விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தெட்டு இரா.முருகன்

This entry is part 27 of 40 in the series 6 மே 2012

1927 மார்ச் 13 அக்ஷய மாசி 29 ஞாயிற்றுக்கிழமை

சட்டென்று பக்கத்து முடுக்குச் சந்துக்கு நேராக மட்ட மல்லாக்காகத் திறந்து வச்சிருந்த மரக் கதவு கண்ணில் பட்டது. அதுக்கு அண்டக் கொடுத்துத்தான் என் மூட்டை முடிச்செல்லாம் வச்சது.

அந்தத் திட்டி வாசல் வழியாக தலை தப்பிச்சது தம்பிரான் புண்ணியம் என்று ஒரே ஓட்டமாக ஓடின போது காலில் இடறிய மூட்டைகளைக் கையில் தூக்கிக் கொண்டேன். ஆயுசு முழுக்க சம்பாதிச்சதும், விற்று வரச் சொல்லி துரை கொடுத்ததும், உடுதுணியும் எல்லாம் எதில் எது இருக்கு என்பது நினைவுக்கு வரலல. எதுக்கு? எல்லாம் மொத்தமா இருந்தாலே போறாதா என்ன?

அறுபது வயசில் சுவரேறிக் குதித்து அடுத்தவன் பெண்டாட்டியை அனுபவிக்கிற நேரத்தில் பிடிபட்டு ஓடின மாதிரி ஓட உடம்பு இடம் கொடுக்க மாட்டேன் என்றது. மூச்சு முட்டி வாய் திறந்தது திறந்தபடி இருக்க ஓடினேன்.

உடம்பில் உசிர் இருக்கப்பட்ட வரை ஓடியே சாக துர்தேவதைகளும் சத் புருஷர்களும் கூடிப் பேசி சாபம் கொடுத்தவனாக ஓடினேன்.

பகல் போஜனமாக ருஜிச்சுச் சாப்பிட்டதெல்லாம் கலந்து குடலேறித் திரும்பி வந்து வாயை சாக்கடை போல நிறைத்து குமட்டிக் குமட்டி கன்னமெல்லாம் கசிந்து வழிய ஓடினேன்.

சுற்றி வளைந்து திரும்பி எங்கேயோ நெளிந்து போகிற சந்துக்குள் மனுஷ நரகலும், கோழிக் கழிச்சலும், நேற்றைக்கோ போன வாரமோ கொட்டித் தீர்த்த மழைச் சகதியும், எச்சில் இலையும், ஸ்திரிகளின் சிக்கெடுத்துப் போட்ட தலை மயிரும், தூரத் துணியும், இருமித் துப்பின வியாதிஸ்தனின் கோழையுமாக வழியெல்லாம் நிறைந்து கிடந்ததில் கால் அமிழ்ந்து, வாடை மூக்கில் குத்த ஓடினேன்.

எதிர்ப்பட்டவன் மேல் மோதி என் அம்மாளையும் அக்காளையும் அவன் செய்ய நினைக்கிற காரியத்தைப் பற்றிய வசவைக் கேட்டபடி, பதில் சொல்ல நேரமில்லாமல், மனசுக்குள் அவனை வையக்கூட நேரமில்லாமல் ஓடினேன்.

ஓட வேணும். ஓடியே ஆகணும். ஓடினேன்.

முடுக்குச் சந்து திடுதிப்பென்று ஒரு பெரிய செங்கல் சுவரில் முடிந்து போனது. நீள, அகலமாக விரிந்த அந்தச் சுவரைத் தாண்டி கறுப்பாக தண்ணீர் தேங்கிய பெரிய குட்டை. குட்டையா இல்லை ஊர்க் கழிவு எல்லாம் கலந்து சமுத்திரத்திலோ வாய்க்காலிலோ கலக்கப் போய்க் கொண்டிருக்கிற திரவமா?

யோசிக்க நேரமில்லை. சுவரில் கால் வைத்துப் பல்லி போல தொற்றிக் கொண்டு ஏறினேன். கையில் வைத்திருந்த மூட்டை முடிச்சை சுவருக்கு மேலே வச்சு ரெண்டு கையையும் மேலே ஊன்றி ஏறி அந்தப் பக்கம் சாடி ஜலத்துக்குள் விழுந்தேன். நான் நினைச்சதை விட ஆழம். கிட்டத்தட்ட அக்குள் வரை சாக்கடை சாகரம்.

மூட்டைகளை எடுக்கக் கை நீட்டினேன். ரெண்டில் ஒண்ணே ஒண்ணு தான் மேலே இருந்தது. என்ன கஷ்டம்டா ஈசுவரா.

கழுத்தளவு துர்ஜலத்தில் நின்றபடி கையில் கிட்டிய கப்பல் பையைப் பார்த்தேன். என்னத்தைச் சொல்ல? பழந்துணி. சின்ன சஞ்சியில் கப்பல் துரை கொடுத்த ரூபாயில் மத்தியானம் மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டதுக்குக் கொடுத்தது போக மிச்சப் பணம். எப்போ எல்லாமோ கையில் கிடைக்கிற எந்தக் காகிதத்தில் எல்லாமோ எழுதி வச்சு யாருக்கும் அனுப்பாமல் போன கடுதாசுகள். அப்புறம் அந்த மதிமோச விளக்கம் புஸ்தகம். அவ்வளவு தான்,

நான் ஆயுசு வருமானமாக பெண்ட்வில் ஜெயிலில் சம்பாதித்த இருநூறு சில்லறை பவுண்டு, கப்பலில் வேலை பார்த்த வகையில் கேப்டன் கொடுத்த நூற்றுப் பத்து பவுண்டு இப்படி பத்திரமாக மாட்டுத் தோல் சஞ்சியில் வைத்து தோள்பைக்கு உள்ளே வெகு ஜாக்கிரதையாக வைத்திருந்தது, அதோடு கூட துரை கொடுத்த ரெண்டு பொட்டலம் அபின். எல்லாம் போச்சு.

நுங்கும் நுரையுமாகப் பாய்ந்து கொண்டிருக்கிற அந்த வெள்ளம் என் மிச்ச ஆயுசு என்ன விதிச்சிருக்கோ அதையும் கூட சப்ஜாடாக அடிச்சுப் போய்விட்டது.

அஷ்ட தரித்திரனாக, ஜெயிலில் போட்டு அடைச்சு வச்சு வெளியே வந்த கொலைகாரனாக இந்தப் பட்டணத்தில் இருந்து இருபது வருஷம் முன்னால் கிளம்பினேன். அங்கே இருபது வருஷம் கழிச்சு அதே மாதிரி தரித்திரனாக கழுத்து முட்ட கழிசடைத் தண்ணியில் முங்கி மூத்திர நாற்றமடிக்கும் கோமணம் அடைத்த பையைச் சுமந்து கொண்டு நிற்கிறேன்.

லலிதாம்பிகே. எல்லாம் உனக்கு நான் செஞ்சதுக்கான தண்டனை. லலிதாம்பிகே, நான் உனக்குச் செய்யாமல் போனதுக்கான தண்டனை. லலிதாம்பிகே, மகாலிங்க அய்யன் ரெட்டிய கன்யகைக்குச் செய்ய யத்தனித்ததற்கான தண்டனை. அடி லலிதே, வரதராஜ ரெட்டி கல்யாணியை சுகித்ததற்கான தண்டனை. லலிதாம்பிகே, ரெட்டியான் லோராவை ஏமாற்றினதுக்கான தண்டனை. லலிதாம்பாளே, அந்த மலையாளப் பார்ப்பான் பத்திரமாக வைத்துக் கொள்ளக் கொடுத்த அவனுக்கு அதிமுக்கியமான வஸ்துக்களை காணாமல் போக்கினதற்கான தண்டனை. லலிதாம்பிகே. மகாலிங்க அய்யன் உன்னைத் தொலைத்ததற்கான தண்டனை.

வசுதேவன் கிருஷ்ணனைச் சுமந்து வந்த மாதிரி அந்தக் கப்பல் பையைத் தலைக்கு மேல் சுமந்தபடி வாய்க்காலைக் கடந்து அக்கரை ஏறினேன். திரும்பிப் பார்த்தேன். ஒரு தேவடியாள் மகனும் பின்னால் வந்திருக்கலை. பிகில் ஊதிக் கொண்டு ஓடின போலீசும் போனது போனதுதான். ரட்சைப் பட்டேன்.

திருக்கழுக்குன்றம் போடா நாயே.

மனசு சொன்னது.

எதுக்கு? அதெல்லாம் அனாவசியம்.

போகச் சொன்னாப் போக வேண்டியது தானே?

நனைந்த வஸ்திரத்தை அலை அலையாக வீச ஆரம்பிச்ச சமுத்திரக் காற்றில் தலைக்கு மேல் பிடித்தபடி கோவணதாரியாக ஒரு ஓரம் நின்று உலர்த்தினேன். காய்ந்து போனபோது துர்வாடை அபரிமிதமாக இருந்தது.

சுருட்டிப் பையில் திணித்துக் கொண்டு உள்ளே இருந்து ஒரு மாசக் கப்பல் அழுக்கும் எண்ணெய்ப் பிசுக்கும் படிந்த கப்பல் உடுப்பை மாட்டிக் கொண்டேன். கையில் துடைப்பமும் துடைக்கக் கப்பலும் கிடைத்தால் மிச்ச காலம் ஓடிவிடும்.

வண்டி ஏறி வண்டி இறங்கி வண்டி ஏறி வண்டி இறங்கி நடந்து நின்று நடந்து விழுந்து எழுந்து கழுக்குன்றம் வந்து சேர்ந்தேன்.

பொழுது விடிந்திருந்தது. இளசான காலை நேரத்து வெய்யிலில் கட்டாந்தரையும் கள்ளிச் செடியும் கண்ணுக்கெட்டின தூரம் எல்லாம் தட்டுப்பட்டதே தவிர ஊரும் தெருவும் ஜனமும் ஒண்ணும் கண்ணில் படலை.

பாதை இல்லாத பாதை ஓரமாகக் குத்த வைத்து மலம் கழித்துக் கொண்டிருந்தவனைக் கேட்க, அவன் தனக்குப் பின்னால் கையை நீட்டி விட்டு கையில் வைத்திருந்த சுருட்டை பிரியமாக உதட்டில் மறுபடி கவ்விக்கொண்டான்.

இருக்கு. ஒரு தெரு. இன்னொரு தெரு. பாழான மாதிரி இடிஞ்ச கட்டடம் நாலஞ்சு கண்ணில் பட்டது. சோனி நாய்களும், ரெண்டு பன்னிகளும், ஒரு கிழட்டு மாடும் தவிர வெறிச்சென்று கிடந்தது அந்த இடம்.

இந்தத் தெருதானா நான் லலிதாம்பிகையைப் பெண் எடுத்தது? தலையில் கொம்பு முளைச்சது போல் புடைத்திருக்கிற கிழட்டு புரோகிதன் அவளை எனக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது இந்த கிரஹத்தில் தானா?

ஒரு ஜீவராசியும் காணோம். வீட்டு வாசலில் தெளித்து கோலம் போட்ட சுவடே இல்லை.

எதுக்கு கோலம்? மகாலிங்க அய்யனை மாமியார் அகத்தில் வருந்தி அழைத்து கொண்டாடி தலை தீபாவளி விருந்து உபசாரம் செய்யவா?

கந்தலாகிப் போன கப்பல் பையை கஷ்கத்தில் இடுக்கிக் கொண்டு வாசலில் நின்று லலிதா என்று கூப்பிட்டேன். சரம் சரமாக இருமல் தான் வந்தது.

வாசலுக்கு வந்த குரூபியான வயோதிக ஸ்திரி ஒரு க்ஷணம் என்னைப் பார்த்தாள். திரும்ப உள்ளே போனாள். அவள் மறுபடி வந்தபோது கையில் மண்சட்டியில் ஏதோ தூக்கிக் கொண்டு வந்தாள். விசர்ஜனமான நரகலா?

கையைக் குவியும்.

அவள் கொஞ்சம் அதிகாரமாகச் சொல்ல, நான் உடனே பதறி துணி மூட்டையைத் தோளில் மாட்டிக் கொண்டு ரெண்டு கையையும் குவித்து இடுப்பையும் வளைத்து அவளுக்கு முன்னால் நின்றேன். என் கையில் விழுந்தது நேற்று வடிச்ச சோற்றை தண்ணீர் விட்டு வைத்த நீராகாரம்.

ரெண்டு வாய் சோறும் தண்ணியுமாகக் குடித்தேன். இன்னும் கொஞ்சம் சாதம் இதில் இருந்தால், இன்னும் ரெண்டு கல் உப்பு சேர்த்திருந்தால் தேவாமிர்தமாக இருக்கும்.

சொல்லலாம் என்று தலையை நிமிர்த்தி அவளைப் பார்த்தேன். சாட்சாத் லலிதாம்பிகே தான்.

சரியான இடத்துக்குத் தான் திரும்பி வந்திருக்கேன்.

லலிதே.

அவள் கையைத் தொட்டுப் பிடிச்சு வாசல் படியேற முற்பட்டேன்.

ஐயோ, தேசாந்தரி கையப் பிடிச்சு இழுக்கறானே.

அந்த ஸ்திரி கத்தின கத்தலில் வீட்டுக்குள்ளே இருந்து அதி குருபீயான ஒரு கிழவன் தட்டுத் தடுமாறி வெளியே வந்தான். தலையில் கொம்பு முளைச்சது போல் புடைத்திருக்கிற கிழட்டு புரோகிதன் அவன்.

இன்னும் உசிரோடு இருக்கீரா?

அவன் பலமெல்லாம் திரட்டி என் தாடையில் அறைந்தான். வாயில் இருந்த சோற்றுப் பருக்கைகள் வெளியே தெறித்து விழ நான் திரும்ப வந்த வழியே ஓடினேன். ஓட இப்போது வெகு சுலபமாக வந்தது.

கிறுக்கன் போல இருக்கு. கதவைச் சாத்திட்டு வா.

கிழவன் காறித் துப்புகிற சத்தம்.

நாசமாப் போக. வயசைக் கூடப் பாக்காம கையைப் பிடிச்சு இழுக்கறானே படுபாவி.

கிழவி சாபம் கொடுத்தபடி கதவை அடைத்தது தெருத் திரும்பி படுத்திருந்த நாயை மிதித்தபோது காதில் கேட்டது. நாய் குரைத்த சத்தத்தில் அப்புறம் எதுவும் கேட்கவில்லை.

ஓட்டம் நடையாக மாற, நான் வந்து சேர்ந்தது குளக்கரைக்கு. இது கோவில் வாசல். உள்ளே போக இந்த உடுப்பும் அட்டுப் பிடித்த திருக்கோலமும் தடை செஞ்சிடும். வெளியே இருந்தே கன்னத்தில் போட்டுக் கொண்டு குளத்தில் காலை நனைச்சால் கொஞ்சம் போலவாவது பாவம் தொலையும்.

பாசி அடையாக அப்பின குளத்தில் என்னத்தை இறங்க?

யாரோ பலமாகச் சிரிக்கிற சத்தம். நெருப்புக் கொளுத்திக் குளிர் காய்ந்து கொண்டு யாரோ குந்தியிருந்தார்கள்.

இவன் தான் நான் சுட்ட கிழங்கைப் பிய்த்துத் தின்ன எத்தனித்தவன். கழுகு காட்டக் கூட்டிப் போகிறதாக அவளை மேலே கூட்டிப் போய் லட்டு உருண்டை வாயிலே ஊட்டி விட்டு, வேறே எதையோ காட்டியிருக்கான். அவ பாறையிலே இருந்து குதிச்சு செத்துட்டா.

வள்ளிக் கிழங்கைச் சுட்டவன் என்னை யாரிடமோ காட்டித் தெலுங்கில் சொன்னான்.

நான் ஆத்திரமாக அவனைப் பார்த்தேன்.

அப்புறம் ஏண்டா பொண்டாட்டியை நான் ஆக்ரமிக்க விட்டுட்டு கரும்புத் தோட்டத்து இருட்டிலே வாசல்லே போய்ப் படுத்திருந்தே?

கேட்டபோது பக்கத்தில் இருந்த பையன் சொன்னது –

கங்காணி ஐயா, அது வேறே யாரோ.

அப்போ உடம்பைக் கொடுத்து பணத்தை எடுத்துப் போன கல்யாணி?

என்னைக் கேட்டா? உமக்கு சித்தப் பிரமையோ என்னமோ.

பையனும் கிழங்கனும் பலமாகச் சிரித்தார்கள்.

அந்தப் பையனை வேலைக்கு தாமதமாக வந்ததற்காக சவுக்கால் விளாசி இருக்கேன். கையில் இருந்தால் இன்னொரு தடவை விளாசுவேன்.

பிடுங்கினீரு. போய்யா.

கிழங்கன் பிருஷ்டத்து மண்ணை தட்டுகிற சாக்கில் அதை எனக்கு முன்னால் அப்படியும் இப்படியும் ஆட்டி என்னை அவமானப் படுத்தின திருப்தியில் அந்தப் பையனோடு நடந்து போனான்.

தாகம் அதிகமாக இருந்தது. படி ஏறி மேலே போனால் சத்திரம் இருக்குமே? பல வருஷம் முன்னால் கல்யாணிக்கு கரடியைப் பார்த்த பிராமணன் கதை சொல்லிக் கூட்டிப் போனேனே?

கல்யாணியும் கரடியும் காமமும் எல்லாம் இல்லை. சத்திரம் இருந்தது. கரைத்து வைத்த பானகத்தை குவளை குவளையாக வார்த்துக் கொண்டிருந்தவன் இருந்தான். வயசாகி தலை முடியெல்லாம் கொட்டி தோலில் சுருக்கம் விழுந்தவன். எனக்கும் கல்யாணிக்கும் பானகம் கொடுத்தவன்.

சத்திரத்துக்குள் களேபரமான கூட்டமாக இருந்தது. ஒரு தடவை குவளையில் நிரப்பிக் கொடுத்த பானகம் குடித்த ஒருத்தன் அந்தாண்டை போகமாட்டாமல் திரும்பத் திரும்ப வேணுமென்று பிடிவாதமாக நிற்க, சத்திரத்துச் சிப்பந்தி அவனை நகர்ந்து போகச் சொல்லிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

அய்யா, தாகத்தில் தொண்டை வரண்டு கிடக்கிறது. நீர் உழக்கு மாதிரி குவளையில் ஒரு சிராங்காய் தீர்த்தம் நிறைத்துக் கொடுத்துவிட்டு அப்பால் போகச் சொல்வது நியாயமா? இது என்ன வைத்தியன் சங்கில் கரைத்து சிசுவுக்குப் புகட்டச் சொல்லித் தருகிற அவுடதமா? வெறும் வெல்லம் கரைத்த ஜலம் தானே?

சிப்பந்திக்கு முன்னால் நின்றவன் தன் பங்கு நியாயத்தை இன்னும் சொல்லிக் கொண்டிருக்க, பானகக் காரன் என்னைப் பார்த்துச் சிரித்தான்.

சமுத்திரம் தாண்டி நித்தியப்படிக்கு பானகம் தானா ஓய் உமக்கு? அதுவும் புதுசா காச்சின சர்க்கரை போட்டு. காப்பிரிச்சி கொடுத்தது இஷ்டமா கல்யாணி கொடுத்தது இஷ்டமா?

அவன் கேட்டபடி பானகத்தை நீட்ட, நான் பதிலே சொல்லாமல் குடித்தேன். தாகம் அடங்கவில்லை. இன்னொரு குவளை கேட்டேன்.

அய்யா, தாகத்தில் தொண்டை வரண்டு கிடக்கிறது. நீர் உழக்கு மாதிரி குவளையில் ஒரு சிராங்காய் தீர்த்தம் நிறைத்துக் கொடுத்துவிட்டு அப்பால் போகச் சொல்வது நியாயமா? இது என்ன வைத்தியன் சங்கில் கரைத்து சிசுவுக்குப் புகட்டச் சொல்லித் தருகிற அவுடதமா? வெறும் வெல்லம் கரைத்த ஜலம் தானே?

அது நீர் சொன்ன வார்த்தை இல்லை. இந்த மனுஷன் சொன்னது. புத்தி புரண்டு போச்சா என்ன?

பானகக் காரன் கேட்டபடி எனக்கும் அந்த இன்னொருத்தனுக்கும் ஆளுக்கு ஒரு குவளை அதிகமாகவே வெல்லக் கரைசலை வார்த்தான்.

நான் வெளியே போகும்போது அவன் என்னை மகாலிங்க அய்யரே என்றும், சண்டைக்காரன் என்னை வரதராஜ ரெட்டி காரு என்றும் உரக்க விளித்தது முதுகுக்குப் பின்னால் கேட்டது. நான் திரும்பவே இல்லை.

படியே இல்லாத தரையில் ஜாக்கிரதையாகக் கால் வைத்து கண் இருள, தோளில் கந்தலான கப்பல் பை லாலி சுபலாலி என்றபடிக்கு ஆடி அசைய நடந்தேன்.

ஓய், கப்பல் உடுப்பைக் களைந்து விட்டு இதை உடுத்திக் கொள்ளும். திவ்யமான வஸ்திரம்.

வழிக்கு ஓரமாக நின்று தர்மகர்த்தா முதலியும் ஒற்றைக் கை ஜேம்ஸும் தூசி நெடி அடிக்கும் சிவப்புத் துணியை விரித்து ஆட்டியபடி கூப்பிட்டார்கள்.

நான் வேணாம் என மறுத்து விட்டு நடந்தபோது ஒத்தைக் கையனைக் கேட்டேன் – நான் லண்டன் பிரிட்ஜ் ஓரமா பிச்சை எடுத்துச் சேர்த்து வச்ச பணம் எங்கே?

அவன் என் கிட்டே கொடுத்துட்டான். கை மட்டும் தான் குறைச்சல். மத்தது எல்லாம் அதிகமாவே இருக்கப்பட்டவன்.

பின்னால் இருந்து எட்டிப் பார்த்து லோலாச்சி சிரித்தாள். அவள் தூக்கி வைத்திருந்த கைக்குழந்தை வைத்தாஸ் தூக்கம் கலைந்து அழ ஆரம்பிச்சான்.

நீ நரகத்துக்குப் போவே. நீயும் தான். நீயும் தான்.

சபிக்கும் போது வைத்தாஸை ஜாக்கிரதையாக விட்டு விட்டு மற்ற எல்லோரையும் சொன்னேன்.

வைத்தாஸ் குழந்தை ஆச்சே. அமோகமா வரட்டும். கழுகு தரிசனம் ஆனதும் என் கணக்கிலே புண்ணியம் வரவானா அது வைத்தாஸுக்குப் போய்ச் சேரட்டும்.

யோசித்துக் கொண்டு மேலே வந்தபோது இன்னிக்குக் கழுகு வரலை என்றால் பூசாரி.

எப்போ வரும்?

நீர் அந்தப் பாறைக்குப் பின்னால் போய்ப் பாரும். கல்யாணி இருக்கா. அவளைக் கீழே கிடத்தி. உமக்குச் சொல்லித் தரணுமா? அனுபவிச்சதும் கழுகு ஆசீர்வாதம் பண்ண வரும்.

பூசாரி பாட்டு ரூபத்தில் சொன்னான். கொஞ்சம் தட்டிக் கொட்டினால் அதை வெண்பா ஆக்கலாம். அதெல்லாம் இப்போ புஸ்தகம் போட்டா படிக்க யார் இருக்கப் போறா? மதிமோச விளக்கம் மாதிரி விற்குமா என்ன?

பூசாரி பக்கத்தில் கையில் குப்பியோடு நின்ற கொண்டித் தோப்பு வைத்தியனை விசாரித்தேன்.

எனக்கு அதெல்லாம் அனாவசியம். இந்தாரும். அரையில் நல்லா தடவிக் கொள்ளும். கல்யாணியோடு சுகிக்க உமக்கு பெலம் கிட்டும்.

காமம் இல்லை. இச்சை இல்லை. கல்யாணி இல்லை. கழுகு இல்லை. மயில் எண்ணெய் பூசிக் கொண்டு என்ன பண்ணப் போறேன்?

அவன் போத்தலை என் அரையில் கவிழ்த்தான். கப்பல் எண்ணெய்ப் பிசுக்குக்கு மேல் அடர்த்தியாகப் படிந்தது அந்த எண்ணெய்.

பாறைக்குப் பின்னால் போனேன். தரையில் ஒருக்களித்துப் படுத்திருந்தது?

கல்யாணியே தான்.

குச்சி உடம்பு. மாணப் பெரிய ஸ்தனங்கள். எல்லாம் சதைத் திரட்சி. எனக்கு வேண்டாம்.

அடி பெண்ணே, முந்தானையை சரியாப் போத்திக்கோ. இல்லே மகாலிங்க அய்யன் சில்மிஷம் செய்து சிட்சை அனுபவிக்க நேரும்.

வரதராஜ ரெட்டியாகத் தெலுங்கில் சொன்னேன்.

தெலுங்கு தெரியாது ரெட்டியாரே.

கல்யாணி சிரித்தாள். கையை நீட்டி இழுத்து மேலே கிடத்திக் கொண்டாள்.

என் துரையே.

அவள் என் உதடுகளைக் கடித்தாள். கடைவாய் ஓரத்தில் ஒட்டின சோற்றுப் பருக்கையை நாக்கால் எடுத்து ருஜி பார்த்தாள்.

கிறுக்கன். ஜாக்கிரதையா இருடி பொண்ணே.

கீழே இருந்து குரூபியான கிழவி குரல் கேட்டது. தலையில் கொம்பு போல் புடைத்த கிழவன் ஆகாயத்தைப் பார்த்துக் கோழையைத் துப்பினான்.

நான் மேலே படாமல் நகர்ந்து கல்யாணியைப் பார்த்தேன். ஒரு வினாடியில் ஊற்று பீறிட்டது போல் மனசில் எங்கேயோ இருந்து காமம் பீறிட்டது. மிருகம். மிருகம். குறி விரைத்த கரடி. தெரு நாய். கிழங்கனை எழுப்பி வெளியே போகச் சொல்லி விட்டுக் கல்யாணியை ருஜி பார்த்த ஏதோ மிருகம். வெளிக் கிளம்பிய மிருகம்.

ஐயோ, மயில் றெக்கை எண்ணை வாடை குடலைப் பிடுங்கறதே. இதைத் தேச்சுண்டு என் கிட்டே வர வேணாம்.

கல்யாணி திரும்பிப் படுத்தாள். கல்யாணி இல்லை. லலிதா. என் லலிதாம்பிகை.

லலிதே. லலிதாம்பிகே. லலிதா.

மேலே இருட்டாகக் கவியலாச்சு.

ரெண்டு கழுகுகள் இறங்கி

(மதராஸ் பட்டிணம் மயிலாப்பூர் கஸ்பா தாணாவில் கான்ஸ்டபிள் சேவகனான பெருமாள் செட்டி 1927 மார்ச் 14 அக்ஷய மாசி 30 திங்கள்கிழமை எழுதின கேஸ் ஷீட் பகுதி கீழே காண்பது).

சென்னை மயிலாப்பூர் கஸ்பா தாணா அதிகாரத்துக்கு உட்பட்ட வெங்கடேச அக்ரஹாரம் ஏறியாவில் ரெம்ப நாளாகப் பூட்டி வச்சிருக்கும் வீட்டு நெம்பர் இல்லாத ஓல்ட் காரை வீட்டு வாசலில் பிணம் கிடப்பதாக தெருவாசிகளான நாலு நபர்கள் புகார் கொடுத்ததன் பேரில் காலை எட்டு மணிக்கு சப் இன்ஸ்பெக்டர் எஜமான் உத்தரவு படி அங்கே ஆஜரானேன்.

வயசான பிச்சைக்காரன் ஒருத்தன் அழுக்கான கால்சராய் தரித்துக் கெண்டு வீட்டுத் தூணைப் பிடித்தபடி உக்காந்த ஸ்திதியில் செத்துப் போயிருந்தான். தலை தூணில் தாங்கின படியால் பிரேதம் கீழே விழாமல் உக்காந்த ஸ்திதியிலேயே இருந்தது. அவன் பக்கத்தில் வச்சிருந்த கப்பல் பை அள்ளு கந்தலாக அலங்கோலமாக இருந்ததால் அதை சோதனை போட்டேன். பழந்துணியும், பதினேழு ரூபாயும் ரெண்டணாவும், அடச்சு வச்ச கந்தல் காகிதங்களும் பையில் இருந்தன. காகிதம் மூலம் அவன் யாரென்று தெரியும் என்று தெரு வாசிகள் சொல்லி அந்தக் கட்டைப் பிரித்துப் பார்க்க, எல்லாமே எழுதி தபால் பொட்டியில் போட உத்தேசிச்சோ என்னமோ அடச்சு வச்சிருந்த கடுதாசுகள்.

பதினேழு ரூபாய் ரெண்டணாவை இன்ஸ்பெக்டர் எஜமான் உத்தரவுப்படி கஜானாவில் அடைக்க ஏற்பாடு செய்தேன். கப்பல் கிருமியும் மத்ததும் இருக்கும் என்று சந்தேகப்பட்டதால் கடுதாசி, பழந்துணி எல்லாம் கொளுத்தி விடவும் இன்ஸ்பெக்டர் எஜமான் உத்தரவுப்படி ஏற்பாடானது.

ஷெ யாசகனின் பிரேதத்துக்கு பரிசோதனை எதுவும் தேவையில்லை என்று இன்ஸ்பெக்டர் எஜமான் உத்தேசிச்சபடி வேணாம்னு வைத்து, கோவிந்தா கொள்ளி போடவும் ஏற்பாடு செய்தேன். இன்னிக்கு சாயந்திரம் ஆறு மணிக்கு ஓட்டேரி மசானத்தில் அந்தக் காரியமும் எஜமான் உத்தரவுப்படி பூர்த்தியானது.

இந்த ரிப்போர்டை சமர்ப்பிப்பது (கையெழுத்து) சக்கர பெருமாள் செட்டி.

(தொடரும்)

Series Navigationபுத்தகம்: லண்டன் வரவேற்பதில்லை ஆசிரியர்: இளைய அப்துல்லாஹ்- புத்தக வெளியீடுஇறந்தவர்கள் உலகை யோசிக்க வேண்டியிருக்கிறது
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *