மண் சுவர்

author
0 minutes, 6 seconds Read
This entry is part 32 of 40 in the series 8 ஜனவரி 2012

அருண் காந்தி

 

ஆத்தா…ஆத்தோவ்…ஓவ்…என்னடீ…? எலி என்னத்தையோ கரண்டுது பாரு…

இந்த எலிப் பண்ணையள என்னவன்றதுனே தெரியலடீ.குருதுதெல்லாம்

வேற மொட்டயாக் கெடக்குறது அதுகளுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டமாக் கெடக்கு.

 

நானும் எவள நாளாத்தான் உனக்கிட்ட எலிப்பொறி வக்கச் சொல்லிக்கிட்டு  இருக்கேன்.கேக்குறியா நீ?

 

யேட்டி!யேட்டியோவ்…வாணி…

 

ஓவ்…என்ன த்தா… ? அங்குன யாரு மீனுக்காரனா போறான்?

 

இல்லத்தா கூனிப்பொடி..நிக்கச் சொல்லவா?

 

அடிப் போடி!”அவன் நால அள்ளிப் போட்டு 10 ருவா ம்பான்…சின்னப்பய கடத்தெருவுக்கு பொய்த்து வரும்போது வாங்கிட்டு வரச் சொல்ல வேண்டியதான்”னு பக்கத்து வீடு வாணியிடம் தன் வீட்டுக்குள் இருந்தே குரல் கொடுத்த பொன்னம்மா ஆத்தா ஊறுகாய் பாட்டிலை வெளிய வெயில்ல கொண்டாந்து வச்சிச்சு .

 

ஏங்கச்சி… சின்னப்பய கடத்தெருக்கா போறான்?”தெரியலையே…தூங்கிக்கிட்டுள்ள இருக்காக…”அது பொன்னம்மாவின் சின்ன மருமகள்.இன்னக்கி என்னமோ பொன்னம்மாத்தாவுக்கு வாயி முனுமுனுன்னு இருக்கும் போலருக்கு.ராசேந்திரன் எழும்புவான் அவனுக்கிட்ட எதாச்சும் கவுச்சி வாங்கிட்டு வரச் சொல்லலாம்னு ரொம்ப நேரம் பாத்துக்கிட்டு இருந்த பொன்னம்மாத்தா கடசியா மெதுவா நகந்து வயக் காட்டுக்கு நண்டு புடிக்க கெளம்பிருச்சி .

 

கட்டத் தேவரு செத்ததுக் கப்புறம் பத்து பன்னண்டு வருஷமா பொன்னம்மாத்தா தனியாத் தான் இருக்கு.இப்ப அது இருக்க அந்த கீத்துக் கொட்டாயில தான் மூத்தவன் நல்லுவையும் எளையவன் ரசேந்திரனையும் பெத்துப் போட்டுச்சு.கட்டத் தேவரு இருக்க வரைக்கும் மீனு நண்டு கறி எதுக்கும் வெருவாக்கெட்டுப் போனதுள்ள பொன்னம்மாத்தா.பொழுது விடியும் முன்னே அது பீச்சி வச்ச எருமப் பால சைக்கிள்ல வச்சி கட்டிக்கிட்டு நால் ரோட்டுக்கு கெளம்பிருவாரு.வரும்போது பாத்தியன்னா ஒரு குட்டிச் சாக்கு நெறயா மீனு நண்டு காகறி உப்பு புளி மொளகா மேந் தீனின்னு எதயாச்சும் வாங்கிக் கட்டிக்கிட்டு வந்திடுவாரு.சமயத்துல பொன்னம்மாத்தா கரிச்சுக்  கொட்டும் அவரை எல்லாத்தையும் செலவழிச்சுப்புட்டு அஞ்சு பத்து கூட மிச்சங் கொண்டாரலயின்னா.

 

ஒருநா கம்மாக் கரையில உரும நேரத்தில மாடு மேச்சுக்கிட்டு இருந்தவரு திடீர்னு நெஞ்சப் புடிச்சுக்கிட்டு கருவ மரத்தடியில உக்காந்திட்டாராம்.கருவண்டுப்பய வந்து சொல்லி எல்லாரும் ஓடிப்போயி பாக்குறதுக்குள்ள முழி ரெண்டும் மேல போயிருச்சு.அன்னக்கி மறுநாளே சினப்பய எதோ மொணங்க ஆரம்பிச்சுட்டான்னு பொன்னம்மாத்தாவே திருஞான தேவர் கிட்ட சொல்லி சொத்தப் பிரிச்சுக் குடுக்க சொல்லிருச்சு.அதுப்படி இருக்க எடத்துல சரிபாதி போக கோரச் செய்யிக்கி  குறுக்க வரப்ப வச்சிக் கொடுத்துட்டாரு.ராசேந்திரனும் நல்லுவும் தனித் தனியா உழுதுக்கட்டும்,சின்னக் குண்டு மட்டும் பொன்னம்மாக்கா பேருல இருக்கட்டும் அத ஆளுக்கொரு பட்டம் சாவடி பண்ணிக்கிட்டு பொன்னம்மக்காவுக்கு மூணு மூட்டை நெல்லும் வருஷத்துக்கு 1500 ருவ பணமும் குடுத்துரனும்ன்னு பேசிவிட்டாரு திருஞான தேவரு.

 

ஒன்னு ரெண்டு சாவடிக்கு ஒழுங்கா குடுத்துட்டு இருந்த புள்ளயலுக போகப் போக கோளாறு பண்ண ஆரம்பிச்சிடுச்சுக.ஒருநாளு பொன்னம்மாத்தா நல்லு வீட்டுக்கு முன்னாடி மண்ண வாரி ஏறச்சிட்டுப் போயி திருஞான தேவரு வீட்டு வாசல்ல அழுது ஒப்பாரி வைச்சிச்சு.அப்புறம் ரெண்டுபேரும் இல்லாம மூணாம் மனுஷன் செல்வராசுகிட்ட கூட குடுத்துப் பாத்துச்சு.அவனுமா அறுத்துக்கிட்டு போனதுக்கப்புறம் ஒரு பேச்சு பேசுவான்.மறுபடி விதியில்லாம ராசேந்திரன்கிட்டாயே உழுதுக்கச் சொல்லிருச்சு.ஒரு சாவடி பண்ணுனவன் நால் ரோட்டுல கடை ஒன்னு வெலைக்கு வருது.டீயும் பலகாரமும் போட்ட நல்லா ஓடும்.முப்பாதுனாயிரம் இருந்தா  வாங்கிப் புடலாம்.அவ கைல கழுத்துல கெடந்தத அடவு வச்சது போக ஒரு பத்தாயிரம் தேவைப்படுதுன்னு வந்து சொன்னான்.கொஞ்சம் கூட யோசிக்காமலா அவன் நெனச்சி வந்த மாதிரியே “அந்த சின்னக் குண்ட ஒத்தி வச்சுக்க டான்னு”  சொல்லிப்புடும் இந்தக் கூறு கெட்ட  பொன்னம்மாத்தா.

 

இதெல்லாம் நடந்து நாலஞ்சு வருஷம் ஆயிருச்சி இப்ப.பொண்டாட்டிக்கு நகை பண்ணி சின்னதா மொடக்கியிருந்த வீட்டையும் சிமெண்ட் பூசி ஓடு மாட்டிப்புட்டான் இந்த ராசேந்திரன்.எல்லாம் பண்ணினவன் அந்த சின்னக் குண்ட மட்டும் அப்படியே விட்டுட்டன்.அப்பயிலேர்ந்து அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடிக்கிட்டே இருக்கு இந்த பொன்னமாத்தா.நல்லுக்கிட்ட போயி கேட்டா சின்ன மவனுக்கு தானே எல்லாத்தையும் கொடுத்த அவன்கிட்டயே போயி கேளுங்கிறதும்.ராசேந்திரனுக்கிட்ட கேட்டா அவன் பொண்டாட்டி பொன்னமாத்தா காதுபடவே மட்டு மரியாத இல்லாம பேசுரதுமா இருந்துச்சு.பாத்துப்புட்டு கொஞ்ச நாளா யாருக்கிட்டயும் எதுக்கும் போயி நிக்கிறது இல்ல பொன்னம்மாத்தா.அது பாட்டுக்கு சுசேட்டில குடுக்குற குருணையக்  காச்சுக் குடிச்சுட்டு கோயில் மரத்தடில போயி உக்காந்திருக்கும்.யாராச்சும் கள கிள பறிக்க கூப்பிட்ட போவும்.அப்பறமா அதுவும் இல்ல.

 

நண்டு புடிக்க வயக்காட்டுக்குப் போன பொன்னம்மாத்தா போன எடத்துல மயக்கம் போட்டு விழுவ அங்குனக்குள்ள உரம் வீசிக்கிட்டு இருந்த ஆளுக கொண்டாந்து கைப் பத்தலா வீட்டுல விட்டுட்டு போனாக அன்னைக்கி.கடைக்கு பொய்த்து வந்த ராசேந்திரன் விசயத்தக் கேட்டு

“சாவப் போற காலத்துல ஒரு எடத்துல இருந்து தொலைய மாட்டியாடி?சோவ புடிச்ச மூதேவி…உனக்கொன்னும் வருதில்லையே..ஒரே வழிய அள்ளி வச்சிக் கொளுத்திப்புட்டு போய்டலாம்னு பாத்தா”ன்னு காலத் தூக்கிக்கிட்டு மிதிக்க வந்தான்.பொன்னம்மாத்தா கட்டத் தேவர கூப்பிடு பொழம்புனதப் பாத்து சுத்தி நின்ன எல்லாரும் ராசேந்திரன புடிச்சு பேசினதுக் கப்பறம்  தான் அவன் அந்த எடத்த விட்டு நகந்தான்.

 

ஆத்தா இந்தா இட்டலி ன்னு ராசேந்திரன் மகன் ஒரு தட்டுல நாலு இட்டலியும் மொளகாப் பொடியும் குடுத்திட்டுப் போனான்.திங்கிறதுக்கு மனசு இல்லாட்டியும் பசி பொன்னம்மாத்தாவுக்கு பாவம் அது என்ன பண்ணும்.

அதுக்கப்புறம் பொன்னம்மாத்தா அன்னக்கி வெளிய வரவே இல்ல.

 

அன்னக்கி ராத்திரி வாணி புருஷம் பழனி மாட்டு வண்டியில மணல் நடை அடிச்சுட்டு நேரமாயி தான் வந்தான்.

இஞ்சரு…இஞ்சரேய்…தலையைத் தூக்கிப் பார்த்த வாணி மீண்டும் கீழே போட்டாள்.என்ன அதுக்குள்ள உங்களுக்கு தூக்கம்…சோறு போடு…

தட்டைக் கழுவியாந்து வைத்தாள் வாணி.இவள நேரம் என்ன பண்ணிய?

சோற்றில் மீன் குழம்பை ஊற்றினாள் வாணி.அவளை முறைத்துக் கொண்டே தப்பி விழுந்த மீன் தலைகளை எடுத்து கீழே வைத்தான்.

 

“என்னங்கறேன் சத்தம்?எதாச்சும் எலி கிலியா இருக்கும் சாப்பிடுங்க நீங்க…யான்…பொன்னம்மாத்தா வீட்டுல வேற இன்னக்கி ஒரே சண்டை.

யான்?

அதுக்கென்ன…சும்மா ஆத்தமாட்டாத ஆளு…ஒடம்புல சுத்தமா ரெத்தமே இல்லேன்னு அன்னக்கி தர்மாஸ்பத்திரி டாக்டரே சொல்லிட்டுப் போனாரு தானே .அதோட நண்டு புடிக்க போறாளாம் வயலுக்கு.முடியாத காலத்துல சும்மா கெடந்தது எழும்ப வேண்டியது தானே…அங்குன போயி மயக்கம் வந்து கொண்டே அடிச்சுப்புடுச்சி.ஆளுக கைப்பத்தலா கொண்டாந்து விட்டுட்டு போனாக.உடனே ராசேந்திரன் அண்ணன் வேற கைய்ய ஓங்கிக்கிட்டு கெளம்பிட்டாரு..ஏண்டி ஊரு பூராவும் எம்மானத்த வாங்குறேன்னு.அப்பயிலேர்ந்து அந்த ஆத்தா அழுதுக்கிட்டே கெடக்கு.

 

பொன்னம்மாத்தாவின் சுவற்றுப் பக்கம் அதே வழக்கமான சுரண்டல் சத்தம் கேட்டது.

 

பொன்னம்மாத்தாவா அது?இந்நேரத்துக்கு முழிச்சிகிட்டா இருக்கு?

சாப்பிட்டுச்சா என்னனு தெரியல போயி ஒரு கிண்ணத்துல கொஞ்சோண்டு கொழம்பு குடுத்துட்டு வா”ன்னு அனுப்பினன் வாணியை.

ஏதச்சும் நல்ல கொழம்பு வச்ச அன்னக்கி பழனி சொல்லுவான் “இந்தா அந்த ஆத்தாக்கு ஒரு கிண்ணத்துல போயி குடுத்துட்டு வா”ன்னு.அவன் சின்ன வயசுல தூக்கி வளர்த்தது அது தான்.அவனுக்கு குடல் ஏறுனப்ப எல்லாம் அதான் வயித்துல எண்ணையத் தடவி தட்டிவிடும்.கால்ல சுளுக்கிக்கிடுச்சுன்ன ஒரு செரங்கை என்ன இருந்தப் போதும் எல்லா வலியையும் வழிச்சு எடுத்திடும்.

 

ஆத்தா…ஆத்தா…

ஓவ்…என்னடி?… வாடி…மூக்கை உறிஞ்சுக்கிட்டே உள்ளே வான்னு கூப்பிட்டுச்சி வாணியை

தூங்கிட்டியே?…

இல்லடி வாடி உள்ள…

மண்ணெண்ன விளக்கை நகர்த்தி முன்புறம் வச்சிச்சு பொன்னம்மாத்தா

 

ரொம்ப நாளாக மொழுகாத சாணித் தரை அங்கங்க பூச்சியா இளஞ்சிக்கிட்டு இருந்துச்சு.சின்ன சின்ன பொந்துல வேற எலி மண்ண கொண்டாந்து எக்கி வெளிய தள்ளி இருந்துச்சு.வௌவால் மூத்திரமும் துணியோட மடுச வாடையும் கெட்ட நாத்தம் அடிச்சுச்சு வாணிக்கு.கூரை மோட்டில் நிறைய இடங்களில் சுசேட்டிச் சாக்க வச்சு சொருவிருந்துச்சு பொன்னம்மாத்தா.செவத்து மண்ணு அங்குனைக்கு அங்குன வீடு முழுக்க பேந்து கொட்டிக் கெடந்துச்சு.செவத்தோரமா பழைய சீலையைச் சுத்திக் கொண்டு படுத்திருந்துச்சு பொன்னம்மாத்தா.

 

சாப்டியா?இந்தா கொழம்பு கொண்டுவந்தேன்..

யாண்டி இப்ப இதெல்லாம்..வந்துட்டானா பய?

ம் இப்பதான் வந்தாக ஆத்தா…

திடுமுடுன்னு செவத்தோரமா இருந்த குருதுக்குள்ள எலிகள் அடிச்சு விளையாண்டுட்டு இருந்துச்சு.

என்ன பாடுபடுத்து டீ இந்த எலிப் பண்ணைய..

ஆத்தா இங்கிட்டு சத்த தள்ளிப் படுக்கலாமுள்ள…அங்குன செவத்து பச்ச மண்ணு கொட்டுது பாரு…

இங்கின தாண்டி கூதலடிக்காதுன்னு சொல்லிக்கிட்டு எதோ மொணங்கிக்கிட்டே பெரண்டு படுத்துச்சு பொன்னம்மாத்தா.அங்குன வச்சுட்டுப் போடி நா சத்த நாழி ஆயி சாபிடுறேன்.ஒரு மாதிரி நெஞ்சக்கரிக்கிறது.

சரி த்தா நா வாரேன் தூங்கிராத.

 

மறுநா காலைல வாணி புருசனுக்கு சோறு குடுத்தூட அந்த கொழம்புக் கிண்ணத்த வாங்க போனப்ப பொன்னம்மாத்தா மூச்சு பேச்சு இல்லாம கெடந்துச்சு.ஓடிப் போயி டாக்டர கூட்டியாந்து பார்த்தா அவரும் கைய விரிச்சுப் புட்டாரு.கெழவி ரொம்ப மண்ணத் திண்ணுபுடுச்சாம் ராத்திரி. ரொம்ப நாளாவே அது செவத்து மண்ணத் தின்னுக்கிட்டு இருந்திருக்கும் போல.சோறு திங்காததால மண்ணத் திங்க ஆரம்பிச்ச கெழவி அப்புறமா தின்னாலும்  தெனைக்கும் ஒரு சில்ல பேத்து தின்னுக்கிட்டு இருந்திருக்கு.ஒருதடவ மயக்கம் போட்டு விழுந்தப்ப செக் பண்ணின டாக்டரே அதுக்கிட்ட கேக்க…இல்லேன்னு மழுப்பி சத்தியம் பண்ணிப்புடுச்சு.அதுக்கு ஏன் சோவை புடிச்சு வாயி வயிறெல்லாம் வெந்து போச்சுன்னு கடைசியாத்தான் தெரிஞ்சுது எல்லாருக்கும்.

நேத்து வழக்கத்தவிட அதிகமாத் திங்க தாங்குமா அந்தக் கொடலு?ஒரே வழியாக் கொண்டு போய்டுச்சு.வாணி கொடுத்த மீன் குழம்பு கிண்ணத்தில் அப்படியே காய்ந்து போய் இருந்தது.

 

பொன்னம்மாத்தாவ சாயங்காலமா தூக்கியாச்சி.அன்னக்கி ராத்திரி ஒரே மழையும் காத்துமா அடிச்சுது.மறுநாள் காலைல பாத்தப்ப பொன்னம்மாத்தா வீடு சுத்தமா சரிஞ்சு போயி செவரெல்லாம் மழையில மவுந்து கொட்டிக் கெடந்துச்சு.

 

தேவரே “ராத்திரி அந்த மழைல நின்னு எரிக்க ரொம்ப செரமப் பட்டுப் போய்ட்டோம்.பொழுது விடியிற வரைக்கும் நிக்கிற மாதிரி ஆயிப் போச்சு.”கூட ஒரு கேனு சாராயம் வாங்கிட்டு வரும்படியாப் போச்சு.இன்ன 300 ருவ சேத்துக் குடுங்கன்னு கேட்டான் அந்த மாணிக்கம் பய.

அதுக்கு “சர்றா போடா வாங்கிக்கலாம்னு” சொன்னவரு

டேய் அந்தக் கொட்டாயி மழைல விழுந்துருச்சு ரெண்டு நாள் கழிச்சு ஆளக் கூட்டியாந்து ஒதுக்கித் தள்ளிப்புடுங்க…ன்னாரு.

“மாடெல்லாம் மழைல கெடந்து நனையிது அங்குன ஒரு கொட்டாயி போடச் சொல்லுங்க”ன்னு வீட்டுக்குள்ளிருந்து குரல் கொடுத்தது நல்லு பொண்டாட்டிதான்.ராசேந்திரனின் பிள்ளைகள் தனியா நின்ன அந்த பொன்னமாத்தா வீட்டுக் குட்டிச் செவத்துல ஏறிக் குதிச்சு வெளையாடிக்கிட்டு இருந்துச்சுதுக.அப்ப மானம் அப்படியே லேசா வெக்காளிக்க ஆரம்பிச்சுச்சு.


Series Navigationசிலைஅழகின் சிரிப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *