பல்லுயிரியம் (Bio-Diversity) : திரு.ச.முகமது அலி

This entry is part 1 of 54 in the series 4 செப்டம்பர் 2011

நம் நாட்டில் வாழும் பல்வேறு உயிரினங்களையும் தொடர்புபடுத்தி சொல்லப்படும் மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிகிறது இந்த நூல். பறவைகள், விலங்குகள், பூச்சிகள், இரு வாழ்விகள், ஊர்வன, மீன் இனங்கள் பற்றிய பல்வேறு செய்திகளையும் விரிவாக எடுத்துக் கூறுகிறது.

இயற்கை மீதும் உயிரினங்கள் மீதும் பற்று கொண்ட ஒவ்வொருவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம். வன உயிர்கள் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான முறையில் பதில் சொல்லியிருக்கிறார் திரு. முகமது அலி அவர்கள். மூட நம்பிக்கைகளை பற்றி எழுதும் போது ஆசிரியரின் கோபம் கொஞ்சம் கூடுதலாகவே தெரிகிறது.

கல்லுக்குள் தேரை இருக்கிறது, அன்னம் பாலையும் தண்ணீரையும் பிரிக்கும், மரங்கள் ஒன்றோடொன்று மோதி காட்டுத் தீ உருவாகும், பாம்பும் கீரியும் சண்டையிட்டால் கீரி ஒரு குறிப்பிட்ட வேரை தேடித் தின்னும், பூனை குறுக்கே செல்வது, உடும்பை கொண்டு மலை ஏராளம், ஆமை புகுந்தால் ஆகாது, பாம்பு பழிவாங்கும், ஆந்தை அலறுவது அபசகுனம் என நம் சமூகத்தில் மண்டிக்கிடக்கும் குருட்டுத் தனமான நம்பிக்கைகளை கடுமையாக எதிர்க்கிறார். பல்வேறு உயிரினங்கள் பற்றிய அரிய செய்திகளையும் சொல்லி இருப்பது கூடுதல் சிறப்பு.

இந்தியாவில் எப்படி வன வாழ் உயிரினங்கள் பல்வேறு பகுதிகளிலும் பரவி இருந்தது என்பதையும் தற்சமயம் எப்படி இவை தான் வாழ்வாதாரங்களை இழந்தது என்பதையும் தெளிவாக எழுதியிருக்கிறார். இவற்றின் முக்கியமாக ஆசிரியர் குறிப்பிடுவது சிவிங்கப் புலி (Cheeta). இன்று இந்தியாவில் முற்றிலும் இந்த இனம் அழிந்து விட்டது. பலரும் சிறுத்தை புலி தான் Cheeta என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டும் வேறு வேறு. அதே போல கான மயில் பறவையும் தன் வாழ்விடங்களை இழந்து விட்டது. தமிழ் நாட்டில் வாழந்த சிவிங்கப் புலியும், கான மயிலும் இன்று நம்முடன் இல்லை.

இன்றைய எழுத்தாளர்கள் உயிரினங்கள் பற்றிய புரிதலோடு எழுத வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். காட்டுயிர் என்பது நமக்கு தொடர்புடையது என்பதையும், நம்மால் அவை அழிவை சந்திக்கும் போது அது நம்மை நேரடியாக பாதிக்கும் என்பதையும் கவலையோடு பதிவு செய்திருக்கிறார்.

பல்லுயிர் பற்றிய புரிதல் நம் மக்களுக்கு இயல்பாக இருக்க முதல் படியாக மூட நம்பிக்கைகள் கலையப்படவேண்டும். அதற்கு இந்த புத்தகம் தன்னால் இயன்றவரை ஒரு முயற்சியை செய்திருக்கிறது. அதை எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நம் எல்லோர் கையிலும் இருக்கிறது.

Series Navigationஅப்பா…! அப்பப்பா…!!
author

பா.சதீஸ் முத்து கோபால்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *