ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 17

This entry is part 5 of 37 in the series 27 நவம்பர் 2011


ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா
தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா


“இல்லை, இல்லை !  கடவுள் கைகொடுப்பார் உனக்கு.  நீங்கள் பணத்தை ஏற்றுக் கொண்டது நியாயமே ! நமது சல்வேசன் சாவடியை நீங்கள் காப்பாற்றினீர் !  ஆனால் என் மனது அதை ஏற்கத் தயங்குகிறது.  போ போ அணி வகுப்புடன் !  இன்று உன் சொற்பொழிவைக் கேட்கப் பெரிய கூட்டம் வந்திருக்கும் !”

ஜார்ஜ் பெர்னாட் ஷா (மேஜர் பார்பரா)


மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி :
இந்த நாடகம் ‘ஏழ்மைக் காப்பணிச் சேவகி’ மேஜர் பார்பரா (Major of Salvation Army) வாழ்வில் நேர்ந்த வெற்றி, தோல்வியைப் பற்றியது.  அவள் புரிந்த அரிய சமூகத் தொண்டில் இயற்பாடுக்கும், மெய்ப்பாடுக்கும் (Idealism & Realism) இடையே ஏற்பட்ட ஒரு போராட்டத்தைப் பற்றியது.  அந்தத் தொண்டுக்கு ஆதரவாக நிதி உதவி செய்யும் அவளது இராணுவ ஆயுத உற்பத்தித் தந்தை ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) மற்றும் பார்பராவை மணக்கப் போகும் கிரேக்கப் பேராசியர் அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) ஆகியோருடன் பார்பரா போராடுவதை விளக்குவது. “நமது கொடுமைகளில் கோரமானது, குற்றங்களில் கொடூரமானது மானிட ஏழ்மை.  மற்ற தேவை ஒவ்வொன்றையும் நாம் தியாகம் செய்து, நமக்கு முதற் கடமையாக இருக்க வேண்டியது மனிதர் ஏழ்மையை இல்லாமல் நீக்குவதே,” என்று மேஜர் பார்பரா நாடகத்தின் முன்னுரையில் பெர்னாட் ஷா கூறுகிறார்.  மேஜர் பார்பரா நாடகப் படைப்பின் அழுத்தமான குறிக்கோளும் அதுவே.

 

வறுமையைப் போக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மனித இனம் வெறுக்கத் தக்கது என்று சாடுகிறார் பெர்னாட் ஷா.  ஏழ்மை நீக்கப் பாடுபடும் காப்புப் படைச் சேவகி மேஜர் பார்பராவைச் சமூகம் ஆதரிக்க வேண்டுமா அல்லது அவளை ஒதுக்கி விட வேண்டுமா என்று நம்மைக் கேட்கிறார் பெர்னாட் ஷா !  ஆயுத உற்பத்தியில் கோடிக்கணக்கானப் பணச் சேமிப்பையே மதமாகக் கருதும் அவளது தந்தை, ஏழ்மைக் காப்பணிக்கு நிதி உதவி செய்வது நியாயமா அல்லது தவறா என்ற முரணான ஒரு வினாவை எழுப்புகிறது நாடகம் !  போருக்கு  ஆயுதங்கள் உற்பத்தி செய்து செல்வம் பெருத்து வலுவாக, பாதுகாப்பாக, நலமாக மனித இனம் ஆடம்பரத்தில் வாழ வேண்டுமா அல்லது அன்பு, மதிப்பு, சத்தியம், நியாயம் என்ற அடிப்படை அறநெறியில் எளிமையாக மனிதர் வாழ வேண்டுமா என்று நாடகக் கதா நாயகர் நம்மை எல்லாம் கேட்கிறார்.

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Salvation Army Major) மேஜர் பார்பரா, தனக்குத் தெரியாமல் அவளது கிறித்துவக் குழுவினர், இராணுவ ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் அவளது தந்தையிடமிருந்து நிதிக் கொடை ஏற்றுக் கொண்டதைக் கேட்டுப் பெருங் குழப்பம் அடைகிறாள்.  ஆரம்பத்தில் ஏழ்மைக் காப்பணி ஆயுத வணிகரிட மிருந்து ஏராளமான நிதியைப் சன்மானமாகப் பெற்றுக் கொள்வது முற்றிலும் தவறென்று பார்பரா கருதுகிறாள்.  ஆனால் அப்படி நாடக வாசகர் கருத வேண்டுமென்று பெர்னாட் ஷா விரும்பவில்லை !  அவர் முன்னுரையில் அறக் கட்டளையாளர் நிதிக் கொடையைத் தூய சேமிப்பாளர் மூலம்தான் பெற வேண்டும் என்னும் கருத்து நகைப்புக்குள்ளானது என்று தள்ளி விடுகிறார்.  எந்த வகைச் சேமிப்பாயினும் அற நிலையங்கள் பெற்றுக் கொள்ளும் நிதிக் கொடைகளை மக்கள் நல்வினைகளுக்குப் பயன் படுத்தலாம் என்று பெர்னாட் ஷா ஆதரவு தருகிறார். “பிசாசுவிட மிருந்து கூட நன்கொடையைப் பெற்றுக் கொண்டு கடவுளின் கரங்களில் கொடுக்க வேண்டும்”, என்று ஆலோசனை கூறுகிறார்.  நாடக முடிவில் வறுமையில் வாடுவோர் கைவசம் நிரம்பப் பணம் இருந்தால் பசி, பட்டினியின்றி நிம்மதியாய் வாழ இயலும் என்று மேஜர் பார்பரா அமைதி அடைகிறாள்.

மிஸ் பார்பரா பீரங்கி உற்பத்திச் செல்வந்தர் ஆன்ரூவுக்குப் பிறந்த ஓர் பூரணப் பண்பியல் புதல்வி (An Idealistic Daughter).  சல்வேசன் ஆர்மிக்கு மேஜரான (Major in the Salvation Army) பார்பரா தன் தந்தை போன்ற பண முதலைகளுக்கு எதிராகப் போராடுவதில் தீவிரமாக ஈடுபடுபவள்.  அவளை வழிபடும் காதல் ரோமியோ அடால்·பஸ் (Adolphus) ஒரு கிரேக்கப் பேராசிரியர்.  அடால்·பஸின் மோகப் பொழுது போக்கில் பங்கு கொள்ள பார்பராவுக்கு நேரமில்லை,  சல்வேசன் ஆர்மி உறுப்பினர் சிலர் அவளது பணக்காரத் தந்தையிடமிருந்து பெருந் தொகையைச் சன்மானமாகப் பெற்றதை அறிந்து பார்பரா அதிர்ச்சி அடைகிறாள்.

சிந்திக்க வைக்கும் முரணான இத்தகைய பிரச்சனைகளே மேஜர் பார்பராவில் புத்துணர்வோடு இன்பியல் நாடகமாக உருவெடுக்கிறது.  தீப்பறக்கும் தர்க்க வசனங்கள் இங்குமங்கும் மின்னல்போல் அடிக்கின்றன,  பெண்மணி மேஜர் பார்பரா நாடக மேதை ஜார்ஜ் பெர்னாட் ஷா ஆக்கிய உன்னத படைப்புப் தலைவி, உள்ளத்தைத் தொடும் நாயகி என்று ஆங்கில நாடக விமர்சகர் பலர் கூறுகிறார்.  ஆங்கில நாடக உலகிலே சிந்தனையைத் தூண்டும் சமூகச் சேவகி மேஜர் பார்பரா நாடகப் படைப்பைப் போற்றுபவர் பலர் இருக்கிறார் என்பது தெரிய வருகிறது.

**********************



நாடக உறுப்பினர்:

1.  மேஜர் மிஸ். பார்பரா அண்டர்ஷா·ப்ட் (Major Ms. Barbara Undershaft).  ஆன்ரூவின் மூத்த மகள்.

2.  ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட் (Andrew Undershaft) : இராணுவ ஆயுத உற்பத்தித் தொழிற்சாலையின் அதிபர்.

3.  மேடம் பிரிட்னி அண்டர்ஷா·ப்ட் (Lady Britomart Undershaft) : ஆன்ரூவின் விலக்கப் பட்ட மனைவி (வயது 50)

4.  ஸ்டீ·பன் அண்டர்ஷா·ப்ட் (Stephen Undershaft) (வயது 25) ஆன்ரூவின் இளைய மகன்.

5.  மிஸ். சாரா அண்டர்ஷா·ப்ட் (Ms. Sara Undershaft) : ஆன்ரூவின் இரண்டாவது மகள்.

6.  அடால்·பஸ் குஸின்ஸ் (Adolphus Cusins) : பார்பராவின் காதலன்

7.  சார்லஸ் லோமாக்ஸ் (Charles Lomax) (வயது 35) : சாராவின் காதலன்.

8.  பணியாள் மாரிஸன் (Bulter Morrison) வயது 45

9.  ஓபிரைன் பிரைஸ், ரம்மி மிட்சென்ஸ், ஜென்னி ஹில், பீடர் ஷெர்லி, பில் வாக்கர் – சல்வேசன் ஆர்மியில் உண்டு உறங்கி வந்து போகும் பழைய / புதிய சாவடி வாசிகள்.மிஸிஸ் பெயின்ஸின் வயது 40.

மற்றும் பலர்.

************************

ஏழ்மைக் காப்பணிச் சேவகி
(மேஜர் பார்பரா)

(இரண்டாம் அங்கம்)

அங்கம் – 2 பாகம் – 17

இடம் :  இங்கிலாந்து லண்டன் நகரம்.  வெஸ்ட் ஹாம் ஏழ்மைக் காப்பணிச் சாவடி (West Ham Shelter of the Salvation Army)

நிகழும் ஆண்டு : ஜனவரி 1906

நேரம் : காலைப் பொழுது.

அரங்க அமைப்பு :  ஏழ்மை மனிதரை ஜனவரிக் கடுங்குளிர் நடுக்கத்தில் பாடுபடுத்தும் ஒரு பழைய சத்திரக் கூடம் சல்வேசன் ஆர்மிச் சாவடி.  புதிதாக வெள்ளை அடிக்கப் பட்டுள்ளது.  கறைபடிந்த மேஜை, நாற்காலிகள், பெஞ்சுகள் அங்கு மிங்கும் தெரிகின்றன. அறைக் கதவுகள் ஜன்னல்கள் திறந்துள்ளன.  முன்னறையில் ஓர் ஆணும், பெண்ணும் நடமாடி வருகிறார்.  மேஜையில் சாவடி வாசிகள் சாப்பிட்ட தட்டுக்களை மூதாட்டி ஒருத்தி எடுத்துக் கொண்டிருக்கிறாள்.  உலவும் ஆடவன் வேலை இல்லாத வாலிபன்.  வாயாடி மனிதன்.  பெண் நடுத்தர வயது மூதாட்டி.  அவரது உடையிலும், நடையிலும் ஏழ்மை தெரிகிறது.  கடுங்குளிர் நடுக்கத்தைப் பொருட் படுத்தாமல் நாற்காலில் சிலர் அமர்ந்திருக்கிறார்.  காலை உண்டி சாப்பிட்டு அவர் இருவரும் தெம்புடன் இருக்கிறார்.  ஆடவன் குவளையில் உள்ள ஆறிப்போன சூப்பைச் சுவைத்துக் கொண்டிருக்கிறான்.  மேஜர் பார்பரா தன் சகபாடிகள் பலரோடு வாத்தியத் தம்பட்டம் கொட்ட அணிவகுத்துக் கொடி உயர்த்தி நடந்து வருகிறாள்.  மூதாட்டியும், வாலிபனும் வாதாடிக் கொண்டுள்ள போது ஜென்னி ஹில்லும், பீட்டர் ஷெர்லியும் நுழைகிறார்.  பீட்டருக்கு உணவு கொண்டு வருகிறாள் ஜென்னி.  அப்போது மூர்க்கன் வில்லியம் வாக்கர் [William Walker] சல்வேசன் சாவடிப் பின் தோட்டத்தில் வேகமாய் நுழைகிறான்.  ஜென்னியைக் கண்டதும் வெகுண்டு அவள் கூந்தலைப் பற்றி இழுக்கிறான்.  ஜென்னியைக் காப்பாற மேஜர் பார்பரா உடனே அழைத்து வரப் படுகிறாள்.  புதிய நபர்களைப் பார்பரா பதிவு செய்கிறாள்.  அப்போது மேஜர் பார்பராவின் செல்வீகத் தந்தை காரில் வருகிறார். தந்தையை அறிமுகம் ஆகிறார்.  இடையே பார்பராவின் காதலன் அடால்·பஸ் நுழைகிறான். அடுத்து  மிஸிஸ். பெயின்ஸ் வருகிறாள்.  விஸ்கி தொழில் கோமான் நன்கொடை அளித்த 5000 பவுண்டு பணத்தைப் பற்றிப் பெருமை பேசுகிறாள்.  அடுத்து 5000 பவுண்டு செக்கை பார்பரா தந்தையிடம் கெஞ்சிப் பெற்றுக் கொள்கிறாள்.  பார்பரா அதிர்ச்சி அடைந்து அணிவகுப்பில் கலந்து கொடியுடன் நடத்திச் செல்ல மறுக்கிறாள்.


(சென்ற வாரத் தொடர்ச்சி)


மிஸிஸ் பெயின்ஸ்:  வா வா பார்பரா !  நீ வந்து என்னுடன் இணையாகக் கொடி பிடித்து அணியின் முன்னே நட !

(எல்லாரும் அணிவகுப்பில் போகும் போது, தனியே மேஜர் பார்பரா அதிர்ச்சி அடைந்து மிரண்டு போய் நிற்கிறாள்.)

மேஜர் பார்பரா:  (சினத்தோடு)  நான் வரப் போவதில்லை அணிவகுப்புக்கு !

ஜென்னி:  (அதிர்ச்சியோடு)  என்ன மேஜர் ?  நீங்கள் வரப் போவதில்லையா ?

மிஸிஸ் பெயின்ஸ்:  (கண்களில் நீர் மல்க)  நான் இந்தப் பணத்தை வாங்கியது தவறென்று நினைக்கிறாயா பார்பரா ?

மேஜர் பார்பரா:  (அருகில் சென்று மிஸிஸ் பெயின் கன்னத்தில் முத்தமிட்டு)  இல்லை, இல்லை !  கடவுள் கைகொடுப்பார் உமக்கு.  நீங்கள் பணத்தை ஏற்றுக் கொண்டது நியாயமே ! நமது சல்வேசன் சாவடியை நீங்கள்தான் காப்பாற்றினீர் !  ஆனால் என் மனது ஏனோ அதை ஏற்கத் தயங்குகிறது.  போவீர் அணி வகுப்புடன் !  இன்று உமது சொற்பொழிவைக் கேட்கப் பெரிய கூட்டம் திடலில் வந்திருக்கும் !

ஜென்னி:  அந்த மகத்தான காட்சியைக் காண நீங்கள் வரவில்லையா மேஜர் ?

மேஜர் பார்பரா:  (தன்னுடையில் மாட்டி இருந்த சல்வேசன் ஆர்மிச் சின்னத்தை எடுக்கிறாள்.)

மிஸிஸ் பெயின்ஸ்:  (ஆச்சரியமோடு)  என்னருமை பார்பரா !  என்ன செய்கிறாய் நீ ?

ஜென்னி:  மேஜர் !  ஏன் உங்கள் சல்வேசன் சின்னத்தைக் கழற்றிக் கையில் எடுக்கிறீர் ? எங்களை எல்லாம் விட்டு நீங்கப் போகுறீரா ?

மேஜர் பார்பரா:  (தந்தையை நோக்கி மெதுவாக)  அப்பா !  அருகில் வாருங்கள் !  நீங்கள் கொடுத்த மகத்தான கொடைக்கு ஒரு பரிசுப் பதக்கம் உங்களுக்கு !

ஆன்ரூ அண்டர்ஷாஃப்ட்:  (சின்னத்தைத் தன் கோட்டில் மாட்டும் போது பின்வாங்கி ஆச்சரியமோடு பார்த்து)  பார்பரா கண்ணே !  என்ன இது ?  எனக்கிது ஏற்றதில்லை !  நீதான் சல்வேசன் ஆர்மியின் தலைவி !  நான் வெறும் விருந்தாளிதான் !

மேஜர் பார்பரா:  (புன்னகையுடன்)  அஞ்ச வேண்டாம் அப்பா !  (தந்தை கோட்டில் பின்னிட்டு)  நீங்கள் கொடுத்த கொடை 5000 பவுண்ட்க்கு இது ஈடு இணையாகாது !

மிஸிஸ். பெயின்ஸ்:  பார்பரா !  நீ அணி வகுப்பில் வந்து சேரா விட்டாலும், எங்களுக்காக கடவுளிடம் வழிபடுவாய் என்று உறுதி மொழி கொடு !

மேஜர் பார்பரா:  (முகத்தைத் திருப்பிக் கொண்டு)  இப்போது நான் வழிபட முடியாது !  ஒரு வேளை இனி வழிபடும் தேவையே எனக்கு இல்லாமல் போகலாம்.

மிஸிஸ் பெயின்ஸ்:  அப்படிச் சொல்லாதே பார்பரா !  எங்களை உதறிவிட்டு நீ எப்படி இருப்பாய் ?  சல்வேசன் ஆர்மிமேல் உனக்கென்ன கோபம் ?

ஜென்னி:  மேஜர், படகோட்டி இல்லாமல் படகில் எப்படிப் பயணம் செய்வது ?

மேஜர் பார்பரா:  (வெறுப்புடன்)  என்னால் இனி இதைத் தாங்கிக் கொள்ள முடியாது !  அணிவகுப்பை நான் தடுக்க வில்லை !  அது நடக்கட்டும்.  புறப்படு ஜென்னி ! புறப்படுவீர் மிஸிஸ் பெயின்ஸ் !

அடால்·பஸ்: (துள்ளிக் கொண்டு) நன்றி பார்பரா நன்றி !  (மற்ற எல்லோரையும் அழைத்து) இதோ வாருங்கள் புறப்படுவோம் ! முரசடிப்போம் ! கொடி உயர்த்துவோம் ! அணி வகுப்போம் !  ஒன்று சேர்வோம் !

மிஸிஸ் பெயின்ஸ்:  நான் அணிவகுப்பை நடத்துகிறேன் இன்று ! பார்பரா நீ களைத்துள்ளாய் !  நாளை நீ சரியாகி விடுவாய் !  உன்னை நாங்கள் விட மாட்டோம், நீ விரும்பினாலும்.  ஜென்னி !  நீ பழைய கொடியைத் தூக்கிக் கொண்டு இணையாக என்னுடன் வா !

ஜென்னி:  ஹலலூயா ! வெற்றி நமக்கு !  சுற்றம் நமக்கு !  புகழ் நமக்கு ! ஆசிகள் நமக்கு !அணிவகுப்போம் வாரீர் ! அணிவகுப்போம் !

ஆன்ரூ அண்டர்ஷா·ப்ட்:  பார்பரா !  வந்து நீ முன்னே அணி வகுப்பில் எம்மை நடத்து !  உன் சல்வேசன் சாவடிக்குப் புத்துயிர் வந்து விட்டது !

அடால்ஃபஸ்:  ஆமாம் !  விஸ்கியும், வெடிமருந்தும் புத்துயிர் அளித்தது !

மேஜர் பார்பரா:  (சினத்துடன்)  இல்லை அடால்·பஸ் !  இது சாவடிக்குச் சமாதி !  எனக்கு வரப் போகும் மரணம் !  கடவுளே !  ஏன் எங்களைக் கைவிட்டாய் ?

(பார்பரா சலித்துக் கொண்டு அமர்கிறாள், முகத்தை மூடி.  அருகில் வில்லியம் வருகிறான்)

வில்லியம்:  மேஜர் !  என்ன வேடிக்கை இது ?  உமது சல்வேசன் சாவடி உன்னை விட்டுப் பிரிந்து போவுது !

பீட்டர் ஷெர்லி:  மேஜர் கவலையில் வீழ்ந்துள்ள போது மேலும் நீ நெஞ்சில் அடிக்காதே.

வில்லியம்:  நான் இப்படி வீழ்ந்து கிடந்த போது, பார்பரா என்னை அடித்தவள்.  இப்போ எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது நான் ஏன் அவளை அடிக்கக் கூடாது !

மேஜர் பார்பரா:  (அமைதியாக)  வில்லியம் !  உன் ஊதியப் பணத்தை நான் வாங்கி சாவடியை காப்பாற்ற வில்லை.  போதும் உன் தொல்லை !  என்னருகில் வராதே !


(தொடரும்) 

***********************

தகவல் :

Based on The Play : Major Barbara By : George Bernard Shaw, – Penquin Books (Editorial Supervision of Biographer : Dan. H. Laurence) (1960)

(a) The Portable Bernard Shaw By : Stanley Weintraub (1977)

(b) Writers & Critics – Shaw By A. M. Gibbs (1969)

(c) The Oxford Dictionary of Quotations (New Edition) (1992)

(d) The Wicked Wit of Oscar Wilde (1997)

(e) The Great Quotations Compiled By : George Seldes (1967)

(f) DVD Video Classics – Bernard Shaw’s Major Barbara Released in August 2007 (2 Hours)

(g) Major Critical Essays By : Bernard Shaw Penguin Classics (1986)

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 25, 2011)

http://jayabarathan.wordpress.com/

Cover image 30.jpg Cover image 30.jpg
20K   View   Download
Series Navigationகவிதைகள்: பயணக்குறிப்புகள்காரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் – 3.12.2011 (சனிக்கிழமை )
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *