பஞ்சதந்திரம் தொடர் 15 அன்னமும் ஆந்தையும்

This entry is part 39 of 44 in the series 30 அக்டோபர் 2011

அன்னமும் ஆந்தையும்

 

ரு காட்டில் பெரிய ஏரி ஒன்றிருந்தது. அங்கே மதரக்தன் என்கிற  அன்னப்பறவை ஒன்று இருந்தது. அது பலவிதமாய் விளையாடி ஆனந்தமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தது. இப்படி வெகு காலம் சென்றபிறகு,  ஒருநாள் அதற்கு யமனாக ஒரு ஆந்தை அங்கு வந்து சேர்ந்தது. அதைப் பார்த்த அன்னம், ”எங்கிருந்து வருகிறாய் நீ? இது ஜன சஞ்சாரமில்லாத காடாயிற்றே!” என்று கேட்டது.

 

அதற்கு ஆந்தை; ‘உன் குணங்களைக் கேட்டுத்தான் இங்கு வந்தேன். நான் நற்குணத்தைத் தேடி உலகம் முழுவதையும் சுற்றிப் பார்த்தேன். உன்னைப்போல் நல்ல குணமுடையவர்கள் வேறு யாருமில்லை. அதனால்தான் உன்னிடம் வந்தேன். உன்னோடிருந்து உன் நட்பை நான் கட்டாயம் பெறவேண்டும்.

 

கங்கையில் சேருவதால் பாவம் புண்ணியமாக மாறுகிறதல்லவா? சங்கு என்பது ஒரு எலும்புத் துண்டுதான். என்றாலும் அது விஷ்ணுவின் கையை அடைந்து பரிசுத்தமடைகிறது.

நல்லவர்களோடு சேர்ந்தால் யாருக்குத்தான் நன்மை உண்டாகாது?’ என்று பதிலளித்தது.

 

இதைக் கேட்ட அன்னம், ஆந்தை அங்கேயே இருந்து காலங்கழிக்கச் சம்மதித்தது. ”நண்பனே, இது ஒரு சுகமான காடு. பரந்த ஏரியும் இருக்கிறது. ஏரிக்கருகில் என்னோடு இருந்துகொள்” என்றது. பிறகு அவையிரண்டும் ஒன்றாய்க்கூடி விளையாடிச் சுகமாகக் காலங்கழித்தன.

 

ஒருநாள் ஆந்தை அன்னப்பறவையைப் பார்த்து, ”பத்மவனம் என்ற என் ஜாகைக்கு நான் போகப்போகிறேன். உனக்கு என்மீது கொஞ்சமாவது மதிப்போ அன்போ இருக்குமானால் கட்டாயம் என் விருந்தாளியாக நீ வர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டு போய்விட்டது.

 

பல நாட்கள் சென்றன. அன்னப்பறவை யோசித்தது. ‘இங்கேயே நான் காலங்கழித்துக் கிழமாகிவிட்டேன். வேறு எந்த இடமும் எனக்குத் தெரியாது. இப்போது என் பிரிய நண்பன் ஆந்தையின் இருப்பிடத்துக்குப் போனால் என்ன? அங்கே பல புதிய விளையாட்டு இடங்களும், புதிய இரையும் கிடைக்குமே!” என்று எண்ணமிட்டு ஆந்தையிருக்கும் குளக்கரைக்குச் சென்றது. ஆனால் அங்கே ஆந்தை காணப்படவில்லை. மிகவும் உன்னிப்பாய் இங்கும் அங்கும்அன்னம் தேடிப் பார்த்தது. கடைசியில், பகல் குருடாகிய அந்த ஆந்தை ஒரு மரப் பொந்தில் உட்கார்ந்திருப்பதை அன்னம் கண்டு விட்டது. உடனே, ”நண்பனே, வெளியே வா, நான்தான், உன் ஆப்த நண்பனாகிய அன்னப்பறவை, வந்திருக்கிறேன்” என்றது.

 

”நான் பகலில் வெளிவந்து திரிகிறதில்லை. சூரியன் மறைந்த பின் இருவரும் சந்திக்கலாம்” என்று ஆந்தை பதிலளித்தது.

 

வெகுநேரம் அன்னம் அப்படியே காத்துக்கிடந்தது. பிறகு இரவில்  ஆந்தையைச் சந்தித்து, தன் §க்ஷமலாபங்களைப் பற்றிப் பேசியபின்,  பிரயாணம் செய்த களைப்பால் அங்கேயே தூங்கிவிட்டது.

 

அதேகாலத்தில் அந்தக் குளக்கரையில் ஒரு வியாபாரிகள் கூட்டம் கூடாரம் அடித்திருந்தது. பொழுது விடிந்ததோ இல்லையோ, கூட்டத்தின் தலைவன் கண்விழித்து எழுந்து பயணம் கிளம்புவதற்காக சங்கு எடுத்து ஊதினான். சங்கொலியைக் கேட்டதும் ஆந்தை பயங்கரமாக அலறிக் கூச்சலிட்டுக்கொண்டு குளக்கரையிலுள்ள ஒரு மரப்பொந்தில் போய்ப் புகுந்து கொண்டது. அன்னப் பறவையோ இருந்த இடத்தைவிட்டு ஆடாமல் அசையாமல் நின்று கொண்டிருந்தது. ஆந்தையின் அலறல் அபசகுனம் என்று பயந்துபோன அந்தக் கூட்டத்தின் தலைவன், சப்தத்தைக் குறியாகக் கொண்டு அம்பு எய்யும் ஒரு வில்லாளிக்குக் கட்டளையிட்டான். வில்லாளியும் வில்லில் அம்பு தொடுத்து காதுவரை நாணை இழுத்து அம்பு விட்டான். அம்பு பாய்ந்து ஆந்தைப் பொந்தின் அருகில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த அன்னத்தைக் கொன்றது.

 

ஆகையால்தான் ‘காலப் பொருத்தமற்ற காரியம்…’ என்ற செய்யுளைச் சொன்னேன்” என்றது சஞ்சீவகன். அது மேலும் பேசுகையில், ”முன்பெல்லாம் இந்தப் பிங்களகன் தேனொழுகப் பேசி வந்தது. இப்பொழுது விஷம் கக்குகிறது.

நேரில் கண்டால் அன்பாகப் பேசி மறைவிலே இகழ்ச்சியாகப் பேசும் சிநேகிதனை விலக்கிவிடு. மேலே பாலாடை மிதக்க உள்ளே விஷம் நிரம்பியிருக்கும் குடம் போன்றவர்கள், அவர்கள்.

 

தூரத்தில் பார்க்கும்போதே கை கூப்புகிறான்; கண்ணெல்லாம் நீர் நிறைகிறது; தனது ஆசனத்தில் பாதியைக் காட்டி உட்காரச் சொல்கிறான்; மார்புடன் இறுகத் தழுவுகிறான்; அவனுடைய அன்புகனிந்த பேச்சுக்கும் கேள்விகளுக்கும் முடிவேயிருக்கிறதில்லை. ஆஹா, நெஞ்சிலே விஷமும் உதட்டிலே தேனுமாகப் பேசுகிறவர்கள் மாயாஜாலத்தில் தேர்ச்சி மிகுந்தவர்கள் தான்! எவ்வளவு அதிசயமான நாடகம் இது! ஒவ்வொரு துஷ்டமும் இதை எப்படித்தான் கற்றுக்கொள்கிறானோ? ஆச்சரியமாக இருக்கிறதே!

 

என்று கூறும் செய்யுளின் உண்மையை நான் அனுபவத்தில் பார்த்து விட்டேன்.

 

ஆரம்பத்தில் மிதமிஞ்சிய உபசாரமும், பாராட்டும், பணிவும் காட்டுவதால் துஷ்டர்களின் சகவாசம் சந்தோஷம் நிறைந்து காணப்படுகிறது. பிறகு, இடைக்காலத்தில், காய்க்காத பூ போன்ற பயனற்ற அழகுச் சொற்களைச் சொரிகின்றது. கடைசிக் கட்டத்தில் துரோகம், அவமானம், அறுவறுப்பு என்கிறதில் போய் முடிந்துவிடுகிறது. தீமையையும் பொய்ம்மையையும் தர்மமாகக் கொண்ட இதை யார்தான் சிருஷ்டித் தார்களோ?

 

கெட்டவனைப் பார்! விதிப்படி நமஸ்கரித்து, எழுந்து நின்று வரவேற்று, சுற்றிச் சுற்றி வந்து உபசரிக்கிறான். அன்போடு கெட்டியாக அணைத்துக் கொள்கிறான். தனது பக்தியை விளம்பரப் படுத்துகிறான். மனத்தைக் கவரும் முறையில் இனிக்க இனிக்கப் பேசுகிறான். நற் குணங்களைப் புகழ்ந்து பாராட்டுகிறான். எல்லாம் சரி, செய்ய வேண்டியதைச் செய்கையில் காட்டு என்றால், அதை மட்டும் செய்ய மாட்டான்.

 

என்ன கஷ்டம்! புல்லைத் தின்னும் நானெங்கே, பச்சை மாமிசம் தின்னும் சிங்கமெங்கே! அதனோடு அல்லவா சேர்ந்திருந்தேன்:

 

ஒத்த குலமும், ஒத்த செல்வமும், பொருந்தியவர்களிடையேதான் திருமணமும், நட்பும் இருக்க வேண்டும். பணக்காரனுக்கும் ஏழைக்கும் இடையே அவ்வித உறவுகள் இருக்கக் கூடாது.

 

என்கிற ஜனவாக்கு மிகவும்சரி. மேலும், ஒரு பழமொழி கூறுவதுபோல்,

 

அஸ்தமிக்கிற வேளையில்தான் சூரியன் தன் ஒளியனைத்தையும் சிந்துகிறது. அதை வண்டு உணர்கிறதில்லை. தேன் குடிக்க ஆவல்கொண்டு, அந்த நேரத்தில் தாமரைப் பூவுக்குள் நுழைகிறது. அஸ்தமனமானதும் பூவுக்குள் வண்டு சிக்கிக் கொள்கிறது. இந்த வண்டு போலத்தான் மக்களும் நடந்துகொள்கிறார்கள். பலனைத் தேடியடையும் பேராசையிலே அவர்கள் அபாயங்களைக் கவனிப்பதில்லை.

 

உணவு தேடிச்செல்லும் நீர்வண்டு தேன் நிரம்பிய அன்றலர்ந்த தாமரையை விட்டுவிடுகிறது; உத்தமமான இயற்கை மணம் நிறைந்த மல்லிகையையும் விட்டுவிடுகிறது. அவற்றிற்குப் பதிலாக, யானையின் மதநீரைத் தேடித் திரிகின்றது. இதேபோலத்தான் உலகமும் நல்ல வழியைய விட்டுவிட்டுக் கெட்ட வழிகளில் செல்கிறது.

 

புதிய ருசிதரும் தேனைப் பருக விரும்பும் வண்டுகள் காட்டு யானைகளின் கன்னங்களில் வழிந்தோடுகிற மதநீரைத் தேடியடைகின்றன. ஆனால், யானைகள் காதுகளை விசிறியடித்து எழுப்புகிற காற்றிலே இந்த வண்டுகள் அடிப்பட்டுப் பூமியில் விழுகின்றன. அப்படி விழுகிற நேரத்தில்தான் முன்பெல்லாம் தாமரைப் பூவின் மடியில் தாம் இன்பமாய் விளையாடியதைப் பற்றி நினைத்துக் கொள்கின்றன.

 

குணங்களுக்குத் தகுந்தவாறு தோஷங்களும் ஒட்டிக்கொண்டு வருகின்றன. எவ்விதம் என்றால்,

 

பழக் கொத்துக்களைத் தாங்கும் காரணத்தாலேயே மரக்கிளைகள் வளைந்து போகின்றன. கனத்த தோகை இருப்பதின் காரணத்தாலேயே மயிலின் நடை மந்தமாகிவிடுகிறது. குதிதை வேகமாக ஓடுவதின் காரணத்தாலேயே பாரம் சுமக்க வேண்டியதாகிறது. அதேமாதிரிதான் நல்லவனிடம் உள்ள நற்குணங்களே அவனுக்கு எதிராக வேலை செய்வதுண்டு.

 

யமுனையின் கருநீலத் தண்ணீருக்கடியில் இருக்கிற கரு மணலில் கருநாகங்கள் வாழ்கின்றன. அவற்றின் தலையில் தாரகைகள் போல் ஒளிவீசும் நவரத்தினங்கள் இல்லையென்றால் அந்தப் பாம்புகளை யார் தேடிச் செல்வார்கள்? எந்தக் குணம் ஒரு மனிதனுக்கு உயர்வு அளிக்கிறதோ அதுவே அவனுக்கு ஆபத்தாயும் முடிகிறது.

 

குணவான்களை அரசர்கள் வெறுக்கிறார்கள். உலகில் துஷ்டனிடத்திலும்  முட்டாளிடத்திலுந்தான் பணம் போய்ச்சேருகின்றன.  இதுதான் சகஜமாக நடப்பது. ‘மனிதனுக்குக் கீர்த்தி தருவது குணமே’ என்னும் பாட்டு பொய். அவனது வீரத்தை உலகம் மதிக்கிறதில்லை.

 

கூண்டில் பிடிப்பட்டுக் கர்வமடங்கி அவமானப்பட்ட சிங்கத்தையும், அங்குசத்தால் மத்தம் பிளந்துபோயுள்ள யானைகளையும், மந்திரத்தில் கட்டுண்ட பாம்பையும், ஆதரவின்றி நிற்கும் அறிஞர்களையும், அதிர்ஷ்டம் கெட்ட வீரர்களையும், காலதேவன் பொம்மையோல் ஆட்டி வைத்து விளையாடுகிறான்.

 

அபாயமெதுவுமில்லாத ஏரியிலே மலர்ந்திருக்கும் தாமரையை விட்டுவிட்டு, வண்டுகள் நல்ல யானைகளின் மதநீரைப் பருகப் பேராவலுடன் ஓடுகின்றன. யானைகளின் காதுகள் விசிறி, அடிபட்டு வீழ்வோமே என்று அந்த மூடவண்டுகள் யோசிப்பதில்லை. அதுமாதிரியே, விளைவுகளைப் பற்றி யோசனையில்லாமலே, பேராசைக்காரர்கள் காரியம் செய்கிறார்கள். அது அவர்களின் இயல்பு.

 

யோசிக்காமல் இந்த நீசனோடு உறவு கொண்டேன். எனவே நான் சாகவேண்டியதுதான். ஒரு பழமொழி கூறுவதுபோல்,

மெத்தப் படித்தவர்களில் கூடப் பலர் அயோக்கியர்களாக இருக்கிறார்கள். தந்திரங்கள் புரிந்துதான் பிழைப்பு நடத்துகிறார்கள்.

 

ஆகையால் நல்லதோ கெட்டதோ எதுவாயிருந்தாலும் சரி, காக்கை ஒட்டகம் முதலியவை செய்தது போல் செய்ய வேண்டும் என்றது சஞ்சீவகன்.

 

”அது எப்படி?” என்று தமனகன் கேட்டதும், சஞ்சீவகன் சொல்லத் தொடங்கியது:

Series Navigationஅந்த இடைவெளி…சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 49
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *