உயிர்த்தலைப் பாடுவேன்!

This entry is part 45 of 45 in the series 26 பிப்ரவரி 2012

கிளைகளுக்கு நீரூற்றிக்கொண்டே

வேர்களை வெட்டியெறியும்

ஒரு தோட்டக்காரன்!

மனச் சருகு மிதிபடும் சத்தம்

இரும்புச் சப்பாத்துக்களின்

செவிகளை எட்டவேயில்லை!

கெல்லிக் கெல்லி – என்

கணுக்களைச் சிதைக்கிறாய் – மீள

உயிர்த்தலைத் தவிர்த்திடும்

நஞ்சினைப் புதைக்கிறாய்!

கொத்திக் குதறும் – உன்

மண்வெட்டிக் கைப்பிடிக்கு

எந்தன் முதுகெலும்பையே

இரவலாய்க் கேட்கிறாய்!

காதலின் கருணையின்

காணிக்கை என்று சொல்லி – என்

நாளையை, வாழ்தலை

கனவுகளைப் பறிக்கிறாய், நீ !

சுவர்களை, மதில்களை

உயரமாய் எழுப்பியோர்

இருள்வெளிக் குகையுளெந்தன்

இருப்பினை வரையறுத்தாய்!

ஆதிக்கம், அதிகாரம்

உன்வசமே கொண்டாய் – மனித

நீதிக்கும் விலங்கிட்டாய்

நாடியதை நீ செய்தாய்!

என் வலியில் என் தவிப்பில்

என் இழப்பில் எல்லாம்

வெற்றிவாகை சூடியதாய்

பெருமிதங்கள் கொண்டாய்!

அன்புக்கும் அருளுக்கும்

உன்பெயரே என்றாய் – எனை

அழிப்பதிலும் ஒழிப்பதிலும்

அயர்விலாது நின்றாய்.

அன்புக்கும் அகிம்சைக்கும்

உன்பெயரே என்றாய் – எனை

அழிப்பதிலும் ஒழிப்பதிலும்

அயர்விலாது நின்றாய்.

அடையாளம் எதுவுமற்ற

அகதியென்று சொன்னாய்

இனி சூரியனே ஒளிர்தலற்ற

வானமெனக் கென்றாய்!

மொழியற்ற உயிரி என – என்

மௌனத்தை மொழிபெயர்த்தாய்!

எனக்கென ஓர்

வரலாறே இல்லையென்று

வதந்திகளும் பரப்பினாய், நீ!

வார்த்தைகளால் வஞ்சனையால்

வீழ்த்துகின்ற போரில் – என்

வாழ்வுதனைக் காவுகொள்ளும்

வீண்கனவில் ஆழ்ந்தாய்!

(கெல்லிக் கெல்லி – என்

கணுக்களைச் சிதைக்கிறாய் – மீள

உயிர்த்தலைத் தவிர்த்திடும்

நஞ்சினைப் புதைக்கிறாய்!

கொத்திக் குதறும் – உன்

மண்வெட்டிக் கைப்பிடிக்கு

எந்தன் முதுகெலும்பையே

இரவலாய்க் கேட்கிறாய்!

காதலின் கருணையின்

காணிக்கை என்று சொல்லி – என்

நாளையை, வாழ்தலை

கனவுகளைப் பறிக்கிறாய், நீ !)

ஆனாலும்…

அறிக என் தோழனே!

வெட்டியும் கொத்தியும்

ஒட்டவே நறுக்கினாலும்

மிதித்தாலும் நசித்தாலும்

மரணத்தை விதித்தாலும்

புதையுண்டு போதலில்லை – ஆல்

விதையென்று ஊன்றி வீழ்வேன்!

சிதைவுறுதல் சிறிதுமின்றி

என் ஆன்மாவைக் காப்பேன், நான்!

நசுங்குண்ட சருகையெல்லாம்

உரமென்று ஏற்பேன் – நான்

நஞ்சுண்டும் மாளமாட்டேன்

நிமிர்ந்தெழுந்து உயிர்ப்பேன்!

கிளைபரப்பி இலையடர்த்து

சிலிர்த்து நான் நிமிர்வேன் – கீழே

வீழ்ந்தரற்றி நீ அழுதால் எழ

விழுதுனக்கும் தருவேன்!

அட! உள்ளார்ந்து கனன்று எழும் – என்

உயிர்த்தீயின் முன்னே – உன்

கயமைகள் நீர்த்தழியும் – நான்

காலத்தை வெல்வேன்!

கிளைபரப்பி இலையடர்த்து

சிலிர்த்து நான் நிமிர்வேன் – கீழே

வீழ்ந்தரற்றி நீ அழுதால் எழ

விழுதுனக்கும் தருவேன்!

-லறீனா அப்துல் ஹக்-
(18.02.2012 திருமதி பத்மா சோமகாந்தனால் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த “அமரர் நா. சோமகாந்தனின் அழியாச் சுவடுகளின் நினைவுப் பரவல்” நிகழ்வில், தமிழகக் கவிஞர் திலகபாமாவின் தலைமையில் இடம்பெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை )

Series Navigationமலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்: கருத்தரங்கம்.
author

லறீனா அப்துல் ஹக்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *