முன்னணியின் பின்னணிகள் – 33

This entry is part 39 of 42 in the series 25 மார்ச் 2012

சாமர்செட் மாம்
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்
>>>
”ஒரு விஷயம் கேட்கலாமா, ரோசி?” என்று கேட்டேன். ”அந்தப் புத்தகத்தில் குழந்தையின் மரணத்திற்கப்பாலான சம்பவங்கள், அவை நடந்ததா?”
என்னை ஒரு சந்தேகப் பார்வை பார்த்தாள். அவள் அதரங்கள் சுழித்து சின்னப் புன்னகை.
”ம். அதெல்லாம் எத்தனை வருஷத்துக்கு முந்தைய கதை. எனக்கு அதைச் சொல்றதில் எந்த விகல்பமுங் கிடையாது. அவர் அதைச் சரியா யூகிச்சதாச் சொல்ல இயலாது. அது அவரோட கற்பனைதானே? அவருக்கு இதெல்லாம் தெரியும்ன்றதே எனக்கு ஆச்சர்யம். எழுத்தாளர்லியா, அவருக்கு மத்தவரைப் பத்தியும் அவங்கநிலையில் யோசிக்க வருது. நான் அவராண்ட எதுவும் சொல்லாமலேயே.”
ரோசி ஒரு சிகெரெட்டை எடுத்து அதன் முனையை மேசையில் சுண்டினாள். என்றாலும் பற்றவைத்துக் கொள்ளவில்லை.
”அவர் சொல்லியிருந்ததைப் போல… நாங்கள் ஆஸ்பத்திரியில் இருந்து வந்தோம். நடந்துதான் வந்தோம். எனக்கு வாடகைக்காரில் வெறுமனே உட்கார்ந்திருக்க முடியாதுன்னு பட்டது. என் உடம்பே மரத்து எல்லா உணர்ச்சியுமே இறந்து போனாப்போலிருந்தது. அதுவரை அழுகையோ அழுகையா அழுது மேலும் அழ என்னிடம் கண்ணீர் இல்லை. தெம்பும் இல்லை. டெட் என்னை சமாதானப்படுத்த முயன்றார். நான் தடுத்தேன். ”கடவுளாணை, சித்த பேசாமல் வாங்க.” பிறகு அவர் பேசவில்லை. அப்ப எங்களுக்கு வாக்சால் பாலத் தெருவில் அறைகள் இருந்தன. ரெண்டாவது மாடியில், உட்கார்ந்து ஆசுவாசப்பட ஒரு அறை. கூட படுக்கையறை. வசதி பத்தாதேன்னு தான் நாங்க அவளை ஆஸ்பத்திரிக்கே அழைச்சிட்டுப் போகவேண்டி வந்தது
இந்த சின்ன இடத்தில வெச்சி அவளைப் பார்த்துக்க முடியல்ல. வீட்டுக்காரி வேற, வியாதியஸ்தரையெல்லாம் இங்க வெச்சிக்கக் கூடாதுன்னு துரத்திட்டிருந்தாள். டெட்டும் இவளை ஆஸ்பத்திரில வெச்சி இன்னும் நல்லபடியா பாத்துக்கலாம்னு அபிப்ராய்ப்பட்டார். அந்த வீட்டுக்காரி, அவ ஒண்ணும் அராஜகி அல்ல. வெடுக்னு தேளாய்க் கொட்டிருவா, அவ்ளதான். டெட் அவகூட மணிக்கணக்கா உட்கார்ந்து அரட்டையடிச்சிட்டிருப்பார். நாங்க வீட்டுக்குத் திரும்பின சத்தம் கேட்டு, மேல வந்தாள் அவள்…
”குட்டிப் பொண்ணு… இப்ப எப்பிடி இருக்கா?” என்று அவள் கேட்டாள்.
”இறந்துட்டா” என்றார் டெட்.
… எனக்கோ எதுவும் பேச முடியவில்லை. அவள் போய் எங்களுக்கு தேநீர் போட்டு எடுத்து வந்தாள். எனக்கு எதுவுமே வேண்டியிருக்கவில்லை. ஆனால் டெட் என்னை வற்புறுத்தி ‘ஹாம்’ கொஞ்சம் எடுத்துக்கச் சொன்னார். (தொடைக்கறி) நான் போய் சன்னலில் உட்கார்ந்து கொண்டேன். வீட்டுக்காரி வந்து கொண்டுவந்த தட்டு சாமான்களை திரும்ப எடுத்துப் போனதை நான் பார்க்கவே யில்லை. யாரும் என்னோட பேசறதே எனக்குப் பிடிக்கவில்லை.
… டெட் எதோ புத்தகத்தை எடுத்து வாசிச்சிட்டிருந்தார். அதாவது அப்பிடி ஒரு பாவனை. பிரித்த பக்கத்தை அவர் திருப்பவே இல்லை. பாவம். நான் பார்க்கிறேன், புத்தகத்தில் அவர் கண்ணீர் சொட்டுச் சொட்டா விழுகிறது. நான் சன்னல் பக்கமாகத் திரும்பிக் கொண்டேன். அது ஜுன் மாச இறுதி. 28ம் தேதி. பகல் அதிகம். இரவு கம்மி. தெருவில் கிட்டத்தட்ட ஒரு மூலைப்பகுதியில் நாங்கள் வசித்தோம். பொது விடுதியில் சனங்கள் போவதும் வருவதுமாய் வழக்கமான இயக்கம். இந்த நாள் இப்பிடியே போயிட்டே யிருக்கும் முடிவே யில்லாமல் என்று தோன்றியது. ஆனால் திடீர்னு பார்க்கிறேன்… இராத்திரி! விளக்குகள் எல்லாம் ஒளிர ஆரம்பித்திருந்தன. தெருவில் சந்தடி அதிகமாய் இருந்தது. எனக்கானால் மகா அலுப்பு. கால்கள் அப்பிடியே இரும்பாட்டம் கனங் கட்டியிருந்தன.
”வாயு விளக்கை ஏத்தலாமில்லே?” என்று டெட்டிடம் சொன்னேன்.
”வேணுன்னிருக்கா உனக்கு?” என்று அவர் கேட்டார்.
”இப்பிடியே இருட்டுல உட்கார்ந்து கெடக்க முடியல்ல…” என்றேன் நான்.
… அவர் விளக்கேற்றினார். பின் போய் புகைக்குழாயைப் பற்றவைத்துக் கொண்டார். அவருக்கு அந்நேரம் புகை வேண்டும், அது எனக்குத் தெரியும். நான் அப்படியே உட்கார்ந்து தெருவை வெறித்துக் கொண்டிருந்தேன். எனக்கு என்னவோ ஆகிவிட்டது. இப்பிடியே இங்கியே நான் உட்கார்ந்திருந்தேனானால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிடும். எங்காவது வெளிச்சமான இடத்துக்கு, சனங்கள் இரைச்சலுள்ள இடத்துக்குப் போயாக வேண்டும்.
… ஆ டெட்டை விட்டு விலகிப் போகவேண்டும். இல்லையில்லை, அத்தனைக்கு இல்லை, டெட் என்ன நினைக்கிறார், என்ன உணர்கிறார்… அவற்றுக்குத் தப்பித்து, எங்காவது வேறு சலனங்களுக்கு, வேறு நினைவுகளுக்கு… வேறு மனிதர்களூடே சஞ்சரிக்க விரும்பினேன். ஆனால் இருந்தது ரெண்டே அறை. நான் படுக்கையறைக்குப் போனேன். குழந்தையின் கட்டில் இன்னும் அங்கே இருந்தது. அதைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். உள்ளே போனேன். தொப்பியை எடுத்து மாட்டிக்கொண்டேன். உடைமாற்றிக்கொண்டேன். திரும்பி டெட்டிடம் வந்தேன்.
”நான் வெளியே போகிறேன்” என்றேன்.
… என்னைப் பார்த்தார். நான் புது உடை மாற்றியிருந்ததை அவர் கவனித்திருந்தார் என்று அந்தப் பார்வைக்குறிப்பில் தெரிந்தது. அவரைவிட்டு தனித்திருக்க அந்நேரம் நான் விரும்பியதையும் அந்த த்வனி உணர்த்தியிருக்க வேண்டும்.
”ம்” என்றார்.
… புத்தகத்தில், நான் பூங்காவுக்குள் புகுந்து போகிறேன் இல்லையா…. ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. விக்டோரியா வரை போனேன். அங்கிருந்து சேரிங் கிராசுக்கு ஒரு ஜட்கா. வாடகை ஒரு ஷில்லிங். அங்கிருந்து சினிமா நாடக தியேட்டர்கள் நிறைந்த ஸ்ட்ராண்டு வரை நடந்தேன்.
… வீட்டில் இருந்து கிளம்பு முன்னாலேயே மனசில் திட்டமிட்டிருந்தேன். ஏய் உனக்கு ஹாரி ரெட்ஃபோர்ட் ஞாபகம் இருக்கில்லியா? அப்போ அவன் அடல்ஃபியில் நடித்துக் கொண்டிருந்தான். ரெண்டாவது நகைச்சுவைப் பகுதி அவனுடையது. நேரே மேடையருகே பக்கவாட்டுக் கதவு வழியே உள்ளேபோனேன். என் பேரைச் சொல்லிவிட்டேன்.
… எனக்கு எப்பவுமே ஹாரி ரெட்ஃபோர்டைப் பிடிக்கும். எந்தக் கொள்கைப்பிடிப்பும் இல்லாத ஒருமாதிரி காமா சோமா ஆசாமி. துட்டு விஷயத்திலும் அவன் க்ராக்தனமாய்த்தான் நடந்து கொள்வான். ஆனால் அவன் நம்மைச் சிரிக்க வைத்து விடுவான். அவனோட அத்தனை கெட்ட குணங்களுடனும், பாவம் நல்ல பையன்னு நமக்கு அவனைப் பிடிக்கும். தெரியுமா, அவன் போயர் சண்டையில் இறந்து போனான்.” (இரண்டு போயர் யுத்தங்கள் உண்டு. இங்கே குறிப்பிடுவது, முதல் போயர் சண்டை – சுலுக்களிடமிருந்து இங்கிலாந்து போராடிய விடுதலை யுத்தம். 1880-81)
”ம்ஹும், தெரியாது. அவன் ஒருநாள் காணாமல் போனான், பிளேபில்லில் அவன் பேர் எடுக்கப்பட்டுவிடடது, என்கிற வரை தெரிந்தது. ஒருவேளை வியாபாரம் பண்றேன் அது இதுவென்று போய்விட்டானோ என நினைத்தேன்…” (பிளேபில் – நாடகத்தின் மாதாந்திர நிகழ்ச்சி நிரல்.)
”அதெல்லாமில்லை. அவன் உடனே வெளியேறிவிட்டான். லேடிஸ்மித் என்ற இடத்தில் அவன் கொல்லப்பட்டான். சரி… நான் காத்திருந்தேனா, கொஞ்ச நேரத்தில் அவன் வந்தான். ”ஹாரி இன்னிக்கு ராத்திரிக்கு நாம எங்காவது ராசிலுக்குப் போகலாம்” என்று கூப்பிட்டேன் அவனை. (ராசில் – இரைச்சலும் பரபரப்புமான எதும் கேளிக்கை நிகழ்ச்சி.) ”ராத்திரி ரொமனோசில் சாப்பிட்டால் என்ன, ஹாரி?”
”சரி” என்றான். ”இங்கியே காத்திரு. காட்சி முடியட்டும். அரிதாரத்தை அழிச்சிட்டு உடனே வந்திர்றேன்…”
… அவனைப் பார்த்ததில் கொஞ்சம் தேவலாமாய் இருந்தது. ரேசில் டிக்கெட் வாங்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கிற பாத்திரத்தை நடித்துக்கொண்டிருந்தான். அவனது கட்டம் போட்ட உடைகளைப் பார்க்கவே எனக்கு சிரிப்பாய் இருந்தது. அவனும் அவனது விநோதமான தொப்பியும் சிவப்பு பூசிய மூக்கும். காட்சி முடியும்வரை நான் காத்திருந்தேன். அவன் இறங்கி வந்தான். நாங்கள் ரொமனோஸ் வரை நடந்து போனோம்.
”ஏய் பசிக்குதா?” என்று கேட்டான்.
”கொலைப்பட்னி நான்” என்றேன். எனக்குப் பசி குடலைப் பிடுங்கியது.
”பெஸ்ட் ஐட்டமாச் சாபபிடுவோம்,” என்றான். ”செலவாவது மயிராவது, பில் தெரிஸ் கிட்ட சொல்லிட்டு வந்தேன். என்னோட பெஸ்ட் பெண்ணை சூப்பர் சப்பருக்கு அழைச்சிட்டுப் போறேனாக்கும்னேன். அவன் மனசைத் தொட்டு பணத்தைத் தேத்திட்டு வந்திருக்கேன்.”
”ஷாம்பேன் சொல்லு இவனே” என்றேன் நான்.
”தாலியறுத்தவளுக்கு மூணு சியர்ஸ்…” என்றான் வக்ர உக்ரத்துடன்.
”ஏய் அந்தக் காலத்தில் நீ ரொமனோஸ் போயிருக்கியா? அற்புதமாய் இருந்தது அது. நடிகர்கள், ரேசாட்ட சனம் அத்தனையும் அங்க பார்க்கலாம். கெயிட்டி பெண்களும் அங்கே வந்து குழுமுவார்கள். இடம்னா அது இடம். மத்ததெல்லாம் ஜடம்… அத்தோட அந்த ரோமன், ஹாரிக்கு அவனைத் தெரியும். அவன் நேரே எங்க மேசைக்கே வந்தான். தஸ்கா புஸ்கான்னு அவன் ஓட்டை இங்கிலிஷ் ஒரே தமாஷ். அதைக் கேட்டு சனங்க சிரிக்கறதுக்காக அப்பிடிப் பேசுவான்னு நினைக்கிறேன். அவனுக்குத் தெரிஞ்சாட்கள் யாரும் உள்ள வந்தாலோ வெளியேறினாலோ அவனுக்கு ஒரு அஞ்சு பவுண்டு நோட்டு குத்துவார்கள்.
”ஏய் குழந்தை எப்பிடி இருக்கு?” என்று கேட்டான் ஹாரி.
”தேவலை” என்றேன்.
… இந்நேரம் அவனிடம் நிசத்தைச் சொல்லமுடியுமா? ஹாஹ்ஹா, மனுசங்க எப்பிடியெல்லாம் வேடிக்கையா இருக்காங்க? சில விஷயங்கள் அவங்களுக்கு விளங்கறதே இல்லை. எனக்குத் தெரியும், பச்சைப் பிள்ளை ஆஸ்பத்திரியில் செத்து சவமாக் கெடக்கு, இவ பாட்டுக்கு ஓட்டலுக்கு சாப்பிட வெளிய வர்றான்னா, அவன் மிரண்டுற மாட்டானா? நானும் குப்னு உள்ளே அமுக்கமாகி இருண்டுவிடுவேன். அது வேணாம் எனக்கு, நான் சிரிக்க விரும்பினேன்.”
கையில் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்த சிகெரெட்டைப் பற்றவைத்துக் கொண்டாள்.
”ஒண்ணு தெரியுமா? ஒரு ஸ்திரி கருவுற்றாள்னு வெய்யி. சிலப்ப அந்த கணவனுக்கு அதைத் தாள முடியறதில்லை. வெளிய இறங்கி இன்னொரு பெண்ணுகிட்ட போயிர்றாங்க. பிற்பாடு அவளுக்கு அது தெரியவந்தால், எப்பவும் அவ என்ன பண்றான்றதே வேடிக்கை. பாதகத்திங்க, அந்த சமயத்தில் ஆம்பளை அப்பிடி நடந்துக்கறது மகா மோசம், குய்யோ முறையோன்னு ஆர்ப்பாட்டம் பண்ணுவாளுங்க பாக்கணும். அவ என்ன பாடு பட்டாலும், அதுல அவன் பங்கெடுத்துக்கணும்னு அவளுக எதிர்பார்ப்பு.
… ஆனால் எதுக்கும் எல்லை இருக்கு. அவளுகள் கிட்ட, மடத்தனமாப் பேசாதேன்னு சொல்லுவேன் நான். அதுக்கு அவமேல அவனுக்கு காதல் இல்லேன்னு அர்த்தம் இல்லடிம்பேன். அவன் அப்பிடி அலையிறான்னு கூட நினைக்க வேண்டாம். எதுவுமே நினைக்க வேண்டாம்… எல்லாம் அந்த நேரத்தின் பதட்டம், பூச்சிகள் விளக்கில் மோதி மோதி விழறாப் போல, அவ்ளதான். பாரு இவளே, அத்தனைக்கு அவன் கிலியடிச்சிப் போகலைன்னா அப்பிடி நினைப்பே அவனாண்ட இருக்காது. இருக்குமா? இருந்திச்சா முன்னாடி? இல்லியே, அப்றமென்னன்றேன். எனக்கு அதெல்லாம் தெரியும். ஏன்னால்…. அப்ப அப்டிதான் நான் உணர்ந்தேன்.
”ஏய் சாப்பாடான பிறகு ‘அதைப்’ பத்தி என்ன சொல்றே?” என்று கேட்டான் ஹாரி.
”எதைப்பத்தி?” என்று நான் கேட்டேன்.
அப்ப இரவு நடனம்லாங் கிடையாது. வேறெங்கயும் ஒதுங்க வழியில்லை.
”என் அடுக்ககம் வரை வா. என் புகைப்படத் தொகுதியை வந்து பார்” என்றான் ஹாரி.
”ம். பார்க்கலாம்” என்றேன்.
சேரிங் குறுக்குத் தெருவில் ஒரு சின்ன அடுக்கக இல்லம் வைத்திருந்தான். ரெண்டு அறை, குளியறை, ஒரு சிறு சமையல் மேடை. அங்கே போனேன், அந்த ராத்திரிக்கு அங்கே நான் தங்கினேன்.
காலை திரும்பி வருகிறேன். காலையுணவு மேசையில் தயாராய் இருந்தது. டெட் அப்பதான் உணவுகொள்ள ஆரம்பித்திருந்தார். மவனே, இப்பமாத்திரம் இவன் எதாவது சொல்லட்டும், இத்தோட இவனைக் கழட்டிவிட்ற வேண்டிதான், என நினைத்துக்கொண்டேன். என்ன நடந்ததோ அதைப்பத்தி நான் அலட்டிக்கவே இல்லை. முன்ன எப்பிடி இருந்தேன்? என் வயத்துப்பாட்டுக்கு நான் சம்பாதிக்கலே? திருப்பியும் எங்கயாச்சம் வேலை கீலை பாத்துப் பொழைச்சிக்குவோம், என்ன இப்ப?
… ஹ்ம்னு அவர் சின்னதா முனங்கினாலும் கதை முடிஞ்சிது. நான் என் துணிமணிகளை எடுத்துக்கிட்டு புறப்ட்டுப் போயிருப்பேன். நான் உள்ளே வர்றேன். என்னை நிமிர்ந்து பார்த்தார்.
”வா. சரியான நேரத்துக்கு தான் வந்தே…” என்றார் அவர். ”உன் சாசேஜை, இறைச்சியை நானே சாப்பிட்டிர்லாமான்னு நினைச்சேன்.”
… போய் அவர் பக்கத்தில் உட்கார்ந்தேன். அவருக்கு தேநீர் ஊற்றி வைத்தேன். அவர்பாட்டுக்கு நாளிதழை எடுத்து வைத்துக்கொண்டு வாசித்துக் கொண்டிருந்தார். நாங்கள் சாப்பிட்டு முடித்தபின் ஆஸ்பத்திரிக்குப் போனோம். எங்க போயிருந்தேனு அவர் என்னைக் கேட்கவே இல்லை. அவர் மனசில் என்ன நினைச்சிருந்தாரோ அறியேன். அந்த சமயம் பூராவும் அப்பிடியொரு அன்புடன் என்னை நடத்தினார். நாந்தான் ரொம்ப நொந்து போயிருந்தேன் அப்ப. எனக்கு என்னன்னா, என்னால இதைத் தாள முடியாதோன்னு தைரியமே இல்லாமல் இருந்தது. அந்த சூழ்நிலையை நான் சமாளிக்க, தாண்டிவர அவரால என்ன முடியுமோ அத்தனையும் அவர் செஞ்சார்னு சொல்லணும்…”
”அந்தப் புத்தகம் படிச்சப்ப நீ என்ன நினைச்சே?” என்று கேட்டேன்.
”ம். அந்த ராத்திரி எனக்கு என்ன நடந்ததுன்னு அவருக்கு அத்தனை சரியாத் தெரியலைன்னு தெரிஞ்சது எனக்கு. ஆனால் அதை அவர் எழுத்தில் கொண்டு வந்தாரே, அதான் ஆளை அயர்த்திட்டது. அவர் கதை எழுத அதை எடுத்துக்க மாட்டார்னு நினைச்சேன். நீங்க எல்லாருமே திடுதிப்னு அதிர்ச்சி தர்றதுல சமர்ததர்கள், எல்லா எழுத்தாளருமே…”
அப்போது தொலைபேசி மணி அடித்தது. ரோசி எடுத்து சேதியைக் காதில் வாங்கிக்கொண்டாள்.
”அட, திரு வானுஸ்சி, நீங்க கூப்பிட்டதுல ரொம்ப சந்தோஷமாச்சி. ஓ, நான் அம்சமா நல்லாருக்கேன். நன்றி. ஹா, அம்சமா அதாவது அழகாவும் இருக்கேன். ஆரோக்கியமாவும் இருக்கேன். என் வயசுக்கு நீங்க வரும்போது இதேபோல எல்லா பாராட்டும் உங்களுக்கும் கிடைக்கும் கட்டாயம்!”

யாரோடோ உற்சாகமாய் உரையாடிக் கொண்டிருந்தாள். அந்த மறுமுனை ஆசாமி, ரொம்ப இடக்கான ரெட்டை அர்த்தப் பேச்சில் விருப்பமான ஆள் என்று தோன்றியது. அந்த உரையாடலை நான் சட்டை பண்ணவில்லை. ஆனால் அந்த அரட்டையோ ஓய்வதாய்க் காணோம். நான் என்பாட்டுக்கு யோசிக்க ஆரம்பித்தேன்.
எழுத்தாள வாழ்க்கை எத்தனையோ மேடு பள்ளங்கள் சார்ந்தது. முதல் தடை அவனது வறுமை. உலகமே அவன் கதை எழுதுகிறான் என்றால் மேலும் கீழும், விநோதமான ஆறுவிரல் ஆசாமி போலப் பார்க்கும். ஓரளவு வெற்றி கிட்டிவிட்டாலும், அதன் ஆபத்துகளையும் நிதானத்துடன் சமாளிக்க வேண்டும். மனசு மாறிக்கொண்டே யிருக்கும் இந்த சனங்களை அவன் நம்பியாக வேண்டும். அவனைப் பேட்டி காண வரும் நிருபர்களை அவன் கவர்ந்தாக வேண்டும். நல்லபடியாக அவர்கள் எழுத வேண்டுமே. அவனைப் படம் எடுக்கிற புகைப்படக்காரர்களிடமும் அவன் விதி மாட்டிக் கொண்டிருக்கிறது. அத்தோடு பத்திரிகை ஆசிரியர்கள் அவனிடம் பிரதி கேட்டுத் தொந்தரவு செய்வார்கள். வரியாளர்கள் அவனை வருமான வரி கட்டச் ¢சொல்லி விரட்டி வருவார்கள்.
பிரமுகர்கள் விருந்துக்கு அழைப்பார்கள். பெரிய கழகங்களின் காரியதரிசிகள் அவனை உரையாற்ற அழைப்பார்கள். ஆ, பெண்கள்… சிலர் அவனைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள பின்னால் வருவார்கள். சிலர் விவாகரத்து செய்வார்கள். இளைய தலைமுறை அவனது கையெழுத்து வேண்டி வநது சூழ்ந்துகொள்ளும். நடிகர்கள் அவனது படைப்பில் நடிக்க என்று கேட்டு வருவார்கள். புதியவர்களோவெனில் கைமாத்து கூட கேட்பார்கள்.
ஒரே பரபரப்பும் கொந்தளிப்புமான யுவதிகள் தங்கள் கல்யாணம் பற்றி அவனிடம் யோசனை கேட்பார்கள். துடிப்பான இளைஞர்கள் தங்கள் படைப்புகள் பற்றி அறிவுரைக்கு காதை நீட்டுவார்கள். தவிர ஏஜென்டுகள். பதிப்பாளர்கள். மானேஜர்கள். அறுவை கேஸ்கள். வியந்தோதும் வாசகர் கூட்டம். வெட்டிச் சாய்க்கும் விமர்சக வட்டம். தவிர, ஆ அவனது மனசாட்சி…
அவனுக்கு ஒரேயொரு ஆறுதல். அவன் மனசில் என்னவாவது வந்தது என்று வை. ஒரு இம்சை தந்த நினைவு. நண்பன் இறந்த துக்கம். மாட்டிக்கொண்ட காதல். கௌரவம் தலைதட்டிய சம்பவம். எவரிடமாவது அன்புபாராட்டி ஏமாறுதல், அதனால் கோபம்…. அதாவது என்ன உணர்ச்சிச் சலனம் என்றாலும், உள்ளே குடைகிற எந்த சிந்தனை என்றாலும், எடு பேனாவை, இறக்கு கருப்பு வெள்ளையாய்… ஒரு கதையின் கரு, அல்லது வகையான கட்டுரைக்கான சரக்கு என்று எழுதிவிட்டு மறந்தும் விடலாம். அப்புறம் சுமை இறக்கிய சுதந்திர மனிதன் அவன். மற்ற யாருக்கும் அது, அந்த மீட்சி, லபிக்காது.
தொலைபேசியை வைத்துவிட்டு ரோசி என்பக்கம் திரும்பினாள்.
”இது என் சிநேகிதர்களில் ஒருத்தர். இன்னிக்கு ராத்திரி நான் பிரிட்ஜ் விளையாடப் போவேன். அவர் காரில் வந்து என்னை அழைச்சிக்கிட்டுப் போறதாச் சொல்கிறார். அவர் ஒரு ஓப், இத்தாலிய வம்சாவளி. நல்ல மனுசர். நியு யார்க் ஊருக்குள்ள அவருக்கு பெரிய பலசரக்குக் கடை இருந்தது. இப்ப எல்லாத்தையும் ஏறக்கட்டிட்டாரு.”
”அப்பறம் நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கறதைப் பத்தி எப்பவாவது யோசிச்சியா ரோசி?”
”ம்ஹும்” என்று புன்னகைத்தாள். ”நிறையப் பேர் என்னைக் கேட்கவும் செய்தார்கள். நான் இப்பிடியே சந்தோஷமாத்தான் இருக்கேன். நான் இப்பிடித்தான் அதைப் பார்க்கிறேன் – ஒரு வயசாளியை நான் கல்யாணம் முடிக்க விரும்பவில்லை. இந்த வயசில் கொஞ்சவயசுக் காரனைக் கல்யாணம் கட்டறதும் பைத்தாரத்தனம். என் காலம் எல்லாம் ஆயிட்டது. என் வேளை வந்தால் கிளம்பிறலாம் நான்.”
”அது சரி. ஜார்ஜ் கெம்ப்போட கிளம்பிப் போனதுக்கு என்ன காரணம்?”
”ஆ, எனக்கு அவரை எப்பவுமே பிடிக்கும். டெட்டை நான் சந்திக்கு முன்னாடியே எனக்கு அவரைத் தெரியும். அவரை நான் கல்யாணம் முடிக்க வாய்க்கும்ன்ற நினைப்பே என்னிடம் அப்பவெல்லாம் கிடையாது. ஒண்ணு, அவர் ஏற்கனவே கல்யாணம் ஆனவர். அவரது கௌரவத்தையும் அவர் பாத்துக்கணும், இல்லியா?
… ஒருநாள் என்னாண்ட வந்து, எல்லாமே பிழையாப் போச்சுன்னு நின்னாரு. படார்னு பலூன் வெடிச்சிட்டது. அவரைக் கைது பண்ண உத்திரவு இருக்கு ஊரில். ரெண்டொரு நாளில் தேடி எப்பிடியும் அவரைப் பிடிச்சிருவாங்க.
… ஏ நான்அமெரிக்கா போகிறேன். வரியான்னு கேட்டார். நான் என்ன செய்யிறது? அத்தனை தூரத்துக்கு தனியா மனசு திடுக் திடுக்னு அடிச்சிக்க அவரை நான் அனுப்ப முடியவில்லை. அவர்கிட்ட அத்தனை காசும் கிடையாது. அதுவரை பணத்தை தண்ணியாச் செலவழிச்ச பெருங் கை. சொந்த வீடு. சொந்தக் கார்னு வளைய வந்த மனுசன். எனக்கு வேலை செய்ய முடியும்ன்ற தெம்பு. சரி, பாத்துக்கலாம்ன்னு அவரோட கிளம்பிட்டேன்.”
”சில சமயம் நான் நினைச்சிக்குவேன்… அவர் ஒருத்தரைத் தான் நீ உள்ளாற நேசிச்சே. இல்லியா?”
”அதை மறுக்க முடியாது.”
”ஆச்சர்யமான விஷயம் – சரி, அவர்கிட்ட என்ன விசேஷத்தைக் கண்டே?”
அவள் கண்கள் சுவரில் இருந்த ஒரு படத்தின் மேல் பதிந்தது. அதுவரை நான் அதை கவனித்திருக்கவில்லை. ஒரு கில்ட் பட்டியில் அது ஜார்ஜ் பிரபுவின் பெரிய படம். அவர் அமெரிக்கா வந்த புதுசில், ஒருவேளை அவர்கள் திருமணத்தின் போது எடுத்திருக்கலாம். முக்கால் அளவு உயரம். நீள அங்கிபாணி கோட். இறுக்கமாய் பொத்தான்கள். உயரமான பட்டுத் தொப்பி. ஒருபக்கமாய் சேவல் கொண்டையாட்டம் சரிந்து கிடந்தது. பொத்தான் துவாரத்தில் பெரிசாய் ஒரு ரோசா. ஒரு கையில் வெள்ளிப் பூணிட்ட பிரம்பு. வலது கையில் நீள சிகெரெட்டில் இருந்து புகையெழும்புகிறது. அடர்த்தியான மீசை. ஓரங்களில் மெழுகு மினுமினுப்பு. குறும்பான விழிகள். நெஞ்சு நிமிர்த்திய திமிர் தெரிந்தது அந்த நிற்றலில். அணிந்திருந்த டையில் குதிரை லாடம் போல வைரங்கள் பதித்திருந்தார். குதிரைப் பந்தயம் ஆடப் போகிற பெரிய பிரமுகரின் தோரணை.
”எப்பவுமே டிப் டாப் மிடுக்கன் அல்லவா அவர்!” என்றாள் ரோசி.
>>>
முடிகிறது
storysankar@gmail.com

Series Navigation“ஊசியிலைக்காடுக‌ள்”தாகூரின் கீதப் பாமாலை – 5 காதல் பித்து
author

எஸ். ஷங்கரநாராயணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *