பணம்

This entry is part 8 of 28 in the series 29 ஏப்ரல் 2012

 

தெலுங்கில் : ரங்கநாயகம்மா

தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

கோடி!

கோடி!!

என்ன கோடி?

பணம்! சொத்து ! ரூபாய்க்கள் !

கோடி ரூபாய் !! வரதட்சிணை !!

பெரியபடிப்பு படித்த அந்த இளைஞன் கேட்டான் வரதட்சிணை !

கோடி ரூபாய் வரதட்சிணை !! வியப்பாக இல்லையா?

“வியப்பு எதற்கு? கொடுப்பவர்கள் இருந்தால் கேட்பதற்கு என்ன வந்தது? ஒரு கோடி என்ன, இரண்டு கோடி கேட்கலாம்! நான்கு கோடிகள் கூட கேட்கலாம்! நூறு கோடியும் கேட்கலாம்! பணத்திற்கு முடிவு எங்கே? எண்ணிக்கைக்கு முடிவு எங்கே? கொடுப்பவர்கள் இருக்கும் போது கேட்பதற்கு என்னவாம்? அது இல்லை ஆச்சரியம்!

பின்னே, ஆச்சரியம் எதற்காகவாம் ?

அவ்வளவு வரதட்சணை கொடுப்பதாக சொன்னது ….. மாமனார் ! அதுதான் ஆச்சரியம் ! கோடிருபாய் வரதட்சிணை கூட, வியப்படைய வேண்டிய சமாசாரமாக இல்லாமல் போனதுதான் ஆச்சரியம் ! அதுதான் ஆச்சரியம் !

இதில் என்ன ஆச்சரியம்! கோடி ரூபாய் வரதட்சிணையாக கொடுப்பவனுக்கு எத்தனை கோடி சொத்து இருந்திருக்குமாய் இருக்கும்! அந்த தட்சிணையைக் கொடுப்பவர், பத்து கோடிக்கோ, நூறு கோடிகளுக்கோ அதிபதியாக இருந்திருப்பார் இல்லையா? அதில் ‘ஒருகோடியை’ வரதட்சிணையாக வீசியெறிவதில் வியப்பென்ன இருக்கிறது ?  உண்மையில் அது கூட இல்லை உண்மையான ஆச்சரியம் !

பின்னே, எது ‘உண்மையான’ ஆச்சரியம்? அந்த பெண்ணின் விஷயம்தான் உண்மையான ஆச்சரியம். அவளும் அவனைப் போலவே படித்திருக்கிறாள். ‘ பணம் கொடுத்தால்தான் உன்னுடன் வாழ்வதற்கு சம்மதிப்பேன் ‘ என்று சொன்ன மனிதனுடன் சேர்ந்து வாழ்வதற்கு ஒப்புக் கொண்ட அந்தப் பெண்ணைப் பற்றிதான் உண்மையான ஆச்சரியம்!

‘நன்றாக படித்திருந்த’ இளைஞன் கூட வரதட்சிணை கேட்டான்!

‘நன்றாக படித்திருந்த’ அந்தப் பெண்ணும் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறாள்!

அவனுடைய படிப்பை, அவளுடைய படிப்பை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் அவனும் …… அவளும் எஞ்சி இருப்பார்கள்.

அவன் ஆண், அவள் பெண் !

ஆண்கள் வரதட்சிணை, சீர் வரிசை கேட்பார்கள். பெண்கள் அவற்றை சமர்பித்துக் கொள்வார்கள்! இங்கேயும் அதே உண்மை எஞ்சியிருந்ததுதான் ஆச்சரியம் ! அவர்கள் கற்ற கல்வியில் புத்தகங்களின் சுமையைத் தவிர, எதுவும் இல்லாமல் போனதுதான் ஆச்சரியம் !

“வரதட்சிணை வாங்கிக் கொள்வதா, மாமனாரின் சொத்தில் பங்கு கேட்பதா?” என்று புது மாப்பிள்ளை பெரிய மனிதர்களுடன் விசாரணை நடத்தினான்.

“எது அதிகமாக இருக்குமோ அதை வாங்கிக் கொள் !” என்றார்கள் புத்திசாலியாக இருந்தவர்கள். அதுவும் உண்மைதானே ?

“மாமா! எது அதிகம் ?” மாப்பிள்ளை மாமாவிடம் கேட்டான்.

“சொத்தில் பங்கு என்றால் பத்துரூபாய் கூடதான், ஆனால்…..” மாமன் நீட்டி முழக்கினான்.

“ஆனால்…..? ஊம்…. ஆனால்? ‘ஆனால்’ என்ன மாமா?”

“வரதட்சிணை கொடுப்பதும் வாங்குவதும் நம் பண்பாடு.”

“பண்பாட்டிற்காக பத்துரூபாயை இழக்க வேண்டுமா மாமா?”

புத்திசாலியாக இருந்த பெரியவர் ஒருத்தர் பத்து ரூபாய்க்காக மாப்பிள்ளை வலுவில் வரவழைத்துக் கொள்ளப் போகும் ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்து ……. “சொத்தில் பங்கு என்றால் அந்த சொத்து முழுவதும் உன் மனைவியின் பெயரில் இருக்கும். வரதட்சிணை என்றால் உன் கைக்கு வரும்!” என்று தன் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்திக் கொண்டார்.

” என் மனைவியே என் கையில் இருக்கும் போது, மனைவியின் சொத்து என் கையில் இருக்காதா?” மாப்பிள்ளை வியப்படைந்தவனாய் மேலும் புத்திசாலித்தனமாக கேள்வியை எழுப்பினான்.

“சொல்ல முடியாது. காலம் மாறிக் கொண்டு வருகிறது !”

“காலம் மாறிக் கொண்டு வருகிறதா! என் மனைவி என் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், அவள் சொத்து என் கையில் இருக்காத அளவிற்கு மாறி விட்டதா காலம்?”

“உன் மனைவியே உன் கட்டுக்குள் இருக்காத அளவிற்கு மாறிக் கொண்டு வருகிறது!”

” ஓஹோ! அப்படியா!…. இப்போ என்ன செய்ய வேண்டும்?” பதற்றமடைந்தான் மாப்பிள்ளை.

“பத்து ரூபாய் குறைந்தாலும் பரவாயில்லை. வரதட்சிணை வாங்கிக் கொள். சொத்தில் பங்கு ஜோலிக்கு போகாதே. புத்திசாலியாக இருக்கும் ஆண்மகன் செய்யும் காரியம் அது இல்லை.”

அந்த அறிவுறை மாப்பிள்ளைக்கு ரொம்ப பிடித்து விட்டது. ஆனால், பத்து ரூபாய் நஷ்டத்தை ஏற்றுக் கொள்வதா ? அதுதான் அவனுடைய பிரச்னை!

இந்த முறை தன்னுடைய சொந்த மூளையைப் பயன்படுத்த முடிவு செய்தான். நன்றாக யோசித்தான். கடைசியில் “அந்த பத்துரூபாய் கூட விட்டு வைக்க மாட்டேன்” என்று அறிவித்தான்.

“என்ன செய்வாய்? எப்படி சம்பாதிக்கப் போகிறாய்?” புத்திசாலியாக இருந்த பெரிய மனிதர் கூட முட்டாள் போல் முகத்தை வைத்துக் கொண்டார்.

“என்ன செய்கிறேன் என்று பார்…… மாமா! அந்த பத்து ரூபாயையும்  கூட சேர்த்து ‘கோடி பத்துரூபாயாக’ கொடுத்து விடு! இல்லாவிட்டால்…..”

“ஊம்…..இல்லாவிட்டால்?” மாமன் கேட்டான்.

“நீ இன்னொரு வரனை பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.”

“வேண்டாம் வேண்டாம்! அவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்ல வேண்டாம். பத்து பேருக்கு நடுவில் என் மானத்தை கப்பலேற்றி விடாதே…..” உணர்ச்சி வசப்பட்ட மாமன் எல்லா நிபந்தனைகளுக்கும் தலை வணங்கினார்.

வரன் முடிவாகிவிட்டது!

“மாப்பிள்ளை! ‘பணத்தை’ சில்லரைக் காசுகளாக பார்ப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஒரு கோடி ரூபாயை குவியலாக பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா  ? என்றாவது பார்த்திருக்கிறாயா?”

“இல்லை மாமா! என்றுமே பார்த்தது இல்லை. ‘கோடி’ என்று சொல்கிறாயே? ‘ஒருகோடி பத்து’ தானே ? பேச்சை மாற்றக் கூடாது தெரியுமா!”

“இல்லை. பேச்சை மாற்றமாட்டேன். பணத்தை வங்கியில் போட்டு விட்டு காசோலையை உன் கையில் கொடுத்தால் எனக்கும் கொடுத்தாற்போல் இருக்காது. உனக்கும் வாங்கிக் கொண்டது போல் இருக்காது. பணம் முழுவதும் சில்லரையாக உன் கைக்கு தந்து விடுகிறேன், வாங்கிக் கொள்.”

“ஆகட்டும். அப்படி என்றால் இன்கம்டாக்ஸ் காரர்களுக்கும் கணக்குக் காட்ட வேண்டியதில்லை.”

“அதுதான் லாபம். எது செய்தால் லாபம் வருமோ அடிக்கொரு தடவை யோசித்துக் கொண்டே இருக்க வேண்டும். இன்னொரு விஷயமும் சொல்கிறேன் கேட்டுக்கொள். பணத்தை மூட்டையாக பார்த்துக் கொள்வது எனக்குப் பிடித்த விஷயம். ரொம்ப நாளாக பத்து பைசா நாணயத்தை சேர்த்து வைத்திருகிறேன். அது ஒரு பொழுது போக்கு எனக்கு. கோடி ரூபாய்க்கு பத்து பைசா நாணயங்கள் ! எவ்வளவு மூட்டைகள் தெரியுமா ? ஒரு ஷெட் முழுவதும் அடுக்கி வைத்திருக்கிறேன். பார்க்க இரண்டு கண்ணும் போதாது.”

“கோடி ரூபாய்க்கு பத்து பைசா நாணயங்கள் என்று சொல்கிறாயே ? இன்னொரு பத்து எங்கே போச்சு? அந்த நாணயங்களின் மூட்டையை  எனக்கு காண்பிக்க மாட்டாயா மாமா? எவ்வளவு நன்றாக இருக்கும் ?”

“அந்த மூட்டைகள் எல்லாம் உனக்குத்தான். உனக்குக் கொடுக்கும் வரதட்சிணை!”

“அவ்வளவு மூட்டைகளா ? சரியாக எண்ணி வைத்தீங்களா?”

“வேலைக்காரர்கள்தான் எண்ணி மூட்டையாக கட்டி வைத்தார்கள்.”

“வேலைக்காரர்கள் எண்ணினார்களா ? பாதி கொள்ளையடித்து இருப்பார்கள், அவர்களை நம்ப முடியாது. அவர்களுக்கு சரியாக கணக்கிட தெரியாது இல்லையா?”

“போகட்டும். ஒரு மூட்டையைக் கூடவே போட சொல்கிறேன். உன் கண் முன்னாலேயே எடை போட்டு பார்த்து விடலாம்.”

“வேண்டாம் வேண்டாம். எடை போடுவதில் ஏமாற்று வேலை நடக்கும்….. நானே எண்ணிக் கொள்கிறேன்.”

“நீயே எண்ணப் போகிறாயா?”

“ஆமாம், நான்தான். இப்பொழுதே தொடங்கி விடட்டுமா? இரண்டு நாட்களில் முடிந்து விடாதா?”

“இப்போ வேண்டாமப்பா ! கல்யாணம் ஆன பிறகு எண்ணுவதற்கு உட்கார்ந்து கொள்.”

“கல்யாணம் ஆன பிறகு கணக்கில் குறைந்தால்…..?”

“குறைந்த தொகைக்கு இருமடங்கு தருகிறேன். போதுமா?”

“அப்படியே ஆகட்டும். பணம் வைத்திருக்கும் ஷெட்டின் சாவியை இப்பொழுதே என்னிடம் கொடுத்து விடுங்கள். என்னிடம் வைத்துக் கொள்கிறேன்.”

“என் மகளிடம் கொடுத்து வைத்திருக்கிறேன்.”

“வேண்டாம் வேண்டாம். உங்கள் மகள் கல்யாண அலங்காரத்தில் மூழ்கி சாவியை எங்கேயாவது தொலைத்து விடுவாள். என்னிடம் கொடுத்து விடுங்கள், இப்பொழுதே.”

“சரி. உன் இஷ்டம்! கோடி ரூபாய் இருக்கும் ஷெட்டின் சாவி ! ஜாக்கிரதை!”

“கோடி என்று சொல்றீங்களே ? கோடி பத்து இல்லையா?”

“அதுதான் ! கோடி பத்துதான். அது மட்டுமே இல்லை. இன்னொரு மூட்டை அதிகமாகவே.”

“ஆமாம் ஆமாம். சேர்த்து கொடுத்தாக வேண்டும்.”

 

*******************************************

 

மணமகன் கல்யாண உடையுடன் மணமேடையிலிருந்து எழுந்ததுமே ஷெட்டை நோக்கி ஓடினான்! பணத்தை எண்ணத் தொடங்கிவிட்டான்! அந்த நிமிடம் முதல் அவனுக்கு உலகம் மாயமாகிவிட்டது, அந்த நாணயங்களைத் தவிர! சூரியோதயம், சந்திரோதயம், பௌர்ணமி, அமாவாசை, காலங்கள், மொத்தம் இயற்கையே மாயமாய் மறைந்து விட்டது !

காலச் சக்கிரம் உருண்டோடிக் கொண்டே இருந்தது.

 

**********************************************

 

அவன் கடைசி மூட்டையை எண்ணி முடிப்பதற்கள் இருபத்திநான்கு வருடங்கள் கழிந்தன! எண்ணி முடிக்கும் போது கோபத்தினால் உடல் நடுங்கத் தொடங்கியது. “நாற்பது பைசா குறைந்து விட்டது! ஒரு மூட்டை அதிகமாக போட்டிருப்பதாக சொன்னான். எவ்வளவு ஏமாற்று வேலை? அதிகம் இல்லை. இல்லவே இல்லை. மேலும் குறைந்து விட்டது. ஏமாற்று வேலை, மோசடி!  பாடம் புகட்டுகிறேன். என் கால்களில் விழும் விதமாக செய்கிறேன்.” கத்தி கூச்சல் போட்டுக் கொண்டே பின்னால் திரும்பினான்.

அங்கே இரண்டு பெண்கள் நின்று அவனை வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண்மணிக்கு நாற்பத்தி ஐந்து வயது இருக்கலாம். அவள் பக்கத்தில் அதே ஜாடையில் அவள் மகள் போல் தென்பட்டாள் இன்னொரு பெண்.

கணக்காளர் மணமகன் அந்த மூத்த பெண்மணியை சந்தேகமாக பார்த்தான். அறைகுறையாய் ஏதோ நினைவுகள்!

“நான்… கல்யாணம்… நீதானே? ….. உன்னைத்தானே?”

“ஆமாம்.”

“ஆனால், நான் உன்னை மனைவியாய் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை!”

“அப்படியா ? எதனால் ?”

“உங்கப்பனைக் கூப்பிடு. எதற்காக என்று சொல்கிறேன். இவ்வளவு தூரம் ஏமாற்றுவானா? வட்டியுடன் சேர்த்து வசூல் செய்கிறேன்.”

“என்ன ஏமாற்றினார்?”

“வரதட்சிணை பணத்தில் நாற்பது பைசா குறைவாக இருக்கிறது.! இன்னும் என்ன செய்ய வேண்டும்?”

“கணக்கிடுவதில் சிறிய தவறு ஏற்பட்டிருக்கலாம்.”

“இல்லை, வேலைக்காரர்கள் கையாடி இருப்பார்கள்.”

“இருக்காது, அவர்கள் களவாடுவதாக இருந்தால் இன்னும் நிறைய பணத்தை எடுத்திருப்பார்கள். கணக்கிடுவதில் ஏற்பட்ட தவறுதான் இது.”

“இப்போ இந்த ‘குற்றத்தை’ யார் ஏற்றுக் கொள்வார்கள்? கூப்பிடு உங்கப்பனை! சீக்கிரமாக வரச்சொல்!”

“அவர் இறந்து போய் ஐந்து வருடங்களாகிவிட்டது.”

“போய் சேர்ந்து விட்டானா? என்னிடம் சொல்லிக் கொள்ளாமலேயே ! இப்போ இந்த பாக்கியை எவன் தீர்க்கப் போகிறான்?”

“உன்னிடம் சொல்லாமல் நிறைய விஷயங்கள் நடந்து விட்டன. கல்யாணம் ஆன அடுத்த நிமிடம் நீ கணக்கிடுவதில் மூழ்கிப் போய் விட்டாய். உனக்காக நான் இரண்டு வருடங்கள் இந்த இடத்திலேயே சுற்றிக் கொண்டிருந்தேன். கணக்கிடுவதிலிருந்து உன்னைத் தடுப்பதற்கு நிறைய முயற்சி செய்தேன். உன்னிடம் பேசுவதற்காக நான் எப்போ வந்தாலும் நீ கையை நீட்டி மறுத்தபடி “குறுக்கே வராதே, குறுக்கே வராதே. கணக்கு தவறிவிடும்” என்று கோபமாக பார்ப்பாய். சில சமயம் உண்மையிலேயே உன் கணக்கு பிசகிவிடும். உடனே திரும்பவும் முதல் மூட்டையிடம் ஓடுவாய். கணக்கிட்டு முடித்த மூட்டைகளை எல்லாம் கீழே தள்ளி விடுவாய். திரும்பவும் எண்ணத் தொடங்குவாய் ! அப்படி எத்தனை முறை செய்தாயோ? நான் செய்த தவறு என்னவென்று சீக்கிரத்திலேயே எனக்குப் புரிந்து விட்டது. உன் போக்கைப் பார்த்துப் பார்த்து உன் மீது இருந்த விருப்பம் முழுவதும் நசிந்து போய் விட்டது. உன்னுடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வதை விட இறப்பது நல்லது என்ற முடிவுக்கு வந்து விட்டேன். அதிர்ஷ்டவசமாக, இன்றைக்கும் வரமாக நான் நினைக்கும் மனிதன் என் வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்தான். அவனுடன் மறுமணத்திற்கு முதலில் என் தந்தை சம்மதிக்கவில்லை. என் முடிவை அழுத்தமாக சொன்ன பிறகு அவரும் சம்மதித்தார். பணத்தைப் பற்றிய பேச்சு இல்லாமல் எங்கள் திருமணம் முடிந்து விட்டது. அந்த விஷயத்தை உன்னிடம் சொல்வதற்காக அன்று மறுபடியும் வந்தேன். என்னை தொலை தூரத்தில் பார்க்கும் போதே நீ “வராதே, வராதே, வராதே. சரியாக கணக்கிட வேண்டும். குறுக்கே வராதே” என்று கண்களை உருட்டி கோபமாக பார்த்தாய்.

இரண்டு வருடங்கள் கழித்து எங்களுக்கு மகள் பிறந்தாள். அப்பொழுதாவது சொல்லுவோம் என்று திரும்பவும் உன்னிடம் வந்தேன்.

“கணக்கு!  குறுக்கே வராதே. குறுக்கே வராதே” என்று தவித்துக் கொண்டே கையை நீட்டி மறித்தாய்.

ஆகட்டும், நீ முழுவதுமாக எண்ணி முடித்த பிறகே சொல்லுவோம் என்று இத்தனை நாள் காத்திருந்தேன். இருபத்திநான்கு வருடங்கள் கழிந்து விட்டன.”

“இருபத்தி நான்கு வருடங்களா?”

“ஆமாம் ! இருபத்தி நான்கு வருடங்கள்! மனிதனின் வாழ்க்கையில் ஒன்றில் மூன்றாவது பங்கு! நம் கல்யாணத்தின் போது உயிருடன் இருந்த பெரியவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்து போய் விட்டார்கள். இந்த மாநிலத்தில் ஐந்து முறை அரசாங்கம் மாறி விட்டது. என் மகள் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டாள். என் பிறந்த வீட்டில் வியாபாரத்தில் நஷ்டம் வந்து சொத்து முழுவதும் போய் விட்டது. அந்தக் கவலையிலேயே என் தந்தை இறந்து விட்டார். சொத்தின் மீது எந்த ஆசையும் இல்லாத நானும், என் கணவரும் தொடக்கத்திலிருந்து சந்தோஷமாக இருக்கிறோம். எங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். என் வாழ்க்கை இப்படி திசை திரும்பாமல் உன்னுடன் பிணைந்திருந்தால், என் கண்கள் ஒருநாளும் திறந்து கொண்டு இருந்திருக்காது. இந்தப் பணத்தை மறுபடியும் என் மகளுக்கு வரதட்சணையாக கொடுப்பதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருந்திருப்பேன். ஆனால் இன்று வரதட்சிணை என்ற வார்த்தை என் காதால் கேட்க முடியாத அளவுக்கு கொடுமையானது. உடன்கட்டை ஏறுதல்…..சிறைவாசம்… தூக்கில் போடுதல்…. போன்ற வார்த்தைகளுக்கு சமம். அவ்வளவு கொடுமை ! நம் கதையை முழுவதுமாக என் மகளிடம் சொன்னேன். இருபத்திநான்கு வருடங்களாக பணத்தை எண்ணிக் கொண்டிருக்கும் மனிதனை பார்க்க வேண்டுமென்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே வந்தாள். என் தந்தை உனக்கு இந்த பணத்தைக் கொடுக்காமல் இருந்தால், என் தந்தை மட்டுமே இல்லை, யாருமே உனக்கு வரதட்சிணை கொடுக்காமல் இருந்தால், உன் வாழ்க்கை சகஜமாக கழிந்திருக்கும். இந்த பணத்திற்காக வாழ்க்கையில் எதை இழந்தாய் என்று உனக்குப் புரிந்தாற்போல் தெரியவில்லை. இந்த வார்த்தைகளை உன்னிடம் சொல்ல வேண்டுமென்று எவ்வளவு நாட்களாக எதிர்பார்த்து கொண்டிருந்தேனோ! உன்னை இந்த ஆபத்திலிருந்து வெளியேற்றுவதற்கு எத்தனை முறை முயற்சி செய்தேனோ! என்னைப் பார்த்ததும் ‘கணக்குத் தவறிவிடும்’ என்று பதற்றமடைந்தாயே தவிர உன் வாழ்க்கைப் பாதையே தவறிவிட்டது என்ற விஷயம் உன் நினைப்பில் இருக்கவில்லை. போகட்டும், இன்றைக்காவது பணத்தை எண்ணும் உன் வேலை முடிந்துவிட்டது. இப்பொழுதாவது நான் சொல்ல நினைத்ததை சொல்லியதற்கு சந்தோஷமாக இருக்கிறது.”

“சந்தோஷம்! யாருக்குச் சந்தோஷம்? நாற்பது காசு குறைந்து விட்டது. குறைந்து போன பணத்திற்கு இரு மடங்கு தருவதாக சொன்னான் உன் அப்பன். எல்லாம் பொய் பேச்சு. இப்போ எவன் தரப் போகிறான் அந்த நாற்பது காசை?”

பெண்கள் இருவரும் திரும்பினார்கள்.

“முட்டாள்!” என்றாள் மகள்.

“அன்று என்மீதும் பாதி தவறு இருக்கிறது. பணத்தைக் கொடு என்று கேட்டவனுடன் சேர்ந்து வாழ்வதற்கு எப்படி சம்மதித்தேன் என்று இன்றும் எனக்குப் புரியவில்லை. என் பெற்றோர்கள் எனக்காக இவ்வளவு வரதட்சிணையைக் கொடுக்கிறார்கள் என்று மகிழ்ந்து போனேனே தவிர அதற்கும் அப்பால் என்னால் யோசிக்க முடியவில்லை.”

“உன் தவறை நீ உணர்ந்து கொண்டு விட்டாய் இல்லையா? அவனும் அதே போல் தெரிந்து கொள்ளலாம். ஆனால் எதற்காக தெரிந்து கொள்ளப் போகிறான் ? அவன், பணம் கொடுத்தவன் இல்லை, வாங்கிக் கொண்டவன்!”

“அதற்காகத்தான் அவன் ‘தண்டனை’ அனுபவித்தான். வாழ்க்கையைத் தொலைத்து விட்டான்!”

“அப்பா சொன்னது போல் இவ்வளவு பணம் ஒரு நபரிடம் குவிந்திருப்பதில்தான் தவறு இருக்கிறது அம்மா! தாத்தாவிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது? வரதட்சிணை கேட்பவனுடன் வாழ்வதற்கு சம்மதிக்கக் கூடாது என்று நீ சொல்கிறாய். உண்மையைச் சொல்லணும் என்றால், சொத்து இருக்கும் மனிதனுடன் கூட வாழ்வதற்கு சம்மதிக்கக் கூடாது. சொத்து இருந்தால் கணக்கு விவகாரம் இருக்கும். அப்பா சொன்னது போல் பிரச்னையே சொத்து இருப்பதில்தான் இருக்கிறது.”

“சொத்துக்கும் வரதட்சிணைக்கும் என்ன சம்பந்தம்?”

“ஏன் சம்பந்தம் இல்லை? பெற்றோருக்கு சொத்து இருந்தால் மகளுக்கும் சொத்தில் பங்கு கொடுக்கணும் இல்லையா? அப்படி கொடுக்க மாட்டார்கள். ஏன் கொடுக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம். கொடுக்க மாட்டார்கள் இல்லையா? சொத்தில் சம உரிமையைத் தராமல் வரதட்சிணை என்ற பெயரில் ஏதோ கொஞ்சம் கொடுத்து விட்டு சும்மா இருப்பார்கள். வரதட்சிணை பிரச்னை சொத்து பங்கீட்டு பிரச்னைதான். அதைவிட வேறு இல்லை.”

“பெற்றோருக்கு சொத்தே இல்லை என்றால்?”

“இல்லை என்றால் அது வேறு விஷயம். இருந்தால் என்ன நடக்கும் என்று முதலில் யோசித்துப் பார். மகனுக்குச் சமமாக மகளுக்கும் சொத்தில் பங்கு கொடுக்கும் முறை இருந்தால் ‘வரதட்சிணை’ என்ற பேச்சே வந்திருக்காது. ஆனால் சொத்து இருந்தாலும், அதை ‘வரதட்சிணை என்ற பெயரிக் கொடுப்பதால் அது ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டது. மேலும் சொத்துக்கும், வரதட்சிணைக்கும் சம்பந்தம் இல்லாதது போல் தென்படும். சொத்து இருப்பவர்கள் கடைபிடிக்கும் முறையை சொத்து இல்லாதவர்களும் கடைபிடிக்க வேண்டியதாகிவிட்டது. சொத்து இருக்கிறதா இல்லையா என்று பார்க்க மாட்டார்கள். எல்லோருக்கும் வரதட்சிணை சம்பிரதாயமாகி விட்டது. வரதட்சிணை கொடுத்தாக வேண்டும்!”

“அன்று  என்னைப் போல் பெண்பிள்ளைகள் மூளையில்லாமல் இருந்தால் எத்தனை சம்பிரதாயங்கள் வேண்டுமானாலும் உருவாகும்.”

“மூளையிருந்தாலும் பெரிதாக வித்தியாசம் எதுவும் இருக்காது அம்மா! பெண்கள் வரதட்சிணை கொடுப்பதை நிறுத்திவிட்டால் அப்பொழுது சொத்துக் கணக்கு தொடங்கி விடும். பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரின் சொத்துக் கணக்கைப் பார்ப்பதில்லையா? சொத்து இருப்பதைப் பொறுத்து வரனை முடிவு செய்து கொள்வதில்லையா? இதுவும் அப்படித்தான். வரதட்சிணையை நீக்கிவிட்டால் வரதட்சிணைக்காக நடத்தப்படும் ‘பேரம்’ எல்லாம் சொத்துக் கணக்காக மாறி விடும். சொத்து இருக்கும் பெண்களுக்கு கல்யாணம் ஆகும். இல்லாவிட்டால் இல்லை. அதனால் ‘வரதட்சிணை பிரச்னையைப்’ போல் தென்படும் பிரச்னை எல்லாம்  சொத்து பிரச்னைதான்”

தாய் தலையை அசைத்தாள்.

“சொத்தை சேர்க்கும் நபர்களின் வாழ்க்கையில் என்ன எஞ்சியிருக்கும், கணக்கு விவகாரம் தவிர? பத்து பைசா நாணயம் இல்லை என்றால் பத்து ரூபாய் நோட்டுகளையோ, நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணிக் கொண்டு இருப்பார்கள். இருபத்திநான்கு வருடங்கள் இல்லை என்றால் இருபத்திநான்கு மணி நேரமும் எண்ணிக் கொண்டிருப்பார்கள். அதுதானே வித்தியாசம்? எந்த மனிதனுக்காவது சொத்துக் கணக்கு இருக்கணும் என்றால் பணப் பைத்தியமாக மாறாமல் இருப்பானா? நானாக இருந்தால் வரதட்சிணை வாங்கும் மனிதனை இல்லை, சொத்து இருப்பவனை கூட காதலிக்க மாட்டேன்!”

மகளைப் பார்த்தபடி தாய் புன்முறுவல் பூத்தாள்.

 

(2-6-89, ஆந்திர ஜியோதி, வாரப் பத்திரிகை)

Series Navigationசாதி மூன்றொழிய வேறில்லைவாருங்கள்…! வடிவேலுவை மேடை ஏற்றலாம்
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Comments

  1. Avatar
    ganesan says:

    The author reveals the character of a money minded person who lost his entire life time due to money…ppl should realise they should have control over money instead of allowing money to have control over them…good!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *