தொடரால் பெயர்பெற்ற தும்பி சேர்கீரனார்

This entry is part 10 of 35 in the series 11 மார்ச் 2012

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

சங்க காலத்தினை வீரயுக காலம் என்பர். அக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களைச் சங்க இலக்கியம் என்றும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்றும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பாட்டும் தொகையும் என்ற பெயர;களிலும் குறிப்பிடுவர். இச்சங்க இலக்கியங்களின் அடிநாதமாக விளங்குபவை காதலும் வீரமும் ஆகும்.

இந்தச் சங்க இலக்கியப் பாட்டுக்கள் மொத்தம் 2381 ஆகும். இவற்றைப் பாடிய புலவர்களுள் பெயர் தெரிந்த புலவர்கள் 473 பேராவர். 192 பாடல்களுக்குப் புலவர்களின் பெயர்கள் தெரியவில்லை. கபிலர் என்ற புலவர் ஒருவர் 235 பாடல்கள் பாடியுள்ளார். வேறு புலவர்களுள் நால்வர் மட்டுமே நூற்றுக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளனர். மேலும் சிற்சில பாடல்களும் ஒவ்வொரு பாட்டும் பாடிய புலவர்களே பலராவர்.

சங்க இலக்கியத்துள் அமைந்த பாட்டுக்கள் பெரும்பாலும் அகவல் என்ற ஒருவகையான எளிய செய்யுள்களால் அமைந்தவை. கலித்தொகையும் பரிபாடலும் கலிப்பா, பரிபாட்டு என்னும் ஓசை நயம் நிரம்பிய செய்யுள் வகைகளால் அமைந்தவை ஆகும்.

சங்க இலக்கியப் பாடல்களைப் பாடிய புலவர்களுள் சிலர் நகரங்களைச் சார்ந்தவர்கள்; பலர் சிற்றூர்களைச் சார்ந்தவர்கள். கற்பிக்கும் ஆசிரியர், பொன்வணிகர், ஆடை வணிகர், மருத்துவர், தச்சர், சோதிடர், பொற்கொல்லர், கொல்லர், சேனைத்தலைவர், அமைச்சர், பாணர், கூத்தர் முதலாகப் பல்வேறு தொழில் செய்து வாழ்ந்தவர்கள் புலவர்களாகப் பாடல்களைப் பாடியுள்ளனர்.

இப்புலவர்களுகள் முப்பது பேர் பெண்பாற் புலவர்கள் ஆவர். அரசர்களாக, குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருந்து புலமை பெற்றுப் பாடியவர்கள் 31 பேர் ஆவர். இவர்களுள் பலர் புகழ்பெற்ற அரசரகளாவர். அதே போன்று தொடர்களால் பெயர் பெற்றோர் பலராவர். அவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக விளங்குபவர் தான் தும்பிசேர்கீரனார்.

இவரது இயற்பெயர் கீரன் என்பதாகும். சேர் என்பது அடைமொழி. இதன் பொருள் விளங்காமையால் இவர் பெயரைச் சேர்க்கீரனார் என்றும் பதிப்பிக்கலாயினர். சேர் என்றில்லாது தும்பிசேர் என்ற அடைமொழியே இப்புலவருக்கு அமைந்து தும்பிசேர்கீரனார் என்ற பெயர் வழங்கலாயிற்று எனலாம்.

இவர் தும்பியைச் சிறப்பித்து,

‘‘அம்ம வாழியோ அணிசிறைத் தும்பி”

எனக் குறுந்தொகையிலும்(392), நற்றிணையில்(271,

‘‘கொடியை வாழி தும்பி’’

என்றும் பாடியிருப்பதனால் இவ்வாறு கீரன் என்ற பெயருடன் தும்பிசேர் என்ற தொடர் இணைந்து தும்பிசேர்கீரனார் என்று வழங்கப்பட்டார்.

இவரது பெயர் தும்பிசேர் கீரன், தும்பி சொகினனார், தும்பி சொகிநன், தும்பி சேர் தீரன், தும்பி மோசிகீரன், தும்பி சோகீரனார், தும்பைச் சொகினனார், தும்பிகோக்கீரனார் எனப் பல பதிப்புகளில் பலவேறு பெயர்களுடன் காணப்படுகின்றது.

இப்பெயர்கள் அனைத்திற்கும் உரியவை தும்பிசேர்கீரனார் என்றோ அல்லது தும்பி சொகினானார் என்றோ பெயருடைய ஒரே புலவராகச் சிலர் கருதுகின்றனர். தும்பி சேர்கீரனார், தும்பி சொகினனார் என்னும் இரு புலவர்களாகவும், தும்பி சேர்கீரனார், தும்பிசேர்கீரன், தும்பி சொகினனார் என்று மூன்று புலவர்களாகவும் கொண்டு இவர் பாடிய பாடல்களையும் முறையே இரு புலவர்களுக்கும், மூன்று புலவர்களுக்கும் காணப்படும் ஒற்றுமை, வேற்றுமைகளுக்கு ஏற்பப் பிரித்து அளித்துள்ளனர் சிலர்.

இவர் பெயரைத் தும்பி சேர்கீரனார் என்று கொண்டு இவரை அரச மரபினர் எனக் கருதுவாருமுளர். குறுந்தொகையில் ஐந்து பாடல்களும், நற்றிணை, புறநானூறு ஆகியவற்றில் ஒவ்வொன்றுமாக மொத்தம் ஏழு பாடல்களை இப்புலவர் பாடியுள்ளார்.

குறுந்தொகையில் குறிஞ்சித்திணையில் தோழி கூற்றாகவும், தலைவி கூற்றாகவும் இரு பாடல்கள் அமைந்துள்ளன. மருதம், நெய்தல் ஆகிய திணைகளில் ஒவ்வொன்றுமாக இப்புலவர் பாடல்கள் பாடியுள்ளார். நற்றிணையில் இடம்பெற்றுள்ள இவரது பாடல் பாலைத்திணைப் பாடலாகவும், தும்பி விடு தூதாகவும் அமைந்துள்ளது. அனைத்து நூல்களிலும் இவரது பெயர் தும்பி சேர்கீரன், தும்பிசேர் கீரனார் என்று குறிப்பிடப்பெற்றுள்ளது. புறநானூற்றில் இவரது பெயர் தும்பிசேர் சொகினனார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.

கணவனை இழந்த கைம்பெண்ணின் துன்பநிலையை இப்புலவர் மனம் உருகப் பாடியிருக்கும் பாடல் கல்நெஞ்சையும் கரையவைக்கக் கூடியதாக புறநானூற்றில் அமைந்துள்ளது. அவனிருந்த நாளிலே பலர் கூட்டத்துடன் இருந்து பந்திபந்தியாகச் சாப்பிட்டனர். இன்றோ அவனுடைய கற்புடைய மனைவி அவனை இழந்து கைம்மைக் கோலங் கொண்டாள். தனது கணவனுக்குப் பிண்டம் வைப்பதற்காக சுளகு போன்ற சிறு இடத்தை மெழுகுகின்றாள். கண்ணீர் கொட்டுகிறது. அழுது கொண்டே தன் கண்ணீரினாலேயே சாணத்தைக் கரைத்து மெழுகி சோறு வைக்கின்றாள். இது கொடுமையானது என்று பொதுவியல் திணையில் தாபதநிலைத் துறையில் இப்புலவர் பாடலைப் பாடியுள்ளார். உலகின் நிலையாமையை,

‘‘நெருறைப்

புகலிடம் கண்ணிப் பலரொடும் கூடி

ஒருவழிப் பட்டன்று; மன்னே! இன்றே

அடங்கிய கற்பின்! ஆய்நுதல் மடந்தை

உயர்நிலை உலகம் ஒருவன் புக’

என்று கீரனார் கூறியிருப்பது சிந்தனைக்கு உரியதாகும். இவ்வரிகள்,

‘‘நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை படைத்துஇவ் வுலகு’’

எனும் திருக்குறளை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. கணவனை இழந்த மனைவியின் துயரத்தைப் புலவர்,

‘‘அழுதல் ஆனாக் கண்ணள்

மெழுகு ஆப்பி கண் கலுழ் நீரானே!’’

என்று உள்ளத்தை உருக்கும் வகையில் எடுத்துரைக்கின்றார். கணவன் மீது மனைவி கொண்டுள்ள அன்பின் மிகுதியை இவ்வரிகள் வெளிப்படுத்திக் காட்டுவதுடன் கணவனை இழந்த பெண்களின் நிலையினையும் காட்சிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தலைவியைத் திருமணம் செய்து கொள்ளப் பொருள் வேண்டும். அதனால் தலைவன் பொருள் தேடுவதற்காகப் பிரிந்தான். இதனை ஆற்றமாட்டாத தலைவி வருந்தினாள். தனது மனக்குமுறலை,

‘‘தும்பியே! இப்பிரிவு நோய்த் துன்பம் குறைவதற்காக நான் உனக்கு ஒன்று உரைக்கின்றேன் கேட்பாயாக. உன் உடம்பு கரியது. உன் அறியும் அறிவும் கரியது. ஆதலால் நீ அறமில்லததாய் ஆயினாய்.

மனையைக் காப்பதற்காகப் போடப்பட்டுள்ள வேலியில் படர்ந்திருக்கும் பீர்க்கம் பூவினை நீ ஊதிவிட்டுச் செல்வாய். ஆனால் அதுபோன்று இருக்கக் கூடிய பசலையை ஊதமாட்டாய். மேலும் உனது பெட்டையை விரும்பி விரைவாகப் பறந்து சென்று அதன் மனம் மகிழ அன்பு செய்வாய். அதனாலேயே நீ என்னை மறந்தாய்.

என் மீது அன்பில்லாது பொருள் காரணமாகப் பிரிந்த என்னுடைய காதலரிடம் சென்று என்நிலையை அவருக்கு எடுத்துரைத்து அவரைத் திரும்பி வருமாறு செய்யாத உனது செயல் விரும்பத்தகுந்ததாக இல்லை. இருப்பினும் நீ வாழ்வாயாக’ என்று கூறுகிறாள்.

‘‘கொடியை வாழி! தும்பி! இந்நோய்

படுகதில் அம்ம யான் நினக்கு உரைத்தென

மெய்யே கருமை அன்றியும் செவ்வன்

அறிவும் கரிதோ அறனிலோய் நினக்கே

மனை உறக்காக்கும் மாண் பெருங்கிடக்கை

நுண்முள்வேலித் தாதொடு பொதுளிய

தாறுபடு பீர;க்கம் ஊதி வேறுபட

நாற்றம் இன்மையின் பசலை ஊதாய்ச்

சிறுகுறு பறவைக்கு ஓடி விரைவுடன்

நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ? அன்பிலர;

வெம்மலை அருஞ்சுரம் இறந்தோர;க்கு

என்நிலை உரையாய் சென்று அவண் வரவே’’

என்ற இப்பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

தும்பி தன் துணையாகிய சிறுகுறும் பறவைக்கு விரைந்தோடி அன்பு செய்யக் கூடிய இயல்புடையதாக இருந்தும் தன்னுடைய துன்பத்தைச் சிறிதும் அறியவில்லையே என்ற வருத்தத்தில் தலைவி தும்பியைப் பார்த்து, ‘‘உன் உடம்புதான் கருப்பு அறிவும் கரிதோ நீ கொடியை’ எனக் கூறுவது இன்புறத் தக்கதாக உள்ளது.

தும்பிசேர்கீரனாரின் குறுந்தொகைத் தலைவியோ,

‘‘அம்ம வாழியோ-மணிசிறைத் தும்பி!

நல்மொழிக்கு அச்சம் இல்லை அவர;நாட்டு

அண்ணல் நெடுவரைச் சேறி ஆயின்

கடவை மிடைந்த துடவையம் சிறுதினைத்

துளர்எறி நுண்துகள் களைஞர் தங்கை

தமரின் தீராள் என்மோ-அரசர்

நிரை செலல் நுண்தோல் போலப்

பிரசம் தூங்கு மலைகிழவோர்கே!’’

எனத் தும்பியைத் தன் தலைவனிடம் தூதுவிடுகிறாள்.

தலைவி தும்பியிடம் நீலமணி போன்ற சிறகுகளை உடைய தும்பியே! நீ தலைவனுடைய நாட்டில் உள்ள மலையிடத்தே சென்றால் என் தலைவனிடம், ‘‘உன்னுடைய தலைவியானவள் அவளது தமையன்மார்களால் கடுமையாகப் பாதுகாக்கப்படுகின்றாள். நீ அவளைக் குறிப்பிட்ட இடத்திலே பார்க்க இயலாது என்பதனைக் கூறுவாயாக’ என்று தூது அனுப்புகிறாள்.

அரசரைச் சூழ்ந்து காக்கும் தோற்படைபோல தலைவியை அவளது அண்ணன்மார் பாதுகாப்பதாக உவமை கூறுவது புலவரின் புலமைக்குச் சான்றாக அமைகிறது. மேலும் தலைவியின் ஆற்றாமையைத் தலைவனுக்கு உணர்த்த தும்பியை விளித்துக் கூறுவது போல முன்னிலைப் புறமொழியாக உரைத்த பாடலைப் பாடியதால்தான் இப்புலவருக்குத் தும்பிசேர்கீரனார் என்ற பெயர் ஏற்பட்டது எனலாம்.

தும்பியைத் தூது அனுப்பும் தலைவிக்கு தும்பி அச்சத்தினால் தலைவினிடம் கூறாது விட்டுவிடுமோ என்று ஐயம் ஏற்பட்டது. அதன் பின்னர்தான் தும்பியின் அச்சத்தைப் போக்கி, ‘‘நல்மொழிக்கு அச்சமில்லை நீ அஞ்சாது செல்வாயாக’ என்று கூறித் தூது விடுகின்றாள்.

தலைவன் வரைவு நீட்டித்தபோது தலைவியானவள் இங்ஙனம் தும்பியைத் தூதாக விடுத்துத் தும்பியிடம் கூறுவது போல் தலைவனுக்குக் கூறுவது தலைவியின் அறிவினையும் அன்பினையும் புலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம் நடந்தது. தலைவியுடன் மகிழ்வுற்று வாழ்ந்த தலைவன் பரத்தமை ஒழுக்கம் ஒழுகினான். அதனைக் கண்டு தலைவி வருந்தினாள். தலைவியின் வருத்தத்தைக் கண்ட தோழி தலைமகனுடைய வாயில்களிடம்,

‘‘தச்சன் செய்த சிறுமா வையம்

ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் கையில்

ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல,

உற்று இன்புறேஎம் ஆயினும், நற்றேர்ப்

பொய்கை ஊரன் கேண்மை

செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே’’

என்று கூறுகின்றாள்.

‘‘தச்சனால் செய்யப்பட்ட சிறிய குதிரை பூட்டிய சிறிய தேரினை ஏறிச் செலுத்தி இன்பம் அடையாவிட்டாலும், சிறுவர்கள் அதனைக் கையால் இழுத்து இன்பம் காண்பர். அதுபோல தலைவனுடன் மெய்யுறு இன்பம் அடையாவிட்டாலும் அவனுடைய நட்பினை மேலும் மேலும் வளர்த்து இன்பம் அடைந்தோம். அதனால் கைவளையல்கள் கழலாமல் கையில் செறிந்தன’’ என்று தோழி தலைவி கூறுவதைப் போன்று கூறுகின்றாள்.

தலைவனுடைய பரத்தமை ஒழுக்கத்தைக் குறிக்க யாவரும் நீராடும் நீர் நிலைபோன்றவன் தலைவன் என்பதனைப், ‘‘பொய்கை ஊரன்’ எனத்தோழி குறிப்பிடுகிறாள். இங்ஙனம் தலைவியின் ஆற்றாமை மிக்க கவலையைத் தலைவன் உணரும்படி செய்கிறாள் தோழி. தலைவனும் தலைவியும் மன ஒற்றுiயுடனும் மகிழ்வுடனும் இல்லறம் நடத்த வேண்டும் என்பதனைத் தோழி கூற்றுவழி புலவர் புலப்படுத்தியிருப்பது சிறப்பிற்குரியதாகும்.

தும்பியைச் சிறப்பித்தும், தும்பியைத் தூதாக விடுத்தும் பாடிய பாடல்களாலேயே இப்புலவருக்குத் தும்பி சேர்கீரனார் என்ற பெயர் ஏற்பட்டது. இதற்கு இவரது பாடல்களே சான்றுகளாக அமைகின்றன. அழகிய உவமை வழி இப்புலவர் இல்வாழ்விற்குரிய அறங்களை எடுத்துரைப்பது அவரின் பாடல் நெறியை பகர்வதாக அமைந்துள்ளது எனலாம்.

Series Navigationஹரி சங்கர் & ஹரீஷ் நாராயணனின் ‘அம்புலி ‘ ( முப்பரிமாணம் )குப்பை அல்லது ஊர் கூடி…
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *