சொல்லாதே யாரும் கேட்டால்

This entry is part 23 of 42 in the series 1 ஜனவரி 2012

உஷாதீபன்

 

படுக்கையில் தூக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தான் ராகவன். அருகே மெயின் உறாலில் அப்பாவும் அம்மாவும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். தான் உறக்கமின்றி இருக்கிறோம் என்பது எவ்வகையிலும் அவர்களுக்குத் தெரிந்து விடக் கூடாது. குறிப்பாக அம்மாவுக்கு. அவள் தனது ஒவ்வொரு சிறு அசைவையும் கூட எடை போட்டு விடுவாள். தன் முகத்தை வைத்தே என்ன பிரச்னை? என்று கேட்டு விடுவாள்.
வந்து இரண்டு நாட்கள் ஆன இந்தப் பொழுதில் அவள் கேட்காமல் இருப்பதுதான் ஆச்சரியம். அப்படியானால் தன் முகத்திலிருந்து எதையும் கண்டு பிடிக்க முடியவில்லையா? அல்லது ரெண்டு நாள் போகட்டும் பிறகு சாவகாசமாய் கேட்டுக் கொள்ளலாம் என்று இருக்கிறாளா? அல்லது அவன் பாடு, அவன் பெண்டாட்டி பாடு, நமக்கெதற்கு? என்று விட்டு விட்டாளா?
இருக்கலாம். அவளுக்கும் வயசாயிற்று. எத்தனையோ பிரச்னைகளைச் சுமந்து, அனுபவித்து, கடந்து வந்தாயிற்று. பெண்டுகளுக்கும் பையன்களுக்கும் திருமணம் செய்து கொடுத்து அனுப்பி இப்பொழுதுதான் ஓய்ந்திருக்கிறாள். இன்னும் எதை அவள் இழுத்துப் போட்டுக் கொள்ள? மனமும் உடலும் விச்ராந்தியாய் இருக்க வேண்டிய நேரம். ஆறு, ஏழு என்று பெற்றவர்கள் பாடே இப்படித்தான். எல்லாக்கும் எல்லாக் கடமைகளையும் செய்து முடிக்கையில் வயது அறுபதைத் தாண்டி விடுகிறது. எழுபதானவர்கள் கூட இருக்கத்தானே செய்கிறார்கள். பிறகு வாழ்க்கை ஆயாசமாய்ப் போய் விடுகிறது.

அப்பாவைப் பொறுத்தவரை கவலைப்படத் தேவையில்லை. அவருக்கு அம்மா அமைந்தது பெரிய பொக்கிஷம். அவள் சொல்வதைச் சரி சரி என்று கேட்டுக் கொண்டு அவர்பாட்டுக்குச் செய்து முடித்து விட்டுப் போய்க் கொண்டேயிருப்பார். அவள் எது செய்தாலும் அவருக்குச் சம்மதமே. திருமணம் ஆவதற்கு முன்பு மாதா மாதம் அப்பா தன் சம்பளப் பணத்தைத் தன் அம்மாவிடம் கொடுத்தார். திருமணத்திற்குப் பிறகு மனைவியிடம் கொடுக்கிறார். அவ்வளவே. அதுவே ஒரு புருஷனுக்குப் பெரிய லட்சணமாயிற்றே! எத்தனை பேர் அப்படிச் செய்கிறார்கள்? இப்படி இருப்பதே போதும் என்று அம்மாவும் விட்டு விட்டாள் போலும்! அல்லது இப்படியான எதிர்பார்ப்பிலேயே அம்மாவும் வந்தாளோ என்னவோ? அம்மாவின்; ஆளுமைக்கு அப்பா கட்டுப் பட்டுத்தான் போனார். எல்லாமும் கச்சிதமாய் உள்ளன. பின் ஏன் பிணக்கிக் கொள்ள வேண்டும். அப்பா மறுப்புச் சொல்லியோ மாற்றம் சொல்லியோ இவன் பார்த்ததில்லை.
எல்லாமும் அவன் பார்த்துப்பான் என்று மேலே கையைக் காண்பிப்பது போல அப்பாவுக்கு எல்லாமும் அவ பார்த்துப்பா. ஆதர்ச தம்பதிகள் என்றால் அது இப்படித்தான் இருக்க வேண்டும். இந்த மட்டுக்கும் இப்படி ஒருத்தி கிடைத்தாளே என்று நிம்மதியாய்க் கழித்திருக்கிறார் அப்பா. இன்றைய வயதில் ஏதேனும் பெரிய பிரச்னைகள் என்று வந்தால் கூட அப்பாவுக்குச் சமாளிக்கத் தெரியுமோ என்னவோ? அதற்கான முன் அனுபவம் அவருக்கு இருக்கும் என்று தோன்றவில்லை. வாழ்க்கையில் பழுத்துக் கொட்டை போட்டவர்கள் எல்லாம் அனுபவசாலிகள் என்று சொல்லி விட முடியுமா?

பாத்ரூம் விளக்கு எரிந்தது. அம்மாதான். விளக்கைப் போட்டதும் சட்டென்று முழிப்பு வந்து ஒரு பார்வை பார்ப்போம் என்பதற்குக் கூட வழியில்லை. அப்படி உறங்கிக் கொண்டிருந்தார் அப்பா. ஏதேனும் திடீர் உடல் உபாதை என்றால்? அப்பாவுக்கும் அப்படித்தானே? சொன்னால் கேட்க மாட்டார்கள். எங்களுக்கு இந்த ஊர் போதும். நாங்க இங்கேயே இருந்து கழிச்சிடறோம் என்பார்கள். நான்கு பசங்கள் இருந்தும் ஏன் இப்படித் தனியே இருந்து கஷ்டப்படவேண்டும். ஆளுக்கு மூன்று மாதமோ நான்கு மாதமோ என்று சந்தோஷமாக இருக்க வேண்டியதுதானே? என்னதான் அப்படிக் கௌரவமோ? அப்பாவுக்குக் கூட அப்படி ஒரு ஆசை இருக்கலாம். ஆனால் அம்மாவின் விருப்பத்தை மீறி அவர் அடியெடுத்து வைக்கத் தயாரில்லை. தள்ளியிருந்தாத்தான் மதிப்பு. கிட்டே வந்தா ஒருநா இல்லாட்டா ஒரு நா கசந்து போயிடும். அப்டி ஒண்ணும் கதியில்லாம பகவான் எங்களை வைக்கலியே? உங்கப்பா பென்ஷன் போதும் எங்க ரெண்டு பேருக்கும். நாங்க இப்டியே கழிச்சிடுறோம். இதுதான் அம்மா வாயெடுத்தால் சொல்லும் வார்த்தைகள். நாளைக்கு நமக்கெல்லாம் இப்படி இருக்க முடியுமோ என்னவோ?

“ஏண்டா நானும் கவனிச்சிண்டேயிருக்கேன்…அதென்ன தூக்கமில்லாம அப்படிப் புரண்டுண்டேயிருக்க?” – பாத்ரூமிலிருந்து வெளிப்பட்டதும் அம்மா கேட்ட இந்தக் கேள்வியில் அதிர்ச்சியுற்றான் ராகவன். எவ்வளவு கவனம்? இவள் தூங்குகிறாள் என்று தான் நினைக்கப் போக இப்படிக் கவனித்திருக்கிறாளே?”
“இல்லியே, நீ இப்போ லைட்டைப் போட்டதும்தான் முழிச்சிண்டேன்….” “சும்மா சொல்லாதே….வந்ததுலேர்ந்து நானும் பார்த்துட்டேன் நீ சகஜமா இல்லை. திடீர்னு என்ன பயணம்னு கேட்டா சொல்ல மாட்டேங்குறே…சரி…சரி…தூங்கு, காலைல பேசிக்கலாம்…” – சொல்லிவிட்டு வந்து ஆயாசத்தோடு படுத்துக் கொண்டாள். அவள் சொன்னது கூடப் பெரிசாகத் தெரியவில்லை இவனுக்கு. அலுப்போடு அம்மா படுத்துக் கொண்டதுதான் மனதை அழுத்திற்று.

இப்படியானதொரு அலுப்போடும், அசதியோடும்தானே அவள் அங்கிருந்து புறப்பட்டு வந்தாள். அப்பாகூடத் தப்பித்துக்கொண்டு விட்டாரே? நான் இருந்து கொள்கிறேன்…நீ போயிட்டு வா என்று அம்மாவை மட்டும் அனுப்பி வைத்ததுதான் அதிசயம். ஒரு வேளை அப்பாவுக்குத் தெரிந்திருக்குமோ என் மனைவியின் லட்சணம்? அப்படித் தெரிந்திருந்தால் தன் ஆசை மனைவியிடம் சொல்லித் தடுக்காமல் இருக்க மாட்டாரே? போய்க் குட்டுப் பட்டுண்டு வந்து சேராதே என்று ஒரு வார்த்தையேனும் சொல்லியிருக்கக் கூடுமே? பாவம் அம்மாவுக்குத்தான் ஒரு நப்பாசை. அப்படிக் கூடச் சொல்லக்கூடாது. தான்தானே வற்புறுத்தி அழைத்துக் கொண்டு போனது? அதெல்லாம் சரிப்படாதுடா! என்ற ஒரே பேச்சில்தானே அம்மா மறுத்தாள். தன்னால்தான் அம்மாவுக்கு இந்த இழிவு. அதையும் தாங்கிக் கொண்டு இன்னும் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். எனக்கு அவர் இருக்கிற எடம்தாண்டா சொர்க்கம், என்னை அவர்ட்டக் கொண்டு விட்டிடு…எத்தனை நாசுக்காக விலகிக் கொண்டாள்.

( 2 )

“அம்மா ஏன் இப்படி அசந்து படுத்திருக்காங்க…கேட்டியா?”- மாலினியைப் பார்த்துக் கேட்ட கேள்வியில் ஒற்றை வார்த்தையில் பதில் வந்தது அவளிடமிருந்து.
“கேட்கல…”
தான் அவளிடம் கேட்டதே தவறு. அவளென்ன கேட்பது? நானே கேட்டுக் கொள்கிறேன். ஆனாலும் அம்மாவுக்கு மனது அடித்துக் கொள்ளாதா? ஒரு வார்த்தை அவள் கேட்கவில்லையே என்று. சுமுகமாக இருக்க வேண்டுமென்றுதானே வந்திருக்கிறாள். நேரத்துக்கு சோறு போட்டால் போதும் என்று நினைக்கிறாளா? ஆறுதலாய்க் கேட்கும் நாலு வார்த்தைகள் மனதை ஆற்றுவது போல் வருமா? ராகவனுக்கு மாலினியைப் பார்க்கவே பிடிக்கவில்லை.
பெண்கள் சக்தியின் சொரூபம்;, கருணையின் வடிவம் என்கிறார்கள். தாயாய், மனைவியாய், சகோதரியாய், குல விளக்காய் தன்னை விஸ்வரூபித்துக் கொள்பவள் என்கிறார்கள். அந்த அடையாளங்களெல்லாம் இவளிடம் கிடையாதா? தன் தாயும் அவளுக்குத் தாய் போன்றவள்தானே? வைத்துப் போற்றப்பட வேண்டியவர்களை ஏன் நிறுத்தி ஒதுக்குகிறார்கள்? உலகத்தில் உள்ள எல்லாப் பெண்களுமே இப்படித்தான் இருப்பார்களா? நாளைக்கு இவர்களுக்கும் இப்படி ஒரு நிலை வரும் என்பது தெரிந்திருந்தும் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? இன்றைய பொழுது இப்படி, நாளைய பொழுது அப்படியென்றால் அதையும் சந்திக்கக் தயார் என்பதாகத்தான் எல்லாரும் இருப்பார்களா? இது என்ன மனநிலை? பட்டுப் பட்டு அனுபவித்துத்தான் எல்லாரும் திருந்த வேண்டுமா? அனுபவப்பட்டவர்களின் வார்த்தைகளின் மதிப்பறிந்து, அதன்படி தங்கள் வாழ்க்கையினைச் செம்மைப் படுத்திக் கொள்ளக் கூடாதா?
“ஆரம்பத்துலயே எங்கம்மா சொன்னாங்க…வேலை பார்க்கிற பெண் வேண்டாம்டான்னு…நாந்தான் கேட்கல…”
“இப்பக் கூட ஒண்ணும் கெட்டுப் போகல…நீங்க உங்க இஷ்டப்படி இருந்துக்கலாம்…” எத்தனை தைரியமாகப் பேசுகிறாள்? நமக்குத்தான் நாக்கு கூசுகிறது. என்ன சொல்கிறாள் இவள்? டைவர்ஸ் வாங்கிக் கொண்டாலும் அதற்கும் நான் தயார் என்கிறாளா? உண்மையிலேயே அவள் அப்படி விரும்புகிறாளா? அவள் விரும்பினாலும் அவள் தாய் தந்தையர் அதை விரும்புவார்களா? அவளின் சுதந்திரம்தான் எங்களுக்கு முக்கியம் என்பார்களோ? அவளின் சுதந்திரத்தை இப்போது யார் கெடுத்தது? அவளின் இஷ்டத்துக்குத்தானே இருக்கிறாள்? ஆனாலும் ஒரு பெண்ணுக்கு இப்படிப் பேச எத்தனை தில் வேண்டு;ம்?
எல்லாம் தானும் வேலை பார்க்கிறோம் என்கிற தைரியம்தான். வேலை பார்த்தால,; சம்பளம் வாங்கினால் எல்லா சுதந்திரமும் உண்டு என்று அர்த்தமா? குடு;ம்பம் என்கிற அமைப்பிலே இருக்கிறபோது சில கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதுதானே பொருள். கணவனாகட்டும், மனைவியாகட்டும் எல்லாருக்கும் பொதுவானதுதானே அந்த விதிகள். அதனால்தானே இந்திய சமுதாயம் இன்றுவரை காப்பாற்றப்பட்டு வருகிறது? இதெல்லாம் இவள் அறியமாட்டாளா?
“உன்னோட க்ராஸ் சேலரி என்ன?” – தற்செயலாக ஒரு நாள் கேட்டான் ராகவன். “முப்பத்தி ரெண்டு…”

உங்களோடது என்று அவள் கேட்கவில்லை. தன்னை விட நிச்சயம் குறைவுதான் என்பது அவளுக்குத் தெரிந்திருக்கும். இருபது வருஷம் சர்வீஸை முடித்த தனக்கு இப்பொழுதுதான் இருபதைத்தாண்டியிருக்கிறது. தெரிந்துதானே கல்யாணம் பண்ணிக் கொண்டாள். ஒரு வேளை அப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்பினாளோ என்னவோ. அப்பொழுதுதான் தன் இஷ்டப்படி தான் இருக்க முடியும் என்று உறுதிப் பட்டிருக்கலாம். ஆனாலும் இவனுக்கே கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது. கொஞ்சமென்ன. அந்த விஷயம்தான் தன் மனதில் அடிக்கடி உதைத்துக்கொண்டேயிருக்கிறது. கல்யாணத்திற்கென்று பெண் பார்த்தபோது அத்தனை பெரிதாக இந்த விஷயம் தோன்றவில்லை. திருமணத்திற்குப் பிறகுதான் உதைக்கிறது. அவள் மத்திய அரசுப் பணியாளர் என்பது தெரியும்தான். கூடத்தான் இருக்கும் என்பதும் தெரியும்தான். ஆனால் இத்தனை வித்தியாசம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆரம்பத்தில் ஆயிரமோ ரெண்டாயிரமோதானே வித்தியாசம் இருந்தது. பின் எப்படி இத்தனை விலகிப் போயிற்று. அவள் துறையில் என்னென்னவோ மாற்றங்கள் நடந்தன. திடீரென்று மெடிக்கல் அலவன்ஸ் அது இது என்று எதெதோ கொடுத்தார்கள். அதில் அவள் எங்கேயோ சென்று விட்டாள். அது கிடக்கட்டும். இத்தனை வித்தியாசத்திற்குப் பின்னால்தான் அவளிடம் இந்த மாற்றமா? முன்பிருந்தே அப்படித்தானே?
“கொஞ்சம் வேகமாத்தான் போங்களேன்…இவ்வளவு ஸ்லோவாப் போனா நடந்து போற டைம் வந்துடும்…”
“இந்த பாரு என் ஸ்பீடு இவ்வளவுதான்…நல்லா வேகமா மாப்பிள்ளை ஸ்கூட்டர் ஓட்டுவாரான்னு கேட்டு கன்ஃபார்ம் பண்ணிட்டு நிச்சயம் பண்ணிருக்க வேண்டிதானே?” “என்ன பண்றது, தெரியாமப் போச்சு…நார்மல் ஸ்பீடு இருக்கும்னு நா எதிர்பார்த்தேன்…இது அதுக்கும் குறைவா இருக்கு…அட்ஜஸ்ட பண்ணிக்க வேண்டிதான்…” “என்னோட ஸ்பீடு முப்பதுலேர்ந்து முப்பத்தஞ்சுதான்…அதுக்கு மேல போனா நிச்சயம் எவனாலயும் கன்ட்ரோல் பண்ண முடியாது. இங்க இருக்கிற டிராஃபிக்குக்கு அதுதான் விதிச்ச விதி. அதுனாலதான் இன்னைவரைக்கும் ஒரு ஆக்ஸிடென்ட் இல்லாம ஓட்டிட்டிருக்கேன். “அது சரி, ஓட்டுறது வேறே, உருட்டுறது வேறே…நீங்க ஓட்டுறீங்களா உருட்டுறீங்களான்னு உங்களுக்குத் தெரியாது. மத்தவங்களுக்குத்தான் தெரியும்…”
சாதாரணப் பேச்சுத்தானே என்று கூட அவள் விட்டுக் கொடுத்ததில்லை. தன் பங்குக் கருத்து என்று ஒன்றை நிலை நாட்டாமல் விடமாட்டாள். இவன்தான் அமைதியாக இருந்து மேற்கொண்டு பேச்சு வளராமல் அதை முடித்து வைப்பான். ஒரு வேளை இந்த மாதிரித் தணிந்து போவதே அவளுக்குப் ப்ளஸ்ஸாகி விட்டதோ என்னவோ? கணவன் மனைவிக்குள் என்ன ப்ளஸ் மைனஸ்?
எல்லா வீடுகளிலும் ஆண்கள் இப்படித்தான் இருந்து கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றியது ராகவனுக்கு. உறவுகளில் ஏற்படும் உரசல்களைப் புரிந்து கொண்டு அதன் வெம்மையை உணர்ந்து பெண்கள்தான் சிடுக்குகள் விழாமல் அவிழ்த்துக் செல்கிறார்கள் என்பதாகச் சொல்லப்படுகிறதே! அதனால்தான் இந்தக் குடும்ப அமைப்பே இன்றுவரை காப்பாற்றப் பட்டு வருகிறது என்று பெருமை பேசப் படுகிறதே! எத்தனை வீடுகளில் இப்படியான நிலமை இருக்கிறது? யார் உணர்கிறார்கள்?
( 3 )
“மாலினி, நீ இப்டித் தனியா வந்திருக்கிறது கொஞ்சங்கூடச் சரியில்லைம்மா…அதுவும் மாப்பிளைக்குத் தெரிவிக்காம வந்திருக்கேங்கிற…என்னம்மா இது? உனக்கே மனசுக்குத் தோணலை?”
மாலினி அமைதி காத்தாள். சொல்வது சரிதான் என்று ஒப்புக் கொள்கிறாளா? அல்லது சொல்வது பிடிக்கவில்லையா?

இரண்டு நாட்களாக இருந்த அமைதி இன்றுதான் கலைந்திருக்கிறது. அதுவும் சித்தப்பா மூலம். அப்பா கூட ஒன்றும் கேட்கவில்லை. அதற்காக அப்பாவுக்கு ஒப்புதல் என்று பொருள் கொள்ளலாமா? அம்மா பேசவேயில்லை. அது ஒன்றே போதும். அவளின் எதிர்ப்பின் அடையாளமாய். தரையில் உட்கார்ந்திருந்த மாலினி அப்படியே சித்தப்பாவின் மடியில் சாய்ந்து கொண்டாள். அவள் தலையை ஆதுரமாய்த் தடவிக் கொடுத்தார் அவர். உலகில் அன்பு ஒன்றுக்குத்தான் எல்லா சக்திகளும். அதை மிஞ்சிய விஷயம் எதுவுமில்லைதான். அது சித்தப்பாவுக்கு நன்றாகத் தெரிந்திருக்குமோ என்னவோ? எத்தனை ஆழமாக உட் புகுவதற்கு இந்தத் தலை வருடல்?

பிறந்ததிலிருந்து இருபது இருபத்திரெண்டு ஆண்டுகள் வரை தாய் தந்தையா,; உற்றார் உறவினர் சுற்றத்தாரோடு வாழ்ந்து விட்டு, திடீரென்று வேறொரு வீட்டிற்குப் போ என்று சொன்னால் உடனடியாக ஒரு பெண்ணால் அப்படிப்போய் எப்படி ஒன்றி விட முடியும்? மனம் அப்படியும் இப்படியுமாகத் தவிக்கத்தான் செய்கிறது. ஒரேயடியாக அறுத்துக் கொண்டும் வர முடியாதே? அப்படியல்லவா கட்டிப் போட்டு விடுகிறார்கள்? இந்தத் திருமண பந்தம் அப்படித்தானே மனிதர்களை முடக்கிப் போட்டு விடுகிறது! வாழ்வின் ஆதாரமே அதுதான் என்பது போலல்லவா கோலோச்சுகிறது? அதுவும் ஒரு பெண்ணுக்கு ஆளுமையே அதுதான் என்றிருக்கும்போது! அது ஏன் இப்படி இடையிடையில் கட்டறுத்துக் கொள்ளத் தவிக்கிறது? கட்டறுத்துக் கொள்ளவா அல்லது அம்மாதிரியான நிகழ்வுகளின் ஆரம்பக் கட்டத்தில் கால் வைத்து ஒருவருக்கொருவர் மானசீகமாய் மிரட்டிக் கொள்வதிலே ஒரு திருப்தியா?

தாய் தந்தையர்களின் குண விசேஷங்களிலிருந்து அத்தனை எளிதாய் விலகிப் போய் விட முடியுமா? அதுநாள்வரை தனது பிறந்தகத்தில் தன் பெற்றோரோடு தான் கண்ட வாழ்க்கை தனக்கு எதைக் கற்றுக் கொடுத்திருக்கிறது? எல்லாம் தெரியத்தான் செய்கிறது. ஆனாலும் இதில் ஏதோ சுவை இருக்கிறது.

மென்மையாகச் சிரித்துக் கொண்டார் சாம்பசிவம். “என்னம்மா, ஊருக்குப் போகணும்போல இருக்கா?”
இந்த மனுஷன் தன் மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்? தன் மனதில் ஓடும் எண்ண அலைகள் இவருக்கு எப்படித் தெரிகிறது? ஒரு வருடலில் அத்தனையையும் துல்லியமாகப் புரிந்து கொள்வாரோ? இதுதான் அனுபவம் என்பதோ?
“உடனே என்னை ஊருக்கு அனுப்பறதுலயே இருங்க…உங்க எல்லாரையும் பார்த்துட்டு, கொஞ்ச நாளைக்கு இருந்துட்டுப் போகலாம்னு வந்திருக்கேன் நான். நீங்க என்னடான்னா என்னை விரட்டுறீங்க?”
“நா ஏன்மா விரட்டுறேன் உன்னை. இது உன் வீடு. நானே ஓசிக்கு இருக்கிறவன். உன்னை நா அப்படிச் சொல்ல முடியுமா?”
அதிர்ந்தாள் மாலினி. “சித்தப்பா! என்ன சொல்றீங்க? நீங்கதான் எனக்கு எல்லாம். எங்க அப்பாவை விட உங்க மடிலதான நா நாள் ப+ராவும் கிடந்திருக்கேன். அப்புறம் எதுக்கு இப்டிப் பேசுறீங்க?”
“சும்மாச் சொன்னேம்மா…என்னதான் ஆனாலும் நா எனக்குன்னு ஒண்ணு இல்லாதவன்தானே! கல்யாணம் காட்சின்னு எதுவும் பார்க்காதவன். நீங்களே சதம்னு இருந்திட்டவன். அது எப்பவாவது தவறோன்னு மனசுக்குத் தோணும். அப்போ ஏதாச்சும் மனசு பிரண்டு இப்படி வார்த்தைகள் வரும். நீ ஒண்ணும் பெரிசா எடுத்துக்காதே!”
“சின்ன வயசுலேர்ந்து நீங்கதான் எனக்கு எல்லாம். என்னை பள்ளிக்கூடத்துல கொண்டுவிட்டுக் கூட்டிவருவீங்களே தினமும்…அப்போயிருந்து உங்களத்தான் என் அப்பாவா நினைச்சிட்டிருக்கேன்…என் அப்பா கூட எனக்கு அப்புறந்தான்…”
“சரி, இப்போ இதை எதுக்குச் சொல்றே? என்ன செய்யணும் உனக்கு? அதைச் சொல்லு முதல்ல…”
“எனக்கு ஒண்ணும் செய்ய வேண்டாம்…என்னை எதுவும் கேட்காம இருந்தாப் போதும்…” “அது எப்டிம்மா? திடீர்னு நீபாட்டுக்குத் தனியா வருவே…கேட்டா அவர் அவுங்க வீட்டுக்குப் போயிட்டார், நா இப்டி வந்துட்டேன்னு சொல்லுவே…என்ன எதுன்னு காரணமில்லாமே நீங்கபாட்டுக்கு இருப்பீங்க…இதுல ஏதாச்சும் பிரச்னை இருக்குமோன்னு பெரியவங்களுக்குத் தோணுமாயில்லியா?”
“இந்தமாதிரி ஒவ்வொண்ணையும் தூண்டித் துருவுறதுதான் இந்தப் பெரியவங்க வேலையாப் போச்சு…வேறே போக்கிடம் இல்லாமே அக்கடான்னு கிடப்போம்னு இங்க வந்தா நீங்க என்னடான்னா இப்படிப் போட்டுத் தொணத்துறீங்க…”
“சரிம்மா…ஸாரிம்மா…போதுமா? உனக்கு எப்போ மனசு வருதோ அப்போ சொல்லு போதும். இப்போ சித்தப்பா உன்னை வற்புறுத்தலே…இதை இந்த வீட்ல நாந்தான் உன் கிட்டே கேட்டாகணும். நா இருக்கேன் எல்லாத்தையும் பார்த்துக்குவேன்ங்கிறதுதான் உன் அப்பா அம்மாவோட கணிப்பு. ஆகையினால நீ இன்னைக்கில்லாட்டாலும் இன்னும் ரெண்டு நாள் கழிச்சாவது விஷயத்தை என்கிட்டே சொல்லித்தான் ஆகணும்…சரிதானா? ஓ.கே. இப்போ உன் விருப்பம் போல இருக்கலாம் நீ…நான் கொஞ்சம் வெளில போயிட்டு வர்றேன்…” “எங்கே சித்தப்பா…நானும் வரட்டுமா?”
“அய்யய்ய…இதுக்கெல்லாம் நீ வரக் கூடாதும்மா…இது அலைச்சல் வேல…” “அது என்ன அப்படி அலைச்சலானது?”
“தெரியாதா உனக்கு? நமக்கு விமான நிலையம் பக்கம் ஒரு ப்ளாட் கிடக்கு தெரியுமோ? அதை விக்கச் சொல்றான் உங்கப்பன்…அதுக்காகத்தான் புறப்பட்டேன்…..”
“விக்கப் போறீங்களா? அதுபாட்டுக்குக் கிடந்துட்டுப் போகுது…இன்னும் விலை ஏறுமில்லியா? எதுக்கு விக்கணும்?”

“எதுக்கு விக்கணுமா? உன் கல்யாணக் கடன்களை அடைக்க வேண்டாமா? கடன் கொடுத்தவங்க சும்மாவா இருப்பாங்க…?”
அதிர்ந்தாள் மாலினி!
( 4 )

“சார், ராகவன் சார் லீவு…அவர் இருந்தாத்தான் அந்த சீட்ல எதுவும் எடுக்க முடியும்…நாம தொட்டுக் கலைச்சு வச்சிட்டம்னா அப்புறம் வந்து அவர் சத்தம் போடுவாரு…” – தயங்கியவாறே கூறினார் கணக்காளர் வேதாசலம்.
“நல்லாயிருக்கே, அதுக்காக அவர் திரும்ப வர்றவரைக்கும் அந்த சீட்டு வேலைகளை அப்படியே போட்டு வைக்க முடியுமா? நான் சொல்றேன் எடுங்க…” – மேலாளர் சூரியமூர்த்தி சாவியை எடுத்து டேபிள் மேல் போட்டார்.
“எதை எடுக்கிறீங்களோ அதே இடத்தில திரும்ப வச்சிடுங்க…அவ்வளவுதான்..ஏன்னா அவர் தன்னோட வசத்துக்கு ஏத்தமாதிரி அடுக்கியிருப்பார் இல்லையா…”
“ஆமா சார்…கொஞ்சம் கலைஞ்சாலும் அந்த மனுஷன் சத்தம் போடுவாரு…” “சர்தான்யா…நல்லா வேலை செய்றவங்க எல்லார்கிட்டயும் இருக்கிற குணம்தான் அது. அதை நாம மதிக்க வேண்டிதான். அதுக்காக அந்த சீட்ல வேலையை நிறுத்தி வைக்க முடியுமா? தந்தியும், ஃபாக்ஸ_மா வந்திட்டிருக்கு…இந்த மாதிரி நேரத்துல லீவைப் போட்டுட்டுப் போயிட்டாரு…என்னைக்கு வர்றாராம்?”
“ஒரு வாரம் போட்டிருக்காரு ஸார்…எக்ஸ்டன்ட் பண்ணினாலும் பண்ணுவேன்னாரு…” “எக்ஸ்டன்ஷனா? அது சர்தான்…அந்தாள் என்ன கிறுக்கனா? ஒரு மாதிரி எப்பவும் தனக்குத்தானே பேசிட்டேயிருக்காரு…ஏதாச்சும் பிரச்னையோ?”
“அவர் வீட்ல ஒய்ஃப்போட எதோ இருக்கும் போலிருக்கு சார்…”
“எப்டிச் சொல்றீங்க?”

“இப்ப அவர் ஊர் போயிருக்கிறதே அப்டித்தான் ஸார்…அவுங்க அம்மாவக் கொண்டு வந்து வச்சிட்டு இப்ப சமீபத்துலதான் கொண்டு விட்டாரு…அப்பருந்து இப்டித்தான் ஸார்…ஒரு வாட்டி சொல்லியிருக்காரு…”

“அட, எந்த வீட்லய்யா இல்லாம இருக்கு…எல்லாப் பொம்பளைங்களும் அப்டித்தான். அப்டி இருந்துதான் அவுகளும் மாமியாரா ஆகுறாங்க…அனுபவிக்கிறாங்க…” “இப்பல்லாம் அப்டியில்லை ஸார்…இப்பல்லாம் வேலை பார்க்கிற மாமியார்கள்தான். தான் உண்டு தன் பென்ஷன் உண்டுன்னு தனியாவே இருந்துடறாங்க…இல்லன்னா அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு சேவை விடுதில கொடுத்து தானும் அங்க வசதியா இருக்க ஆரம்பிச்சிடறாங்க…அதனால யாரும் யாரையும் மதிக்கிறதில்லை…உன் பணம் உன்னோட என் பணம் என்னோடன்னுட்டு தன் பையன் நல்லாயிருந்தாச் சரின்னு விட்டுடறாங்க…டேக் இட் ஈஸி பாலிஸி வந்திடுச்சு ஸார் இப்போல்லாம்…”- வேதாசலம் ரொம்பவும் கேஷ_வலாகச் சொன்னார். “அதப் போல இவரும் இருந்திட வேண்டிதான? ஏன் பொண்டாட்டிட்ட முரண்டிக்கிறாரு?” “அவுருக்கு அவுங்க அப்பா அம்மாவை வச்சிக்கணும்னு ஒரு ஆசை. அதுக்கு அவர் ஒய்ஃப் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போகலாமில்ல ஸார்…”
“சரி விடுங்க…இந்தப் பேச்சு நமக்கெதுக்கு? அதுவும் ஆபீஸ் நேரத்துல? வேலையைப் பார்ப்போம்…அந்த பென்ஷன் ஃபைலை எடுங்க…இன்னிக்கு அதை டிஸ்போஸ் பண்ணிடணும்…அவர்ட்டயே சொல்லியிருந்தேன்…என்னவோ போட்டுட்டுப் போயிட்டாரு…எல்லா மனுஷனுக்கும் எல்லாச் சமயத்துலயும் மனசு ஒரே மாதிரியாவா இருக்கு? சொந்த வாழ்க்கை சரியா இருந்தாத்தான் ஆபீஸ் வேலைல கான்ஸன்டிரேட் பண்ண முடியும்…அது சத்தியமான விஷயம்…எத்தனபேர் மனசு நொந்து, குடிக்குப் பழகி, தானும் ஒழுங்கா இருக்காம, ஆபீஸையும் கெடுத்து எப்படியெல்லாமோ ஆயிடறாங்களே? அந்த மாதிரியெல்லாம் இவர் இல்லாம இருக்காரே அது மட்டும் சந்தோஷம்….”

“இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா இவரும் அப்படி ஆனார்னா ஆச்சரியப்படுறதுக்கில்லை ஸார்…பல சமயங்கள்ல இவர் பேச்சு அப்படித்தான் இருக்கு…இவருக்கு மனசுல ஒரு காம்ப்ளெக்ஸ் இருக்கும் போலிருக்கு ஸார்…தன் பெண்டாட்டி தன்னை விட அதிகச் சம்பளம் வாங்குறான்னு…அது அடிக்கடி அவர் பேச்சுலேர்ந்து தெரியுது…” “இது கல்யாணத்துக்கு முன்னாடி தெரியலயாமா? எம்புட்டு இருந்தா என்னய்யா? இந்தக் குடும்பத்துல நாம ரெண்டு பேரும் பார்ட்னர். நமக்காகவும் நம்ம குழந்தைகளுக்காகவும் எது சரியோ அதை விடாமச் செய்வோம்…”ன்னு பிரதிக்ஞை எடுத்தமாதிரி செய்திட்டுப் போயிட்N;டயிருக்க வேண்டிதானே?”

“அங்கதான் சார் வருது பிரச்னையே! அவுங்களுக்குக் குழந்தைகளே இல்லை இன்னிவரைக்கும்!”
“அதான் தெரியுமே…கல்யாணம் ஆகி ரெண்டு வருஷமோ என்னவோதானய்யா ஆகும்…மெதுவாப் பிறக்கட்டும்…இப்ப என்ன கெட்டுப் போகுது…”
“அதுக்கில்ல ஸார்…அதுக்குள்ளேயும் இவுங்க காம்ப்ளக்ஸ் பிரச்னைல ரெண்டு பேரும் பிரிஞ்சிடுவாங்க போலிருக்கு…”

“இவருக்குத்தான் அதுன்னா அவுங்களுக்குமா?”
“அவுங்களுக்கு நாமதான் அதிகமா வாங்குறோம்னு எண்ணமிருக்கும் போலிருக்கு…” “அப்படியிருந்தாலே விளங்காதே…”
“அதான் படக்குன்னு லீவைப் போட்டுட்டு இவர் கிளம்பி;ட்டார் போலிருக்கு…” “அப்போ அந்தம்மா மட்டும் தனியா இருக்கா?”
“அது தெரில ஸார்…”- சொல்லிவிட்டு சூரியமூர்த்தியை ஒரு மாதிரியாகப் பார்த்தார் வேதாசலம்.
“நீ என்னய்யா சந்தேகமாப் பார்க்கிறே? நான் தேடிப் போகப்போறேன்னு நினைச்சிட்டியா?” வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துக் கொண்டார் வேதாசலம். அலுவலகத்தில் சூரியமூர்த்தியின் பேச்சுக்களை அறிவார் அவர். பெண் பணியாளர்கள் மத்தியில் அவர் ரெட்டை அர்த்தம் தொனிப்பது போல் பல சமயங்களில் பேசுவதும், சிலர் அதை ரசிப்பதும், சிலர் தாங்க மாட்டாமல் தலை குனிந்து கொள்வதும்….இந்த வயதில் இவருக்கு இது தேவையா? என்றுதான் தோன்றும் இவருக்கு. ஆனாலும் மேலாளரை ஒன்றும் சொல்ல முடியாது இவரால். ஏதாச்சும் லேசாகச் சொல்லப் போக மறுநாளைக்கு ஆபீஸ் வந்து டேபிளைப் பார்த்தால் மாறுதல் ஆணை இருக்கும் மேலே! அப்படி எத்தனையோ பேரை விரட்டியிருக்கிறார் அவர். அதை நினைத்தபோது மெலிதாக உடம்பு நடுங்கியது வேதாசலத்துக்கு. ஏன் ராகவனுக்கே அப்படியொரு நிலை ஏற்பட்டிருக்கிறதே!

( 5 )
“ராகவன், அந்த கான்ட்ராக்டர் ஃபைல் என்னாச்சு? ரெண்டு நாளாச் சொல்லிட்டிருக்கேன் வைக்க மாட்டேங்கிறீங்க…”-சூரியமூர்த்தி சூடாகத்தான் ஆரம்பித்தார்.
இன்னும் கேட்கவில்லையே மறந்து விட்டார் போலிருக்கிறது என்று நினைத்திருந்த ராகவனுக்கு திடுக்கென்றது.

“இப்போ முதல்ல அதை மூவ் பண்ணுங்க…”-
“சரி ஸார்…” என்றுவிட்டு வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான் அவன். இப்படி வந்ததும் வராததுமாக சொல்லப்படும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. எதெல்லாம் சிக்கல் நிறைந்ததாக இருக்கிறதோ அப்படியான கோப்புகள்தான் இவருக்கு லட்டு போலும் என்று நினைத்துக் கொண்டான். சிக்கலான கோப்புகளை வைத்துக் கொண்டு அதில்தான் காசு பார்க்க முடியும். எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த வேலை முடிக்கப்பட்டிருக்கிறது என்று சம்பந்தப்பட்டவருக்குத் தெரிய வேண்டும். அம்மாதிரியான ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதில் வல்லவர் அவர். இத்தனை ரிஸ்க் எடுத்து இந்தப் பணி என்னால் முடிக்கப்பட்டிருக்கிறது என்று புள்ளி வைத்து விடுவார். அங்கே மற்றவர் உழைப்பு எல்லாம் பஸ்பமாகி விடும். அப்படியான ஒன்றைத்தான் இப்பொழுது கேட்கிறார். என்ன செய்வது என்று புரியாமல் மனத்திரையில் எண்ணங்களை ஓட விட்டுக் கொண்டிருந்தான் ராகவன்.

இந்த ஆபீசுக்கு அவன் விரும்பித்தான் வந்தான். வந்த பொழுதினில் சூழல் நன்றாகத்தான் இருந்தது. ஆறு மாதங்கள் நன்றாக, நிம்மதியாகத்தான் ஓடியது. திருமணம் ஆகி தான் மாற்றலாகி வந்த இடம் நன்றாக அமைந்ததில் பெருத்த நிம்மதி இருந்தது இவனுக்கு. தன் மனைவியின் அதிர்ஷ்டம் என்பதாகக் கூட ஒரு எண்ணம் ஏற்பட்டு அவள் மீது அன்பு பெருகியது. ஆனால் ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு இந்த மனுஷன் இங்கே வந்து உட்காருவார் என்று யார் கண்டது. வந்த பிறகுதான் தெரிந்தது அவர் இங்கே விட்டுப் போய் சரியாக ஆறு மாதம்தான் ஆகிறது, மீண்டும் வந்து விட்டார் என்று. சபதம் செய்து விட்டுப் போனாராம். சரியா ஸிக்ஸ் மந்த்ஸ்…திரும்ப வரலேன்னா என் பேரு சூரியமூர்த்தி இல்ல…இதற்கு முன் இருந்த அலுவலரிடம் சொல்லாமல் சொல்லிவிட்டுப் போன சபதமாம் இது. தன் செல்வாக்கு அவரை விட மேல் என்று நிலை நாட்டுவதில் அத்தனை வெறி.
விருப்பு வெறுப்பற்று சமநிலையில் மக்களுக்கான பணிகளை செய்ய அமர்ந்திருக்கிறோம் இங்கே. மனித வக்கிரங்கள் எப்படியெல்லாம் நிர்வாகத்தைச் சீர் குலைக்கின்றன. நினைத்துப் பார்த்துக் கொள்வான் இவன். அவ்வளவுதான் முடியும். அதை வாய்விட்டுச் சொல்லக் கூட முடியாது. தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது
கூட சிக்கல்தான் இன்றைய நாளில்.

யோசனையிலேயே ஆழ்ந்து விட்டவன், அவர் சொன்ன கோப்பை எப்படி எழுதி வைப்பது என்று யோசிக்க ஆரம்பித்தான். மனதில் பல்வேறு விதமான தயக்கங்கள். வெறுமே அறிவுரைகள் கேட்டு கோப்பினை நகர்த்தி இவனுக்குப் பழக்கமில்லை. இது நான் எழுதுவது, இது பற்றி முழுமையாகச் சொல்ல எனக்குத் தெரியும் என்ற திமிர் இவனுக்கு எப்போதும் உண்டு. அந்தவகையில்தான் அதை எப்படி நகர்த்தலாம் என்பது இவனின் சிந்தனையாக இருந்தது. பிய+ன் கபிலன் வந்து நின்றார். “சார், மானேஜர் உங்களக் கூப்பிடுறாரு, சீஃப் ரூம்ல இருக்காரு…அந்தக் கான்ட்ராக்டர் ஃபைலை எடுத்திட்டு வருவீகளாம்…”
“இந்தாங்க…நீங்களே கொண்டு கொடுத்திடுங்க…கேட்டா இதோ வர்றாருன்னு சொல்லுங்க…”
“அய்யய்யோ…நீங்கென்ன ஸார்…வம்புல மாட்டி விட்ருவீங்க போலிருக்கே…உங்களக் கொண்டுவரச் சொன்னார்னா நீங்க என்னக் கொண்டு கொடுங்கங்கிறீங்க…?”
“கபிலு…ஒண்ணும் தெரியாத மாதிரிப் பேசக் கூடாது…எல்லாம் எனக்குத் தெரியும்…இதில நா எழுதினா அது வேறே மாதிரிப் போயிடும்…அவுருக்கு வேணுங்கிறதை அவரே எழுதிக்கட்டும்…நா எதுவும் கண்டுக்கலே…ஆனா அவுரு நினைக்கிற மாதிரி என்னால எழுத முடியாது…”
“இத அவருட்ட நீங்களே நேர்ல சொல்லிட வேண்டிதான ஸார்…என்னை ஏன் ஸார் உள்ளே இழுக்குறீங்க?”

“யோவ், தெரியும்யா எல்லாம்…என்னமோ உனக்கும் ஒண்ணுமேயில்லாத மாதிரிப் பேசாத…எல்லாத்தையும் பார்த்திட்டுத்தான உட்கார்ந்திருக்கோம்…போய்யா…போய் சும்மாக் கொடு…அவருக்கே தெரியும்..நானே கொண்டு கொடுத்தாலும் நீங்க போங்கங்கப் போறாரு…இத யாரு கொடுத்தான்ன?”

“ஆனாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்திதான் ஸார்…”
“நேர்மையா இருக்கணும்னு நினைக்கிறவனுக்கு அது ஒண்ணுதான்யா சொத்து…அதன் மூலமாக் கிடைக்கிற நஷ்டம் கூட அவனுக்குச் சுகம்தான்யா…” – வாயை மூடிக் கொண்டு கோப்பை எடுத்துக் கொண்டு போனார் கபிலன்.
முன்பே ஒரு முறை இந்தக் கோப்பு பற்றிப் பிரச்னை வந்திருப்பதை நினைத்துக் கொண்டான் ராகவன். அப்பொழுதே நீங்கள் நினைப்பது போல் என்னால் எழுதி வைக்க முடியாது அதற்கான ஆதாரமில்லாமல் எழுதுவது என்பது ஆகாது என்று மேலாளரிடம் முரண்டியிருக்கிறான். இத்தனை நாட்கள் அதனாலேயே நின்றிருந்த கோப்பு இன்று மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. இதில் ராகவனுக்கு ஆச்சரியமாயிருந்த விஷயம் அலுவலரும் மேலாளரின் வார்த்தைகளைத் தட்டாமல் ஒப்புதல் அளிப்பதுதான். அது எப்படியோ நடந்து விடுகிறது. அந்த சாமர்த்தியம் இந்த சூரியமூர்த்திக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் எது சரி என்று ஒன்று உண்டல்லவா? அதை மீறி ஏன் இப்படி நடந்து விடுகிறது? யோசித்து யோசித்து எப்படியோ போகட்டும், மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி என்று விட்டு விட்டான் அவனும். அப்படியான ஒரு நாளில்தான் திடீரென்று அவனும் ஒரு நாள் அந்த மாறுதலைச் சந்திக்க வேண்டியிருந்தது.
“என்னங்க இது அநியாயமா இருக்கு? நா இங்க வந்து ஒரு வருஷந்தான் ஆகுது…அதுக்குள்ள என்னை மாத்தினா என்னங்க அர்த்தம்?”
பொதுவான அவன் புலம்பலை எல்லோரும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் யாரும் பதில்தான் சொல்லவில்லை. யாரும் சாதகமாக வரமாட்டார்கள் என்பதை இவனும் அறிவான். ஆனாலும் இந்த அளவுக்கா பயந்தோளிகளாக இருப்பார்கள் என்று நினைத்துக் வெட்கப்பட்டான் இவன். அந்த முறை தப்பித்தது இவனின் கடுமையான எதிர்ப்பினால்தான். ஆணையை எடுத்துக் கொண்டு நேரே அலுவலரின் அறைக்கே போனான். தன் மீது என்ன குறை இருக்கிறது என்று வினவினான். தன் பிரிவுப் பணியில் தான் என்ன குற்றம் செய்தேன் என்று கேள்வி எழுப்பினான். அலுவலக நேரத்திலோ, விடுப்பு எடுப்பதிலோ, கூடுதல் வேலைகளைத் தாமதமின்றி முடிப்பதிலோ என்ன குறையைக் காண முடிந்தது என்றும், காரணமில்லாமல் அநாவசியமாக ஒருவனை மாற்றம் செய்வது அவனது கடமை உணர்வையே தாழ்த்தி எடை போடுவதற்கு சமம் என்று வெறி கொண்டவனைப் போல் அலுவலரிடம் வாதாடினான். தானா அப்படிப் பேசினோம் என்றும், எங்கிருந்து தனக்கு அம்மாதிரி ஒரு தைரியம் வந்தது என்றும் தனக்குத்தானே கேட்டுக் கொண்டான்.
அன்று ராகவன் கொடுத்த அதிர்வு சூரியமூர்த்தியையே சற்றுக் கலங்கத்தான் வைத்து விட்டது. இந்த அளவுக்குப் பேசுபவன் என்னமும் செய்யத் துணிந்து விடுவான் என்பதாக நினைத்து பயந்து விட்டாரோ என்னவோ, அவரே சொல்லி அந்த மாறுதல் ஆணையைக் கான்ஸல் செய்து விட்டார் அன்றே! அதிலும் கூட தானே அவனுக்கு உதவியதைப் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியதுதான் அவர் செய்த பெரிய அரசியல்.

( 6 )
தனது மாறுதல் ஆணையை ரத்து செய்ததிலிருந்து அலுவலகத்தில் ராகவனுக்கு ஒரு மரியாதை ஏற்பட்டிருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அதைப் பயன்படுத்திக் கொண்டு அவன் தன்னை ஒன்றும் அந்த அலுவலகத்தின் உறீரோவாக நினைத்துக் கொள்ளவில்லை. எப்பொழுதும் போலவே தன்னடக்கத்தோடு தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனை வைத்து அலுவலகத்தில் மற்றவர்களுக்கு ஒரு தைரியம் வந்திருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். சும்மா ஒன்றும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று யாரையும் ஒன்றும் தூக்கி அடிக்க முடியாது என்றெல்லாம் பேச்சு கிளம்பியிருந்தது. மனிதர்களில் அநேகமாக எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று தோன்றியது இவனுக்கு. ப+னைக்கு யார் மணி கட்டுவது என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். யார் மூலமாகவாவது பாதுகாப்புக் கிடைக்காதா என்று நினைக்கிறார்களேயொழிய இது தவறு என்று நியாயமான விஷயங்களுக்குக் கூட நிமிர்ந்து நிற்பதில்லை. ஆனாலும் ராகவனுக்கு அவர்கள் மேல் எந்தக் கோபமும் எழவில்லை. ஒவ்வொருவர் வாழ்க்கைப் பிரச்னையும் ஒவ்வொரு மாதிரி இருக்கக் கூடும். இந்த வாழ்க்கை என்னும் ஓடம் பெரும்பாலும் மனிதர்களை அமிழ்த்தத்தானே பார்க்கிறது? அதில் அநாயாசமாக படகு விட்டுக் கொண்டு சுகமாகப் பயணிப்பவர் எத்தனை பேர்? ஒவ்வொரு மனிதர்க்கும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள். எல்லாமும் உணர்ந்துதான் இருந்தான் ராகவன். அவனின் அந்த நல்ல குணமே அலுவலகத்தில் எல்லோரையும் அவனிடம் நெருங்கி வரச் செய்தது. வேதாசலம் ராகவனிடம் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். அவன் தன் வேலைகளில்; கன கச்சிதமாக இருப்பது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் வெளிய+ரில் இருந்த பொழுதே அவனை அறிவார். அவர் தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்த வேளையில் தற்செயலாக இவனைப் பற்றிய செய்தி அவருக்குக் கிடைத்தது. அவனேயறியாமல் திருச்சிக்குச் சென்று அலுவலகப் பணியாக வந்தது போல் இருந்து, அவனைப் பார்த்து எடை போட்டு விட்டுத்தான் வந்தார். ஆனால் அவன் அமையாமல் போனது அவருக்குப் பெருத்த வருத்தமாகத்தான் போய்விட்டது. அதிகப் பொருத்தமில்லாததில் அவர் மனைவியின் கேள்விகளுக்கு அவரால் தக்க பதில் சொல்லி சமாதானப்படுத்த முடியவில்லை. ஆனாலும் இன்றுவரை ராகவன் தனக்கு மாப்பிள்ளையாக வராதது அவருக்கு வருத்தம்தான். அதனாலேயே அவருக்கு அவன் மேல் என்றும் ஒரு கருணையான பார்வை இருந்து கொண்டேயிருந்தது.
இப்படித் திடீரென்று தன்னிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் லீவைப் போட்டு விட்டுப் போய்விட்டானே? என்று நினைத்தாரேயொழிய அதனால் அவனுக்கு எந்தக் கெட்ட பெயரும் வந்து விடக் கூடாது என்பதில் அவருக்கு அவரையறியாமலேயே ஒரு அக்கறை இருக்கத்தான் செய்தது. மனைவியுடன் பிணக்கிக் கொண்டுதான் பெற்றோரைத் தேடிப் போயிருக்கிறான் என்ற செய்தி அரசல் புரசலாக அவர் காதுக்கு எட்டிய போது அவர் மனம் சங்கடப் பட்டது.
இளம் தம்பதிகளிடையே திருமணமான புதிதில் முதல் ஓராண்டில் இம்மாதிரிப் பிரச்னைகள் ஏற்படுவதும், பிணக்கிக்கொண்டு போவதும் வருவதுமாக இருப்பதும், பின்னர் ஒரு நிதானத்துக்கு வருவதும் சகஜம்தான் என்று நினைத்துக் கொண்டார். அவர் பெண்ணுக்கும் இம்மாதிரி அனுபவம் உண்டு என்பதையும் நினைக்கையில் இதுவும் அந்தவகையிலானதாகத்தான் இருக்கும் என்று எண்ணம் போனது அவருக்கு. ஆனாலும் ராகவனின் நேர்மையும், ஒழுக்கமும், கடமையுணர்வும், தன்னடக்கமும், பெரியோர்களை மதிக்கும் பாங்கும், எதையும் அவன் எப்படியும் நேர் வழியில் சமாளித்துக் கொள்வான் என்ற நம்பிக்கையைத்தான் இவருக்குக் கொடுத்தது. திரும்பவும் அவன் தன் விடுப்பினை நீட்டித்தால்கூட தான் இருந்து அவன் பிரிவினையும் சேர்த்து சமாளித்துக் கொள்வது என்றும் அவன் நற்பெயருக்கு எவ்வகையிலும் களங்கம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலும் சற்று கவனமாகவேதான் இருந்தார். அப்படி இருப்பதில் அவருக்கு என்னவோ ஒரு மகிழ்ச்சியும் நிறைவும் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். தான் அலுவலகப் பணிகளில,; சொந்த வாழ்க்கையில் எப்படி எப்படியோ இருந்து கொண்டாலும் ஒரு நல்லவன் சார்ந்து தன் நிலைகளைத் தளர்த்திக் கொள்வதில் ஏனோ அவருக்கு ஒரு ஆறுதல் இருந்தது.

( 7 )
ராகவனின் தந்தை கேசவமூர்த்தியும், மாலினியின் சித்தப்பா சாம்பசிவமும் அப்படி நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள நேரிடும் என்று இருவருமே எதிர்பார்க்கவில்லை. இருவருமே பஸ்ஸை விட்டு இறங்கியபோதுதான் அது நிகழ்ந்தது.
“அடா, அடா, அடா…! என்ன ஒரு தற்செயல் பாருங்க…இப்படியுமா நிகழும்?”- மகிழ்ச்சி பொங்கச் சொல்லிக் கொண்டே வந்து கட்டிக் கொண்டார் சாம்பசிவம். பொது இடத்தில் அப்படியான ஒரு தழுவலை கேசவமூர்த்தி எதிர்பார்க்கவில்லை. நிதானத்துக்கு வர அவருக்கு சில நிமிடங்கள் பிடித்தன.

“நீங்க என்ன நினைக்கிறீங்க…இந்தப் பிரச்னையை அவுங்களேதான் தீர்த்துக்கணும்…நாம எடுத்துச் சொல்றது அவ்வளவு நல்லாயிருக்குமா?”
இவர் எதைச் சொல்கிறார் என்று தெரியாமல் முழித்தார் கேசவமூர்த்தி. எடுத்த எடுப்பில் ஒருத்தர் எப்படி இப்படி ஆரம்பிக்கலாம். எதிராளிக்கும் தெரிந்திருக்கும் என்ற ஊகத்தில் இவரே முடிவு செய்து கொண்டு துவங்கி விடுவதா? அப்படியானால் தனக்குத் தெரியாது என்று காட்டிக் கொள்வதில் எதிராளிக்கும் ஒரு தயக்கம் வராதா?
“எல்லாம் சின்னஞ்சிறுசுகதானே, அப்டித்தான் இருக்கும்…” என்று பொதுவாக ஒன்றை சொல்லி வைத்தார் பதிலுக்கு. அதன் மூலமாக ஏதேனும் புரிந்து கொள்ள அடுத்த தகவல் வரும் என்பது அவர் எதிர்பார்ப்பாக இருந்தது.
“எதுவும் நானும் கேட்டுக்கல…இப்படியிருக்குமோங்கிற ஊகம்தான்…அப்படி ஒண்ணும் அவசரப் பட வேண்டியதில்லைன்னு வைங்க…ஆனாலும் ஒருத்தருக்கொருத்தர் வெளிப்படையாச் சொல்லிக்க முடியாம, பரஸ்பரம் ஒருத்தர் மேல ஒருத்தருக்கு இருக்கிற அன்பினாலயும் மரியாதையினாலயும் இது நிகழ்ந்திருக்கலாமில்லியா?”
“சத்யம்…சத்யம்….” அப்படியே ஆமோதித்தார் கேசவமூர்த்தி. எதற்கு இப்படியெல்லாம் பேசிக் கொண்டு. நேரடியாக, வெளிப்படையாக என்ன என்பதைத் தெரிவித்து விட வேண்டியதுதானே? அவருக்குப் பெரிய அவஸ்தையாக இருந்தது. தன் சம்சாரம் கூட இருந்தால் தேவலாம் போலிருந்தது. பேசாமல் அவளைக் கையைக் காண்பித்து விட்டு விலகிக் கொள்ளலாமில்லையா? அவள் பார்த்துக் கொள்வாள். எல்லாவற்றையும், எல்லாரையும், ரட்சிப்பவள் அவள்தான்.

“நீங்க கிளம்புங்க, நான் எல்லாம் பாங்கா சொல்லி அனுப்பறேன். ஒண்ணும் நினைச்சுக்க வேண்டாம். எல்லாம் சரியாயிடும்….” – சொல்லிவிட்டு எதிர்பார்த்த வண்டி வந்தவுடன் தாவி ஏறி அமர்ந்து டாடா காண்பித்து விட்டார் சாம்பசிவம்.
வந்ததிலிருந்து ப+டகமாகவே பேசி, ப+டகமாகவே விடைபெற்றுக் கொண்டு விட்டாரே என்று இருந்தது இவருக்கு. அப்படியென்றால் ராகவனுக்கும் அவன் மனைவிக்கும் என்ன பிரச்னை? வெறுமே ஓய்விற்காக அவன் வரவில்லையா? ஓய்விற்காக வந்தவன் தன் மனையாளோடு வராமல் தனியாக வந்தது இப்படித்தானா? இப்பொழுதுதான் ஏதோ உரைப்பதுபோல்இருந்தது இவருக்கு. ஆனாலும் எல்லாம் தன் சகி பார்த்துக் கொள்வாள் என்கிற நம்பிக்கை அவரைப் பதட்டம் அடையச் செய்யவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தன் பணிக்காலம் சார்ந்த சில பிரச்னைகளுக்காக வந்த இடத்தில் இப்படியொரு செய்தி தன்னை எட்டியது தெய்வாதீனம்தான் என்று நினைத்து உடனே இதைத் தன் மனைவியிடம் சென்று சொல்லிவிட வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது அவருக்கு. ஒரு வேளை அவளுக்கும் இப்படியான ஒன்று தெரியாமல் இருந்திருந்தால்? என்ற எண்ணம் அவரிடம் மெல்லிய அதிர்வை ஏற்படுத்தியது.

( 8 )
“எல்லாம் வேணுங்கிற அளவுக்கு நான் அவன்டச் சொல்லியிருக்கேன்…நீங்க கவலைப் படாம இருங்க…”
எடுத்த எடுப்பில் தன் பாரியாள் இப்படிச் சொன்னதே பெருத்த ஆறுதலாய் இருந்தது கேசவமூர்த்திக்கு. மேற்கொண்டு கேட்க எதுவுமில்லை என்று நினைத்தார் அவர். படிக்கும் காலத்திலிருந்தே அவன் அம்மா பையன். எல்லாவற்றையும் அவளிடம்தான் பகிர்ந்து கொள்வான். நிய+ஸ் பேப்பர் உண்டு தான் உண்டு என்று அமிழ்ந்து கிடப்பார் இவர். பொதுவாகப் பையன்கள் எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு அப்பன்களைக் கண்டாலே ஏனோ பிடிப்பதில்லை. எதிரி போலப் பாவிக்கிறார்கள். சிவனே என்றுதான் இருக்கிறார்கள் என்றாலும் ஐயோ பாவம் என்றுகூட நினைப்பதில்லை. இத்தனைக்கும் தன் சம்பாத்தியத்தில்தான் தான் படித்து வருகிறோம் அதில்தான் இந்தக் குடும்பமே நடந்தேறுகிறது என்றாலும் அதெல்லாம் வாழ்வியல் கடமைகள் என்று நினைக்கிறார்கள் போலும்? ஏன் பெத்த? உன்ன எவன் பெத்துப் போடச் சொன்னான்? என்று கொச்சையாக நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். காலம் அப்படித்தான் மலிந்து கிடக்கிறது. எதை நினைத்து என்ன ஆகப் போகிறது? காலத்தால் எல்லாமும் மறக்கப்படும். மாற்றம் என்ற ஒன்றைத் தவிர இந்த உலகத்தில் எல்லாமும் மாறுதலுக்கு உட்பட்டதுதானே? இப்படியாக ஆறுதல் படுத்திக் கொள்வதும் ஒரு வகையிலான முதிர்ச்சியின் அடையாளம்தான் என்று நினைத்துக் கொண்டார். எல்லாவற்றையும் அமைதியாகக் கண்டு கண்டு தனக்குத் தன்னையறியாமல் அந்த முதிர்ச்சி வந்து விட்டதோ என்று தோன்றியது.

ராகவன் கிளம்பிப் போய் ஒரு நாள் கழிந்து விட்டது. எதற்கு வந்தான் என்ன செய்தான் என்றுதான் நினைத்துக் கொண்டார் இவர். வந்து இருந்த நாட்களில் அம்மா அம்மா என்று அவள் மடியில்தான் கிடந்திருக்கிறான். இன்னமும் அவன் அவளுக்குக் குழந்தைதான். தனக்கும்தான். என்றாலும் அம்மாவிடம் இருக்கும் பிரியமும் பாசமும் தனிதான். கொடுத்து வைத்தவள். தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டார் அவர். அவருக்கொன்றும் அவன் இப்படி இருப்பதில் பொறாமையெல்லாம் இல்லை. கண்காண நன்றாக இருந்தால் சரி என்பது ஒன்றே அவரது விருப்பமாக இருந்தது. அதற்கு பங்கம் வந்து விட்டதோ என்பதாக ஒரு மெல்லிய சோகம். அந்த நெருடலில்தான் இந்தச் சிறு பதட்டம். இருந்தாலும் மனைவியின் ஆதுரமான பதிலில் சமாதானமடைந்து விட்டார் கேசவமூர்த்தி. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே! இதுவே அவர் எப்போதும் வேண்டுவதாக இருந்தது. வாசலில் சிந்தனா வயப்பட்டு அமர்ந்திருந்தவரின் பார்வை தெருவில் திரும்பிற்று. மனையாள் லட்சுமி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார். கோயிலுக்குச் சென்று வருகிறாள். கையில் அர்ச்சனைக் கூடை. இந்தப் பெண்களுக்குத்தான் எத்தனை கடவுள் நம்பிக்கை? பிரார்த்தனையின் பலன்களை இவர்கள் எத்தனை தீர்க்கமாய் உணர்ந்திருக்கிறார்கள்? அதை மிஞ்சிய விஷயம் எதுவுமில்லை என்ற அசைக்க முடியாத இவர்களின் தீர்மானம் பக்தியின் மேல் இவர்களை எத்தனை ஆணித்தரமாய் அமர்த்தியிருக்கிறது? நிம்மதிப் பெருமூச்சு விட்டார் கேசவமூர்த்தி.

( 9 )
ராகவனின் மடியில் மாலினி கிடந்தாள். மெல்லிய சிரிப்பு வெளிப்பட்டது அவளிடமிருந்து. “என்ன,” என்றான் ராகவன்.

“உங்களுக்குக் கிளம்பணும்னு தோணியிருக்கிற அதே நேரத்தில எனக்கும் …அதை நினைச்சேன்…”

“ஒண்ணு சொல்லட்டுமா…எங்கிட்டச் சொல்லாம நீ உங்க வீட்டுக்குக் கிளம்பிப் போகலாமா?” – எடுத்த எடுப்பில் இதைக் கேட்டிருக்க வேண்டாமோ என்றுதான் தோன்றியது. “நீங்க மட்டும் உங்க ஊருக்குப் போய்ச் சேர்ந்துட்டு, “எங்க ஊருக்கு வந்திருக்கேன்…”னு போன்ல சொல்றீங்களே அது மட்டும் சரியா?”
“;…ஆனாலும்; இப்படி யாருக்கும் சொல்லாம வீட்டைப் ப+ட்டிட்டு போறது தப்புதானே…” மாலினியிடமிருந்து பதிலில்லை.
“இப்டி ஒருத்தருக்கொருத்தர் பதிலுக்குப் பதில் செய்திட்டுப் போனா நல்லாவா இருக்கும்…சுத்தியிருக்கிறவங்களுக்குத் தெரிஞ்சா…சிரிக்க மாட்டாங்களா…அசிங்கமா நினைக்க மாட்டாங்க…?”
“நீங்க நினைக்காம இருந்தாச் சரி…”
“தப்புன்னு தோணினதுனாலதானே உடனே புறப்பட்டு வந்தேன்…”
“எது? பிரிஞ்சிரிக்கிறதா? சொல்லாமப் போனதா?”
“ரெண்டுமேதான்…பெரியவங்களுக்கு இந்தப் பிரச்னை போயிடுச்சின்னா பெரிசாயிடும்னு திடீர்னு மனசுல ஒரு பயம்….நாமளே தீர்த்துக்கிறதுதான் புத்திசாலித்தனம்னு தோணிச்சு…அதனால கிளம்பி வந்துட்டேன்…”
“நானும் அப்டித்தான்…” சுருக்கமாகச் சொன்னாள் மாலினி. எத்தனையோ எடத்துல கேள்விப் பட்டிருக்கோம்…கடைசில அது நமக்கே வந்திடுச்சு…நம்மள அறியாமலே நடந்து போச்சு…நல்லவேளை இதோட முடிஞ்சிச்சேன்னு தோணுது…”
“இனிமே இந்தத் தற்காலிக ரகசியப் பிரிவுகூட நமக்கு நடுவுல இருக்கக் கூடாது…சரிதானா?”
“சரி…”
“நாம இன்னைக்கு சாயந்திரமே டாக்டர்ட்டப் போறோம்…”
“ஆரம்பிச்சிட்டீங்களா பழையபடியும்? உடனே வேதாளம் முருங்கை ஏறியாச்சாக்கும்…?” “நா என்னைச் சொல்லிக்கிறேன்…நீ சொல்றபடி நானும் செக்கப் பண்ணிக்கிறேன்…எங்கிட்டயும் ஏதாச்சும் குறை இருக்கலாமில்லியா? இருந்தா இம்ப்ரூவ் பண்ணிட்டுப் போறது?”

“அடேயப்பா…எவ்வளவு தாராளம்? இதத்தானே நான் முதல்லயே சொன்னேன்…? அத ஏன் உங்களால ஆக்டிவ்வா எடுத்துக்க முடில? ஒரு வாரமாப் பேசாம இருந்து, பிறகு சொல்லிக்காம ஊருக்கு போயி, திரும்பி வந்து, தேவையா?”
“என்ன இருந்தாலும் நா ஆம்பிளை இல்லையா?”
“அதக் கன்ஃபர்ம் பண்ணத்தானே போவோம்ன்னேன்…”
“கழுத…கிண்டலா பண்றே…உன்ன பத்துப் பிள்ளை பெக்க வைக்கிறேன் பாரு…எங்கிட்டப் பட்டுட்டு போதும் போதும்னு அலறப் போற நீ…!”

———————–
உஷாதீபன்

Series Navigationபுத்தாண்டு முத்தம்தென்றலின் போர்க்கொடி…
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *