ஆண்ட்ரூ லூயிஸின் “ லீலை “

This entry is part 1 of 40 in the series 6 மே 2012

‘ அலைபாயுதே ‘ வின் நவீனப் பிரதியைப் பார்த்தது போலிருக்கிறது. அத்தனை இளமை! இரண்டரை மணிநேரப் படம் போனதே தெரியவில்லை. இன்னொரு மணிரத்னம் in the making! வெல் டன் ஆண்ட்ரூ!

கார்த்திக் ( ஷிவ் பண்டிட்) அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மாணவன். மலர் ( மானஸி பரேக் ) என்கிற கருணைமலர் எஸ் ஆர் எம்.. கார்த்திக், படிக்கும் காலத்தில், பழகும், இரண்டு பெண்கள், சோனா, காயத்ரி. முதலாவது மக்கு. இரண்டாவது புத்திசாலி என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் அரை மக்கு. அவர்களுடன் பழகியபின், தனக்கும் அவர்களுக்கும் சரியான அதிர்வுகள் ( vibes ) இல்லை என்று புரிந்து, கார்த்திக் ஒதுங்குகிறான். மலரின் தோழிகள் இவர்கள். கார்த்திக்கைப் பார்க்காமலே, அவன் ஒரு flirt என்று பட்டம் கட்டி விடுகிறாள் மலர். இரண்டாண்டுகளுக்குப் பிறகு, கார்த்திக்கும் மலரும் ஒரே மென்பொருள் நிறுவனத்தில், வேலைக்கு வருகிறார்கள். வெவ்வேறு தளங்களில் வேலை பார்க்கும் இவர்கள், வெறும் தொலைபேசி உரையாடலின் மூலமே அறிந்துகொண்டு, வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள். மலரின் நண்பன் விக்கி ( சந்தானம் ), கார்த்திக்கின் தோழி சுஜா, இருவரும் அதே நிறுவனத்தில் வேலைக்கு வரும்போது, இன்னமும் சிக்கல் கூட ஆரம்பிக்கிறது. சுஜா, மலர் அறிமுகமாகி, மலரின் அழகு, கார்த்திக்குத் தெரிய வர, அவன் ஆவல் அதிகமாகிறது. ஒரு முறை பார்த்தவுடன், காதலும் ஏற்பட்டு விடுகிறது. தான் தான் கார்த்திக் என்றால் அவள் நிராகரித்து விடுவாளோ என்கிற அச்சத்தில், தன்னை சுந்தராக அறிமுகம் செய்து கொண்டு, காதலிக்க ஆரம்பிக்கிறான். சுந்தரின் காதலை மலர் ஏற்றுக் கொள்ளும் கட்டத்தில்,  கார்த்திக்கும் சுந்தரும் ஒரே நபர்தான். அது மலர் வெறுக்கும் தான் தான் என்கிற உண்மையைச் சொல்ல முடியாமல், பிரிய விழைகிறான் கார்த்திக். ஆனால் கார்த்திக்கின் மீதான வெறுப்பை கொஞ்சம் கொஞ்சமாக மலர் தளர்த்திக் கொள்ளூம் கட்டம் வரும்போது, உண்மை வெளிப்பட்டு இருவரும் சேருகிறார்கள்.

சிக்கலான ஒரு காதல் கதையை, சிக்கலில்லாமல் ஜாலியாகச் சொல்ல முடிந்தால், சொன்ன ஆளிடம் விசயம் இருக்கிறது என்று அடித்துச் சொல்லலாம். அதை ஆண்ட்ரூ விசயத்தில் அழுத்தமாகவே சொல்லலாம். நாயகனாக வரும் ஷிவ் லேட்டஸ்ட் மாதவன். பெரிய இன்னிங்ஸ் காத்திருக்கிறது. மலராக வரும் மானஸி, ரோஜா மதுபாலா போல இருக்கிறார். பாவங்கள் புதையலாகக் குவிந்து கிடக்கின்றன அவரிடம். கரு. பழனியப் பனின் ‘ மந்திரப்புன்னகை’ க்கு அப்புறம், சந்தானத்துக்கு, கொஞ்சம் படித்த இளைஞன் வேடம். டீசண்ட் காமெண்டுகளில் அசத்துகிறார். அவர் பலம் இதில் தான் என்பதை அவர் உணரவேண்டும். லேப் டாப்பையும் பெண்ணையும் ஒப்பிட்டு அவர் பேசும் வசனம் கிளாஸ். ( இதுவும் தொறந்தாதான் வேலை செய்யும், இதுக்கும் விரல்கள் தேவை, இத்யாதி ) அதிலேயும் போகும்போது எதிரில் இருக்கும் பெண்ணைப் பார்த்துக் கொண்டே நண்பனிடம் “ பத்திரமாக எடுத்து வந்துடுங்கடா.. அந்த லேப்பையும் இந்த டாப்பையும் “ சூப்பர்.

சுஜா பாத்திரத்தில் வரும் நடிகை பிச்சு உதறுகிறார். குறைவான வசனங்களில் கண்களாலேயே பேசி விடுகிறார். சின்னச் சின்ன நகாசு வேலைகள் செய்து கதையில் சுவாரஸ்யம் கொண்டு வந்து விடுகிறார் இயக்குனர். ஒரே சிடியை இருவரும் வாங்க எத்தனிக்கும் காட்சியில் கார்த்திக், மலர் இருவரும், அந்தச் சிடியைப் போட்டுக் கேட்கும் காட்சியில், இருவரின் பார்வையிலேயே காட்சியை நகர்த்திடும் புத்திசாலித் தனம் ஒரு பருக்கை பதம். இன்னும் நிறைய இருக்கிறது.

சொல்ல வேண்டிய இன்னொன்று வேல்ராஜின் ஒளிப்பதிவு. ‘ மயக்கம் என்ன ‘ ஒரு மாடர்ன் படம். ஆனால் பல காட்சிகள் இருட்டு. இதுவும் ஒரு மாடர்ன் படம். ஆனால் எல்லாக் காட்சிகளும் இயல்பான வெளிச்சத்தில். முக்கியமாக கார்த்திக் மேல் கோபம் கொள்ளும் மலரைச் சாந்தப்படுத்த, புகுத்தப்பட்ட பாடலில் காணப்படும் வெரைட்டி. இன்னொரு புதுமை, ஒரு கனவுப்பாடலின் மூலம், நாயகியின் கோபத்தை, நாயகன் மாற்றுவது. ஒரே கனவு இருவருக்கும் என்பதான ஒரு சிந்தனை புதுசு.

வரவேற்க வேண்டிய இன்னொருவர் அறிமுக இசைஞர் சதீஷ் சக்கரவர்த்தி. ஏற்கனவே ஹிட்டாகிவிட்ட ‘ ஜில்லென்று ஒரு கலவரம் ‘ ‘ ஒரு கிளி ‘ பாடல்கள் அவருடைய திறமைக்குச் சான்று.

ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் யுவன், யுவதி மனநிலையை வெகு அழகாகப் படம் பிடித்திருக்கும் விதத்தில் இது ஒரு ஆகச் சிறந்த படம். சந்தானம் இருக்கிறாரே என்பதற்காக சில புகுத்தல் காமெடி காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். படமும் இன்னமும் க்ரிஸ்ப் ஆகியிருக்கும்.

சின்னப்படங்களை எடுக்கும் தற்கால இளைஞர்கள், டெக்னிக்கலாக வெகு முன்னேறி இருக்கிறார்கள். அவர்களுக்கு எது வேண்டும் எது வேண்டாம் என்று தெரிகிறது. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத நாயகன், நாயகி இருவரும் வெகு அழகாகத் தமிழை உச்சரிப்பது, பார்க்க அன்னியமாக இல்லை. மென்பொருள் துறை இப்படித்தான் என்று நம்ப வைப்பது இயக்குனரின் வெற்றி.

ஷிவ் ஸ்டார் லாபிகளால் நசுக்கப்படலாம். ஏனென்றால் அவர் பண்டிட். ஆனால் மானஸி நிச்சயம் கொண்டாடப்படுவார். நாம்தான் அமலாவையும், ஸ்ரேயாவையும் கொண்டாடி பழக்கம் உள்ளவர்களாயிற்றே!

#

கொசுறு

பேம் மல்டிப்ளெக்சில் மொத்தம் முப்பது நபர்கள். அதில் 15 நபர்கள் முதல் வரிசை.. அதாவது பத்து ரூபாய் டிக்கெட். நம்மாட்கள் தெளிந்து விட்டார்கள். அதிலும் நூறு ரூபாக்குள் பெப்சியும் பாப்கார்னும் கிடைக்கிறதென்றால், இளைஞர்களுக்குக் கொண்டாட்டம்தான். கூடிய விரைவில் இன்னும் கூடுதல் வரிசைகள், பத்து ரூபாய்க்கு சேர்க்கப்படலாம். ஸோ! லீலை @ 10/- . காம் என்பதுதான் அதிக ஹிட்டுகள் கொடுக்கும் வெப்சைட்.

120 ரூபாய் வாங்கிக்கொண்டு, தானாக ஏறும் படிகளில் அனுமதிக்கும் பேம், ஆட்டம் முடிந்தவுடன் அத்தனை படிகளையும் கால் கடுக்க இறங்கச் சொல்வது கொஞ்சம் அராஜகம் தான்.

#

Series Navigationசயந்தனின் ‘ஆறாவடு’
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *