் இப்போது குறைந்திருந்ததை வைத்தி கவனித்தான்/

“நாளைக்கு ஞாயத்துக் கிழமை தானே? எங்க அப்பா கிட்ட நம்ம விஷயத்தைப் பத்திப் பேசிடலாம்னு இருக்கேன் ” என்றான் வைத்தி.

அவள் அவன் வலது கையைத் தனது இடது கையினால் பற்றிக் கொண்டாள். லேசாக அவள் கை நடுங்குவதை வைத்தி உணர்ந்தான்

மறுநாள் மத்தியானம் அவன் இந்திராவைப் பற்றி அப்பாவிடம் பேசினான்.

ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த அருணாசலம் அவன் சொன்னதைக் கேட்டார். பிறகு அவனைப் பார்த்து “லவ்வோ ? ” என்று கேட்டார்.

வைத்தி கூச்சத்துடன் பதில் பேசாமல் நின்றான். “பொண்ணோட அப்பா என்ன பண்றார் ? ”

“கோயில்ல குருக்களா இருக்கார் ”

“ஓஹோ, ரொம்ப ஒசந்த உத்தியோகம்தான் .”

வைத்தி அவரை நிமிர்ந்து பார்த்தான்.

“எங்க இருக்கா அவாள்ளாம் ? ”

அவன் விவரம் சொன்னான்.

“ஒ, நம்ம காசிநாதையர் கட்டி வாடகைக்கு விட்டிருக்கற ஸ்டோர்லையா ? ”

அவன் தலையசைத்தான்.

“சொந்த வீடுன்னு சின்ன குச்சு கூட இல்லையாக்கும்? ஹூம் அதுவும் சரிதான். அடுத்த வேளை சாப்பாட்டுக்கே திணறிண்டு இருக்ககறவாளாச்சே.”

அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. காரியம் கெட்டுப் போய் விடக் கூடாதே என்று அடக்கிக் கொண்டான்.

“அப்பாவையும் , பொண்ணையும் தவிர வேற யார்லாம் இருக்கா ? ”

இந்திராவின் படித்துக் கொண்டிருக்கிற இரண்டு தங்கைகளைப் பற்றிச் சொன்னான்.

“அப்படீன்னா இப்போ அந்தக் குடும்பத்தை முழுக்க காப்பாத்தியாறது உனக்கு வரப் போறவள்தானாக்கும்?”

அவர் என்ன சொல்ல வருகிறார் என்று அவனுக்குப் புரியவில்லை.

“ஏய் லலிதா, இதைக் கேட்டியா? உன் பிள்ளை உனக்கும் எனக்கும் சிரமம் குடுக்க வாண்டாம்னு எப்படிப்பட்ட மாட்டுப் பொண்ணை நமக்காகப் பார்த்து வச்சிருக்கான் பாரு ” என்று தரையில் உட்கார்ந்திருந்த மனைவியிடம் சொன்னார்.

வைத்தியின் அம்மா ” வைத்தி என்னடா இதெல்லாம் ? ” என்று கேட்டாள். அவளுக்கு கணவர் சொல்வதுதான் வேத வாக்கு. கணவனே கண் கண்ட தெய்வம் படத்துக்கு அருணாசலம் அவளை மூன்று தடவை கூட்டிக் கொண்டு போனதாக அம்மா சொல்லியிருக்கிறாள்.

“இல்லம்மா. அவ ரொம்ப நல்ல பொண்ணு. சாத்வீகம். கெட்டிக்காரி.எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ” என்றான் வைத்தி அம்மாவைப் பார்த்து.

அவன் சொன்னதெல்லாம் தன் காதுக்குத்தான் என்று அருணாசலத்துக்கு கோபம் வந்தது.

“டேய் , உன்னை இவ்வளவு வருஷம் தூக்கி வளர்த்து படிக்க வச்சு, எல்லா சௌகரியமும் பண்ணிக் குடுத்து நிமிர்ந்து நிக்க வச்சா. நன்னாதான் திருப்பி குடுக்கறே. எங்களோட மானம் என்ன, மரியாதை என்னஆகும்ன்னு ஒரு நிமிஷம் யோசிச்சியா? டீசன்ட்டா ஒரு கல்யாணம் பண்ணிக் குடுக்கற வசதி இருக்காடா அவா கிட்டே? கோயில் உண்டக் கட்டிதான் வாங்கி எல்லோருக்கும் போடுவர் உன் மாமனாராகப் போறவர். நீ கல்யாணம் பண்ணிண்டப்பறம் உன் பொண்டாட்டி இங்கே வரதுக்கு பதிலா நீதான் அவாத்துல இருந்துண்டு அந்தக் குடும்பத்த காப்பாத்தியாகணும். அவ சம்பளம் வராட்டா குடும்பம் தெருவிலேன்னா நிக்கற ஸ்டேடஸ் வச்சிண்டிருக்கா.உனக்கு பைத்தியம் ஏதாவது பிடிச்சுடுத்தா ? ” என்று அருணாசலம் அவனைப் பார்த்துக் கத்தினார்.

“உனக்கு கீழே ரண்டு பொண்கள் இருக்கறது உனக்கு மறந்து போச்சாடா ? ” என்றாள் அம்மா. “இந்த ஆத்துக்கு வர்ற பொண்ணு பெரிய இடத்திலேர்ந்து , சீர் செனத்தியோட வருவான்னு நாங்கள்ளாம் நினைச்சிண்டு இருக்கறதில மண்ணைப் போடறேயேடா , இது உனக்கே நன்னா இருக்கா? உங்க அப்பா என்னடான்னாவக்கீலாத்து சம்பந்தம் வரப்போறதுன்னு சொல்லிண்டு இருக்கார்.”

“வக்கீலாத்து சம்பந்தமா ? ”

“ஆமாம். அப்பா வேலை பார்க்கிற வக்கீல் மாமாவோட தம்பி பொண்ணு , நன்னா படிச்சிருக்காளாம் . நிறைய பண்ணறேன்றா. அதுக்குதான்அப்பவே வக்கீல் மாமா ஊரோட உனக்கு வேலை வாங்கி வச்சார். இந்த மாதிரி நல்ல இடம் கிடைச்சாதானே , நாளைக்கு நம்மாத்து பொண்களுக்கும் நாலு நல்ல இடத்து சம்பந்தம் வரும் . உனக்கு புத்தி போயிருக்கே போயும் போயும் ஒரு ஐயங்கார் பொண்ணைப் பார்த்து …” என்று என்னமோ குடி முழுகிப் போய் விட்ட குரலில் பேசினாள்.

“ஏன் சித்ரா அத்தையும் ராமண்ணாவும் ஐயங்காராத்லே சம்பந்தம் வச்சுக்கலையா ? ” என்று வைத்தி சற்றுக் கோபத்துடன் அம்மாவிடம் கேட்டான்.

“அடேயப்பா, சார்வாள் லா பாயின்ட்டுன்னா எடுத்து வீசறார் ” என்று அருணாசலம் சிரித்தார். “டேய் , சித்ராவோட மாமனார் செங்கனூர் மிராசு.. ராமண்ணா கல்யாணம் முடிஞ்ச கையோட மொரீஷியஸ்ல ஹனி-மூன் கொண்டாட போனான். உங்க மாமனார் அழகர்கோயிலுக்கோ திருச்செந்தூருக்கோ உங்களை அனுப்புவர்.அதுக்கே எவ்வளவு கஷ்டப் படுவாரோ ” என்றார் மேலும்.

வைத்திக்கு அவ்வளவு கோபமான சூழ்நிலையிலும், அவனுடைய பெற்றோர்கள் பேசும் விதம் மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது..இவ்வளவு நாட்களும் அவன் பார்த்திருந்த கரிசனமும், அன்பும் ஆதரவும் நிரம்பியவர்களாக இருந்தவர்கள் இப்போது பணம், செல்வாக்கு, ஆடம்பரம் பற்றியே பேசுபவர்களாக மாறிவிட்டதை மிகுந்த வியப்புடன் உணர்ந்தான். முன்பு எப்போதோ கிரேக்க இதிகாசம் ஒன்றில் லின்கோத்ரோபி பற்றிப் படித்தது ஞாபகம் வந்தது. மனிதன் ஓநாயாக மாறும் கற்பனையை ஒருவரால் செய்யத் தோன்றியிருக்கிறதே என்று ஆச்சரியப் பட்டான்…ஆனால்இப்போது புரிகிறது, அது ஸ்தூல சரீரத்தைப் பற்றியது அல்ல, மாறாக, மனதின் மாறுபட்ட நிலைக் களன்களைப் பற்றி என்று. அவன் தன் பெற்றோர்களின் நற்குணங்கள் என்று நினைத்தவை எல்லாம் இம்மாதிரித் தருணத்தைத் தங்களுக்கு உபயோகிப்பதற்காகத்தான் என்று நினைக்கும் போது அவனுக்கு ஏதோ அசிங்கத்தை மிதித்து விட்டாற் போலிருந்தது.

“சரி, நீ சொல்ல வேணும்கிறதை எல்லாம் சொல்லிட்டேல்லியோ, எங்க பேச்சுக்கும் கொஞ்சம் மரியாதை குடுத்துப் பாரு. அப்புறம் பாக்கலாம்” என்று அருணாசலம் ஊஞ்சலில் இருந்து எழுந்தார்.

சரி இந்த விஷயம் உடனடியாகத் தீர்க்க முடியாத ஒன்று என்ற நினைப்பில் தள்ளிப் போடப் படுகிறது இப்போது என்று அவனும் நினைத்து தன் அறைக்குச் சென்றான். ஆனால் செவ்வாய்க் கிழமை மத்தியானம் இந்திரா அவனைப் போனில் கூப்பிட்ட போது அவள் குரல் இயல்பாக இல்லாதது போல அவனுக்குத் தோன்றிற்று.

மாலை அவர்கள் வழக்கமாகச் சந்திக்கும் ஹோட்டலுக்கு அவன் வந்த போது அவள் ஏற்கனவே வந்து காத்துக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் புன்னகை செய்தாள். மத்தியானம் தான் நினைத்தது சரியல்லவோ என்று அவனுக்குள் சம்சயம் உண்டாயிற்று.

காப்பிக்கு ஆர்டர் செய்தபின் இந்திரா அவனைப் பார்த்து ” நேத்திக்கி உங்க அப்பா எங்காத்துக்கு வந்திருந்தார் ” என்றாள்.

அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.

“எனக்கு உங்களோட மத்தியானம் பேசும் போதே தெரிஞ்சது, இந்த விஷயம் பத்தி உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு ” என்றாள் இந்திரா. அவள் குரல் சீராக அமைதியாக இருந்தது.

அவன் எதுவும் பேசாமல், பேசத் தோன்றாமல் அவளைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். அதிர்ச்சி வாயைக் கட்டிப் போட்டுவிட்டது போல.

“நேத்திக்கி சாயங்காலம் ஏழு மணி வாக்கில வந்தார். நானும் ஆத்தில இருந்தேன். ரொம்பவும் சுத்தி வளைச்சுப் பேசலை. வீட்டை ஒரு பார்வை பார்த்தார். தன்னை அறிமுகம் பண்ணிண்டார். என் அப்பாகிட்டே ‘நீங்களும் நானும் ஒரே தராசில இருக்கற ரெண்டு பக்கமும் மாதிரி. உங்களுக்கு உங்க பொண்ணு நல்ல இடத்தில போய் இருக்கணுங்கிற ஆசை மாதிரி எங்களுக்கும் எங்க பையன் மேல இருக்கறது ஒண்ணும் தப்பில்லேன்னு நீங்க கண்டிப்பா ஒத்துப்பேள். அது எனக்கு நன்னா தெரியும். வைத்திக்கு ஒரு நல்ல சம்பந்தம் பாத்து வச்சிருக்கோம். அவன் அதில மண்ணை வாரிப் போடற காரியத்துக்கு நீங்க உதவியா இருக்கக் கூடாதுன்னு வேண்டிண்டு போறதுக்குத்தான் வந்திருக்கேன்’னார். என் அப்பா ரொம்ப சாது. அவருக்கு இந்த சூது வாது எல்லாம் தெரியாது. உங்க அப்பா சொன்னதைக் கேட்டதும் அவர் கூனி குறுகிப் போயிட்டார். ‘ நாங்க என்னவோ சின்னவா ரெண்டு பேருக்கும் மனசு ஒத்துப் போயிருக்கு. இதுக்கு ஏதும் விக்னம் இல்லேன்னு நினைச்சிண்டிருந்தோம்.ஆனா இப்ப நீங்க பேசினதைக் கேட்டதுக்கு அப்புறம்,பெத்தவா மனசை நோகடிச்சிண்டு என் பொண் எதுவும் செய்யத் தயாரா இருக்கமாட்டா. கல்யாணம்கிறது ரெண்டு பேர் மட்டும் சம்பந்தப் பட்ட விஷயம் இல்லே.ஊர், உலகம், பந்துக்கள்,என்று எல்லோரும் சந்தோஷப் பட்டுண்டு நடக்க வேண்டிய கொண்டாட்டம் அது. என் பொண்ணையே கூப்பிடறேன். அவளே உங்க கிட்ட சொல்லட்டும்’னார் எங்கப்பா. நான் வந்து உங்க அப்பாவுக்கு நமஸ்காரம் பண்ணினேன். ‘ஸார், எங்க அப்பா சொன்னதுக்கு மேல நான் சொல்றதுக்கு ஒண்ணுமேயில்லை’ன்னேன் உங்கப்பாவை நான் ஸார்ன்னு கூப்பிட்டதுலேர்ந்தே அவருக்கு வேண்டிய பதில் கிடைச்சுடுத்துன்னு அவருக்கு தெரிஞ்சிருக்கும். ‘ நீ நன்னா இருக்கணும் அம்மா’ன்னார். உடனே எழுந்து வெளியே போய்ட்டார்.” என்றாள் இந்திரா.

வைத்திக்கு அவள் பேச்சைக் கேட்டுக் கோபம் வரவில்லை. தாங்க முடியாத அவமான உணர்ச்சியும், கூச்சமும் அவனைக் கவ்வின. இந்திராவின் பெற்றோரும், இந்திராவும் அவன் மனதில் மிக உயரமாக எழுந்து நின்றார்கள். அவனும் அவன் பெற்றோரும், பூமிக்கு அடியில் குடைந்து கொண்டு ஓடிப் போய் மறையத் துடிப்பது போல் அவனுக்கு இருந்தது. ஆயுளுக்கும் இந்த மனச் சித்திரங்களிலிருந்து தான் தப்ப முடியாது என்று அவனுக்குத் தோன்றிற்று.

அவனது மனக் கலக்கம் முகத்திலும் தோன்றியிருக்க வேண்டும். அவனுக்கு எதிரே உட்கார்ந்திருந்த இந்திரா எழுந்து வந்து அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டாள். மேஜை மீது இருந்த கையை எடுத்துத் தன் கையில் வைத்துக் கொண்டாள். “லெட்ஸ் பேஸ் திஸ். எல்லோருக்கும் சந்தோஷத்தைத் தரும் நண்பர்களாக இருப்போம் ” என்றாள்.

அதற்குப் பிறகு அவர் கல்யாணத்துக்கு அவள் வந்ததும், அவள் கல்யாணத்துக்கு அவர் சென்றதும் வெவ்வேறு கதைகள்….

* * * * *

“அப்பா, அப்பா” என்று குரல் கேட்டு வைதீஸ்வரன் நடப்பு உலகுக்கு வந்தார். சாயி அவரைப் பிடித்து அசைத்துக் கொண்டிருந்தான். “என்னப்பா, நீங்க அம்மாவை விட இந்த விஷயத்தை நிதானமா பார்த்து யோசிப்பேள்னு நினைச்சு கூட்டிண்டு வந்தா, இப்படி ஒண்ணும் பேசாம ஷாக் ஆனா மாதிரி இருக்கேளே ” என்றான் சாயி.

“உனக்கே இது ஒரு ஷாக்கான விஷயம்னு தோணறதா என்ன ?”

“ஆமா. நீங்க அதிர்ச்சி அடையற விஷயம்தான்னு எனக்கு நன்னாவே தெரியும்” என்றான். “ஆனா நீங்க நிச்சயமா ரீசனபிள் ஆக இருப்பேள்னும் எனக்குத் தெரியும் ” என்று புன்னகை செய்தான்.

தான் ஏன் தன் பிள்ளை விஷயத்தில் தன் தந்தையைப் போல் நடந்து கொள்ள வில்லை என்று அவருக்குள் கேள்வி எழுந்தது. காலம் மாறிப் போய் விட்டதா? அந்த மாற்றச் சுழலில் அவரும் அமுங்கிப் போய்விட்டாரா? அவரது கேள்விகளுக்கு அவன் கோபம் எதுவும் காட்டாது, நிதானமாக இருந்தது எப்படி? சாயிக்குத் தன் மேலும், அவர் மேலும் எப்படி இவ்வளவு நம்பிக்கை? அந்த நம்பிக்கையை அவர்தான் அவனுக்கு ஊட்டி இருக்க வேண்டும்.

“அப்பா, நான் அந்தப் பெண்ணை மிகவும் நேசிக்கிறேன். அவள் பெயர் மேரி. அவளது அம்மா ஒரு பிராமின். அப்பா கிறிஸ்தவர். மேரி மிக நல்ல பெண். அவளும் என்னை மாதிரியே ஸி.எ . ரொம்ப கெட்டிக்காரி. ஒரு வருஷத்துக்கு மேலாக நாங்கள் பழகுகிறோம். எங்களுடைய டேஸ்ட், லைக்ஸ் அண்ட் டிஸ்லைக்ஸ் பற்றி ஒருவருக்கு ஒருவர் நன்றாகவே தெரிந்து கொண்டிருக்கிறோம். ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை எங்களால் வாழ முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். இதற்கு ஜாதி என்பது ஒரு முட்டுக் கட்டையாக இருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். மேரியும் நினைக்கிறாள் . அவள் வீட்டில் பெரியவர்களிடம் சம்மதம் வாங்கி விட்டாள். எனக்கு நீங்களும் அம்மாவும்.. ” என்று ஆங்கிலத்துக்கு மாறிவிட்டான் சாயி.

அன்று பணம், செல்வாக்கு, இன்று ஜாதி என்று நினைத்தார் வைதீஸ்வரன். அன்று மண்ணை வாரிப் போடுவதாக இருந்தது, இன்று முட்டுக் கட்டையாக நிற்கிறது. என்ன ஒரு சரித்திரம் ! எதையும் விளங்கிக் கொள்ள முடியாத சரித்திரம் ! சரித்திரத்திலிருந்து எதையும் கற்றுக் கொள்ள முடியாது என்பதுதான் சரித்திரம் கற்றுக் கொடுக்கும் உண்மையான பாடம் என்று சொன்னது யார்? அல்டஸ் ஹக்ஸ்லி ? அவன் வாய்க்குச் சர்க்கரைதான் போட வேண்டும். .

அவருக்கு ஆரம்பத்தில் மிக இயற்கையாக வெளிப்பட்ட பயமும் , கோபமும், மனக் குமைச்சலும் இப்போது மெதுவாக விடுபடுவது போலத் தோன்றியது.

“நீ சொல்வது எனக்குப் புரிகிறது” என்றார் வைதீஎச்வரன்.

அவன் இருட்டில் தேடி அவர் கையைப் பிடித்துக் கொண்டான். நடுங்கும் கரங்கள்.

“அப்பா, அம்மாவை நினைச்சாத்தான் எனக்கு கவலையா இருக்கு ” என்றான்.

அவன் பயப்படுவது சரிதான். ராஜி, அவருடைய மனைவி, ரொம்பவும் ஆசாரம், மடி எல்லாம் பார்ப்பவள். பூஜை புனஸ்காரம் என்று கடவுளை வேரோடு பிடுங்குபவள். ஒரே பிள்ளை என்று அளவற்ற ஆசையையும் பாசத்தையும் சாயி மேல் வைத்திருப்பவள். சாயி தேர்ந்தெடுத்திருக்கும் பெண்ணை அவள் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள். அவளை எப்படி சமாதானப்படுத்தப் போகிறோம் ? அவள் மட்டுமல்ல. பெரும்பாலான நெருங்கிய சுற்றம் இதை வரவேற்கப் போவதில்லை.எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று அவருக்கு மலைப்பாக இருந்தது.

” இது ஹெர்குலியன் டாஸ்க்தான். சரி பார்க்கலாம் அவள் போகிற வழியில் தான் போய் விட்டுப் பிடிக்கணும் ” என்றார் வைதீஸ்வரன்.

அப்போது அவரது மனைவி மாடிப் படியேறி அவர்களிருக்குமிடத்துக்கு வந்தாள். “என்ன இருட்டில் ரெண்டு பேருமாஉக்காந்து கூத்துக் கட்டியாறது. ஷேர் மார்க்கெட்டா ? ” என்றுகேட்டபடி மாடி விளக்கைப் போட்டாள். பிறகு அவர் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. வயசாயிண்டே வரதே, சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோடாங்கிறேன். பிடி குடுக்க மாட்டேங்கிறான். ” என்றார் வைதீஸ்வரன்.

சாயி தன்னை ஆச்சரியத்துடன் பார்ப்பதை அவர் பார்த்தார்.

“என்ன சொல்றான். இது சரியான வயசு தானேடா?” என்றாள் ராஜி.

” யாரையாவது நினைச்சிண்டு இருக்கியான்னு கேட்டேன். என்ன அப்படி எதாவது தத்துப் பித்துன்னு இருந்தா முளையிலேயே கிள்ளி எறிஞ்சிடலாம் இல்லையா ? எனக்கு இந்த காதல் ஊதல் எல்லாம் கொஞ்சம் கூடப் பிடிக்கறதில்லை ” என்றார் வைதீஸ்வரன் கட்டிலில் சாய்ந்தபடி.

அவர் பார்வை வானத்தைத் தடவிற்று. உருண்டு கொண்டிருந்த நிலவும் , மின்னிக் கொண்டிருந்த நட்சந்திரங்களும் அவரைப் பார்த்துச் சிரித்தன.

Series Navigationமுடிச்சிட்டுக் கொள்ளும் நாளங்கள்..பயணம்
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *