ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ‘ வார் ஹார்ஸ் ‘

This entry is part 23 of 45 in the series 26 பிப்ரவரி 2012

பத்து நாள் பட்டினி கிடந்தவனுக்கு, பதினாறு வகை உணவு கிடைத்த மாதிரி இருந்தது எனக்கு. எல்லாவற்றிற்கும் காரணம் ஒரு மின்னஞ்சல். தமிழ் ஸ்டூடியோ டாட் காம் எனக்கு அனுப்பியது. ‘ ரவி சுப்ரமணியம் மற்றும் நான்கு பேர்.. ஆஸ்கார் திரைப்பட விழா. மாலை ஆறுமணி, முனுசாமி சாலை, கே கே நகர். ‘
ரவி சுப்ரமணியத்தை நான் இலக்கியக் கூட்டங்கள் வாயிலாக அறிவேன். ஆஸ்கார் திரைப்படங்களைப் பற்றிய, ஒரு ஆய்வுக் கூட்டமாக இருக்கும் என்று நினைத்து, கதவிலக்கம் இல்லாததால், முனுசாமி சாலையில் மெதுவாக, ஒவ்வொரு பெயர் பலகையாக பார்த்துக் கொண்டு நடந்தேன். டிவி கடையின் இரண்டாவது மாடியில் இருந்தது இடம். போனபோது இருட்டில் எல்லோரும் எங்கோ கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அட முடிந்து விட்டதோ என்று எண்ணினேன். மின் தடை என்று பிறகுதான் தெரிந்தது. கீழே இறங்கும்போதே, மின்சாரம் வந்துவிட்டது. புத்தகக் கடைக்குப் போய், கணையாழி வாங்கிவிட்டு, மேலே வந்தால் படம் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆஸ்கர் லிஸ்டில் உள்ள ‘ வார் ஹார்ஸ் !
ஆல்பர்ட் என்கிற சிறுவனுக்கும், ஜோயி என்கிற பிரவுன் குதிரைக்குமான நட்புதான் கதை. தரிசு நிலத்தை உழ வசதியில்லாமல் இருக்கும்போது, ஆல்பர்ட் ஜோயியைப் பழக்கி, நிலத்தை உழுகிறான். ஆனாலும் ஜோயிக்கு உயரம் தாண்டுவதில் பயம். விளைச்சலை அறுவடை செய்யும் நேரத்தில் கனமழை வந்து பயிர் பாழ். பட்டினியைத் தவிர்க்க ஜோயி விற்கப்படுகிறது, 30 கினியாக்களுக்கு. குதிரையைப் பிரிய முடியாத ஆல்பர்ட் ராணுவத்தில் சேர யத்தனிக்கிறான். ஆனால், அவனுக்கு வயது கம்மி என்று நிராகரிக்கப்படுகிறான். தந்தையின் ராணுவ ஸ்கார்ப்பை ஜோயிக்குக் கட்டி, பிரிய மனமில்லாமல் பிரிகிறான் ஆல்பர்ட்.
வருடம் 1914. இங்கிலாந்தின் மேல் படையெடுக்கிறது ஜெர்மனி. குதிரை வீரர்களுக்கு பயன்பட கொண்டுபோகப்படும் ஜோயி, ஒரு கறுப்பு குதிரையின் பால் நேசம் கொள்கிறது. ஜோயி இருக்கும் பெட்டாலியன் ஜெர்மானியர்களிடம் பிடிபடுகிறது. ஜோயியையும் அதன் நண்பனான கறுப்புக் குதிரையையும், ஜெர்மானியச் சிறுவர்கள் குந்தரும் மைக்கேலும் கடத்திக் கொண்டு போய், ஒரு பெரிய காற்றாலைக் கட்டிடத்தின் அடியில் மறைத்து வைக்கிறார்கள். அவர்களைத் தேடி பிடித்து விடுகிறது ஜெர்மானிய ராணுவம். ஆனால் அருகில் வசிக்கும் எமிலி, அவைகளுக்குப் புகலிடம் தருகிறாள். ஆனாலும் மீண்டும் வந்த ராணுவம், குதிரைகளைப் பிடித்துக் கொண்டு போய் விடுகிறது. பெரிய பீரங்கி வண்டிகளை இழுக்க குதிரைகள் பயன்படுகின்றன. இழுக்க முடியாமல் விழுந்து விடும் குதிரைகள் சுட்டுத் தள்ளப்படுகின்றன. இடையில் நான்கு வருடங்கள் ஓடி விடுகின்றன. ஒரு நாள் ஜோயியின் நண்பனான கறுப்புக் குதிரைக்கும் மரண தண்டனை. ஜோயி தப்பித்து ஓடுகிறது. அதைத் துரத்திக் கொண்டு பீரங்கி வண்டி. வழியில் முள் கம்பி வேலிகள். அதனால் தாண்ட முடியாது. திக்கற்று தவிக்கும் ஜோயி, ஒரே ஓட்டத்தில் பீரங்கி வண்டி மேல் ஏறி, தப்பித்து விடுகிறது. ஆனாலும் அடைமழையில், உயிர் பயத்தில் ஓடும் ஜோயி,முள் கம்பி வேலியைத் தாண்ட முடியாமல் குறுக்கே பாய்கிறது. உடலெங்கும் முள் வேலி சுற்றிக் கொள்கிறது.
இங்கிலாந்து மீண்டும் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கிறது. இப்போது ஜோயி ராணுவத்தில். ஆனால் ஒரு தாக்குதலின் போது, விஷ வாயுத் தாக்குதலில் அவன் கண்கள் சேதமாகின்றன. அவன் இப்போது ரெட் கிராஸ் ராணுவ கொட்டிலில். முள்கம்பிகளிலிருந்து மீள முடியாத ஜோயியை ஒரு இங்கிலாந்து ராணுவ வீரன் பார்க்கிறான். அதைக் காப்பாற்ற முயல்கிறான். எதிர் முனையில் இருந்து ஜெர்மானிய வீரர்கள் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். குதிரையை நெருங்கும்போது, ஜெர்மானிய வீரன் ஒருவன் முள் கம்பியை வெட்டும் கருவியுடன் வருகிறான். இருவரும் சேர்ந்து ஜோயியை விடுவிக்கிறார்கள். யாருக்கு குதிரை சொந்தம் என்று இருவருக்குமிடையே வாக்குவாதம். நான் தான் முதலில் வந்தேன் என்கிறான் இங்கிலாந்துக்காரன். நான் தான் முள்கம்பி வெட்ட கருவி கொடுத்தேன் என்கிறான் ஜெர்மானியன். இறுதியில் டாஸ் போட்டு, இங்கிலாந்துக்காரன் குதிரையுடன் போகிறான்.
ரெட் கிராஸ் கொட்டடியில், குதிரைக்கு வைத்தியம் செய்ய இயலாது, அதைவிட மனிதஉயிர்கள் முக்கியம் என்கிறார் டாக்டர். படுக்கையில் கண்களைக் கட்டிக் கொண்டு படுத்திருக்கும் ஆல்பர்ட், குதிரை பற்றிய விவரம் அறிகிறான். ஆனாலும் அது தன் ஜோயியா என்று பார்க்க் அவனால் முடியாது. குதிரையைச் சுட்டுவிட ஏற்பாடு செய்கிறார்கள். ஆல்பர்ட் கூட்டத்தை விலக்கி மெல்ல அங்கே வருகிறான். ஜோயி அவனை நோக்கி ஓடுகிறது.
‘ இது ஏதோ குதிரை இல்லை. என் குதிரை. நான் பழக்கிய குதிரை. கால்களில் வெள்ளை சாக்ஸ் அணிந்தது போல் இருக்கும். நெற்றியில் ஈட்டி போல் வெள்ளையாக இருக்கும். இது சாதாரணக் குதிரை இல்லை. வார் ஹார்ஸ் ‘ என்கிறான் ஆல்பர்ட். டாக்டர் ஈரத் துணி கொண்டு துடைக்கிறார். கால்களில் வெள்ளை சாக்ஸ். நெற்றியில் வெள்ளை ஈட்டி. குதிரை காப்பாற்றப்படுகிறது. ராணுவக் குதிரையாக ஏற்றுக் கொள்ளப் படுகிறது.
1918. போர் முடிவுக்கு வந்துவிட்டது. இங்கிலாந்து வென்றுவிட்டது. ஊர் திரும்பும் போது, ராணுவக் குதிரைகளை அங்கேயே ஏலம் போட வேண்டும். ஆல்பர்ட்டுக்காக நாற்பது கினியாக்கள் கலெக்ஷன் ஆகிறது அனைவரிடமிருந்தும். ஆனால் நூறு கினியாக்கள் கொடுத்து ஏலம் எடுக்கிறார் எமிலியின் தாத்தா. ஓட்டிக் கொண்டு போகும் அவரிடமிருந்து திமிறி, ஆல்பர்ட்டிடமே வந்து விடுகிறது ஜோயி. ‘ உன்னை வாங்கியவர் அவர். நீ அவருடன் தான் போக வேண்டும் ‘ என்று திரும்ப அழைத்து வருகிறான் ஆல்பர்ட்.
எமிலியின் தாத்தா குதிரை லகானை ஒரு கையில் பிடித்துக் கொண்டே, பையிலிருந்து ஏதோ எடுக்கிறார்.
‘ இது என்ன தெரியுமா? ‘
‘ இது என் அப்பாவின் ராணுவ ஸ்கார்ப். ‘
‘ அப்போ இது உனக்குதான் ‘ ஸ்கார்பைத் தருகிறார். வாங்கிக் கொள்கிறான் ஆல்பர்ட். ‘ கூடவே இதுவும் ‘ என்று குதிரை லகானைத் தருகிறார்.
ஜோயி மேல் அமர்ந்து ஆல்பர்ட் வீடு வருவதும், தந்தையும் மகனும் கட்டிக் கொள்வதுமான காட்சியுடன் நிறைவு.
அழகான பிக்சர் போஸ்ட்கார்டுகளைப் பார்ப்பது போல, பல காட்சிகள். குதிரைகள் வரும் காட்சிகளில் வரும் துல்லியம். முள் கம்பியால் சுற்றப்பட்டு நகர வழியில்லாமல் குதிரை கிடக்கும் பரிதாப நிலை, பார்ப்பவரைத் துணுக்குறச் செய்யும். கிராபிக்ஸ் மேஜிக் இருக்கிறதா என்று கேட்கும் அளவிற்கு அநியாயத்திற்கு இயல்பான காட்சிகள். ஷிண்ட்லர்ஸ் லிஸ்டை அடுத்து பேசப்படப்போகும் ஸ்பீல்பெர்க்கின் இன்னொரு படம். மிஸ் பண்ணாதீங்க.

கொசுறு

தமிழ் ஸ்டூடியோ நடத்தும் அருண் ஐ டி துறையில் இருக்கிறார். வடபழனியில், பௌர்ணமி இரவு, பதினொரு மணிக்கு ஆரம்பித்து, விடிய விடிய உலக சினிமா திரையிடல், குறும்பட திரையிடல் என்று போன வருடம் வரை நடத்திக் கொண்டிருந்தார். இப்போது கே கே நகருக்கு பெயர்ந்திருக்கிறார். லாடாப்பில் இருந்து, டிஜிடல் ப்ரொஜெக்டர் மூலமாக, பெரிய திரையில் காட்டுகிறார்கள். வருபவர்கள் எல்லாம் உலக சினிமா ரசிகர்கள். கட்டணம் ஏதுமில்லை. நாற்காலியிலோ தரையிலோ, உட்கார்ந்து கொண்டோ படுத்துக் கொண்டோ பல கோணங்களில் படம் பார்க்கிறார்கள். செல்போன் சுவிட்ச் ஆப் மற்றும் நிசப்தம் தவிர எந்தவித கட்டுப்பாடும் இல்லை. பல துறைகளில் வேலை செய்பவர்களை உலக சினிமா ஒன்று சேர்க்கிறது. என்னிடம் பேசிய சுந்தர், தானும் ஐ டி என்றார். ஆனால் இது வேறு. இன்கம் டாக்ஸ்.
#
தொடர்புக்கு: அருண், தமிழ் ஸ்டூடியோ, செல்: 98406 98236.
#

Series Navigationவுட்டி ஆலனின் ‘ மிட் நைட் இன் பாரீஸ்ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *