தற்கொலையிலிருந்து கொலைக்கு …

This entry is part 21 of 31 in the series 19 பிப்ரவரி 2012

மாணவத் தற்கொலைகள் தினப்படி செய்தியாகி விட்ட நிலையில் கேள்விப்படும் ஒவ்வொருவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன் தன் ஆசிரியையை கத்தியால் பலமுறைக் குத்து கொன்ற சம்பவம்.

யார் காரணம் ? யாரின் பங்கு அதிகம்? பள்ளி நிர்வாகமா, பெற்றோரா, ஆசிரியரா ? என்று திரும்பத் திரும்ப பலராலும் பேசப்பட்டு வரும் விஷயம்.

மூன்று பெண்களுக்குப் பிறகு பிறந்த செல்ல ஆண் பிள்ளையாக தினம் நூறு ரூபாய் கையில் எடுத்து வரும் ஒரு மாணவன் என்ற நிலையில் இது ஒரு விதிவிலக்காக எடுத்துக் கொள்ளலாம் என்றாலும் ஒரு தொத்து வியாதி போல் இது மாதிரி செயல்கள் அதிகரிக்காமல் இருக்க நாம் இதை விவாதிக்க வேண்டி இருக்கிறது.

பெற்றோரை குற்றம் சாட்டும் ஒவ்வொருமுறையும் நாம் சொல்வது பெற்றோர்கள் பொறியியல் மற்றும் மருத்துவத் துறையில் சேரும் அளவு மதிப்பெண் எடுக்க தன் பிள்ளைகளை வற்புறுத்துகிறார்கள் என்பது. இது முற்றிலும் உண்மை தான். அதற்கான அழுத்தத்தை எதோ உயர் வகுப்புகள் வரும் போது தான் கொடுக்கிறார்களா என்றால் இல்லை இல்லை pre -KG யிலேயே துவங்கிவிடும் கொடுமைகள் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. pre -KG யில என்ன என்ன தெரிந்து வைத்து இருக்க வேண்டும் பிறகு LKG UKG யில் என்ன என்ன தெரிந்து வைத்து இருக்க வேண்டும் ஒன்றாம் வகுப்புக்குள் நுழையும் போதே என்ன கற்று வைத்திருக்க வேண்டும் என்பதில் பெற்றோர் மற்றும் பள்ளிகளுக்கிடையேயான போட்டியில் தன் பள்ளி அதிகமாக கற்று கொடுக்கிறது என்பதை நிரூபிக்க பள்ளிகளும் குழந்தைகளுக்காக தேர்ந்தெடுக்கும் syllabus பார்த்தால் நமக்கு தலை சுற்றும். வீட்டுப் பாடம் என்று ஒரு சுமை தரப்படும். அதை வைத்துக் கொண்டு மாலை வேளைகளில் அம்மாவுக்கும் குழந்தைக்கும் இடையில் நடக்கும் போராட்டம் காண சகிக்காது. பெரும்பாலும் அம்மாக்கள் வீட்டுப்பாடம் முடிக்க தேர்ந்தெடுக்கும் நேரம் மாலை ஐந்தரைக்கு துவங்கும். சின்ன வயசிலேயே பழக்கப்படுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் பின்னால் தொல்லை தான் என்று பதில் வரும் (ஐந்தில் வளையாதது இல்லை இல்லை இரெண்டில் வளையாது …) அதில் சில மாறுதல்கள் ஏற்பட்டாலும் டென்ஷனோ டென்ஷன் தான். பிள்ளையோ விளையாட்டுப் போக்கில் இருக்கும். இங்கும் அங்கும் ஓடிக் கொண்டோ தாவிக் கொண்டோ அல்லது அம்மாக்களின் சீரியல் பட்டியல் மாதிரி அவர்களுக்கும் இருக்கே சோட்டா பீம், கிருஷ்ணா, டோரிமான், ஹட்டோரி, டோரா, பவர் ரேஞ்சர்ஸ் … இதில் இருந்தெல்லாம் கவனத்தை திருப்பி அவர்களை ஒரு இடத்தில் உட்கார வைத்து வீட்டுப் பாடங்களை முடிக்க வைக்க வேண்டும் என்றால் அது பிரம்ம பிரயர்த்தனம் தான். திட்டு அடி உதை, கத்தல், அழுகை என்று விளக்கு வைக்கும் நேரத்தில் வீட்டில் ரணகளம் தான். அந்த நேரத்தில் வீட்டுக்கு வர அப்பாக்களுக்கோஅப்பப்பாக்களுக்கோ அம்மம்மாக்களுக்கோ நேரடியான தடா. மற்ற உறவினர்களோ நண்பர்களோ தெரியாமல் சென்று விட்டால் சில பல சங்கேதங்களில் புரிய வைக்கப்படும்.

இதெல்லாம் என்ன பெரிய விஷயம். குழந்தைகளை pre – KG யில் சேர்க்க முடிவு செய்யும் போதே பெற்றோர்கள் செய்யும் ஹோம்வொர்க் களில் மிக முக்கியத்துவம் பெறுவது எந்த பள்ளி தொடர்ந்து பத்தாம் பனிரெண்டாம் வகுப்புகளில் குரூப் ஓன்று இரண்டில் அதிக மதிப்பெண்கள் தருகிறது என்ற கணக்கெடுப்பு.

பள்ளிகள் மதிப்பெண்கள் தரும் அழுத்தத்தை தவிர்ப்பதாக சொல்லிக் கொண்டு கிரேட் முறை அமுல் படுத்துவதாக சொல்லிக் கொள்வார்கள். ஆனால் தேர்வுத் தாளில் மதிப்பெண்கள் இருக்கும். மதிப்பெண் அட்டவணையில் தான் கிரேட் இருக்கும். மதிப்பெண்களை முதலில் தந்து விட்டு சில நாட்கள் கழித்துத் தான் மதிப்பெண் அட்டவணை தருவார்கள். அதற்குள் மதிப்பெண்ணுக்காக அந்த பிஞ்சு ஏற்கனவே எல்லா திட்டு அடியையும் வாங்கி முடித்திருக்கும்.

சரி இதெல்லாம் அவ்வளவு பெரிய தவறா என்றால் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு ஆசை எல்லாமே பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பயத்தில் ஏற்படுவது தான். அதை எப்படி சுமுகமாக கையாள்வது என்று புரியாமல் தெரியாமல் பாசம், ஏக்கம், கவலை எல்லாவற்றோடும் தன் இயலாமையையும் கலந்து கட்டி தன் குழந்தை என்ற ஏக போக உரிமையில் வெளிப்படுத்தி விடுகிறார்கள். இது சமீபகாலமாக அதிகமாக பெற்றோர்கள் மேல் வைக்கப்படும் தீவிர விமர்சனமாக இருக்கிறது.

இதற்கு காரணம் இன்றைய கல்விச் சூழல். நல்ல கல்வி கற்க ஆகும் செலவு. அத்தியாவசிய பொருட்கள் அனைத்தின் விலையும் மிகக் கடுமையாக உயர்ந்து விட்ட நிலையில்

கல்வியை அதிக விலை கொடுத்துத் தான் வாங்க வேண்டும் எனும் போது பின்னர் அது ஒரு நல்ல வேலை வாய்ப்பாக மாறாது போனால் அந்தக் கல்வியால் என்ன பயன் ?

மாற்று என்னவாக இருக்க முடியும்? நல்ல கல்வியை கட்டுப்படியாகும் செலவில் கற்க முடிவதும் எல்லா கல்விக்கும் பெருமளவு ஏற்ற தாழ்வில்லாத பொருளாதார வாய்ப்புகள் அமைவதும் ஒரு சில குறிப்பிட்ட துறைகளை மட்டும் துரத்தி செல்வதை தடுக்கும். கூடவே அதற்கான அழுத்தங்களையும் தான்.

ஆனாலும் ஒரு உறுத்தல் இருக்கத் தான் செய்கிறது. அதிக பொருளாதாரத்தை ஈட்டும் துறைக்கான பாடங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மாணவர்கள் அதிக அழுத்தத்துக்கு ஆளாகிறார்களா என்றால் இல்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். எத்தனை பாடங்கள் இருக்கோ அனைத்திலும் அத்தனை மதிப்பெண்களையும் அதாவது நூற்றுக்கு நூறு எடுத்துத் தான் தீர வேண்டும் என்ற ஒரு வித மாயக் கட்டுக்குள் பிள்ளைகளை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகமும் சேர்ந்து தள்ளுகிறது என்று சொன்னால் அது மிகை இல்லை. அது எதற்கு என்றால் அந்த மொத்த மதிப்பெண் தரும் பெருமை, அங்கீகாரம் இன்ன பிற. இது பெற்றோர்களுக்கிடையேயான போட்டி பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளால் உருவாவது.

இந்த மேற்குறிப்பிட்ட சம்பவத்திலும் மாணவன் இந்தியில் மிக மோசமாக படிக்கிறான் என்ற குறிப்பு தான் ஆசிரியரின் உயிரை வாங்கி இருப்பதாக அறிகிறோம். சென்ற வருடம் எங்கள் வீட்டு அருகில் ஒரு மாணவன் நன்றாகவே படிக்கக் கூடிய மாணவன், காலாண்டுத் தேர்வில் தமிழில் மதிப்பெண் குறைந்து விட்டதால் அப்பாவுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டான்.

மொழி அவசியம் தான். மொழிப்பாடங்களுக்கு மதிப்பெண் மட்டும் இல்லாது போனால் முக்கியப் பாடமாக பள்ளிகளே மதிக்காது. அப்படி இருக்கும் போது பிள்ளைகளுக்கு அதில் ஆர்வம் குறைவாக இருப்பது பெரிய குற்றமில்லை. மொழிப் பாடங்களைப் பார்த்தாலே நமக்கு தெரியும் ஏன் பிள்ளைகள் அதை தவிர்க்க முயல்கிறார்கள் என்று. மொழியில் கூட ஒரு சுதந்திரம், ஒரு க்ரியேடிவிடி க்கான வாய்ப்பு தரப்படுவதில்லை. யார் யாரோ எப்போதோ எழுதி வைத்ததை சுய சரிதைகளை, கடுமையான இலக்கணங்களை என்று மொழியைக் கூட மனனம் செய்துதான் படித்தாக வேண்டிய நிர்பந்தம். மொழிப் பாடங்களை எளிமைப்படுத்தினாலே பிள்ளைகளின் சுமை கால்வாசி குறைந்து விடும். ஆர்வமும் அதிகரிக்கும்.

அடுத்தது ஆசிரியைகளை பற்றி சொல்லியாக வேண்டும். தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் ஆசிரியைகள் தான். கீழ் வகுப்புகளில் பெரும்பாலும் கண்டித்தல் என்பது தண்டித்தல் தான் அதாவது கத்தல் அடித்தல் இவை தான் பிள்ளைகளை மிரட்டி வைக்க இவர்கள் பயன்படுத்தும் முக்கிய ஆயுதம். பதின்ம வயது பிள்ளைகளின் ஆசிரியர்கள் பாடு படு திண்டாட்டம் என்று தான் சொல்ல வேண்டும். இப்போதைய பதின்ம வயது பிள்ளைகளின் வளர்த்தியை பார்க்கும் போது ஆஜானுபாகுவாக தன்னை விட தோளுக்கு மேல் என்ன தலைக்கு மேல் வளர்ந்து நிற்பதோடு நவீன கருவிகள், கணினி முதற்கொண்டு பரிச்சியம் கொண்டு அதில் சமூக வலைத்தளங்களில் சர்வ சாதரணமாக பங்கெடுத்து வரும் இந்த மாணவ மாணவிகளுக்கு அதில் அதிகப் பரிச்சயம் இருக்க வாய்ப்பில்லாத ஆசிரியர்கள் எப்போதும் outdated தான்.

ஆசிரியைகள் கண்டித்தாலும் பிரச்சனை. தண்டித்தாலும் பிரச்சனை. அன்பாக நடத்துவதாக நினைத்துக் கொண்டு ஒரு நடுத்தர வயது அல்லது அதற்கும் குறைந்த வயதுள்ள ஒரு ஆசிரியை ஒரு பதின்ம வயது மாணவனை தோள் தட்டி பேசிவிட்டால் தீர்ந்தது. பிற மாணவர்களின் நமுட்டுச் சிரிப்பு அன்றைய மதிய நேரத்து தலைப்புச் செய்தி என்னவாக இருக்கும் என்பதை சொல்லி விடும். அதே நிலை தான் ஒரு ஆசிரியருக்கு ஒரு மாணவியை வழிநடத்தும் போது ஏற்படும். இது நமது சமூகச் சூழலில் ஒரு சிக்கல்.

பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில் பள்ளியில் பிள்ளைகளின் பைகளை செல்பேசி, அதிக பணம், புகையிலை மற்றும் இதர லாகிரி வஸ்துக்கள் இருக்கிறதா என்று செக் செய்யும் ஒரு நடைமுறையை அவ்வப்போது பள்ளி அரங்கேற்றும் என்றும் ஆனாலும் ஒவ்வொரு முறையும் மாணவர்களுக்கு சளைக்காமல் மாணவிகளும் செல்பேசிகளை கொண்டு வந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்றும் கூறினார். valentines டே அன்று சென்னையின் பிரபல பள்ளி ஒன்றில் செக்கிங்கில் நிறைய பணம், பரிசுப் பொருட்கள் மாணவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு இருக்கிறது.

இது மாதிரி கட்டுகோப்பு நடவடிக்கைகள் பெற்றோர்களை மகிழ்ச்சி அடையச் செய்யும் என்றாலும் மாணவர்களுக்கு பாடபுத்தகத்துக்கும் அவர்கள் தினம் பார்க்கும் சமூகத்துக்குமான இடைவெளிகள் ஏற்படுத்தும் குழப்பம் பற்றி எடுத்துக் கூறி தெளிவுபடுத்தவும் அதில் சிக்காமல் சிக்கினாலும் அதிகம் பாதிப்பில்லாமல் அவர்களை அரவணைத்து வெளிக் கொணர்ந்து முன்னேற்ற பாதையில் செலுத்தும் ஒரு வழிகாட்டி அவர்களுக்கு இன்றைய சூழலில் கிடைப்பதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

எப்போதுமே கீழ்படியாமை குற்றத்துக்கான தண்டைனைகள் ஒரு புறமுமும், எதிர்காலம் பற்றி திணிக்கப்படும் பயங்கள் ஒருபுறமும், சினிமாக்களும் விளம்பரங்களும் முன்னிறுத்தும் வாழ்கை ஒருபுறமும் அவர்களை அலைக்கழிக்க, புத்தகத்தின் பக்கங்களை மனனம் செய்து தேர்வுத் தாளில் சமர்ப்பிக்கும் போது மதிப்பெண் மற்றும் கல்லூரி அடுத்து வேலை வாய்ப்பு சம்பளம் என்ற எதிர்காலக் கனவு தாண்டி நிகழ்கால வாழ்கை என்பது அனுபவித்து உணரும் விஷயமாக அல்லாமல் ஒரு சில நுகர்பொருள் அனுபவங்கள் தாண்டிய வாழ்கையின் நேரடி அனுபவங்கள் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. அவர்களுக்கு பல கெடுபிடிகளுக்கு இடையிலும் உட்கார்ந்த இடத்தில பார்க்கக் கிடைக்கும் சினிமாவாலும் விளம்பரங்களாலும் அவர்கள் சுலபமாக ஈர்க்கப்படுகிறார்கள் என்பதோடு அதில் சிலவற்றின் நேரடி அனுபவங்களுக்கு தயாராகிவிடுகிறார்கள். உதாரணமாக, காப்பி அடித்தலை ஒருவித குற்ற உணர்வோடு செய்யவோ தவிர்க்கவோ செய்து கொண்டிருந்த மாணவ சமூகத்துக்கு அதை ஒரு ஹீரோயிசமாக முன்வைத்தது பாஸ் எனும் பாஸ்கரன். படிப்பு ஏறாமல் ஊர் சுற்றிக் கொண்டு இருக்கும் இளைஞன் உழைத்து களைத்து வரும் அப்பாவை அவமதித்துக் கொண்டு நடப்பதை நகைச்சுவையாக முன்வைக்கும் அதே சினிமா நகரின் மிகப் பெரிய பணக்காரரின் மிக அழகிய மகள் அப்பா பார்த்து வைத்திருக்கும் சமூக விரும்பும் ஒரு நல்ல படித்த தீயப் பழக்கங்கள் இல்லாத கை நிறைய சம்பாதிக்கும் ஆணை விடுத்து மேற்படி ஊர்சுற்றியின் காதலுக்கு ஏங்கி நடக்கச் செய்வதை நாயகனின் ஹீரோயிச அடையாளமாக முன்வைக்கிறது.

ஆசிரியரை மாணவன் கொலை செய்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று பார்க்கும் ஆவலில் என் பதின்ம வயது மகனிடம் முக நூலில் (facebook ) செய்தியை வெளியிட்டு அவன் நண்பர்கள் என்ன கருத்து கூறுகிறார்கள் என்று பார்த்து சொல்லச் சொன்னேன். யாரும் சீந்த மாட்டங்க. மொக்கைனு விட்டுடுவாங்க என்றான். அவனை வற்புறுத்தி வெளியிட சொன்னேன். அவன் சொன்னது உண்மை தான். முக நூலில் குறைந்தது முன்னூறு நண்பர்களாவது கொண்டுள்ள அவனுக்கு online ல் வரும் போது ஒரு இருபது பேராவது இருக்கும் நிலையில் ஒருவரும் இதை சீண்டவில்லை. சினிமா சம்பந்தப்பட்ட செய்திகளும், சக நண்பர்கள் ஒருவரை ஒருவர் கலாய்த்தலும்( இது என்ன தமிழோ??? ) என்று மணிக்கணக்காக கருத்து பரிமாறிக் கொள்ளும் அவர்கள் மறந்தும் இதை பேசி விடவில்லை என்பது படிப்பு அவர்களுக்கு எப்படிப்பட்ட அழுத்தத்தைக் கொடுக்கிறது என்பதற்கு சான்றா தெரியவில்லை. மென்மையான அந்த ஆசிரியையின் முகமும் கண்ணீரோடு பேசிய அவர் மகளின் முகமும் நினைவுக்கு வந்து என்னவோ செய்தது. ஆசிரிய சமூகம் மாணவர்களின் மதிப்பீட்டில் எங்கோ கீழில் இருக்கிறதோ ? ஆம் என்பது தான் உண்மையாக இருக்க வேண்டும். ஒரு சில ஆரியர்களைத் தவிர பிறரை பற்றி பேசும்போது மாணவர்களிடம் ஒரு கோபம் வெறுப்பு இருக்கிறது. காரணம் பலர் முன்னிலையில் அவமானப்படுத்தி விடுவது, காரணம் தெரிந்து கொள்ள முயலாமலேயே கடுமையாக தண்டித்து விடுவது. சிலர் கெட்ட வார்த்தைகளில் திட்டுவதாகவும் கேள்விப்படுகிறோம்.

பாடப் புத்தகங்கள் மதிப்பெண்கள் தாண்டிய விவாதத்துக்கான தளம் பள்ளிக் கூடத்துக்குள் என்றாவது நுழையக் கூடும் என்றால் அப்போது ஆசான் மாணவ உறவு ஒரு மரியாதைக்குரியதாக உருவாகக் கூடும். மாணவர்கள் ஆசிரிய சமூகத்தை மதிக்கும் நாள் அப்போது தான் வரும். கேட்டதையும் கேட்காததையும் வாங்கிக் கொடுத்துவிட்டு உனக்கு நாங்க என்ன எல்லாம் செய்யறோம் உனக்கு படிக்கக் கூட துப்பில்லையா என்று சதா திட்டும் பெற்றோர் நிதானிக்க வேண்டிய அவசியத்தைத் தான் இது போன்ற தற்கொலைகளும் கொலைகளும் நினைவுபடுத்துகிறது. பள்ளிகள் ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர்களுக்கிடையே இணக்கமான ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்க கவுன்செல்லிங் முறையை அமுல் படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இது நமக்குச் சொல்கிறது.

Series Navigationபட்டறிவு – 1இஸ்லாத்தின் உடனான மார்க்ஸிய உரையாடல்
author

விருட்சம்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *