பவழவிழா நாயகன் கே.எஸ்.சிவகுமாரன்…

author
2
0 minutes, 2 seconds Read
This entry is part 29 of 37 in the series 23 அக்டோபர் 2011

மன்னார் அமுதன்

ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவருடைய மரணத்தின் போது தான் தீர்மானமாகின்றது. அந்தச் சிறப்பை வாழும்போதே பெற்றுவிட வேண்டும் என்பதற்காக நேர்மையான வழியில் உழைப்பவர்களை விட குறுக்கு வழியில் செயல்படுபவர்களே அதிகம். இவர்களுக்கு மத்தியில் 22 நூல்களை வெளியிட்டுள்ள கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் எவ்வித படோடோபமுமின்றி இயல்பாக வாழ்ந்து வருதலே அவரது சிறப்பாகும். இலங்கையின் குறிப்பிடத்தக்க திறனாய்வாளர்களுள் ஒருவராக இருந்து வரும் சிவகுமாரன் பிரபலமான இலக்கியவாதிகள் மற்றும் புத்திஜீவிகள் பலரின் நூல்களை திறனாய்வு செய்து அவற்றை நூல்களாகவும் தொகுத்துள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல்மிக்க இவர், பத்தி எழுத்து எனும் பதத்திற்கு முதன் முதலில் உயிர்கொடுத்தவர். இத்தகைய சிறப்புமிக்க கே.எஸ்.சிவகுமாரனுக்கு இலக்கிய உலகில் உரிய இடம் கொடுக்கப்படவில்லை என்பது பல இலக்கியவாதிகளின் ஆதங்கமாக இருந்து வருகின்றது.

2007 ஆம் ஆண்டில் இலங்கை மற்றும் சர்வதேச இலக்கியம் தொடர்பான தேசிய கற்கை நெறியொன்றை பகுதி நேரமாகக் கற்றுக் கொண்டிருக்கும் போது தான் கே.எஸ்.சிவகுமாரனுடைய நூல்கள் எனக்குப் பரிட்சயமாயின. கொழும்பு தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் பார்வையாளார்கள் பக்கத்தின் முன்னிருக்கையில் கே.எஸ்.சிவகுமாரனைக் கண்ட நாட்களில் அவரோடு பேசும் சந்தர்ப்பம் மிக அரிதாகவே கிடைத்தது. எல்லோராலும் அறியப்பட்ட திறனாய்வாளராக இருந்தாலும் அவரது தன்னடக்கமும், பணிவும், இளைஞர்களோடு உரையாடுவதில் உள்ள ஆர்வமும் நாளடைவில் என்னைப் போன்ற பல இளைஞர்களை அவரை நோக்கி ஈர்த்தது. இளம் எழுத்தாளர்களை நாங்கள் வளர்த்துவிடுகின்றோம் என்று மேடைக்கு ,மேடை முழங்கிவிட்டு அடுத்தமேடையில் நடு இருக்கையை பிடிக்க ஓடும் தன்னிறைவடையாத இலக்கியவாதிகளுக்கும், கணணி வைத்திருப்பவனெல்லாம் இன்று இலக்கியவாதியாகி விடுகின்றான் என்று மேடைக்கு மேடை வெம்புவோருக்கும் மத்தியில் இளைய தலைமுறை எழுத்தாளர்களின் எழுத்துக்களையும், புதிய சிந்தனைகளையும் வாசிப்பதோடு மட்டுமில்லாமல், தனது ஆக்கபூர்வமான பின்னூட்டம் மூலம் அவர்களை உக்குவித்தும் வருபவர் சிவகுமாரன்.

2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “சொன்னாற் போல -01” எனும் நூலில் “மற்றொரு இளைஞர் குழாமும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. இவர்கள் தாம் புறக்கணிக்கப்படுவதை உணர்ந்து சலிப்படைவது போலத் தெரிகிறது. ஆயினும், சந்தர்ப்பமளிக்கப்படும் போதும் இவர்களின் புதிய சிந்தனைகளை “மரபுவழித் திறனாய்வோர்” அங்கீகரிக்கும் பட்சத்திலும் பொது நீரோடையில் இணைந்து இவர்களும் சங்கமித்து ஆக்கபூர்வமாகச் செயற்படுவர்” (புதிய விமர்சகர்களும் புதுச் சிந்தனைகளும் – பக்-7) என இளைய தலைமுறையின் மீதான தனது நம்பிக்கையைப் பகர்கின்றார்.

சொன்னாற் போல 1, 2 மற்றும் மூன்று ஆகிய மூன்று நூல்களுமே கலை, இலக்கியம் தொடர்பான ஒரு தகவல் களஞ்சியமாக உள்ளது. இந்நூல்களில் இடம்பெற்றுள்ள படைப்பாளிகளின் பெயர்களும், அவர்கள் வெளியிட்ட நூல்களின் பெயர்களும் மாணவர்களுக்கும், விமர்சகர்களுக்கும் உசாத்துணை நூல்களாகப் பயன்படும் என்பதில் ஐயமில்லை.

பவளவிழா நாயகனின் தன்னடக்கத்திற்கு மற்றுமொரு சான்று “இலக்கிய வகைமை ஒப்பாய்வு” எனும் பத்தி எழுத்தில் காணப்படுகிறது. அதில் “இந்தப் பத்தியில் தவிர்க்க முடியாமல் என்னைப் பற்றியும் சொல்ல நேர்ந்திருக்கிறது. தன்னடக்க, இன்றிச் சுயபுராணமாய் இது இருக்கின்றது என நம்மில் சிலர் நினைக்கக் கூடும்.. ஆனால், என்ன செய்வது வரலாற்றில் இருட்டடிப்புச் செய்யப்படும் பொழுது, நாமே நமது சுயவிபரத்தைப் பொருத்தமறிந்து சொல்வதில் தப்பில்லை என நினைக்கின்றேன்… நீங்கள் என்ன சொல்கிறீர்கள்” என வாசகர்களிடம் கருத்துக் கேட்கிறார்.

உண்மைதான்… வரலாற்றில் இருட்டடிப்புச் செய்வதில் வல்லவர்கள் சில திறனாய்வாளர்கள்… கட்டுரைகளின் ஆழம் அதிகரிப்பதற்கு அதில் சேகரிக்கப்பட்ட உண்மைத் தகவல்களை (fact) உள்ளீடு செய்திருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திலோ அல்லது மாவட்டத்திலோ இயங்கி வந்த எழுத்தாளர்களின் பெயர்களைக் குறிக்கும்போது அனைத்து எழுத்தாளர்களின் பெயர்களையும் குறிப்பிட வேண்டும். ஓரிருவரின் பெயரை மட்டும் குறிப்பிட்டுவிட்டு, (மற்றவர்களின் பெயரை மறந்து விட்டேன்)என அடைப்புக்குள் போடுவதே ஒரு இலக்கிய இருட்டடிப்புத் தான். அவ்வாறு முற்று முழுதான தகவல்கள் கிடைக்காத போது எவருடைய பெயரையும் குறிக்காமல் விடுவது சிறப்பு. இத்தகையவர்களின் இருட்டடிப்புச் செயல்பாடுகள் தான், இலக்கியவாதி தன்னைத் தானே புகழ்ந்து எழுத வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளிவிடுகின்றன.

Critic என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு விமர்சகர், திறனாய்வாளர், நடுநிலையறிஞர்.. என இன்னும் பல தமிழ்ப் பதங்கள் உள்ள போதிலும் தன்னை ஒரு திறனாய்வாளர் என்று கூறி கொள்வதை விரும்பும் சிவகுமாரன், விமர்சகர் எனும் பதத்தை கண்டனக்காரர் என்று கூறுகின்றார். நூலின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் எழுதப்படும் விளம்பர மதிப்பீட்டுரைகள் இலக்கியத்தின் நேர்மறையான பக்கத்தை மட்டும் விபரித்துக் கொண்டு சென்றுவிடும். விமர்சனநோக்கில் எடுத்துரைக்கப்படும் நடுநிலை மதிப்பீடுகளே தீவிர இலக்கியத்தின் தூண்களாக உள்ளன. இலக்கியத்தின் வளர்ச்சியும், இலக்கியவாதியின் வளர்ச்சியும் நடுநிலை மதிப்பீடுகளை ஏற்றுக் கொண்டு திருத்தும் நிலையைச் சார்ந்துள்ளது.

மேலும் இவரது நூலின் மூலம் துணிகர எழுத்தாளர்களான சிவரமணி, செல்வநிதி தியாகராஜா, சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் பேராசிரியை ரஜினி திரணகம போன்றவர்களின் தகவல்களையும், ஈழத்தின் முன்னோடி நாவலாசிரியரும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தமிழ்ச்சங்கத்தை நிறுவியவருமான பிரான்ஸ் கிங்பெரி அடிகளாரைப் பற்றிய தகவல்களையும் அறியக்கூடியதாக உள்ளது. ஈழத்து சிறுகதைத் தொகுப்புகள் – திறனாய்வு, திறனாய்வு – அண்மைக்கால ஈழத்து சிறுகதைகள் ஆகிய நூல்கள் சிறந்த சிறுகதைகளைத் தேடிப்படிக்கும் வாசகர்களுக்கும், வளர்ந்து வரும் திறனாய்வாளர்களுக்கும் மிகவும் பயனுள்ள நூலாக அமையும்.

மகத்தான மனிதர்கள் கருத்துக்களைப் பற்றி விவாதிக்கிறார்கள். சாதாரண மனிதர்கள் நிகழ்ச்சிகளைப் பற்றி விவாதிக்கிறார்கள். மட்டமான மனிதர்கள் தான் நபர்களைப் பற்றி விவாதிக்கிறார்கள். திறனாய்வு எனும் பெயரில் நூலின் அணிந்துரையை மீண்டும் எழுதாமல் படைப்புகளின் உட்கருத்துக்களை விவாதிக்கும் மகத்தான மனிதரான பவழவிழா நாயகன் கே.எஸ்.சிவாகுமாரன் அவர்கள் இன்னும் பல நூல்களை வரலாற்றில் பதிக்க வேண்டும்.

Series Navigationஅந்த நொடிநெஞ்சிற்கு நீதி
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    s.ramasamy says:

    கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எழுகதிர் என்ற மாத இதழைத் தொடர்ந்து நடத்தி வருகின்றார் தமிழறிஞர், அருகோ. சிறந்த படைப்பாளி. சிந்தனையாளர் சா.சந்திரேசன் தலைமையில் பவழ விழாக் குழு அமக்கப்பட்டுள்ளது. அவர் குறித்த கட்டுரையையும் திண்ணையில் எதிபார்க்கின்றேன்.அரு. கோபாலன், 4/77 சுபேதார் தோட்டம், சென்னை-94. தொலைபேசி 24721009

  2. Avatar
    GovindGocha says:

    ஒருவர் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பு அவருடைய மரணத்தின் போது தான் தீர்மானமாகின்றது.— தவறான ஒரு கூற்று… பாரதியார் இதற்கு சான்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *