பஞ்சதந்திரம் தொடர் 27- கல்வியின் பயன்

This entry is part 27 of 30 in the series 22 ஜனவரி 2012

33. கல்வியின் பயன்

ஒரு மலையின் பக்கத்தில் ஒரு பெண்கிளி முட்டைகள் இட்டது. அவற்றிலிருந்து இரண்டு கிளிகள் வெளிவந்தன. கிளி இரை தேடி வெளியே சென்றிருக்கும்போது, அந்தக் கிளிக் குஞ்சுகளை ஒரு வேடன் எடுத்துச் சென்றுவிட்டான். அவற்றில் ஒன்று அதிர்ஷ்டவசமாக எப்படியோ தப்பித்துக்கொண்டது. மற்றதைக் கூண்டில் அடைத்து, அவன் பேசக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினான்.

எங்கெங்கோ சுற்றித் திரிந்து வந்த ஒரு ரிஷி மற்றொரு கிளியைப் பார்த்துவிட்டு அதைப் பிடித்து ஆசிரமத்துக்குக் கொண்டுபோய் வளர்த்தார்.

காலம் சென்றது. ஒரு நாள் அரசன் ஒருவன் சவாரி செய்த குதிரை திசைகெட்டு ஓடியது. அரசன் தன் சேனையிடமிருந்து பிரிந்து காட்டுக்கு வந்து சேர்ந்தான். வேடன் இருக்குமிடத்துக்கு வந்தான். அரசன் வருவதைப் பார்த்ததும் கூண்டிலிருந்த கிளி ‘கலகல’வெனன்று பேசத் தொடங்கியது: ‘எஜமானர்களே, யாரோ ஒருவன் குதிரை மேல் ஏறி வருகிறான். அவனைக் கட்டுங்கள், கட்டுங்கள்! கொல்லுங்கள் கொல்லுங்கள்’ என்றது. அதைக் கேட்டதும் அரசன் தன் குதிரைய வேறு திசையில் வேகமாகத் தட்டிவிட்டான்.

பிறகு அரசன் காட்டில் ரொம்பதூரம் சென்றதும் ஒரு முனிவரின் ஆசிரமத்தைக் கண்டான். அங்கே கூண்டிலிருந்த கிளி அரசனைப் பார்த்துவிட்டு, ‘’வருக, வருக அரசரே! சிரம பரிகாரம் செய்து கொள்ளுங்கள்! குளிர் நீரையும் ருசியுள்ள பழங்களையும் சாப்பிடுங்கள்! ரிஷிகளே, அரசருக்கு அர்க்கியம் பாத்தியம் முதலியவற்றைக் கொடுத்துக் குளுமையான மரநிழலில் மரியாதை செய்யுங்கள்!’’ என்றது.

இதைக்கேட்டதும் அரசனின் கண்கள் ஆச்சரியத்தால் அகல விரிந்தன. ‘’இது என்ன?’’ என்று ஆதிசயித்தான். கிளியைப் பார்த்து, ‘’இதே காட்டின் இன்னொரு பக்கத்தல் உன்னைப் போலவே ஒரு கிளியைக் கண்டேன். கொடிய ரூபமுள்ள அந்தக் கிளி என்னைக் கண்டதும் ‘கட்டு, கட்டு, கொல்லு, கொல்லு’ என்று கத்திற்று’’ என்று சொன்னான். அரசன் சொன்னதைக் கேட்ட கிளி தன் வாழ்க்கைச் சரித்திரத்தை நடந்தது நடந்தபடி கூறிற்று.

அதனால்தான் ‘குணமும் தோஷமும் சேர்க்கையைப் பொறுத்திருக்கிறது’ என்று சொன்னேன்’’ என்றது கரடகன். ‘’ஆகையால் உன்னோடு சேர்ந்திருப்பதே சரியில்லை.

முட்டாள் நண்பனைவிட அறிவுள்ள எதிரியே மேலானவன் யாரைக் கொல்ல நினைத்தானோ அவர்களுக்காகவே திருடன் உயிர்த்தியாகம் செய்தான். குரங்கு அரசனைக் கொன்றது.

என்கிற கதை மிகவும் சரி’’ என்றது கரடகன். ‘’அது எப்படி?’’ என்று தமனகன் கேட்க, கரடகன் சொல்லத் தொடங்கியது:

34. யோசனையுள்ள எதிரி

ஒரு அரசகுமாரன் ஒரு வியாபாரியின் மகனோடும், கல்வி கேள்விகளில் சிறந்த ஒரு மந்திரியின் மகனோடும் சிநேகமாயிருந்தான். ஒவ்வொரு நாளும் பொது இடங்களுக்கும், நந்தவனங்களுக்கும், ஓய்வு ஸ்தலங்களுக்கும் மூவரும் போவார்கள். விநோத விளையாட்டுகளிலும்,கேளிக்கைகளிலும் மூழ்கி பொழுதைக்கழிப்பர்கள். வில்வித்தை, யானை ஏற்றம், குதிரை ஏற்றம், வேட்டையாடுதல் என்றால் மூவருக்கும் எப்போதுமே பிடிக்காது. ‘ராஜநீதியை நீ வெறுக்கிறாய்’ என்று ஒரு நாள் அரசகுமாரனைத் தந்தை கடிந்து கொண்டார். இந்த அவமானத்தை அவன் தன் நண்பர்களுக்குத் தெரிவித்தான். அதற்கு அவர்கள், ‘’நாங்கள் தொழிலைக் கவனிக்காமல் இருப்பதால் எங்களைப் பற்றி எங்கள் தகப்பனார்கள் கூட ஏதேதோ பிதற்றியபடிதான் இருக்கிறார்கள். உன்னோடிருந்து ஆனந்தமாகப் பொழுதைக் கழித்து வந்ததால் அந்தத் துக்கத்தை உணராமலே இருந்து வந்தோம். இப்போது நீயும் துயரப்படுவதைக் காணும்போது எங்கள் துயரம் அதிகமாகியது’’ என்று சொன்னார்கள்.

‘’அவமானமடைந்தபிறகு இங்கே தங்குவது சரியல்ல’’ என்றான் அரசகுமாரன். மேலும், ‘’மூவருக்கும் ஒரேவிதமான துயரமே. ஆகவே மூவரும் வெளியேறி எங்காவது போகலாம், வாருங்கள். ஏனென்றால்,

தன்மானமுள்ளவனின் வீரம், வித்தை, புண்ணியம், திறமை, குணம் எப்படிப்பட்டது என்பதை அயல்நாட்டுப் பிரயாணம் நன்றாகக் காட்டிவிடுகிறது
என்றான் அரசகுமாரன்.

அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். எங்கே போகலாம் என்று யோசித்தார்கள். ‘’பணம் இல்லாமல் நினைத்த காரியம் எதுவும் எங்கேயும் கை கூடாது. ரோஹணமலைக்குப் போவோம். அங்கே ரத்தினங்களைக் கண்டெடுத்து விரும்பியபடியெல்லாம் அனுபவிக்கலாம்’ என்று வியாபாரியின் மகன் சொன்னான். அவன் சொல்வது உண்மைதான் என்று எல்லோரும் ஒப்புக்கொண்டு, ரோஹண மலைக்குப் போனார்கள்.

அங்கே அதிர்ஷ்டவசமாக ஒவ்வொருவருக்கும் ஒரு விலையுயர்ந்த ரத்தினம் கிடைத்தது. உடனே மூவரும் யோசிக்கத் தொடங்கினார்கள். “காட்டு வழியில் பல ஆபத்துக்கள் வருமே! இந்த ரதத்தினங்களை பாதுகாப்பது எப்படி?’ என்று ஆலோசித்தார்கள். மந்திரிகுமாரன் ‘’நான் மந்திரிகுமாரன் அல்லவா? ஒரு உபாயம் யோசித்திருக்கிறேன். ரத்தினங்களை மூவரும் விழுங்கி வயிற்றிலே போட்டுக் கொண்டு போகலாம். வியாபாரிகளோ திருடர்களோ நம்மைக் கவனிக்கவே மாட்டார்கள்’’ என்று சொன்னான்.

அப்படியே தீர்மானித்து ரத்தினத்தை ஒவ்வொருவரும் ஒரு கவனம் சோற்றில் வைத்து விழுங்கி விட்டனர். அவர்கள் கண்ணில் படாதபடி அந்த மலைச்சாரலில் சிரமபரிகாரம் செய்து கொண்டிருந்த ஒரு திருடன் அவர்கள் ரத்தினத்தை விழுங்குவதைப் பார்த்துவிட்டான். அவன் யோசிக்கலானான். ‘’நானும்தான் எத்தனையோ நாட்களாக ரத்தினம் விரும்பி ரோஹணமலையில் சுற்றித் திரிந்தேன். அதிர்ஷ்டமில்லாததால் ஒன்றுகூடக் கிடைக்கவில்லை. எனவே இவர்களோடு சேர்ந்துகொண்டு போகலாம். எப்போதாவது எங்காவது இவர்கள் அலுப்போடு தூங்குவார்கள். அந்தச் சமயம் பார்த்து அவர்களின் வயிற்றைக் கீறி மூன்று ரத்தினங்களையும் எடுத்துக்கொண்டு போய்விடலாம்’’ என்று முடிவு செய்தான். மலையைவிட்டு இறங்கிப்போகிற மூவரையும் பின்தொடர்ந்து சென்று, ‘’உத்தமர்களே, இந்தப் பெரிய பயங்கரமான காட்டைத் தனியே கடந்து என் நாட்டுக்குச் செல்ல என்னால் முடியவில்லை. உங்களோடு சேர்ந்து வரட்டுமா?’’ என்று கேட்டான். அவர்களும் நட்பு வளர்க்க விரும்பி, ‘’அப்படியே செய்’’ என்று சொல்லி, அவனையும் கூட்டிக்கொண்டு வழி நடந்தார்கள்.

காட்டில் அடர்ந்த மலைகளுக்கிடையே போய்க்கொண்டிருந்தார்கள். ஒரு கிராமம் வந்தது. அதில் பில்லவர்கள் வசித்து வந்தார்கள். அந்தக் கிராமத்தின் தலைவன் தன்வீட்டில் பலவிதமான பறவைகளே விளையாட்டுக்காக வளர்த்துவந்தான். அவற்றின் மத்தியில் ஒரு கிழப்பறவை கூண்டில் அடைப்பட்டுக் கிடந்தது. இந்த நால்வரும் கிராமத்தின் அருகே போவதை அந்தக் கிழப்பறவை பார்த்துவிட்டுக் கத்த ஆரம்பித்தது. எல்லாப் பறவைகளின் பாஷைகளும் அந்தக் கிராமத் தலைவனுக்குத் தெரியும். கிழப்பறவை போடும் கூக்குரலின் அர்த்தத்தை அவன் புரிந்துகொண்டான். மிகுந்த சந்தோஷத்துடன் அவன் வேலையாட்களைக் கூப்பிட்டு, ‘’அந்த வழிப்போக்கர்களிடம் விலையுயர்ந்த ரத்தினங்கள் இருக்கின்றன. அவர்களைப் பிடியுங்கள் என்று பறவை கத்துகிறது. அவர்களைப் பிடித்து வாருங்கள்’’ என்று சொன்னான்.

வேலையாட்கள் போய் அவர்களைப் பிடித்து வந்தனர். கிராமத் தலைவனே அவர்களைச் சோதனை போட்டான். ஒன்றும் கிடைக்க வில்லை. எனவே அவர்களை விடுவித்து விட்டான். வெறுக்கோவணத்துடன் அவர்கள் போகத் தொடங்கினர். உடனே அந்தப் பறவை மறுபடியும் கத்திற்று. அதைக் கேட்டதும் கிராமத் தலைவன் மறுபடியும் அவர்களைப் பிடித்துவரச் செய்து உன்னிப்பாகச் சோதனை செய்துவிட்டு மீண்டும் விடுவித்தான். அவர்கள் போக ஆரம்பித்தார்கள். பழையபடியும் பறவை உச்சஸ்தாயியில் கத்திற்று. பில்லவர்களின் தலைவர் மறுபடியும் நால்வரையும் அழைத்து, ‘’இந்தப் பறவையை நான் சோதித்திருக்கிறேன். ஒருபோதும் அது பொய் சொல்வ தில்லை. உங்களிடத்தில் ரத்தினங்கள் இருக்கின்றன என்று அது சொல்கிறது, அவை எங்கே?’’ என்று கேட்டான்.

‘’எங்களிடத்தில் ரத்தினங்கள் இருந்தால் பரிசோதித்த பிறகும் ஏன் உங்கள் கண்ணில் தட்டுப்படாமல் போய்விட்டன?’’ என்று அவர்கள் பதில் சொன்னார்கள்.

‘’இந்தப் பறவை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆகையால் ரத்தினங்கள் உங்கள் வயிற்றில்தான் கட்டாயம் இருக்க வேண்டும். இன்று பொழுது சாய்ந்துவிட்டது,, நாளை காலை உங்கள் வயிற்றைக் கிழிக்கப் போகிறேன்’’ என்று அவன் சொன்னான். அவர்களைத் தூஷித்துவிட்டுச் சிறையில் தள்ளினான்.

திருடன் யோசிக்கத் தொடங்கினான். ‘காலையில் இவர்களின் வயிற்றைக் கிழித்து ரத்தினத்தைப் பெறுவான். அதேமாதிரி என்னிடமும் ரத்தினம் இருக்கும் என்று பேராசை கொண்டு என் வயிற்றையும் கிழிப்பான். ஆகவே எப்படியும் எனக்குச் சாவு நிச்சயம். இனி என்ன செய்யலாம்? சரிதான், ஒரு பழமொழி கூறுவது போல்,

‘’நிச்சயமாக உயிர்போகும் நிலைமை ஏற்பட்டால் மகாத்மாக்கள் பரோபகாரம் செய்கின்றனர். அதனால் மரணமே அமிருதம் போல் ஆகிவிடுகிறது.’’

எனவே, என் வயிற்றை முதலில் கீறச் சொல்கிறேன். முதலில் நானே இவர்களைக் கொல்ல நினைத்திருந்த போதிலும் என் சாவு இவர்களைக் காப்பாற்றட்டும். அந்தத் துராத்மா என் வயிற்றைக் கிழித்து எவ்வளவுதான் உன்னிப்பாகப் பரிசோதித்தாலும் ரத்தினம் எதுவும் கிடைக்கப்போவதில்லை பிறகு அவனுக்கு ரத்தினம் தேடும் ஆசை ஒழிந்துபோகும். இரக்கம் இல்லாதவனாயிருந்தாலும் அவன் கருணைகாட்டி, மேலும் இவர்களின் வயிற்றைக் கிழிப்பதை விட்டு விடுவான். அதனால் இந்த மூவருக்கும் நான் உயிர்ப்பிச்சையும் தன தானமும் தந்து உதவியதற்கு இவ்வுலகில் புகழும் மறுஜன்மத்தில் புனிதமான பிறப்பும் அடைவேன். இப்படி ஒரு மரணம் எனக்கு வரட்டும் என்று நான் விரும்பியதில்லை. என்றாலும் இதுதான் அறிஞர்களுக்குரிய மரணம்’’ என்று யோசித்து முடிவு செய்தான்.

இரவு கழிந்தது. காலையில் கிராமத் தலைவன் வந்து அவர்களின் வயிற்றைக் கிழிக்கத் தயாரானான். அந்தச் சமயத்தில் திருடன் அவனிடம் கைகூப்பி, ‘’என் சகோதரர்களின் வயிற்றைக் கிழிப்பதை எனக்குப் பார்க்கச் சகிக்காது. தயவு செய்து என் வயிற்றை முதலில் கீறுங்கள்’’ என்று தெரிவித்தான்.

தயையுடன் கிராமத்தலைவன் அதற்கு ஒப்புக்கொண்டு, அவன் வயிற்றைக் கிழித்துப் பார்த்தான். ரத்தினம் எதுவும் கிடைக்கவில்லை. ஆகவே அவன் ஆலோசித்தான். ‘’பறவையின் கூக்குரலைக் கேட்டு நான் பேராசைப் பட்டு எவ்வளவு பெரிய பாவம் செய்தேன்? என் கெட்ட காலம்! இவன் வயிற்றில் ஒன்றும் இல்லாதது போலவே மற்றவர்களிடமும் ஒன்றும் இருக்காது,’’ என்று முடிவு செய்தான். ஒரு தீங்கும் செய்யாமல் மூவரையும் விடுதலை செய்துவிட்டான். அவர்கள் காட்டை வேகமாகத் தாண்டிச் சென்று ஒரு ஊருக்கு வந்து சேர்ந்தனர்.

அதனால்தான் ‘யாரைக் கொல்ல நினைத்தானோ அவர்களுக்காகவே திருடன் உயிர்த்தியாகம் செய்தான்; முட்டாள் நண்பனைவிட அறிவுள்ள எதிரியே மேல்’ என்று சொன்னேன்’’ என்றது கரடகன்.

கரடகன் மேலும் பேசியது:

Series Navigationதுபாய் அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் இலவசக் கணினிப் பயிலரங்கம்முன்னணியின் பின்னணிகள் – 23
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *