(77) – நினைவுகளின் சுவட்டில்

This entry is part 28 of 41 in the series 25 செப்டம்பர் 2011

பட்நாயக்கிற்கு பார்ட்டி கொடுக்க வேண்டுமென்று சொன்னான் மிருணால். “இவ்வளவு நாள் நம்மோடு பழகியிருக்கிறான். இப்போது நம்மை விட்டுப் பிரிகிறான். இனி நாம் எப்போதாவது பார்ப்போம். தினமும் அவனைப் பார்த்துப் பேசி பழகுவது என்பது இனி இல்லை. அவனுக்கு விருந்து கொடுத்து அனுப்ப வேண்டாமா?” என்று கேட்டான். இது எனக்கு புது விஷயம். இது வரை நான் யாரும் யாருக்கும் பிரிவு உபசாரம் செய்து விருந்து கொடுத்து கேள்விப்பட்டதும் இல்லை. கலந்து கொண்டதும் இல்லை. எல்லாம் புதுசாக இருந்தது. “ஆமாம் வருத்தமாகத்தான் இருக்கிறது. அதுக்கு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். “நாளைக்கு பட்நாயக் வீட்டிற்கு வந்து விடு. ராத்திரி ஏழுமணிக்குள் நான் எல்லாம் தயார் செய்கிறேன்,”. என்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் மிருணால் சொல்கிறான். எல்லாம் புது விஷயமாக இருக்கிறது. ஏழு மணிக்குப் போனால் தெரிந்து போகிறது என்று நினைத்துக்கொண்டேன். “சரி” என்றேன். தூரத்தில் உட்கார்ந்திருந்த பட்நாயக் புன்னகை தவழ எங்கள் பக்கமே பார்த்திருந்தான். இது ரொம்ப அன்னியோன்னிய விஷயமாக இருக்கிறது. வேறு யாரையும் மிருணால் அழைக்கவும் இல்லை.

அன்று அங்கு எனக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன. பட்நாயக்கின் வீட்டிற்குச் சென்றேன். மிருணால் வரவில்லை. வந்து விடுவான் என்று பட்நாயக் சொன்னான். பட்நாயக் ஒரியாக் காரன். சிப்ளிமாவோ பர்கரோ அல்லது வேறு எந்த இடமுமோ அவனுக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை. தனிக்கட்டை வேறு. அவன் பெற்றோர்களைப் பற்றி ஏதும் சொல்லியிருக்கிறானா, அவர்கள் எங்கே, என்பதெல்லாம் எனக்கு இப்போது நினைவுக்கு வர மறுக்கிறது. பேசியிருந்தால், மண்டையில், எங்காவது மங்கலாகவாவது ஒரு மூலையில் ஒண்டியிருந்திருக்கும். அது பற்றி பேசியிருக்கவில்லை. ஏன்? அது இப்போது விய்பபாக இருக்கிறது. அவனனைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். “நான் வந்து போய்க்கொண்டிருப்பேன் நாதன்ஜி கவலைப் படாதே” என்று எனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கும்போது மிருணாலும் வந்தான். கையில் ஒரு போத்தல். நியூஸ் பேப்பரில் மடிக்கப்பட்ட முன்று நான்கு பொட்டலங்கள். பொட்டலங்களை ஒவ்வொன்றாகப் பிரித்தான் மிருணால். .என்னென்னமோ மிக்ஸர், சிங்காடா வென்றெல்லாம் இருந்தது
அடுத்த இரண்டு பொட்டலஙக்ளில் வறுத்த மாமிசம். ஒன்றில் ஈரல் அதுவும் வறுத்தது. ”இதெல்லாம் இருக்கும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை,” என்றேன். மிருணால் திடீரென்று அதிர்ச்சியில் திகைத்தவன் . “ஏன் நீ சாப்பிட மாட்டாயா?” என்று கேட்டான். எங்கள் பக்கம் பிராமணர்கள் இதை யெல்லாம் கிட்டத்தில் இருக்க பார்க்கக் கூட மாட்டார்கள். ஆனால் எனக்கு அந்த வெறுப்பு இல்லை. ஊரை விட்டு வந்த பிறகு பக்கத்தில் இருப்பவர்கள் சாப்பிட பார்த்திருக்கிறேன். அதனால் ஒன்றுமில்லை” என்றேன். ”அப்படின்னா, சாப்பிடமாட்டாயா? நீ சும்மா பக்கத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருப்பாயா?” என்றான். ”இல்லை. அப்படி இல்லை. இங்கே வந்த பிறகு, பஞ்சாட்சரம் வீட்டிலே அங்கே இருக்கறவங்க கொஞ்சம் கொஞ்சமா பழக்கி விட்டுட்டாங்க. முதல்லே முட்டையிலேயிருந்து ஆரம்பிச்ச இப்போ பிரியாணி வரைக்கும் பழகியாச்சு.” என்றேன். “ பின்னே என்ன பிரசினை? என்றான். “பிரசினை என்று சொன்னேனா நான்.? நீ கேட்டதுக்கு பதில் சொன்னேன். அவ்வளவு தான். என்றேன்.

“இது தான் புதுசு” என்று அவன் வாங்கி வந்த பாட்டிலை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டே சொன்னேன். “செல்லஸ்வாமி வீட்டிலே சாப்பிட்டிருக்கேன்னு சொன்னியே? அப்புறம் என்ன புதுசு?” என்றான். “செல்லஸ்வாமி வீட்டிலே சாப்பிட்டது வெறும் பீர் தான்.அதிலே என்ன இருக்கு? அவர் ரொம்ப நல்ல தெலுங்கு பிராமணன். பீரோடே சரி. இதெல்லாம் தொடக்கூட மாட்டார். பஞ்சாட்சரம் வீட்டிலேயும் அவர்கள் வீட்டிலே மாமிசம் சாப்பிடுவாங்க. அவ்வளவு தான். இதெல்லாம் தொடமாட்டாங்க” என்று கையில் இருந்த பாட்டிலைப் பார்த்தேன். ஹேவர்ட்ஸ் விஸ்கி என்றிருந்தது. இதை இப்போதான் முதன் முதலாகப் பார்க்கிறேன். இது தான் இன்று புதுப் பழக்கமாக இருக்கும்.

“இது பட்நாயக்குக்கு கொடுக்கிற விருந்து. சந்தோஷமா போகணும் அவன். அது வேண்டாம், இது வேண்டாம்னு ஒண்ணும் சொல்லாதே. அப்புறம் உன்னை. என் வீட்டுக்குக் கூப்பிட்டுப் போறது ரொம்ப கஷ்டமாயிடும். ஒரு நாளக்கு கல்கத்தாவிலேயிருந்து ஹில்ஸா மாச் வரப் போறது. அன்னிக்கு உன்னை சாப்பிட அழைச்சிட்டு வரச்சொல்லி யிருக்காங்க அம்மா. நீ அங்கே வந்து தகராறு பண்ணாதே? என்றான்.

”நான் கேட்டுக்கொண்டிருந்தேன். பாட்டிலைத் திருகித் திறந்து எல்லோருக்கும் ஆளுக்கொரு களாஸில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு தண்ணீரைக் கலந்தான். “இதோடு சோடா தான் கலக்கணும். அவன் பாட்டிலைக் கொடுக்க மாட்டேங்கறான். சரிதான் போ. இன்னிக்கு தண்ணீரையே கலந்து சாப்பிடலாம் என்று வந்து விட்டேன். இந்தா சாப்பிடு” என்று க்ளாஸைக் கொடுத்தான். வழக்கமான ”சீயர்ஸ்” சொல்லி மூன்று பேரும் அவரவர் களாஸ்களை டங் டங் என்று நுனிகளைத் தட்டிக் கொண்டோம். இதெல்லாம் எனக்கு புதிதாக இருந்தது. அவர்கள் இருவரையும் பார்த்து நானும் கொஞ்சம் விஸ்கியை கொஞ்சம் போல ருசி பார்க்க ஒரு சிப். அவ்வளவு தான் ஒரே கசப்போ என்னவோ ருசித்துச் சாப்பிடும் விவகாரமாக இருக்கவில்லை. மூஞ்சியை சுளுக்கிக்கொண்டு” ”இதென்ன நல்லாவே இல்லையே, கசந்து தொலைக்கிறதே இதை எப்படி சாப்பிடறது? என்றேன். இரண்டு பேரும் என் மூஞ்சி கோணுவ்வதைப் பார்த்ததுமே ஆரம்பித்த புன்னகை நான் கேட்டதுமே பலத்த சிரிப்பாக வெடித்தது.. “ முதல்லே அப்படித்தான் இருக்கும். கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடு. ஒரேயடியாக முழுங்காதே. கொஞ்சம் உள்ளே போனா சரியாயிடும்.” என்றான் மிருணால். பட்நாயக் என்னப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தான். கேலி செய்கிறானா, இல்லை பாவம் இவனை இப்படி அவஸ்தைப் படுத்துகிறோமே என்று இரக்கப்படுகிறானா, தெரியவில்லை.

“ஹிராகுட்டில் என் வீட்டில் ஒரு லைன்ஸ்மான் இருந்தான். அவன் ஒரு க்ளாஸ்பூராவும் நிர்ப்பி கட கடவென்று ஒரே முழுக்கில் காலி செய்துவிட்டுத்தான் கம்பத்து மேல் ஏறுவான்” என்றேன். ” பழகிப் போனா நீயும் அப்படித்தான் பண்ணுவே. அடுத்த பார்ட்டி எப்போன்னு கேப்பே,” என்றான் பட்நாயக் சிரித்துக்கொண்டே..

அவர்கள் சொன்ன மாதிரி கொஞ்ச நேரத்தில் பழகித் தான் போயிற்று. லேசாக தலை மாத்திரம் சுற்றுவது போல இருந்தது. அவர்களோடு எல்லாவற்றிலும் கலந்து கொண்டது கொஞ்ச நேரத்தில் தெரிந்தது. “நீ தான் சாப்பிடுகிறாயே, அப்புறம் என்ன.? முதல் பழக்கம் கஷ்டமாக இருக்கும்.” என்றான் பட்நாயக். “ அதில்லை பட்நாயக். நான் தான் சொன்னேனே. பஞ்சாட்சரம் வீட்டில் கொடுப்பார்கள். சாப்பிட்டிருக்கிறேன். இதில் நான் ருசி கண்டுவிட்டேன் என்றும் இல்லை. தொடமாட்டேன் என்பதும் இல்லை. பழகி விட்டதால் வெறுப்பு ஏற்படவில்லை. இது வேண்டும் என்று அலைய மாட்டேன். அவ்வளவு தான் என்றேன்.

நேரம் ஆகிக்கொண்டிருந்தது. நான் கொஞ்சம் நிதானமாகவே இருந்தேன். தலை சுற்றுவது போல் இருந்ததாலும் முதல் தடவையானதாலும் என்ன ஆகுமோ என்ற பயம் லேசாக இருந்தது. அந்தக் கவலை மிருணாலுக்கோ பட்நாயக்குக்கோ இல்லை. அவர்களும் என் போக்கில் விட்டு விட்டார்கள்,. வற்புறுத்த வில்லை.

அவர்கள் இருவரின் பேச்சிலிருந்து மது அருந்தும் பழக்கம் இருந்த போதிலும், பிரிவு என்ற எண்ணம் அவரகள் இருவர் பேச்சிலும் உணர்ச்சி மேலிட்டிருந்தது. பட்நாயக்குக்கு வங்காளி நன்றாக தெரியும். நானோ, மிருணாலோ ஒன்றிரண்டு உபசார வார்த்தைகளைத் தவிர அதிகம் ஒடியா கற்றுக்கொள்ள வில்லை. கற்றுக்கொடுக்கும் நிர்ப்பந்த சூழலும் அங்கில்லை. ஹிந்தி, ஆங்கிலத்திலேயே காரியம் முடிந்து விடுகிறது. கடைத் தெருவில் ஆபீஸில் தானாகக் காதில் விழும் ஒடியா வார்த்தைகள் தான் நாங்கள் கற்றுக் கொண்டது. மிருணாலுக்கு அதிகம் தெரிய வாய்ப்புண்டு, பெங்காலி பேசுகிறவனாதலால். “கீ ஹொலோ” என்று சொல்லத் தெரிந்தவர்கள் “கோன ஹொலா”வைப் புரிந்து கொள்ள மாட்டார்களா, என்ன? இல்லை பேசத்தான் மாட்டார்களா? ஆனால் பட்நாயக் பெங்காளியில் தான் பேசிக்கொண்டிருந்தான். நான் புரிந்து கொள்வேன் என்று தெரியும். தப்பு தப்பாக பேச ஆரம்பித்ததும் அவனுக்குத் தெரியும். ஒரு சமயம் மிருணால், ஷெஃபாலி நந்தி எழுதியிருந்த பெங்காளி கற்க ஆரம்பப் பாடப் புத்தகமும் வாங்கி எனக்குக் கொடுத்திருந்தான். நான் என் கொச்சை பெங்காளியில் பேசுவதை அவன் வீட்டில் அவன் தங்கைகள், அவன் அம்மா எல்லோரும் சிரித்துக்கொண்டே கேட்பார்கள். அதில் வாத்சல்யமும் கொஞ்சம் கிண்டலும் இருக்கும்.

நேரம் ஆக ஆக, மிருணாலுக்கு போதை ஏறிக்கொண்டே இருந்தது. அதை அவன் அனுபவித்துக்கொண்டிருந்தான். தன்னை இழந்து கொண்டுமிருந்தான். தன்னை இழந்து என்றால் உணர்ச்சி வசப்பட்டு. இருந்தான் என்று தெரிந்தது. அவர்களோடு நான் போட்டி போடாவிட்டாலும் எனக்கும் இலேசான தலை சுற்றல் இருந்தது. நான் அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் மிருணால் குரல் தழதழத்தது. அவனுடைய அப்பாவைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். ஒரு சமயம் கல்கத்தா போகிற நண்பரிடம் தன் ஒன்பது பத்து வயசுப் பெண்ணுக்காக ஏதோ வாங்கி வரச் சொல்லியிருந்தாராம். இந்தியா சென்றிருந்த அந்த நண்பர் வெறுங்கையோடு தான் திரும்பியிருந்தார். ஒன்றும் வாங்கி வராத காரணத்தைச் சொன்ன அவர், அதன் விலை ரொம்பவும் அதிகமாக இருந்ததைச் சொன்னார். மிருணாலின் அப்பாவுக்கு தலை வெடித்து விட்டது. “என் சம்பளம் முழுதுமே செலவானால் என்ன? என் குழந்தைக்கு செலவழிக்கமாட்டேன் என்று எப்படி நீயே தீர்மானம் செய்து வெறுங்கையோடு வந்தாய்? என்று திட்டித் தீர்த்து விட்டாராம். அப்படி ஒரு கோபத்தைத் தன் அப்பாவிடம் தான் கண்டதில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

என்னவோ தெரியவில்லை. எப்படி அன்றையப் பேச்சு அவன் அப்பாவுக்குத் திரும்பியது என்று தெரியவில்லை. பேசிக்கொண்டே இருந்தவன், என் பக்கம் திரும்பியவன், Dada, Let me say this. I am not a worthy son of my father. But, I am sure he would have loved to have you as his son. என்றான். அவன் எதை வைத்துக்கொண்டு அப்படிச் சொன்னான் என்று எனக்கு புரிந்ததில்லை. நானும் இது பற்றியெல்லாம் அவனிடம் பேசியதுமில்லை. எனக்கு ஒரளவு தெரியும் அவன் அப்பா எவ்வளவு பெரிய அறிவாளி, அவருடைய தவம் என்ன என்று. மிருணாளிடமிருந்து தான் நான் அன்றாடம் புது விஷ்யங்களைக் கற்றுக் கொண்டு வந்திருக்கிறேன். ஆக, அவன் சொன்னது அவனுக்கு என்னிடம் இருந்த அவன் இது காறும் வெளிக்காட்டிராத அளவு கடந்த அன்பைத் தான் அப்படி அன்று அவனிடமிருந்த அவன் தன்னை இழந்த நிலையில் வெளிப்பட்டிருக்கிறது என்று தெரிந்தது. நானும் அவனும் அடிக்கடி ரொம்பச் சின்ன சின்ன விஷயத்துக் கெல்லாம் சண்டை போட்டுக்கொள்வோம். குழந்தைகள் அற்ப விஷயத்துச் சண்டை போடுவதும் அடுத்த் நிமிடம் சேர்ந்து கொள்வது போல.

ஆனால் அன்றிலிருந்து அவனோடு நான் எந்த விஷயத்துக்கும் சண்டை போடவில்லை. நான் தான் என்னை மாற்றிக் கொண்டேனே தவிர, மிருணால் எப்போதும் போலத் தான் இருந்தான். அன்று தான் மிருணாள் என்னிடம் எவ்வளவு பாசத்தை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறான், அது இம்மாதிரியான வசம் இழந்த கணங்களில் பொங்கி வெளி வந்துள்ளது என்று தெரிந்தது. அந்த கணங்கள் என் வாழ்வில் மிக முக்கியமான கணங்கள். அவை எப்போது எனக்கு மிருணாளின் நினைவு வந்தாலும் அந்த முன்னிரவு நேரம் எப்போதும் முதலில் மேலெழுந்து ததும்பும்.

.

Series Navigationஎஸ்டிமேட்மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *