பஞ்சதந்திரம் தொடர் 6 – தந்திலன் என்ற வியாபாரி

This entry is part 42 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

தந்திலன் என்ற வியாபாரி

 

மண்ணுலகில் இருக்கும் வர்த்தமானம் என்ற நகரத்தில் தந்திலன் என்ற வியாபாரி ஒருவன் வசித்து வந்தான் அவனே எல்லா ஊர்களுக்கும் அதிகாரி. நகர அலுவல்களையும், ராஜ்ய காரியங்களையும் அவன் பார்த்து வந்த காலத்தில் எல்லா மக்களும் திருப்தியோடிருந்தனர். அதிகமாகச் சொல்வானேன்? அவனைப் போல் கெட்டிக்காரனை யாரும் கேட்டதுமில்லை, பார்த்ததுமில்லை. விவேகம் நிறைந்த ஒரு பழமொழி கூறுவதுபோல்:

 

அரசனுக்கு நன்மை செய்பவன் மக்களின் வெறுப்பைப் பெறுகிறான்; மக்களுக்கு நன்மை செய்பவனை அரசன் கைவிடுகிறான். இப்படி ஒரு பெரிய முரண்பாடு இருக்கும்போது, அரசனுக்கும் மக்களுக்கும் சமமாகக் காரியம் பார்க்கிறவனைக் காண்பது அரிய பெரிய விஷயந்தான்.

 

இப்படியிருக்கையில் ஒரு நாள் அவன் பெண்ணுக்குக் கல்யாணம் நடந்தது. அந்த வைபவத்துக்கு எல்லா  நகர ஜனங்களையும், அரச பரிவாரங்களையும் அவன் அபிமானத்தோடு வரவழைத்து உபசரித்தான்; உணவும் உடையும் தந்து பெருமைப் படுத்தினான். கல்யாண வைபவம் முடிந்தபிறகு அரசனையும் அந்தப்புர ஸ்திரீகளேயும் வீட்டிற்கு அழைத்து வந்து மரியாதைகள் செய்தான்.

 

வீடு பெருக்கும் வேலையாள் ஒருவன் அரசனிடம் இருந்தான். அவன் பெயர் கோரபன். அவனையும் வியாபாரி அழைத்திருந்தான். அழைப்புப்படி வந்த கோரபன் தன் தகுதிக்கு மிஞ்சிய ஒரு ஆசனத்தில் ராஜகுருவுக்கு எதிரே அமர்ந்துவிட்டான். இதைக் கண்ட தந்திலன் அவனைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினான் அன்று முதல் கோரபன் தனக்கேற்பட்ட அவமானத்தால் மனோ வேதனையடைந்து, ‘இந்த வியாபாரியின் மீது அரசர் வைத்துள்ள அபிமானத்தை ஒழிப்பதற்கு வழியுண்டா?’ என்று யோசித்துக் கொண்டே இருந்தான். இரவில் அவனுக்குத் தூக்கம் பிடிக்கவேயில்லை. பின்பு ஒரு சமயம், அவனுக்குத் துளியளவு தீமை செய்தவற்குக் கூட எனக்குத் திராணி கிடையாதே! பிறகு ஏன் அதைப்பற்றி விணே நினைத்து ஏங்கி நான் இளைத்துப் போகவேண்டும்?

 

தீமை செய்யத் திராணி இல்லாதவன் வெட்கமின்றிக் கோபிப்பதில் என்ன லாபம்? உயர உயரக் குதித்தாலும் பருப்பு வாணலியை உடைக்க முடியுமா?

 

என்கிற பழமொழி ரொம்பச் சரிதான்’ என்று எண்ணமிட்டான்.

 

பிறகு ஒருநாள் விடியற்காலையில் அரசன் அரைத்தூக்கத்தில் இருக்கும் பொழுது, அரசனின் படுக்கையருகில் குப்பை பெருக்கிக் கொண்டே வந்த கோரபன், ”அட அநியாயமே, தந்திலன் செய்கிற அக்கிரமத்தை என்னவென்று சொல்வது! பட்டமகிஷியைச் சுகிக்கிறானே!” என்று சொன்னான். இந்தச் சொற்களைக் கேட்டதும் அரசன் பரபரப்போடு எழுந்து உட்கார்ந்து, ”கோரபனே! இப்போது நீ முணுமுணுத்து விஷயம் உண்மைதானா? தந்திலன் ராணியை அணைக்கிறானா?” என்று கேட்டான்.

 

”அரசே! சூதாட்டத்தில் ஆசை மிகுதியால் இரவெல்லாம் கண் விழித் திருந்தேன். பெருக்கும்போது பலமாகத் தூக்கம் வந்துவிட்டது. தூக்கத்தில் என்ன சொன்னேன் என்று எனக்கே தெரியாது. மன்னியுங்கள்” என்று கோரபன் பதிலளித்தான்.

 

அரசனுக்குக் கோபம் வந்துவிட்டது. யோசித்தான். ”இவனோ அரண்மனையில் தங்கு தடையின்றி வந்து போய்க்கொண்டிருப்பவன் தந்திலனும் அப்படியேதான் வந்து போகிறான். ஆகையால் அவன் ராணியை ஆலிங்கனம் செய்வதை இவன் ஒருவேளை பார்த்திருக்கலாம். ஒரு பழமொழியில் சொல்லியிருக்கிறதே!

 

பட்டப்பகலில் எதை விரும்புகிறோமோ அல்லது பார்க்கிறோமோ அல்லது செய்கிறோமோ அதையே நினைந்து நினைந்து, கனவிலும் அதையே சொல்கிறோம் அல்லது செய்கிறோம்.

 

நல்லதோ, கெட்டதோ மனித மனத்திலுள்ள இரகசியங்கள் எல்லாம், தூக்கத்தில் பேசும்போதும், குடிபோதையிலிருக்கும் போதும் வெளிப்பட்டு விடுகின்றன.

 

மேலும், ஸ்திரீகள் விஷயந்தான் தெரிந்ததாயிற்றே!

 

ஒருவனோடு வம்பளப்பாள்; இன்னொருவனைக் கனிவுடன் பார்ப்பாள்; மூன்றாமவனை மனத்தில் நினைத்துக்கொண்டே இருப்பாள். யாரைத்தான் பெண் திடமாகக் காதலிக்கிறாள்?

 

எத்தனை கட்டைகள் போட்டாலும் நெருப்புக்குத் திருப்தி இல்லை; எத்தனை நதிகள் நீரைக் கொட்டினாலும் சமுத்திரத்துக்குத் திருப்தி யில்லை; எத்தனை ஜீவராசிகளைக் கொண்டாலும் யமனுக்குத் திருப்தியில்லை; எத்தனை ஆண்களைச் சேர்ந்தாலும்  பெண்களுக்குத் திருப்தியில்லை.

 

நாரதரே! இடவசதி, காலவசதி மட்டும் இல்லாமற் போகட்டும்; அல்லது, விரும்பிச் சேர்வதற்கு ஒரு ஆண்பிள்ளை இல்லாமற் போகட்டும். பிறகு ஸ்திரீகள் பதிவிரதைகளாகி விடுகிறதை நீ பார்ப்பாய்!

 

‘என் மனைவி என்னைக் காதலிக்கிறாள்’ என்று எந்த முட்டாள் எண்ணுகிறானோ அவன் கூண்டுப் பறவை போல் என்றென்றும் தன் மனைவிக்கு அடிமையாவான்.

 

இப்படியெல்லாம் அரசன் துயரப்பட்டு பிரலாபித்தான். அன்று முதல் தந்திலனிடம் பராமுகமாயிருந்தான். அதிகம் சொல்வானேன்? அரண்மனைக்குள் நுழையாதபடி அவனைத் தடுத்துவிட்டான்.

 

திடீரென்று அரசன் தன்னைத் திரஸ்கரிப்பதைக் கண்ட தந்திலன் யோசனையில் ஆழ்ந்தான்.

 

”ஆஹா, சரியாகத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள்! செல்வம் சேர்ந்தவரினடம் செருக்கும் சேரும்; உணர்ச்சி வசப் படுகிறவன் ஆபத்தின் வசமாவான்; பெண்ணால் துயரப் படாதவன் உண்டா? யாரைத்தான் மன்னன் மனதார நேசிக்கிறான்? காலனின் எல்லையைத் தாண்டியவன் யார்? ஏழையை மதிக்கிறவன் யாராவது உண்டா? துஷ்டனுடன் சகவாசம் வைத்தவன் §க்ஷமமாய்த் திரும்பியதும் உண்டா?

 

காக்கையிடம் சுத்தத்தையும், சூதாடியிடம் சத்தியத்தையும், பாம்பினிடம் இரக்கத்தையும், பெண்களிடம் காம வேட்கைத் தணிவையும், அலியினிடத்தில் தைரியத்தையும், குடிகாரனிடம் தத்துவ ஞானத்தையும், அரசனிடத்தில் நேசத்தையும், யாராவது பார்த்தோ, கேட்டோ இருக்கிறார்களா?

 

அது இருக்கட்டும். மன்னனுக்கோ, மற்றவருக்கோ நான் கனவில் கூட, வார்த்தையால்கூட, கெடுதல் ஒன்றும் செய்யவில்லையே! பிறகு ஏன் என்னிடம் பராமுகமாயிருக்கிறார் அரசர்?” என்றெல்லாம் யோசித்தான்.

 

ஒருநாள் அரண்மனை வாயிலில் தந்திலனைக் காவலாளிகள் தடுத்து நிறுத்தினார்கள். அவனைக் கோரபன் பார்த்துவிட்டு உரக்கச் சிரித்தான். வாயில் காவலாளிகளைப் பார்த்து, ”வாயில் காப்போர்களே, ஜாக்கிரதையாயிருங்கள்! அரசனின் அருள் பெற்றிருப்பதினால் இந்த முரட்டுத் தந்திலன் தன்னிஷ்டம்போல் ஒருவனைத் தண்டிக்கவோ சன்மானிக்கவோ செய்கிறான். நீங்கள் அவனைத் தடுத்தால் என்னைச் செய்தமாதிரி உங்களையும் அவன் கழுத்தையும் பிடித்து வெளியே தள்ளுவான்” என்று சொன்னான்.

 

இதைக் கேட்டதும் தந்திலனுக்கு ஒரு எண்ணம் உண்டாயிற்று. ”இது நிச்சயமாகக் கோரபனின் வேலைதான்.

 

அரசனருகிலிருந்து வேலை செய்கிறவன் குலமற்றவனாகவோ, மூடகனாகவோ,கொடைக்குத் தகுதியில்லாதவனாகவோ இருந்தாலும் அவனை எல்லோரும் மதிக்கிறார்கள்.

 

அரச சேவகன் கீழோனாகவிருந்தாலும், பேடியாயிருந்தாலும், தன்னைப் பிறர் அவமதிப்பதைச் சகிக்க மாட்டான்

 

என்று அறிவுறுத்துகிற பழமொழி சரிதான்” என்று நினைத்து புலம்பினான்.

 

அவமானமுற்ற உள்ளத்தோடும் மனக்கலக்கத்தோடும் வீடுபோய்ச் சேர்ந்தான். மாலையில் கோரபனை வரவழைத்து இரண்டு ஆடைகளைச் சன்மானம் செய்து, ”நண்பனே! ஏதோ உணர்ச்சி வசப்பட்டு நான் உன்னைப் பிடித்து வெளியே தள்ள வில்லை. ராஜகுருவின் முன்னால் உன் தகுதிக்கு மிஞ்சிய ஆசனத்தில் நீ உட்கார்ந்தாய். அதைப் பார்த்துத்தான். அவமானப் படுத்தினேன்” என்று தெரிவித்தான்.

 

சொர்க்கலோகத்தைப் பெற்றவன்போல் அவ்விரு வ1திரங்களையும் கோரபன் பெற்றுக் கொண்டான். மிகுந்த மனத் திருப்தியுடன், ”உத்தமனே! அதை மறந்து விட்டேன். நீ செய்த சன்மானத்திற்கு விரைவில் அரசரின் அருளும் பிறவும் கைம்மாறாக உனக்குக் கிடைக்கும், பார்!” என்று சொல்லிவிட்டு, நிறைந்த உள்ளத்தோடு வீடு திரும்பினான்.

 

சின்னஞ்சிறு விஷயமே உயர்வும் அளிக்கிறது, தாழ்வும் அளிக்கிறது. தராசின் முள்ளும், துஷ்டனும் ஒரே மாதிரியான வர்களே!

 

என்கிற பழமொழி ரொம்பவும் சரி.

 

மறுநாள் காலை கோரபன் அரண்மனைக்குச் சென்றான். அரசன் கட்டிலருகில் குப்பை பெருக்கிக்கொண்டே, அரைத் தூக்கத்திலிருக்கும் அரசன் காதில் விழும்படியாக, ”அடபாவமே! நம் அரசருக்குத்தான் என்ன பகுத்தறிவு! மலஜலம் கழிக்கிற நேரத்திலல்லவா வெள்ளரிக்காய் சாப்பிடுகிறார்!” என்று சொன்னான்.

 

அதைக் கேட்டதும் ஆச்சரியத்துடன் அரசன் எழுந்து உட்கார்ந்தான்.

 

”கோரபனே! என்ன, அவமரியாதையாகப் பேசுகிறாய். அரண்மனை வேலைக்காரன் என்பதினால் கொல்லாமல் விட்டேன். அப்படிப்பட்ட காரியம் நான் செய்ததை என்றைக்காவது பார்த்திருக்கிறாயா?” என்று கோபத்துடன் கேட்டான்.

 

”அரசே! சூதாட்டத்தின் மேலுள்ள மோகத்தால் இரவெல்லாம் கண்விழித்திருந்தேன். பெருக்கிக்கொண்டிருந்த போதிலும் தூக்கம் தள்ளிக்கொண்டு வந்தது. தூக்கத்தில் என்ன உளறினேன் என்று எனக்கே தெரியாது. தூங்கியதற்காக மன்னியுங்கள்!” என்று அவன் விடையளித்தான்.

 

அரசன் யோசிக்கலானான். ”பிறந்தது முதல் அப்படிப்பட்ட நேரத்தில் நாம் வெள்ளரிக்காய் தின்றதில்லை. இந்த முட்டாள் நம்மைப் பற்றி நடக்காததையெல்லாம் உளறிவைத்த மாதிரிதான் அன்றைக்குத் தந்திலனைப் பற்றியும் உளறியிருக்க வேண்டும். இது நிச்சயம். தந்திலனுக்குக் கொடை அளிப்பதை நாம் நிறுத்திவிட்டது பிசகு. அவனைப் போன்றவர்கள் அப்படி நடந்துகொள்ள மாட்டார்கள். மேலும், அவன் இல்லாமல் அரசாங்க வேலைகளும், நகராட்சி வேலைகளும் சீர்கெட்டுத் தாறுமாறாக நடந்து வருகின்றன” என்று எண்ணங்கள் ஓடின.

 

பிறகு அரசன் ஒரு முடிவுக்கு வந்தான். தந்திலனை அரண்மனைக்கு வரவழைத்தான். தான் அணிந்திருந்த வஸ்திரங்களையும், ஆபரணங்களையயும் எடுத்து அரசன் அவனுக்குக் கொடையாக வழங்கினான். பழையபடியே அவனை அதிகாரத்தில் வைத்தான்.

 

அதனால்தான், ‘கர்வத்தால் சேவகர்களைச் சரியாக நடத்தாதவன் காலிடறி விழுகிறான்…’ என்றெல்லாம் சொல்கிறேன்” என்று தமனகன் கூறி முடித்தது.

 

”நண்பனே! நீ சொல்வது சரிதான். அதன்படியே செய்கிறேன்” என்று சஞ்சீவகன் பதிலளித்தது.

 

பிறகு சஞ்சீவகனை அழைத்துக்கொண்டு தமனகன் பிங்களகனிடம் சென்றது. ”அரசே! இதோ சஞ்சீவகனை அழைத்து வந்திருக்கிறேன். இனி தங்கள் இஷ்டம்!” என்றது.

 

சிங்கத்தை மிகுந்த மரியாதையோடு சஞ்சீவகன் நமஸ்கரித்து விட்டு பணியுடன் எதிரே நின்றது.

 

வஜ்ஜிராயுதம் போன்று நகங்கள் அணிந்த திடமான அகன்ற தன் வலது கையைப் பிங்களகன் உயரத் தூக்கியவாறே, ”தாங்கள் சௌக்கியந்தானா? ஏன் இந்த மனித நடமாட்டம் இல்லாத காட்டில் வசிக்கிறீர்கள்?” என்று மரியாதையுடன் விசாரித்தது.

 

வியாபாரி வர்த்தமானன் முதலியவர்கள் தன்னைக் காட்டில் விட்டுவிட்டுச் சென்ற முழு விருத்தாந்தத்தையும் சஞ்சீவகன் சொல்லியது. இதைக்கேட்ட பிங்களகன், ”நண்பனே, பயப்படாதே! என் கை வல்லமையின் பாதுகாப்பிலே தங்கி, இங்கே உன்னிஷ்டம் போல் இரு. ஆனால் ஒரு விஷயம். நீ என் அருகிலிருந்துகொண்டே விளையாடிக் கொண்டிரு. இந்தக் காட்டில் பல துஷ்ட மிருகங்கள் இருக்கின்றன. பல அபாயங்கள் நேரிடலாம்” என்று கூறிற்று.

 

”தங்கள் கட்டளைப்படியே செய்கிறேன்” என்றது சஞ்சீவகன்.

 

இப்படிப் பேசி முடித்து, மிருகராஜன் யமுனைக் கரைக்குச் சென்றது. விருப்பம் போல் ஸ்னானமும் பானமும் செய்துவிட்டு, மீண்டும் காட்டில் புகுந்த தன்னிஷ்டம் போல் சுற்றித் திரியலாயிற்று.

 

இப்படியே காலம் சென்றது. அவ்விரண்டுக்குமிடையே அன்பும் வளர்ந்து கொண்டே போயிற்று. சஞ்சீவகன் பல சாஸ்திரங்கள் படித்து அறிவு வளர்ச்சி பெற்றிருந்தது. முட்டாளாகிய பிங்களகனுக்கு அவற்றைப் போதித்துச் சில நாட்களிலேயே அறிவாளியாக்கியது. காட்டு தர்மத்திலிருந்து சிங்கத்தை மீட்டு கிராமிய தர்மத்தில் ஈடுபடச் செய்தது. மிருகங்களை அடித்துக் கொல்லும் வழக்கத்தைச் சிங்கம் விட்டொழித்தது. சுருங்கச் சொன்னால், தினந்தோறும் சஞ்சீவகனும் பிங்களகனும் இரகசியமாகப் பேசிக்கொண்டேயிருந்தன. இவையிரண்டும் பேசிக்கொண்டிருக்கும்பொழுது மற்ற மிருகங்களெல்லாம் தூரத்தில் நின்றன. கரடகன் தமனகன்கூட உள்ளே நுழைய முடியவில்லை. சிங்கத்தின் பராக்கிரமம் வெளியிடப்படாமலே போனதால் அவ்விரு நரிகளும் இதர மிருக பரிவாரங்களும் சாப்பிடுவதற்கு வழியின்றி பசியால் வாடிப்போய் ஓரிடத்தில் கூடி நிற்கின்றன. ஒரு பழமொழி கூறுவதுபோல்:

 

உயர் குலத்தவனாகவும், பெருமை மிகுந்தவனாகவும் அரசன் ஒருவன் இருக்கலாம். ஆனபோதிலும், அவனிடமிருப்பதில் லாபமில்லை எனறாலும் வேலையாட்கள் அவனைவிட்டு விலகி விடுகின்றனர். பட்டுப்போன மரத்தைப் பறவைகள் விட்டுச் செல்கின்றன அல்லவா?

 

மரியாதையுள்ளவர்களாகவும், உயர்குலத்தினராகவும், எஜமான் விசுவாசமுள்ளவர்களாகவும் வேலையாட்கள் இருக்கலாம். ஆனால் சம்பளம் கொடுக்காத அரசனை அவர்கள் கூடத்தான் விட்டுச் செல்கிறார்கள்.

 

குறித்த காலத்தில் சம்பளம் கொடுக்கும் அரசன் எவ்வளவுதான் கோபித்தாலும் அவனை வேலையாட்கள் ஒருபொழுதும் விட்டுச்செல்ல மாட்டார்ககள்.

 

இது என்னமோ உண்மைதான்!

 

அரசர்கள் நாடுகளை விழுங்குகின்றனர்; வைத்தியர்கள் நோயாளிகளை விழுங்குகின்றனர்; வியாபாரிகள் சரக்கு வாங்குபவர்களை விழுங்குகிறார்கள், பண்டிதர்கள் முட்டாள்களை விழுங்குகின்றனர்; திருடர்கள் ஏமாந்த பேர்வழிகளை விழுங்கு கின்றனர்; பிச்சைக்காரர்கள் குடும்பஸ்தர்களை விழுங்குகின்றனர்; வேசிகள் காமுகர்களை விழுங்குகின்றனர்; வேலை எல்லோரையும் விழுங்குகிறது.

 

அரசர்கள் நான்கு உபாயங்களையும் கையாள்வார்கள்; இராப்பகலாகத் தருணம் பார்த்திருப்பார்கள்; சமயம் வரும்போது சின்ன மீன்களைப் பெரிய மீன்கள் விழுங்குவதுபோல், தமது பலத்தால் ஜீவிக்கிறார்கள்.

 

கரடகனுக்கும் தமனகனுக்கும் ராஜகிருபையும் இல்லாது போயிற்று, இரையும் இல்லாது போயிற்று-. பசியால் தொண்டை வறண்டு போய் உட்கார்ந்து அவ்விரு நரிகளும் ஒன்றோடொன்று பேசிக்கொண்டன.

 

”நண்பனே! அரசருக்கு இப்பொழுதெல்லாம் நாம் முக்கியமில்லை என்றாகி விட்டது. சஞ்சீவகனின் பேச்சில் மோகங்கொண்டு அதில் அவர் மூழ்கிக்கிடக்கிறார். தன் சொந்த விவகாரங்களில்கூட அசிரத்தைக் காட்டுகிறார். அரச பரிவாரங்கள் எங்கெங்கோ பிரிந்து கலைந்து போய்விட்டன. இனி நாம் என்ன செய்வது?” என்று கேட்டது தமனகன்.

 

”உன் பேச்சை அரசர் காதில் போட்டுக்கொள்ளாவிட்டாலும் சரி. நீ அவரை எச்சரித்துத் திருத்த வேண்டும். ஒரு பழமொழி கூறுவதுபோல்:

 

அரசர்கள் காதில் போட்டுக் கொள்ளாவிட்டாலும் சரி, அவர்களின் குற்றங்களைத் தவிர்க்கும் பொருட்டு, விதுரன் திருதராஷ்டிரனுக்கு உபதேசித்த மாதிரி, மந்திரிகள் அரசனுக்குப் புத்திமதிகள் சொல்ல வேண்டும்.

 

கர்வங்கொண்ட மன்னனை மந்திரிகளும், மதயானையைப் பாகனும், கைவிடமாட்டாரர்கள்.

 

மேலும், இந்தப் புல்தின்னும் பிறவியை மன்னருடன் சேர்த்து வைத்தது உன் குற்றம். உன் கையாலேயே கட்டைக்கு நெருப்பு வைத்தாய்?” என்றது கரடகன்.

 

”வாஸ்தவம், குற்றம் என்னுடையதுதான். அரசருடையதல்ல. ஒரு பழமொழி கூறுவதுபோல்:

 

ஆட்டுச் சண்டையால் குள்ளநரியும், ஆஷாடபூதியால் நம்மைப் போன்றவர்களும், பிறர் காரியங்களில் பிரவேசிக் கிறவர்களும், தமக்குத்தாமே தீங்கு விளைத்துக் கொள்கின்றனர்”

என்று குறிப்பிட்டது தமனகன்.

 

”அது எப்படி?” என்று கரடகன் கேட்க, தமனகன் சொல்லத் தொடங்கியது.

Series Navigationமரத்துப்போன விசும்பல்கள்முனனணியின் பின்னணிகள் – 2 டபிள்யூ. சாமர்செட் மாம் 1930
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *