புதியதோர் உலகம் – குறுங்கதை

This entry is part 17 of 35 in the series 11 மார்ச் 2012

நீண்ட நாட்களின் பின்பு அஞ்சலியிடமிருந்து ராகவனுக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. நீண்ட நாட்கள் என்பது இங்கே நான்கு வருடங்களைக் குறிக்கும். அஞ்சலி ராகவனிற்கு மருமகள்.

முன்பெல்லாம் ஆறு ஆண்டுகளாக தினமும் மின்னஞ்சல் வரும். எள்ளளவும் பிரயோசனமில்லாத அந்த அஞ்சல்களை குறைந்தது முப்பது நாற்பது பேருக்காவது ‘·போர்வேட்’ பண்ணாமல் விடமாட்டாள் அஞ்சலி. அப்பொழுதெல்லாம் இருவரும் ‘மெசஞ்சரில்’ (Messenger) செய்திப் பரிவர்த்தனைகள் செய்திருக்கின்றார்கள்.

எல்லாம் ஒருநாள் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் நின்றுவிட்டன. எல்லாம் அவரவர் விருப்பம். அந்த இடைவெளிக்குள் ராகவன் மூன்று கொம்பியூட்டர்கள் மாற்றி விட்டான். தொழில்நுட்ப ரீதியில் எல்லாமே பாரிய மாற்றங்கள் அடைந்துவிட்டன.

ஆனால் இன்று பொறுக்கியெடுத்து மூன்று பேருக்கு மட்டும் அந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. “சோழியன் குடும்பி சும்மா ஆடாது.” எல்லாவிதமான கொடூர வைரசுகளையெல்லாம் தாக்கி அழிக்கும் ‘மக்கபீ’ என்ற ‘அன்ரிவைரஸ்’, ‘யாமிருக்க பயமேன்!’ என்று ராகவனை ஏளனம் செய்தது. ‘கிளிக்’ செய்யவேண்டாம் என்று மனம் ஓலமிடுவதற்கு முன்பாக ‘மவுஸ்’ முந்திக் கொண்டது.

‘யங் மெயிலிற்குள்’ இருந்து சுழன்று வந்தது செய்தி. ‘இதைக் தொடுப்பவர்கள் புதியதோர் உலகத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்’. அங்கே ஒரு இணையத்தளத்தின் முகவரி இணைக்கப்பட்டிருந்தது. ஆசை யாரை விட்டது. மருமகள் அல்லவா அனுப்பியிருக்கின்றாள்! புதியதோர் உலகைப் பார்க்கும் ஆவலில் அதை க்ளிக் செய்தான் ராகவன். அது விரிந்து இன்னொரு புதிய பக்கத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கே ஒன்றையும் காணவில்லை. வெற்றிடம். ஆனால் இன்ரநெற் தொடர்ந்தும் வேலை செய்து கொண்டிருந்தது.

“நீங்களும் உங்களுடைய இன்ரநெற்றும். பத்து டொலருக்கு இருநூறு ‘ஜிகாபைற்’ என்றால் இப்பிடித்தான். இன்ரநெற்றின் வேகம் போதவில்லை. அதுதான் வரவில்லை. திரும்பவும் க்ளிக் செய்யுங்கோ!” மனைவி உசாரானாள்.

திரும்பவும் மவுசைப் பிடித்து அழுத்தினான் ராகவன். திரும்பவும் புதிய உலகம் விரிந்தது. வெற்றிடம்.

மூன்றாவது தடவை மவுசை அளுத்திவிட்டு, “நாங்கள் மத்தியானச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு வருவோம். ஆறுதலா ‘டவுண்லோட்; செய்யட்டும்” என்றான் ராகவன். மதியச்சாப்பாடு முடிவடைந்து பார்க்கும் போது கொம்பியூட்டர் தானாக நின்று போயிருந்தது. அதன் பிறகு எந்தப் பகீரதப் பிரயத்தனத்திற்கும் அது அசைந்து கொடுக்கவில்லை.

“நீங்களும் உங்கடை மறுமகளும்” தலையிலே குட்டிவிட்டுப் போனாள் மனைவி.

கொம்பியூட்டரை காரின் முன் சீற்றில் இருத்தி, சீற் பெல்ற்றும் போட்டு, ஒரு கைக்குழந்தையைக் கூட்டிச் செல்வது போல Dr.PC யிடம் எடுத்துச் சென்றான் ராகவன்.

அவர் கொபியூட்டரின் பின்புற நட்டுகளைக் கழற்றிவிட்டு உள்ளே பார்த்தார். பறவைக்காய்ச்சல் நோயாளி ஒருவரைத் தொட்டுவிட்டவர் போல மருண்டு போய் கதிரையில் இருந்தார். முகம் கோபமாகி விகாரமாக இருந்தது. அவர் ஏற்கனவே திறந்து வைத்திருந்த பக்கத்தினூடாக உள்ளே எட்டிப் பார்த்தான் ராகவன். உள்ளே இரண்டு கிலோ தூசு படிந்திருந்தது.

“எப்போது கொபியூட்டரை எடுக்கலாம்?” என்ற ராகவனது கேள்விக்குப் பதில் தராமல் அவர் ஒரு எதிர்க்கேள்வி கேட்டார்.

“எப்போது கடைசியாக இதை சர்வீஸ் செய்தீர்கள்?”

“வாங்கியதற்கு இன்னமும் செய்யவில்லை!”

“நீங்கள் கார் வைத்திருக்கின்றீர்களா?” என்று ஆச்சரியமாகக் கேட்டார். “ஆம்” என்றான் ராகவன்.

“அதற்கு எத்தனை மாதத்திற்கு ஒரு தடவை சர்வீஸ் செய்வீர்கள்?”

“ஆறு மாதத்திற்கு ஒரு தடவை.”

“அதைப்போலத்தான் இதுவும். ஆறு மாதத்திற்கு ஒரு தடவை சர்வீஸ் செய்ய வேண்டும்.”

“எவ்வளவு செலவாகும்?” என்றதற்கு

“மூன்று நாட்களின் பின்பு வந்து என்னைப் பாருங்கள்” என்றார் அவர்.

பொறுக்கியெடுத்த மற்ற இரண்டுபேரில், ஒருவரிடமிருந்து ராகவனிற்கு “உங்களுடைய மருமகள் செய்த வேலையைப் பார்த்தீர்களா?” என்று தொலைபேசி அழைப்பு வந்தது.

மூன்று நாட்களில் ராகவனது கொம்பியூட்டர் இருநூறு டொலர்களை விழுங்கி விட்டது. கொம்பியூட்டரை கிளீன் செய்ததற்கும் வைரசை அழித்ததற்கும் என கணக்குப் போட்டு வைத்திருந்தார் அவர்.

ராகவன் இதைப்பற்றி ஒருவரிடமும் மூச்சு விடவில்லை. வீட்டிற்கு கொம்பியூட்டரை எடுத்துச் சென்று மீண்டும் அதை இயக்கினான். அவசரஅவசரமாக மின்னஞ்சல்களைப் பார்வையிட்டான். மீண்டும் ‘யங் மெயிலை’ (Junk Mail) கிளிக் செய்தான். மருமகளின் மூன்று மின்னஞ்சல்கள் அங்கிருந்தன. ‘என்னுடைய முகவரியில் இருந்து வரும் மின்னஞ்சல்களை தயவு செய்து திறக்க வேண்டாம். அவற்றில் வைரஸ் இருக்கின்றன. அவை தானாகவே என்னையறியாமல் அனுப்பப்படுகின்றன” என்று அதில் இருந்தன.

சூடு கண்ட பூனை அல்லவா? அத்தனை ‘யங்’ மெயில்’களையும் சம்ஹாரம் செய்தான் ராகவன். சூடு தணிவதற்குள் மருமகளிற்கு தொலைபேசி எடுத்து சத்தமிட்டான். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டாள் அஞ்சலி.

“எனக்கு வந்த ஒரு இ.மெயிலாலை, என்ரை கொம்பியூட்டர் வைரஸ் பிடிச்சிட்டுது போல இருந்தது. அதுதான் அந்த இ.மெயிலை உங்களுக்கும் இன்னும் இரண்டு பேருக்கும் அனுப்பிப் பாத்தனான். நீங்கள்தானே சொவ்ற்வெயர் இஞ்சினியராச்சே! அதுதான் உங்களுக்கும் அனுப்பினனான். பட் நீங்கள் ரூ லேட். மற்ற இரண்டு பேரும் அதிலை வைரஸ் இருக்கெண்டு எப்பவோ ரெலிபோன் எடுத்துச் சொல்லி விட்டினம்” மறுமுனையில் சிரித்தாள் அஞ்சலி.

வெறி பிடித்தவன் போல கத்தத் தொடங்கினான் ராகவன். மறுமுனையில் இருந்து எதுவித சத்தமும் அதன் பிறகு வரவில்லை.

Series Navigationமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -17மெய்ப்பொருள், கனவு, குலவை, அகநாழிகை ,கணையாழி, துளிர், வணிகக் கதிர். — சிற்றிதழ்கள் ஒரு பார்வை
author

கே.எஸ்.சுதாகர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *