தங்கம் – 2 – உலகில் தங்க நிலவரம்

This entry is part 13 of 44 in the series 15 ஏப்ரல் 2012

உலகிலேயே தங்கத்தை அதிகம் வாங்குவோர் யார் தெரியுமா?

இந்தியர்கள் தாம். 2010இல் ஒரு வருடத் தேவை 963 டன்னாக இருந்தது.

உலகிலேயே தங்கத்தை அதிகம் உற்பத்திச் செய்வோர் யார் தெரியுமா?

சீனர்கள். 2010இல் 340.88 டன்கள் உற்பத்தி. இரண்டாம் மூன்றாம் இடங்களில் அமெரிக்காவும், தென் ஆப்பிரிக்காவும் இருந்தன.

2010இன் மொத்த உற்பத்தி 4108 டன்கள்.

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இரு பெரும் நாடுகள் தாம் தங்கத்தின் முக்கியஸ்தர்கள் என்றால் மிகையாகாது.

அதனால் தங்கத்தில் விவரங்களைப் பற்றி இந்தியர்களாகிய நாம் அறிந்து கொள்வது நல்லது என்று எண்ணுகிறேன்.

முதலில் தங்கத்தின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? யார் நிர்ணயிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?

தங்கத்தைத் தரம் பார்த்து, உலகிற்குத் தரும் குழுமங்கள் 10 உள்ளன. தங்கச் சுரங்க நிறுவனத்தாரிடமிருந்து தங்கத்தை வாங்கி, அதற்கேற்ற விலையை நிர்ணயம் செய்வது இவர்கள் தாம். ஒரு நாளில் கொண்டு வரப்படும் தங்கத்தைப் பொறுத்தும், தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் போதும் விலை உயர்வு ஏற்படுகிறது. தங்கம் வாங்கும் அளவு குறையும் போது விலையும் குறைகிறது.

இதில் தங்கத்தைப் பொருளாக வாங்கி வைப்பது மட்டுமின்றி, பல நிறுவனங்கள் தங்கத்தை வாங்குவதாக பாவித்து, பணத்தை மட்டுமே கட்டுவார்கள். அப்படிப் பணத்தை மட்டுமே கட்டும் போது, தங்கத்தின் விலை உயரும் போது, தங்கத்தை விற்பதாகச் சொன்னால், அதில் லாபம் வரும். இப்படி வாங்கி விற்பதில் பலர் லாபம் பெறுகின்றனர். தங்கத்தை இப்படி வாங்கி விற்போர், செயற்கையாக தங்கத்தின் தேவையை அதிகரிக்கச் செய்வதாலும் கூட, தங்கத்தின் விலை எக்குத்தப்பாக உயருகிறது.

தங்கத்தின் வரவினை வைத்து விலையைக் கட்டுப்படுத்துவதில் முதன்மையான மன்றம் இங்கிலாந்தில் உள்ள இலண்டன் புல்லியன் சந்தை கூட்டமைப்பு ஆகும். தினம் இரு முறை இலண்டன் நேரத்தின் படி 10:30 மணிக்கும் 3:00 மணிக்கும் தங்கவிலை நிர்ணயிக்கப்படுகிறது. இங்கிலாந்து நாணயமான பவுண்டு, அமெரிக்க டாலர், ஐரோப்பியாவின் யூரோ நாணயங்களில் விலை குறிக்கப்படுகிறது. விலை ஒரு டிராய் அவுண்ஸ்; அளவுகோலில் குறிக்கப்படுகிறது. ஒரு டிராய் அவுண்ஸ்; – 31.1034768 கிராம் தங்கம்.

செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி 1919 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்தத் தங்க விலை நிர்ணயம், இன்று அதன் ஐந்து உறுப்பினர்களான நோவா ஸ்கோசியா – ஸ்கோசியா மொகாட்டா வங்கி, பர்கிலேஸ் வங்கி, டாயிச் வங்கி, அமெரிக்க எச்.எஸ்.பி.சி வங்கி, சொசயிட்டி ஜெனரெல்(Bank of Nova Scotia – Scotia Mocatta, Barclays Bank, Deutsche Bank, HSBC Bank of USA, Societe Generale) நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தார் ஒரு நாளில் இரு முறை 10:30க்கும் 3:00க்கும் 15 நிமிடங்களில் தங்களிடம் இருக்கும் தங்கத்தின் வாங்கும் விற்கும் அளவினைக் கொண்டு, விலையை நிர்ணயிப்பார்கள்.

உற்பத்தி மற்றும் தேவையை ஒட்டு மொத்தமாக கட்டுப்படுத்துவது இந்த நிறுவனம் தான். இதில் அங்கத்தினர்களான வங்கிகள் கூடி “இன்றைய தங்க விலை இது” என்று அறிவித்தால், உலகம் முழுவதும் அன்றைய விலையாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தாலோ, தங்கச் சுரங்கங்கில் உற்பத்திக் குறைந்தாலோ, கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலோ, தங்கத்தில் முதலீடு செய்வதும் அதன் தேவையும் அதிகரித்து விடும். உடன் அன்றைய தங்க விலையை, இந்நிறுவனம் அதிகரித்துவிடும்.

விலை நிர்ணயம் செய்வதில் அதிக நேரம் எடுத்துக் கொண்ட வருடம் 1987. கருப்புத் திங்கள் என்று சொல்லப்படும் 19 ஆம் தேதி ஆக்டோபர் அன்று இரண்டு மணி நேரமும் 15 நிமிடங்களும் எடுத்துக் கொள்ளப்பட்டது. அன்று ஒரே நாளில் அமெரிக்க பங்குச் சந்தை 23 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

ஒவ்வொரு நாட்டிலும் தங்க வருகையைக் கொண்டும், இலண்டன் விலையை அடிப்படையாகக் கொண்டும், உள் நாட்டு விலையைக் குறிப்பிடுவார்கள். இதர நுகர்வோர்கள் அந்த விலையில் தங்கத்தை வாங்கவும் விற்கவும் முற்படுவார்கள்.

உலகின் ஐந்து முக்கியத் தங்கச் சந்தைகள் நியூயார்க், இலண்டன், ஜூரிச், ஹாங்காங், சிட்னி. இந்தியாவில் தனியார் தங்க நுகர்வோர்களே அதிகம். மற்ற நாடுகளில் உள்ளது போன்ற சந்தை இந்தியாவில் கிடையாது.

ஹாங்காங் உலக வரைபடத்தின் மத்தியில் இருப்பதால், இலண்டன் சந்தை திறக்கும் போதும், அமெரிக்க சந்தை முடியும் போதும் விவரங்களை ஆசியச் சந்தைக்குத் தரும் வசதியான இடத்தில் இருக்கிறது.

மும்பை குழுமம் பலதரப்பட்ட வர்த்தகப் பொருள் பரிமாற்ற நிறுவனம் – மல்டி கமோடிட்டி எக்சேன்ச் (Multi Commodity Exchange) என்று அழைக்கப்படுகிறது. இது தங்கத்தைத் தவிரவும் இதர 40 பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்து தருகிறது. இந்தச் சந்தை தான், உலகத்தில் வெள்ளி விற்பதில் முதல் இடத்திலும், தங்கம் விற்பதில் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது.

இந்திய மாநில வங்கி, தேசிய விவசாயம் மற்றும் ஊராட்சி வங்கி, தேசிய பங்குச் சந்தை, கனரா வங்கி, பரோடா வங்கி, இந்திய வங்கி, எச்.டி.எப்.சி என்று இன்னும் பல நிறுவனங்கள் இதனுடன் கூட்டு வியாபாரம் செய்யும் நிறுவனங்கள்.

இன்றைய இந்த விலை நிர்ணயத்திற்கு மிகவும் உதவி செய்வது கணினியின் முன்னேற்றமே. தங்கம் வாங்குவதும் விற்பதும் உடனுக்குடன் கணினியில் பதிவு செய்யப்பட்டு விடுவதால் ஏற்ற இறக்கங்கள் உடனுக்குடன் நிகழ்கின்றன. நுகர்வோருக்கும் அதை எளிதில் கணினி மூலம் அறிந்து கொள்ளவும் முடிகிறது.

Series Navigationஈக்கள் மொய்க்கும்வரங்கள்
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *