பஞ்சதந்திரம் தொடர் 18 சமுத்திரமும் நீர்க்குருவியும்

This entry is part 22 of 38 in the series 20 நவம்பர் 2011

சமுத்திரமும் நீர்க்குருவியும்

 

பெரிய சமுத்திரம் ஒன்று இருந்தது. அதில் மீன், முதலை, ஆமை, சுறாமீன், திமிங்கிலம், நத்தை, முத்துச்சிப்பி, கிளிஞ்சல் முதலான இன்னும் எத்தனையோ ஜந்துக்கள் நிறைய இருந்தன. அதன் கரையோரத்தில் ஒரு நீர்க்குருவியும் அதன் மனைவியும் இருந்து வந்தன. ஆண் குருவிக்கு உத்தான பாதன் என்று பெயர். பெண் குருவிக்குப் பதிவிரதை என்று பெயர். ருது அடைந்ததின் பலனைப் பெற்று அந்தப் பெண் குருவி முட்டையிடும் தருணத்தில் இருந்தது. அது தன் கணவனைப் பார்த்து, ”நான் முட்டையிட வேண்டும். அதற்குத் தகுந்த இடமாகப் பார்த்துப் பிடியுங்கள்” என்று சொல்லியது.

 

”வேறு இடம் எதற்கு? நம் அப்பனும் பாட்டனும் தேடிவைத்துப் போன இந்த இடமே ரொம்ப நல்லதாயிற்றே! இங்கேயே நீ முட்டையிடு” என்றது ஆண் குருவி.

 

”இது வேண்டாம், ரொம்ப அபாயகரமான இடம். சமுத்திரம் ரொம்பவும் பக்கத்தில் இருக்கிறது. அலைநீர் உயரக் கிளம்பிப் பாய்ந்து என் குஞ்சுகளை அடித்துக்கொண்டு போனாலும் போய்விடும்” என்றது பெண் குருவி.

 

”அன்பே! இந்த உத்தானபாதனைச் சமுத்திரத்துக்கு நன்றாகத் தெரியும். எனக்கு விரோதமாக நடந்துகொள்ள அதற்குத் திராணி கிடையாது.

 

பாம்பின் தலையில் ஜொலிக்கிற மாணிக்கத்தை முன்பின் யோசிக்காமல் யார் பறிக்கப் போவார்கள்? ஒரே பார்வையில் எதிரியைக் கொல்லக் கூடியவனை யார்தான் கோபமூட்டுவார்கள்?

 

என்கிற பழமொழியையும்,

 

பச்சைப்பசை எதுவுமில்லாத பாலைவனமாகவே இருந்தாலும், கோடை வெயில் உடலைக் கொளுத்திக் கொண்டிருந்தாலும், யாராவது மதயானையின் நிழலில் தங்குவதற்குப் போவார்களா?

 

என்கிற பழமொழியையும் நீ கேட்டதில்லையா? மேலும்,

 

பனித்துளிகளைச் சுழற்றியடிக்கும் குளிர்காற்று விடியற்காலையில் வீசிக் கொண்டிருக்கும்போது, நன்மை தீமை தெரிந்தவன் யார்தான் தண்ணீரைக் கொண்டு ஜலதோஷத்தைப் போக்க நினைப்பான்?

 

மதயானையின் மத்தகத்தைப் பிளந்த சிரமத்தோடு சிங்கம் தூங்கிக்கொண்டிருக்கிறது. அந்த யமனைப்போய் யாராவது தட்டி யெழுப்புவார்களா? யமலோகத்தை எட்டிப் பார்க்க யார்தான் விரும்புவார்கள்?

 

பயமில்லாமல் யமலோகத்துக்குப் போய் யமனுக்கு உத்தரவு போடுகிறவன் மாதிரி உனக்கு விரோதி யாரும் கிடையாது. அப்படி இருக்கிறதாகச் சொன்னால் என் உயிரைத் தரத் தயார்.

 

நூற்றுக்கணக்கான தீ நாக்குகள் ஆகாயத்தை எட்டி நக்கியபடி புகையில்லாமல் பயங்கரமாக எரியும் நெருப்பிலே எந்த முட்டாள்தான் நுழையத் துணிவான்?

 

என்றது ஆண் குருவி.

 

ஆண் குருவியின் பலம் பெண் குருவிக்குத் தெரியாதா? இந்தப் பேச்சைக் கேட்டதும் அதற்குச் சிரிப்பு வந்துவிட்டது. ”உங்கள் பேச்சு ரொம்ப நன்றாகத்தானிருக்கிறது. போங்கள்! எனக்கும் அநேகம் சொல்ல முடியும்.

 

பட்சிராஜனே! இப்படி நீ பெருமையடித்துக் கொண்டால் உன்னைப் பார்த்து உலகம் சிரிக்கும்.

 

யானையைப்போல் முயலும் லத்தி போட்டது என்றால், அது கேட்பதற்கு அதிசயமான விஷயம்தான்.

 

உங்கள் பலம் என்ன, பலவீனம் என்னவென்று உங்களுக்கே எப்படித் தெரியாமல் போயிற்று? ஒரு பழமொழியைக் கேட்டிருப்பீர்களே!

 

தன்னை அறிவதே கஷ்டமான வேலைதான்; எது சரியான வேலை, எது வீண்வேலை, என்று அறிவதும் கஷ்டம்தான். இருந்தபோதிலும், தன் சக்தியை அளந்தறிந்தவனுக்கு நெருக்கடியான காலங்களில் துன்பம் எதுவும் ஏற்படுகிறதில்லை.

 

‘என் சக்தி இவ்வளவுதான்; இன்னின்ன காரியத்தைத்தான் நான் சாதிக்க முடியும்’ என்று உணர்ந்து யார் நடந்து கொள்கிறானோ அவனே புத்திசாலி. அவன்தான் பலனடைவான்.

 

இன்னொரு சரியான பேச்சையும் கேளுங்கள்!

 

தனக்கு நன்மை செய்யும் சிநேகிதர்களின் பேச்சைக் கேட்காதவன், கட்டையிலிருந்து நழுவி உயிர்விட்ட ஒரு முட்டாள் ஆமையின் கதிக்கு ஆளாகிறான்.

 

என்றது பெண் குருவி. ”அது எப்படி?” என்று ஆண் குருவி கேட்கவே, அதன் மனைவி சொல்லத் தொடங்கியது:

Series Navigationஇந்துக்களுக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பில்லைதமிழ் விக்கிப்பீடியா ஒரு ஊடகப் போட்டி
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *