நிபந்தனை

This entry is part 12 of 44 in the series 22 ஏப்ரல் 2012

பொன் சுந்தரராசு, சிங்கப்பூர்

வானை முட்டிநின்றது ‘வெஸ்டின்’ கட்டடம். அறுபதாவது மாடியில் தன் அறைக் கதவைத் திறந்து கொண்டு நளினமாக நுழைந்து நாற்காலியில் அமர்ந்தாள் அஞ்சலி. ‘அஞ்சலி ச்சீவ் எக்சகுட்டிவ்’ பெயர்ப்பலகை கண்சிமிட்டி அவளை வரவேற்றது.
வானத்தின் நீலத்தை வாரிக் கொண்டிருந்த கண்ணாடிச் சன்னல்கள் குளுமையை வாரி இரைத்தன.
தொலைபேசியைக் கையில் எடுத்தாள்.
“பீட்டர் நீங்க வரலாம்..” என்று அழகான ஆங்கிலத்தில் அழைப்பு விடுத்தாள்.
அடுத்த நிமிடம் பீட்டர் அவள் முன்.
“குட்மார்னிங் மேடம்..”
பீட்டர் பிரியத்தோடு மூச்சை இழுத்து விட்டுக்கொண்டான் ஒரு முறை. அஞ்சலி வந்தால் அந்த அறை நறுமண நந்தவனமாகிவிடும்.

மேசைமேல் டைரியை வைத்து அன்றைக்குரிய பணிகளைத் தன் மேலாண்மை அதிகாரிடம் பணிவோடு எடுத்துரைத்தான் பீட்டர். எல்லாவற்றையும் கேட்டுவிட்டுப் பகல் உணவுக்கு முன் தான் கவனிக்க வேண்டிய முன்னுரிமை வேலைகளை மட்டும் அடிக்கோடிட்டாள்.
“நீங்கள் போகலாம்..”
“மேடம், இது யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?.”
புதிதாக மேசையில் இடம்பிடித்திருந்த புகைப்படத்தைச் சுட்டிக் கேட்டான்.
“ அம்மா, கடவுள், ஆன்மா எல்லாம் இவர்தான்.. இப்போது இல்லை..”
“சாரி மேடம்..”
பீட்டர் பவ்யமாக அவ்விடத்தை விட்டகன்றான்.

அவசரமாக வீட்டிற்குள் நுழைந்தாள் அஞ்சலி. வீட்டுக் கூடத்தில் முரளி தொலைக்காட்சியில் மூழ்கி இருந்தார்.

“அம்மா எங்கே?..”

தலையை உயர்த்திச் சமைலறைப் பக்கம் சைகை காட்டினார். மிகுந்த அவசரமாகச் சமையலறைக்குள் நுழைந்தாள் அஞ்சலி. அங்கு இரவு உணவு தயாரிக்கக் காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்த கமலம் அரவம் கேட்டுத் திரும்பினாள். வழக்கத்திற்கு மாறாக சீக்கிரம் தன் மகளை வீட்டில் பார்த்ததால் வியப்பால் அவள் புருவம் வளைந்தது.

“அம்மா!.. ” என்று கதறிக்கொண்டே கமலத்தில் காலடியில் சரிந்தாள் அஞ்சலி. புத்தகப் பை ஒரு மூலைக்கு எகிறி ஓடியது.

“என்ன இது?. எழுந்திரு அஞ்சலி. என்ன நடந்தது?..” குனிந்து தன் மகளைத் தூக்கி நிறுத்த முயன்றாள். அவளால் முடியவில்லை. அஞ்சலியின் அலறல் கேட்டுக் முரளியும் ஓடி வந்தார்.

“அம்மா!.. அம்மா!.. நான் தப்பு பண்ணிட்டேனம்மா..” அஞ்சலி இன்னும் கொஞ்சம் குரலை உயர்த்தி அழ ஆரம்பித்தாள்.

முரளியும் பதற்றத்தோடு ஓடி வந்தார்.

“என்ன?..”

“தெரியலங்க.. விவரத்தைச் சொல்லாம அழறா!..” கமலத்தின் குரலும் கரகரத்தது.

“அஞ்சலி அழாம நடந்ததைச் சொல்லும்மா..” முரளி பாசத்தோடு மகளின் தலையைக் கோதினார்.

அஞ்சலி ஓரளவு தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தாள். குனிந்த தலை நிமிராமலும் அம்மா, அப்பா முகத்தைப் பார்க்காமலும் கல்லூரியில் நடந்தைக் கூறினாள்.

“இன்னிக்குக் காலேஜ்ல வழக்கம்போல மருத்துவப் பரிசோதனை நடந்துச்சு. நர்ஸ் நான் கர்ப்பமா இருக்கிறதாச் சொல்லிட்டாங்க..” அழுகை தொடர்ந்தது.

“என்ன?..” தாயும் தந்தையும் ஒரு குரலில் அலறினர்.

“ஒரு தடவை இல்ல.. ரெண்டு தடவை சோதிச்சு உறுதிப் படுத்ததுனாங்க..”

“அது தொலையட்டும். இது எப்படி?..” முரளிதான் கேட்டார்.

கமலம் வாயடைத்து உட்கார்ந்திருந்தாள். காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்த கத்தியை எடுத்து அஞ்சலியைக் குத்திக் குதற அவளுடைய கைகள் பரபரத்தன.

“காலேஜூக்குப் போன புதுசில ராத்திரி எட்டு மணிக்குள்ள வீட்டுக் வந்திடுவே! இப்பவெல்லாம் ஒன்பது மணி, பத்து மணின்னு ரொம்ப லேட்டா வர்றியே?.. என்னடி நெனச்சிகிட்டு இருக்கிறே?..” பொறுமை இழந்து கமலம் கேட்டுவிட்டாள்.

“அம்மா, காலேஜ்னா அப்படித்தான். நெறைய செய்ய வேண்டி இருக்கும். குரூப் டிஸ்கஷன் முடிய லேட்டாயிடுது. என்ன பண்றது?. நான் இன்னும் சின்ன பிள்ளை இல்ல. நீ சதா கேள்வி மேல கேள்வி கேட்டு நச்சரிக்காதே!..” எரிச்சலோடு மகளின் பதில் வெளிப்பட்டது.

“அவ தோளுக்கு மேல வளர்ந்திட்டா. நீ இன்னும் கொழந்தைன்னே நெனச்சிகிட்டு இருக்கிறே! இந்தக் காலத்துப் பிள்ளை! கொஞ்சம் புரிஞ்சி நடந்துக்கோ..” பட்டும் படாமலும் முரளியின் ஆலோசனை வெளிப்பட்டது.

“அது எப்படிங்க முடியும்? ரூபினி யுனிவர்சிட்டி முடிக்கிறத்துக்குள்ள ஒருத்தனோடு ஓடிப் போயிட்டாளே, மறந்திட்டீங்களா? மூத்த மகள்னு தலையில வச்சுதான் கொண்டாடினோம். கடைசியில தலையில கல்லைத் தூக்கிப் போட்டாளே. இவளையும் அப்படி விட்டிட முடியுமா?”. கமலம் காரணம் கூறித் தன் செயலை நிலைநிறுத்தினாள்.

“செகண்டரி ஸ்கூல் எனக்குப் பிடிக்கலேம்மா. பையன்கள் எல்லாம் ஒரு மாதிரியா பார்க்கிறாங்க; பேசுறாங்க; சிரிக்கிறாங்க! பிரைமரி ஸ்கூல் பையன்கதான் நல்லவங்க. நீ ஆபிசில இருந்து வரும்போது என்னையும் கூட்டிகிட்டு வந்திடும்மா. எனக்குப் பஸ்ல வரப் பிடிக்கல. எம். ஆர்.டி ரொம்ப கூட்டமா இருக்கு..”

“ சரி ”

அன்று கமலம் சொன்ன சரி, அடுத்த நான்காண்டுகளும் தொடர்ந்தது. அஞ்சலி கல்லூரிக்குச் சென்ற பிறகும் அதைத் தொடரத்தான் கமலம் விரும்பினாள். அஞ்சலிதான் வேண்டாம் என்று நிராகரித்தாள்.

‘லிடோ’ திரையரங்கிலிருந்து திமுதிமுவென கூட்டம் வெளியேறியது. பகல் காட்சி அப்போதுதான் முடிவடைந்தது. ‘ஒளிவு மறைவு இல்லாத காதல்’ என்ற ஆங்கிலப்படம் ஆர்ப்பாட்டமான ஆதரவுடன் வெற்றிகரமாக உலக மக்களைக் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தது. சிங்கப்பூரிலும் மக்கள் ஆதரவு அலை.

அஞ்சலியும் தன் கல்லூரித் தோழிகள், தோழர்களோடு வெளியே வந்தாள். அவர்கள் திரையரங்கிற்குள் இருந்த ‘மெக்டோனல்’ விரைவு உணவகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்தைக் கழித்துவிட்டு மனமில்லாமல் வீட்டுக்குப் போகக் கிளம்பினர்.

“உன் அம்மாவோடு ஒட்டிக்கிட்டு இருந்தா, இப்படி ‘என்சாய்’ பண்ண முடியுமா?..” அவள் வகுப்புத் தோழி ரூபினி அஞ்சலியை இடித்தாள்.

“அவ்வளவு தைரியா உனக்கு? நீ என்னடி நெனச்சிகிட்டு இருக்கிறே?..” கமலம் தன் மகளை அடிக்க ஆவேசமாகக் கையை ஓங்கினாள். தாயின் கையை மறித்துத் தன் கையால் பலமாகப் பிடித்துக் கொண்டாள் அஞ்சலி.

“கை நீட்டுற வேலை மட்டும் வேண்டாம். மரியாதை கெட்டுப் போயிடும்..” அஞ்சலியின் கண்களில் தீப்பந்தங்கள்.

“என்ன நடக்குது இங்கே?..” முரளி கலவரத்தோடு ஓடி வந்தார்.

“நேத்து ராத்திரி வெளியே போனவ, இப்பதாங்க வந்திருக்கிறா?..”

“ஏம்மா இப்படி நடந்துக்கிறே?..”

“நான் அப்படித்தான் நடந்துக்குவேன். அநாவசியமாக என் விஷயத்தில தலையிடாதீங்க. நான் வீட்டுக்கு வரணுமா? வேண்டாமா?..”

வலுவாகப் பிடித்திருந்த தன் அம்மாவின் கையை உதறிவிட்டு ரஜினி நடைபோட்டுக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தினாள் அஞ்சலி.

கமலமும் முரளியும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

பிரமாண்டமான கே கே மருத்துவ மனையில் ‘கைனோகாலஜி’க்கு முன்னால் காத்திருக்கிறாள் கமலம். அருகில் நியூ பேப்பரில் தன்னைப் புதைத்துக் கொண்டு அஞ்சலி. அன்று கூட்டம் அதிகம்தான். அந்த வழியாக வந்த அவளுடைய உறவுக்காரப் பெண் பானுமதி, கமலத்தினுடைய தோளை உலுக்குகிறாள்.

“கமலம் எப்படி இருக்கிறே? பக்கத்தில யாரு?..”

அதிர்ச்சியை வெகு சிரமப்பட்டு மறைப்பதாகக் கமலம் நினைத்துக் கொள்கிறாள்.

“என் சின்ன மகள்?. அஞ்சலி..” அசடு வழிகிறது.

முகத்தை நிமிர்த்தி வறட்டுச் சிரிப்பை உதிர்க்கிறாள் அஞ்சலி.

“புராப்ளம் யாருக்கு?..”

மகளுக்குத்தான். மாதக் கணக்குச் சரியா வர்றதில்லே. பிள்ளை அவதிப்படுறா?..”

அணுக்குண்டு பொய் வெடிக்கிறது.

“இந்தக் காலத்தில எல்லா வீட்டிலேயும் இந்தக் கஷ்டம்தான். பார்த்திட்டு வா. நான் புறப்படுறேன்..”

பானுமதியின் கடைசி வாக்கியம் கமலத்தில் வயிற்றில் பாலை வார்க்கிறது. ‘பானுமதி நல்லவள்’ என்று கமலத்தின் மனம் முணங்குகிறது.

“சனியனே, நர்ஸ் சொன்னது இருக்கட்டும். உனக்குத் தெரியாம இந்தக் கன்றாவி எப்படி? யாருடி காரணம்?.

கமலம் ஆத்திரத்தை வெளிக்காட்டாமல் முகத்தைப் பாறையாக்கிக் கொண்டு கேட்டாள்.

“தெரிலேம்மா?..”

“என்னடி சொல்றே?..”

“யாரு காரணம்னு தெரிலேம்மா?.. நான் நாலு பேருகிட்ட நெருக்கமா பழகினேன்..” அழுகை நின்றபாடில்லை.

“அடிப்பாவி..” முரளி காலை உயர்த்தி உதைக்கப் போனார்.

“வேண்டாம். உயிரு போயிடப் போவுது..”

“போகட்டும். இனிமே இவ ஏன் உயிரோட இருக்கணும்?..” முரளி கொதித்துக் கொண்டு நின்றார்.

“அந்த பாவம் உங்களுக்கு வேண்டாம். இவளை அளவுக்கு அதிகமான கண்டிப்போடு கட்டிப்போட முயற்சி பண்ணினது நான்தான். உங்களைக் கையெடுத்துக் கும்பிடுறேன். என் தவறைச் சரி செய்து கொள்ள எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்க..”

அஞ்சலியின் உடல் ஒரு வாரத்தில் தேறியது. அவளிடம் கமலம் கேட்டாள்.

“அஞ்சலி, டி.என்.ஏ சோதனை செய்து யாருன்னு கண்டு பிடிச்சிடலாமே! நீ ஏன் அதைச் செய்யல?.” காலேஜ் உளவியல் ஆலோசகர் கேட்கிறார்.

“வேண்டாம் மேடம். நாலு பேரையும் எப்படிச் சோதனைக்கு வரச்சொல்றது? வருவாங்கன்னும் சொல்ல முடியாது. விளைவுகளைப் பத்தி நெனச்சுப் பார்க்கத் தவறிட்டேன். இப்ப இருக்கிற புத்தி அப்ப இல்ல.. நான் கருவைக் கலைக்கிறதா முடிவு செஞ்சிட்டேன். பிறகு, ஆராய்ச்சி எதுக்கு?..”

“என்ன செய்யப் போறதா உத்தேசம்?.”

“படிப்பைத் தொடரப் போறேம்மா!..”

“உறுதியாத்தான் சொல்றியா?”

“ஆமா..”

“அப்படின்னா, ஒரு நிபந்தனை!..”

அஞ்சலி தன் தாயாரை ஏறிட்டுப் பார்த்தாள்.

“நீ தவறு செஞ்சிட்டு உதவி கேட்டு எங்ககிட்டதான் ஓடி வந்தே! கூட்டாளிங்ககிட்ட போகத் தோணல பாத்தியா? அதுதான் இரத்த பந்தத்தின் மகிமை. நீ ஆபத்தில இருக்கும்போது நிபந்தனை போட்டு உதவி செய்ய விரும்பல. நீ என் மகளா இருந்தாலும் அப்படிச் செய்யிறது நாகரிகமில்ல; தர்மமில்ல. இப்ப சொல்றேன். நீ படிக்கணும்மா என் நிபந்தனைக்குக் கட்டுப்படணும்..

“என்ன உன் நிபந்தனை?..”

“படிக்கிறதைத் தவிர வேறு எந்த விதமான முன்னுரிமைகளுக்கும் நீ உன் மனத்தில இடம் தரக்கூடாது. அதைச் செய்ய முடிம்னா நீ மறுபடியும் யூனி·பார்மைப் போடு. இல்லேன்னா, என் ஆபிசில வேலைக்கு வா. நல்லா யோசிச்சு நாளைக்குச் சொல்லு..”

யாருடைய சங்கடத்தையும் சந்தோசத்தையும் பொருட்படுத்தாமல் மறுநாள் பொழுது புலர்ந்தது.

மிக நேர்த்தியாகக் கல்லூரி யூனி·பார்மை அணிந்து வந்தாள் அஞ்சலி.

“காசு கொடும்மா, காலேஜூக்குப் போகணும்..”

கமலம் தன் மகளை ஏறிட்டுப் பார்த்தாள்.

அஞ்சலியின் முகம் அமைதியாக இருந்தது.

அந்த முதிர்ச்சி எப்படித் திடீரென்று வந்தது?..

அஞ்சலி கீழே வந்தபோது ‘மெர்சிடிஸ் பென்ஸ்’ தயாராகக் காத்துக் கொண்டிருந்தது. அருகில் சென்றதும் கதவுகள் தானாகத் திறந்து கொண்டன. அஞ்சலி அமர்ந்தாள். பென்ஸ் அழகாக சாலையில் வழுக்கி ஓடியது.

“அஞ்சலி, ராத்திரிக்கு இட்டிலி செய்யச் சொல்லவா?”

சரிப்பா!..

முற்றும்

Series Navigationபுரட்சிசின்ன மகள் கேள்விகள்
author

பொன் சுந்தரராசு, சிங்கப்பூர்

Similar Posts

2 Comments

  1. Avatar
    s. revathy gevanathan says:

    “nipanthanai” nalla padippinai konda karu. aanal kathaiyai kondu sendra vitham…..mun-pin muranpadaga ullathu. kathai solli, uraiyadalkalaiyum sampavangalaiyum kavanamaaga kaiyala vendum. ungal muyarchikku paarattukal sundraraju. s. revathi gevanathan.

  2. Avatar
    Dr.G.Johnson says:

    NIBANTHANAI by PON.SUNTHARARAASU is a short story with a message for our youngsters especially girls. There was a time when girls were brought up under strict supervision and vigilance by the parents. Family name and chastity of girls were of utmost importance. But now in the modern era such strict vigil is impossible as girls are given the liberty of going for higher education and jobs of their choice. They have to come in contact with men and this social phenomena is unaviodable. In this story the writer has introduced ANJALI as a respectable Chief Executive of a firm in Singapore. On her office table she keeps a photograph of her mother who now her GOD and SOUL. Then the writer goes back to her past life in college where she lost her virginity and became pregnant. As she had sex with four boys in college she in not even sure as to who is the father of the child. In this pathetic situation her parents too were unable to do anything because her elder sister had run away from the house before finishing her college studies. After abortion her mother insists on a CONDITION ( NIBANTHANAI ) that she would only concentrate on her studies and she accepts it and succeeds in her career. Though the message is appreciable, the narration is not smooth and there is no sequence of events. There is also a confusion about ROOBINI. She is said to be her elder sister and also as her classmate.As the writer is a professor in a University in Singapore he would have come across such incidents and hence this story. Anyway a well written story with a broad social outlook and a warning to our youngsters to thinkm of their culture and heritage and not to misuse their freedom! VAAZHTHUKKAL PON.SUNTHARARAASU AVARGALE!……..
    Dr.G.Johnson.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *