பட்டி டு சிட்டி – நூல் மதிப்புரை

This entry is part 21 of 42 in the series 1 ஜனவரி 2012


முனைவர் மு. பழனியப்பன்
இணைப்பேராசிரியர்
மா. மன்னர் கல்லூரி.
புதுக்கோட்டை

நூலாசிரியர்: சிவசக்தி இராமநாதன்,
வெளியீடு நந்தினி பதிப்பகம், சூர்யா பிரிண்ட் சொலுசன்ஸ்,534. காமராசர் ரோடு, சிவகாசி, 9842124415 விலை. ரு. 150

கிராமங்களில் இருந்து நகரங்களுக்குப் பெயரும் நாகரீக வாழ்க்கை என்பது தற்போது சர்வசாதாரணமாகிவிட்டது.  நாடுகள் கடந்துப் பெருநகரத்திற்குப் போகவேண்டிய உயரத்திற்குத் தற்போதைய இந்திய மக்களின் சூழல் வளர்ந்துவிட்டது. இருப்பினும் பிறந்த நாட்டை, பிறந்த தாய்மண்ணை வெளிநாடுகளில் பெயர்ந்து வாழும் இந்தியமக்கள் மறவாமல் இருக்கிறார்கள் என்பது மகிழ்விற்கு உரிய செய்தியாகும். அவ்வகையில் வெளிநாடு செல்ல விரும்புகின்ற மக்களுக்கு வெளிநாட்டு நகரங்களின் வனப்பை, வசதிகளை, காண வேண்டிய இடங்களைத் தொகுத்தளிக்கும் முயற்சியாக பட்டி டு சிட்டி என்ற நூல் உருவாக்கப் பெற்றுள்ளது.

அழகிய அச்சாக்கம், நல்ல வழுவழுப்பான தாள், அத்தனைப் பக்கங்களிலும் வண்ணச் சேர்க்கை என்று படிக்கத்தூண்டும் வகையில் இந்நூல் வடிவமைக்கப் பெற்றுள்ளது.

நூலாசிரியராக விளங்கும் சிவசக்தி இராமநாதன் தன் வாழ்க்கைப் பின்புலத்துடன் நூலைத் தொடங்கி தான் ஒரு பயணியாக உலகம் முழுவதும் சுற்றிய அனுபவத்தை நூலுள் விரித்துரைக்கின்றார். ஒரு பெண், மனைவி, தங்கை, மகள் என்ற குடும்பநிலைகளை வெற்றிகரமாக ஆற்றிக்கொண்டு சிறந்த நிர்வாகியாக வளர்ந்து பயணியாக உலகம் சுற்றிய அனுபவப்பதிவு இந்நூல் என்பது கருதத்தக்கது. இத்தனை எல்லைகளை ஒரு சாதாரணப் பெண் கடக்க வேண்டுமானல் அவளின் மனஉரம், துணையிருப்போர் தரும் வலிமை முதலியன கணக்கில் கொள்ளப்பட வேண்டியன என்றால் அதுமிகையாகாது.

பதினெட்டு பட்டி என்ற நாட்டுப்புற வழக்கு, பதினெட்டு சிட்டிகள் என்ற நகர்புற வழக்காக இந்நூலுள் மாற்றம்  பெற்றுள்ளது. கட்டுப் பெட்டி என்று கட்டுக்குள் இருந்தப் பெண்ணினம் கடல்கடந்து சென்றதன் வெற்றி அடையாளம் இந்த நூல் என்பது  இந்நூல் பற்றிய சரியான விமர்சனமாக இருக்கும்.

சிங்கப்பூர், கோலாலம்பூர், கொழும்பு, துபாய்,லண்டன், நியூயார்க்,சிகாகோ, வாஷிங்டன், சான்பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்,ஓர்லாண்டோ, இஸ்தான்புல், ஆம்ஸ்டர்டாம், மெல்பர்ன், ஹாங்காங், ஷங்காய், பாரீஸ், ஜெனிவா என்ற பதினெட்டு சர்வதேச நகரங்கள் பற்றி அவற்றின் நிலவியல், பொருளாதார நிலை பற்றி, அந்நகரங்களின் சிறப்புகள் பற்றி எடுத்துரைக்கும் இந்நூல் உலகை பயணத்தால் அளக்க நினைக்கும் அன்பர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

ஆங்காங்கே வண்ணப்படங்கள், பெட்டிச் செய்திகள் என்று படிப்பவரைக் கவரும் பாங்கு சிறப்பானது. நல்ல தமிழை துபாய் சென்றும் மறக்காத ஆசிரியருக்கு வாழ்த்துக்கள். எண்ணியிருந்தால் இந்த நூல் ஆங்கிலத்தில் கூட ஆக்கப் பெற்றிருக்கலாம். ஆனால் பட்டியில் இன்னமும் வாழும் மக்கள் சிட்டிகள் பற்றி அறிந்து கொள்ள முடியாமல் போயிருப்பர். இவ்வகையில் உலகம் சுற்றும் முதல் (வாலிபி) பெண் இவர்தான் என்ற துணிச்சலை இந்நூல் வழங்குகின்றது.

டிஸ்னி பூங்காக்களில் ஒன்றான எப்பாட் தீம்பார்க் பற்றி ஆசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.  “இந்த பூங்கா வால்ட் டிஸ்னியின் நான்கு பூக்காக்களில் ஒன்றாகவும் 300 ஏக்கர் பரப்பளவில் மேஜிக் கிங்டம் எனப்படும் பூங்காவைப் போல் இரண்டு மடங்கு பெரியதாகவும் உள்ளது. இது உலகின் எதிர்கால நிலையைக் குறிக்கும் வண்ணம் உள்ளது. …மேலும் ஆச்சர்யமுட்டும் சில வகையான யோசனைகள் நிஜமாகவே ஆவதற்குரிய சாத்தியக் கூறுகள் உள்ளன” என்ற கணிப்பு இவரின் நுண்ணிய அறிவை, ஓரிடத்தைப் பற்றி அறிவிக்க வேண்டிய செய்திகளை அறிவிக்கும் நேர்த்தியை எடுத்துரைப்பதாக உள்ளது.

சிறுவர் முதல் பெரியவர் வரை படிக்க, பார்க்க, ரசிக்க உதவும் ஒரு நல்ல புத்தகத்தை ஆசிரியர் வழங்கியுள்ளார். இன்னமும் பல நாடுகள் சுற்றி அடுத்தடுத்து புத்தகங்களை எழுதவேண்டும். இவரின் ஆர்வம்  பதிவுகளாக மாறவேண்டும்.

Series Navigationஇருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுசக்தியிலிருந்து மின்சார உற்பத்திபுத்தாண்டு முத்தம்
author

முனைவர் மு. பழனியப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *