முன்னணியின் பின்னணிகள் – 19 சாமர்செட் மாம்

This entry is part 13 of 29 in the series 25 டிசம்பர் 2011

தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

திரிஃபீல்ட் தம்பதிகளை மறுபடி சந்திக்கிறதுக்கு ஒரு ரெண்டு வருஷம் முன்னால், நான் திருமதி ஹட்சன் இல்லத்தில் தங்கியிருந்தேன். வாழ்க்கை அப்போது சீராய் ஓடிக்கொண்டிருந்தது. பகலெல்லாம் மருத்துவமனையில் இருப்பேன். ஒரு ஆறு மணிப்போல வின்சென்ட் சதுக்கத்துக்கு நடந்து திரும்புவேன். லம்பத் பாலத்தருகில் ‘ஸ்டார்’ பத்திரிகை வாங்கிக்கொள்வேன். வந்து ராத்திரி சாப்பிட அழைப்பு வரும்வரை வாசிப்பேன் அதை. சாப்பாடு ஆனதும் ஒருமணி, ரெண்டுமணி தீவிர இலக்கிய வாசிப்பு. மனப்பயிற்சி அது. நான் ஒரு கடும் முயற்சி கொண்ட, நேர்மையான உழைப்பாளியாக இருந்தேன். அதற்குப் பின்னால் படுக்கப் போகும் வரை நாவல்களும், நாடகங்களும் எழுதினேன்.

ஏன், சரியாக ஞாபகம் இல்லை, ஒரு ஜுன் மாத இறுதிவாக்கில், மருத்துவமனையில் இருந்து சீக்கிரமே கிளம்பி வீடுதிரும்ப நேர்ந்ததா, வாக்சாலி பாலச் சாலைவரை நடக்கலாம் என்றிருந்தது… எப்பவுமே அங்கே இரைச்சலாய்ப் பரபரப்பாய் இருக்கும். பொங்கிவழிகிற அந்த சப்தங்கள் எனக்குப் பிடிக்கும். எந்த சந்தர்ப்பத்திலும் எதும் அதிசயமோ சாகசமோ நிகழலாம் என்கிற மாதிரியான பலபேர் கலவை அது. எல்லாரும் வேலையாய் மும்முரமாய் இருப்பார்கள். ஒரு மாதிரி பிரக்ஞை மயங்கிய நிலையிலேயே நான் போகிறேன் – யாரோ அழைக்கிறார்கள்… வில்லி, என்று என் பேர் சொல்லி!

நின்று திரும்பிப் பார்த்தேன். ஆகா, திருமதி திரிஃபீல்ட், என்னைப் பார்த்துப் புன்னகை செய்கிறாள்!

”ஏய் நான் யாரு தெரியுதா?” அவள் கத்தினாள்.

”ம். திருமதி திரிஃபீல்ட்.”

இப்ப நான் பெரியவனா வளர்ந்தாச்சி, என்றாலும் ஒரு பதினாறு வயசுப் பிள்ளையைப்போல என் முகம் சிவந்து விட்டது. அவளைப் பார்த்ததில் ஒரு திடுக் இருந்தது என்னில். என் முகம் எதையும் அப்படியே நேர்மையுடன் போட்டு உடைத்துவிடும். எங்கப்பன் குதிர்க்குள்ள இல்ல, கேஸ் தான் நான்… பின்னென்ன ஊரெங்கும் கடன் வெச்சிட்டு திடுதிப்னு ஒடிப்போயிட்டா என்ன அர்த்தம்? அதற்கப்புறம் வந்து நின்னுகிட்டு என்ன சிரிப்பு வேண்டிக்கெடக்கு?… வெட்கங் கிட்கங் கிடையாதா இவங்களுக்கு? இதெல்லாம் எனக்குத் தெரியும்னு அவளுக்குத் தெரியும், அப்பறமும் இந்தத் தெனாவெட்டு, மீசைல மண் ஒட்டலையேன்றா மாதிரி… தேவையா?

அட நானே அவளைப் பார்த்திருந்தால், பாராமுகமாய்த் தாண்டிப் போயிருப்பேன். நானும் என்ன நினைத்தேன், அவள் பார்த்திருந்தாலும் சட்டென முகந் திருப்பிப் போயிருப்பாள், என்று யூகம் செய்தேன்.

சட்டென கைநீட்டினாள். என் கையைப் பற்றி சந்தோஷமாய்க் குலுக்… குலுக்கினாள்.

”ஆகா, திரும்ப நம்மூர்க்காரன் ஒருத்தனைப் பார்க்கிறதே ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றாள். ”உனக்குத் தெரியும்ல, ஒரு அவசரத்தில் நாங்க காலிபண்ணி வரவேண்டியதாப் போச்சு.”

அவள் சிரிக்க, நானும் சிரித்தேன். ஆனால் அவள் சிரிப்பு கிளர்ச்சிகரமாய் குழந்தைமையுடன். என் சிரிப்பு அசட்டுச் சிரிப்பு.

”நாங்கள் காணாமல் போனபின், அங்க எங்க வேலைகள் கொஞ்சம் பாக்கி யிருந்ததாகக் கேள்விப்பட்டேன். டெட் கேள்விப்பட்டால் அவரால் அதைக்கேட்டு சிரிப்பை அடக்க முடியாது. உங்க மாமன்… அவர் என்ன சொன்னாரு?”

சட்டென சகஜத்துக்கு வந்தேன். நானும் விஷயங்களை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள முடியும்.

”அவரைப் பத்தி தெரியாதா? பழைய பெருச்சாளி அவர்.”

”ஆமாமா, மொத்த பிளாக்ஸ்டேபிளுமே அப்பிடித்தான் இருக்கு. இன்னும் அவங்ககிட்ட சுதாரிப்பு வரவில்லை. வரணும்…” என்னை இணக்கமாய்ப் பார்த்தாள். ”கடைசியாப் பார்த்ததுக்கு ரொம்பத்தான் இப்ப நீ வளர்ந்திட்டே. ஆ, மீசை வேற!”

”ம்” என்றபடி மீசையை வருடி இழுத்…த்து முறுக்கிவிட்டுக் கொண்டேன். ”அது ரொம்ப வருஷமா இருக்கு.”

”காலம் எப்பிடி ஓடுது, இல்லியா? ஒரு நாலுவருஷம் முன்னாடி நீ பையன்., இப்ப… ஆம்பளை!”

”அது வளர்ந்துதானே ஆகணும்?” என்றேன் எகத்தாளமாக. ”இப்ப வயசு 21 ஆகப்போகுது.”

அவளை உற்றுப் பார்த்தேன். இறகுகள் செருகிய சின்னத் தொப்பி அணிந்திருந்தாள். வெளுத்த சாம்பலில் உடை. பார்க்க இறைச்சிபோல, பஃப் வைத்த கைகள். நீளக் கால்கள். அழகாய்த்தான் இருந்தாள். எப்பவுமே அவள் முகம் அழகானது தான் எனக்கு. ஆனால் இப்ப, நான் கவனிக்கிறேன்… அவள் கவர்ச்சியானவள். பேரழகி. முன்பு ஞாபகத்தில் இருத்தியிருந்ததை விட அந்தக் கண்கள் அதிக நீலமாய்த் தெரிந்தன. தந்தமான சரும வழவழப்பு.

”இதோ இந்தக்கோடி… அங்கதான் நாங்க இருக்கம்” என்றாள்.

”நானும்தான்.”

”லிம்பஸ் தெரு இல்ல? பிளாக்ஸ்டேபிளை விட்டு வந்ததில் இருந்து இங்கதான் இருக்கம்.”

”வின்சன்ட் சதுக்கத்தில் இந்த ரெண்டு வருஷமா என் ஜாகை.”

”நீ லண்டன்ல இருக்கறது தெரியும். ஜார்ஜ் கெம்ப் சொன்னாரு. ஆனா எங்கருக்கேன்னு தெரியாமல் இருந்தது. அப்டியே திரும்பி என்கூட வரியா? உன்னைப் பார்த்தால் டெட் மெய்யாலுமே சந்தோஷப்படுவார்.”

”போலாமே” என்றேன்.

நாங்கள் நடந்து போகையில் அவள் பேசிக்கொண்டே வந்தாள். திரிஃபீல்ட் இப்போது ஒரு வாராந்தரியின் இலக்கியப் பகுதி ஆசிரியர். சமீபத்தில் வெளியான அவரது புத்தகம், அவரது மற்றெல்லா புத்தகத்தையும் விட நன்றாகப் போகிறது. அதனால் அடுத்த புத்தகத்துக்கு ராயல்டியாய் ஒரு கணிசமான முன்பணம் கிடைக்கும் என்று நம்புகிறார்.

அவளுக்கு பிளாக்ஸ்டேபிளில் நடந்த பெருவாரியான சமாச்சாரங்கள் தெரிந்திருந்தது. உடனே எனக்கு ஊரில் பேசிக்கொண்டிருந்தது, அந்த ஜார்ஜ் பிரபு தான் அவர்கள் ஊரை ராவோட ராவாகக் காலிபண்ணிப்போக உதவி செய்தான், என்பது நினைவுக்கு வந்தது. அடிக்கடி அவன் அவர்களுக்குக் கடிதம் கிடிதம் எழுதுவானாய் இருக்கும். நாங்கள் நடந்துகொண்டிருக்கிறபோதே எதிரில் எங்களைக் கண்ட சிலர் வெறித்து அவளைப் பார்த்துப் போவதையும் நான் கவனித்தேன். அவர்கள் கண்களுக்கும் அவள், அள்ளிக்கொள்ளலாம் போலத்தான் படுகிறாளோ என்னமோ! அவளோடு கூட நடக்கிறதில் எனக்கு ஒரு கெத்து வந்தது.

லிம்பஸ் தெரு அகலப்பாங்கான நேர்த் தெரு. நல்ல நீளம். வாக்சால் பாலத் தெருவுக்கு நேரொழுங்கில் அடுத்த தெரு அது. ஒரே மாதிரியாய் இருந்தன வீடுகள். பூச்சு வீடுகள். வெளியே அடர்த்தியாய் பெயின்ட் அடித்திருந்தார்கள். நல்ல உறுதி தெரிந்தது கட்டுமானத்தில். பெரிய வாசல் முற்றம், கார்கள் நிறுத்தும்படி. லண்டன் நகரத்தின் பிரமுகர்களுக்கான வசிப்பிடங்களாக அவை பட்டன. ஆனால் எப்படியோ அதற்கான வசிகரத்தை இழந்துபோய், குடியிருக்க என்று சரியான நபர்கள் அமையாததில் அப்படி நசுக்குண்டிருக்கலாமோ என்னமோ…

மதிப்பிழந்து போனதனாலேயே அந்த அமைதியில் ஒரு ‘உம்’ – அசமந்தக் களை இருந்தது. அதனாலேயே அந்தப் பகுதியில் வசிக்கிற நபர்கள் கொதியடங்கி ஒடுங்கிவிட்டாப் போல நினைத்தேன். எல்லாரிடமும் தம்மைப பற்றிப் பேச்செடுத்தால் ஒரு ”அந்தக் காலத்ல…” சேர்ந்துவரும் போலிருந்தது.

ஒரு மக்கிய சிவப்பு இல்லத்தில் திரிஃபீல்ட் தம்பதியர் குடியிருந்தார்கள். உள்ளே நுழைய, குறுகலான கூடம் இருளப்பிக் கிடந்தது. திருமதி திரிஃபீல்ட் கதவைத் திறந்தபடி சொன்னாள்.

”நீ உள்ளே போ. நான் போய் திரிஃபீல்ட் கிட்ட நீ வந்திருக்கறதாச் சொல்லிட்டு வரேன்.”

அவள் கூடத்தைத் தாண்டி உள்ளே போக, நான் வெளிவராந்தாவுக்கு வந்தேன். கீழ்த்தளத்திலும் தரைத்தளத்திலுமாக திரிஃபீல்ட் தம்பதியர் வாடகைக்கு இருந்தார்கள். மேல் பகுதியில் வீட்டுக்காரி இருந்தாள். நான் உள்ளே நுழைந்த அறையில் கிடந்த மரச் சாமான்களைப் பார்த்தால், எங்கோ ஏலத்தில் எடுத்து வந்தாப்போல இந்த இடத்துக்குப் பாந்தமாய் இல்லை. தடித்த வெல்வெட் திரைச்சீலைகளில் அலையலையான மடிப்புகள். அதில் முடிச்சுகள், தோரணங்கள், கில்ட் குமிழ்கள். மஞ்சள் நூல் தையல்வேலைகள். பெரிய பெரிய பொத்தான்கள். அறை நடுவில் இருந்து பார்க்க ஒரு எடுப்பு தெரிந்தது சிறு சிறு பெட்டிகள் பிரித்த மர அலமாரியில் சின்னச் சின்ன அலங்காரப் பொருட்கள். பீங்கான் சாமான்கள். தந்தத்தில் செய்த உருவங்கள். மரச் செதுக்கல்கள். பித்தளையில் இந்திய விக்கிரகங்கள். சுவரில் பெரிய எண்ணெய் ஓவியங்களில், புல்வெளி மேடுகளில் நாய்க்குடைகளும், மேயும் மான்களும்…

உடனேயே திருமதி திரிஃபீல்ட் கணவரை அழைத்து வந்துவிட்டாள். ”வாப்பா” என்று அன்போடு வரவேற்றார் அவர். மக்கிய பளபளப்புடன் மேல்கோட். சாம்பல் வண்ண கால்சராய். முழுத் தாடி மழிக்கப்பட்டு, இப்போது மீசையும் குறுந்தாடியும். இந்தக் கோலத்தில் அவர் குட்டை என்று சட்டென பிடிபட்டது எனக்கு. ஆனால் பொதுவாக இருந்ததை விட இப்போது ஒரு மதிப்பு வந்திருந்தது அவரைப் பார்க்க. என்னவோ ஒட்டாத ஒரு அந்நியத்தன்மை அவர் தோற்றத்தில்…. எழுத்தாளர்னால் அப்படி இருக்கத் தான் வேணும், என நினைத்துக்கொண்டேன் கூடவே.

”என்னப்பா இந்த வீடு எப்பிடி இருக்கு?” என்றார் என்னைப் பார்த்து. ”கொஞ்சம் செழிப்பு வந்தாப்ல இருக்கால்லியா? நமக்கும் இங்க குடியிருக்கிறதுல ஒருமாதிரி தெம்பு ஊறுது.”

பேசியபடி தன்னைச் சுற்றி ஒரு திருப்தியுடன் பார்த்துக்கொண்டார்.

”டெட்டோட குகை… அங்கதான் உட்கார்ந்து எழுதுவாரு… பின்பக்கமா இருக்கு. சாப்பாட்டு அறை கீழே,” என்றாள் திருமதி திரிஃபீல்ட். ”வீட்டுக்காரி மிஸ் கௌலி. அவளுக்கு ஒரு சீமாட்டி ரொம்ப நெருங்கிய சிநேகிதி. அவள் இறந்தப்ப தன்னோட மர ஜாமான் அத்தனையும் விட்டுட்டுப் போயிட்டாள். இதெல்லாம் தான்… நல்ல நிலைமையில்தான் இருக்கு இல்லியா? பெரிய இடத்தில் புழங்கியவை தான் இவைன்னு பார்த்தாலே தெரியல்லியா என்ன?”

”இந்த இடத்தைப் பார்த்த ஷணமே ரோசிக்குப் பிடிச்சிட்டது” என்றார் திரிஃபீல்ட்.

”ஏன் உங்களுக்கும்தான்” என்றாள் ரோசி.

”ரொம்ப காலமா சங்கடப்பட்டு நொம்பலப் பட்டுக்கிட்டு தான் வாழ்ந்து வந்தோம். வசதிகளைப் பெருக்கிக்கிட்டு வாழறது நல்ல மாற்றம்தான். தேவையாய்த்தான் இருக்குன்றேன். மேடம் டி போம்படார்… அப்டி இப்டி வெளி கௌரவம் வேண்டித்தான் இருக்கப்போவ்.” (போம்படார் – முன் நெற்றியில் இருந்து தூக்கிவாரி கொண்டை போட்டுக் கொள்ளுதல். நம்ம ஊரில் அது அஜந்தாக்கொண்டை. அஜந்தாக் கொண்டை போட்டுக்கொண்டு ரோசி போனால் மரியாதை கிடைக்கிறது, என்று குறிப்பிடுகிறார்.)

கண்டிப்பா அடிக்கடி வரணுண்டா, என்கிற அவர்களின் அன்பான அழைப்புடன் விடைபெற்றுக் கொண்டேன். சனிக்கிழமை மதியங்களில் அவர்கள் எப்படியும் வீட்டில் இருந்தார்கள் என்று தெரிந்துகொண்டேன். நான் சந்திக்க விரும்பிய அத்தனை விதமான நபர்களும் அன்றைக்கு அங்கே வருவார்கள் என்றும் தெரிந்தது.

 

தொடரும்

storysankar@gmail.com

Series Navigationகல்லா … மண்ணாஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையகத்தின் மகத்தான விஞ்ஞானப் பொறியல்துறைச் சாதனைகள் (1954 – 2004)
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *