சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பிர்த்வ்ஸ் ராஜகுமாரன் – மீரான் மைதீன் பதிவுகள்

This entry is part 38 of 45 in the series 26 பிப்ரவரி 2012

சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல்
பிர்த்வ்ஸ் ராஜகுமாரன் – மீரான் மைதீன் பதிவுகள்
ஹெச்.ஜி.ரசூல்
சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் குறித்த இருநாள் கருத்தரங்கம்படைப்பாளிகளின் நாவல்கள்கவிதைகள் கதையுலகம் என ஒரு விரிவான பரப்பை தமிழ் வாசகப் பரப்புக்கு அறிமுகம் செய்தது. இது வெறும் ஆய்வுக்கட்டுரைகளின் அரங்கமாக மட்டும் இல்லாமல் ஒரு சுதந்திரமான உரையாடலுக்கான களமாகவும் அமைந்திருந்தது. இந்த பதிவுகளில் உள்ள கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதல்ல. இக்கருத்துக்களோடும் படைப்பாளிகளின் படைப்புலகம் குறித்த விமர்சனங்களோடும் கூட நாம் உரையாடலை நிகழ்த்தலாம்.இதற்காகவே இந்த பதிவுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன்.
நாவலாசிரியர் பிர்தவ்ஸ் ராஜகுமாரனின் பதிவு
திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில் பிப்ரவரி 10 & 11 ” சமகால வாழ்வில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் ” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தின் இரண்டாம் நாள் முதல் அமர்வில் “கருப்பாயி என்கிற நூர்ஜஹான் ” நாவலை முன் வைத்து அதனை எழுதிய புதிய படைப்பாளி அன்வர் பாலசிங்கம் மிகுந்த ஆவேசத்துடனேயே தனது உரையை நிகழ்த்தினார்.
முன்னதாகப் பேசிய இந்த அமர்வின் நெறியாளர் கவிஞர் எச்.ஜி.ரசூல் அவர்கள் தன் தலைமை உரையில் படைப்புகள் , படைப்பாளிகள் குறித்தும் சமகால சூழ்நிலையில் சந்திக்கும் அடையாள நெருக்கடி பண்பாட்டுச்சூழல் குறித்தும் நீண்ட உரை நிகழ்த்தினார். ஐரோப்பிய மரபு , இஸ்லாமிய படைப்புகளின் நிலை எல்லாவற்றையும் பகடை செய்யும் வைக்கம் முகம்மது பசீரின் ஒப்பற்ற எழுத்தின் வீச்சு படைப்பின் வலி குறித்தும் மிகுந்த வலியுடன் எழுதப்படும் படைப்புகளின் தாக்கம் குறித்தும் முக்கிய உரையாக இருந்தது.

நான் எந்த ஒரு படைப்பையும் படிக்கவேயில்லை ! சுஜாதாவைப் படிக்காமல் எழுத்தாளனாகவே முடியாது என்றெல்லாம் பயமுறுத்தினார்கள் ….எங்கள் வலியை சொல்வதற்கு நான் எதையும் படிக்க வேண்டியதில்லை ..என்று நேரிடையாகவே விஷயத்துக்கு வந்தார் அன்வர் பாலசிங்கம். தாங்கள் பட்ட அவமானத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டும், அடிமை தலையிலிருந்து விடுவித்துக்கொண்டும் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு விடிவுக்கான வழியைத் தேடி ஒரு கிராமமே மதம் மாறியது. நாவலின் மையம் இதுதான். ‘” நீ எதற்கு இதை எழுதினாய் …?” என்று ஆவேசப்படுகிறார்கள் …ஆத்திரப்படுகிறார்கள் …என்று மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்ட அன்வர் ” நீங்கள் எழுதியிருக்க வேண்டும் .நீங்கள் எழுதாததால் நான் எழுதினேன்…என்றார்.ஐம்பதுக்கும் மேற்பட்ட குமர்கள் முதிர்கன்னியாகவே வாடி நிற்கிறார்களே .. இரண்டாம் தாரமாக கட்டிக்கொள்ளத்தான் வருகிறார்கள் …இதற்கு ..என்ன தீர்வு ..? இப்படியாக நாவலில் முப்பது கேள்விகள் வைத்திருக்கிறேன். அதற்கு பதில் சொன்னால் போதும். மேலும் ,இதனை காலம் தான் வரவில்லை.நாவல் எழுதி ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. ஒருஆள் கூட வந்து எதுவும் விசாரிக்கவில்லை என்று மிக ஆதங்கப்பட்டார் அன்வர் . உறவுகளை எல்லாம் அறுத்து விட்டு உங்களை நம்பி வந்துள்ளோம்.இப்போது அங்கும் போக முடியாது. இங்கும் மதிப்பில்லை.திரிசங்கு நிலையில் தவிக்கிறோம்.
கறுப்பின அடிமை பிலால் அவர்களை முதல் முதலாக “பாங்கு” சொல்லவைத்து அழகு பார்த்த மார்க்கம் இஸ்லாம். ஆனால் எங்கள் வலியை உணர ஆள் இல்லை இப்போது ….மிகுந்த உணர்ச்சியாகவும் ,மனக் கொந்தளிப்புடனும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அன்வர் பாலசிங்கம்.
பின் பக்கமிருந்து மெல்ல சலசலப்பு எழுந்தது . சலசலப்பை செய்தவர்கள் தாஃவா அமைப்பை சார்ந்தவர்களாம். அழைப்பு பணி செய்யும் தாஃவா நண்பர்களுக்கு சகிப்பு தன்மை இல்லாதது ஆச்சிரியம் ! எதிர் கருத்து எழும் நிலை உருவாவதை நிகழ்ச்சி அமைப்பாளர்கள் விரும்பவில்லை. மற்ற இலக்கிய நிகழ்வுகளில் தமிழ் சூழலில் வழக்கமாக ஏற்படும் கருத்து மோதல்கள், கலாட்டாக்கள் இங்கும் ஏற்படும் நிலை உருவாவதை தடுக்கவே உரை தொடர்பான கேள்விகள் மற்றும் கருத்து சொல்வது தடுக்கப்பட்டது. எதிர் கருத்தை அறிய முடியாதது ஏமாற்றமாக இருந்தது.அவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்திருந்தால் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரிந்திருக்கும். ஆவேசங்கள் அலைந்து அடங்க சிறிது நேரம் பிடித்தது.
அன்வர் பாலசிங்கமும் கோபம் அடைந்தார் அல்லது வருத்ததிட்குள்ளானார். அன்வரும் எழுந்து எதோ பேச முற்பட ,அவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது . ” பிடிக்லைன்னு சொலுங்க ,நான் வெளியேறிவிடுகிறேன் ..” என்று சொல்லிவிட்டு , உடனே மேடையை விட்டு இறங்கி தன் பேக்கை தூக்கிக்கொண்டு கிளம்பிவிட முற்பட்டார் “ஒரு படைப்பாளன் இப்படி கோபப்படக்கூடாது. இருந்து கருத்தை எதிர் கொள்ளவேண்டும். நீங்கள் இப்போது இங்கிருந்து வெளியேறினால் , வேறு விதமாக பேசப்படும். எல்லோருக்குமே இது வருத்தத்தை தந்து விடும். அமைதியாக உட்காருங்கள் ….” என்று அன்வரை சமாதானப்படுத்தி என் பக்கத்தில் உட்கார வைத்தேன். .

” இந்த நாவல் வெறும் குப்பை….. ” ” 92 பக்க ஒப்பாரி ..” என்றும் பின்புறமிருந்து குரல் எழுப்பப்பட்டதே அன்வர் கோபப்பட்டதற்கு இன்னொரு காரணம். இது ஒரு படைப்பாளனை சீண்டிப்பார்க்கும் வேலை .

இங்கே சில விஷயங்களை குறிப்பிட விரும்புகின்றேன் .”கருப்பாயி என்கிற நூர்ஜகான்” நாவலில் அன்வர் பாலசிங்கம் இஸ்லாத்தை கேள்விக்குட்படுத்தவில்லை. இஸ்லாமியர்களைத்தான் கேள்விகளுக்குள்ளாக்குகிறார் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.மனிதனை மனிதனாக மதிக்கச்சொல்லும்- நடத்தச்சொல்லும் மார்க்கம் ,படைத்த இறைவனை மட்டுமே வணங்கச்சொல்லும் மார்க்கம் ,தன் தாயின் காலில் விழுவதைக்கூட தடுக்கும் மார்க்கம் தப்பான வழி காட்டுமா…? மகர் கொடுத்து பெண்ணை நிஹ்ஹா செய்யச்சொல்லி கட்டளை இடுகிறான் இறைவன்.ஆனால் இங்கே பிற மதங்களில் உள்ளதைப் போல வரதட்சணை பேராசை கொண்ட இளைஞர்களும் ,பெற்றோர்களும் பெண் வீட்டிலிருந்து பொன்னும் ,பொருளும் பெற்றுக் கொண்டு நிஹ்ஹா செய்கிறார்கள். இது யார் தவறு ? இது குறித்து ஏன் எந்த ஜமாஅத் நிர்வாகமும் , ஆலிம்களும் ,இமாம்களும் அக்கறை கொள்வதில்லை ? ஜும்மா மேடைகளில் பயானுடன் அவர்கள் கடமை முடிந்து விடுகிறதா ? நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதைதான் இவர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளர்களா..? எங்கே ….யாரிடம் தவறு …? வட்டி ஹராம் -தடுக்கப்பட்டது . ஆனால் இதை ஒரு பெரிய பொருட்டாகவே கருதுவதில்லை அனேக முஸ்லிம்கள். இது இஸ்லாத்தின் தவறா ..? அதே போல மதுவையும் கடுமையாகவே சாடுகிறது -தடுக்கிறது இஸ்லாம் . குடிப்பவர்கள் இல்லையா இங்கே ? ஜமாஅத் நிர்வாகங்கள் என்ன நடவடிக்கைகள் எடுக்கின்றன ..? ஆக, இஸ்லாம் தடை செய்துள்ள ஹராமானவைகளை ஏற்றுக்கொள்ளுவதும் ,ஏற்றுக்கொள்ளக்கூடிய ஹலாலானவைகளை தடையாக பாவிப்பதும் இடத்துக்கு இடம் முஸ்லிம்களால் நடைமுறைப்படுதினால் அது இஸ்லாத்தின் தவறா? இஸ்லாமியர்களின் தவறா ..? ஆக, தாங்கள் பட்ட அவமானங்களை ,வலிகளை நாவலில் பதிவு செய்துள்ளார் அன்வர். அதற்கான தீர்வு என்ன ….? என்ன செய்யலாம் ….? என்பதை விடுத்தது ,இதை எப்படி எழுதலாம் என்று கேள்வி கேட்பது மடைமைத்தனம். ”

அடித்தள முஸ்லிம்களின் வாழ்வை எழுதும் எழுத்து ” என்கிற இந்த அமர்வின் வெப்பத்தை தணிக்கும் விதமாக “இதயங்களை இணைப்பதுதான் இலக்கியத்தின் வேலை …” என்று தனது உரையை ஆரம்பித்தார் அடுத்து ஆய்வு கட்டுரை வாசித்த பேரா. முகமது ரபீக். ஜாகிர் ராஜாவின் மீன்காரதெரு , வடக்கே முறி அலீமா , ஆகிய நாவல்களை இவர் தன் பார்வையில் மறு வாசிப்புக்கு உட்படுத்தினார். ஜாகிர் ராஜாவின் நாவல்களை கேள்விகளுக்குட்படுத்தாமல் பாராட்டும் விதமாகவே இருந்தது ரபீக் அவர்களின் ஆய்வுரை ..!! இதே தவறைத்தான் முதல் நாள் சல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை ” நாவல் குறித்து ஆய்வுரை வாசித்த பேரா .பர்வீன் சுல்தானா அவர்களும் செய்தார் !!
இஸ்லாத்தில் இல்லாததை இருப்பதாக கட்டமைக்கும் எழுத்து ஜாஹீரின் எழுத்து . இவர் நல்ல கதை சொல்லியாக இருப்பதால் சரளமாக எதையும் எழுதிச் செல்கிறார். முதலில் “வடக்கே முறி அலீமா” நாவல் வடிவமே அல்ல. நவீனத்துவ எழுத்து என்பதற்காக ,எல்லாவற்றையும் கலைத்து போட்டு எழுதியிருக்கிறார். ஒரு மனம் பிறழ்ந்த பெண் மீது ஏற்படும் அநுதாபங்கள் ஏதும் இந்த அலீமா மீது ஏற்படவில்லை.பதிலாக அவள் மீது எரிச்சலும் ,கோபமும் தான் ஏற்படுகிறது. மனம் பிறழ்ந்தள்ள வேண்டும் என்றே அவள் எல்லாவற்றிலும் எல்லை மீறுகிறாள்.
அதே போலவே எல்லா சமூகத்திலும் நிலவும் ஏழை பணக்காரன் இவர்களுக்குள் இருக்கும் ஏற்ற தாழ்வுகளை இஸ்லாத்தில் நிலவும் ஜாதீயமாக கட்டமைத்துள்ளார்- ” மீன் காரத்தெரு ” நாவலில். அப்போதே இது குறித்து நான் அவரிடம் கேட்டபோது , “எங்கள் ஊரில் (கிரனூர்) இருக்கு ” என்றார். அவர் ஊரில் இருப்பதை இஸ்லாத்தில் இருப்பதாக கட்டமைப்பது ஏற்புடையதா…? லெப்பை ,ராவுத்தர் ,மலையாள முஸ்லிம் இப்படி யாராக இருந்தாலும் எந்த வேறு பாடும் இல்லாமல் பெண் எடுப்பதும் ,கொடுப்பதும் காலம் காலமாக நடந்து வருகிறது.பணக்காரன் ,ஏழை என்கிற ஏற்ற தாழ்வுகள் உண்டே ஒழிய ஜாதீயம் இஸ்லாத்தில் இல்லவே இல்லை.
அதே போலவே முஸ்லிம் பெண்களை கொச்சை படுத்திய நாவல் சல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை ” தி.ஜானகி ராமன்,தஞ்சை பிரகாஷ் ,கரிசான் குஞ்சு, ஜி.நாகராஜன் என்று நிறைய பேர் பாலியலை எழுதியிரிக்கிரார்கள்.தோப்பிலார் எழுதவில்லையா ..? ஆனால் அவர்கள் ஒட்டு மொத்த ஒரு சமுகத்தின் அவலமாக – நிகழ்வாக இதை காட்டவில்லை. இஸ்லாமிய பெண்களுக்கு வேறு எந்த பிரச்சனைகளும் இல்லை -பின்னடைவுகளும் இல்லை என்பது போலும் அவர்கள் அடக்கி வைக்கப்பட்ட பாலியல் வேட்கை மிகுந்தவர்களகவுமே இருக்கிறார்கள் என்பதகவேதான் நாவல் காட்டுகிறது. ஒரு பெண் கற்றட்ட பாலியல் வேட்கைக்காக எல்லாவற்றையும் துறந்து அல்லது எதிர்த்து துணிந்து ஓடி வந்து விட்டால் பெண்ணடிமைத் தனத்திலிருந்து விடுபட்டவளாகிவிடுவாளா…? இப்படியான படைப்புகள் இங்கு கொண்டாடப்படுகிறது.
நல்ல இஸ்லாமியபடைப்புகள் இங்கு கண்டு கொள்ளப்படுவதில்லை. தமிழ் இலக்கிய வரலாற்றில் எந்த இஸ்லாமியப் படைப்பாளியின் பெயரும் இல்லை. இப்போதும் யாரும் அது குறித்து எழுதுவதில்லை. தொடர்ந்து தமிழ் இலக்கிய வரலாற்றில் இந்த இருட்டடிப்பு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து முதல் நாள் தனது துவக்க உரையில் பேரா.அப்துல் சமது அவர்களும் விரிவாக புள்ளி விவரங்களுடன் பதிவு செய்துள்ளார்.

ஜாகிர் ராஜாவை பற்றி இங்கே ஒன்றை முக்கியமாக பதிவு செய்தாகவேண்டும் . இஸ்லாமிய இலக்கிய கூட்டங்களுக்கு இவர் வருவதே இல்லை.இவரிடம் கேட்டுத்தான் பெயரை போடுகிறார்கள். ஆனால் இவர் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. கருத்தை எதிர் கொள்ள பயப்படுகிறாரா ..ஜாகிர் ..? இதற்கு அவர்தான் பதில் சொல்லவேண்டும். .

நாவலாசிரியர் மீரான்மைதீன் பதிவு
திருவிதாங்கோடு முஸ்லிம் கலை கல்லூரியின் இஸ்லாமிய ஆய்வு மையம் .
சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் என்ற தலைப்பில் இருநாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது
பெப்ரவரி 10 ,11 இல் நடைபெற்ற இக்கருத்தரங்கின் துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் . எ . அப்துல் ரஹீம் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி தாளாளர் H .முகம்மது அலி துவக்கவுரையாற்றினார் வாழ்த்துரை வழங்கிய கொடிகால் ஷேய்க் அப்துல்…லாஹ் தனது உரையில் தமிழ் கலாச்சாரம் என்றோ இந்திய கலாச்சாரம் என்றோ ஓன்று இல்லை என்றும் ஜாதிய கலாச்சாரமே நிலைபெற்றுள்ளது என குறிப்பிட்டதை தொடர்ந்து அறிமுகவுரையாற்றிய எழுத்தாளர் மீரான் மைதீன் அதனை மறுக்கும் விதமாகவே தனது கருத்துகளை அரங்கில் பதிவு செய்தார். பின்னர், முதல் அமர்வின் நெறியாளரான பேராசிரியர் அப்துல் சமது தமிழ் கலாசாரம் உண்டு என்றே தனது உரையை துவங்கினார்

நெல்லை ம. தி. தா இந்து கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளர் செ.ஆமின பானு , சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை” நாவலை முன்வைத்து தனது ஆய்வு கட்டுரையை அமைத்திருந்தார் பிற்பகல் அமர்வில் சென்னை எஸ்.ஐ.ஈ .டி கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் . பர்வீன் சுல்தானா” முஸ்லிம் பெண்களின் வாழ்வியலை எழுதி செல்லும் வரிகள்” என்ற தலைப்பில் தனது உரையின் மையமாக சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை” ஜாகிர் ராஜாவின் மீன்கார தெரு, அன்வர் பால சிங்கின் கருப்பாயி (எ) நூர்ஜஹான் என்ற மூன்று நாவல்களையும் முன்வைத்து பேசினார். நீண்ட விவாதம் நடைபெற்றது கருத்துரையாளராக கவிஞர். ஹாமீம் முஸ்தபா எழுத்தாளர் மீரான் மைதீன் உத்தம பாளையம் பேராசிரியர் ரபீக், அப்துல் சமது ஆகியோர் பங்கேற்றனர்.
பிற்பகல் மூன்று மணி அமர்வில் சென்னை புது கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் மு. அப்துல் ரசாக் நாவல் சிறுகதை குறித்து பேசினார் ஆடு ஜீவிதம் நாவல் மீரான் மைதீனின் மஜ்நூன் குறுநாவல் ஆகியவைகளை முன்வைத்து உரையாற்றினார்.

மாலை படைப்பாளிகளுடன் உரையாடல் நிகழ்வில் எழுத்தாளர் களந்தை பீர்முகம்மது தலைமையில் நாவலாசிரியர் பொன்னீலன் பத்திரிகையாளர் கண்ணன் (காலச்சுவடு) பண்பாட்டு ஆய்வாளர் V . சிவராமன் ஆகியோர் கருத்துரை வழங்க படைபாளிங்கள் பிர்தௌஸ் ராஜகுமாரன் , ரஹ்மத் ராஜகுமாரன், ஹசன் மைதீன் , மீரான் மைதீன் , முஜீபுரஹ்மான் , அன்வர் பாலசிங்கம் , மணவை அமீன் , மொழிபெயர்ப்பாளர் குளச்சல் யூசுப் .உரையாடலில் J .R .V . எட்வர்ட் , குமாரசெல்வா , S . J . சிவசங்கர் ஆகியோர் பங்கேற்றனர் , கவிஞர் H . G . ரசூல் நிறைவுரையாக முஸ்லிம்களின் தமிழில் உருவாகியுள்ள புனைவு இலக்கியம் மற்றும் புனைவுசாரா ஆய்வுகள் சார்ந்து தனது பதிவை முன்வைத்தார்.

இரண்டாம் நா அமர்வு பெப்ரவரி 11 காலை 10 மணிக்கு கவிஞர் H . G . ரசூல் தலைமையில் அடித்தள முஸ்லிம்களின் வாழ்வை எழுதும் எழுத்து என்ற தலைப்பில் எழுத்தாளர் அன்வர் பாலசிங்கம் தனது படைப்பை முன் வைத்து உரை நிகழ்த்தினார். பேராசிரியர் முகம்மது ரபீக் தொடர்ந்து தனது ஆய்வு கட்டுரையை சமர்பித்தார் பின்னர் எழுத்தாளர் முஜீபுரஹ்மான் நெறியாளுகையில் கவிஞர் நடசிவகுமார் பண்பாட்டில் வேர்பிடிக்கும் சிறுபான்மை கவிதை குரல்கள் என்ற தலைப்பில் ஹெச்.ஜிரசூலின் உம்மா கருவண்டாய் பரந்து போகிறாள் கவிதை நூலை முன்வைத்தும் கவிஞர் R . பிரேம் குமார் தர்வேஸ் துடங்கி இன்குலாப் வரை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் பேராசிரியர் ப . ம . மயிலா மற்றும் முனைவர் J . ப்ரீடா மேபல் ராணி ஆகியோர் ஆய்வு கட்டுரை சமர்பித்தார்கள்

மாலை மூன்று மணிக்கு நடைபெற்ற நிறைவு விழாவில் தாளாளர் H .முகம்மது அலி இரண்டு நாள் மொத்த அமர்வுகளின் மீதான தனது கருத்தியலை முன்வைத்து பேசினார் சமகால இலக்கியமும் முஸ்லீம்களின் வாசிப்பும் என எழுத்தாளர் h. பீர்முகம்மது பேசினார். நிகழ அரசியலில் எழும் எழுத்து என்ற தலைப்பில் முனைவர் J . ஹாஜா கனி நிறைவுரையாக பேசினார். சிறப்பாக நடைபெற்று முடிந்த இருநாள் கருத்தரங்கை முஸ்லிம் கலை கல்லூரி தாளாளர் H .முகம்மது அலி. மற்றும் கருத்தரங்க ஒருகினைபாளர் M .மீரான் மைதீன் இஸ்லாமிய ஆய்வு மைய ஒருகினைபாளர் h . ஹாமீம் முஸ்தபா ஆகியோர் ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்

Series Navigationஅதையும் தாண்டிப் புனிதமானது…இஸ்லாமிய அரசியலில் மாற்றுவாசிப்பு
author

ஹெச்.ஜி.ரசூல்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *