முன்னணியின் பின்னணிகள் – 17 சாமர்செட் மாம்

This entry is part 18 of 48 in the series 11 டிசம்பர் 2011

 

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

 

இவையெல்லாம் எனக்கு சுவையான விவரங்கள். ஆனால் ராய்க்கு இவையெல்லாம் விஷயமே அல்ல. சட்டென என் பேச்சை நிறுத்தினார்.

”ஏம்ப்பா இலக்கியம் பத்தி அவர் பேசவே இல்லையா?” என்று கேட்டார்.

”பேசினாப்ல எனக்கு ஞாபகம் இல்லை. அப்பிடி இலக்கியம் பத்தி எப்பவுமே பேசிட்டிருக்கிற எழுத்தாளர் அல்ல அவர். எழுத்து பத்தி உள்ளே அசைபோடுவாரே தவிர எல்லாத்தையும் பேசிற மாட்டார், அவர் சுபாவம் அப்பிடின்னு நினைக்கிறேன். எங்க கியுரேட்டுக்கு புத்தகம் வாசிக்கக் குடுப்பார். ஒரு குளிர்காலத்தில் கிறிஸ்துமஸ் விடுப்பு எனக்கு, அவரோட தேநீர் சாப்பிட என்று அநேகமா தினசரி அவர்வீட்டுக்கு நான் போயிருக்கிறேன். சில சமயம் கியுரேட்டும் அவரும் புத்தகங்கள் பத்தி பேசிக்கொள்வார்கள். உடனே நாங்க வேறெதாவது பேசுங்கப்பான்னு பேச்சை மாத்திருவோம்!”

”அவர் பேசினதுல எதுவும் உங்களுக்கு ஞாபகம் வர்லியா?”

”ஒரு விஷயம் ஞாபகம் இருக்கு. அவர் பேசுகிற சமாச்சாரங்களைப் பத்தி நான் வாசிச்சதே இல்லை… அவர் பேசியதால் நான் அதையெல்லாம் வாசிக்க வேண்டாம்னு ஆயிட்டது எனக்கு! ஏவன் நதிக்கரையில் ஷேக்ஸ்பியர் தன் சொந்த ஊரில் ஸ்ட்ராஃபோர்டில், எழுத்தில் இருந்து ஓய்வுகொண்டபோது, அவருக்கு மேதை என்கிற அந்தஸ்து வந்து சேர்ந்த அந்தச் சமயத்தில், தமது நாடகங்களை யெல்லாம் நினைவில் வைத்திருந்தார் என்றே சொல்ல முடியாது. அவருக்குப் பிடித்த ரெண்டு படைப்புகள் – ‘மெஷர் ஃபார் மெஷர்,’ (அளவுகளை அளத்தல்) மற்றும் ‘திராய்லசும் கிரசிதாவும்’ – அவற்றை நினைத்துக் கொண்டிருக்கலாம்… அப்டின்னாரு திரிஃபீல்ட்.”

”அட அது ஒரு விஷயமா என்ன? ஷேக்ஸ்பியரை விட பிற்கால இலக்கியவாதிகள் பற்றி, அவர்கள் எழுத்தைப் பற்றி எதுவும் சொன்னாரா சொல்லுங்க.”

”அப்ப எதுவும் சொல்லல, அது சொல்ல முடியும். ஆனால் கொஞ்ச வருஷம் முன்பு அவரோட விருந்து சாப்பிட்டேன் இல்லியா, அப்ப… அவர் பேசிட்டிருந்ததை நான் கேட்டேன். அவர் சொல்லிட்டிருந்தார். உலகத்தின் மிக முக்கிய சரித்திர நிகழ்ச்சிகளில் ஒண்ணு அமெரிக்கக் குடியரசின் எழுச்சி, அதை ஹென்ரி ஜேம்ஸ் சரியாக் கையாளாமல் வேணுன்னே ஏனோதானோன்னு பண்ணிட்டார். அதைப் புகழ்ந்து எழுதியிருந்தால், ஆங்கிலேய நாட்டுப்புறங்களில் அவரது விருந்துகளில் கேள்விகள் எழுந்து அவரை சங்கடப்படுத்தும் என்று கவனமா தவிர்த்திட்டாப்ல இருக்கு, என்றார் திரிஃபீல்ட். அந்தச் செய்கையை திரிஃபீல்ட் இல் கிரான் ரிஃப்ளூடோ என்று கிண்டலடிக்கிறார். ஒரு பெரியவர் இத்தாலிய மொழி சொலவடையைப் பயன்படுத்தியது எனக்கு ஆச்சர்யமாய்ப் போயிற்று. எனக்கு அது சிரிப்பை வரவழைத்தது – அங்கிருந்தவரில் ஒரேயொரு தாட்டிகப் பெண்மணியைத் தவிர யாருக்குமே அவர் ஏளனம் செய்தது விளங்கவில்லை. அவர் சொன்னார். பாவம் ஹென்ரி. பூங்காவை முடிவேயில்லாமல் அவன் சுத்திச் சுத்தி வர்றான். அதன் வேலி இவன் தாண்டிக் குதிக்க முடியாத, எட்டிப் பார்க்க முடியாத உயரம். அந்தப் பக்கமாய் அவர்கள், அவனுக்கு தூரமாய் தேநீர் அருந்திக் களிக்கிறார்கள். அவர்களில் அந்தச் சீமாட்டி என்ன பேசுகிறாள் என்பதும் அவனுக்குக் கேட்கவில்லை…”

எனது துணுக்குச் செய்தியை கவனமாய்க் கேட்டுக்கொண்டார் ராய். ஆனால் மறுத்தாப்போல தலையாட்டிப் பேசினார்.

”ம்ஹும். இது பயன்படாது. ஹென்ரி ஜேம்சின் வாசகர்கள் ஆயிரம் செங்கல்களை என் மேல் எறிவார்கள்… அந்த மாலை வேளைகளில் நீங்கள் என்னதான் செஞ்சீங்க?”

”நாங்களா? நாங்க விஸ்ட் விளையாடினோம். திரிஃபீல்ட் எதாவது வாசிச்சிட்டிருப்பார். அதைப்பத்தி அவர் மதிப்புரை குடுக்க வேண்டியிருந்தது. அப்பறம்… அவர் பாடுவார்.”

”ஆ இது நல்ல விஷயம்” என்றார் ராய். என்னைப் பார்க்க ஆர்வமாய்க் குனிந்தார். ”அவர் என்ன பாட்டு பாடுவார் ஞாபகம் இருக்கா?”

”அது நல்லா ஞாபகம் இருக்கு. ஆல் த்ரு ஸ்டிக்கிங் டு எ சோல்ஜர். அப்பறம் கம் வேர் தி பூஸ் இஸ் சீப்பர் – ரெண்டும் அவருக்கு ரொம்பப் பிடிச்ச பாடல்கள். (மது எங்கே மலிவோ வா அங்கே போகலாம். என்ற பாடல்)

”ஓ!”

அந்த ஓவில் சுரத்தே இல்லை.

”அவர் ஷுமன் பாடணும்னு எதிர்பார்த்தீங்களா?” (ஷுமன் – பியானோவில் ஜெர்மானிய காதல் பாடல்களை இசை வடிவமைத்தவர்.)

”அதைப் பாடியிருக்கலாம்… நீ எடுத்துக் குடுத்தது நல்ல சரக்கு. நான் என்ன எதிர்பார்த்தேன், ஐலேசா ஐலேசா கடல் பாடல்கள் பாடிக்கொண்டிருப்பார்னு நினைத்தேன். பழைய நாட்டுப்பாடல்கள். ஊர்த் திருவிழாக்கள்ல பாடறாங்களே அதுபோல. பார்வையற்றவர்கள் ஃபிடில் வாசிக்க, கிராமத்து வாலிப வட்டம் களத்து மேட்டில் இடுப்பை வெட்டி வெட்டி ஆடுமே…

… அப்படி எதும் இருந்திருந்தால் அதில் இருந்து இன்னும் அழகாய் அதைப் புனைந்திருக்கலாம் நான். இசையரங்கப் பாடல்களை அவர் பாடுவார் என்பது எனக்கு மனசொட்டவில்லை. ஒராளின் சித்திரத்தை வரைகையில் மதிப்பீடுகளைச் சரியாக முன்வைக்க வேண்டாமா? இந்த வளர்ச்சிக்கு ஒப்ப அல்லாமல் அவரது பழைய காலத்தை வேறளவில் எழுதிப்போக முடியாது இல்லையா?”

”அத்தோட தெரியுமா, அதற்குப் பின் கொஞ்ச நாளில் அவர் ஆளே காணாமல் போயிட்டார். எல்லார் கண்லயும் மண்ணைத் தூவிட்டு ஊரைவிட்டே ஓடிட்டார்.”

ராய் ஒரு முழு நிமிடம் மௌனம் காத்தார். தலையைக் குனிந்துகொண்டு தரைவிரிப்பையே வெறித்தார்.

”ம். அப்படியொரு சங்கடமான காலகட்டம் வந்ததுன்னு எனக்குத் தெரியும். திருமதி திரிஃபீல்ட் அதைப் பற்றிச் சொன்னாள். பிற்பாடு அவர் ஃபெர்ன் கோர்ட்டை விலைக்கு வாங்கு முன்னாலேயே எல்லா பாக்கியும் அடைத்தாகி விட்டது. அப்படியே அங்கேயே அவர் வந்து தங்கிவிட்டார். பிற்பாடு அவர் கண்ட முன்னேற்றத்தைச் சொல்கையில் இதையெல்லாம் நினைவுகூர வேண்டாம் என்றுதான் நினைக்கிறேன். எப்பிடிப் பார்த்தாலும் அதெல்லாம் நடந்து நாற்பது வருஷம் போல ஆச்சி இல்லையா? அவர்சார்ந்து அநேக முக்கிய பக்கங்கள் சுட்டிக்காட்டப்பட வேண்டும்…. ஒரு விஷயம் என்னன்னா, அந்தக் காலத்தில் இவ்வளவு விவகாரம் நடந்திருக்கு, அப்பறமும் தான் பெரிசா வளர்ந்து முன்னேறிய காலகட்டத்தில் பழைய பகுதிக்கே, பிளாக்ஸ்டேபிளுக்கே குடியேறி வாழணும்னு அவர் நினைச்சார். யாருமே அதைவிட்டுத் தள்ளிப் போயிறணும்னு நினைப்பார்கள். இவர் அதையெல்லாம் கண்டுக்கவே இல்லை…

… எல்லாத்தையும் அவர் சகஜமா, வேடிக்கையா எடுத்துக்கிட்டாப்ல இருக்கு! அவரோட விருந்துக்கு வர்ற யாரோடவும் இதையெல்லாம் சொல்லிக்க அவர் சங்கோஜப்பட்டதே கிடையாது. திருமதி திரிஃபீல்டுதான் பாவம் முகம் சுளிப்பாள். இதையெல்லாம் வர்றாளுகள் கிட்ட சொல்லவேண்டிய அவசியம் என்ன?… நீங்க அமியைப் பத்தி இன்னும் தெரிஞ்சிக்கணும்னு விரும்பறேன். அவ ரொம்ப வித்தியாசமான பெண். இவளைப் பார்க்கிறதுக்கு முன்னாடியே திரிஃபீல்ட் தன்னோட ஆகச் சிறந்த புத்தகங்களை எழுதினார், எல்லாம் சரிதான். ஆனால் அவருக்கு அவள் வந்தபிறகுதான் பேரும் புகழும் மரியாதையும் அந்தஸ்தும் கூடியது. அவரை ஊர் மெச்சிய கடைசி 25 வருடங்கள், அவள் கூட இருந்தாள், அதையெல்லாம் சாத்தியமாக்கினாள்.

… என்கிட்ட அவள் வெளிப்படையாப் பேசுவாள். அவரை அப்படியொரு ஸ்தானத்துக்கு கொண்டுவந்தது ஒண்ணும் சுலபமான காரியம் அல்ல. முந்தைய திரிஃபீல்ட்டுக்குன்னு நிறைய அச்சுபிச்சு பழக்கங்கள் இருந்தன. அதையெல்லாம் மாத்தி தரமான மனிதரா அவரை மாற்ற அவள் பாடுபட்டாள். சில விஷயங்கள்ல வறட்டுப் பிடிவாதம் பண்ணுவாரு. வேற யாராவது இருந்திருந்தால் தாக்கு பிடிச்சிருக்க முடியாது அவர்கிட்ட. அருவருப்பான நிறைய பழக்கங்கள் அவராண்ட இருந்தன. பாவம் அமி, அதையெல்லாம் மாத்த எவ்வளவோ சிரமப்பட்டாள்… ஒரு உதாரணம் சொல்றேன் பாருங்க. புலாலும் காயும் சாப்பிட்டானதும் அவர் என்ன பண்ணுவாரு, ஒரு ரொட்டித் துண்டை எடுத்து சாப்பிட்ட தட்டைச் சுத்தமா வழிச்சித் துடைச்சி அந்தத் துண்டை வாயில் போட்டுக்குவார்னா பாத்துக்கிடுங்க.”

”அதுக்கு என்ன அர்த்தம் சொல்லுங்க?” என்றேன் நான். ”ரொம்ப காலமா அவர் சாப்பாட்டுக்கே ததிங்கிணதோம் போட்டிருக்கார்னு அர்த்தம். அவரால் சோறு விஷயத்தில் சின்ன அளவுகூட வீணாக்க முடியாது.”

”அதுண்மைதான். ஆனால் பெரிய எழுத்தாள பிரமுகர்ன்றோம், அவருக்கு இப்பிடி ஒரு பழக்கம் இருந்ததுன்னு எழுதலாமா? வீட்ல பெரிய கெண்டி வெச்சிக்கிட்டு அதுலருந்து ஊத்தி ஊத்தி மது அருந்த அவருக்குப் பிடிக்கவில்லை. பிளாக்ஸ்டேபிள் போய் மலிவான பியர் அன்ட் கீ – கடைவரை போயி சனங்களோட உட்கார்ந்து குடிச்சால்தான் அவருக்கு திருப்தி.

… அதுல தப்பு ஒண்ணுங் கிடையாது. ஆனாலுங்கூட, அந்தக் கூட்டத்தில் அவர்மாத்திரம் ஒட்டாமல் தெரிவாரா இல்லையா? குறிப்பா கோடைகாலங்கள்ல மொடாக் குடியன்களெல்லாம் அங்கதான் வந்து விழறான். இந்தாள் அவன்கூடவெல்லாம் போயி அவர்பாட்டுக்குத் தராதரம் தெரியாமல் பேசிட்டிருப்பார். அவருக்குன்னு ஒரு கௌரவம் இருக்குன்றதையே அவர் கண்டுக்கவில்லை.

… வீட்டுக்கு பெரிய பெரிய ஆட்கள்லாம் விருந்துக்கு வந்து போறாங்க. எட்மண்ட் கோஸ், உதாரணத்துக்குச் சொன்னேன்… அப்பறம் கர்சன் பிரபு. இவரானா விடுதிக்குப்போயி குழாய் ரிப்பேர்க்காரன், ரொட்டி சுடறவன், தெருக் கூட்டறவன்… தோலான் துருத்தி எல்லாராண்டயும் போயி இந்தப் பெரிய மனுசங்களைப் பத்தி, நான் என்ன நினைக்கிறேன்னா…ன்னு பேசிட்டு வர்றாரு. ரொம்பத் தேவையா? அவர் எழுதிக் காட்டும் கதாபாத்திரங்கள் சாமான்ய சராசரி சனங்கள், அதனால் அப்பிடி கலந்து பழகறார்னு சொல்லிக்கலாம்னு வெய்ங்க. ஆனால் தேவையா?

… அவரோட சில பழக்க வழக்கங்கள் ஜீரணிக்கவே முடியாமல் இருந்தது. ஆள் குளிக்கவே மாட்டாரு. அவரைக் குளிக்க வைக்குங்குள்ள அமி படற பாடு…”

”அது அவர் வளர்ந்த சூழல் அப்பா. அவர் பிறந்தபோது, அடிக்கடி குளிக்கறது ஆயுசுக்குக் கேடுனு ஒரு நம்பிக்கை இருந்தது. அத்தோட அம்பது வயசுவரை ரொம்ப வசதிக் குறைவான வீட்லதானே அவர் இருந்தார், அங்கெல்லாம் குளியலறையே இல்லையோ என்னவோ?”

”அவரே சொன்னார், வாரத்தில் ஒரு தடவைதான் குளிப்பாராம். அப்படியே பழகிட்டது எனக்கு, நான் ஏன் அதை மாத்திக்கணுங் …கறார்… ஆனால் அமி ரொம்பக் கறார். குறைஞ்சபட்சம் அன்டிராயரையாவது தினப்படி மாத்திருங்கன்னாள் அவள். அதுக்கும் அந்த மனுசன் ஒத்துவரல்ல. எப்பவுமே ஒரே பேன்ட், உள்ளாடை – அப்படியே ஒருவாரம் மாத்தாமல் இருந்தே பழக்கமாம். அடிக்கடி அதைத் தோய்ச்சால் கிழிஞ்சிரும்டின்னு அவளுக்கு அறிவுரை!

… தினசரி அவரைக் குளிக்க வைக்க அவள் ஒவ்வொருநாளும் ஒரு உபாயம் பண்ணினாள். நல்ல வாசனைதிரவியம், சோப்பு எல்லாம் தொட்டியில் கலக்கினாள். ஆனாலும் அவருக்கு குளிக்க மனசு ஒப்பவில்லை. அதிலும் வயசாக ஆக வாரம் ஒரு குளியல் என்ற நியதியும் போயிட்டது. அமி சொல்கிறாள்… அந்தக் கடைசி மூணு வருஷத்தில் அவர் குளிக்கவே இல்லையாம்!

… இதெல்லாம் நமக்குள்ள பேசிக்கறம் பாத்துக்கங்க. எதுக்கு இதெல்லாம் சொல்ல வரேன்னா, அவரைப் பத்தி எழுத நல்ல நேக் வேணும். பண விஷயத்தில் அவருக்கு அக்கறையே கிடையாது. அந்தாளுக்குன்னு ஒரு கோணல் புத்தி, தன்னைவிட மட்டமான ஆட்கள்கூட சகவாசம் வெச்சிக்கிட்டு சந்தோஷப்படற சுபாவம். அத்தோட அவரோட தனிப்பட்ட பழக்கங்கள், ஐய, அருவருப்பு. அதையெல்லாம் நாம அத்தனை இதுவா கண்டுக்க வேண்டியதில்லை. என் புத்தகத்தில் உண்மை அல்லாத எதையும் நான் சொல்ல மாட்டேன். அதே சமயம் சில பகுதிகள்… அவற்றைச் சொல்லாமல் விடுவது நனி சிறந்தது…”

”ஏம்ப்பா அவரை மொத்தமா அடையாளம் காட்டி உருட்டித் திரட்டிவிட்டு அதில் நீட்டிட்டிருக்கறாப்ல அவரது நல்லம்சங்களைச் சொன்னால் சுவையா இராதா என்ன?”

”ம்ஹ்ம். அது சரி வராது. அமி திரிஃபீல்ட் என்னாண்ட பேசறதையே அத்தோட நிறுத்திக்குவாள். அவர் வாழ்க்கையை எழுதச் சொல்லி அவள்தான் வேலை கொடுத்தது. என்ன தைரியத்தில் கொடுத்தாள், நான் எதை எழுதுவேன், எதை எழுதமாட்டேன்னு அவளுக்கு என்மேல் அபார நம்பிக்கை. நான் பெரிய மனுசனா லெட்சணமா நடந்துக்க வேணாமா?”

”ஒரு பெரிய மனுசனாவும், அதே சமயம் எழுத்தாளனாவும் இருக்கறது ரொம்ப கஷ்டம் அப்பா.”

”அதெல்லா ஒண்ணில்ல. அத்தோட, இந்த விமரிசகர்கள் பத்தி உங்களுக்குத் தெரியாதது இல்லை. நீ உண்மையை எழுதினால், வக்ரம் பிடிச்சவன்னுவாங்க. வக்ரம் பிடிச்சவன்னு பேர் வாங்கின பிறகு அந்த எழுத்தாளனுக்கு மரியாதையே போச்சு. யார் அவனைச் சீண்டுவா? ஒதுங்கித்தான் போவாங்க. எனக்கு என் எழுத்தில் நம்பிக்கை இருக்கு, முழுச் சித்திரத்தையும் வரைஞ்சிகாட்டி அதில்கூட ஒரு உணர்வு எழுச்சியை உருவாக்க என்னால் முடியும்.

… ஹா ஹா, அழகியல் சார்ந்த வர்ணனையாளன்னு அவருக்குப் பேர். ஆனால் வாழ்க்கையில் ஒரு ஒழுங்கு முறையுங் கிடையாது. சொன்னாலும் கேட்கமாட்டாரு. நல்ல நடையில் எழுதற மனுசனுக்கு சவுக்காரத்தையும் தண்ணியையும் கண்டாலே ஆகல்ல. கதையில் காட்டிய லட்சியத் தினவு, நேரிலோ குப்பனும் சுப்பனும்தான் உறவு. ஆனால் நிசத்தைச் சொன்னால், அது வேலைக்காகுமா? அப்பக்கூட நான் லிட்டன் ஸ்ட்ராச்சேயை காப்பி அடிக்கிறேன்னுவாங்க…

… இல்ல, நான் என்னவோ சூட்சுமமாவும், ரசிக்கிறாப்போலவும் எழுதலாம்னு பார்க்கறேன். நுணுக்கமாவும் மென்மையாவும் விஷயங்களைப் பதிவு செய்யணும். ஒரு புத்தகம் எழுத ஆரம்பிக்கு முன்னாலயே அது எப்பிடி எழுதப்படணும்னு நல்லா முடிவு பண்ணிக்கணும், அது ரொம்ப முக்கியம்.

… என்னன்னா, இந்தப் புத்தகம் ஒரு வான் டைக்கின் சித்திரம் போல உருவாகி வரணும்னு நான் ஆர்வப்படறேன். (வான் டைக் – உருவப்படங்களில் பெரும் புகழ் பெற்ற பெல்ஜிய ஓவியர்.) நல்ல சூழல்விளக்கச் சித்திரம் போல. வாசிக்க நல்ல ஈர்ப்பு தரணும். நல்ல ராஜமரியாதையான தன்னடையாளம் எழுத்தில் கிடைக்கணும். என்ன சொல்ல வரேன்னு புரியுதா? எம்பதாயிரம் வார்த்தைகளில் ஒரு புத்தகம்!”

மனசில் ருசி பார்க்கிறாப்போல கண்மூடி அப்படியே கொஞ்சம் மௌனம் காத்தார். என்ன அழகாய் இருக்கிறது அந்தப் புத்தகம், பலமடிப்புகள் கொண்ட, விரிந்த தாள்கள் கொண்ட மகா புத்தகம். ஆனால் ஒல்லியாய் கைக்கு சுமை தெரியாமல், ரெண்டு பக்கமும் நல்ல இடைவெளிவிட்டு அச்சிடப்பட்ட புத்தகம் அது. பவித்ரமான தெளிவான அச்சாக்கம், அவர் மனசில் வழவழ கறுப்பு ரெக்சின் கட்டமைப்பு கூட வந்திருக்கலாம். அட்டையில் பொன்னிற எழுத்துக்கள்.

கொஞ்சம் முன்பே நாம் பேசியபடி, அழகு என்பது ரொம்பகாலம் மனசில் தங்கி நிற்காது. அல்ராய் கியரும் அதே பரவசத்தில் ஆழ்ந்து நீடிக்க முடியவில்லை. கண்ணைத் திறந்தார். என்னைப் பார்த்து இனிமையாய்ப் புன்னகை சிந்தினார்.

”ஆனால் அந்த, திரிஃபீல்டின் முதல் சம்சாரம்… அவளை எப்பிடி எழுதாமல் தாண்டிச் செல்ல முடியும்?”

”கடிதப்பலகையில் எலும்புக் கூடு” என நான் முணுமுணுத்தேன். (சில பதிப்புகளில் இந்த ‘முன்னணியின் பின்னணிகள்’ நாவலுக்கே, ‘கடிதப்பலகையில் எலும்புக்கூடு’ – ‘ Skeleton in the Clipboard’ – எனத் தலைப்பு மாற்றி வெளியிட்டிருக்கிறார் சாமர்செட் மாம்.)

”அவளைப் பற்றி எழுத நினைக்கவே கூசுகிறது. திரிஃபீல்டுடன் அவள் மனைவியாக ரொம்ப வருஷம் வாழ்ந்திருக்கிறாள். நாம என்ன எழுதறோம், அதை எப்பிடி எழுதறோம்னு அமிக்கு ஒரு தீர்மானம் இருக்கு. அதுக்கும் நான் அனுசரிச்சிப் போகணும். அமிக்கு என்ன நினைப்புன்னால், ரோசி திரிஃபீல்ட் தனது கணவர்மீது ஒரு அபாயகரமான… விஷ ஆளுமை வைத்திருந்தாள். அவரை எல்லாவழிகளிலும் கேவலங்களுக்கு ஆட்படுத்த முயன்றாள் அவள்… மனதளவில், செயலளவில், துட்டு விஷயத்திலும் முறையற்று கீழ்த்தரமாக நடக்க வைத்தவளே அவள்தான். அவரது அறிவிலும், மனசிலும் கூடவே அந்தப் பாதகத்தி ஆக்கிரமித்து அவரை நாசம் பண்ணிக் கொண்டிருந்தாள். ஆனால் திரிஃபீல்ட் தனது ஆத்ம சக்தியால், தீவிர முயற்சியால் தாக்குப் பிடித்து அவளைத் தாண்டி வந்திருக்கிறார்.

… அந்தக் கல்யாணமே ஒரு அதிர்ஷ்டங்கெட்ட காரியம்… அவ செத்து செத்த இடம் புல் முளைச்சாச்சி, பழைய குப்பையை இனி கிளர்றதே கொடுமைதான். உள்ளாடைகளை நாலுபேர் பார்க்கிற மாதிரி துவைக்கறாப் போல ஆபாச காரியம் அது. என்றாலும் உண்மை இருக்கவே இருக்கு. திரிஃபீல்டின் ஆக உக்கிரமான படைப்புகளை அவர் அவள்கூட இருக்கும்போதுதான் எழுதியிருக்கிறார்.

… பின் காலங்களில் அவர் எழுதிய புத்தகங்களையும் நான் போற்றுகிறேன். அதன் ஆதார அழகுகளை என்னைப் போல ரசித்தவர் எவரும் இல்லைன்னு கூடச் சொல்வேன்… என்ன, அதில் சிறு இடறல் இருக்கு. அதித இலக்கிய பாவனை, கவனம் தெரியுது. அது நல்ல விஷயம்தான். ஆனா என்ன, முன் எழுத்தில் கண்ட அந்த நறுக், அந்த வீர்யம், நுரை, வாசனை, வாழ்க்கையின் ரீங்காரம்… அது பின் காலத்தில் மட்டுப்பட்டு விட்டது. அதாவது, என்ன சொல்ல வரேன்னா, அவரது ஆரம்பகாலப் படைப்புகளில் அவர் பெற்ற வெற்றியில் அந்த முதல் மனைவியின் பங்கை அப்படியே ஒதுக்கிற முடியாதுன்றேன்.”

”சரி, இப்ப என்ன பண்ணறதா உத்தேசம்?” என்று கேட்டேன் நான்.

”ம். எப்பிடின்னா… அந்தப் பூராப் பகுதியையும் மேன்மையான மென்மையான வாக்கியங்களில் சொல்லிருவம். அது எல்லாரும் அறிந்த விஷயம்னு இருக்கிறதால் அதை குற்றம் மாதிரி காட்ட இயலாது, வேணவும் வேணாம்ன்றேன். வெளிப்படையான எளிய சொல்லாட்சியில் சொல்வோமே, என்ன சொல்றீங்க? அது நெகிழ்ச்சிகரமா அமைஞ்சிரும்..”

”ரொம்ப உயர்ந்த வஸ்துவா அதை ஆக்கிறலாம்ன்றீங்க…”

”என்னன்னால், (ஆங்கில) ஐ எழுதுகையில் புள்ளியில்லாமல் நாசூக்கா எழுதுவம். ட்டி எழுதுகையில் குறுக்க மறிக்க வேணாம்… சரியா, சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டு அப்டியே விட்றலாம். ஆனால் வாசகன் என்ன புரிஞ்சுக்கணுமோ அதைச் சொல்லிருவேன். விஷயம் என்ன கரடுமுரடா யிருந்தாலும் மென்மையாச் சொல்ல முடியும், நாம சொல்லலாம், இல்லியா? ஆனால்… என்ன சொல்லுங்க, நிஜம் என்னன்னு நான் தெரிஞ்சிக்கிட்டாகணும். அது இல்லாமல் புனைவு ஏறுமாறாயிரும்…”

”வெறுங் கையால முழம் போட முடியாதுன்றீங்க.”

ராய் அவர்பாட்டுக்கு லகுவாய்ப் பேசிக்கொண்டே வந்தார். அந்தக்காலத்தில் கல்லூரியில் சிறந்த விரிவுரையாளர் என்பதை நிரூபிக்கும் விதமான, நல்ல சரளமான பேச்சு. முதல் விஷயம் – அதே அழுத்தத்துடன் சரியாக நான் என் கருத்தை முன்வைக்க நினைத்தேன். வார்த்தைக்கு யோசிக்கவோ திணறவோ கூடாது. சரளமாய் வாயில் வாக்கியங்கள் புரள வேண்டும். அடுத்த விஷயம் –  ராய் பெருங்கூட்டத்தில் பேருரை ஆற்றுகிறதைப் போல பொழிகிறபோது, நான் அதற்குச் சளைத்தவன் அல்ல, என்று நிரூபிக்க வேண்டும்….

நான் இப்படி யோசிக்கையிலேயே அவர் சிறிது இடை நிறுத்தினார். ஒரு நட்பு பாராட்டும் பார்வையுடன் என்னைப் பார்த்தார். உற்சாகப் போக்கில் சிவந்திருந்தது முகம். அந்த நாளின் வெக்கையில் மூச்சிரைத்தது லேசாய். அந்த கருத்தழுத்தம் மிக்க கண்கள் இப்போது இறுக்கம் தளர்ந்து என்னைப் பார்த்து மெல்லிய கோடாய்ப் புன்னகைத்தன.

”அட இங்கதான் நீங்க வர்றீங்க…” என்றார் அவர் இதமாக.

எனக்கு எப்பவுமே ஒரு பழக்கம். எதைப் பற்றியாவது சொல்வதற்கு எதுவும் இல்லை என்றால், எதுவும் சொல்ல மாட்டேன். வெறுமனே வார்த்தைகளை விரயமாக்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லையா, அப்போதும் வாயை மூடிக்கொள்வேன். மௌனமாய் ராயைப் பார்த்தேன், விகல்பமில்லாத புன்னகையுடன்.

”பிளாக்ஸ்டேபிளில் அவரது வாழ்க்கை பத்தி மத்த யாரையும் விட உங்களுக்கு அதிகம் தெரியும், இல்லியா?”

”அதென்னமோ எனக்குத் தெரியாது. அந்தக் காலத்தில் பிளாக்ஸ்டேபிளில், என்னைப்போல எத்தனையோ பேர் அவரை நன்கறிந்தவர்களாய் இருந்தார்கள்…”

”இருக்கலாம் ஐயா. அவர்கள் எல்லாருமே எந்த சமூக அந்தஸ்தும் முக்கியத்துவமும் பெற்றவர்களாய் இருக்க மாட்டார்கள். அவர்களிடம் என்ன தகவல் கிடைக்கும், நாம எப்பிடி அவர்களையெல்லாம் பொருட்படுத்த முடியும்?”

”ஆஹ்ஹா… என்ன சொல்ல வரீங்க, கால்ல கத்தி கட்டிய சேவலாய் என்னைக் களமிறக்கப் போறீங்களா?”

”எக்குத்தப்பாச் சொன்னா, அப்டிதான்னு வெய்யிங்களேன். அல்லது பட்டவர்த்தனமாச் சொன்னால்…”

இந்த என் வம்பு அவரை இறுக்கந் தளர்த்தவில்லை. சிரிக்காட்டி போறான், என நினைத்தேன். எல்லா நகைச்சுவைக்கும் சிரிப்பை எதிர்பார்க்கக் கூடாது, இதெல்லாம் சகஜமப்பா. நகைச்சுவை எழுத்தாளன் யார் என்றால் எழுதுகிற தக்கணத்தில் தானே ரசித்துச் சிரிச்சிக்கறானே அவன்தான். பின்னால் அதை வாசிக்கிறவர் சிரிப்பை அவன் பலசமயம் எதிர்பார்த்து ஏமாறலாம். முன்னாடியே தானே சிரிச்சிர்றது உத்தமம்.

”அப்ப, பின்னாட்களில் அவர் லண்டன் வந்தப்பறம் நிறைய நீங்க திரிஃபீல்டை சந்தித்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்.”

”ம்.”

”அதாவது கீழ் பெல்கிரேவியாவில் ஒரு அடுக்கக வீடு வாங்கினாரே… அப்ப.”

”அதுக்கும் முன்னாடி, பிம்லிகோவில் அவர் விடுதிவாசம், அப்பவே தெரியும் அவரை.”

ராய் ஒரு விட்டேத்தியான புன்னகை சிந்தினார்.

”சரி சரி, லண்டனின் உட் பகுதியில் எங்க அவர் இருந்தார், அதன் பவிஷு என்னன்னுல்லாம் நாம சண்டை பிடிச்சிக்க வேண்டாம். அப்ப நீங்க அவரோட நெருங்கிப் பழகினீங்க, இல்லியா?”

”ஓரளவு.”

”எவ்வளவு காலம்?”

”ரெண்டு வருஷம் போலன்னு வெய்யிங்க.”

”அப்ப என்ன வயசு உங்களுக்கு,”

”இருபது.”

”சரி, இப்ப… எனக்கு உங்களால ஒரு பெரிய உபகாரம் ஆவணும். ரொம்ப காலம் எடுக்காது அதை முடிக்க. ஆனால் அது எனக்கு மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் நாளைக்குக் கொண்டுவரப் போகுது. அந்த நாட்களையெல்லாம்… என்னென்ன நினைவிருக்கோ விறுவிறுன்னு கிறுக்கித் தந்தால் கூட போதும். திரிஃபீல்ட், அவர் முதல் மனைவி, அவர் அவளோடு பேணிய உறவு பத்தி… பிளாக்ஸ்டேபிள்லயும், லண்டன்லியும்… எல்லாமே எழுதித் தந்தீங்கன்னா புண்ணியமா யிருக்கும்.”

”அது பெரிய சமாச்சாரமாச்சே ராய். எனக்குத் தலைக்குமேல வேலை கெடக்கு இப்பவே.”

”சுருக்கமா எழுதித் தந்தால் போதும். ரொம்ப நாள் எடுத்துக்க வேணாம். கடகடன்னு கைபோறபடி எழுதித் தாங்க. நடை பத்தி, வேறெதையும் பத்தி விசாரப்பட வேண்டாம். நான் என் நடையில் அழகுபடுத்திக்குவேன். எனக்கு என்ன வேணும்?… சில நிஜத் தகவல்கள். ஏன்னா, உங்களுக்குதான் அவங்களைத் தெரியும், வேற யாருக்கும் தெரியவும் செய்யாது. சும்மா குருட்டுப் பூனை விட்டத்ல பாய்ஞ்சாப்ல நான் பண்ணிறப்டாது இல்லையா? திரிஃபீல்ட் ஒரு மாமனிதர், நீங்க அவரது நினைவுகளுக்கு ரொம்ப குடுத்து வச்சவர். ஆங்கில இலக்கிய உலகத்துக்கு நீங்கள் அதையெல்லாம் பகிர்ந்துக்க கடப்பாடுடையவர். நான் இதை உங்களாண்ட கேட்டிருக்கக் கூடாது, ஆனால் நீங்களே அன்னிக்கு அவரைப்பத்தி எதுவும் எழுதப்போறதா இல்லைன்னு சொல்லிட்டீங்க…. வெக்கப்படைப்பு நாய் மாதிரின்னு வசனம் சொல்லுவாங்க. தானும் தின்னாது, யாரையும் தின்னவும் விடாது, அந்த மாதிரி ஆயிறக்கூடாது பாருங்க.”

எதோ எனது கடமை போல ராய் வேண்டுகோள் விடுத்தார். எனது வெறுப்பை அவர் சுட்டிக்காட்டி, என் பெருந்தன்மையை ஒரு ‘தூக்’ தூக்கி, தர்மம் சார்ந்து என்னை உசுப்பேத்தி… என்னெல்லாமோ தகிடுதத்தம் செய்து பார்த்தவண்ணம் இருந்தார்.

”அதிருக்கட்டும்… திருமதி திரிஃபீல்ட் ஏன் என்னை ஃபெர்ன் கோர்ட்டுக்கு வந்து தங்கும்படிச் சொன்னாள்?” என்று கேட்டேன் நான்.

”ம்… நாங்க அதைப் பத்திப் பேசினோம். அருமையான வீடு அது, நாம உல்லாசமாய்த் தங்கலாம். விருந்தோம்பலையும் அவள் நல்லாவே செய்வாள். இந்தப் பருவம் அந்த ஊரில் தங்க குடுத்து வெச்சிருக்கணும். நீங்க அங்க உட்கார்ந்து அந்த நினைவுகளையெல்லாம் அசைபோட்டு எழுத நினைச்சாலும் சரியா இருக்கும்னு அவள் நினைக்கிறாள். நல்ல அமைதியான அழகான இடம்.

… அப்படி நீங்க ஒத்துக்குவீங்கன்னு நான் உறுதி தரவில்லை. ஆனால் என்னன்னால், பக்கத்திலேயே பிளாக்ஸ்டேபிள், அதுனால உங்களுக்கு ஞாபகங்கள் கிளர அந்த இடம் சௌகர்யமாய்க் கூட இருக்கலாம். மறந்த பல விஷயங்கள் இப்ப திரும்ப நினைவுக்கு வரவும் வாய்ப்பு இருக்கு. அத்தோட அவர் வீடு, அவர் எழுதிய புத்தகம், அவர் பயன்படுத்திய சாமான்கள்… கடந்த காலத்தை இன்னும் உண்மைபோல அசைபோட அப்போது முடியும்னு படுது இல்லியா?

… நாம அவரைப் பத்தி நிறையப் பேசவும் செய்யலாம். பேசிட்டே வர்றச்ச மேலும் நிறைய விஷயங்கள் உங்க மனசின் மேல்மட்டத்துக்கு வரும். அமி இருக்காளே, கற்பூர புத்தி. சட்டுச் சட்டுனு பிடிச்சுக்குவாள். பல வருஷமா திரிஃபீªல்ட் என்னென்ன அவள்கிட்ட பகிர்ந்துகிட்டாரோ எல்லாத்தையும் எழுதி வெச்சிருக்கா… அதை வாசிக்கறச்சகூட நீங்க எதையும் அசைபோட்டு, அதன்மேலும் பேச முடியும். அமி பின்னால் அதை குறிப்பெழுதிக்கொள்ளவும் முடியும். நாம அங்க டென்னிஸ் ஆடலாம். குளியல் போடலாம்…”

”பொதுவா மனுசாளோட தங்கறதே எனக்கு அலர்ஜி” என்றேன் நான். ”சாவகாசமா ஒரு ஒன்பது மணிக்கு எந்திரிச்சி வேணா வெறுப்பா பிடிக்காததைச் சாப்பிடறது எனக்கு உதவாது. அதேபோல, உலா போறதிலும் எனக்கு ஆர்வம் இல்லை. மத்தவங்களோட கோழில பங்கு எனக்கு வேணாம்… பிறத்தியார் வம்பும் சோலியும் நமக்கெதுக்குன்றேன்.”

”இப்ப அவள் தனியாத்தான் இருக்கிறாள். நாம போனால் அவள் தனிமை குறையும். எனக்கும் நீங்க வர்றதுல ஒரு உபகாரமாச்சின்னு வெய்யிங்க.”

நான் தலையாட்டினேன்.

”நான் என்ன செய்றேன்னா… பிளாக்ஸ்டேபிள் நானே போய்க்கறேன். போயி ‘பியர் அன்ட் கீ’ விடுதியில் தங்கிக்கறேன். நீங்க வர்றபோது நான் திருமதி திரிஃபீல்டை வந்து சந்திக்கறேன். எட்வர்ட் திரிஃபீல்ட் பற்றி நீங்க பேசித் தீர்க்கலாம், ஆனால் எனக்கு மண்டை காய்ஞ்சால் நான் கிளம்பிருவேன் சொல்லிட்டேன்.”

ராய் அமரிக்கையாய்ச் சிரித்தார்.

”சரி சரி. அது போதும். எனக்குப் பயன்படுகிற மாதிரி விஷயங்களா எழுதித் தந்தீங்கன்னா நல்லது…”

”பார்க்கிறேன்.”

”நீங்க எப்ப வர்றீங்க? நான் இந்த வெள்ளி போறதா இருக்கேன்.”

”உங்க கூடவே நானும் வரேன், ஆனால் ரயிலில் எதுவும் நீங்க என்னோட பேசக் கூடாது.”

”சரி. 5.10 வண்டி நமக்கு சரியா இருக்கும். நான் வந்து உங்களை அழைச்சிட்டுப் போகட்டுமா?”

”விக்டோரியா வரை நானே வந்துருவேன். ரயில்நிலைய நடைமேடையில் சந்திப்போம்.”

நான் மனசை மாத்திக்குவேனோன்னு பயந்தாரா தெரியாது. சட்டென எழுந்துகொண்டார். இதமாய்க் கைகுலுக்கினார். ”உங்க டென்னிஸ் மட்டையும், குளியல் உடையும்… மற்க்க வேண்டாம்” என வேண்டிக்கொண்டார். கிளம்பிவிட்டார்.

 

தொடரும்

storysankar@gmail.com

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 21 புத்திகூர்மையுள்ள கிழவாத்துகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இறைவன் திருநாம உச்சரிப்பு (Zikr) (கவிதை -53 பாகம் -2)
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *