உழுதவன் கணக்கு

This entry is part 29 of 45 in the series 4 மார்ச் 2012

புத்தாண்டு பிறந்த அன்று அதனை வாழ்த்தி வரவேற்பதற்காக அய்ந்துகிலோ பச்சரிசி வாங்கி வண்ணங்கள் பல சேர்த்து அலுவலக வாயிலிலே கோலம் போட்டிருந்தார்கள். கோலம் போட்ட அய்ந்து கிலோ அரிசியும் அய்ந்து ரூபாயுக்கு பெருநகர ரேஷன் கடை வாயிலில் வாங்கியதாம். மத்திய அரசின் ஒரு அலுவலக வாயிலில்தான் அந்த அழகுக்கோலம். அந்தக்கோலம் போட்டவர்கள் ஐவரும் அந்த அலுவலகத்துப் பெண் ஊழியர்கள். அவ்வலுவலக அதிகாரிகள் சிலரும் கூடவே இப்படியும் அப்படியும் அக்கோல கோஷ்டியோடு தொங்கிகொண்டிருந்தார்கள்.

கம் கணபதியே நம என்று தினம் நூறு எழுதிவிட்டு வேலை ஏதும் இருந்தால் அப்புறம் ஆரம்பிப்பிப்போருக்குத்தான் ஆகச்சிறந்த பணியாளர் என்பதுவாய் இங்கு விருது விசேடங்கள் ஆக அலுவலகத்து வருகைப்பதிவேட்டில் பெயருள்ள எல்லோருக்கும் தினம் ஒன்றுக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாயிலிருந்து இரண்டாயிரத்து ஐநூறு வரை சம்பளத்தோடு நோகாமல் படிகள் பலப்பல. மொத்தமாய் குளிரூட்டப்பட்ட காட்சிப்பெட்டி போன்ற அலுவலகத்து உள்ளேதான் சுழலும் ஆசனம் அமர்ந்து வேலை.. நிகழ்ச்சிகள் சிலவுடன் கூடவே ஷாப்பிங் இத்யாதிகள் இடுக்கிலே போய் வர அரசின் செலவிலே வாகன வசதியும் உண்டு.

மத்திய அரசின் அலுவல வாயிலிலே அந்த வண்ணக்கோலம் போட அவர்கள் அரை நாள் அவகாசம் எடுத்துக்கொண்டார்கள். எக்கோலம் போடுவது எத்தனைப்புள்ளிகள் வண்ணம் எப்படி என்பது குறித்து விஸ்தாரமாய் ஒருவாரம் அதே அலுவலகத்தில் முட்டு முட்டாய் அமர்ந்து பேசிப்பேசி அமர்க்களப்பட்டதுண்மை.

நூறு ஏக்கரா நெல் விளையும் பூமிக்குச்சொந்தக்காரர்கள் தரை விழுந்த நெல் மணி ஒன்றை பொறுக்கித் தான்ய லட்சுமி எனச்சொல்லி அது சேமித்த சமாச்சாரம் சொன்னால் இப்போது யாருக்கு விளங்கும். நாட்டில் அரிசித் தட்டுப்ப்பாடு ஆக எலிக்கரி சாப்பிட பழகிக்கொள்வோம் சொன்ன பிரதமர் இந்த நாட்டில் இருந்ததும் உண்மை. இன்றோ சேமித்த அரிசி அரசு தானியக்களஞ்சியங்களில் புழுத்து மக்கிப்போய்விட உச்ச நீதிமன்றம் அதனுள் நுழைந்து பஞ்சாயத்து வைக்கவேண்டி இருக்கிறது. பிடி அரிசிக் கலயம் வைத்து தினம் தினம் ஒரு கைப்பிடி அரிசி எனச் சேமித்து அதனை அன்னதானம் செய்ய ஆணை தந்த காஞ்சிப் பெரியவரை மறந்துதான் போனோம். மதிய உணவு இலவசமாய்த் தந்தால் பள்ளிக்கு நிற்காமல் மாணவர்கள் வருவார்கள் என்று பெருந்தலைவர் யோசித்த கதை மாறி டுபாக்கூர் ஆங்கிலப்பள்ளிக்கூடம் தேடும் அப்பாவிகளாய்க் கிராமத்து மக்கள். அவர்களைச்சுற்றி வா வா என கூவி அழைத்துக்கொண்டு விண்ணில் எழும்பி நிற்கும் ராட்சசப் பொறியியல் கல்லூரிகள்.

நீத்தார் கடன் நடத்த வரும் புரோகிதப்பார்ப்பனர்கள் இன்று கர்த்தாவின் வீட்டிலிருந்து தானமாகப்பெற்ற அந்த ரேஷன் கடை அரிசியைத் தன் வீடு எடுத்துச்சென்று ஆக்கிச்சாப்பிடுவதில்லை. எதாவது பசுமாடு ஒன்றிற்கு வைத்து விடும்படி நமக்கு இலவச யோசனை சொல்கிறார்கள். பசுமாடுகள் இந்த அரிசி சாப்பிட்டால் அவை வயிறு மக்கிச் செத்துப்போய்விடும் என ப்பால்காரர்கள் நமக்கு எச்சரிக்கை தருகிறார்கள். ஒரு குளம் குட்டைபார்த்து அதனைக் கொட்டி விடுங்கள் அது மீன்கள் சாப்பிடட்டும் நமக்கு நல் யோசனை வழங்குகிறார்கள்.

பால்பாக்கெட்டும் தயிர் கப்பும் உலா வந்துவிட்டபிறகு கறக்கத்தான் இங்கு பால் மாடேது. உழுவதற்கும் முற்றிய நெல் அறுப்பதற்கும் என இயந்திரங்கள் அணி வகுத்து வந்தவிட்ட போது உழவனைப்போய் ஏங்கே தேடுவது. ஏர் உழும் காளைகள் கூட எங்கோ களவு போயின அல்லது கா¡ணாமலேபோயின. .

கிராமத்துக்குக் கிராமம் நெல் அரைக்கும் மிஷின்கள் இடைவிடாது இயங்கிய காலம் மலையேறி விட்டது. எல்லா நெல் அரைக்கும் ஆலைகளும் கல்யாண மண்டபங்களாக உருமாற்றம் பெறுகின்றன. ரேஷன் அரிசி சீ படும் பாட்டில் நெல் அரைத்து என்ன ஆகப்போகிறது புது நெல் அறுத்து வீடு வரும் சமயம் திருவிளக்கு ஏற்றி மாடத்தில் வைத்த அம்மாக்கள் மண்ணாகிப்போயினர். செல்போனோடு அலையும் பிச்சைக்காரர்கள் அரிசியோ சோறோ பிச்சையாய்ப் பெறுவதில்லை என முடிவுசெய்து எத்தனைக் காலம் ஆயிற்று. தினம் ஐநூறு ரூபாய் சாதாரணமாகக் கல்லா கட்டும் ஒரு நகரத்துப் பிச்சைக்காரன் முன்னே உழுதவம் செய்து நெல் விளைவிக்கும் அந்த விவசாயிக்கு என்னதான் மரியாதை கிட்டும். .

அண்மையில் திருநெல்வேலி அருகே தாமிரப்பரணி ப்பாசனத்தில் வயல் பல சொந்தமாய் உடைய ஒரு ஔய்வுபெற்ற அரசு அதிகாரி சொல்லிக்கொண்டார். பத்துக் காணி நஞ்சையில் மகசூல் விளைந்தாலும் ஒரு நாலாந்தர அரசு ஊழியனின் ஆண்டு வுருமானத்துக்கு ஔரம் நிற்க முடியாதென்று. அது பொய்யேயில்லை..

பிள்ளையார் கோவிலொன்று கட்டிக் காவேரிப்பாசனத்தில் முப்போகம் விளையும் ஒரு காணி நிலம் போதுமென தானம் எழுதிவைத்துவிட்டுப்போன பெரியவர்கள் பாவம். இன்று அந்தநிலம் பயிரிட்டுக் கிடைக்கும் வருவாயில் கோவில் படைக்கவரும் ஒரு குருக்களுக்குச்சம்பளம் தருவது எப்படி கோவில் சந்நதியில் விளக்குப்போடுவதுதான் எப்படி. இந்தப்படிக்குத் தீவிர யோசனைசெய்துகொண்டே காவேரிக்கரைகளில் சோர்ந்துபோய் அமர்ந்திருக்கும் எத்தனையோ விநாயகக்கடவுள்கள்.. பராசக்தியிடம் காணி நிலம் மட்டும் கேட்ட கவிஞன் நமக்கு முன்னே இல்லை என்பது நிறைவுதான்

மைய அரசு நூறு நாள் கட்டாய வேலைத்திட்டத்தை கிராமம்தோறும் அமல்செய்து அத்திட்டம் பட்டபாடு அத்தனைக்கேவலம். வேலை ஏதும் செய்யாமல் இப்படி அப்படி நின்றாலே கூலி கிடைத்துவிடும் என்பதை முதல் முதலாக கிராமத்துவிவசாயி தெரிந்துகொண்டது அன்றுதான். ஏரி மேட்டில் .தலையைக்காட்டிவிட்டால் சம்பளம் உறுதி. கங்காணியிடம் தன் பெயர் கொடுத்துவிட்டால் போதும் என்று எத்தனை எத்துமொழிகள் விவசாயிகள் இடையே இன்று புழக்கத்திற்கு வந்துவிட்டன. காண்ட்ராக்ட்டை எடுத்தவர் மற்றும் கண்முன்னே காட்சிக்குக்கிட்டா இடைத்தரகர்கள் என கிடைத்த ரொக்கம் எத்தனை அழகாகப்பங்கு போடப்பட்டது

.பொதுவுடமைக்காரர்கள் நூறுநாள் கட்டாய வேலைத்திட்டம் நடைமுறைக்கு வந்த போது வானத்துக்கும் பூமிக்கும் குதித்து மகிழ்ந்தார்கள். பணியில் கலாசாரம் என்பதெல்லாம்பேசவும் எழுதவும் நன்றாக இருந்தது உண்மை. நடைமுறை என்பது வோட்டுக்கள் சேகரிக்கும் பெரு விஷயம் மட்டுமே என்பதுவாக அனுபவமாகும்போது யாருக்கும் கற்றவையும் பெற்றவையும் காற்றில் கரைந்துகாணாமல்தானே போய்விடுகின்றன அவர்கள் மீதும் தவறில்லை. கெட்டுப்போனால்தானே ஞானம் வாய்க்கிறது…

சென்னைக்கு அருகே ஒரகடத்தில் ஆண்டுக்கு ஐந்தாயிரம் வருமானத்துக்கு மாடாய் உழைத்துவிட்டு ஏங்கிய விவசாயி இன்று தன் ஒரு ஏக்கர் நிலத்தை பகாசுரக்கம்பனி ஒன்றுக்கு த்தாரைவார்த்துக்கொடுத்துவிட்டு த்தான் பெற்றுக்கொண்ட அந்த ஒரு கோடி ரூபாயில் மைய நகரத்தில் வழவழச் சலவைக்கல் மாடி வீடொன்றில் குடியேறிப் பச்சைகாரில் அமர்ந்து பவனி வரமுடிகிறது. ஜில்லென்ற அரையொன்றில் படுத்துறங்கிச் சுற்றும் முற்றும் அவரே திகைத்து திகைத்துத் தன்னைப் பலமுறை பார்த்துக்கொள்கிறார்.. இங்கே எது பலியாக்கப்படுகிறது எது கொள்ளை போகிறது என்பது அந்த விவசாயிக்குப்புரிய வாய்ப்பில்லை. பொன்னும் மெய்ப்பொருளும் தரும் கடவுள் இப்போது தன்னை ஔரக் கண்ணால் பார்க்கத்தொடங்கிவிட்டிருப்பதாகத்தான் அவருக்கு அனுபவமாகிறது..

என்ன செய்ய வேண்டும் என்பதனை உட்கார்ந்து ஆய அடிவயிற்றில் சமூக விசுவாசமுள்ள ஆட்களுக்கு எங்கே போவது. வானத்தை விட்டிறங்கி ஒரு தேவதை வழிகாட்டுமா என்ன. வோட்டுப்பெட்டியின் முன்னே மனிதனை அம்மணமாக்கிப்பார்க்கும் ஜனநாயகத்தில் இது பற்றி யோசிக்க நேரம் எப்போது வரும்.. சமுதாயத்தில் எவ்வளவுக்கு நேர்மை சீரழிகிறதோ அவ்வளவுக்கும் ஒரு விலை உண்டுதானே. வாழும் நாடு விடுதலை பெறவும் பேசு மொழிகாக்கவும் மாணவர்கள் போராடிய காலம் ஒன்று இருந்தது.

ஒரு அரசியல்வாதிக்கு முனைவர் பட்டம் தருவதாய் முடிவாகி பட்டமளிப்பு விழா நிகழ்போது பல்கலை மாணவர்கள் கொதித்துப்போராடிய ஆரோக்கியமான காலம் ஒன்று இருந்தது. அதனில் பலியானோர் பாதிக்கப்பட்டோர் உண்டு.

இன்று அந்த அரசியல்வாதியே சுண்டு விரல் அசைத்தால் போதும் வானம் வசப்படும். அழகு பல்கலைக்கழகங்கள் காளான்கள் என முளைத்து மண்டிவிட்டபடியால் கூடையில் வைத்து டாக்டர் பட்டங்கள் போணி ஆகின்றன. காலம்தான் எத்தனை விந்தையானது..

மண்ணுக்குச்சண்டை நிரந்தரமானது. வாழும் மக்களை க்காப்பது பற்றிய சண்டை எப்போது வரும்.

ஆற்றுத்தண்ணீருக்குச் சண்டை நிரந்தரமானது. ஆறு மாசுபடுவது பற்றி ச்சண்டை எப்போது வரும்.

ஆட்சிக்கட்டிலுக்குச் சண்டை நிரந்தரமானது. ஆள வருவோர் தரம் பற்றிய சண்டை எப்போது வரும்.

நாம் பசிக்குத்தான் சோறு சாப்பிடுகிறோம். சோறுதான் கடவுளின் மறு உரு. மந்திரமாவது சோறு தான்.

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த அத்தொழிலாளியை இன்று யார் எப்படித் தேற்றுவது.

கதிர்அரிவாள் ஏர்க்கலப்பை காளைமாடு உழவன் இவை கண் முன்னே தேர்தல் சின்னங்களாகி மட்டுமே ஔய்ந்து போயின.

விவசாயி மனிதனாக மனிதனாக மதிக்கப்படும் காலம் என்று வரும். இன்று சுழன்றும் ஏர் பின்னதில்லை உலகு.

வள்ளுவம் பொய்க்கும்தானோ.

—————————

Series Navigationவசந்தபாலனின் ‘ அரவான் ‘மார்க்ஸின் கொடுங்கனவு – தனியுடமை என்பது தொடர்கதையா ? – புதிய சித்தாந்தத்திற்கான நேரம்?
author

எஸ்ஸார்சி

Similar Posts

2 Comments

  1. Avatar
    sathyanandhan says:

    Dear SRC sir, Well said.The inborn bondage with the soil for both agriculturist and agricultural laborers is dwindling. In fact the pride every worker used to carry about however simple or humble a work or profession is missing. Government can overcome all the unemployment in one stroke. Minimum amenities for each village and minimum standard of living for each citizen. Communism has become a bad word unfortunately . But a true communist will certainly strive for the betterment of all workers because he knows that it is the welfare of the work force that will ensure the welfare of society. But there were so many governments ideologically socialist or communist but none of them brought back the pride of workers and sweat.Regards Sathyanandhan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *