பூரணச் சந்திர சாமியார்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 4 of 33 in the series 11 செப்டம்பர் 2011

சகுந்தலா மெய்யப்பன்

பூரணச் சந்திர சாமியார் என்றால் தெரியாதவர் இருக்க முடியாது! தலை ‘வழவழ’ வென்று பூரண வழுக்கை! சடா முடியோடு துறவறத்தை ஆரம்பித்தவர் தாம் இப்படியாகி விட்டார்! கன்னியாகுமரி முதல் பத்திரிநாத் வரை அவர் ஏறாத கோயிலில்லை! பார்க்காத மதாச்சாரியார்களில்லை! செய்யாத் தத்துவ விசாரணையில்லை! எதற்காக? சொர்க்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக!

‘சொர்க்கம், சொர்க்கம்’ என்று எல்லோரும் சொல்லுகிறார்களே, அது எப்படி இருக்கும்? எங்கே இருக்கிறது? அதற்குப் போகும் வழி தான் என்ன? யாராவது போய்விட்டு வந்தவர்கள் இருக்கிறார்களா?

பல இடங்களில் ஜனங்கள் பேசிக் கொள்வதைப் பற்றிச் சாமியார் கேள்விப்பட்டிருக்கிறார்.
சொர்க்கத்தில் சொர்ணமயமான மாளிகை இருக்குமாம்! வண்ண வண்ண ஒளியலங்காரங்கள் கண்ணைப் பறிக்குமாம்! வாசனைத் திரவியங்களின் சுகந்தம் எந்நேரமும் நிறைந்திருக்குமாம்! வைர வைடூரியங்கள் ஜொலிக்கும் அம்சதூளிகா மஞ்சம் இருக்குமாம்! ரதி, ரம்பை போன்ற தேவகன்னியர் அதை இன்பமாக அசைத்துக் கொண்டே இருப்பார்களாம்! பன்னீர் தெளித்திடப் பாவையர் இருப்பராம்! நன்னீராட்டிட நாரியர் வருவராம்! கானம் பொழிந்திடக் குவிலியர் ஒரு புறம்! களி நடம் புரிந்திட மயிலியர் மறுபுறம்! கால் பிடித்திடக் காரிகையர் உண்டாம்! கனிச்சாறு பிழிந்து கற்கண்டைக் கலந்து குங்குமப் பூவினைக் கணக்குடன் சேர்த்து, கொஞ்சிக் கொடுத்திடக் கன்னியர் உண்டாம்! வரையாது வழங்கிடும் காமதேனு உண்டாம்! வேண்டியது கொடுத்திடும் தேவதாரு உண்டாம்!

அடடா! சொர்க்கமென்பது இப்படி இருந்தால் அங்கே இருப்பதற்கு எவ்வளவு சுகமாக இருக்கும்! ஒரு கணம் இந்தக் கற்பனைச் சுகத்தில் மிதக்க சாமியார் மறுகணம் விழித்துக் கொள்வார்!

சே! இந்தச் சுகங்களைச் சொர்க்கத்தில் அனுபவிக்கவா இந்த ஜன்மத்தில் துறவு பூண்டிருக்கிறார்? இல்லவே இல்லை! நிச்சயம் இல்லை! இந்தச் சுகங்கள் தாம் மண்ணுலகிலேயே இருக்கின்றனவே! இவற்றை நித்த நித்தம் அனுபவிக்கும் எத்தனையோ செல்வந்தர்கள் நம்மிடையில் இருக்கிறார்களே! இது தான் சொர்க்கமென்றால் அந்தச் செல்வந்தர்கள் சொர்க்கத்திற்குப் போய் என்னத்தை அனுபவிக்கப் போகிறார்கள்?
இத்தனை விசாரங்களோடும் ஊர் ஊராய்ச் சுற்றிக் கொண்டிருந்த பூரணச் சந்திர சாமியார் கடைசியில் விதேக நாட்டின் தலைநகரான மிதிலாபுரிக்கு வந்து சேர்ந்தார்.
அங்கே பெரிய மாளிகைக்கு முன் சிறு கூட்டமொன்று காத்துக் கொண்டிருந்தது. அழகான பெண் ஒருத்தி உப்பரிகையிலிருந்து இறங்கி வந்து, கூடியிருந்தவர்களுக்குத் தான தருமங்கள் செய்தாள். பெற்றுக் கொண்டவர்கள் வாயார வாழ்த்திவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.
விசாரித்துப் பார்த்தபோது அந்தப் பெண் கனகவல்லி என்ற பெயரினள் என்றும் ஊரறிந்த நாட்டியக்காரி என்றும் சாமியாருக்குத் தெரிய வந்தது. அவர் தொலை தூரம் நடந்து வந்திருந்ததால் பசி வயிற்றைக் கிள்ளிவே பிச்சைக்காகக் கனகவல்லியின் முன்பு போய் நின்றார்.

அப்போது தூரத்தில் கொட்டு முழக்க சத்தத்தோடு பெருங்கூட்டம் வந்து கொண்டிருந்தது. கனகவல்லி தன் வேலைக்காரியை அழைத்து, “அது என்ன?” என்று கேட்டாள். நகரின் அங்காடித் தெருவில் ஒரு வணிகர் இறந்துவிட்டாரென்றும், அது தொடர்பான சவ அடக்க ஊர்வலம் என்றும் வேலைக்காரி பதில் சொன்னாள்.

இதைக் கேட்ட கனகவல்லி, “அப்படியா? உடனே நீ போய் அந்த வணிகர் சொர்க்கத்திற்குப் போகிறாரா அல்லது நரகத்திற்குப் போகிறாரா என்று தெரிந்து கொண்டு வா” என்று சொல்லி வேலைக்காரியை அனுப்பி வைத்தாள்.

சாமியாருக்கு ரோமாஞ்சனம் ஏற்பட்டது! இதற்காக அவர் எங்கெங்கே அலைந்து விட்டு வந்திருக்கிறார்! இந்தப் பெண் சர்வ சாதாரணமாகச் சொல்லி அனுப்புகிறாளே! பிச்சைக்காக வந்த இடத்தில் பிரச்சினை தீர்ந்துவிடும் போலிருக்கிறதே! ‘சரி பார்ப்போம்’ என்று சாமியாரும் பொறுமையாக நின்றார்.

சிறிது நேரத்தில் திரும்பி வந்த வேலைக்காரி, “அந்த வணிகர் சொர்க்கத்திற்குத்தான் போகிறார்!” என்று திட்டவட்டமான பதிலைச் சொன்னாள்.

“தாயே!” என்றவாறு சாமியார் திடீரென்று சாஷ்டாங்கமாகக் கனகவல்லியின் கால்களில் விழுந்தார். திடுக்கிட்டுப் போன கனகவல்லி, தான் ஒரு சாதாரண நாட்டியக்காரி என்றும், அடிகளார் அப்படிச் செய்வது அபசாரம் என்றும் சொல்லி ஒதுங்கி நின்றாள்.
“அப்படியில்லை தாயே! சொர்க்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள நான் சுற்றாத இடமில்லை. ஆனால் நீ அதைத் தெரிந்து வைத்திருக்கிறாய். வேலைக்காரி வந்து அந்த வணிகர் சொர்க்கத்திற்குத்தான் போகிறார் என்று அவ்வளவு திட்டவட்டமாகச் சொன்னாளே, அது எப்படி?” என்று விநயமாகக் கேட்டார் சாமியார்.

“அதைக் கேட்டீர்களா, சாமி!” என்று தொடங்கிய கனகவல்லி, “ஊரிலே உள்ள நாலு பேர் ‘மகராசன் போய்விட்டானே’ என்று வருந்திப் பேசினால் போவது சொர்க்கம் என்று அர்த்தம்! ‘சனியன் தொலைந்தது’ என்று வெறுப்பைக் கக்கினால் போவது நரகம் என்று அர்த்தம்!” என்று விளக்கம் தந்தாள்.

கனகவல்லியின் பதிலைக் கேட்ட சாமியாருக்கு சொர்க்கத்தைப் பற்றி எல்லாம் புரிந்துவிட்டது! அது வேறு எங்கேயும் இல்லை! இதே உலகத்தில் மக்கள் மத்தியில் தான் இருக்கிறது!

Series Navigationபத்ம பூஷன் கணபதி ஸ்தபதி( 1927-2011)ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 7
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *