கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11

This entry is part 24 of 44 in the series 22 ஏப்ரல் 2012

ஆன்டரூ நியுபெர்க்கும் மார்க் ராபர்ட் வால்ட்மானும் இணைந்து எழுதிய “நாம் நம்புகிற விஷயங்களை நாம் ஏன் நம்புகிறோம்?”நூலின் அடிப்படை கருத்துகளையும் ஆய்வுகளையும் நாம் சென்ற பதிவில் பார்த்தோம். இந்த புத்தகம் பற்றியும் பொதுவாக நியுபெர்க் முன்வைக்கும் ஆய்வையும் அதன் தர்க்கங்களையும் பற்றிய கேள்விகளையும் அதற்கு அவர் தரும் பதில்களையும் இங்கே பார்க்கலாம்.

கேள்வி : நாம் நம்புகிற விஷயங்களை நாம் ஏன் நம்புகிறோம்?

நம்பிக்கை நான்கு முக்கிய விஷயங்களைச் சார்ந்திருக்கிறது – புலனறிவு, உணர்சசிகள், அறிதல், சமூக இணக்க உறவுகள். இந்த நான்குமே ஒன்றுக்கொன்று மிகுந்த தொடர்புடையவை. மனித மூளையின் செயல்பாட்டுடன் இவை கலந்து நமக்கு நம்பிக்கை உருவாகக் காரணமாய் இருக்கின்றன. நாம் பிறந்தவுடனேயே நம்பிக்கையும் பிறந்து விடுகிறது. சில வழிகளில் நம்பிக்கை நமது மூளையில் முன்வடிவுடன் தான் நம் பிறப்பு சம்பவிக்கிறது. ஆனால் வாழ்நாள் முழுதும் நாம் கொள்ளும் எண்ணங்கள், சிந்தனைகள், அன்பவங்கள் இணைந்து நம் நம்பிக்கைகளை செதுக்குகின்றன. உலகம் எப்படி இயங்குகிறது என்று உணரும் நம்பிக்கையை வாழ்நாள் முழுதும் நாம் கொண்டிருக்கிறோம். உலகம் எப்படி இயங்குகிறது என்ற எதிர்பார்ப்பை நாம் நம்பிக்கையாக வடிவமைத்துக் கொள்கிறோம். அந்த நம்பிக்கை நாம் வாழ்வதற்குத் தேவைப் படுகிறது. நாம் பிறரிடம் இணக்கமாய் இருந்தால் அவர்களும் நம்முடன் இணக்கமாய் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையின் ஒரு வண்ணம் தான். வாழ்க்கையின் நோக்கம் மற்றும் அர்த்தம் பற்றியும் மடம் பற்றியும், பிரபஞ்சத்தின் சிக்கலான வடிவமைப்புப் பற்றியும் நாம் நம்பிக்கை கொள்ளக் கூடும். நமப்து நம்பிக்கைகள் நம் வாழ்வின் ஆதார சுருதி என்பதால் அந்த நம்பிக்கைகளை மிக வலுவாக நாம் பற்றிக் கொண்டிருக்கிறோம். இந்த நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளும், உண்மைகளும் தெரிய வரும்போது கூட நாம் நமது நம்பிக்கைகளை விட்டுவிடத்தயாரில்லை. ஆனால் , நாம் புதிய கருத்துகளையும் , மற்றவர்களின் நம்பிக்கைகளையும் திறந்த மனதுடன் அணுகினால் மூளைக்கு தன் நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ளவும் தெரியும்.


ஆக்கபூர்வமான நம்பிக்கைகள், அழிவு பூர்வமான நம்பிக்கைகள் என்று பிரிவுகள் உண்டா?

நம் மனதின் மீதும், உடலின் மீதும் நம்பிக்கைகள் பல வேறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்த வல்லவை. நம்மை நம் உலகத்தோடு ஒட்ட ஒழுக உதவும் , நம்மைப் பற்றி ஆரோக்கியமான, நேர்மறைப் பார்வையை ஏற்படுத்தும் நம்பிக்கைகளை ஆக்க பூர்வமான நம்பிக்கைகள் எனலாம். நம்மில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நம்பிக்கைகள், மற்றவர் மீது வன்முறை உணர்ச்சிகளைக் கிளறும் நம்பிக்கைகள், நம் உடல் நலத்தையும், மனநலத்தையும் பாதிக்கிற நம்பிக்கைகளை அழிவு பூர்வமான நம்பிக்கைகள் எனலாம். ஒரு நம்பிக்கை ஆக்க பூர்வமானதாக ஆவதும், அழிவு பூர்வமானதாக ஆவதும் அந்த நம்பிக்கை மற்ற நம்பிக்கைகளை முழுக்க விலக்கி வைக்கிற நம்பிக்கையா என்பதைப் பொறுத்தும் அமையும், அந்த நம்பிக்கை எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதைப் பொறுத்தும் உள்ளது. எல்லா நம்பிக்கைகளுக்கும் ஒரு எல்லை உண்டு. ஏனென்றால் மூளையின் செயல் பாட்டிற்கு ஒர் எல்லை உண்டு. ஆக்க பூர்வமான நம்பிக்கை என்பது மற்றவர்களின் மீது – மற்றவர்களின் நம்பிக்கைகள் மீது – பரிவிரக்கம் கொள்வதாக அமையும். ஏனென்றால் எல்லா நம்பிக்கைகளுமே எல்லைக்குட்பட்டவை என்பதால்.

கடவுள் நம் மூளையில் தான் இருக்கிறார் என்று சொல்லலாமா?

நம் ஆய்வின் படி கடவுளை உணர்தல், கடவுளைப் பற்றிய கேள்விகளை எழுப்புதல், கடவுளைப் பற்றிய முடிவுகளை உருவாக்கிக் கொள்ளுதல் எல்லாமே மூளையின் வழியே தான் நிகழ்கிறது. ஆனால் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு மூளை அறிவியல் ஆய்வு பதில் தராது. ஒரு நபர் ஒரு ஓவியத்தைப் பார்க்கும்போது மூளையின் எந்தப் பகுதி என்ன விதமாய்த் தூண்டப் படுகிறது என்று ஆய்வு செய்ய முடியும். ஆனால் ஓவியம் அவன் பார்க்கும் இடத்தில் இருக்கிறதா இல்லையா என்று அறிவியல் விடை அளிக்காது. ஓவியத்தை அவன் மனதளவில் உருவாக்கிக் கொள்கிறானா என்ற கேள்விக்கும் அறிவியல் விடை அளிக்க இயலாது. உண்மையைப் பற்றி உணர்வை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் உருவாக்கிக் கொள்கிறோம். எது உண்மை என்றறிவது சிக்கலான விஷயம்.

மதம் பற்றியும், மதம் சார்ந்திருப்பவர்கள் அடையும் உடல் நலப் பயன்கள் பற்றியும் உங்கள் ஆய்வு பேசுகிறதில்லையா?

மதத்திற்கும் உடல் நலத்திற்கும் இருக்கும் உறவு பற்றி எம் ஆய்வுகள் பேசுகின்றன. தியானம், பிரார்த்தனை போன்றவற்றின் போதும், சில சமயச் சடங்குகளின் போதும் மூளை எப்படி வேலை செய்கிறது என்று புரிந்து கொள்ள முயல்கிறோம். தியானம் செய்பவர்களின் மூளையை ஆய்வு செய்து, அவர்களின் உடல் நலம் அடையும் பெரும் மாற்றங்கள் – ரத்த அழுத்தம் குறைவு, இருதயத் துடிப்புகள் குறைவது, படபடப்பு குறைதல், மன அழுத்தம் குறைவது – குறித்து அறிகிறோம்.

“கடவுள் துகள்” அல்லது “கடவுள் பதிவு” இருப்பதாய் சொல்லப் படுகிறதே அதை ஒப்புக் கொள்கிறீர்களா?

சமய அனுபவங்களும், ஆன்மிக அனுபவங்களும் மிக சிக்கலானவை. உணர்ச்சிகள், எண்ணங்கள், உணர்வலைகள், நடத்தைகள் சார்ந்தவை. மூளையின் பல பகுதிகள் இவற்றில் பங்கேற்கின்றன. ஒரு தனிநபரின் தனித்த அனுபவங்களைக்ச் சார்ந்து மூளையின் பல பகுதிகள் தூண்டப்படலாம். தியானத்தில் ஈடுபடுவோரின் மூளைச் செயல்பாடும், மரணத்தின் விளிம்பில் உள்ளவர்களின் மூளைச் செயல்பாடும், வேறு வேறு வகையிலானவை. இந்தச் சான்றுகளைக் கொண்டு பார்க்கையில் ஒரு “கடவுள் பதிவு” அல்ல பல கடவுளர்களின் பதிவு, மூளையின் பல பகுதிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டு உருவாக்கம் கொள்கிறது என்று சொல்லலாம்.

டெம்போரல் மூளை பகுதிகள் சமய உணர்வெழுச்சிகளுக்குக் காரணம் என்று சொல்லப் படுவது பற்றி உங்கள் கருத்து என்ன?

டெம்போரல் மூளை பகுதிகள் சமய உணர்வெழுச்சிகளுக்கு மிக முக்கிய காரணிகள் என்பதை மறுக்க இயலாது. ஆழ்மன அனுபவங்கள், நினைவுகள், தியானம், பரவசக் காட்சிகள் இவற்றிற்கு மூளையின் amygdala and ஹிப்போகாம்புஸ் பகுதிகள் காரணம் என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. டெம்போரல் பகுதிகள் மூளையின் மற்ற பல பகுதிகளுடன் இயைந்து சமய எழுச்சி உணர்வுகளுக்குக் காரணம் ஆகின்றன.

சமய அனுபவங்களுக்கும் இரட்டை மனநிலை, டெம்போரல் பகுதி வலிப்பு நோய் போன்றவற்றிற்கும் தொடர்பு உள்ளது என்ற கருத்து உங்களுக்கு உடன்பாடானதா?

ஆய்வுகள் பலவும் சமய அனுபவங்களுக்க்கும் மூளைக் கோளாறுக்கும் உள்ள தொடர்பை உறுதி செய்தது உண்மை தான் என்றாலும், இந்த தொடர்பு மட்டுமே ஒற்றை பதிலாக இருக்க முடியாது. முதலாவதாக மூளைக் கோளாறு உள்ள அனைவருமே ஆன்மிக அனுபவங்களைக் கொள்வதில்லை. டெம்போரல் பகுதி வலிப்பு உள்ள சிலர் தான் அசாதாரண அனுபவங்களைக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாவதாக இப்படிப் பட்ட அனுபவங்களை ஒரே ஒரு முறை பெற்று, பிறகு எப்போதுமே இப்படிப் பட்ட அனுபவங்களைப் பெறாதவர்களும் உண்டு. ஆனால் மூளைக் கோளாறு உள்ளவர்களின் நோய வெளிப்பாடு திரும்பத் திரும்ப வருகிற ஒன்று. மூன்றாவதாக சமய அனுபவங்கள் கொண்டோரின் எண்ணிக்கை அதிகமாகத் தான் உள்ளது. இவர்கள் அனைவருக்குமே மூளைக் கோளாறு என்பது சாத்தியமல்ல. முடிவாக இந்த சமய அனுபவங்கள் அந்த நபரின் வாழ்க்கை, மரணம், உறவுகள் குறித்து மிக பார தூரமான மாற்றங்களை அந்த நபரிடம் ஏற்படுத்துவது பார்க்கிறோம். வெறும் மூளைக் கோளாறு உள்ளவர்களின் பார்வையில் இப்படிப்பட்ட மாறுதல்கள் ஏற்படுவதில்லை. இதை இப்படிச் சொல்லலாம். சாதாரண மனிதர்களுக்கு சாதாரண அல்லது அசாதாரண சமய அனுபவங்கள் நிகழலாம். அசாதாரண மனிதர்களுக்கும் இது நிகழலாம். இந்த இரு குழுவினருக்கும் இடையில் வேறுபாடு காண்பது தான், மூளை ஆய்வுகளின் மிகப் பெரிய சவால்.

நாம் கடவுளை நம்பியே ஆகுமாறு உருவாக்கப் பட்டிருக்கிறோமா?

இந்தக் கேள்வி, நம் ஆதியிலேயே கடவுளை நம்புமாறு, முன்னரே தீர்மானித்த வகையில் யாரோலோ படைக்கப் பட்ட முறையில் எழுகிறது. மூளை ஆய்வுகள் “அர்த்தமுள்ள படைப்பு” என்ற கேள்வியை எதிர்கொள்ள முடியாது. ஆனாலும், ஒன்று சொல்லலாம். மூளைக்கு – உயிரியல் ரீதியாகவும் , பரிணாம ரீதியாகவும் – இரண்டு முக்கிய பணிகள் உள்ளன. தன்னைப் பாதுகாத்துக் கொள்வது, தன்னை தாண்டிச் செல்வது. நம் வாழ்நாள் முழுக்கவும் மூளை இந்தப் பணிகளைச் செய்தவாறே உள்ளது. சமயமும் இதே செயலைத் தான் செய்கிறது, ஆக, மூளையின் பணிகளை முன்வைத்த பார்வையில் சமயம் ஒரு அருமையான கருவி. மூளை தன் பிரதான பணிகளைச் செய்ய சமயம் உதவுகிறது. மூளை தன் பணிகளைப் பொறுத்து அடிப்படையான மாறுதலினை அடையும்வரை, மதமும் கடவுளும் இருக்கவே செய்யும்.

ஏன் கடவுள் மறையமாட்டார்?

கடவுள் ஏன் மறைய மாட்டார் என்றால், நம் மூளை கடவுளை மரிக்க விடாது என்பது தான் காரணம். மூளையின் முன்சொன்ன இரண்டு செயல்களை – சுய பாதுகாப்பு, தன்னைத் தாண்டி வளர்தல் -இவற்றிற்கு உதவ கடவுளும், மதமும் மிக வலுவான ஆயுதங்கள். நம் மூளையின் செயல்பாடு அடிப்படையிலேயே மாறுதல் பெறாத வரையில் கடவுள் நெடுங்காலம் இருக்கத் தான் செய்வார்.

தியானம் பற்றிய ஆய்வுகளில் நீங்கள் மேற்கொண்ட மூளைச் சித்திரங்கள் பற்றி கூறுங்கள்.

எங்களின் ஆய்வுகளில் மூளைக்கு ரத்த ஓட்டம் பற்றிய ஆய்வு செய்கிறோம். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் மூளைச்செயல்பாட்டின் போக்கை நிர்ணயிக்கிறது. மூளைச் சித்திரங்கள் சமயச் செயல்பாட்டின் ஒவ்வொரு நிலையிலும் மூளையின் எந்தப் பகுதி தூண்டப் படுகிறது என்று ஆய்வு செய்ய முடியும். உதாரணமாக் திபெத்திய புத்த ரிஷிகள் தியானத்தின் போதும், அமைதியாய் இருக்கும்போதும் மூளைச் செயல்பாட்டைப் படம் பிடிக்க முடியும். தியானத்தின் போது மூளையின் முன்பகுதியில் அதிக தூண்டுதல் ஏற்படுகிறது, நம் உடலை வெளியிடத்தில் சமன் செய்யும் மூளைப்பகுதி மிகக் குறைந்த அளவில் செயல்படுகிறது, மூளையின் முன்பகுதியில் அதிக தூண்டுதல் த்யானத்தின் போது மட்டுமல்ல நாம் கவனம் செலுத்தி ஒரு செயலில் ஈடுபடும்போதும் தூண்டப் படுகிறது. தியானமே மனதை ஒருமுகப் படுத்தலில் ஈடுபடுத்துகிறது என்பதால் இது புரிந்து கொள்ளக் கூடியதே. வெளியுலகில் சமநிலை கொள்ளத் தேவையான பகுதிகள் செயல்படாததால் தன்னுணர்வினை இழப்பது நிகழ்கிறது, எதிர்காலத்தில் தியானத்தின் போது மூளையில் ஏற்படும் மாற்றங்கள் இன்னமும் ஆய்வுக்குள்ளாகும்.

தியானம் புரிபவர்களுக்கு நிரந்தர மாறுதல் ஏதும் நிகழ்வதுண்டா?

திபத்திய புத்த ரிஷிகளிடையே நுணுக்கமான வேறுபாடுகளைக் காணமுடிகிறது. இருபது வருடங்களாக அவர்கள் தியானத்தில் ஈடுபட்டிருப்பதால் அவர்களின் முளை மாறுதல் பெற்றதா அல்லது அந்த மாறுதல் அவர்களை தியானத்தில் தீவிர ஈடுபாடு கொள்ளச் செய்ததா என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வி.

உங்களுக்கு இந்தத் துறையில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?
இள வயதிலிருந்தே நான் உண்மை,கடவுள் யதார்த்தம் குறித்து கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருப்பேன். நான் மருத்துவம் பயிலும் போது டாக்டர் யுஜின் தே அகில் ( Dr. Eugene d’Aquili, ) -உடன் பணி புரிகையில் அவரும் இந்தத் துறையில் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருடன் மனித மனத்தின் சிக்கலான செயல்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்யும் வைப்புக் கிடைத்தது. அவருடைய கோட்பாடுகள் உருக்கொண்டு இருந்தன. அவருடைய அக்கறைகளும், என் மூளை ஆய்வு முடிவுகளும் ஒன்றிணைந்து ஒரு புதிய திசையில் மூளைக்கும் மதத்திற்குமான தொடர்பை , மூளைச்சித்திரங்கள் வழியாக சென்றடைய உதவியது.

நீங்கள் சமய நம்பிக்கை உள்ளவரா? ஆன்மிக ஈடுபாடு உள்ளவரா?

மற்ற மனிதர்களைப் போலவே பல ஆழமான கேள்விகளுக்கு நான் விடைகளைத் தேடி வந்திருக்கிறேன். மேனாட்டு மரபுகளின் அடிப்படையில் நான் விடைகளைத் தேடினேன். ஆனால் காலப் போக்கில், கீழ்நாட்டு மரபுகளை ஒத்த தியான முறைகளை நோக்கி என் தேடல் பரிணாமம் பெற்றுள்ளது. என் அணுகுமுறை தியான வழி என்றாலும், குறிப்பிட்ட சமய வழிகளையோ தியான முறைகளையோ நான்தொடர்ந்து செயல்படுத்தவில்லை. என் ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்ல நான் பல மரபுகளையும், மார்க்கங்களையும் கற்றுக் கொள்ள நேர்ந்தது. என் அணுகுமுறையை செப்பம் செய்யத் தான் நான் இவற்றை மேற்கொண்டேன். இதுவும் ஓர் ஆன்மிகப் பயணம் என்றே நம்புகிறேன்.

 

Series Navigationஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரைசாதிகளின் அவசியம்
author

ஆர் கோபால்

Similar Posts

5 Comments

 1. Avatar
  பா. ரெங்கதுரை says:

  இத்தொடரின் இப்பகுதியும் சுவாரசியமாகவும் நுண்மையாகவும் அமைந்துள்ளது. கருணாநிதி, வீரமணி, கமலஹாசன் போன்ற உள்ளீடற்ற போலி நாத்திகர்கள் அவசியம் படிக்க வேண்டிய தொடர் இது.

 2. Avatar
  paandiyan says:

  பெரியார் கருணாநிதி வீரமணி கமல்ஹாசன் எல்லாம் போலி பகுத்தறிவு வியாபாரிகள் . எப்படி ஆண்மிகவாதிகளில் புல்லுரிவிகள் உண்டோ அதுமாத்ரி பகுத்தறிவு பேசி பேசி பணம் பண்ணும போலி கூட்டம் இது. இன்னமும் இவர்களை பகுத்தறிவுவாதிகள் என்று பேசி சிரிப்பு மூட்டாதீரகள்

 3. Avatar
  பவள சங்கரி. says:

  தியானம் புரிபவர்களுக்கு நிரந்தர மாறுதல் ஏற்படுவது, அவர்கள் அந்த தியானத்தை தொடரும் கால அளவைப் பொறுத்தது அல்லவோ.. திருமூலர் வரலாற்றில் 3000 ஆண்டுகள் வாழ்ந்ததாகவும், வருடம் முழுவதும் தியானத்தில் இருந்துவிட்டு கண் விழித்து ஒரு பாடல் மட்டும் பாடிவிட்டு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்து விடுவாராம்.. பல சித்தர்கள் இப்படி காற்றை மட்டும் உணவாகக் கொண்டு வாழ்ந்து, தியானம் செய்து வாழ்ந்துள்ளதற்கான ஆதாரமாக நம்முடைய பல தெய்வ நூல்கள் உள்ளதே..
  அருமையான பகிர்வு திரு கோபால். வாழ்த்துகள்.

  அன்புடன்
  பவள சங்கரி.

 4. Avatar
  dharumi says:

  திரு கோபாலன்
  மிக நல்ல கட்டுரை. பாராட்டுகள்.
  உங்களது இக்கட்டுரையைச் சிறிது சுருக்கி என் பதிவில் ஒரு கட்டுரையாகவும், முடிந்தால் பின்னால் கொண்டு வர நினைத்திருக்கும் நூலில் இதனைப் பயன்படுத்தவும் உங்கள் அனுமதி தேவை.
  தனி மெயில் முகவரி தந்தால் மேலும் தொடர்பு கொள்ள மிக வசதியாக இருக்கும். என் முகவரி: dharumi2@gmail.com

  அனுமதி பெற திண்ணையின் எடிட்டருக்கு இரு மெயில்கள் அனுப்பினேன். இதுவ்ரை பதில் இல்லை. நீங்கள் பதிலளித்தால் மிக்க மகிழ்ச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *