சிங்கமும் முயலும்
ஒரு காட்டில் சிங்கம் ஒன்றிருந்தது. அதன் பெயர் மந்தமதி. அதற்குக் கர்வம் தலைக்கேறி திமிர் பிடித்துத் திரிந்தது. இடைவிடாமல் மிருகங்களைக் கொன்று கொண்டிருந்தது. எந்த மிருகத்தைக் கண்டாலும் அதற்குப் பிடிக்க வில்லை. இந்த நிலைமையில் மான், பன்றி, எருமை, எருது, முயல் முதலிய வன மிருகங்களெல்லாம் ஒன்று கூடின. எல்லாம் சேர்ந்து முகவாட்டத்துடன் சிங்கத்திடம் போயின. கால் முட்டுக்கள் பூமியைத் தொடும்படி மண்டியிட்டுத் தலை வணங்கின. மிகவும் தாழ்மையுடன், ”அரசே! இப்படி நீங்கள் அர்த்த மில்லாமல், ஈவிரக்கமில்லாமல் கொன்று குவிப்பது மேலுலகத்துக்கு விரோதமாகும். இப்படிக் கொல்வதை நிறுத்துங்கள். அந்தச் செய்கையால் உங்களுக்கு மறுவுலகில் சுகம் கிடைக்காது.
மூடர்கள் ஒரு ஜன்மத்தில் செய்கிற பாபச் செயல்களால் உண்டாகிற துக்கம், அடுத்த ஆயிரம் ஜன்மங்களுக்கு அவர்களை வாட்டி வதைக்கும் என்பதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோமே! மேலும்,
பழியும், அபகீர்த்தியும், நரகமும் கிட்டுகிற வழியில் புத்திசாலிகள் எப்படி நடப்பார்கள்?
இந்தச் சரீரம் அசுத்தத்தின் இருப்பிடம்; இது நன்றி கெட்டது, அழியக்கூடியது. இதன் பொருட்டு மூடர்கள் தான் பாவம் செய்கின்றனர்.
இவற்றையெல்லாம் உணர்ந்து எங்கள் குலத்தை நாசம் செய்யாமல் இருங்கள். அப்படிச் செய்யாமலிருந்தால், நாங்களே தினந்தோறும் ஒவ்வொரு மிருகமாக நீங்கள் சாப்பிடுவதற்கென்று உங்கள் இருப்பிடத்துக்கே அனுப்பி வைக்கிறோம். இந்த ஏற்பாட்டினால் உங்கள் தீனிக்கும் குறைவு உண்டாகாது. எங்கள் மிருக குலம் அனாவசியமாகக் குறைந்து போகாது. இந்த முறையில் ராஜதர்மத்தை நிறைவேற்றுங்கள். ஒரு பழமொழி கூறுகிறபடி,
அமிருதத்தைச் சொட்டுச் சொட்டாகப் பருகி அனுபவிப்பதுபோல், எந்த அரசன் தன் சக்திக்கேற்றபடி ராஜ்யத்தைக் கொஞ்சங் கொஞ்சமாக அனுபவிக்கிறானோ அவனே முழு சுகத்தையும் பெறுகிறான்.
பைத்தியம் பிடித்துப்போய் ஆடுகளைக் கொல்வதுபோல் மக்களைக் கொன்று குவிக்கிற அரசன் முதல் கொலையிலேதான் திருப்தி காண்கிறானே தவிர மற்றவற்றில் என்றைக்கும் திருப்தி காண்கிறதில்லை.
தன்னலம் பேண விரும்பும் அரசன் நாட்டை விபத்திலிருந்து காக்க வேண்டும். தோட்டக்காரன் செடிகளுக்குத் தண்ணீர் விட்டு வளர்ப்பது போல் கொடை வழங்குவது, கௌரவிப்பது போன்ற காரியங்களைச் செய்து அரசன் நாட்டை வளமாக்க வேண்டும்.
நேரம் கிரமம் பார்த்துப் பசுவைக் கறந்தால் அதற்குத் தீங்கு உண்டாகாது. பசு காப்பாற்றப்படுகிறது. முறையின்றி கண்ட நேரத்திலெல்லாம் கறந்தால் பசுவுக்கு ஆபத்தாகும். அதைப்போலவே அரசனும் மக்களைக் காக்கவேண்டும். கொடிக்கு நீர் வார்த்தால்தானே பின்னால் அதன் பூவையும் பழத்தையும் பறிக்க முடியும்?
அரசன் என்கிற விளக்கு, மக்கள் தரும் வரிப்பணம் என்கிற எண்ணெயைக் கொண்டுதான் சுடர்விட்டு எரிகிறது. தன்னியல்பாய் அரசன் சோபிப்பதை யாரும் கண்டதில்லை. நுண்ணிய விதையின் முளையைச் சிரமப்பட்டுப் பாதுகாத்தால் உரிய காலத்தில் அது பயன் தருகின்றது. அதைப்போலவே நன்றாகப் பாதுகாக்கப்பட்ட மக்களும் பயன் தருவார்கள்.
பொன், தானியம், ரத்தினம், விதவிதமான பானங்கள் எல்லாம் மக்களிடமிருந்தல்லவா அரசனுக்குக் கிடைக்கிறது? நாட்டுக்கு நன்மை செய்யும் மன்னர்கள் செழித்து வளர்கின்றனர்; நாடு நாசமடைந்தால் மன்னனும் நலிகிறான்.
என்றெல்லாம் விளக்கி மந்தமதியிடம் வன விலங்குகள் முறையிட்டுக் கொண்டன.
”நீங்கள் சொல்வது சரிதான். அப்படியே செய்யுங்கள். ஆனால் என் இருப்பிடத்திற்குத் தினந்தோறும் ஒவ்வொரு மிருகத்தை அனுப்பத் தவறினால் உங்கள் எல்லோரையும் கொன்று தின்றுவிடுவேன்” என்று பதிலளித்தது மந்தமதி.
”அப்படியே ஆகட்டும்,” என்று அவை சத்தியம் செய்து கொடுத்து விட்டுச் சஞ்சலமின்றிக் காட்டில் நிர்ப்பயமாய் திரியலாயின. அந்தந்த மிருக ஜாதிக்கு முறையும், வரிசைக்கிரமமும் ஏற்படுத்தித் தினந்தோறும் ஒரு மிருகத்தை அனுப்பி வைத்தன. ஒவ்வொரு ஜாதியிலும் முறைப்படி முதலில் கிழடு தட்டியது. மனோ விரக்தியடைந்தது, துக்கத்தால் வருந்துவது, மகனோ மனைவியோ மரணமடையலாம் என்று பயப்படுவது போன்ற மிருகங்கள் ஒவ்வொன்றாகத் தினந்தோறும் பிற்பகலில் போயின.
பிறகு ஒருநாள் ஜாதி வரிசைப்படி முயலின் முறை வந்தது. எல்லா மிருகங்களும் கூடி முயலைப் போகச் சொல்லின.
”அந்தக் கெட்ட சிங்கத்தைக் கொல்வது எப்படி?” என்று முயல் யோசிக்கத் தொடங்கியது. ”என்ன இருந்தாலும்,
புத்திசாலிகளுக்கு எதுதான் முடியாது? முகஸ்துதியால் எதைத்தான் சாதிக்க முடியாது? முயற்சியுடையவர்களுக்கு எதுதான் கிட்டாது?
எனவே சிங்கத்தை நான் கொல்ல முடியும்” என்று தீர்மானித்தது.
முயல் மெல்ல மெல்ல நடந்து சென்று. சிங்கத்தின் சாப்பாட்டு நேரம் கழிந்துவிட்டது. சிங்கத்தைக் கொல்வதற்கு உபாயம் என்ன என்று சிந்தித்துத் கொண்டே கவலையோடு வழிநடந்து, சாயங்காலத்தில் முயல் சிங்கத்தை நெருங்கியது. சாப்பாட்டு நேரம் தவறி பசியால் தொண்டை வறண்டுபோய், சிங்கம் கோபத்துடன் விரல்களை நக்கிக் கொண்டிருந்தது. ”ஹ¥ம், காலையில் எல்லா மிருகங்களையும் கொன்று விடுகிறேன்” என்று தனக்குள் எண்ணிக் கொண்டிருக்கையில், முயல் மெதுவாக நெருங்கி வந்து வணங்கி நின்றது. நேரம்கழித்து வந்ததோடல்லாமல், உருவத்தில் முயல் சிறியதாயும் இருக்கக் கண்டு சிங்கம் உள்ளங் கொதித்துத் திட்டத் தொடங்கியது. ”நீசனே! நீ ஒரு பொடிப் பயல். அதோடு நேரம் கழித்து வேறு வந்திருக்கிறாய். இந்தக் குற்றத்துக்காக உன்னை இன்றே கொன்று நாளைக் காலையில் எல்லா மிருகங்களையும் துவம்சம் செய்கிறேன், பார்!” என்று உறுமியது.
முயல் வினயமாக வணங்கிவிட்டு, ”அரசே! குற்றம் என்னுடையதல்ல; மற்ற மிருகங்களுடையதுமல்ல. நிஜமான காரணத்தைக் கேளுங்கள்” என்று சொல்லியது. ”என் பற்களுக்கிடையே நீ செல்வதற்குள் சொல்லிவிடு. சீக்கிரம்!” என்றது சிங்கம்.
”அரசே, இன்று எல்லா மிருகங்களும் கூடி ஜாதி வரிசைப்படி பார்த்த போது முயல் இனத்தின் முறை வந்தது. நான் சிறியவனாக இருப்பதால் இதர ஐந்து முயல்களோடு நானும் அனுப்பப்பட்டேன். நடுவழியில் பூமியில் ஒரு பெரிய குழியிலிருந்து ஒரு சிங்கம் வெளிவந்து எங்களைப் பார்த்துவிட்டு, ”எங்கே போகிறீர்கள்? உங்களைக் கொல்லப் போகிறேன், இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள்ளுங்கள்!” என்றது.
”எங்கள் எஜமானர் மந்தமதி என்கிற சிங்கத்திற்கு உணவாக ஒப்பந்தப் படி போய்க்கொண்டிருக்கிறோம்’ என்றேன் நான்.
‘அப்படியா சங்கதி? இது என்னுடைய காடு, எல்லா மிருகங்களும் ஒப்பந்தப்படி என்னோடுதான் விவகாரம் வைத்துக்கொள்ள வேண்டும். தெரிகிறதா? அந்த மந்தமதி ஒரு திருடன். அவனைச் சீக்கிரம் அழைத்து வா. இருவரும் சண்டைப் போட்டுப் பார்க்கிறோம். யார் தனது பராக்கிரமத்தால் அரசனாகிறானோ அவனே எல்லா மிருகங்களையும் சாப்பிடட்டும்’ என்றது. அதன் கட்டளைப்படியே தங்களிடம் வந்திருக்கிறேன். நேரம் தவறி வந்ததற்குக் காரணம் இதுதான். இனி உங்கள் இஷ்டம்” என்றது முயல்.
”நண்பனே! வா, சீக்கிரமே அந்தத் திருட்டுச் சிங்கத்தைக் காட்டு! மிருகங்களின் மேல் வந்த கோபத்தை அதன்மேல் காட்டித் தீர்த்துக் கொள்கிறேன். ஒரு பழமொழி கூறுவதுபோல்,
நிலம், நண்பன், பொன், இம்மூன்றும் சண்டையின் பலனாகக் கிடைக்கின்றன. இவற்றில் ஒன்றுகூடக் கிடைக்காது என்று தெரிந்தால் சண்டைக்குப் போகாதே!
சண்டை செய்வதில் பலனில்லை வெற்றியும் நிச்சயமில்லை என்று ஏற்பட்டால் புத்திசாலி சண்டை போட மாட்டான்; சகித்துக் கொண்டு போய்விடுவான்”
என்றது மந்தமதி.
”அரசே! அது உண்மை. தம் நாட்டுக்கு அவமானம் ஏற்படும் பொழுது க்ஷத்திரியர்கள் சண்டையிடுகின்றனர். அது கோட்டையில் ஒளிந்து கொண்டிருக்கிறது. கோட்டையிலிருந்து வெளி வந்து எங்களை மடக்கிற்று என்பது உங்களுக்குத்தான் தெரியுமே! அப்படிக் கோட்டைக்குள் இருக்கிற எதிரியை வெல்வது ரொம்பச் சிரமம். ஒரு பழமொழியுண்டு:
ஒரு கோட்டையால் சாதிக்க முடிகிற காரியத்தை ஆயிரம் யானைகளாலும், லட்சம் குதிரைகளாலும் அரசன் சாதிக்க முடியாது.
கோட்டைக்குள் இருக்கும் ஒரு வில்லாளி நூறு பேரை எதிர்க்கலாம். அதனால்தான் நீதி சாஸ்திரம் தெரிந்தவர்கள் கோட்டையைப் புகழ்ந்து போற்றுகிறார்கள்.
முன்காலத்தில் குருவின் கட்டளைப்படி, ஹிரண்யகசிபுவுக்குப் பயந்து, விஸ்வகர்மாவின் திறமையைக் கொண்டு இந்திரன் ஒரு கோட்டை கட்டுவித்தான். பிறகு இந்திரனே ஒரு வரம் அளித்தான்: ‘எந்த அரசன் கோட்டை கட்டிக்கொள்கிறானோ அவனே ஜெயிப்பான்’ என்று. அதனால் தான் பூமியில் பல கோட்டைகள் உண்டாயின.”
என்றது முயல்.
”நண்பனே, அது கோட்டையில் இருந்தால்தானென்ன? எனக்குக் காட்டு, அதை நான் கொன்று விடுகிறேன். ஒரு பழமொழி கூறுவதுபோல்,
பகைவனையும் நோயையும் தலை தூக்கியவுடன் பூரணமாக ஒழித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அவை வளர்ந்து பலம் பெற்று நம்மைக் கொன்றுவிடுகின்றன.
தன் சக்தியை உணர்ந்து தன் மதிப்பும் உற்சாகமும் கொண்டிருப் பவன்தான் பரசுராமரைப் போல் தன்னந்தனியே நின்று சத்துருக்களைக் கொல்ல முடியும்”
என்றது சிங்கம்.
”உண்மைதான், அரசே! ஆனால் அது பலசாலி என்பதை நான் பார்த்தேன். அதனுடைய சாமர்த்தியத்தை அறியாமல் எஜமானர் சண்டைக்குப் போவது அவ்வளவு சரியல்ல. ஒரு பழமொழி கூறுவதுபோல்,
தன் பலத்தையும் எதிரியின் பலத்தையும் அளந்தறியாமல், வெறும் உற்சாகத்தோடு சண்டைக்குப் போகிறவன் நெருப்பில் விழுகிற வீட்டில் பூச்சிபோல் நாசமடைகிறான்.
பலம் வாய்ந்த சத்துருவைக் கொல்ல பலமில்லாதவன் சண்டைக்குப் போனால், தந்தமுடைந்த யானைபோல், கர்வபங்கமடைந்து திரும்புகிறான்
என்றது முயல்.
”அதைப்பற்றி உனக்கென்ன கவலை? அது கோட்டையில்தான் இருக்கட்டுமே! முதலில் அதைக் காட்டு நீ!” என்றது சிங்கம்.
”சரி, அப்படியே ஆகட்டும். என்னோடு வாருங்கள்” என்று முயல் பதிலளித்து, முன்னேபோயிற்று. இரண்டும் ஏதோ ஒரு கிணற்றருகில் வந்து சேர்ந்தன. சிங்கத்திடம் திரும்பி, ”அரசே, உங்கள் பராக்கிரமத்தை யார்தான் எதிர்க்க முடியும்? உங்களைத் தூரத்தில் கண்டவுடன் அந்தத் திருடன் கோட்டைக்குள் போய் ஒளிந்து கொண்டு விட்டது. வாருங்கள், அதைக் காட்டுகிறேன்,” என்றது முயல்.
”நண்பனே, சீக்கிரமாகக் காட்டு!” என்றது சிங்கம்.
முயல் கிணற்றைக் காட்டிற்று. மந்தமதி ஒரு படுமோசமான முட்டாள். கிணற்றுத் தண்ணீரில் தன் நிழலைக் கண்டதும் ஏதோ வேறு ஒரு சிங்கம் கிணற்றுக்குள் இருக்கிறதாக நினைத்துக்கொண்டு அது கர்ஜித்தது. அதன் எதிரொலி இரண்டு மடங்கு பலத்துடன் கிணற்றிலிருந்து கிளம்பியது, மந்தமதி அந்தச் சத்தத்தைக் கேட்டவுடன் எதிரி மிகுந்த பலசாலி என்று தீர்மானித்து கிணற்றுக்குள்ளே பாய்ந்தது. அவ்வளவுதான், சிங்கத்தின் உயிர் போயிற்று.
முயலுக்கு ஒரே சந்தோஷம். எல்லா மிருங்களும் ஆனந்தமடைந்தன. முயலைப் புகழ்ந்து வெகுவாகப் பாராட்டின. பிறகு முயல் சுகமாகக் காட்டில் இருந்து வந்தது.
அதனால்தான் ‘அறிவே பலம்….’ என்றெல்லாம் சொல்கிறேன்” என்றது தமனகன்.
”நீ சொல்வது, காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது என்கிற கதையாக இருக்கிறது! முயல் ஜெயித்திருக்கலாம். என்றபோதிலும் பலவீனன் பலசாலியை எதிர்ப்பது சரியல்ல” என்றது கரடகன்.
”பலவீனனோ பலசாலியோ, யாராயிருந்தாலென்ன? செயல்புரிவதில் நெஞ்சுத் துணிவு இருக்க வேண்டும். இந்தப் பழமொழியைக் கேட்டிருப்பாயே!
விடா முயற்சியுள்ளவனுக்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். கோழைகள் தான் ‘விதி, விதி’ என்று சொல்கிறார்கள். உன் பலத்தால் விதியை வென்று உன் ஆண்மையைக் காட்டு! முயற்சி செய்தும் பலன் கிடைக்கா விட்டால் அதனால் தோஷமெதுவுமில்லை.
இன்னொரு விஷயம். முயற்சி செய்பவர்களுக்குக் கடவுள் கூட உதவி செய்கிறார். இதைக் கேட்டதில்லையா?
விஷ்ணுவும், விஷ்ணு சக்கரமும், கருடனும், நெசவாளியின் சண்டையில் துணை நின்றனர்: செயல் துணிவுள்ளவர்களுக்குத் தேவர் களும் துணை செய்வார்கள்.
நன்றாகத் திட்டமிட்ட சூழ்ச்சியின் முடிவைப் பிரம்மாவாலும் அறிய முடியாது; விஷ்ணு ரூபத்தில் ஒரு நெசவாளி சென்று அரசகுமாரியை அணைத்தான்”
என்றது தமனகன்.
”அதெப்படி? நன்றாகத் திட்டமிட்டு, துணிவோடு சூழ்ச்சியிலிறங்கினால் காரியசித்தி உண்டாகுமா?” என்று கரடகன் கேட்க, தமனகன் கூறத் தொடங்கியது.
- ரமணி கவிதைகள்
- பேசும் படங்கள் ::: நதியோர நகரம், நதி அழிக்கும் கொடூரம்…
- மாயங்களின் யதார்த்த வெளி
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 9
- பந்தல்
- Nandu 1 – அல்லிக் கோட்டை
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! இரட்டைப் பரிதிகளைச் சுற்றும் வியப்பான ஓர் அண்டக் கோள் கண்டுபிடிப்பு. (கட்டுரை : 75)
- எனது இலக்கிய அனுபவங்கள் – 17 எழுத்தாளர் சந்திப்பு – 4. (மௌனி)
- இரவை வென்ற விழிகள்
- இந்திரனும் அருந்ததிராயும்
- பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்
- பாரதிதாசனும் பட்டுக்கோட்டையாரும்
- மின்சாரக்கோளாறு
- சன்மானம்
- கனவுக்குள் யாரோ..?
- அந்தரங்கம் – இந்தி மொழிச் சிறுகதை
- கடைசி இரவு
- இறப்பு முதல், இறப்பு வரை
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 12
- கடவுளிடம் டிஷ்யூம்-டிஷ்யூம்
- பசி வகை!
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (மெக்காவை நோக்கி) (கவிதை -49)
- எடை மேடை
- ஒரு விதையின் சாபம்
- சந்திப்பு
- தமிழர் கலாச்சார மீட்டெடுக்கும் முயற்சிக்கான விண்ணப்பம்
- எஸ்டிமேட்
- (77) – நினைவுகளின் சுவட்டில்
- மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்
- புராதனத் தொடர்ச்சி
- சொன்னேனே!
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -6)
- மரண தண்டனை தடைசெய்யபட வேண்டுமா? கூடாதா? மாணவர்கள் என்ன சொல்கிறார்கள்
- தற்காலப் பார்வையில் திருக்குறள்
- முன்னணியின் பின்னணிகள் – 6 சாமர்செட் மாம்
- பஞ்சதந்திரம் தொடர் 10 சிங்கமும் முயலும்
- நவீனத்துவம்
- இலக்கியவாதிகளின் அடிமைகள்
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 47
- ஆஸ்திரேலியாவில் தமிழ்மொழி கற்பித்தல் – நூல் அறிமுகம் – சு.குணேஸ்வரன்
- இஸ்லாமா அல்லது மதசார்பற்ற மனிதநேயமா?