ஆமையும் வாத்துக்களும்
ஒரு ஏரியில் சம்புக்ரீவன் என்றொரு ஆமை இருந்தது. அதன் சிநேகிதர்களாக சங்கடகன் விகடன் என்று இரண்டு வாத்துக்கள் இருந்தன. ஏதோ கால வித்தியாசத்தால் பன்னிரண்டு வருஷகால மழை தவறிப்போய் நீர் வறட்சி ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் வாத்துக்கள் இரண்டும் யோசிக்கத் தொடங்கின. ஒரு யோசனை தோன்றியது. ‘இந்த ஏரியில் நீர் வற்றிவிட்டது. வேறு ஏதாவது ஏரி குளம் பார்த்துக்கொண்டு போகவேண்டியதுதான். நண்பன் சம்புக்ரீவனிடம் விடை பெற்றுக் கொண்டு போய்விடலாம்’ என்று தீர்மானித்தன.
அவ்விதமே ஆமையிடம் போய் விஷயத்தைச் சொல்லின. அதைக் கேட்டதும், ஆமை ”என்னை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் போய்விடுவதற்கு எப்படி உங்களுக்கு மனம் வருகிறது? நானோ நீரில் வசிக்கிறவன். நீர் வற்றிப் போவதாலும், உங்கள் பிரிவாற்றாமையாலும் நான் சீக்கிரம் செத்துவிடுவேன். என்மேல் உங்களுக்குக் கொஞ்சமாவது அன்பு இருக்குமானால் என்னைச் சாவிலிருந்து காக்க வேண்டும். ஏரியில் நீர் வற்றிப் போனால் உங்களுக்குச் சாப்பாடுதான் குறையும். எனக்கோ உயிரே போய்விடுமே! சாப்பாடு குறைவது கொடுமையா, பிராணனை விடுவது கொடுமையா? நீங்களே யோசித்துச் சொல்லுங்கள்” என்றது.
”உனக்கு இறக்கைகள் கிடையாது. நீ நீரில் வசிக்கிறவன். உன்னை அழைத்துப்போக எங்களால் முடியாதே!” என்று வாத்துக்கள் பதில் தந்தன.
”அதற்கு ஒரு உபாயம் செய்யலாம். ஒரு குச்சியைக் கொண்டு வாருங்கள்.” என்றது ஆமை. வாத்துக்கள் போய் குச்சியொன்று கொண்டு வந்தன. அந்தக் குச்சியின் நடுப்பாகத்தை ஆமை தன் பற்களால் கவ்விப் பிடித்துக் கொண்டு பேசத் தொடங்கியது. ”இந்தக் குச்சியை உங்கள் அலகுகளில் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு மேலே பறந்து செல்லுங்கள். வேறு ஏதாவது ஏரி, குளம் கண்ணுக்குத் தெரிகிற வரையில் சமவேகத்தில் பறந்து போய்க்கொண்டேயிருங்கள்” என்று சொல்லிற்று.
”அந்த உபாயத்தில் ஒரு அபாயம் இருக்கிறது. எப்பொழுதாவது நீ கொஞ்சம் வாய் திறந்தால் போதும், குச்சியின் மீதுள்ள பிடி விட்டுப்போய் உயரத்திலிருந்து கீழே விழுந்து தூள் தூளாகி விடுவாய்” என்று வாத்துக்கள் ஆட்சேபித்தன.
”அப்படியானால், இந்த வினாடிமுதல் நான் மௌன விரதம் அனுஷ்டிக்கிறேன். ஆகாயத்தில் பறந்து கொண்டிருக்கும் வரை ஒன்றும் பேச மாட்டேன்” என்றது ஆமை.
வாத்துக்கள் அப்படியே செய்தன. ரொம்பவும் சிரமப்பட்டு ஏரியை விட்டு மேலே எழும்பி அருகிலிருந்த பட்டணத்தின்மேல் பறந்து சென்றன. கீழேயிருக்கும் நகர ஜனங்கள் மேலே போகிற ஆமையைப் பார்த்து விட்டார்கள். ”என்ன இது? வண்டியிழுப்பது போல எதையோ இழுத்துக் கொண்டு பறவைகள் பறக்கின்றனவே!” என்று அவர்களிடையே பேச்சும் சலசலப்பும் எழுந்தது.
அந்தப் பேச்சு ஆமையின் காதில் விழுந்தது. அதற்குச் சாவு சமீபித்துவிட்டது. கவனமில்லாமல் ”இந்த ஜனங்கள் என்ன உளறுகிறர்கள்?” என்று வாய் திறந்து பேசிற்று. அவ்வளவுதான், அந்த வினாடியே அந்த முட்டாள் ஆமை குச்சியை விட்டு நழுவி தரையில் விழுந்தது. இறைச்சி விரும்புகிற ஜனங்கள் அதை உடனே கூரான கத்திகொண்டு கண்டந்துண்டமாக வெட்டித் தீர்த்து விட்டார்கள்.
அதனால்தான் ‘தனக்கு நன்மை செய்யும் சிநேகிதர்களின் பேச்சைக் கேளாதவன்…’ என்றெல்லாம் சொல்கிறேன்” என்றது பெண் குருவி அது மேலும் தொடர்ந்து பேசுகையில்,
வருமுன் காப்போனும், சமயோசித புத்தியுடையவனும் சுகம் பெறுவார்கள்; விதியை நொந்து கொள்கிறவன் நாசமடைகிறான்.
என்றது. ”அது எப்படி?” என்று ஆண் குருவி கேட்கவே, பெண் குருவி சொல்லத் தொடங்கியது:
மூன்று மீன்கள்
ஒரு பெரிய ஏரியில் அனாகதவிதாதா (வருமுன் காப்போன்) பிரத்யுத் பன்னமதி (சமயோசித புத்தியுடையவன்) யத்பவிஷ்யன் (வருவது வந்தே தீரும் என்று நினைக்கிறவன்) என்று மூன்று மீன்கள் இருந்து வந்தன. அவை மிகவும் பெரிய மீன்கள். ஒருநாள் சில செம்படவர்கள் கரையோரத்தில் நடந்தபடியே, ”இந்த ஏரியில் மீன்கள் நிறைய இருக்கின்றன. நாளைய தினம் இங்கு வந்து மீன் பிடிக்கலாம்” என்று பேசிக்கொண்டு போனார்கள். இந்தப் பேச்சு அனாகதவிதாதா காதில் விழுந்தது.
அதைக் கேட்டதும் ‘இது நமது நன்மைக்கு இல்லை. கட்டாயம் அவர்கள் நாளைக்கோ மறுநாளைக்கோ இங்கு வருவார்கள். அதற்குள் மற்ற இரண்டு மீன்களையும் அழைத்துக்கொண்டு, தொந்தரவுகள் எதுவுமில்லாத வேறு ஏரிக்குப் போய்விட வேண்டியதுதான்’ என்று அது யோசித்து முடிவு செய்தது. இரு மீன்களிடமும் சென்று விஷயத்தைச் சொல்லிற்று.
அதற்குப் பிரத்யுத்பன்னமதி ”இந்த ஏரியில் ரொம்ப நாளாக நான் இருந்து வருகிறேன். திடீரென்று இதை விட்டுச் செல்ல என்னால் முடியாது. செம்படவர்கள் வரும்போது பார்த்துக்கொள்ளலாம். அந்த நேரத்தில் ஏதாவது உபாயம் செய்து எப்படியாவது தப்பித்துக்கொள்வேன்” என்று சொல்லிற்று.
சாவு நெருங்கிவிட்ட யத்பவிஷ்யன் ”இதைப்போல எத்தனையோ ஏரிகள் மற்ற இடங்களிலும் இருக்கிறபோது, இங்கேதான் வருவார்கள் என்று யார் நிச்சயமாகச் சொல்லமுடியும்? வம்பு வதந்திகளைக் கேட்டுவிட்டு, தான் பிறந்து வளர்ந்த ஏரியை ஒருவன் விட்டுச் செல்வது சரியல்ல.
பாம்புகளும், போக்கிரிகளும், பிறரை அண்டிப் பிழைக்கிறவர்களும் போடுகிற திட்டங்கள் காரியத்தில் நடப்பதில்லை. அதனால்தான் உலகமும் வாழ்ந்து வளர்கிறது.
என்ற பழமொழியைக் கேட்டதில்லையா? நான் உங்களோடு வரப் போகிறதில்லை. தீர்மானமாகச் சொல்லிவிட்டேன் என்றது.
அவற்றின் முடிவைக் கேட்டதும், வருமுன் காப்போன் அன்றைய தினமே வேறொரு ஏரிக்குச் சென்று விட்டது. மறுநாள் செம்படவர்கள் வேலையாட்களோடு அங்கு வந்தார்கள். ஏரியின் அடியாழத்தை வளைத்துத் துழாவுகிறமாதிரி வலை வீசினர். ஒரு மீன் கூட பாக்கி விடாமல் பிடித்து விட்டனர். தண்ணீருக்குள் இருக்கும்போதே சமயோசித புத்தியுள்ள இரண்டாவது மீன் வலையில் செத்துவிட்டதுபோல் நடித்தது. ‘மீன் பெரியது; தானாகவே செத்துவிட்டிருக்கும்’ என்று எண்ணிச் செம்படவர்கள் அதை வலையிலிருந்து எடுத்துக் கரையில் போட்டனர். உடனே அது துள்ளிச் சென்று தண்ணீரில் மூழ்கி மறைந்து போயிற்று.
வலையின் துவாரங்களில் மூன்றாவது மீன் (யத்பவிஷ்யன்) வாய் மாட்டிக்கொண்டு அதிலிருந்து விடுபடத் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. செம்படவர்கள் அதைத் தடியால் அடித்தார்கள். உடம்பு பஞ்சுபோல் ஆகி உயிர்போகிறவரைக்கும் அது துள்ளிக் கொண்டேயிருந்தது.
அதனால்தான் ‘வருமுன் காப்போனும், சமயோசித புத்தியுள்ளவனும் சுகம் பெறுவார்கள்; விதியை நொந்து கொள்கிறவன் நாசமடைகிறான்’ என்று சொன்னேன்” என்றது பெண் குருவி.
”அன்பே, நான் யத்பவிஷ்யன் மாதிரி என்று நினைக்கிறாயா? நான் சொல்வதைக் கேள்:
குதிரை, யானை, இரும்பு, கட்டை, கல், துணி, ஆண், பெண், தண்ணீர் இவற்றிற்கிடையே பெரிய வித்தியாசமிருக்கிறது
என்றது ஆண் குருவி. மேலும் ”நீ பயப்படாதே! என் பராமரிப்பில் இருக்கும் உன்னை யாரால் அவமதிக்க முடியும்?” என்று சொல்லிற்று.
நாளடைவில் அங்கேயே அந்தப் பெண் குருவி முட்டையிட்டது.
இந்த இரண்டு நீர்க் குருவிகளும் பேசிக் கொண்டதைச் சமுத்திரம் கேட்டுக் கொண்டிருந்தது. அது எண்ணிற்று: ”ஆஹா, சரியாகத்தான் ஜனங்கள் சொல்லியிருக்கிறார்கள்:
தற்பெருமை என்பது யாருக்குத்தான் இல்லை? ஆகாயம் கீழே விழுந்துவிடாமலிருப்பதற்காக இந்த நீர்க்குருவி இரண்டு கால்களையும் மேலே தூக்கியபடி மல்லாக்காகப் படுத்திருக்கிறதுபோலும்!
ஆகவே இதன் பலத்தைச் சோதிக்கிறேன்” என்றது.
மறுநாள் நீர்க்குருவிகள் இரண்டும் இரை தேடச் சென்றபொழுது, சமுத்திரம் தனது அலைக்கரங்களை வெகுதூரம் வீசி முட்டைகளை ஆவலோடு எடுத்துச் சென்றுவிட்டது. பெண் குருவி திரும்பி வந்ததும் முட்டைகளை இருந்த இடத்தில் ஒன்றுமே இல்லாமலிருப்பதைக் கண்டது. உடனே கணவனைப் பார்த்து, ”துரதிர்ஷ்டம் பிடித்த எனக்கு என்ன நேர்ந்திருக்கிறது பாருங்கள்! சமுத்திரம் என் முட்டைகளை எடுத்துக்கொண்டு போய் விட்டது. வேறிடம் போகலாம், வேறிடம் போகலாம் என்று பலதரம் சொன்னேன். யத்பவிஷ்யனைப்போல் உங்களுக்கும் புத்தி கிடையாது நீங்கள் போக விரும்பவில்லை. குழந்தைகள் இறந்த துக்கத்தால் நான் நெருப்பில் குதிக்கப் போகிறேன். இது நிச்சயம்” என்றது.
அதற்கு ஆண் குருவி, ”அன்பே, என் சாமார்த்தியத்தைப் பார்! இந்தச் சமுத்திரத்தை என் அலகினால் வற்ற அடித்துவிடுகிறேன்!” என்றது.
”நாதா, சமுத்திரத்தோடு நீங்கள் எப்படிச் சண்டை போட முடியும்?
தன் பலத்தையும் விரோதியின் பலத்தையும் அறியாமல் கர்வங்கொண்டு சண்டைக்குப் போகிறவன் நெருப்பில் விழுந்த விட்டில்பூச்சி மாதிரி நாசமடைகிறான்.
என்பது தெரியாதா?” என்றது பெண் குருவி.
”அன்பே, அப்படிச் சொல்லாதே! சூரியனின் இளங்கதிர்கள் கூட மலையுச்சிமீது பாய்கிறதில்லையா? பராக்கிரமசாலிகளுக்குத் தங்கள் வயதைப் பற்றிக் கவலையில்லை.
என் அலகைக் கொண்டு இந்தச் சமுத்திரத்தை ஒரு சொட்டு நீர்கூட மிஞ்சாதபடி வற்றவைத்து விடுகிறேன், பார்!” என்றது ஆண் குருவி.
‘ ‘நாதா, ஆயிரத்து எண்ணூற்று உபநதிகளின் நீரோடு கங்கை சிந்து நதிகள் இடைவிடாமல் வந்து கலக்கும் இந்தச் சமுத்திரம் எங்கே, ஒரு சொட்டு நீர் மட்டும் எடுக்கக்கூடிய உங்கள் அலகு எங்கே! நீங்களாவது, சமுத்திரத்தை வற்றவைப்பதாவது! யோசனையில்லாமல் ஏன் பிதற்றுகிறீர்கள்?” என்று பெண் குருவி கேட்டது.
அதற்கு ஆண் குருவி, ”இதைக்கேள்!
என் அலகு இரும்புக்குச் சமானமானது. நீண்ட இரவும் பகலுமாய் நமக்கு நேரமும் வேண்டிய அளவுக்கு இருக்கிறது. அப்படியிருக்க ஏன் சமுத்திரம் வற்றாது? திடச்சித்தம்தான் வெற்றிக்கு அடிப்படை.
உற்சாகமும் ஆண்மையும் இல்லாவிட்டால் எதிரியை வெல்வது கடினம். துலாராசியில் ஏறித்தான் சூரியன் மேகத் திரள்களை ஜெயிக்கிறான்.
என்றது.
”சரி, சரி. சமுத்திரத்துடன் சண்டை போட்டுத்தான் ஆக வேண்டு மென்றால் மற்ற குருவிகளையும் உதவிக்கு அழைத்துக் கொள்ளுங்கள். ஒரு பழமொழி கூறுவதுபோல்,
ஒரு படை பலவீனமாயிருந்தாலும் எண்ணிக்கையில் அதிகமா யிருந்தால் அது வெற்றிபெறும். பல புற்களைக் கொண்டு செய்த கயிற்றால் யானையைக் கூட கட்டிப் போடலாம்.
மரங்கொத்தியும் குருவியும் தவளையோடும் சிறு ஈயோடும் சேர்ந்து கூட்டமாக எதிர்த்ததால் ஒரு யானை செத்தது.
என்றும் ஒரு பழமொழி உண்டு” என்றது பெண் குருவி. ”அது எப்படி? என்று ஆண் குருவி கேட்க,
பெண் குருவி சொல்லத் தொடங்கியது:
- நேர்காணல் இதழ் நான்கு இப்போது வந்துள்ளது
- ஜென் ஒரு புரிதல் – பகுதி 20
- மலேசியாவில் டான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசளிப்பு விழா 2011
- கவிதைகள்: பயணக்குறிப்புகள்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 17
- காரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் – 3.12.2011 (சனிக்கிழமை )
- பகிரண்ட வெளியில்…
- மணல்வீடு சிற்றிதழும் களரி தொல்கலைகள் &கலைஞர்கள் மேம்பாட்டு மையமும் இணைந்து
- இதயத்தின் தோற்றம்
- கனவும் காலமும்
- பிழைச்சமூகம்
- நினைவுகளின் சுவட்டில் (81) –
- சுஜாதாவின் சொர்க்கத்தீவு -நாவல் விமர்சனம்
- மலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 2
- சஸ்பென்ஸோ சஸ்பென்ஸ்!
- செல்வராகவனின் மயக்கம் என்ன ..
- இந்திய அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா ? அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா ? கட்டுரை : 2
- யாருக்கும் பணியாத சிறுவன்
- வாழவைக்கும்[ஆ!]ஓவியக்கலை! (ஓவியர் தர்மேஷ் குறித்த ஒரு சிறு அறிமுகம்)
- வா
- பிறைகாணல்
- வள்ளுவரும் பட்டுக்கோட்டையாரும்
- சென்ரியு கவிதைகள்
- மாயை
- பேர்மனம் (Super mind)
- மூவாமருந்து
- புதுவைத் தமிழ் சங்கம்
- நானும் வல்லிக்கண்ணனும்
- காலெட் ஹொசைனியின் இரண்டு நாவல்கள்
- மனக் குப்பை
- ஓய்வு தந்த ஆய்வு
- பாரிஸ் மாநகரில் வி. ரி. இளங்கோவனின் ‘மண் மறவா மனிதர்கள்” நூல் வெளியீட்டு விழா..!
- முன்னணியின் பின்னணிகள் – 15 சாமர்செட் மாம்
- பஞ்சதந்திரம் தொடர் 19 ஆமையும் வாத்துக்களும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும். பகுத்தாய்வு நெறியும் (On Reason and Knowledge) (கவிதை – 51 பாகம் -1)
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கோடாரியில் தகர்ப்பாய் ! (கவிதை -52 பாகம் -2)
- ஒய் திஸ் கொலவெறி கொலவெறிடி?