என் அலுவலக நண்பர்களில் இருவரைப்பற்றி இங்கே குறிப்பிடவேண்டும். ஒருவர் நான்கு நாள்களுக்கு விடுப்பு எழுதிக்கொடுத்துவிட்டு வெளியூர் செல்வார். ஆனால் எட்டு நாள் கழித்துத்தான் திரும்பிவருவார். வந்ததுமே அப்பாவித்தனமான புன்னகையோடு பக்கத்தில் வந்து நிற்பார். அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளும்வண்ணம் ஏதேதோ காரணங்களை அடுக்கி விடுப்பு நீட்டிப்பு விண்ணப்பத்தை அவருக்காக எழுதிக் கொடுக்கும் வேலையை என்னிடம் ஒப்படைத்துவிடுவார். என் முணுமுணுப்புகளை அவர் ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. அந்தப் பத்து நாட்களில் ஊர் சுற்றிய அனுபவத்தை அவர் விவரித்துச் சொல்வதைக் கேட்டு மனம் மயங்கி அவருக்காக அந்த வேலையைச் செய்துகொடுப்பேன். ஊர்சுற்றுவதும் திரிந்தலைந்த சங்கதிகளை விவரிப்பதும் அவரைப் பொறுத்த அளவில் மகத்தான அனுபவங்கள். பொருள்செலவு, சம்பள இழப்பு, மற்றவர்கள் உரைக்கும் மதிப்பற்ற சொற்கள் எதையுமே அவர் கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டார். இன்னொரு நண்பர் இவருக்கு நேர்மாறான குணமுடையவர். அவசர வேலை என்று சொல்லி நான்கு நாள்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு செல்வார். ஆனால் இரண்டே நாள்களில் வேலையை முடித்துக்கொண்டு அலுவலகத்துக்குத் திரும்பிவிடுவார். அதற்கென்று ஒரு கடிதம் எழுதி, எடுக்காத விடுப்பு நாள்களை மீண்டும் கணக்கில் இணைத்துக்கொள்ளக் கோரும் கடிதத்தையும் அவருக்கு நான்தான் எழுதவேண்டும். காரணம் இல்லாமல் ஊரில் எதற்காக அலையவேண்டும்? அலுவலகத்துக்கு வந்தால் வேலையாவது பார்க்கலாமே என்று சொல்வார். இருவருமே இரண்டு துருவங்கள். ஒருவருக்கு பயணம் என்றால் கொள்ளை ஆசை. இன்னொருவருக்கு பயணம் என்பதே வீண்வேலை. பயணங்களை முன்வைத்து உலகோர் அனைவரும் இப்படி இருபிரிவாகத்தான் பிரிந்திருக்கிறார்கள். பயணம் என்பது ஒரு மகத்தான அனுபவம். அது ஒரு கனவு. தேடல். அறிதல்முறை.
நாடோடிகளாகத் திரிந்தலைந்த காலத்திலிருந்தே மக்களிடம் பயணம் செல்லும் பழக்கம் இருந்திருக்கிறது. பயிர்த்தொழிலில் ஈடுபட்டு, வசிப்பதற்கென ஒரு நிலையான இடத்தை உருவாக்கிக்கொண்ட பிறகுதான் பெரும்பாலனவர்களின் பயணம் சுருங்கிப்போய்விட்டது. பொருள்தேடிச் செல்பவர்கள், வணிகத்துக்காகச் செல்பவர்கள், காடுகளையும் மலைகளையும் ஏறி இறங்கிச் சுற்றியலைவதையே வாழ்வாகக் கொண்ட கலைஞர்கள், பாணர்கள் என மிகச்சிலரே இடைவிடாத பயணங்களில் ஈடுபட்டிருந்தனர். மதக்கருத்துகளைப் பரப்புவதற்காகவும் ஆட்சிப்பரப்பளவை அதிகரிக்கும் ஆசையாலும் புதிய புதிய பகுதிகளைக் கண்டுபிடிக்கும் விருப்பத்தாலும் நாடுவிட்டு நாடு சென்று பயணங்களை மேற்கொண்டவர்களும் அக்காலத்தில் இருந்தார்கள். யுவான்சுவாங் முதல் கொலம்பஸ், மார்க்கோபோலோ வரைக்கும் பலரை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அவர்கள் எழுதிய பயணக்குறிப்புகள் அனைத்தும் காலமாற்றத்தையும் வரலாற்றையும் ஆராய்பவர்களுக்கு இன்று முக்கியமான தகவல் ஆவணங்களாக உள்ளன.
உலகப் பயணியர் பட்டியலில் பிரெஞ்சு நாட்டுப் பயணியான பெர்னியரருக்கு முக்கியமான இடமிருக்கிறது. மிகச்சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்தவர். சொந்தக்கார்ர் ஒருவரின் ஆதரவில் வளர்ந்து பள்ளிக்கல்வியை முடித்தார். பிறகு சொந்த முயற்சியில் பெர்னியர் மருத்துவம் படித்தவர். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் இந்தப் படிப்பும் பயிற்சியும் அவருக்கு மிகவும் துணையாக இருந்திருக்கிறது. அவர் படைவீரரோ அல்லது நாடுபிடிக்கும் லட்சியத்தால் உந்தப்பட்டவரோ அல்ல. பலவிதமான மனிதர்களைப் பார்க்கும் ஆர்வமும் பலவிதமான நிலவியல் சூழல்களைக் காண்கிற வேகமும்தான் அவரைச் செலுத்திய சக்திகள். தற்செயலாக ஒரு நண்பரின் மூலம் போலந்து நாட்டுக்குச் சென்ற தூதர் ஒருவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அவரோடு சேர்ந்து பெர்னியர் மேற்கொண்ட பயணங்கள் ஏராளம். இருபதுகளையொட்டிய வயதில் பிறந்த நாட்டைவிட்டு உலகத்தில் திரிந்தலையத் தொடங்கிய அவருடைய பயணம் 68வது வயதில் அவர் மறையும்வரை தொடர்ந்தது. வடக்கு ஜெர்மனி, போலந்து, சுவிட்சர்லாந்து, இத்தாலி, எகிப்து ஆகிய நாடுகளில் பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சுற்றியலைந்திருக்கிறார். பிறகு அவர் தன் முப்பத்தோராம் வயதில் இந்தியாவுக்கு வந்தார். டேனிஷ்மெண்ட்கான் என்பவருடைய நண்பராகவும் மருத்துவராகவும் விளங்கினார். அவர் வழியாக ஷாஜஹானுடனும் அவருடைய பிள்ளைகளுடனும் நேரில் பார்த்துப் பேசிப் பழகும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார். ஷாஜஹானால் தக்காணப்பகுதியைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பதிகாரியாக ஒளரங்கசீப் நியமிக்கப்பட்ட காலத்திலிருந்து, மெல்லமெல்ல ஒளரங்கசீப்பின் கை வலிமையடைந்து தன்னை ஒரு பேரரசராக அவர் நிறுவிக்கொள்ளும் காலம்வரைக்கும்- ஏறத்தாழ பன்னிரண்டாண்டுகள்- இந்தியாவில் மொகலாயர் ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் எல்லா இடங்களிலும் சுற்றியலைந்திருக்கிறார். பன்னிரண்டு ஆண்டுகால அனுபவம் அரச குடும்பத்தவரின் நடவடிக்கைகளையும், சமூகத்தில் நடைபெற்ற சம்பவங்களையும் நெருக்கமாக இருந்து கவனிக்கக்கூடிய ஒரு வாய்ப்பை அவருக்கு வழங்கியிருக்கிறது. அந்த வாய்ப்பை அவர் முழுஅளவில் பயன்படுத்திக்கொண்டார் என்றே தோன்றுகிறது. அதற்கு அவர் எழுதிச் சென்றுள்ள பயணக்குறிப்புகளே சாட்சி. பெர்னியரின் குறிப்புகளைப் படித்த டிரைடன் என்னும் நாடக ஆசிரியர், அவை கொடுத்த ஊக்கத்தாலும் உத்வேகத்தாலும் ’ஒளரங்கசீப்பின் சோகக்கதை’ என்னும் நாடகத்தை எழுதி அரங்கேற்றினார் என்பது ஒரு வரலாற்றுச் செய்தி. பெர்னியரின் குறிப்புகளில் பொதிந்துள்ள படைப்பூக்கத்துக்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு.
இக்குறிப்புகள் அனைத்தும் பிரெஞ்சு மன்னருக்கு எழுதப்பட்ட கடிதங்களைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பு புரிந்துகொள்ள முடியாத புதிராக இருக்கிறது. தன்னிச்சையாக மேற்கொண்ட ஒரு பயணத்தின் அனுபவங்களை அவர் எதற்காக மன்னரை முன்னிட்டு எழுதினார் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. அரசியல்ரீதியாக அரசருக்கு உதவக்கூடிய தகவல்கள் எதுவுமே இதில் இல்லை. குறிப்புகளை இப்படி அரசருக்குத் தெரிவிக்கும் விதமாக எழுதிவைக்கும் பண்பு பயணியர்களிடம் இருந்திருக்கக் கூடும் என்றும், அந்த மரபையொட்டியே பெர்னியரும் தம் குறிப்புகளை எழுதியிருக்கிறார் என்றும் நினைக்கத் தோன்றுகிறது.
வடிவத்தின் நோக்கம் எதுவாக இருந்தாலும், தமிழாக்கத்தில் இந்த நூலைப் படித்ததும் வரலாறைப் புரிந்துகொள்ள ஒரு முக்கியமான புத்தகம் தமிழ்வாசகர்களுக்குக் கிடைத்திருக்கிறது என்றே தோன்றுகிறது. ஷாஜஹானின் இறுதிக்கால வாழ்க்கையையும் ஒளரங்கசீப் தன்னை ஒரு பேரரசராக நிறுவிக்கொண்ட தொடக்கக்கால வாழ்க்கையையும் விவரிக்கும் பெர்னியரின் குறிப்புகள் ஒரு வரலாற்றுப்புதினத்தைப் படிக்கத்தூண்டும் விறுவிறுப்பான மொழியில் எழுதப்பட்டுள்ளன. எழுபது வயது மாமன்னர் ஷாஜஹான் ஏறத்தாழ நாற்பது ஆண்டுக்காலம் போரே இல்லாத பூமியாக இந்த மண்ணை ஆட்சி செய்துவந்தவர். ஆனால் அதற்கடுத்த ஐந்தாண்டுக் காலம் ஓய்வே இல்லாதபடி தொடர்ச்சியாகப் போர்கள் மூலைக்கு மூலை இந்தியாவில் எல்லா இடங்களிலும் நடைபெற்றன. அவருடைய பிள்ளைகள் எல்லோருக்குமே ஆட்சிக்கட்டிலில் அமர எண்ணும் ஆசை இருக்கிறது. அவர்களுக்கு அந்த எண்ணமே எழுந்துவிடக்கூடாது என்றும் அப்படியே எழுந்தாலும் அது தமக்குள் மோதிக்கொள்ளும் அளவுக்குச் சென்றுவிடக் கூடாது என்றும் கருதி வங்காளம், தக்காணம், காபூல், தில்லி என ஒவ்வொருவரையும் ஆளுக்கொரு திசையில் அனுப்பி, அந்தந்தப் பகுதிகளைக் கவனித்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டார். காதலனனின் சின்னமாக நாம் கருதுகிற ஷாஜஹானிடமா இத்தகு குணங்கள் என வியப்பேற்படுகிறது. ஆட்சி அதிகாரத்தைப் பொறுத்தவரையில் தன்னை ஒரு பற்றற்றவராகவே தொடக்கத்திலிருந்து காட்டிக்கொள்கிறார் ஒளரங்கசீப். பொங்கியெழும் அதிகார விருப்பத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நெஞ்சிலேயே அடக்கிக்கொண்டு காய்களைத் தந்திரமாக நகர்த்துகிறார். ஒரு யுத்தக்களத்தில் குதிரை மீது அமர்ந்துகொண்டு ஒருவர் போரிடுகிறார். எதிர்த்தரப்பில் இருப்பவர் சமாதானத்தில் அக்கறை இருப்பவர்போல நடித்து அவரைக் கீழே இறங்கிவந்து பேசும்படி கேட்டுக்கொள்கிறார். குதிரையில் இருந்தவர் கீழே இறங்கி நிற்கிறார். பதற்றத்தில் ஆளற்ற குதிரை திரும்பிச் செல்கிறது. பின்னால் தொலைவில் அங்கங்கே சண்டை போட்டுக்கொண்டிருக்கும் வீரர்கள், குதிரைமீது மன்னர் இல்லாததைக் கண்டு, மன்னர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது வெற்றிகொள்ளப்பட்டு சிறைபிடிக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சி உயிர்பிழைப்பதன் பொருட்டு வேகவேகமாகத் திரும்பி ஓடுகிறார்கள். இப்படி ஒரு தந்திரம். ஆலோசனைகள்போல பிழையான தகவல்களைக் கொடுத்து திசைதிருப்புவது என இன்னொரு தந்திரம். ஒளரங்கசீப் தந்திரங்களின் கிடங்காக இருக்கிறார். இறுதிக்கட்டத்தில் தனக்குப் போட்டியாக உள்ள தன் தமையன் தாராவின் தலையைச் சீவி ஒரு தட்டில் எடுத்துவரவேண்டும் என்று கட்டளையிடுகிறார். அது அவருடைய தந்திரங்கள் மற்றும் குரூரத்தின் உச்சம்.
ஒவ்வொரு ஆண்டும் இருபத்தைந்தாயிரம் குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன என்றொரு குறிப்பை பெர்னியர் எழுதியிருக்கிறார். தொடர்ச்சியாக நிகழ்ந்த யுத்தங்களுக்கு இக்குதிரைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதிகாரத்துக்கான நாட்டமும் வேட்கையும் பேரரசுகளுக்கு மட்டுமல்ல, அதன் எல்லையில் உள்ள சிற்றரசுகளுக்கும் உள்ளன. அரசுரிமையைத் தக்கவைத்துக்கொள்ள அவர்களும் தந்திரங்களில் ஈடுபடுகிறார்கள். தமக்குத் தேவையான படையுதவிக்காக அவர்கள் பேரரசின் உதவியை நாடுகிறார்கள். அதற்கு ஈடாக பணம் தரப்படுகிறது. அல்லது அருகில் உள்ள ஊர்ப்பகுதிகளின் உரிமை எழுதித் தரப்படுகிறது. இறக்குமதிக்குதிரைகள் இப்படிப்பட்ட உதவிகளுக்கும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
அரச குடும்பத்துத் தகவல்கள் மட்டுமில்லாமல், எளிய மக்களைப்பற்றிய பல தகவல்களும் பெர்னியரின் குறிப்புகளில் அடங்கியுள்ளன. தில்லியைப் பல கிராமங்களின் தொகுப்பு என்று குறிப்பிடுகிற பெர்னியர் அங்கே நிலவிய கடுமையான வெப்பத்தைப்பற்றி எழுதியுள்ள வரிகள் இன்றும் பொருத்தமானவையாக உள்ளன. அவர் தங்கியிருந்த சமயத்தில் மூன்று பெரிய தீவிபத்துகள் நடைபெற்றுளன. அறுபதாயிரம் குடிசைகள் எரிந்து நாசமாகியுள்ளன. உடன்கட்டையேறும் சம்பவங்களை மனம் பதறும்வகையில் பெர்னியர் குறிப்பிடுகிறார். விருப்பமில்லாத பெண்களை இழுத்துச் சென்று நெருப்பில் தள்ளிவிட்டவர்களைப்பற்றியும் குறிப்புகள் உள்ளன. தம்பூரா வாசிக்கும் இளைஞன்மீது கொண்ட காதலால் கணவனுக்கு நஞ்சுகொடுத்துக் கொன்றவளைப்பற்றிய தகவலை ஒரு புனைகதைக்குரிய வேகத்துடன் குறிப்பிடுகிறார் பெர்னியர். பல விஷயங்களை தனக்கேயுரிய தர்க்க விளக்கங்களுடன் புரிந்துகொள்ள முயற்சி செய்கிற பெர்னியர் இந்திய எளிய மக்களின் உருவ வழிபாட்டைப் புரிந்துகொள்ள எவ்விதமான முயற்சியும் செய்யாமல் விசித்திரத்தின் கண்கொண்டு பார்க்கிறார். இந்த இடத்தில் ஒரு சாதாரண மேற்குமனிதனைப்போலவே நடந்துகொள்கிறார் பெர்னியர். இந்தியாவில் காதல் என்பது மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிற ஒரு நிகழ்வாக இருக்கிறது என்று எழுதிச் செல்லும் பெர்னியரின் குறிப்பிலும் மேற்கின் கண்களே இயங்குகின்றன.
அக்காலத்தில் நிகழ்ந்த சிங்கவேட்டையை பெர்னியர் விவரிக்கும் விதம் நன்றாக உள்ளது. மன்னரும் இளவரசர்களும் மட்டுமே சிங்கவேட்டையில் ஈடுபட முடியும். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை. சிங்கம் தங்குமிடத்துக்கு அருகில் ஒரு கழுதையைக் கட்டிவைக்கிறார்கள். இரைதேடி வரும் சிங்கம் அந்தக் கழுதையை அடித்து உண்ணுகிறது. மறுநாளும் ஒரு கழுதையைக் கொண்டு வந்து அதே இடத்தில் கட்டிவைக்கிறார்கள். இப்படி சிங்கம் மெல்லமெல்ல ஒரு குறிப்பிட்ட இரைக்குப் பழக்கப்படுத்தப்படுகிறது, மன்னர் சிங்கவேட்டைக்கு வரும் நாளில் கட்டப்படும் கழுதைக்கு ஆரம்பத்திலேயே அபின் புகட்டுகிறார்கள். நீண்ட தூரத்துக்கு வலையும் விரிக்கப்படுகிறது. கழுதையை அடித்துத் தின்னும் சிங்கம் அந்த அபினால் பாதிக்கப்பட்டு மயக்கநிலையை அடைகிறது. ஓடமுடியாதபடி வலையும் தடுத்துவிடுகிறது. அப்போது மன்னர் அதை தொலைவிலிருந்து துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துகிறார்.
போர்நிகழ்ச்சிகளைப்பற்றி விரிவாக எழுதிச் செல்லும் பெர்னியர் போகிற போக்கில் குறிப்பிட்டுச் சொல்லும் சில தகவல்கள் முக்கியமாகப்படுகின்றன. கோல்கொண்டா நகர்மீது படையெடுத்து வந்தவர்கள் கோட்டையில் வைக்கப்பட்டிருந்த பொருள்களையெல்லாம் கவர்ந்துகொண்டு பெண்களைத் திருப்பியனுப்பிவிட்டார்கள் என்கிற குறிப்பை முக்கியமாகக் கருதத் தோன்றுகிறது. போரிடும் வேளையில் அச்சமின்றிப் போரிடுவதற்காக ராஜபுத்ர வீரர்களூக்கு அபின் வழங்கப்பட்டது என்பது இன்னொரு குறிப்பு. சூரத் கோட்டையைக் கைப்பற்றுவதற்காக நிகழ்ந்த போரில் கண்ணிவெடிகளைப் பயன்படுத்தும் கலையை டச்சுக்காரர்கள் முகம்மதியர்களுக்குக் கற்பித்தார்கள் என்பது மற்றொரு குறிப்பு. கண்ணிவெடிகளின் காலத்தை வரையறை செய்ய இக்குறிப்பு மிகவும் உதவக்கூடும். மான்வேட்டையில் பழக்கப்படுத்தப்பட்ட சிறுத்தைகள் பயன்படுத்தப்பட்டன என்னும் குறிப்பும் முக்கியமானது.
ஷாஜஹானின் காலத்தில் இயற்றப்பட்ட ஒரு சட்டத்தைப்பற்றிய குறிப்பு மிகவும் ஆர்வமூட்டக்கூடியதாக இருக்கிறது. பணிக்காலத்தில் மரணமடைகிற ஒருவனுடைய சொத்துக்கு யாரும் வாரிசுரிமை கோர முடியாது, அதற்கு மன்னனே வாரிசுதாரராகிறார். இப்படி பலருடைய சொத்துகளை மன்னர் வசப்படுத்திக்கொள்கிறார். மன்னருக்கு புத்தி புகட்டுவதற்காக ஒருவர் மேற்கொண்ட முயற்சி வேடிக்கையானது. தன் வீட்டில் உள்ள பெட்டிகளில் எல்லாம் பழைய இரும்புகள், எலும்பு, காலணிகள், கிழிந்த துணிகள், கற்கள் போன்றவற்றையெல்லாம் அடைத்து வைத்துவிடுகிறார். அவருடைய மரணத்துக்கு பிறகு அவர் பாதுகாப்பில் இருந்த பெட்டிகள் எல்லாம் மன்னரின் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. திறக்கப்பட்ட பெட்டியில் இருந்த பொருள்களைக் கண்டு அவர் மனம் அவமானத்தில் குலைந்துபோகிறது. இதற்குப் பிறகு சட்டத்தில் தேவையான திருத்தம் கொண்டுவரப்படுகிறது.
எல்லா மன்னர்களும் அரசகுலப்பெண்கள் உலவக்கூடிய அந்தப்புரத்தில் அலிகளைமட்டுமே வேலைக்கு வைத்திருக்கிறார்கள். ஆண்கள் வேலையில் அமர்த்தப்படவில்லை. தப்பித் தவறி கண்ணில் படும் ஆண்கள் கடுமையான தண்டனைக்கு ஆளாகிறார்கள். தன் மகளின் அறையில் வேற்று ஆண் நுழைந்து ஒளிந்திருக்கக்கூடுமோ என்கிற சந்தேகத்தால் உந்தப்பட்டு, தண்ணீர்க்கொப்பரையின் கீழ் நெருப்பிடச் சொல்கிறார் ஷாஜஹான். அந்தப்புரத்தில் தென்பட்ட ஆண்களில் ஒருவன் மதிலேறி வந்ததாகச் சொன்னதும் அவனை மதிலிலேற்றிக் கீழே தள்ளியும், வாசல்வழியாக வந்தவனை கதவுக்கு வெளியே தள்ளியும் தண்டனை விதிக்கிறார் ஒளரங்கசீப். காவலுக்கு இருந்த அலிகள் கடுமையான தண்டனைக்கு ஆளாகிறார்கள்.
எம்.டி.மெர்வில்லிஸ் என்பவருக்கு பெர்னியர் எழுதிய ஒன்பது கடிதங்களும் இம்மொழிபெயர்ப்பில் இடம்பெற்றுள்ளன. அணிவகுத்துச் செல்லும் படைகள், பீரங்கிகள் பற்றியெல்லாம் எழுதிச்செல்லும்போதே பல சுவாரஸ்யமான துணைத்தகவல்களையும் எழுதிச் செல்கிறார். இடம்பெயரும் கூட்டத்தோடு, தன் எஜமானனுக்குத் தேவையான குடிநீரைச் சுமந்துகொண்டு ஒருவன் தனியாகக் குதிரையில் வருகிற ஏற்பாடு அக்காலத்தில் இருந்திருக்கிறது. தகரத்தாலான உருளை வடிவ நீர் நிரப்பும் குடுவை ஒன்றை , சிவப்பு நிறத் துணியால் மூடி ஒருவன் எடுத்து வருகிறான். பொதுவாக இக்குடுவை கால் காலன் அளவு தண்ணீர் கொள்ளளவு உடையது. பணியாள் அதைக் கையிலேந்தி ஆட்டிக்கொண்டே இருக்கவேண்டும். கீழே வைக்கும்போது மூன்று குச்சிகள்மேல் தரையில் படாமல் வைக்கவேண்டும். குடுவையின் மீது உள்ள துணி ஈரமாக இருப்பதால், அது தூசுதுகள்களை ஈர்த்துக்கொள்ளும். இப்படிப்பட்ட குடுவைகள் பணியிடங்களிலும் பயணங்களிலும் பயன்படுத்தப்படுகிறது, மற்றபடி வீடுகளில் நுண்துளைகள் உள்ள மட்பாண்டங்களையே பயன்படுத்துகிறார்கள். சில பெரிய மனிதர்களின் வீடுகளில் நீரைக் குளிர்விப்பதற்காக வெடியுப்பைப் பயன்படுத்துகிறார்கள்.
அரசரைச் சந்திப்பதற்காக வருகிற அரசர்களும் தூதர்களும் மரியாதையின் நிமித்தமாக பணமாகவும் பொருளாகவும் ஏராளமான அன்பளிப்புகளை வழங்குகிறார்கள். அதேபோன்ற மரியாதையை மன்னரும் அவர்கள் திரும்பிச் செல்லும்போது செய்கிறார். ஒருமுறை மன்னர் ஷாஜஹானைச் சந்திக்க வந்த அமீர் ஜூம்லா மன்னர் கொல்லூர் சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்பட்ட பட்டை தீட்டப்படாத ஒரு வைரக்கல்லை அன்பளிப்பாகக் கொடுத்தார். அதன் அப்போதைய எடை 756 பிரிட்டிஷ் கேரெட்டுகள். இதுவே பிற்காலத்தில் கோகினூர் வைரம் என்று அழைக்கப்பட்டது.
காஷ்மீர், பஞ்சாப், லடாக் போன்ற பகுதிகளைப்பற்றிய முக்கியமான நிலவிவரணைகளை அழகான சித்திரங்களாகத் தீட்டிக்காட்டுகிறார் பெர்னியர். எல்லாமே இந்த நூலுக்கு அழகு சேர்ப்பதாக உள்ளன. ஒரு புதினத்தைப் படிப்பதுபோன்ற ஆர்வத்தைத் தூண்டும் இந்த வரலாற்றுக்குறிப்புகளின் மொழிபெயர்ப்பு சமீபத்தில் வெளிவந்துள்ள மொழிபெயர்ப்பு நூல்களில் முக்கியமான ஒரு வரவு. இதை மொழிபெயர்த்துள்ள சிவ.முருகேசன் தமிழ்வாசக உலகத்தின் நன்றிக்குரியவர்.
பெர்னியரின் பார்வை ஒரு படைப்பாளிக்கே உரிய உள்ளுணர்வோடும் நுட்பத்தோடும் இருப்பதை அவர் விவரிக்கும் ஒவ்வொரு பகுதியும் உணர்த்தியப்டியே உள்ளது. நூல்முழுதும் ஏராளமான அளவில் நேரிடையான தகவல்கள். உணர்ச்சிமிகுந்த சித்தரிப்புகள். ஒவ்வொரு கணமும் அவர் மனிதர்களையும் வாழ்க்கையையும் உற்றுப் பார்த்தபடியே இருக்கிறார். அவருடைய கண்கள் வரலாற்றின் கண்களாகவும் காலத்தின் கண்களாகவும் இக்கட்டுரைகள்வழியாக மாறிக் காட்சியளிக்கின்றன. மனிதர்களைப் பார்ப்பதில் அவருக்குள்ள அளவற்ற ஆர்வம் அவருடைய கண்களைக் கூர்மைகொள்ள வைத்துவிட்டன என்று தோன்றுகிறது. அவர் யாருக்காக வந்தார், யாருக்காக எழுதினார் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே.
மொகலாய மன்னர்களின் உறவுச்சிக்கல்களையும் விசித்திரப்போக்குகளையும் பெர்னியர் தொகுத்துக்கொண்டே போகிறார். ஒரு கட்டத்தில் மனமுதிர்ச்சி உள்ள ஒருவர் வாழ்க்கைச்சம்பவங்களை முன்வைத்து இந்த வாழ்வின் பொருளை மதிப்பிடும் முயற்சியாக அது மாறிவிடுகிறது. எழுத்தின் வழியாக நிகழ்ந்திருக்கும் இந்த வேதியல் மாற்றமே பெர்னியரின் பயணக்குறிப்புகளுக்குக் கிடைத்துள்ள வெற்றி
(ஆகஸ்டு மாதத்தில் சந்தியா பதிப்பக வெளியீடாக வந்துள்ள பெர்னியரின் பயணக்குறிப்புகள் நூலின் தமிழாக்கத்துக்கு எழுதிய முன்னுரை)
பாவண்ணன்
- வரலாற்றின் தடத்தில்
- ஆத்மாவில் ஒளிரும் சுடர்
- கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் ! (கட்டுரை 1)
- கூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா ?
- தாய்மை!
- Navarathri Celebrations 2011 NJ Tamil Sangam
- பறவையின் இறகு
- நியுட்ரினோ- இயற்பியல் கண்டுபிடிப்புகளில் ஒரு மயில் கல்
- பாரதியாரைத் தனியே விடுங்கள் !
- த்வனி
- நிதர்சனம்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 18 எழுத்தாளர் சந்திப்பு – 5. சி.மணி
- (78) – நினைவுகளின் சுவட்டில்
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 13
- பிரதியைத் தொலைத்தவன்
- கள்ளன் போலீஸ்
- பரீக்ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் தேடுங்கள் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி
- கட்டுநாயக்க தாக்குதல் – இரு மாதங்களின் பின்னர்…
- தங்க ஆஸ்பத்திரி
- இலக்கியங்களும் பழமொழிகளும்
- மைலாஞ்சி
- முற்றும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 50 பாகம் -1)
- நினைவில் நிற்கும் நேர்காணல்கள். ஒரு பார்வை.
- சுதேசிகள்
- சிற்பம்
- பூனைகள்
- சுத்த மோசம்.
- வீடழகு
- வெளி ரங்கராஜனின் கட்டுரைகள் ‘ நாடகம் நிகழ்வு அழகியல்’ – ஒரு கண்ணோட்டம்.
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (வீட்டுக்கு வரும் விருந்தாளிகள்) (கவிதை -50)
- நினைவு நதிக்கரையில் – 1
- “அவர் தங்கமானவர்”
- வார்த்தைக்குள் அகப்படவில்லை..!!
- மூன்று கவிதைகள் – பத்மநாபபுரம் அரவிந்தன்
- பயனுள்ள பொருள்
- மூன்றான வாழ்வு (சீவனைச் சிவமாக்கும் கெவனமணி மாலிகாவின் விளக்கம்)
- வானம் வசப்படும்.
- பேசும் படங்கள் :::: டீசண்டா ஒரு ஆக்ரமிப்பு….
- பஞ்சதந்திரம் தொடர் 11 – விஷ்ணுரூபம் கொண்ட நெசவாளி
- முன்னணியின் பின்னணிகள் – 7 சமர்செட் மாம்
- Request to preserve the Tamil cultural artifacts
- பன்னிரண்டு சிறுகதைகளும் ஒரு வாசகனின் மதிப்புரையும்
- உண்மையான நாடகம் இரகசிய விளையாட்டுகளில்தான்
- Nandu 2 அரண்மனை அழைக்குது