“ ஒரு தத்துவத்தைக் கலையா மாத்தறப்போ ஏற்படற நீர்த்த வடிவம் நாடகம்.”
“ஒரு விஷயத்தக் கவிதை எழுதறபோது உண்டாற அமைதி, நடிக்கிறபோது வருமா?”
– இரும்பு குதிரைகள்.
பாலகுமாரனின் இந்தக்கதையை எண்பதுகளின் இறுதியில் படிக்கும்போது இதன்மூலம் படிப்பவனுக்கு ஏற்படப்போகும் கருத்துத் தாக்கம் குறித்து எனக்கு ஒரு சிந்தனை எழுந்தது. கதையில் நாராயணசாமி என்ற கதாபாத்திரம் தனது கருத்தைக் கூறுவது போல இச்சொற்றொடர்கள் வரும். இது கதாசிரியரின் கருத்தாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்றாலும், பிரபல எழுத்தாளர்கள், இயக்குனர்களின் படைப்பை விரும்பி உள்வாங்கும் ரசிகர்கள் ,படைப்புகளில் வரும் கருத்துக்களை தங்களது கருத்துக்களாகவே உருவாக்கிக் கொள்வதும், அதற்கு முன்பான தனது நிலைப்பாட்டை மாற்றியமைத்துக்கொள்வதும் சகஜம். நாடகம் குறித்தான கருத்துநிலைப்பாடுகள் தமிழகத்தில் மிகவும் பின் தங்கியிருந்த 80-90களில் , இது போன்ற கதை உரையாடல்கள்கூட பின்னடைவை ஏற்படுத்திவிடக்கூடிய அபாயம் , நிஜமானது. தமிழ் நாடகங்கள் அபத்த சிரிப்பு வெடிகளின் திரட்டாக , பிரபல நகைச்சுவை நடிகர்களின் மேடைச் சிரிப்புமூட்டும் உத்திகளாக மட்டுமே இயங்கி வந்த தளங்கள் உறுதிபட்டு வந்த காலங்கள் அவை.
நாடகத்தில் புத்துயிர் ஊட்டும் வண்ணம் இங்குமங்குமாக எழுந்த இயக்கங்கள், முத்துசாமி, ராமானுஜம் போன்றோரின் உழைப்பால் வளர்ந்து வரும் வேளையிலிருந்து, அவற்றைக் கவனித்து, ஆவணமாக தன்கருத்தை பதிப்பித்துக்கொண்டிருந்தோரில் முக்கியமானவர் ’வெளி’ ரங்கராஜன். அவரது கட்டுரைத் திரளான இப்புத்தகம் குறித்து அல்ல, அவர் எழுத்தைக்குறித்தே நான் இங்கு என் கருத்தைப் பதிவு செய்ய முனைந்திருக்கிறேன். இந்தக் கட்டுரைத் திரள் , அவர் எழுத்துக்குறித்து அறிய முற்படுவோருக்கும், ஒரு கருத்துப் வெளிப்பாடு எந்த அளவில் நாகரீகமாக இருக்கவேண்டுமென்று அறிய முனைவோருக்கும் நல்ல வழி காட்டியாயிருக்கும்.
’நாடக அனுபவமென்பது நிகழ்வினில் நீளவேண்டுமெ’ன்கிறார் ரங்கராஜன். அது பாரம்பரியத்தின் மறுபதிப்பாகவோ, வரலாற்றின் அனுபவங்களாகவோ இருத்தல் மட்டும் போதாது என்று அவர் நினைப்பதை இரு கட்டுரைகளில் காணலாம். ( ப 50, ப 54). ஆனால், அவர் இதையே, நாடகத்தின் எழுதா விதியாக்கவில்லை. வரையறைகளுக்குள் அடங்குவது ஒரு விதியென்றால், அடங்காமலே இருத்தலும் ஒரு விதியாகிவிடுவதை உணர்ந்திருக்கும் ரங்கராஜன், எந்த நிகழ்வையும் “ அது அதுவாகவே இருப்பதை” அனுபவிக்க உணர்த்துகிறார்.
விமர்சகர் என்னும் ஆடை அணிந்து, விமர்சிக்கும் சடங்குக்காகவே, ஒரு விதியின்படி இருத்தலையும், இல்லாதிருத்தலையும் சுட்டி விமர்சனம் செய்யவேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கவில்லை. ஒரு சாய்வுத்தன்மையை ஏற்படுத்தும், தூண்டும் ஆற்றல் மிக்க சொற்களாக அவர் எழுத்துகள் அமையாமல், ரசிகன், தன்போக்கில் , அனுபவங்களை உணர , ஜனநாயகத்தன்மையுடன் அமைந்திருக்கின்றன. இதுவே அவரது கட்டுரைகளின் வெற்றி என நான் நினைக்கிறேன்.
ஒரு தொலைபேசி உரையாடலின் போது, ‘ ஜப்பானிய ‘ நோ’ நாடகங்களும், சீன நாடகங்களும் உடல் மொழியைச் செம்மையாகப் பயன்படுத்துவதையும், உடற்கூற்றுக்கலையம்சங்கள் அந்நாடகங்களில் முதன்மை பெற்றிருப்பதையும் ‘ தான் மிகவும் விரும்புவதாகச் சொன்னார். தேசிய நாடகப்பள்ளியின் கொள்கை எப்படி உருவாகவேண்டும் என்ற சிந்தனைப் பரிமாற்றத்தில் ‘ கீழ்நாட்டுக்கலைப் பாரம்பரியத்தை இந்திய நாடகம் ஸ்வீகரித்துக்கொள்ளவேண்டும்” என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது” எனத் தோன்றும் வகையில் (ப 77) அவர் எழுதியிருப்பது, கீழை நாடகங்களில் அவரது பிடிப்பு, அழகியல் சார்ந்தது மட்டுமல்ல, அவற்றின் அடிவேர்களை அவர் ஆய்ந்திருக்கிறார் என்ப்தைக் காட்டுகிறது. இவை நமது நாடக மரபின் பண்புகளுமாகும் என அவர் சுட்டிக்காட்டுகிறார். எனவே , பொதுப்படையான இவ்வேர்கள் பரவியிருக்கும் நிலங்களை நோக்கி அவரது பார்வை நீண்டதில் வியப்பில்லை.
புரையோடிப்போயிருந்த தமிழ்நாட்டு நாடக ரசிப்பிலிருந்து , ரசிப்பினை மீட்டெடுக்கும் முயற்சியில் நமது நாடக மரபை நமக்கு அறிமுகம் செய்துவைக்கவும், ‘இசை, உடலியக்கத்தின் லயங்கள் மரபின் பண்புகள் என அறிந்து அவை உணரப்படவேண்டும்’ என விளக்கமாகக் கூறவும் வேண்டிய அவசியம் என்றோ, எங்கோ அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிஜமான அக்கறை அவரது கட்டுரைகளில் விரவி வருவதை பல இடங்களில் உணரலாம்.
தற்கால நாடகங்களிலிருந்து “நாடகத்தை” மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்கள், ப்ரிஅதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு நின்றுவிடுவது அவருக்கு நெருடியிருக்கிறது. எனவே, திரைப்படத்துறையினரின், இச்சீரமைப்பு முயற்சிகள் , முன்றாம்தர ஆவணப்படங்கள் போல மக்களிடமிருந்து அந்நியப்பட்டு, தங்களது அறிவுநிலை இருத்தல்களின் வெளிக்காட்டுதல்களாக அமைவதை சற்றே சாடியிருக்கிறார். திரைப்படப்பாடல்களின் அழகியலைப் பற்றிக் கூறும்போது, பாடல்களற்ற ‘ கலைப்படங்களை’ குறிப்பிட்டு.’ இந்த எண்ணம் தவிர்க்கப்படவேண்டும்’ எனக் கூறுகிறார். இதுகுறித்தான மற்றொரு தொலைபேசி உரையாடலில் “ அறிவுஜீவிகளுக்கென்று, தங்கள் மட்டம் அறிவு சார்ந்ததென்று அறிவித்தபடி , புத்திசாலித்தனமான உத்திகள் நிறைந்த படங்களை விட, சமூகத்தின் அடிநிலையில் இருப்பவர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட,ஜனரஞ்சகமான எம்.ஜி.ஆர் படங்கள் உண்மையானவை, அவ்ற்றை என்னால் ரசிக்கமுடிகிறது’ என்றார்.ஆத்மார்த்தம், உள்ளபடி இருத்தல், வெளிப்படுத்துதல் என்பவையே அவரது கருத்துக்கணிப்பில் முதன்மையானவையாக இருக்கின்றன.
நாடகங்கள் பார்த்ததாலோ, அவற்றைப் படித்ததாலோ வரும் அனுபவங்கள் கொண்ட தளத்திலிருந்து மட்டும் ரங்கராஜனின் எழுத்துக்கள் வந்துவிடவில்லை. பல கால கட்டங்களில், பல உரையாடல்கள், கருத்துப்பரிமாற்றங்கள், பலதரப்பட்ட அனுபவங்களில் கிடைக்கும் தொடர்புகள் எனப் பலதொடர்சங்கிலிகளுடன் ஒரு கருத்தினை இணைத்து, அது வலுக்கட்டாயமாகச் செய்யப்பட்ட இணைவு எனத் தோன்றாத வகையில் அனைத்துத் தொடர்புகளிலும், அவரது சிந்தனை அணுகுமுறையின் தாக்கத்தை உணரலாம். இது , அவரது அறிவுபூர்வமான எழுத்துகுக்கிடைத்த வெற்றி மட்டுமன்று. அவரது அனுபவங்களுக்கும், சேகரித்த அறிவினாலே வலுப்பெற்ர அறிவுப்புலத்திற்கும் , மிகக்கவனமாக இரண்டையும் சம விகிதத்தில் கலந்திருக்கும் அவரது எழுத்தாற்றலுக்கும் கிடைத்த வெற்றி எனவே எனக்குப் படுகிறது. வெறும் அனுபவ ரீதியான பின்னூட்டங்கள், திரைப்பட விளம்பரங்களில் வருவதுபோல , தியேட்டரிலிருந்து வியர்வை பொங்க வருபவர்கள் கூட்டமாக கேமிராவை நோக்கி தலையை நீட்டி, பல்லிளித்து “படம் சூப்பருங்க” என்பார்களே அதுபோலிருக்கும்.
ஆனால் ரங்கராஜனின் ‘வெளி’ வேறு. அவர் வெகுஜனப்படவில்லை. ஆனால் அந்நியப்படவும் இல்லை. நம்மை அடர்ந்த எழுத்துக்களால் அச்சுறுத்தவும் இல்லை. இயல்பாக, தார்மீகமான அனுமானங்களை, தன் சாய்வற்ற முடிபுகளை அக்கறையோடு முன்வைக்கிறார்.
விவேகானந்தர், ஒரு முறை, “ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட முடியாத ஒரு சமஸ்கிருதச்சொல் “ஸ்ரத்தா” (Sradhdha)” என்றாராம். இது எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை. எனது புல்லறிவுக்கு எட்டியவரையில் சிரத்த்தை ( ஸ்ரத்தா) என்னும் சொல்லுக்கு ஆங்கிலப் பதம் அகப்படவில்லை. ரங்கராஜனின் இக்கட்டுரைகளில் நியாயமான அனுமானங்களும், மதிப்பீடுகளும், படிப்பவனை முழுதும் தாக்காவண்ணம் சென்றடையவேண்டும் , சிந்தனையைத் தூண்டவேண்டும் என்ற நிஜமான அக்கறை, கரிசனம் ,அயராத உழைப்பு சிரத்தையாகத் தென்படுகிறது.
நாம் இந்தப் புத்தகத்தை சிரத்தையோடு அணுகவேண்டும்.
அன்புடன்
ஸ்ரீமங்கை
(க.சுதாகர்).
kasturi.sudhakar@gmail.com
- வரலாற்றின் தடத்தில்
- ஆத்மாவில் ஒளிரும் சுடர்
- கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் ! (கட்டுரை 1)
- கூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா ?
- தாய்மை!
- Navarathri Celebrations 2011 NJ Tamil Sangam
- பறவையின் இறகு
- நியுட்ரினோ- இயற்பியல் கண்டுபிடிப்புகளில் ஒரு மயில் கல்
- பாரதியாரைத் தனியே விடுங்கள் !
- த்வனி
- நிதர்சனம்
- எனது இலக்கிய அனுபவங்கள் – 18 எழுத்தாளர் சந்திப்பு – 5. சி.மணி
- (78) – நினைவுகளின் சுவட்டில்
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 13
- பிரதியைத் தொலைத்தவன்
- கள்ளன் போலீஸ்
- பரீக்ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் தேடுங்கள் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி
- கட்டுநாயக்க தாக்குதல் – இரு மாதங்களின் பின்னர்…
- தங்க ஆஸ்பத்திரி
- இலக்கியங்களும் பழமொழிகளும்
- மைலாஞ்சி
- முற்றும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் என்பது என்ன ? (கவிதை – 50 பாகம் -1)
- நினைவில் நிற்கும் நேர்காணல்கள். ஒரு பார்வை.
- சுதேசிகள்
- சிற்பம்
- பூனைகள்
- சுத்த மோசம்.
- வீடழகு
- வெளி ரங்கராஜனின் கட்டுரைகள் ‘ நாடகம் நிகழ்வு அழகியல்’ – ஒரு கண்ணோட்டம்.
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (வீட்டுக்கு வரும் விருந்தாளிகள்) (கவிதை -50)
- நினைவு நதிக்கரையில் – 1
- “அவர் தங்கமானவர்”
- வார்த்தைக்குள் அகப்படவில்லை..!!
- மூன்று கவிதைகள் – பத்மநாபபுரம் அரவிந்தன்
- பயனுள்ள பொருள்
- மூன்றான வாழ்வு (சீவனைச் சிவமாக்கும் கெவனமணி மாலிகாவின் விளக்கம்)
- வானம் வசப்படும்.
- பேசும் படங்கள் :::: டீசண்டா ஒரு ஆக்ரமிப்பு….
- பஞ்சதந்திரம் தொடர் 11 – விஷ்ணுரூபம் கொண்ட நெசவாளி
- முன்னணியின் பின்னணிகள் – 7 சமர்செட் மாம்
- Request to preserve the Tamil cultural artifacts
- பன்னிரண்டு சிறுகதைகளும் ஒரு வாசகனின் மதிப்புரையும்
- உண்மையான நாடகம் இரகசிய விளையாட்டுகளில்தான்
- Nandu 2 அரண்மனை அழைக்குது