பஞ்சதந்திரம் தொடர் 7 – தேவசர்மாவும் ஆஷாடபூதியும்

This entry is part 53 of 54 in the series 4 செப்டம்பர் 2011

தேவசர்மாவும் ஆஷாடபூதியும்

 

ஒரு காட்டில் தனியே ஓரிடத்தில் மடாலயம் ஒன்று இருந்தது. அதில் தேவ சர்மா என்னும் சந்நியாசி யொருவன் இருந்தான். அவன் பல யக்ஞங்கன் நடத்தியதற்குப் பிரதியாக பக்தர்கள் பலர் அவனுக்குப் பல நேர்த்தியான ஆடைகள் அளித்திருந்தனர்.

 

அவற்றை விற்று அவன் நாளடைவில் பெருஞ்செல்வம் திரட்டினான். பணம் சேரவே, அவன் யாரையும் நம்பவில்லை. எப்பொழுது பார்த்தாலும் பணப்பையைத் தனது அக்குளில் வைத்துக் கொண்டபடியே திரிந்தான். இரவும் பகலும் அது அவனைவிட்டு நீங்கவே நீங்காது.

 

பணம் சேர்ப்பதிலும் துக்கம்; சேர்த்தபின் காப்பதிலும் துக்கம்; இழந்தாலும் துக்கம்; செலவழித்தாலும் துக்கம்; சீச்சீ, எப்பொழுது பார்த்தாலும் துக்கந்தான்

என்கிற பேச்சு ரொம்பவும் சரி.

 

அவன் பணப்பையை அக்குளில் வைத்துப் பத்திரமாகத் தூக்கித் திரிவதை ஆஷாடபூதி என்ற துஷ்டத் திருடன் ஒருவன் கவனித்துவிட்டான். அதை எப்படித் திருடலாம் என்று யோசித்தான். ”மடாலயம் கனமான கற்களால் கட்டப் பட்டிருக்கிறது. எனவே, அதை உடைத்துக்கொண்டு செல்ல முடியாது. இவனோடு பேசி நம்ப வைத்து இவனுக்குச் சிஷ்யனாகிறேன். என்னிடம் நம்பிக்கை கொள்ளும்படி செய்து என் வசமாக்குகிறேன். ஒரு பழமொழி கூறுவதுபோல்:

 

பற்றறுத்தவன் அதிகார பீடத்தில் அமர மாட்டான்; காம மற்றவன் அலங்காரப் பிரியன் ஆகமாட்டான்; புத்தியற்றவன் முகஸ்துதி செய்யமாட்டான்; சத்தியம் பேசுபவன் வஞ்சகனாக மாட்டான்.

 

என்றெல்லாம் யோசித்து ஆஷாடபூதி ஒரு முடிவுக்கு வந்தான். சந்நியாசி அருகில் போய், ”ஓம் நமோ சிவாய!” என்று சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தான். மரியாதையோடு, ”சுவாமி! இந்த உலகம் சாரமற்றது. வாலிபமோ மலையருவியின் வேகத்துக்கொப்பானது. வாழ்க்கையோ புல்லில் பிடித்த நெருப்புக்குச் சமமானது, சுகபோகங்களோ மேகத்தின் நிழலுக்கு ஒப்பானவை, புத்திரன், மித்திரன், வேலையாள், மனைவி முதலியோரின் பாசமோ கனவு போன்றது. இவை யாவும் எனக்கு நன்றாகத் தெரியும். தங்களிடம் வந்திருக்கிறேன். சம்சார சாகரத்தைக் கடக்க நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.

 

இந்தச் சொற்களைக் கேட்டதும், தேவசர்மா ஆதரவுடன், ”குழந்தாய்? இவ்வளவு சிறிய வயதிலேயே இப்படி விரக்தியடையந்த நீதான் பாக்கியசாலி. ஒரு பழமொழி கூறுவதுபோல்:

 

இள வயதில் யோகியாகிறவன் தான் உண்மையான யோகி. ஐம்புலன்களும் நலிந்துபோன பின் எவனுக்குத்தான் புலனடக்கம் சாத்தியமில்லை? நல்லவர்களிடம் முதலில் மனமும் பிறகு உடலும் முதுமையடைகின்றன. கெட்டவர்களிடம் உடல் முதுமையடைகிறதே யொழிய, மனம் முதுமை அடைவதேயில்லை.

 

சம்சார சாகரத்தைக் கடக்கும் உபாயம் கேட்டாய். சொல்கிறேன் கேள்?

 

”சூத்திரன், அந்நியன், சண்டாளன், ஜடைதரித்தவன் என்றபடி யாராயிருந்தாலும் சரி, சிவ மந்திரங்களால் உபதேசம் பெற்று விட்டால் அவன் விபூதி தரித்த பிராம்மணனாகிறான்.

 

ஆறு எழுத்து மந்திரத்தைச் சொல்லி, கூடவே ஒரு பூவை லிங்கத்தின் முடியில் வைக்கிறவர்களுக்கு மறுபிறப்பு இல்லை.”

 

என்றான் தேவர்மா.

 

இதைச் செவியுற்ற ஆஷாடபூதி அவன் பாதங்களைப் பிடித்துக்கொண்டு மரியாதைமிக்க சூரலில், ”சுவாமி! எனக்கு ஒரு விரதம் அருளிச் செய்து அனுக்கிரகியுங்கள்” என்று வேண்டினான்.

 

”அப்படியே செய்கிறேன். இரவில் நீ மடாலயத்தில் நுழையக் கூடாது. ஏனெனில் ஒன்று சேராமலிருக்கும்படி சந்நியாசிகளுக்கும் உனக்கும் எனக்கும், சொல்லப்பட்டிருக்கிறது.

 

துர்ப்போதனையால் அரசன் கெடுகிறான்; சகவாசத்தால் சந்நியாசி கெடுகிறான்; செல்லம் கொடுப்பதால் குழந்தை கெடுகிறது; கல்வி கற்காமையால் பிராம்மணன் கெடுகிறான்; கெட்டபுத்திரனால் குலம் கெடுகிறது; முட்டாளின் பேச்சால் குணம் கெடுகிறது; மரியாதைக் குறைவால் சிநேகம் கெடுகிறது; பிரிவால் பாசம் கெடுகிறது; மதுவினால் ஸ்திரீ கெடுகிறான்; அசிரத்தையால் வயல் கெடுகிறது; துன்மார்க்கத்தனத்தால் தனம் கெடுகிறது; ஊதாரித் தனத்தாலும் அசிரத்தையாலும் பொக்கிஷம் கெடுகின்றது.

 

ஆகையால் நீ விரதம் எடுத்துக்கொண்டு மடத்தின் வாயிற்புறத்திலுள்ள புல் குடிசையில் படுக்க வேண்டும்,” என்று சந்நியாசி கூறினான்.

 

”சுவாமி! உங்கள் கட்டளைப்படியே செய்கிறேன். மறுமையில் பலன் கிடைக்கும்” என்றான் அவன். படுக்கைக்குச் செல்லும் நேரத்தில் தேவசர்மா அவனுக்கு உபதேசம் செய்து தனது சிஷ்யனாக்கிக் கொண்டான். ஆஷாடபூதி குருவுக்குக் கால் பிடித்துவிட்டான்.  காகிதம் முதலியவற்றைக் கொண்டு வந்து கொடுத்தான், இன்னும் பல உபசாரங்கள் செய்து சந்தோஷமுண்டாக்கினான். ஆனால் என்னதான் எவ்வளவுதான் செய்தபோதிலும் சந்நியாசி மட்டும் பணப்பையை அக்குளிலிருந்து எடுக்கவேயில்லை.

 

இப்படியே காலம் சென்றது. கடைசியில், ”அட கஷ்டகாலமே! இவனுக்கு என்மேல் நம்பிக்கையே வரமாட்டேன் என்கிறதே! பகலிலேயே இவனைக் கொன்றாலென்ன? விஷம் தந்தாலென்ன? பசுவைச் சாகடிப்பது போல் சாகடித்தால் என்ன?” என்றெல்லாம் சிஷ்யன் சிந்தித்தான்.

 

இப்படி யோசனையிலாழ்ந்திருக்கும் பொழுது, தேவசர்மாவின் இன்னொரு சிஷ்யனின் புத்திரனொருவன் குருவை அழைத்துச்செல்ல கிராமத்திலிருந்து வந்து சேர்ந்தான். ”சுவாமி! உபநயனச் சடங்குகளுக்காக என் வீட்டுக்குத் தாங்கள் வந்தருள வேண்டும்” என்றான்.

 

அதற்கிணங்கிய தேவசர்மா உடனே ஆஷாடபூதியுடன் பயணம் புறப்பட்டான். போகிற வழியில் ஒரு நதி வந்தது. அதைப்பார்த்ததும் அவன் தன் அக்குளிலிருந்த பணப்பையை எடுத்து ஒரு கந்தல் துணியில் மறைத்து வைத்து, தெய்வார்ச்சனை செய்துவிட்டு ஆஷாடபூதியிடம் வந்தான். ”சிஷ்யனே! நான் மலஜலம் கழித்துவிட்டு வரும் வரை இந்தக் கந்தையையும் இதர சாமான்களையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்” என்று கூறி அவற்றை அவனிடம் ஒப்படைத்துச் சென்றான். கண்ணிலிருந்து அவன் மறைந்தானே இல்லையோ ஆஷாடபூதி பணப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.

Series Navigationமுன்னணியின் பின்னணிகள் – 3 சாமர்செட் மாம்அசாரேயின் துவக்கமும் – கொள்ளையர்களின் பதட்டமும்.
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *