வாசிப்பும் வாசகனும்

This entry is part 29 of 38 in the series 20 நவம்பர் 2011

வாசிப்பு என்பது வெறுமே புத்தகங்களை வாசிப்பது என்பது மட்டுமல்ல. இந்த மனிதர்களை, மரம் செடி கொடிகளை, இந்த வானத்தை, பறவைகளை, இதர ஜீவ ராசிகளை, இயற்கையை இப்படி அனைத்தையும் வாசிக்கக் கற்றுக் கொண்டவன்தான் ஒரு தேர்ந்த வாசகனாக முடியும் என்று சு.ரா. அவர்கள் அவரது கட்டுரை ஒன்றில் சொல்லியிருப்பார். வாசிக்கக் கற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் இதை நீக்கமற உணர்ந்திருக்க வேண்டும்.
வாசிப்பினால் மனிதன் தேர்ந்த விவேகமுள்ளவனாக மாறுகிறான். வாசிப்பு மனிதனின் சளசளப்பைப் போக்கி அமைதியை உண்டாக்குகிறது என்றும், கதைகள் எழுதுபவர்கள், கவிதைகள் எழுதுபவர்கள், கதைகளாய் மட்டும் படித்தால் போதாது, கவிதைகளாய் மட்டும் படித்தால் போதாது, கதை, கவிதை, கட்டுரை, நாடகங்கள், சமகால நிகழ்வுகளின் தொகுப்புகள், ஆய்வு நூல்கள், மொழி பெயர்ப்புகள் இப்படி எல்லாவற்றையும் படித்தாக வேண்டும் என்பதும் அவரின் அறிவுரையாக இருக்கும்.
இதை அவரென்ன சொல்வது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதானே என்று இதைப் படிக்கும்போது நினைக்கும் பலர், இப்படிப் பகுத்து உணர்ந்து மனதுக்குள் வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. அல்லது மேற்கண்ட கூற்றுப்படி தொடர்கிறார்களா என்பதும் சந்தேகமே. பலவற்றையும் படிப்பவர்களை விட படித்ததாகக் காட்டிக் கொள்பவர்கள்தான் இங்கே அதிகம். அது என்னவோ எழுத்துலகத்தில் இம்மாதிரியான யதார்த்தமில்லாத நிலைமை எல்லாக் காலத்திலும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. படித்தவர்களிடமிருந்து அடக்க ஒடுக்கமாகக் கேட்டுக் கொள்ளுதல், அவற்றைக் கூடியவரை பின்பற்ற முயலுதல், இயன்றவரை தேடித் தேடிப் படிக்கும் முயற்சியில் இறங்கி, நமது வாசிப்பு அனுபவத்தைப் பிறரோடு தனக்குத் தெரிந்தவரை பகிர்ந்துகொள்ள முயலுதல் என்பதான முனைப்புகள் பெருவாரியாக இல்லையென்றுதான் தோன்றுகிறது.
படிக்காதவர்கள் படித்ததுபோல் காட்டிக்கொள்ளுதலும், படித்தவர்கள் நீயெல்லாம் என்னய்யா படிச்சிருக்கே? என்பதுபோல் மெத்தனமாகத் திரிதலும் இங்கே சர்வசாதாரணமான காட்சியாகப் பரிமளிக்கிறது.
யாரும் எளிமையாக இருக்கத் தயாரில்லை என்பதுதான் உண்மை. போகட்டும். விட்டு விடுவோம். காலம் இதை மாற்றிக் காட்டினால் மகிழ்வோம். ஆனால் ஒன்று. வித்தியாசமான புத்தகங்களை எடுத்துப் படிக்கும்பொழுதுதான் தெரியும் ஆஉறா! இந்த மனிதர்களுக்கு எப்படியான அனுபவங்களெல்லாம் கிட்டியிருக்கின்றன. இவற்றையெல்லாம் இத்தனை காலம் தெரிந்து கொள்ளாமல் போய்விட்டோமே! இன்னும் என்னென்னவைதான் இங்கே கொட்டிக் கிடக்கின்றன? இவற்றையெல்லாம் படித்து அனுபவிக்க நமக்கு ஆயுள் இருக்குமா? இறைவா! அதற்கான உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும், வாழ்நிலை சூழலையும் எனக்கு ஏற்படுத்திக் கொடுப்பாயாக….என்று மனம் ஏங்கிக் தவிக்கும்.
படிப்பு அனுபவத்திலிருந்துதான் படைப்பு அனுபவம் கிடைக்கிறது. எனவே இரண்டையும் பிரிக்க முடியும் என்று தோன்றவில்லை. தொடர்ந்த வாசிப்பு அனுபவம் படைப்பு அனுபவத்திற்கு ஊக்கமளிக்கிறது.
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் இரண்டு விதமான அனுபவங்கள. ஒன்று அவனது சொந்த வாழ்க்கையில் அவன் எதிர்கொள்ளக் கூடியவை. இன்னொன்று அனுபவப்பட்டு முதிர்ந்து அதனை எழுத்தில் வடித்து வைத்திருக்கும் பெரியோர்களின் எழுத்துக்களை, அவர்களது அனுபவங்களைப் படித்தறிதல்.
இந்தப் பயிற்சயை நாம் தொடர்ந்து மேற்கொண்டோமானால்தான் விஷய ஞானம் என்பது நமக்குக் கைகூடும்.
அது எப்படிக் கிடைக்கும்? இந்த உலகத்தில் எதுவுமே சும்மாக் கிடைக்காது. ஒன்று கொடுத்தால்தான் ஒன்று கிடைக்கும். நிறையப் படிக்க வேண்டும் என்றால் நம் நேரத்தை அதற்குக் கொடுக்க வேண்டும். மூளையைச் செலுத்திப் படிக்கும் உழைப்பை அதற்கு வழங்க வேண்டும்.
நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்து அதனைக் காசு கொடுத்துத் தயங்காமல் வாங்கிப் படிக்க வேண்டும். பொருளாதாரச் சூழல் என்று ஒன்று இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லைதான்.
ஒரு நல்ல எழுத்தாளனாக இருப்பதைவிட, ஒரு நல்ல வாசகனாக இருப்பது மிகவும் கடினம். அது மிகப் பெரிய விஷயமும் கூட.
தேர்ந்த வாசகர்கள் மிகப் பெரிய அரிதான விஷயங்களை உள்ளடக்கியவர்களாக இருப்பார்கள். அவர்களை நமக்கு மட்டும்தான் தெரியும் என்கிற நோக்கில் எளிதாக அணுகிவிட முடியாது.
தனது ஒரு கட்டுரையில் திரு ஜெயமோகன் அவர்கள் இப்படிக் கூறுகிறார்.

”நான் இலக்கிய வாசகன் என்ற எண்ணம் நமக்கு ஏற்படுவது ஒரு முக்கியமான தன்னுணர்வு. நான் பொழுது போக்கிற்காகப் படிப்பவனல்ல. வாழ்க்கையை அறிவதற்காகப் படிப்பவன். நான் வாசிப்பை உழைப்பாக எடுத்துக் கொள்ள அஞ்சாதவன் என்ற எண்ணம் வேண்டும். இலக்கியம் எந்த மொழியிலும் வாசகனின் ஊக்கத்தாலேயே அடையக் கூடியதாக உள்ளது. நம் மக்களுக்கு தெம்மாங்குப் பாட்டையும் தெருக் கூத்தையும் ரசிக்கும் பயிற்சி கிராம வாழ்க்கை மூலம் இயல்பாகச் சிறு வயதிலேயே கிடைக்கிறது. சினிமாப் பார்க்கும் பயிற்சியும் அப்படித்தான். இதே பயிற்சி இலக்கியம் முதலிய நுண் கலைகளுக்குக் கிடைப்பதில்லை. மார்க்ஸ், ஏங்கல்ஸ், எழுதிய தத்துவ நூல்களை எத்தனை மக்கள் படித்திருக்கிறார்கள்? மக்கள் படிக்கவில்லை என்பதால் அவை மக்கள் விரோத எழுத்து என்று ஆகி விடுமா? மருத்துவம் மக்களுக்காக. ஆகவே அனைத்து மருத்துவக் கட்டுரைகளும் மக்களுக்குப் புரிந்தாக வேண்டம் என்று சொல்ல முடியுமா?”

இசையை, ஓவியத்தை, இலக்கியத்தை எவ்விதத் தயாரிப்பும் இன்றி அணுக முடியாது. இலக்கிய வாசிப்பு என்பது ஒரு இலக்கியப் படைப்பானது மொழியின் வழியாக வாசகனின் ஆழ் மனதுடன் தொடர்பு கொள்ளும் முறையாகும். இது அக மனத்தை முன்னிறுத்தி நடத்தப்படுவது. வாசிப்புப் பயிற்சி என்பது அக மனத்தை வாசிப்புக்குப் பழக்கப்படுத்துவதுதான். அதாவது எப்படி தமிழ் போன்ற ஒரு மொழியைக் கற்கிறோமோ அதேபோல் மொழிக்குள் செயல்படும் படைப்பு மொழி என்ற தனி மொழியைக் கற்பதுதான் இலக்கியக் கல்வி.”

இதற்கு மேல் இன்னும் என்ன அழகாகச் சொல்ல வேண்டும்?
இந்தப் படிப்பனுபவத்திலிருந்துதான் படைப்பனுபவம் கிடைக்கிறது என்பதை நாம் மறுக்க முடியாது. மிகச் சிறந்த படைப்புக்களைப் படிக்கும்போது இதுபோல நம்மாலும் எழுத முடியுமா? என்ற ஆதங்கம் தோன்றுகிறது. இந்த ஆதங்கம்தான் படைப்பை உருவாக்கும் சக்தியாகப் பரிணமிக்கிறது.
மேலான வாசகனாக இருத்தல் மேன்மையான படைப்புகளுக்கு வழி வகுக்கும். வாழ்க்கைச் சூழல்கள் எல்லோருக்கும் மிதமான முறையில் அமைந்தால்தானே இது சாத்தியம்?
படிக்க வேண்டும் என்றால் நல்ல குடும்பச் சூழல் அமைய வேண்டும். மன அமைதி, இட அமைதி, சுமுக நிலை இருந்தால்தானே இது சாத்தியம். இவை எல்லாவற்றிற்கும் மேலாகப் பொருளாதார நிலை என்ற ஒன்றும் வெகு முக்கியமான ஒன்றாக அமைந்து விடுகிறதல்லவா?
எழுத்தாளர்களும் சராசரி நடப்பியல்களுக்கு உட்பட்டவர்கள்தான். ஆனாலும் சற்றே வித்தியாசப்பட்டுத்தான் ஆக வேண்டும். அதுதானே நியாயம்?
இந்தச் சமுதாயத்திற்குச் செய்தி தரக்கூடியவன், மனித மனங்களை ஆட்டிப் படைக்கக் கூடியவன், மனிதச் சிந்தனைகளை மேம்படச் செய்யக் கூடியவன், சக மனிதனை, அவனது மென்மையான உணர்வுகளை, அவன் நெஞ்சின் ஈரப் பகுதியை, ஆழப் புதைந்திருக்கும் நன்னெறிகளை, சிறிதளவேனும் தட்டி எழுப்பிட வேண்டும்தானே? ஒரு படைப்பின் நோக்கம் அதுவாகத்தானே இருக்க முடியும்? இருக்க வேண்டும்? அதுதானே ஒரு படைப்பாளியின் அடையாளமாக இருக்க முடியும்? இலக்கியம் என்பது இலக்கினை இயம்புதல். அந்த இலக்கு மனித வாழ்க்கைக்கு பயன் தரத்தக்கதாக அமைய வேண்டும்.
வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்லுவது தத்துவம். வாழ்க்கையைச் சொல்லுவது அதன் இரசனையைச் சொல்லுவது இலக்கியம். இது புதுமைப்பித்தன் கூற்று.
ரசனையைச் சொல்லுவது என்பது இலக்கியத்திற்கு மிகவும் அவசியம்தான். ரசனை இல்லையென்றால் ஒருவன் எழுத்தாளனாக முடியாது. ஆழ்ந்த ரசனைதான் ஒரு படைப்பாளியை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
ஒரு சாமான்யர் ஒரு விஷயத்தைப் பார்ப்பதற்கும், அதையே ஒரு படைப்பாளி பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
ஒரு பூவைப் பார்த்ததும் அதைப் பறிக்க நினைப்பவன், பறிப்பவன், சாமான்யன். ஆனால் அதைச் செடியிலேயே வைத்து, பச்சைப் பசுந்தளிர்களுக்கு நடுவே பட்டுப்போன்ற பளபளப்புடன் மலர்ந்து சிரிப்பதைக் கண்டு மயங்கி நிற்பவன் படைப்பாளி.
சாலையில் நடந்து செல்கிறோம். இரு புறமும் வானளாவிய மரங்கள். அந்த மரங்களைப் பார்க்கும்போது இவனுக்கு இவன் மூதாதையர்களைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது என்னும் பொழுது அங்கே படைப்பாளி நிற்கிறான்.
இதைத்தான் கலைத்தன்மை என்கிறார்கள் என்பதாகத்தான் நான் புரிந்து கொள்கிறேன். ஆழ்ந்த ரசனையின்பாற்பட்ட விஷயம் இது.
கதைகளின் உள்ளடக்கம் முற்போக்காக இருந்தாலும் அவற்றின் கலைத் தன்மை வலுவாக இருந்தால்தான் அவை வாசகனைச் சென்றடையும்.
வயலிலே இறங்கி கூலிக்கு வேலை செய்யும் ஒரு பெண் நாற்று நடும் அழகைப் பார்த்து அவள் மீது அன்பு கொள்வார் ஒருவர். அந்தக் காட்சியை மேலாண்மை தனது ஒரு படைப்பில் விவரிப்பார். அங்கே கலைத்தன்மை பளிச்சிடும்.
இந்தக் கலைத் தன்மை, படைப்பின் நேர்த்திக்கு, வாசிப்பு அனுபவத்துக்கு, அதன் கட்டுக் கோப்புக்கு உதவும் என்கிற நிலையில் எழுத்தின் பயன் என்ன, எழுத்தாளனின் திறமை வெளிப்பட்டால் போதுமா? எழுத்தின் பயன்பாடு? அங்கேதான் எழுத்துக்கான அவசியம் அதிகமாகிறது என்று தோன்றுகிறது. இலக்கியம் மனிதனை நெறிப்படுத்துவதாக அமைய வேண்டும் என்பது மிக அவசியமாகிறது.
எந்தவொரு நிகழ்வையும் அன்பு, கருணை, உண்மை, நேர்மை, நியாயம் என்ற வட்டத்திற்குள் இருந்து பார்க்கப் பழகிக்கொண்டால், மனிதர்கள் அதிலிருந்து பிறழும்போது மனம் புழுங்கும். உள்ளுக்குள் கோபம் கனன்று நிற்கும். மனம் அழும். அவற்றின் வடிகாலாகப் படைப்புக்கள் உருவாகும். இந்த அனுபவங்கள் நம் அன்றாட வாழ்வில் சக மனிதர்களிடமிருந்து நமக்குக் கிடைக்கும். மன உலகம் கதையுலகமாக விரியும். பாவனையின்றி, பகட்டு இன்றி, ஆடம்பரமின்றி, படாடோபமில்லாமல் மனமொழி நடை, எவ்வித ஒப்பனையுமின்றி நேர்மையுடன் வெளிப்படும். இந்த மன உண்மையும், நேர்மையும் வாசகனுக்கு மரியாதையை ஏற்படுத்தும்.
வாசிப்பும், வாசகனும், படைப்புக்களும் எப்படியெல்லாம் விரிந்திருக்கின்றன?

Series Navigationகை மாறும் கணங்கள்முகம்மது யூனுஸ் அறிஞர் அண்ணாவை ஹாங்காங்கில் சந்தித்தது பற்றிய உரை
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    லறீனா அப்துல் ஹக் says:

    பயன்மிக்க அருமையான பதிவுக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *