சஸ்பென்ஸோ சஸ்பென்ஸ்!

This entry is part 15 of 37 in the series 27 நவம்பர் 2011

சிறந்த அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆல்ஃபிரட் ஹிச்காக், திறமையான இயக்குநருங்கூட. பார்ப்பவர்களை நொடிக்கு நொடி திகிலுக்குள் மூழ்க வைக்கும் சஸ்பென்ஸ் படங்கள் எடுப்பதில் வல்லவர். அவரைப் பாராட்டிப் பெரிய ஓட்டல் ஒன்றில் விருந்து வைபவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. செல்வச் செழிப்பு மிக்க வணிகப் பெருமக்கள் பலரும் வந்திருந்தார்கள்.
ஹிச்காக் அருகில் அமர்ந்திருந்த செல்வந்தர் திடீரென்று, “உங்கள் படங்களில் மயிர்க்கூச்செறியும் சஸ்பென்ஸ் நிரம்பியிருப்பது உண்மைதான். அவை உங்கள் கை வண்ணம் தான் என்று நான் நம்ப வேண்டுமானால், இப்போதே சஸ்பென்ஸ் திரில் சொல்லுங்கள்” என்றார்.

இதைக் கேட்ட ஹிச்காக், “நான் ஒன்றும் அவ்வளவு பெரிய கெட்டிக்காரன் இல்லை. உடனே உங்களை சஸ்பென்ஸில் ஆழ்த்தும் ஆற்றல் என்னிடம் கிடையாது. இருந்தாலும் என் நண்பர் மார்ட்டின் என்பவருக்கு ஏற்பட்ட ஒரு சுவையான அநுபவத்தைக் கூற விரும்புகிறேன்” என்றவாறு கீழ்கண்ட நிகழ்ச்சியை விவரித்தார்.

பாரிஸ் நகரில் செலவழிக்க பிரெஞ்சுப் பணம் தேவையாக இருந்தது. அதனால் தன் மனைவியை ஓட்டல் அறையிலேயே பத்திரமாய் இருக்கும்படிச் சொல்லிவிட்டு, தன்னிடமிருந்த டாலர் நோட்டுக்களை எடுத்துக் கொண்டு, அந்நியச் செலவாணி மாற்றித் தரும் வங்கி ஒன்றுக்குப் போய், பிரெஞ்சுப் பணம் மாற்றிக் கொண்டார். இந்த அலைச்சலில் கொஞ்சம் அசதி ஏற்பட்டதால் தலைவலி தோன்றவே, ஆஸ்பிரின் மாத்திரை போட்டுக் காபி சாப்பிடலாம் என்று எதிரில் இருந்த சிற்றுண்டி விடுதியில் நுழைந்து, காபிக்கு ஆர்டர் செய்தார்.

அப்போது கிண்கிணிக் குரலில் சிரிப்பொலி கேட்கவே, தலை நிமிர்ந்து பார்த்தார் மார்ட்டின். அருகில் மயக்கும் பேரழகுடன் ஒரு பெண் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, “என்ன உதவி தங்களுக்கு நான் செய்யக் கூடும்,” என்று ஆடவர்க்கே உரிய ஒயிலோடு ஆங்கிலத்தில் கேட்டார். ஆனால் அந்தப் பெண் ஒன்றும் பேசாமல், முத்துப் பற்கள் தெரிய முகத்தில் ஒரு மோகனப் புன்னகையைத் தவழவிட்டவளாய், கையகலக் காகிதத் துண்டு ஒன்றை டேபிளில் வைத்துவிட்டு, உடனே அந்த இடத்தை விட்டுப் போய்விட்டாள்.

காகிதத் துண்டை எடுத்துப் பார்த்த மார்ட்டினுக்கு ஒன்றும் புரியவில்லை. பிரெஞ்சு மொழியில் ஏதோ எழுதியிருந்தது. ‘அடடா..! பிரெஞ்சுக் கற்றுக் கொள்ளாதது எவ்வளவு தப்பு” என்று மனத்திற்குள்ளாகவே எண்ணிக் கொண்டிருந்த போது, சர்வர் காபியைக் கொண்டு வந்து வைத்தான். ஆவலை அடக்க முடியாத மார்ட்டின், அந்தக் காகிதத் துண்டை சர்வரிடம் கொடுத்து, வாசித்துக் காட்டும்படியாய்க் கேட்டார்.

அதைப் படித்த சர்வருக்கு முகமெல்லாம் ‘குப்’பென்று ரத்தம் பாய்ந்து சிவப்பானது. ‘என்ன?’ என்றார் மார்ட்டின். பதில் பேசாத சர்வர் பற்களை நரநரவென்று கடித்தவாறு, முஷ்டி பிடித்த தன் வலக்கரத்தை டேபிளில் ஓங்கிக் குத்திவிட்டு, அவ்விடத்தைவிட்டு அகன்றான். ஒன்றும் புரியாத மார்ட்டின், சர்வர் கீழே போட்டுச் சென்ற காகிதத் துண்டை எடுத்துக் கொண்டு, காபியில் ஆஸ்பிரின் மாத்திரையைக் கலந்து சாப்பிட்டபின், டேபிளில் அதற்குரிய சில்லரையை வைத்துவிட்டு எழுந்தார்.

சிற்றுண்டி விடுதியின் கேஷ் கவுண்டரைக் கடந்தபோது, அந்தக் காகிதத் துண்டை கேஷியரிடம் கொடுத்து படித்துச் சொல்லும்படி பவ்யமாக கேட்டுக் கொண்டார் மார்ட்டின். அதைப் படித்த கேஷியர், கோபம் கொப்பளிக்க, பிரெஞ்சு மொழியில் ஏதோ கத்தினார். உடனே பயில்வான்கள் போன்ற இரண்டு பணியாளர்கள் அங்கே வந்து, மார்ட்டினின் கோட்டைப் பற்றி இழுத்து, வெளியிலே தள்ள, வீதியில் வந்து குப்புற விழுந்தார்.

‘இது என்ன விபரீதம்?’ என்று எண்ணமிட்டவராய், கோட்டில் ஒட்டிக் கொண்டிருந்த மண்ணைத் தட்டிவிட்டவாறு, வீதியில் நடக்க ஆரம்பித்தார். ‘டாண் டாண்’ என்று மாதா கோவில் மணியோசை கேட்டது. கைத்தடி ஊன்றியவாறு எதிரில் பாதிரியார் வந்து கொண்டிருந்தார். ‘இவர் தான் இதற்குச் சரியான ஆள்’ என்று முடிவு செய்த மார்ட்டின், அந்தப் பாதிரியாரை அணுகி, ‘இதைப் படித்துக் காட்டுங்களேன்’ என்று காகிதத் துண்டைக் கொடுத்தார். அதைப் படித்துப் பார்;த்த பாதிரியார், உடம்பெல்லாம் பதற, ‘கர்த்தரே காப்பாற்றும்’ என்று முணுமுணுத்தவாறு, மார்பில் சிலுவைக் குறியிட்டு, கைத்தடியை நழுவ விட்டதால், கீழே விழுந்து காலை முறித்துக் கொண்டார்.

மார்ட்டினுக்கு முகம் பேயறைந்தாற்போல் ஆகிவிட்டது. இனிமேல் முயன்றால் பேராபத்தாய் முடியும் என்று எண்ணியவாறு, நேரே தன் மனைவியை விட்டு வந்திருந்த ஓட்டலுக்குப் போனார். அப்போதுதான் அவருக்கு நினைவு வந்தது. மனைவிக்கு பிரெஞ்சு மொழி தெரியும். உயிரையே தன் மேல் வைத்திருக்கும் மனைவி, தவறாக ஒன்றும் நினைத்துக் கொள்ள மாட்டாள் என்று முடிவு செய்தவராய், நடந்ததையெல்லாம் விளக்கிக் கூறி, காகிதத் துண்டை அவளிடம் கொடுத்து, ‘அப்படி அதில் என்ன தான் எழுதியிருக்கிறது?’ என்று கேட்டார்.

அவளும் அதைப் படித்துப் பார்த்தாள். அவ்வளவுதான்! முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது! ஒன்றுமே பேசாத அவள், நேரே வக்கிலைத் தேடிச் சென்று, தன் கணவனிடமிருந்து விவாகரத்து வேண்டும் என்று கோரி, கோர்ட்டில் வழக்கு தொடுத்துவிட்டாள்.

பயணம் வந்த இடத்தில் இப்படி ஒரு பயங்கரம் நேர்ந்ததே என்று தலையைப் பிய்த்துக் கொண்டார் மார்ட்டின். ‘உயிருக்குயிரான மனைவியே விவாகரத்துக் கோரி வழக்குத் தொடுத்துவிட்ட பிறகு இனி வாழ்வில் என்ன இருக்கிறது. உயிரை விட வேண்டியதுதான்’ என்று முடிவுக்கு வந்தவராய், பாதுகாப்புக்காகப் பெட்டியில் வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து, நெற்றிப் பொட்டில் வைத்து, விசையை அழுத்தப் போனார். பளிச் என்று ஓர் எண்ணம். ‘சாவது தான் சாகப் போகிறோம். இவ்வளவுக்கும் காரணமான அந்த காகிதத் துண்டில் என்னதான் எழுதியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால் நிம்மதியுடன் சாகலாம்’ என்ற நினைப்பில், அதை எடுத்துக் கொண்டு ஓர் இராணுவ அதிகாரியின் வீட்டுக்குப் போனார்.

“என்ன விஷயம்?” என்று அந்த இராணுவ அதிகாரி கேட்க, அதற்கு மார்ட்டின், நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறி, “முதலில் இந்தத் துப்பாக்கியைக் கையில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று தான் கொண்டு போன கைத்துப்பாக்கியை அவரிடம் கொடுத்துவிட்டு, “நான் தரப் போகும் காகிதத் துண்டில் ஏதோ மர்மச் செய்தி அடங்கி இருக்கிறது. அதை நீங்கள் எனக்குத் தயவு செய்து படித்துக் காட்ட வேண்டும். மற்றவர்களுக்கு வந்தது போல் உங்களுக்கும் கோபம் வந்தால், அந்தத் துப்பாக்கியால் என்னைச் சுட்டுவிடுங்கள். ஆனால் அதற்கு முன்பு, காகிதத் துண்டில் எழுதியுள்ள விஷயம் என்ன என்பதை மட்டும் எனக்குச் சொல்லிவிட வேண்டும்” என்றார்.

இதைக் கேட்ட இராணுவ அதிகாரி, “முதலில் அந்தக் காகிதத் துண்டை எடுங்கள்” என்றார்.
மார்ட்டின் அதை எடுக்கக் கோட்டுப் பாக்கெட்டில் கையை விட்டார். திகீரென்றது. காரணம். அந்தக் காகிதத் துண்டைக் காணவில்லை.

இந்தக் கட்டத்தில் ஹிச்காக்கின் உதவியாளர் அவரிடம் வந்து காதில் ஏதோ மெதுவாகச் சொல்லவே, “அப்படியா?” என்றவாறு சோபாவைவிட்டு எழுந்தார்.

ஆனால், கதை கேட்டுக் கொண்டிருந்த செல்வந்தர், “முடிவைச் சொல்லிவிட்டுப் போங்கள்! அந்தக் காகிதத் துண்டில் அப்படி என்னதான் எழுதியிருந்தது?” என்று ஆவல் மிகுந்தவராய்க் கேட்டார்.

“மாலை ஐந்து மணிக்கு என் வீட்டுக்கு வாருங்கள். சொல்கிறேன்” என்றவாறு ஹிச்காக் போயே போய்விட்டார்.
மாலை வரை செல்வந்தர் தலையைப் பியத்துக் கொண்டார். ஆவலை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. சரியாக ஐந்து மணிக்கு ஹிச்காக்கின் வீட்டிற்குச் சென்று “இனியும் என்னால் தாங்க முடியாது. சொல்லுங்கள் அந்த மர்மச் செய்தியை!” என்றார்.

அதைத் தெரிந்து கொள்ள உங்களைவிட எனக்கும் ஆவல் தான். ஆனால், மார்ட்டின் என்ன தேடியும் அந்தக் காகிதத் துண்டு கிடைக்கவேயில்லையே!” என்று குறும்பாகச் சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் ஹிச்காக்.

—-

Series Navigationமலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 2செல்வராகவனின் மயக்கம் என்ன ..
author

சகுந்தலா மெய்யப்பன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *