மொட்டை மாடிக்குச் சென்று துவைத்த துணிகளை கொடியில் காயப்போட்டபடியே நினத்துக் கொண்டாள் ராஜம்……என்னமா… வெய்யில் கொளுத்தறது..இந்த வருஷம் இப்படி வெய்யிலை பயன்படுத்தாமல் நான் வீணாக்கறேனே… கையோட இன்னைக்கே… ஸ்கூட்டர்ல மாவு திரிக்கிற மெஷினுக்குப் போயி ரெண்டு படி அரிசியை திரித்துக் கொண்டு வந்து நாளைக்கே கையோட வடாம் பிழிஞ்சு வைக்கணும்.கடையில் வாங்கிக் கட்டுப் படியாகாது. போன தடவை மாங்கு… மாங்குன்னு பிழிந்து வைத்தது….போக வர வறுத்துத் தின்று தீர்த்தாச்சு. வெறும் வத்தல் குழம்பு பண்ணி தொட்டுக்கக் கருவடாம் பொரித்தால் கூடப் போதும்..சமைத்த சுவடே தெரியாமல் காலி பண்ணிடுவா.. அவள் கணவர் சுந்தரத்திற்கும் மகன் மனோகருக்கும் வடகம்னா… அவ்வளவு பிடிக்கும்.
கடைசியா …. மகனின் ஈரப் பாண்ட்டை அழுத்திப் பிழிந்து உதறி கொடியில் உலர்த்திவிட்டு…அப்பாடா….என்று கீழே இறங்கி வீட்டுக்குள் நுழைந்ததும்….காலை பத்து மணிக்கே….இப்படி கண்ணைக் கட்டுதேன்னு…மண்பானையில் இருந்து இரண்டு டம்பளர் தண்ணியை எடுத்து மடக் மடக் ன்னு குடித்தாள் ராஜம். இத்தனை நேரம் வெய்யில் நின்றதற்கு பானைத் தண்ணீர் மனதை குளிர்வித்தது. கணவர் சுந்தரம் ஆபீஸ் விஷயமாக வெளியூருக்கு போயிருக்கிறார். வர இன்னும் ஒரு நாள் ஆகும்…நல்லவேளை இன்னைக்கு காலை வேலைகள் எல்லாம் முடிஞ்சாச்சு…வெய்யில் தாழ மெதுவாக் கூடப் போய் அரிசியை திரித்து வாங்கலாம்…இன்னைக்காவது நிம்மதியா “சீதா ” சீரியலை டீவீயில் பார்க்கணும்.நினைத்தமாத்திரத்தில் எண்ணத்தில் மண் விழுந்தது போல் கைபேசி அழைத்துப் பாடியது….”என்ன தவம் செய்தனை…யசோதா…என்ன தவம் செய்தனை…யசோ…தா…எங்கும் நிறைப் பரப்ரஹ்மம்….அம்மா…என்றழைக்க”…
இதோ…வரேன்…வரேன்….சொல்லிக்கொண்டே..யாராயிருக்கும் கைபேசியைக் கையிலெடுத்ததும்…..மகனின் அழைப்பு என்று தெரிந்து….
ம்ம்ம்….சொல்லு மனோ….என்ன விஷயம்…பரீட்சைக்கு பணம் கட்ட கடைசி நாள் ன்னு பணம் வாங்கிண்டு போனியே…கட்டியாச்சா?
அம்மா…இரும்மா…அதப் பத்தி தான் சொல்ல வந்தேன்..இன்னைக்கு இங்க கவுண்டர்ல ஒரே கூட்டம்..பணம் கட்ட முடியலை…எனக்கு அடுத்து ரொம்ப முக்கியமான கிளாஸ் இருக்கு கண்டிப்பா அட்டென்ட் பண்ணனும்..அதனால …நீ ஒரு ஹெல்ப் பண்ணேன்…நீ வந்து பணத்தைக் கட்டிகொடேன். என் நம்பர், பேர், அமௌன்ட் எல்லாம் சொல்றேன் எழுதிக்கோ…ப்ளீஸ்..மா…!
டேய்…டேய்…என்னாடா இது…உன்னோட இப்படி ஒரு தொல்லை…கடைசி நாள் வரைக்கும் யாருக்கு வந்த விருந்தோன்னு…அசால்டா இருந்துட்டு….கடைசி நிமிஷத்தில் என் மென்னியப் பிடிக்காதேன்னு …உனக்கு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்….எல்லாம் செவிடன் காதுல ஊதின சங்கு தான்..போ…!…இன்னைக்கு ஒரே வெய்யில் நான் வெளிலயே…எக்காரணம் கொண்டும் போக வேண்டாம்னு இருக்கேன்..இப்பப் போய் உன் காலேஜ் வரைக்கும் வரச் சொல்றியே…என்னால முடியாதுப்பா..சாமி..பிகு பண்ணிக் கொள்வதில் கொஞ்சம் வல்லவள் ராஜம்.கேட்டதும் சரி என்று ஒருபோதும் சொல்ல மாட்டாள்.அவளோட அருமை புரிய வெச்சுட்டுத் தான் உதவிக்கு கூட தயாராவாள்.
அம்மா…கோவிச்சுக்காதே… . ப்ளீஸ் மா…என் டேபிள் ட்ரே ல எழுதி வெச்சுருக்கேன்..எல்லாம்….விபரமா… ! நீ பணம் போட்டு கட்டிடு..நீ தந்த பணத்தை சாயந்தரமா கொடுத்துடறேன்…கட்டிடு… மா ப்ளீஸ்..மாட்டேன்னு சொல்லாதே…இன்னைக்குத் தான் கடைசி நாள்…எனக்கு இப்போ முக்கிய கிளாஸ் இருக்கு கிளாஸ் ரூமுக்கு போறேன்…அவசரமா போன் பண்றேன்..நீ கட்டிடுவ..எனக்குத் தெரியும் உன்னைப் பத்தி என்று நம்பிக்கையை ராஜத்தின் மனதுள் விதைத்து விட்டு இவளின் பதிலுக்குக் காத்திருக்காமல் மனோகரன் கைபேசியின் கதவை சார்த்தினான்.
போச்சுடா….இன்னைக்கு “சீதா” சீரியல் அவ்வளவு தான். போயிட்டு வரவே ஒரு மணி நேரம் ஆயிடும்..சரி… போனது போகட்டும்…போய் பணத்தைக் கட்டிட்டு வந்து தொலையறேன்….இல்லாட்டா மனோ அப்பா வந்ததும் போட்டுக் கொடுத்தா…வீணா… அவர்ட்ட பேச்சு வாங்க என்னால ஆகாது… அதுக்குப் பேசாமல் போயிட்டு வந்துடலாம். எண்ணியபடியே எல்லாம் எடுத்துக் கொண்டு கிளம்பியாச்சு.வெளியில் போக சகிக்கபிலாக இருக்கேனோ… என்று ஒரு முறை கண்ணாடியில் பார்த்து திருப்தி பட்டதும்…. வெய்யிலுக்கு இதமாக கூலிங் கிளாஸ் மறக்காமல் எடுத்துக்கோ மனது ஆணையிட்டது. எல்லாம்…எடுத்துண்டாச்சு…சொன்னபடியே..வீட்டுக் .கதவைப் பூட்டி சாவி மற்றும் கைபேசி பணம் கட்டவேண்டிய விபரம் எல்லாத்தையும் கைப்பையில் போட்டு Access125 ஸ்கூட்டர் சீட்டைத் திறந்து டிக்கியில் வைத்துவிட்டு…ஸ்டார்ட் பண்ணினால் ஸ்கூட்டர் பிகு பண்ணிக் கொண்டது….
ராஜம்…நீ பண்றது நன்னாவே இல்லை….இப்பல்லாம் நீ என்னைக் கண்டுக்கவே மாட்டேங்கறே….ஆடிக்கொரு நாள் அம்மாவாசைக்கொரு நாள் வந்து கிளம்பு கிளம்புன்னா நான் கிளம்பணுமா…? நான் வரமாட்டேன் உன்னோட என்பது போல் எஞ்சின் அடம் பிடித்தது.
கோவிச்சுக்காதேடீ கண்ணே….இன்னைக்கு வெளில வா…உனக்கு வயிறு முட்ட பெட்ரோல் வாங்கி ஊத்தறேன்.. ப்ளீஸ்….ஸ்டார்ட் ஆயிடுடீ…நீயும்…..என்னைப் படுத்தாதே…
“ம்ம்ஹும்…..நீ என்ன வேணா சொல்லு…நான் இப்படித் தான் அடம் பிடிப்பேன்…”
ஓஹோ…அவ்ளோ கொழுப்பா…இரு இரு…ரெண்டு உதை விட்டாத் தானே வழிக்கு வருவே…நீ…உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா?….ஸ்டாண்டைப் போட்டு ஒரு உதை…! கிர்ர்ர்…..கிர்ர்….னு..மறுபடியும் அடம்…!
சொன்னபடியே…இரண்டாவது உதைக்கு பயந்து ஸ்கூட்டர் சொன்னபடி கேட்டது.
வண்டி நாற்பதில் இறக்கை விரித்துப் பறந்து கொண்டிருந்தது….காற்று…முகத்தைக் கிழித்து வெய்யிலின் அனலை விரட்டிக் கொண்டிருந்தது. ராஜம்….அவள் மனதில் எப்போதும் பாரதி கண்டப் புதுமைப் பெண்ணாக தன்னை கற்பனை செய்து வருவாள். எந்த ஒரு பிரச்சனைக்கும் அசைந்து கொடுக்க மாட்டாள். உனக்காச்சு எனக்காச்சுன்னு மல்லுக் கட்டி ஜெயித்தும் விடுவாள்.ஆனால் என்ன….அவளை மட்டம் தட்டி அழ வைத்துக் கீழே தள்ளும் ஒரே ஜீவன் அவளது தம்பி ராமன் தான். அறியான கர்வக் காரன்.அவன் ராஜா ராமன்! இவள் சேவகி ராஜம்..!
ராமனிடம் மட்டும் என்றுமே இவள் தோற்றுப் போவாள். அவன்….ஜெய ராமன்..!அதில் ராஜதிற்கு எப்பவும் வருத்தம் தான்…அவன் என்றைக்காவது போனில் கூப்பிட்டு ஏதாவது கேட்டால்…இந்த விளையாட்டுக்கு நான் வரலைடா..ன்னு மெதுவாக நழுவி விடுவாள்…ராமனும்…விடாமல் தெரியாதுன்னு சொல்றதுக்கு ” இது ஒரு சாக்கா”
ன்னு” இவளை வம்புக்கு இழுப்பான். இப்படி நிறைய தடவைகள் ராஜம் அவனிடம் தோற்றுப் போய்… மனம் நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கிறாள்.
காலேஜ் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு பணம் கட்ட போனால்….அங்கே இருந்த கூட்டத்தைப் பார்த்து பயந்தே போனாள்.ராஜம்.உள்ளே புகுந்து போவது போலவா… உடம்பு இருக்கு. அவளைப் பார்த்ததும் தங்களுக்கு ஏதும் டேமேஜ் வந்துவிடக் கூடாதுன்னு மாணவர்கள் மிக ஜாக்கிரதையாக நெருங்கி விலகி நிற்பதை கவனித்தவள்…
நேராக ரெஜிஸ்ட்ரார் அறைக்கு சென்றாள்.
எக்ஸ்கியூஸ்மீ…மே ஐ கமின் சார்…!
எஸ்….வாங்க மேடம்…என்ன விஷயம்…?
சார் அது வந்து…என் மகன் ..பரிட்சைக்குப் நான் பணம் கட்ட வந்தேன்.வெறும் மூன்று கவுண்டர் தான் திறந்து இருக்கு…நூற்றுக்கணக்கா பசங்க நிற்கிறாங்க….என்னால் அந்தக் கூட்டத்தில் நிற்கக் கூட முடியலை….ன்னு விஷயத்தை சொன்னதும்….
அவர் அருகில் இருந்த தன உதவியாளரிடம் அந்தப் காகிதத்தைக் கொடுத்து “இவங்களுக்கு வேண்டியதை செய்” ன்னு சொல்லி…”மேடம் அவர் கூட போங்க” என்று சொல்ல..
“ரொம்ப நன்றி சார்….”
அடுத்த ஐந்தே நிமிடத்தில் மந்திரத்தில் மாங்காய் காய்த்தது போல பணம் கட்டிய ரசீது ராஜத்தின் கைகளில்.
கட்டிய நபருக்கு நன்றி சொல்லிவிட்டு…..கைபையை டிக்கியில் போட்டு இறுக்க அடித்து சார்த்திவிட்டு வண்டியை கிளப்ப…. இத்தனை நேரம் என்னை வெய்யில்ல காயப் போட்டியே….எப்போ என் வயித்துக்கு பெட்ரோல் போடுவே….?
மறுபடி வேதாளம்… முருங்கை மரம் ஏற…!
“இதோ…அடுத்தது உன்னைத் தான் கவனிப்பேன்…கொஞ்சம் பொறு….நல்வேளை அந்தப் புண்ணியவான் உதவியதால் சீக்கிரம் வந்தேன்…இல்லாட்டி இன்னும் நீ வெய்யில்ல நின்னுண்டிருக்கணும்..புரிஞ்சுக்கோ…..”
ஸ்கூட்டர் பழகிய பாதையில் ஓடிக்கொண்டிருந்தது…”ராஜம் நினைத்தால் நடத்திக் காட்டுவாள்….அவள் நெஞ்சம் ஒரு நெருப்பு…அவள் நேர்மையின் மறு பிறப்பு….”.ராஜம் மனதோடு பாடிக்கொண்டே ஓட்டிக் கொண்டிருந்தாள்.
என்னதான் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டிருந்தாலும்..உச்ச வெய்யில் தலையில் ஸ்ட்ரா போட்டு உறிஞ்சியது போல இருந்தது. முதல்ல எனக்கு தண்ணீர்…அப்பறம் தான் உனக்கு பெட்ரோல்…சொல்லிக் கொண்டே ஓரமாக ஒரு பெட்டிக்கடை வாசலில் நிறுத்தினாள். சீக்கிரம் தண்ணீர்…சீக்கிரம் தண்ணீர்..என தொண்டை வரட்டுக் கத்தல் கத்தியது.
சாவியை கையில் எடுத்து டிக்கியைத் திறந்து கைபையை எடுக்கும் முன்னால் …அகஸ்மாத்தாக தன கையில் வைத்திருந்த சாவி டிக்கிக்குள்ளே சட்டெனத் தவறி விழ…இன்னொரு கை தானாக சீட்டை நழுவ விட…பட்டென விழுந்து மூடிக் கொண்டது. ஐயோ…சாவி..சாவி…உள்ளே….அச்சச்சோ…கைப்பையும்…உள்ளே..மொத்தமா எல்லாம்.ஒண்ணா மாட்டிக் கொண்டதே….அட ராமா…!இப்போ நான் என்ன பண்ணுவேன்?
ராஜம்…நீ இன்னைக்கு நல்லா மாட்டிக்கிட்டே….ன்னு காலேஜில் பணம் கட்டும் கவுண்டர் முன் காத்து நின்ற அத்தனை மாணவரும் சொல்வது போலிருந்தது.
நிராயுதபாணியாக தன் நிலை….!.தாகம் போன இடம் தெரியலை….அதுக்கும் மேல தலை சுத்திக் கொண்டிருந்ததால். அடுத்தது என்ன???
பெரிய கேள்விக் குறி…..கண் முன்னால்..பயமுறுத்தியது……கையில் பத்துப் பைசா கிடையாது…கைபேசியும் கிடையாது..வீட்டுச் சாவியும் கிடையாது…..ஸ்கூட்டர் சாவியும் கிடையாது…..எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லாத பிச்சைக்கார நிலையில்….தனியே…தன்னந்தனியே…..பேந்தப் பேந்த விழிப்பது பிறத்தியாருக்கு தெரிந்து விடாமல் கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு கலங்கிக் கொண்டிருந்தாள் ராஜம்.மனது மட்டும் இதுக்கெல்லாம் கலங்கறவள் நீயில்லை என்று…..தைரியம் சொல்லிக் கொண்டிருந்தது.
சிவபிரான்… சனிபகவான் பிடியில் இருந்து தப்பிக்க இரண்டரை நாழி புழுவாக சாக்கடையில் இருந்த நிலை தனக்கும் வந்தது போல எண்ணினாள்..ராஜம்…அட சனியனே….என்னை நீ இப்படியாப் பிடிக்கணும்…?முன்னாடியே வந்து சொல்லிட்டு….பிடிச்சிருக்கலாமே….அட்லீஸ்ட் என் கைபையை கையில் எடுத்துண்டு இருப்பேனே….நீ ரொம்ப ரொம்ப மோசம்..போ..உனக்கு இந்த வாரம் நல்லெண்ணையும் கிடையாது…விளக்கெண்ணையும் கிடையாது…” இப்படி நடுத்தெருவில் திருவிளையாடல் நாகேஷ் மாதிரின்னா… என்னையும் புலம்ப வெச்சுருக்கே….! ராஜம் ஆற்றாமையால் தவிக்க.
வீட்டிலிருந்து கிளம்பும்போதே நீ ஏகப்பட்ட மக்கர் பண்ணினே…..இப்போ பாரு…நடுத்தெருவில் அதோகதியாக நிற்கவும் வெச்சுட்டே…உன்னைப் மலை போல நம்பி இருக்கறதுக்கு கைமேல பலன்…ன்னு கோபத்தோடு ஸ்கூட்டரை ஒரு இடி இடித்தாள்.அதற்கும் வாயிருந்தால் மறுபடியும்..ராஜம் உனக்கு .நல்லா வேணும்னு சொல்லி இன்னும் இரண்டு உதை வாங்கி இருக்கும்.
அச்சச்சோ…. இந்த நேரம் பார்த்து இவரும் வெளியூரில் இருக்காரே…இப்படியெல்லாம் ஆகும்னு நான் கனவிலும் நினைக்கவில்லையே…ஒரு நிமிடத்துளியில் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவளாக ஆனது ஆச்சரியம் தான். யாருகிட்ட கை ஏந்துவது? எப்படிக் கேட்பது? உதவி பண்ணித் தான் பழக்கமே தவிர உதவி கேட்கத் தெரியாதே… அப்படியே கொஞ்சம் பண உதவின்னு யாருகிட்டயாவது கேட்டு அதற்க்கு அவர்கள் இல்லைன்னு கையை விரிச்சுட்டா அதைத் தாங்கும் சக்தி மனசுக்கு இருக்கா…? இந்த விஷயத்தை யாரிடம் சொன்னாலும் ஏற இறங்கப் பார்த்து ஏளனம் பண்ணி சிரிப்பார்கள்….அதற்கு மனது ஒப்பவில்லை.நேரம் செல்ல செல்ல கை கால் உதற…! காசின் அருமை கண் முன்னே தெரிந்தது.
“காசே தான் கடவுளப்பா…..அந்தக் கடவுளுக்கும்….” என்ற பாட்டு டீக்கடை ரேடியோவில் பாடிக் கொண்டிருந்தது.இந்த இக்கட்டான நிலையில் கூட அவள் மனம்…பாடலில் லயித்தது…..ஆஹா…..இப்போ எனக்கும் இது புரிஞ்சுடுத்தே….பாடலில் தான் என்ன ஒரு தீர்க்கதரிசனம்……!
இந்த நிலைமை என் எதிரிக்கும் வரக் கூடாதுடா சாமி….இந்த அனுபவமும்..அதன் உள்ளுணர்வும் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டால் மட்டுமே கிடைப்பது…இதற்கு எந்த விலையும் கிடையாது. நிர்ணயம் செய்யவும் முடியாது.
தானே நிகழ்ந்து பெரிய அனுபவப் பாடம் கற்றுத் தந்து விடும். இந்த அனுபவ பாடத்திற்கு நான் தரப்போகும் விலை தான் என்ன…? எப்படி…யார் மூலம் கேட்டுப் பெறுவது..எல்லாம் தற்காலிகம் தான்..ஆனாலும் அதன் தாக்கம் இதயத்தின் இறுதியை தளராமல் கெட்டியாக பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. சின்ன அலட்சியம் தரும் பெரிய அனுபவம் இது தான். இப்படி ஒரு நிகழ்ச்சி….எதிர்பாராமல் ஏற்பட்டால் தான் உண்டு. தாமே உண்டுபன்னிக்க முடியாது.
கையில் வளையல் ராஜத்தைப் பார்த்து…நான் இருக்கேன்…கவலைப் படாதேன்னு சொல்வது போலிருந்தது…..ஆமா நீ..இருக்கே…எந்தக் கடையில் எடுத்துப்பா? அடையாள அட்டை இருந்தால் தான் அடமானம் கூட வைக்க முடியும்..என்று வளையலின் தலையை ஒரே தட்டு தட்டி வைத்தாள்.
அந்த வழியாக ஒரு ஆட்டோ காலியாக வந்து கொண்டிருந்தது…நிறுத்தி …தம்பி…இதுதான் விஷயம்…
கொஞ்சம் உன்னிடம் கைபேசி இருந்தால் தாயேன்…ஒருத்தரிடம் பேச வேண்டும்…உனக்கு எல்லாத்துக்கும் சேர்த்து நான் பணத்தைக் கொடுத்துடறேன்….ப்ளீஸ் பா…என்றதும்…
பாலன்சே இல்லீங்க ரொம்ப சாரி என்று சொல்லி..ராஜத்தை ஏற இறங்கப் பார்த்துவிட்டு…. விட்டால் போதும்னு சொல்லிக் கொள்ளாமல் பறந்து விட்டான்.
பின்ன…என்னிடம் காசே இல்லை….ன்னு சொன்னால் வேற என்ன செய்வானாம்? கலி காலம்…கலி காலம்…
இப்படி இரண்டு ஆட்டோ போனதும்…மூன்றாவதாக ஒரு ஆட்டோக்காரரிடமும் அதே பல்லவியைப் பாவமாக,,, சொன்னதும்….சரிம்மா…நீங்கள் வண்டியில் ஏறுங்கள்…டூப்ளிகேட்டு சாவி செய்யிரவன்ட்ட கூட்டிட்டு போறேன்….எல்லாம் முடிச்சு எனக்கு பணத்தைக் கொடுங்க போதும்…ன்னு சொன்னதும்…அந்த ஆட்டோக்காரர் தெய்வமாகத் தெரிந்தார்.
அவர் சொல்லி அழைத்துப் போன இடத்தில் அந்த சாவி நகல் செய்பவன் இன்று வரவில்லையாம். இவனை விட்டால் வேறு யாரும் இந்த ஊரில் கிடையாதாம்….இந்த செய்தியை கேட்டதும்…கிடைத்த கொஞ்ச நம்பிக்கையும் காற்றுப் போன பலூனாக அமுங்கியது.
ஐயா…உங்ககிட்ட கைபேசி இருந்தாக் கொஞ்சம் தரீங்களா? ஒரு நம்பருக்குப் பேசிக்கறேன்….சென்னையில் என் தம்பிகிட்ட..ஐடியா கேட்கலாமே…அதுக்குத் தான் என்றதும்…அவர் கொஞ்சமும் தயங்காமல்….
இந்தாங்கம்மா…..எவ்வளவு பாலன்சு இருக்குன்னு தெரியாது……அவர் கைபேசியைக் கொடுத்ததும்….கையில்… ஏதோ…பிரம்மாஸ்த்திரம் கிடைத்த மாதிரி ஒரு ஏகாந்தம்…!
வேக வேகமாக தம்பி ராமனின் எண்ணை தட்டி..நான் தான் ராஜி பேசறேன்…இந்த நம்பருக்கு கொஞ்சம் சீக்கிரமா கூப்பிடேன்…….அவசரம்…என்று அவசரமாக வைத்து விட்டு காத்திருந்தாள் ராஜம்.
அடுத்த நொடியில்….கைபேசி…”ஜில்லா விட்டு ஜில்லா வந்த கதையை நீயும் கேளைய்யா” என்று அழுதது….
அவளை அடக்கிவிட்டு….ஹலோ நான் தான் ராஜி பேசறேன்…என்று எல்லா விஷயத்தையும் மூச்சு விடாமல்
சொல்லிவிட்டு….இப்போ எப்படி பண்றது?…ஏதாவது வழி ஒண்ணு சொல்லேன் ராம்……ரொம்ப நேரமா நடுத்தெருவில் நிற்கிறேன் என்று சொல்லும்போதே கண்கள் தளும்பி நின்றது.
“நோ ராஜம்…நீ அழக் கூடாது”….எவ்வளவோ பண்ணிட்ட இதை சமாளிக்க மாட்டியா” என்று தைரியம் துணைக்கு நின்றது.
ராமன்…ஆதரவாக தீர்வு சொல்லுவான் என்ற என் நம்பிக்கையில் ஒரே அடி…..! போயும் போயும் இவனிடமாக் கேட்டோம் என்றிருந்தது ராஜத்திற்கு.ராமனுக்கு எப்பவுமே தான் தான் பெரிய இதுன்னு ஒரு நினைப்பு.எல்லாரையும் மட்டம் தட்டி தட்டியே பழக்கப் பட்ட குணம்…..இப்படி அவசரதில் கூட உதவாமல்,கொஞ்சம் கூட ஆறுதலாப் பேசாமல் எப்படி இவனால் அதே போல் கர்வமோடு இருக்க முடியறது…? இந்த எண்ணமே அவளுக்கு ராமனின் மேல் அதிக ஆத்திரத்தைத் தந்தது.
” நீ எல்லாம் வண்டி ஓட்டி…..வாழ்ந்தே…! உனக்குன்னு ஒரு பொறுப்போ… ஜாக்கிரதை உணர்வோ இருந்தால் இப்படி நடக்குமா…அதான் சொல்றேன்…உன்னைப் போல எந்தப் பொண்ணும் இருக்க மாட்டா..இப்படி எல்லாத்தையும் உள்ள போட்டுட்டு நட்ட நடுவுலே நிக்கறேன்னு சொல்றவ…அப்படி என்னத்தைப் பாராக்கு பார்த்துண்டு..கனவுலகத்துல சஞ்சரிச்சுண்டு இருந்தே…இந்த லக்ஷணத்தில் அத்திம்பேர் வேற ஊருல இல்லையா…நல்லாதாப் போச்சுப் போ..போ…அதெப்படி ராஜி உனக்குன்னு எழுதி வெச்சா மாதிரியே இப்படில்லாம் நடக்குது…?
போன வருஷம் கூட இப்படித் தான்…இதே மாதிரி போஸ்ட் ஆபீஸ் போயிட்டு வரும்போது …சாவியை வண்டியிலேயே வெச்சுட்டு உள்ளே போய்ட்டு திரும்பறதுக்குள்ளே எவனோ வண்டியை ஓட்டிண்டு போயிட்டான்னு சொன்ன…அது வண்டியோட போயே போச்சு…இப்ப இப்படி…உனக்கும் வண்டிக்கும் ராசியே..இல்லை …ன்னு நினைக்கிறேன்…சரி….இப்போ இங்கேர்ந்துண்டு நான் என்ன பண்ணமுடியும்னு போன் பண்ற எனக்கு…பேசாமல் யாராவது மெக்கானிக்கை கூப்பிட்டு பூட்டை உடைத்துத் திறக்கணும்னு அறிவு இல்லையா? சரி…போனை வைக்கிறேன் …எனக்கு வேற எங்கிருந்தோ….வேற போன்கால் வராமாதிரி இருக்கு….நீயே பார்த்து என்னவோ பண்ணிக்கோ” என்று சொல்லி முடித்தான்.
போயும் போயும் ஏண்டா….ராமனுக்கு போன் செய்தோம் என்றிருந்தது ராஜதிற்கு.இந்த ஆதிக்க நாயகனின் கொட்டத்தை அடக்க அவனுக்கும் இது போன்ற ஒரு அனுபவம் கிடைக்காதோ?…அந்த இக்கட்டான நேரத்திலும் மனசு வஞ்சம் நினைத்தது.
ஆட்டோகாரரிடம்…. கைபேசியை கொடுத்துவிட்டு…யாராவது ஒரு ஸ்கூட்டர் மெக்கானிக்கை கூட்டிட்டு வந்து பூட்டை உடைச்சிடலாமா? அதான் ஒரே வழி என்று கேட்க…!
ஆட்டோக்காரர்….நிரம்ப மனிதாபிமானத்தோடு…..நீங்க சொல்றது சரிதான்னு தோணுதும்மா …பார்க்கலாம்..நீங்க வண்டில ஏறுங்க….யாராவது மெக்கானிக்கை கூட்டிட்டு வரலாம்னு சொல்லி ஆட்டோவைக் கிளப்பினார்.அப்படியே….உங்க தம்பி என்ன சொன்னாரம்மா என்று கேட்க….ராஜத்துக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பெருமையா….சொல்லிக்கொல்லும்படியாகவா தம்பி சொன்னான்.. இருந்தாலும்…..தம்பியை விட்டுக் கொடுக்க மனசு வரவில்லை..”யாராவது மெக்கானிக்கை கூப்பிட்டு பூட்டை உடைத்துத் திற..”ன்னு தான் அவரும் சொன்னார் என்று சொல்லி அமைதியானாள்.
கூடப் பிறந்தால் தான் உடன்பிறப்பா…? ஆபத்துக்கு உதவுபவர்கள் கூட உடன்பிறந்தவர்கள் தான்…நல்ல வேளையாக கொஞ்சம் புண்ணியம் பண்ணியிருக்கேன்..இல்லாட்டா இப்படி ஒருத்தர் சமயத்தில் வந்து உதவி செய்வாரா…? பணமும் பதவியும் எல்லாருக்கும் எல்லா நேரமும் விவேகத்தை கொடுப்பதில்லை என்று உணர்ந்தாள் ராஜம்.
தானே … விரும்பி ஏற்காத இந்த அனுபவம் தானாக முடிவுக்கு வந்து டிக்கியைத் திறந்து கைப்பையைப் எடுத்ததும் தான் ராஜதிற்கு போன உயிர் வந்தது. பணத்தின் அருமை…சாவியின் பெருமை…, செய்யாமல் செய்த வழிப்போக்கர் உதவி எல்லாம் புரிந்தன…ஒரு வழியாக எல்லாம் முடிந்து வீட்டையும் திறந்து வீட்டுக்குள் நுழைவதற்கு மேலும் ஒரு மணி நேரம் ஆனது.
ஆட்டோக்காரருக்கு நன்றி சொல்லி அவர் கேட்டதுக்கும் மேலே பணத்தைக் கொடுத்து தனது நன்றியை ஈடு செய்துவிட்டு நிம்மதியானாள் ராஜம்.
முடியாதது… என்று எதுவும் இல்லை..ஆனால் என்ன இதற்காக மெனக்கிட்டது…தான் அதிகம்….இந்த வெய்யிலில் இது தேவையா?….இதைப் பெருமையா…மகன் மனோவிடமோ….இவரிடமோ சொல்லிக்க முடியுமா…? சொன்னால் கேலி தான் செய்வார்கள்…உடன் பிறந்தவனே கேலி பண்ணுகிறான்…..அதில் தான் பட்ட எந்த உணர்வும் அவர்களுக்குப் புரியாது.
சில அனுபவங்களை… உணர்ந்து தான் பெற முடியும். என்ன இருந்தாலும் தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவ உணர்வை அவர்களுக்கும் சொல்லி வைக்க வேண்டும்…நாளைப் பின்ன அவர்களும் இதைப் போல என்றும் அவதிப் படக் கூடாதே.எனக்குத் தான் இன்னைக்குப் பொழுது இப்படி நடுத்தெருவில்…வேகாத வெய்யிலில் வடகம் மாதிரி காயணும்னு எழுதி வெச்சுருக்கு அதை மாற்ற யாரால் முடியும்ன்னு …எண்ணிக் கொண்டே அலுப்புடன் பொத்தென படுக்கையில் விழுந்தாள் ராஜம்.அந்த நிமிடம் நிம்மதியில் தன வீடு அழகாபுரி அரண்மனை போல் எண்ணத்தில் பிரம்மாண்டமாக இருந்தது.
ராஜியிடம்…இன்னும் கொஞ்சம் ஆதரவா பேசியிருக்கலாமோ…அதற்குள் இந்த போன்..வந்து கெடுத்தது எப்போ என்ன பண்றாளோ….என்று நினைத்தபடியே ராமன்….வந்த அழைப்பை ஏற்க….அங்கே….ரகுவின் அவசர குரல்….”டேய்…..மச்சி…ராம்..இப்ப நீ எங்கே இருக்கே? இங்க…நம்ப பிரகாஷுக்கு திடிர்னு நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்குன்னு சொல்றாண்டா… வாடா….உடனே உன் காரை எடு….சீக்கிரம்….வந்துடு…அப்போலோ ஹாஸ்பிடலுக்கு எடுத்துட்டு போகணும்….அவனுக்கு காஷ்லெஸ் மெடிக்கல் கார்ட் இருக்காம்….நாங்க எல்லாம் எடுத்துக்கிட்டு வாசலுக்கு வந்துடறோம்….நீ .பார்க்கிங் லேர்ந்து காரை எடுத்துட்டு வாசலுக்கு வந்துடு….என்ன….சீக்கிரம் வா…சரியா… போ…சீக்கிரம்…..சீக்கிரம்…போ..!
என்னடா….. சொல்றே நீ..! அதிர்ச்சியோடு கேட்ட ராமன்…..நம்ம பிரகாஷுக்கா..மை காட்…ஒகே…நான் என் காரை எடுத்துட்டு ரெடியா நிக்கறேன்….நீங்க அங்க வந்துடுங்க .அடப் பாவமே..அவனுக்கு ஏற்கனவே போலியோ தாக்கி ரெண்டு காலிலும் வலு இல்லை…..சரி துணைக்கு நம்ப பியூன் ராமதுரையைக் கூட கூப்பிட்டுக்கோ அவனோட வீல்ச்சாரை ..ராமதுரையை விட்டு எடுத்துட்டு வர சொல்லு..நீங்க ரெண்டு பெரும் பிரகாஷை கூட்டிட்டு வாசலுக்கு வாங்க.நானும் நீ சொன்னபடியே வரேன்….அடுத்த சில நிமிடங்களில் …..கட்டளையிட்டபடியே…கார் கதவையும் டிக்கியையும் திறந்து வைத்துக் கொண்டு ஆபீசின் வாசலருகில் பதற்றத்தோடு காத்திருந்தான்…. ராமன்.
சொன்னபடியே…வியர்த்துக் கொட்டிய பிரகாஷை அப்படியே அலாக்காக தூக்கிக் கொண்டு வந்த ரகு பின் சீட்டில் படுக்க வைத்து தானும் கைத்தாங்கலாக அவன் அருகில் அமர…..அவனது வீல்சாரை டிக்கியில் தள்ளி அழுத்தி சார்த்திவிட்டு….முன்சீட்டில் ராமதுரை வந்து அமர்ந்து கொள்ள வண்டி விர்ரென்று கிளம்பியது…அப்பல்லோ மருத்துவமனையை நோக்கி.
காருக்குள் அழுத்தமான அமைதி.பரவி இருந்தது. எப்படித் தான் அவ்வளவு விரைவில் வண்டியை ஒட்டிக் கொண்டு வந்தானோ ராமன்…அடுத்த சில நிமிஷங்களில் ஒவ்வொருவராக வண்டியை விட்டு இறங்கி…கதவைச் அறைந்து… அறைந்து சார்த்தி…..டிக்கியில் இருந்து வீல்சாரை எடுத்து கீழே வைத்து…டேய் பிரகாஷை எடுத்துட்டு நீயும், ராமதுரையும் முதலில் உள்ள போய் ஆக வேண்டியதைப் பாரு…மெடிக்கல் கார்டுன்னு முன்னாடியே சொல்லிடு…..நான் காரைப் பார்க் பண்ணிட்டு பின்னாடியே வந்துடறேன்…சொல்லி விட்டுக் கையைப் பார்த்தான்…நெற்றியில் பொறி தட்டியது…வீல்சாரை எடுக்கும்போது ஏதோ டிக்கிக்குள் விழுந்த உணர்வு…அதற்குள் மொபைல் அடிக்கவும்….அதை எடுக்கும் மும்முரத்தில் கார் டிக்கியையும் அனிச்சையாக சார்த்திவிட்டு…..! அடச்சே…அப்ப…டிக்கிக்குள்ளே….கார்சாவி….! சறுக்கீடுச்சியா …! சறுக்கீடுச்சியா …! ராமன் இதயத் துடிப்பு நில விநாடிகள் நின்றது .
கைபேசி…மணி .மறுபடி அழைக்க….எதிர் முனையில்…நண்பன் ரகு தான்..!
“என்னடா பண்ற…இன்னுமா…காரைப் பார்க் பண்ற” இங்க பிரகாஷுக்கு முதலுதவி ஆரம்பிச்சாச்சு….
டாக்டர் பயப்படவேண்டாம்…இது வெறும்…வாயு தொந்தரவு மாதிரி தான் தெரியுதுன்னு சொல்றார்…நீ வா..முதல்ல…அவன உயிர் மூச்சு எல்லாம் போய் வருதுடா ! வந்து தொலை உடனே ! எனக்கு தலையே சுத்துது…!
டாக்டர் சொல்றது எனக்குப் புரியலை. எனக்கு ரொம்ப பயம்மா இருக்குடா….இது வெறும்…வாயு தொந்தரவு மாதிரி தெரியலை… எனக்குத் தலை சுத்துது ! நீ வா..முதல்ல…!
இப்போது இதயம் நிற்பது யாருக்கு… பிரகாஷுக்கா…..எனக்கா ? “என் தலையும் சுத்துதுன்னு” சொல்ல ராமன் வாயைத் திறந்தான். ஆனால் சொல்ல வில்லை கர்வக் காரன்.
டேய்…டேய்..ரகு….இங்க…. காரோட சாவி டிக்கிக்குள்ள மாட்டிக்கிச்சு…. டா…. ரகு…….காரைத் திறக்க முடியலை…..கார் வேற நட்ட நடுவுலே..நிக்குது….ரொம்ப டென்ஷன்ல இருக்கேன்டா…..அதனால….நீ…பிரகாஷைப் பார்த்துக்கோடா ப்ளீஸ்…..! ராமதுரை அங்க தானே இருக்கான்..? அப்பப்போ எனக்கு போன் பண்ணுடா..என்னோட இந்தக் கார் பிரச்சனையை முடிச்சுட்டு வரேன்…! நாமெல்லாரும் இப்போ முடமாய்ப் போனோம்டா !
சறுக்கீடுச்சியா …! சறுக்கீடுச்சியா …! வடிவேலு பாணியில் ……!ரகு…..சூழ்நிலையையும் மறந்து ராமனை கேலி செய்ய…!
போடா….இவனே….! நான் எவ்ளோ சீரியஸா….டென்சன்ல இருக்கேன்….இந்த நேரத்துல போயி நீயும் உன் ஜோக்கும்…!எரியற நெருப்பில பெட்ரோல் விட்டாப்போல…..எரிச்சலோடு கைபேசியை அணைத்தான்…ராமன்.
எப்பவுமே…தலை வலியும்..திருகு வலியும் தனக்குன்னு வந்தால் தான் தெரியும்,,,ன்னு சும்மாவா சொல்லியிருக்கா.
அதற்குள்…. ஹாஸ்பிடல் வாசலில் நட்ட நடுவில் இடத்தை அடைத்துக் கொண்டு நிற்கும் ராமனின் காரை முதலில் அங்கிருந்து நகர்த்தச் சொல்லி சைகை காண்பித்து விசில் அடித்தபடியே அங்குள்ள செக்யூரிட்டி காவலன் ஓடி வர…….
காவலன் தன்னை நோக்கி வருவதை கண்ட ராமன் செய்வதறியாது ஆடித் தான் போனான்….இப்போ என்ன செய்வது? அடுத்தது என்ன? ராமனுக்கு கார்ச்சாவி பிரச்சனை… விஸ்வரூபமாகத் தெரிய……ரகுவாவது…பிரகாஷாவது…! இப்போ… யாரும்… அவன் கண்ணுக்குத் தெரியப்போவதில்லை…..சிறிது நேரத்திற்கு முன்னால் இருந்த பிரகாஷால் ஏற்பட்டப் பெரிய கோடு…தனது கார்ச்சாவி இழுத்த இழுப்பில்…. சின்னக் கோடானது..!
முப்பது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு போகாமல்…இங்கிருந்த படியே எப்படி சாவியை எடுத்து காரை ஸ்டார்ட் பண்ணுவது என்ற யோசைனையில் ஆழ்ந்தான் ரா..ஜா…ராமன். மனதுக்குள் ராஜி வந்து “ஆணுக்கும் அடி சறுக்கும்” என்று சிரித்தபடியே சொல்வது போலிருந்தது. பிறர்க்கின்னா முற்பகல் நினைப்பின் தமக்கின்னா பிற்பகல் தானே வருமா ?
——————————————————————————
- முள்வெளி- அத்தியாயம் -4
- நான்காவது தூணும் நாதியற்ற வெகுஜனங்களும்
- அது, இது, உது –எது? – இலங்கை யாழ்ப்பாண வழக்கில் உகரச்சுட்டின் பயன்பாடு
- சுனாமி யில் – கடைசி காட்சி.
- இதிலும்… நிஜங்கள்….!- குறுங்கவிதை
- ஆணுக்கும் அடி சறுக்கும்…!
- தி ஆர்ட்டிஸ்ட் -2012 (ஆஸ்கார் அவார்டு படம்)
- கருணாகரன் கவிதைகள்
- சம்பத் நந்தியின் “ ரகளை “
- குகை மனிதனும் கோடி ரூபாயும் – தமிழில் நூல் வெளியீடு
- பழந்தமிழரின் நிலவியல் பாகுபாடு
- ஈக்கள் மொய்க்கும்
- தங்கம் – 2 – உலகில் தங்க நிலவரம்
- வரங்கள்
- சட்டென தாழும் வலி
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 8
- ‘பிரளயகாலம்’
- நூல் அறிமுகம் :மு.வ.வின் :கி.பி.2000
- பஞ்சதந்திரம் தொடர் 39 – நரியும் காளையும்
- காலப் பயணம்
- மலைபேச்சு- செஞ்சி சொல்லும் கதை-21
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 19
- பின்னூட்டம் – ஒரு பார்வை
- நீர் சொட்டும் கவிதை
- கவிதை!
- இறந்தும் கற்பித்தாள்
- பி ஆர் பந்துலுவின் ‘ கர்ணன் ‘ ( டிஜிட்டல் )
- பண்டி சரோஜ்குமாரின் ‘ அஸ்தமனம் ‘
- நானும் ஷோபா சக்தியும்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தைந்து
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 15) எழில் இனப் பெருக்கம்
- தாகூரின் கீதப் பாமாலை – 8 இனிய அக்கினி உடல்
- “ பி சி று…”
- தீபாவளியும் கந்தசாமியும்
- புதுமனை
- அன்பெனும் தோணி
- என் சுற்றுப்பயணங்கள்
- சருகாய் இரு
- கவிதை
- வந்தவர்கள்
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 10
- இலக்கிய சிந்தனை ஆண்டு விழா 2012
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பரிதியின் தீப்புயல்கள் சூரியனில் பூகம்பத்தைத் தூண்டுகின்றன
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 56