வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -4

This entry is part 8 of 40 in the series 1 ஏப்ரல் 2012

சற்று மாறுதலாய் யோசி வாழ்க்கை மாறும்
_____________________________________________________________
’மாற்றம் ஒன்றுதான் மாறாதது’, என்பார்கள்.காலத்திற்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப எல்லாமே மற்றத்தை அடைகின்றன.
எதையும் மாறுதலாய் யோசிக்கத் தெரிந்தவனே வெற்றி பெறுகிறான். வெற்றி பெறுவது மட்டுமல்ல அவனே தனித்தும் கவனத்திற்குள்ளாகிறான். முன்னே வருகிறான்.முன்னேறுகிறான். தலைவனாகக் கூட அடையாளம் கொள்ளப்படுகிறான்.
எனக்குத் தெரிந்து, தேநீர்க் கடையில் டீ போடுவதை கலைநயத்தோடு செய்பவர்களைப் பார்த்திருக்கிறேன். அநாயசமாக அவர்கள் டீ ஆற்றுவதை வேடிக்கைப் பார்க்கத்தோன்றும்.
கலைநயத்தோடு ஆடவேண்டிய மேடையில் சிலர் ஆடும்போது சலித்து எழுந்து போய்விடத் தோன்றும்.
எதைச்செய்கிறோம் என்பதல்ல, எப்படி செய்கிறோம் என்பதே முக்கியம்.எதையும் மாறுதலாய் யோசிக்கத் தெரிந்தவன் புதுமையாகவும் சிறப்பாகவும் செய்துவிடுகிறான்.
அப்படி மாறுதலாய் யோசிப்பதன் அவசியம் குறித்தும், அதற்கான பயிற்சி குறித்தும், முயற்சி குறித்தும் சற்று ’மாறுதலாய் யோசி வாழ்க்கை மாறும்’, என்னும் நூலில் வடிவுடையான் பதிவு செய்திருக்கிறார். மறுபரிசீலனை காலம் மனமாற்றம் அடிமனப்பதிவு மனித இயக்கம் எண்ணமே செயலாகிறதுபோன்ற சொல்லாடல்களைப் புரிந்துகொண்டால் எளிதாகவும் விரிவாகவும் அறிய முடியும். மனிதன் தன்னை உணர்ந்துகொள்ளாமல் மற்றவரைப் பார்த்து தனது வாழ்வை அமைக்கத் திட்டமிடுகிறான். வாழ்க்கையை பலவிதமாகப் பலரும் உருவகப் படுத்தியிருக்கிறார்கள். வாழ்க்கை என்பது சிந்தனைகளின் தொடர்ச்சி என்கிறார் வடிவுடையான்.

எளிதாக சொல்லப்பட்டாலும், சிந்தனைகளே ஒரு மனிதனை இலக்கு நோக்கி கொண்டு செல்கிறது. ஆகவேதான் சிந்தனைகளில் மாற்றம் மிக அவசியம் என வலியுறுத்துகிறார்.

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவுஎன்றார் வள்ளுவர். நீ கொண்டிருக்கும் நம்பிக்கையைக் கூட மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார் வடிவுடையான்.

வாழ்க்கையில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். முக்கியமான ஒன்றை, தீவிர பரிசீலனைக்குப்பின் உறுதிப்படுத்துவதன் அவசியம் தான் அவரின் கருத்தாகும். துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கில்லையா?

எல்லாவற்றையும் மீள் பார்வைக்கு உட்படுத்தினால் புதிய தெளிவு உண்டாகும். யார் கூறினார் என்பதை விடுத்து என்ன கூறினார் என்பதன் மீதே கவனம் குவியவேண்டும். பயன் படாத பழைய எண்ணங்களை அப்புறப்படுத்தி புதிய எண்ணங்களால் மனத்தை நிரப்பவேண்டும். ’வெற்றி என்பது ஒருவரின் சுயமான சக்தி. அதுதனித்தன்மையின் உருவாக்கம்.ஒருவன் தனது இயல்பிலிருந்து வேறு ஒருவனைப்போல் ஆக முயற்சித்து, அந்த வேறு யாரையோ தன்னில் வெளிப்படுத்த முயற்சிக்கும் அதே அளவு,அவன் தோல்வி அடைகிறான்’. ஆம். நீ நீயாக இரு. உன் சுயம் தொலைக்காதே.தன்னம்பிக்கையின் முதல் பிறப்பிடமாக இதனைக் கருதுகிறேன்.

வாழ்க்கையில் இலட்சியங்களை அடைவதற்கு இடியறாத உழைப்பு அவசியம். நேரம் போதவில்லை என்பவன் உள்ளபடியே நேரத்தை வீணடிக்கிறான் என்றே பொருள்.

உலகில்பிறந்த அத்தனை பேருக்கும் நாளொன்றுக்கு 24 மணி நேரம் தானே.

‘ஒருநாளைக்கு இருபத்திநான்கு மணிநேரம். வாரத்துக்கு ஏழு நாட்கள்.

நீ வாழ்வதற்கான அவகாசம் உனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.’காலம் அனைவருக்கும் பொதுவானது என்றிருக்கையில் அதனை அவரவரும் எப்படி பயன் படுத்துகிறோம் என்பதே முக்கியம்.

மனத்தை மூன்று நிலைகளில் பிரிக்கலாம். 1. வெளிமனம் 2. உள்மனம்.3. ஆழ்மனம். வெளிமனம் நாம் செய்கிற சராசரி காரியங்களை கட்டுப்படுத்துகிறது. உள்மனம் ஆற்றுகிற காரியங்கள் அனிச்சையாக இயங்கும் தன்மை கொண்டது. நாம் சேமித்து வைக்கும் விஷயங்கள் ஆழ்மனத்தின் உள்ளேசென்று தங்கி நாளடைவில் அதுவே நம்மை இயக்கும் சக்தியாக மாறிவிடுகிறது.

ஆழ்மனத்தில் தங்கியுள்ள விஷயங்களே உறக்கத்தில் கனவாக மாறி வருகிறது. எனவே நம்மின் செயல்பாடுகளை நம்மை அறியாமல் கட்டுக்குள் வைத்திருப்பது ஆழ்மனத்தின் சேமிப்பேயாகும்.எனவே உள்மனத்தில் எதைக் கொண்டிருக்கிறோம் என்பது மிக முக்கியம்.

’உலகத்தில் தடம் பதித்தவர்கள் எல்லோரும் ஆழமான நம்பிக்கையின் வழிகாட்டுதலோடு செயல்பட்டிருக்கிறார்கள். உன் உள்மனத்தை நீ அப்படி பயன்படுத்தத் தொடங்கிவிட்டால் உன் உள்மன ஆற்றலை அறிய முடியும்,’என்கிறார் வடிவுடையான். அதற்கு என்ன செய்ய வேண்டுமாம்? அவரே குறிப்பிடுகிறார்; ‘நீ விரும்புவதை உன் மனத்திற்குள் சொல்லிக்கொண்டே இருந்தால் அதைப் பெறுவதற்கான வழியில் உன்மனம் உன்னை செலுத்த ஆரம்பிக்கும். எதிர்மறை சிந்தனையை நீ உருவாக்கினால் அழிவை நோக்கி அது உன்னை செலுத்துகிறது’உள்மனத்தில் பதிவாகும் தகவல்கள் அனைத்தும் சொல், கற்பனை, உணர்ச்சி ஆகிய மூன்று பரிமாணங்களைக் கொண்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றன. கனவு பற்றி ஃப்ராய்ட் மிக அழகாக விளக்கம் சொல்லுவார். அதன் வழியே வடிவுடையான் கனவு பற்றி நிறைய பேசுகிறார். அதன் தன்மைகள் பற்றி பேசுகிறார்.சாதரண விஷயங்களைக்கூட குழப்பிவிடக்கூடிய சிக்கல் கொண்ட பகுதிகளை, வடிவுடையான் மிக எளிமையாக ,அனைவரும் புரிந்துகொள்ளும் வித்த்தில் எழுதியிருப்பது சிறப்பானது.மேலோர் பலரது மேற்கோள்கள் பலம் சேர்க்கிறது.படித்தால் மனத்தில் மாற்றத்தை உருவாக்கவல்ல நூல்.படியுங்கள் புரியும்.
வெளியீடு:
கற்பகம் புத்தகாலயம்
4/2,சுந்தரம் தெரு,
தி.நகர்
சென்னை-6000 017
பதிப்பாளர்:
திரு நல்லதம்பி
தொலை பேசி: 24314347
அலை பேசி: 9600063554
=========தமிழ்மணவாளன்

Series Navigationபதின்பருவம் உறைந்த இடம்விமோசனம்
author

தமிழ்மணவாளன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *